ஆழி நெஞ்சம் 1
மறக்க ஆயிரம் காரணங்கள் இருந்த போதும் நேசித்து நினைவாய் வாழ ஒரு காரணம் அவளின் காதல்.
- ஆழி அமுதன்.
___________________________
புலர்ந்தும் புலரா காலை நேரம்.
குளிர் மாதம் என்பதால் செங்கதிரோன், இன்னும் தன் கதிர்களை பரந்து விரியச் செய்திடாது, மந்தமாக மேலெழும்பிக் கொண்டிருந்தான்.
புள்ளினங்கள் இரைத்தேடி தத்தம் வேட்டையைத் துவங்கி இருக்க, சங்கீத நாதமாக அலைமகள் வரிசை கட்டி தன் தடத்தை கரையோரம் பதித்துக் கொண்டிருந்தாள். இயற்கை துயில் களையா அதிகாலை நேரமும், அங்கு சிறார் முதல் பெரியோர் வரையிலான பல மனிதர்கள் நடமாட்டத்தோடு காணப்பட்டது.
சிறியவர்கள் விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் நடை, ஓட்டமென உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
காலைப்பொழுது என்றாலே ஒவ்வொரு அசைவும் அழகும் தான். அதிலும் கடலோர எழிலை சொல்லவும் வேண்டுமோ?
கடலோரம் காணும் காட்சிகள் யாவும் கண்களுக்கு விருந்தாய்.
ரசனையான காலைப்பொழுது. அவன் ஒருவனுக்கு மட்டும் கருத்தில் பதியவில்லை போலும். உப்புக் காற்றின் குளுமை மேனி தீண்டிய போதும் முகத்தில் மென்மை சிறிதுமின்றி இறுக்கமானத் தோற்றம் சுமந்து மிதமான வேகத்தில் கடற்கரையோர நடைபாதையில் ஓடிக்கொண்டிருந்தான் ஆழி.
ஆழி அமுதன்.
முகம் காட்டும் கடுமை அவனது அகமும் நிறைந்திருந்தது. காரணம் காதல்.
அணு அணுவாய் வாழ்வை ரசித்திடவும், ரசித்த வாழ்வு பல மடங்காய் கசந்து போவதும் காதலில் மட்டுமே சாத்தியம்.
அவனவள் காட்டிச் சென்ற பெரும் காதல் தற்போது அவனுள் பெரும் பாரமாய். வலி நிறைந்த காயமாய்.
நீக்கமற நிறைந்திருக்கும் நினைவுகளாக மட்டுமே.
அவளாக யாரென அறிய வைத்தாள். தேட வைத்தாள். நெருங்க வைத்தாள். காதலிக்க வைத்தாள். எல்லாம் அவளாகவே நிகழ்த்திட பிரிவுக்கும் அவளே உரித்தானாள்.
அவனை விட அதீத காதல் சுமந்தது அவள்தான். கொள்ளை கொள்ளையாய் கொட்டிக் கொடுத்த நேசம். இனி உனக்கில்லை என மொத்தமாக அவனது சந்தோஷங்களையும் பறித்துச் சென்றுவிட்டாள்.
அவனளவில் காரணம் என்று எதுவுமில்லை. ஆனால், அவளளவில் இருந்திருக்குமோ?
மென்மையாய் அவனின் வாழ்வில் நுழைந்து, அதிரடி அன்பினால் அவனைத் திக்குமுக்காடச் செய்து, வலிமையாய் வலி கொடுத்து சென்று விட்டாள்.
காரணம் அறியாது கனத்து நின்றவனுக்கு அவளின்றி நாட்கள் நகர மறுத்தன. அவளின்றி மனதை எரிக்கும் தூர நினைவுகளை விரட்டவே மனதாலும் தன்னை இறுக வைத்திட்டான்.
ஆழி அமுதன் துணை ஆணையர். கன்னியாகுமரியில் பணியில் சேர்ந்து ஒரு வாரமாகிறது.
கடந்த ஆறு வருடங்களாக, வருடம் ஒருமுறை தானே விருப்பப் பணியிட மாற்றல் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டில் பல ஊர்களில் வசித்து விட்டான். அவனுக்கான தேடல்கள் மட்டும் முற்றுபெறவில்லை.
'தேட வேண்டாம்.' எழுதி வைத்துச் சென்றுவிட்டாள். அவனால் எப்படி தேடாது இருந்திட முடியும்? அவள் ஆழி அவனின் உலகமாயிற்றே.
யாருமற்ற அவனுக்கு மொத்த உறவாகவும் கிடைத்த ஒரே உறவாயிற்றே. விட்டுவிட முடியுமா?
கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் சத்தம் எழுப்பிட ஓட்டத்தை நிறுத்தினான்.
அங்கு நின்ற தள்ளுவண்டியின் அருகில் சென்று தண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கினான். மூடியை திறந்து வானத்தை நோக்கி முகத்தை உயர்த்தி நெற்றியில் போத்தலை சாய்த்து, கொட்டும் தண்ணீரில் நனைந்தவனாக தலையை சிலிப்பினான். கேசம் படர்ந்த நீர்த் துளிகள் திவலைகளாக தெறித்து சிதறின.
உச்சித் தொட்ட சில்லிப்பும் அவனது மனத்தகிப்பை குறைக்கவில்லை. மீதி தண்ணீரை வாய்க்குள் சரித்து போத்தலை மூடி நசுக்கி அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டான்.
தள்ளுவண்டிக்காரர் கடந்த மூன்று தினங்களாக சரியாக இந்நேரம் அவனை இங்கு காண்கிறார். இந்த மூன்று தினங்களாக அவன் செய்யும் செயல்கள் சற்றும் மாற்றம் பெறவில்லை.
ஆழி போத்தலை தூக்கிப் போட்டதுமே, அவன் கேட்கும் முன்பு கற்றாழைச்சாறு அடங்கிய குவளையை அவனிடம் நீட்டினார்.
"தேங்க்யூ" என்று வாங்கிக்கொண்ட ஆழி மிடறு மிடறாக பருகினான். அவனின் பார்வை ஒருவித ஆராய்வில் அவ்விடத்தை அலசியது.
"தம்பி ஊருக்கு புதுசுங்களா?"
ஆழியின் பார்வை கூர்மைக் காட்டியது. வாய் திறக்கவில்லை, ஆனால் அவனது விழிகள் ஏன் என்று கேள்வியை சுமந்தது.
"மூணு நாளா தான் இங்க உங்களை பார்க்கிறேன். அதுதான் கேட்டேன்" என்றார்.
"இனி தினமும் பார்ப்பீங்க" என்ற ஆழி நீர் போத்தலுக்கும், கற்றாழைச் சாறுக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து மூன்று நிமிட நடையில் இருக்கும் காவலர் குடியிருப்பை நோக்கி மெல்ல நடந்தான்.
ஆழியின் இந்த நிதான நடை கூட அவளால் தான்.
"போலீஸ் அப்படின்னா விறைப்பா, வேகமா, நீண்ட அடி வைத்து தான் நடக்கணுமா? நீங்க மெதுவா நிதானமா நடக்கலாம்" என்று அவனின் மீசையை பிடித்து திருகி அவள் கூறிய நொடி இன்றும் பசுமையாய் அவனது இதயத்தில்.
அவனை துரத்தும் ஈர நினைவுகளை அவன் எப்போதுமே தடுத்ததில்லை. நினைவுகள் முழுக்க நிரம்பி இருப்பது அவனவள் அல்லவா!
கொஞ்சமேனும் நினைத்துப் பார்த்து ரசித்துவிட்டே கடந்து செல்வான்.
தனிமையை வெறுத்துக் கொண்டிருந்த போதும் அவனை உயிர்ப்போடு நடமாட வைத்துக் கொண்டிருப்பது அவனவளின் காதல் நிறைந்த நினைவுகள் தான்
விட்டுச்சென்றவளின் மீது தீரா கோபம் பிரவாகமாக பொங்கிக் கொண்டிருந்த போதும் அவளை நினைத்தால் அவன் இதயம் தித்தித்திடும்.
பெயரைப் போலவே ஆழி நெஞ்சம் தான் அவனுக்கு. அந்த நெஞ்சத்தின் அடி ஆழம் வரை வியாபித்திருப்பது அவள் ஒருத்தி மட்டுமே.
மெல்ல நடந்து கொண்டிருந்தவனின் மனம், 'எங்கடி இருக்க?' என்ற வழமையான கேள்வியை தன்னவளிடம் கேட்டுக் கொண்டிருந்தது.
சட்டென்று வானிலை மாற்றம். கருமேகம் சூழ்ந்து, அவ்விடம் மெல்லிய காரிருள் பூசியது.
வீசும் காற்றின் வேகம் கூடிட, அலைகளில் எண்ணிக்கை அதிகரித்து, ஆர்பரிப்பாய் பாறை முட்டி சிதறியது.
காற்றின் காரணமாகவோ, வலுப்பெற்ற மேக மூட்டம் விலகி மென் சாரலாய் பூமி கொட்டியது.
துளித்துளியாய் மழை நீர் உடல் தீண்டியபோதும் தன்னுடைய நடையில் மாற்றமின்றி நடந்து கொண்டிருந்தவனின் நினைவுகள் வழமைப்போல் அவனவளிடம் தஞ்சம் புகுந்தது.
அவளின் பெயரை அவன் அறிந்து கொண்டதும் இதுபோன்ற மென் சாரல் தூறும் நேரம் தான்.
யாருமற்று தனித்து வளர்ந்தவன் ஆழி அமுதன்.
ஊர் கோயம்புத்தூர்.
ஓரளவு விவரம் தெரிந்து உலகம் புரியும் வயதில் தனக்கு துணையாக இருந்த ஒரே உறவையும் விபத்தில் பறிகொடுத்து காலத்தின் விதியால் தனிமையை உறவாக ஏற்றுக்கொண்டவன்.
சிறு வயதிலேயே தாயை இழந்த ஆழிக்கு அனைத்தும் அவனது தந்தை சுகுமாறன் தான். அவர் கல்லூரி பேராசிரியராக பணி புரிந்தவர். மனைவியின் இறப்பிற்கு பின் மகனுக்காக மட்டுமே வாழ்ந்தவர். அவரே எதிர்பாராது விதி அவரை மகனிடமிருந்து பிரித்துவிட்டது.
அப்போது ஆழிக்கு பதினாறு வயது. அதீத பக்குவம் இல்லை என்றாலும், அனைத்தும் ஓரளவிற்கு புரிந்து நடந்துகொள்ளும் குணம். அதனாலோ என்னவோ யாருமற்ற தன்னை பாரமாக நினைக்கும் உறவுகள், சுகுமாறன் விட்டுச் சென்றதை சுருட்டிக் கொள்வதற்காக மட்டும் தன்னை கவனித்துக் கொள்வதை எளிதாக விளங்கிக்கொண்டான்.
நெருங்கிய உறவுகள் இல்லை என்றாலும், அந்த வயதில் தந்தையின் இழப்பைத் தாங்காது, தனிமையின் பயம் போக்க அவர்களின் துணை தேவையாகப் பட்டது. தன்னுடைய பாதுகாப்பிற்காக, உறவுகளின் பொய் வேடம் தெரிந்தும் மௌனமாக இருந்தான்.
யாவும் ஆழி பள்ளி இறுதியை முடிக்க நகர்ந்த சில மாதங்கள் மட்டுமே.
"உன்னை எங்கும் கடையில் வேலைக்கு சேர்த்து விடுறோம். இப்படி வீட்டு ஓரத்தில் முடங்கிக்க" என்று அவனது தந்தை அவனுக்காக விட்டுச்சென்ற வீட்டை பறிக்க திட்டம் போட்டதோடு, ஆழியின் பெயரில் வங்கியில் சுகுமாரன் வைத்துச்சென்ற வைப்பு மற்றும் சேமிப்பு நிதியை கொள்ளையடிக்க ஆழியிடம் கையெழுத்து வாங்க முயல, ஆழி சுதாரித்துவிட்டான்.
சுகுமாறன் பணிபுரிந்த கல்லூரியில், அவரது முதல்வர் சுகவதனம் நல்ல நெருக்கம். ஒன்றாக படித்தவர்கள். நீண்டகால நண்பர். சுகுமாறன் இறந்தபோதே தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்தார். அவருக்கு ஒரு குடும்பமிருக்க, அவர்களுக்கு தான் பாரமாகிவிடக் கூடாதென்று திடமாக மறுத்துவிட்டான்.
தினமும் அவனை பார்த்துச்செல்ல வந்திடுவார். அவர் இருக்கின்றார் என்ற தைரியத்தில் துணிந்து முடிவெடுத்தான்.
சுகவதனத்திடம் ஆழி தன் எண்ணத்தை தெரிவிக்க, அவர் அவனை மெச்சுதலாய் வியந்து இறுக அணைத்துக் கொண்டார்.
சுகவதனம் வழக்கறிஞர் ஒருவரை வைத்துகொண்டு, சொந்தமென்று ஆழியின் வீட்டில் தங்கியிருப்பவர்களை வெளியேற வைத்தார்.
முதல் தளத்தில் இருக்கும் மூன்று அறைகளில் ஒன்றை மட்டும் தன்னுடைய உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொண்டு, கீழ் தளத்தை வாடகைக்கு விட்டான். அதற்கு ஆள் பிடித்து அமர்த்தியதும் சுகவதனம் தான்.
ஆழியின் முடிவுகளுக்கு சுகவதனம் துணையாக நின்று அவனை தட்டிக் கொடுத்து வழி நடத்தினார் என்றால் மிகையாகாது.
மாத வருமானமாக வீட்டு வாடகை வர, தன் தேவைகளை யாரின் உதவியுமின்றி பூர்த்தி செய்துகொண்டான்.
"கல்லூரி என்ன சேரலாம் இருக்க?" சுகவதனம் கேட்டிட, ஆழிக்கு தந்தையின் நினைவு.
"போலீஸ் ஆகிடு அமுதா. உன்னோட உயரத்துக்கும் மிடுக்குக்கும் அம்சமா இருக்கும்." இறப்பதற்கு சில நாட்கள் முன்பு சுகுமாறன் சொல்லியது.
சிறிதும் யோசிக்காது, "போலீஸ் ஆகணும் அங்கிள்" என்றவன், "அதுக்கு எந்த டிகிரியும் ஓகே தான். ஆனால் எனக்கு கிரிமினாலஜி படிக்கனும்" என்றிருந்தான்.
"நல்லா வருவடா நீ" என்ற சுகவதனம், தான் முதல்வராக இருக்கும் கல்லூரியிலேயே அவன் விருப்பத்துறை இருந்திட சேர்த்துவிட்டார். கல்லூரி கட்டணம் அவரே செலுத்திட முற்பட நிர்தாட்சண்யமாக மறுத்து, வங்கியிலிருக்கும் பணத்தில் வேண்டிய தொகையை பயன்படுத்திக் கொண்டான்.
கல்லூரி வாழ்வு அவனுக்கு நல்லமுறையில் சென்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
இளங்கலை முடித்து, காவல்துறையில் சேர்வதற்காக அதற்குரிய தேர்வு எழுத நினைத்தான்.
'முதல் முறையில் தேர்வாகிவிட்டால் ஓகே, இல்லையென்றால்? வருடம் வீணாகிடும்' என்று எண்ணி, முதுகலை சேர்ந்தான். முதுகலை முடிந்து வெளியே வருவதற்குள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு முழுமையாக தன்னை தயார்படுத்திக்கொள்ள முனைந்தான்.
"வாழ்கையை பற்றி யோசித்து, ரொம்பவே பக்குவமா நடந்துக்கிற ஆழி." சுகவதனம் வாழ்விற்கான அவனது திட்டமிடலை குறித்து வியந்து பேசிட சிறு புன்னகையில் கடந்துவிட்டான்.
ஆழியின் நோக்கம் படிப்பு, காவல்துறை பணியில் சேர்வது. இதிலே இருந்திட, யாரிடமும் அதிகம் ஒட்டிவில்லை. வகுப்பில், ஒருசிலரை மட்டும் அதிக நெருக்கமென வைத்துக்கொள்ளாது அனைவரிடமும் சமமாக பழகுவான். இருப்பினும் அவனுக்கு மட்டுமேயான நெருங்கிய நண்பர்கள் யாருமில்லை. யாரையும் தன் வட்டத்திற்குள் அவன் அனுமதித்ததும் இல்லை.
நல்ல மாணவன். சிறந்த படிப்பாளி என்பதே அவனை மற்ற மாணவர்களிடம் தனித்துக் காட்டியது. கல்லூரி முதல்வருக்கு நெருங்கியவன் என்பது அவனை மரியாதையாக நடத்த வைத்தது.
இவற்றையெல்லாம் எதையும் கருத்தில்கொள்ளாது, தன் மனதின் எண்ணங்களுக்கு உருவம் கொடுத்திட, தான் அமைத்த பாதையில் நேராக சென்றுக் கொண்டிருந்தான்.
கரடுமுரடாக அவன் உருவாக்கி வைத்திருந்த பாதையில் பூஞ்சாரலாய் அவனே அறியாது தன் தடத்தை மெல்ல பதித்தாள் ஆண்டாள் திரணிதா.
ஆழி முதுகலை சேர்ந்திட ஆண்டாள் இளங்கலை சேர்ந்திருந்தாள்.
வெளியில் மட்டுமல்ல அகத்திலும் அழகியவள். வயதிற்கு உண்டான சூட்டிகை, சுட்டித்தனம் யாவும் நிரம்பியவள். அளவான குடும்பம் அவளுடையது. அன்னை மற்றும் அண்ணன் மட்டுமே. தந்தையில்லை. தூத்துக்குடி அருகே சிறு டவுன் ஆண்டாளின் ஊர்.
படிப்பிற்காக கோவை வந்தவளுக்கு விடுதிவாசம். விடுதி சூழல் அவளுக்கு சுத்தமாக ஒத்துக்கொள்ளவில்லை. வெளியில் வீடெடுத்து தங்குவதற்கு நினைத்தால் நம்பகமான ஆட்கள் யாரும் கிட்டவில்லை.
அப்போது தான் அவளது துறையைச் சேர்ந்த சீனியர் மாணவி ரேஷ்மா, இறுதி வருட செயல்முறை திட்டத்திற்காக விடுதி சூழல் ஒத்துவராது வெளியில் தங்கியிருப்பது தெரிந்தது. ஒரே துறை என்பதால், அதீத நெருக்கமில்லை என்றாலும், ஓரளவு பழக்கம் என்பதால் ரேஷ்மாவுடன் தாங்கிக்கொள்ள அனுமதி கேட்டாள் ஆண்டாள்.
ரேஷ்மா தன்னுடன் இன்னொரு பெண்ணும் தங்கியிருப்பதாக மறுத்தாலும், நான் இருக்கும் வீட்டிலேயே இன்னொரு அறை இருப்பதாகவும் சொல்ல, ஆண்டாள் ரேஷ்மாவையே வீட்டு உறுப்பினரிடம் பேசி தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டிட, ரேஷ்மாவின் உதவியால் தன்னுடைய தோழி ஜெயந்தியையும் அழைத்துக் கொண்டு, கல்லூரி விடுதியை விடுத்து அவ்வீட்டில் தங்கிக்கொண்டாள் ஆண்டாள்.
"வீட்டு ஓனரை நான் பார்க்கவே இல்லையே சீனியர். எதும் சொல்லுவாரா?" ஆண்டாள் ரேஷ்மாவிடம் கேட்க, "தாங்கள் தங்கியிருந்த இரு அறைகளிலிருந்து பிரித்தது போல, எதிரே அதீத இடைவெளியில் தனித்து தெரிந்த அறையை காட்டிய ரேஷ்மா...
"அதுதான் ஓனர் ரூம். போய் பேசுறதுன்னா பேசு. பட் அவங்க வேண்டாம் சொல்லிட்டாங்க. நம்ம பிரின்சி ரிலேட்டிவ். நம்ம காலேஜில் தான் பிஜி படிக்கிறாங்க" என்றாள்.
"ஹோ..." என்ற ஆண்டாள், "அவங்க மட்டும் தானா? அம்மா அப்பா இல்லையா?" எனக் கேட்டாள்.
"இல்லைன்னு தான் நினைக்கிறேன். எனக்கும் அதிக பழக்கமில்லை. பிரின்சி எங்க அப்பாவுக்கு பழக்கம். நான் புராஜக்ட் விஷயமா வெளியில் தங்கனும் கேட்டதும் பிரின்சி தான் இங்க தங்க வச்சார். ரெண்ட் கொடுக்கும் போது மட்டும் பக்கத்தில் பார்த்திருக்கேன். மோஸ்ட்லி ரூம் விட்டு வெளியில் வரமாட்டாங்க, எப்போவாவது மொட்டை மாடியில் பார்ப்பேன். குட்டியா ஸ்மைல். அவ்ளோ தான். நாங்க மேல போனா, கீழிறங்கிடுவாங்க" என்று ரேஷ்மா சுகவதனம் கூறி தன் தந்தையின் மூலமாக அவனைப்பற்றி தெரிந்துகொண்ட அனைத்தும் சொல்லிட, ஆண்டாள் அமைதியாக கேட்டுக்கொண்டாள்.
ஆனால் அவளின் மனதில் அவன் பெயர் கூட தெரிந்திடாத போதும் ஏதோ கணிக்க முடியா ஆர்வம் ஒன்று உருவாவதை உணர்ந்திருந்தாள். யாருமற்றவன், பொறுப்பானவன் என்பதன் தாக்கமாகக் கூட இருந்திருக்கலாம்.
அவனை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம், அடுத்து ரேஷ்மா சொல்லியதில் முற்றிலும் வடிந்தது.
"அவங்களுக்கு ஐபிஎஸ் ஆகணுமாம். சிவில் சர்வீஸ் எக்சாம் எழுத படிச்சிட்டு இருக்காங்களாம்" என்று ரேஷ்மா சொல்லிச் செல்ல...
"போலீஸா" என்று முணுமுணுத்த ஆண்டாளின் ஆர்வம் மொத்தமும் வடிந்திருந்தது. ஒரே வீட்டில் தங்கியிருந்த போதும், அவனும் அவளும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டதில்லை.
ஆண்டாள் முயன்றிருந்தால் அவனிடம் தன்னைக் காட்டிகொண்டிருக்கலாம், ஆனால் அவன் போலீசாக இருக்கிறான் என்பதே அவளை எட்ட நிற்க வைத்துவிட்டது.
நாட்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிந்தன.
அன்று கல்லூரியில் ஆழியின் நண்பர்களுக்கிடையே சிறு வாக்குவாதம். எதோ திரைப்படம் குறித்து ஆரம்பித்த அவர்களின் பேச்சு, அங்குமிங்கும் தொட்டு குடும்ப சொந்தங்களைப் பற்றிய விவாதமாக மாறிட... நிறுத்தும் வழியின்றி நீண்டுகொண்டே சென்றது.
அந்த வகுப்பு மட்டும் சத்தமாக இருந்திட, அடுத்த வகுப்பிற்கு கடந்து சென்ற பேராசிரியர் அதட்டி முறைத்துச் சென்ற பின்னரும் அவர்களின் வாதம் தொடர்ந்தது.
"கொஞ்சம் அமைதியா இருங்கடா" என்று ஆழி சொல்லியதும், "நீயே சொல்லுடா ஆழி, சொந்தமெல்லாம் நாம நல்லா இருக்கும்வரை தானே? இவன் என்னவோ அவங்கலாம் கடைசி வரை வாருவாங்கங்கிற மாதிரி பேசுறான்" என்று ஒரு மாணவன் கேட்க, "அவனே அனாதை அவனுக்கு எப்படிடா சொந்தம் பற்றியெல்லாம் தெரியும்" என்று மற்றொரு மாணவன் கூறினான்.
"ஆமாண்டா... ஆழிக்கிட்ட கேட்கும் கேள்வியா இது?" இன்னும் ஒருவன் ஆமோதித்தான்.
அவர்கள் கூறிய பொருள் அவனே அறியவில்லை. மற்றவர்களும் பேச்சு மும்முரத்தில் ஆழ்ந்து பார்க்கவில்லை.
ஆனால்,
ஆழியின் நெஞ்சம், ஒற்றை வார்த்தையில் நெருப்பின்றி வெந்து பொசுங்கி சுருண்டது.
வேதனையின் அளவுக்கு கோபமும் கனன்றது. கோபம் எப்போதும் அவனுக்கு கேடயம். பாதுகாப்பு கவசம். அதனை அனாவசியமாக எப்போதும் காண்பித்துக்கொள்ள மாட்டான்.
நெஞ்சம் கொள்ளும் வலியில் நண்பர்களிடம் காட்டிவிடுவோம் என்று அஞ்சி வகுப்பிலிருந்து வேகமாக வெளியேறிவிட்டான்.
மைதானத்தின் மரத்தடியில் கண்களில் கனல் மூண்ட கோபத்தோடு அமர்ந்திருந்தான் ஆழி. அவனால் கோபத்தை கொஞ்சமும் குறைக்க முடியவில்லை.
கோபத்தின் அளவிற்கு கொஞ்சமும் குறைந்ததில்லை, தற்போது அவன் கொண்டிருக்கும் வருத்தமும்.
நண்பர்களால் சாதாரணமாக மிக எளிதாக பேசப்பட்டப் பேச்சு அத்தனை தூரம் அவனுக்கு வலி கொடுத்தது.
அது இல்லையென்ற வலி. அது அவனது தவறில்லை எனும் கோபம். இதுநாள்வரை இதுபோன்ற பேச்சுக்களை வலியுடன் கடந்து வந்தவனால், இன்று ஏனோ முடியவில்லை. தன்னைப்பற்றி எல்லாம் தெரிந்த நண்பர்களே, தனது மனம் அறியாது பேசியதால் இன்று எளிதாக கடக்க முடியவில்லையோ!
மனதை அமைதிப்படுத்த முயல்கிறான் முடியவில்லை. எதையும் எளிதாக கடந்துவிடும் குணம் கொண்டவன். இக்கணம் ஏனோ முடியாது போனது.
என்ன செய்து இயல்பாவது என்று தெரியவில்லை. கடந்த இரண்டு வகுப்புகளுக்கு போகாது அந்த மரத்தடியில் தான் கோபமும், வலியுமாய் அமர்ந்திருக்கிறான்.
நேரம் சென்றதே தவிர அவனின் மனதின் காயங்கள் அமைதி கொள்ளவில்லை.
தான் அமர்ந்திருந்த மரத்தின் வேரில் கையை ஓங்கி குத்தினான். அவனது அலைபேசியில் தகவல் வந்ததற்கான ஒலி இசைத்தது.
புதிய எண்.
யாரென்று எடுத்துப் பார்த்தவனின் கண்கள், அதிலிருந்த வரியில் புருவம் சுருக்கி, பார்வையில் தீவிரம் காட்டி, இறுதியில் இதழில் புன்னகையை நிறுத்தியது. நொடியில் மனதின் வலி நீங்கிய மாயம்.
கருவிழிகள் அலைபாய்ந்தன. நெஞ்சின் ஓரம் வீசிய குளுமையில், யாரென அறிந்திட தவிப்பவனின் தவிப்புகள் கூடியது.
'சாய்ந்துகொள்ள ஒரு தோள்... அதிகபட்சமாக இப்போது தேவைப்படுவதெல்லாம் சாய்ந்துகொள்ள ஒரு தோள்.
வந்த தகவல் அவன் சாயும் தோளாக அவனைத் தாங்கி நின்றது.'
___________________________
கீழே தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அத்தியாயம் 2 க்கான இணைப்பு
ஆழி நெஞ்சம் 2
ஆழி நெஞ்சம் 2 எவ்வளவு நேரம் அலைபேசியைப் பார்த்திருந்தானோ? பார்த்துக்கொண்டே இருந்தான், ஆறுதலாக வந்திருந்த செய்தியை. முதல்முறை ஆறுதல் என்பதை உணர்கிறான். எழுத்தின் மூலமும் தேற்றிட முடியுமென அறிகிறான். "சாய்ந்துகொள்ள ஒரு தோள்... அதிகபட்சமாக இப்போது தேவைப்படுவதெல்லாம் சாய்ந்துகொள்ள ஒரு தோள்...
vaigaitamilnovels.com
Last edited: