ஆழி நெஞ்சம் 2
எவ்வளவு நேரம் அலைபேசியைப் பார்த்திருந்தானோ? பார்த்துக்கொண்டே இருந்தான், ஆறுதலாக வந்திருந்த செய்தியை. முதல்முறை ஆறுதல் என்பதை உணர்கிறான். எழுத்தின் மூலமும் தேற்றிட முடியுமென அறிகிறான்.
"சாய்ந்துகொள்ள ஒரு தோள்... அதிகபட்சமாக இப்போது தேவைப்படுவதெல்லாம் சாய்ந்துகொள்ள ஒரு தோள்.
''நல்லாயிருக்குல? எங்கேயோ படிச்ச ஞாபகம். சாஞ்சிக்கணும் தோணுதா? நான் இருக்கேன். இப்போ என்னாகிப்போச்சு. சிரிங்க பாஸ். சிரிச்சா அழகா இருப்பீங்க"
சட்டென்று ஆழியின் அதரங்கள் மென் புன்னகை சிந்தின. பார்வை சுற்றுப்புறம் அலசியது. கண்ணுக்கு யாரும் புலப்படவில்லை.
யாருமில்லாத அவனுக்கு நானிருக்கிறேன் என்கிறாள். என்ன மாதிரி உணர்கிறான், அவனுக்கே அவன் மனம் புரியவில்லை. யாருமில்லா ஒருவருக்குள் நானிருக்கிறேன் எனும் வார்த்தைகள் எத்தனை பெரும் ஆதுரமாகவும், அரவணைப்புமாக இருக்குமென்று அறிகிறான்.
உதட்டில் சிரிப்போடு கண்களும் நீரால் மலர்ந்தன.
ஆணா, பெண்ணா தெரியவில்லை. இதை எப்படி எடுத்துக்கொள்வதென்றும் தெரியவில்லை.
மீண்டும் ஒரு தகவல் திரையில் எம்பிக் குதித்தது.
"கிளாஸ் போங்க பாஸ். ஆல்ரெடி டூ கிளாசஸ் பங்க் பண்ணிட்டிங்க."
"யார் நீ? என்னை எதுக்கு வாட்ச் பன்ற?" பதில் கேள்வி அனுப்பினான். பதிலுக்காக நிமிடங்கள் பல காத்திருக்க, எந்தவொரு தகவலுமில்லை.
அவளின் எண்ணை சேமித்திருந்தால், முகப்பு படத்தில் யாரென்று அவளை பார்த்திருக்கலாம். அந்நேரம் அவனுக்கு அது தோன்றவில்லை.
பதில் வருமென எதிர்பார்த்த ஆழி, எழுந்து வகுப்பிற்குச் சென்றான்.
அன்று மாலை சிறப்பு வகுப்பு முடித்து வீட்டிற்கு வந்தவனின் செவி நுழைந்தது...
"ஹேய் ஆண்டாள்" எனும் விளிப்பு.
'புதிதாக வந்திருக்கும் பெண்ணின் பெயராக இருக்கும்.' நினைத்தவன், பெண்களின் குரல் வந்த திசை பக்கம் கொஞ்சமும் திரும்பாது அறைக்குள் நுழைந்து கொண்டான்.
"ரொம்ப நல்ல பையனா இருப்பாங்க போல" என ஜெயந்தி முணுமுணுக்க,
"ரொம்பவே நல்ல பையன்" என்றாள் ரேஷ்மா.
ஆண்டாளின் வதனம் அழகிய புன்னகை சிந்தியது. அவனைப்பற்றிய பேச்சென்றதும் கண்களும் ஒளிர்ந்தன.
ரேஷ்மா ஆழியைப் பற்றி சொல்லியதும் தன்னைப்போல் அவன் மீது ஒரு ஆர்வம். அந்த ஆர்வம் அவனை கவனிக்க வைத்தது. அமைதியான அவனது ஆளுமையை ரசிக்க வைத்தது. அந்த ரசனை தற்போது பிடித்தம் எனும் வரையறைக்குள் அவளை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
ஆழியின் தினப்படி செயல்கள் யாவும் ஆண்டாளுக்கு அத்துப்படி.
காலை அவன் கண் விழிப்பதிலிருந்து, இரவு உறங்கும் வரை அவனது செயல்களை பக்கமிருந்து பார்ப்பவளுக்கு காரணமின்றியே அதீத பிடித்தம் உண்டானது.
ஆழி ஏதோ ஒருவகையில் தன்னை ஈர்க்கிறான் என்று புரிந்த கணம் முதல் அவனை பார்ப்பதை, பக்கம் நெருங்க துடிப்பதை தவிர்க்க நினைக்கிறாள். ஆனால் முடியவில்லை.
ஆழியின் முகம் பார்த்து நாட்கள் கடத்துவதை தன்னைப்போல் பழகிக் கொண்டிருந்தாள். எல்லாம் புரிந்தபோதும் காதல் என்று சொல்லிக்கொள்ள மட்டும் அத்தனை பயந்தாள்.
அதற்கு அவன் காவல்துறை பணியில் சேரக் கொண்டிருக்கும் விருப்பம் காரணமாக இருக்கலாம். அந்தத் துறையின் மீது ஆண்டாளுக்கு சொல்லிக்கொள்ள முடியா பயம் ஒன்றுள்ளது.
ஒருகட்டத்தில் ஆழியை பார்த்துக் கொண்டிருப்பதே சுகமென நாட்களை கடக்கத் தொடங்கினாள்.
அந்நிலையில் தான், ஆழியை முதல்முறை கலங்கிய தோற்றத்தில் கண்டு பரிதவித்து, மனதில் அவன் மீதான காதல் முட்டிமோதி வெளிவர, தானாக ஆறுதல் அளிக்க தகவல் அனுப்பியிருந்தாள்.
அவனின் கவலைக்கு என்ன காரணமென்றெல்லாம் தெரியாத போதும், எதுவாக இருப்பினும் இதெல்லாம் ஒரு விடயமாக? எனும் வகையில் கேட்டிருந்தாள்.
அதற்கு சற்றும் ஆண்டாள் எதிர்பார்க்காத விதமாக ஆழி புன்னகைத்தது அவளுள் விவரிக்க முடியா மகிழ்வைத் தந்தது.
இப்போதும் அதே மகிழ்வோடு ஜெயந்தியின் அருகில் ஆண்டாள் படுத்திருந்தாள்.
"என்ன திரணி விட்டத்தை பார்த்து தானா சிரிச்சிட்டு இருக்க?" சில நாட்களாக தோழியின் நடவடிக்கைகளை அவளும் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறாள்.
பெரியதாய் எதோ ஒன்றை சொல்லப் போகிறாள் என்று ஆர்வத்துடன் தோழியின் முகம் நோக்கினாள்.
"நான் லவ் பண்றேன் நினைக்கிறேன் ஜெயா."
"எதே!" ஜெயந்தி அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள்.
"ம்ம்... ஆழியை ரொம்ப பிடிக்குது" என்ற ஆண்டாளின் முகத்தில் வெட்கம். அவளின் வெட்கம் ஜெயந்திக்கு புதிதாக இருந்தது.
"என்னடி வெட்கலாம் படுற? உங்க அண்ணா ஃபோன் போடும்போதெல்லாம் பசங்க கூட பேசாதேன்னு சொல்லிட்டு இருக்கார். நீ இப்படி லவ்வுல விழுந்துட்டேன்னு என் தலையில் குண்டை போடுறியேடி" என்று நெஞ்சில் கை வைத்து புலம்பினாள் ஜெயந்தி.
"அவங்களை பிடிக்குது அப்படிங்கிறதை தாண்டி, அவங்க சோகமா இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு... அப்போ இது லவ் தானே ஜெயா?" ஆண்டாள் கேட்டிட,
"ம்க்கும்... இவங்க வி டிவி கார்த்திக், அவங்க ஜெஸ்ஸி... போடி! கடுப்பைக் கிளப்பிக்கிட்டு. அந்த அண்ணா நம்ம முகத்தைக்கூட பார்த்திருக்க மாட்டார்" என்ற ஜெயந்தி, "எனக்கு தூக்கம் வருது" என்று போர்வையை இழுத்து மூடிக் கொண்டாள்.
'முகத்தைக்கூட பார்த்திருக்கமாட்டார்.' ஜெயந்தி சொல்லியதும், வேகமாக அலைபேசியை எடுத்து புலனம் திறந்து பார்த்தாள்.
ஆழி இன்னமும் தன் எண்ணை சேமிக்காமல் இருப்பது, அவனது வெற்று முகப்பில் தெரிந்தது.
"இன்னும் மனசு வரலையா?" அனுப்பியிருந்தாள்.
ஐபிஎஸ் தேர்வு புத்தகத்தோடு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த ஆழி, உடனடியாக பார்த்துமிருந்தான்.
அவள் எது குறித்துக் கேட்கிறாள் என்று தெரியவில்லை. சில நொடிகள் என்னவாக இருக்குமென்று யோசித்த ஆழி, இப்படி முன்னால் வராது போக்கு காட்டும் ஆட்டம் தனக்கு ஒத்துவராது என்று அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டான்.
"எனக்கு உங்களை பிடிக்குது." அரை மணிநேரம் காத்திருந்து, அவனிடமிருந்து என்ன என்று கேள்வியாகக் கூட எதுவும் வராதுப்போக தானே தன் மனதை சொல்லியிருந்தாள்.
ஆண்டாளுக்கு எதையும் மனதில் வைத்து அழுத்திக்கொள்ள முடியாது. அதனால் உள்ளம் சுமக்கத் தயாராகிவிட்ட நேசத்தை உரியவனிடம் சொல்லியும்விட்டாள்.
அவள் பிடிக்குது என்று அனுப்பியதில் எந்தவகை பிடித்தமென குழம்பிய ஆழி,
"ஆர் யூ கேர்ள்?" எனக் கேட்டிருந்தான்.
சிரிக்கும் எமோஜிகளை அனுப்பி வைத்தாள்.
"இதுக்கென்ன பதில்?"
"உங்களுக்கு என்ன தோணுது?"
"உங்களுக்கு பைத்தியம் தோணுது" என்று அனுப்பி வைத்த ஆழி, அடுத்து அவள் அனுப்பியதில் வாய்விட்டு சிரித்திருந்தான். இப்படி சிரித்த நினைவு அவனுக்கே இல்லை.
"ஆமா, உங்க மேல பைத்தியம் அப்படின்னு சினிமா டயலாக் சொல்லணுமா?"
"அப்படி சொல்ற அளவுக்கு நீங்க இம்மெச்சூர்ட் கிட் கிடையாதுன்னு தெரியுது" என்று அனுப்பிய ஆழி, "உங்க பிடித்தம் எந்த வகைன்னு தெளிவா சொல்லுங்க?" எனக் கேட்டிருந்தான்.
"சொன்னா?"
"உங்ககிட்ட பேசலாமா வேணாமான்னு டிசைட் பண்ணுவேன்."
"ஹோ... லவ் யூ சொல்லணுமா?" குரல் பதிவு அனுப்பியிருந்தாள்.
அவ்வளவு தான் ஆழியின் நெஞ்சம் முரசு கொட்டியது. அவள் சொல்லிய வார்த்தைகள் தாண்டியும், அவளது குரல் என்னவோ செய்தது.
அத்தருணம் அன்றைய தினத்தை புறம் தள்ளவே நினைத்தான். அவனுக்கென்று யாருமில்லா உலகில், புதிய உறவை ஏற்கவே சற்றுத் தயங்கினான். அத்தோடு, நண்பர்கள் யாரும் விளையாடுகிறார்களா என்ற மாற்று எண்ணம் எழ, அடுத்து பதிலேதும் அனுப்பாது அவளுடனான பேச்சை முடித்துக் கொண்டான்.
ஆழி நம்புகிறானோ இல்லையோ அவள் அவனிடம் நேசம் கொண்டு காதல் சொல்லியது நிஜம். விருப்பத்தை சொல்லிய பின்னர் அவனிடம் பேசிட ஆண்டாள் தயக்கம் கொள்ளவில்லை.
தினமும் காலை வணக்கத்தில் ஆரம்பிப்பவள், வழக்கமான கேள்விகள் கேட்டு, இரவு வணக்கத்தில் நாளை முடித்து வைப்பாள். ஆழி பதில் அனுப்பவில்லை என்பதெல்லாம் அவள் கருத்தில் கொள்ளவில்லை.
'என்னுடைய காதல் இது. உனக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறேன். நீயும் ஓர் நாள் உணர்வாய். அதுவரை எனக்குத் தெரிந்த வழியில் நான் உன்னை காதல் செய்கிறேன்.' இதுதான் ஆண்டாளின் மனம்.
பெருமாளை நினைத்து கோதையவள் கொண்ட காத்திருப்பு ஆண்டாளின் மனம்.
அவள் அனுப்பும் தகவல்களிலிருக்கும் அக்கறையை ஆழி உணர்வான். படித்து பார்ப்பான். கடந்து விடுவான். பதில் அனுப்பிடமாட்டான்.
அவனுடன் ஒரே வீட்டிலே, பக்கமிருந்து பார்த்துக்கொண்டே இருப்பதாலோ என்னவோ அவளுக்கு அவன் பதில் அனுப்பாதது வருத்தத்தையோ, கவலையையோ கொடுக்கவில்லை.
'நான் உன்னை காதல் செய்கிறேன்.' அவ்வளவு தான். கொடுக்கப்படும் நேசம் பெறப்பட வேண்டுமென்ற கட்டாயம் இல்லையே.
கல்லூரியிலும் அவளின் பார்வை அவனைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
கேண்டீனில் அமர்ந்து புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான் ஆழி. அடுத்த வகுப்பில் செயல்முறை வகுப்பு எடுக்க வேண்டும். மும்முரமாக புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான்.
அடுத்த வகுப்பிற்கான மணி ஒலித்த பின்பும் ஆழியின் கவனம் களையவில்லை.
"கிளாஸ் ஸ்டார்ட் ஆகப்போகுது." கேண்டினிற்கு இடைவேளை நேரம் வந்த ஆண்டாள்... ஆழி இருக்கவும், ஓரமாக அமர்ந்துவிட்டாள்.
ஆண்டாளுக்கு அவனுக்கு செயல்முறை வகுப்பெனத் தெரியும். நேற்று அவன் நூலகத்தில் புத்தகம் தேடிக் கொண்டிருக்கும் போது நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்ததை ஆண்டாள் கேட்டிருந்தாள்.
அதனால் அவனுக்கான வகுப்பு இதென அறிந்து, ஆழி அந்த நினைவின்றி இருக்கவும் தகவல் அனுப்பினாள். சத்தம் கேட்டு மேசையில் தன்னுடைய கை பக்கமிருந்த அலைபேசியை பார்த்தபோதும் திறக்கவில்லை.
அடுத்த நொடி சிறிதும் தயங்காது ஆழிக்கு ஆண்டாள் அழைத்துவிட்டாள்.
எண்ணை சரியாக பாராது, புத்தகத்தில் கண் பதித்தவனாக, ஆழி அழைப்பை ஏற்று காதில் வைக்க...
"டைம் ஆச்சு ஆழி. கிளாஸ் ஸ்டார்ட் ஆகப்போகுது. படிச்சிட்டே இருந்தீங்கன்னா, செமினார் யார் எடுப்பாங்க" என்று வேகமாகக் கூறி வைத்துவிட்டாள்.
ஆண்டாளின் குரலில் அவன் மனம் கட்டுண்டாலும், அவள் சொல்லியதின் பொருள் விளங்க,
நேரத்தைப் பார்த்துவிட்டு வகுப்பை நோக்கி அவசரமாக ஓடினான்.
செல்லும் வேகத்தில் அவனது நூலக அட்டையை அங்கேயே விட்டுச் சென்றிருந்தான்.
மாலை வீடு வந்தபோது, ஆழி முன் ஜெயந்தி சென்று நின்றாள்.
"சொல்லுங்க?"
"நான் இங்க தான் உங்க வீட்டில் தங்கியிருக்கேன்..."
"ஹோ..." அவளைத் தாண்டி அடி வைத்திட்டான்.
ஜெயந்தி தனக்கு பின்னால் அறை வாசலில் நின்றிருந்த ஆண்டாளை பார்க்க, அவளை நெற்றியில் தட்டிக்கொண்டாள்.
ஆண்டாள் அனுப்பினாலென்று ஜெயந்தி ஆழியிடம் வந்துவிட்டாள். வந்ததும் என்ன பேசவென்று தெரியாது அங்கு தங்கியிருப்பதை சொல்ல, ஆழி அவ்வளவுதான் என்பதுபோல கடந்திருந்தான்.
அதனைக் கண்டு ஆண்டாள் ஜெயந்தியை கொடு என்பதைப்போல மிரட்டினாள்.
'ம்க்கும்... அந்த அண்ணா முகத்தையே பார்க்கமாட்டேங்கிறாங்க.இவள் என்னை இந்த விரட்டு விரட்டுறாள்' என்று முனகிய ஜெயந்தி, ஆழி எங்கென்று பார்க்க அவனோ எப்பவோ அறைக்குள் சென்றிருந்தான்.
ஜெயந்தி தயக்கத்தோடு அறையின் கதவைத் தட்டிட, கதவைத் திறந்த ஆழி, ஜெயந்தி நிற்பதை கண்டு தன்னிடம் எதோ பேச விளைகிறாள் என யூகித்து, வாயிலைக் கடந்து வெளியில் வந்த பின்னரே,
"எதும் பேசணுமா?" எனக் கேட்டான்.
"ஆமா, ஆமா அண்ணா" என்ற ஜெயந்தி, "உங்க லைப்பிரரி கார்ட். கேண்டீனில் மிஸ் பண்ணிட்டீங்க போல. என் ஃபிரண்ட் கொடுத்தாள்" என்றாள்.
"ஹோ... தேங்க்ஸ்" என்ற ஆழி, உள்ளே சென்றுவிட்டான்.
"ஷப்பா..." என்று பெருமூச்சு விட்டு, மறைந்து நின்றிருந்த ஆண்டாளை நோக்கி பெருவிரலை காட்டிட, பட்டென்று கதவினை திறந்து வெளிவந்தான் ஆழி. அதில் ஜெயந்திக்கு மூச்சே நின்றுவிட்டது.
ஆழி தன்னைப் பார்த்துவிடுவானோ என ஆண்டாள், சடுதியில் அறைக்குள் சென்று மறைந்தாள்.
"என்னண்ணா?"
"ஹான் அவங்க நேம் என்ன?"
"ஆண்... ஆண்டாள் அண்ணா." இருந்த பதட்டத்தில் பெயரை பட்டென்று சொல்லியிருந்தாள். சொல்லிய பின்பே நாக்கைக் கடித்து, திரும்பி பார்க்க, அங்கு ஆண்டாள் இல்லை என்றதும், "இவ போயிட்டாளா? தப்பிச்சேன்" என்று ஆசுவாசமானாள்.
அன்று ரேஷ்மா, ஆண்டாள் என அழைத்த நினைவுவர, 'இங்க தங்கியிருப்பதால் தன்னை தெரிந்திருக்கிறது' என எண்ணி,
"உங்க ஃப்ரெண்ட்க்கும் தேங்க்ஸ் சொல்லிடுங்க" என்று உள்ளே சென்றுவிட்டான்.
"இவள் லவ் பண்றதுக்கு என் மூச்சு காலியாகிடும் போல" என்று புலம்பியபடி அறைக்குள் வந்த ஜெயந்தி, "இனி இந்த தூது அனுப்புற வேலையெல்லாம் வேண்டாம். நான் போகவுமாட்டேன்" என்றாள்.
"சரி... நானே போயிக்கிறேன்."
"திரணி... ஆர் யூ சீரியஸ்?" எனக் கேட்ட ஜெயந்தி, "அந்த அண்ணாவுக்கு சிரிக்கவே தெரியாது போல. ஆனால் நீ எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்க பொண்ணு. செட் ஆகுமா?" என்றாள். தோழியின் மீதான அக்கறையில்.
"சிரிக்கத் தெரியாம இல்லை ஜெயா. யாருமே இல்லாத தனிமை வலியை கொடுக்குமே தவிர, மகிழ்ச்சியை இல்லை" என்ற ஆண்டாள்,
"அன்னைக்கு அவங்க மரத்தடியில் உடைஞ்சு உட்கார்ந்திருந்தாங்க. காரணம் என்னவா வேணாலும் இருக்கட்டும்... தீர்க்க முடியாத பிரச்சினையாக் கூட இருக்கட்டும். ஆனால் அவங்களுக்கு என்னால மட்டுமே சந்தோஷம் கொடுக்க முடியும் தோணுது. அவங்களை எப்பவும் சிரிச்ச முகமா வச்சிக்கணும் தோணுது" என்றாள்.
இப்படி சொல்லிய இதே ஆண்டாள் தான், வருங்காலத்தில் ஆழியின் மொத்த சந்தோஷத்தையும் பறித்துக்கொண்டு சென்றிருந்தாள்.
"எனக்கு என்ன சொல்லணும் தெரியல திரணி. ஆனால் உன் லவ் உனக்கு கிடைக்கணும். இல்லைன்னா நீ உடைஞ்சி போயிடுவன்னு நல்லா தெரியுது" என்ற ஜெயந்தியை தோளோடு அணைத்து விடுத்தாள் ஆண்டாள்.
அப்போது ஆண்டாளின் அலைபேசி தகவல் வந்ததற்கு அடையாளமாக சத்தமிட்டது.
எடுத்துப் பார்த்தவளால் தன் கண்ணையே நம்ப முடியவில்லை. ஆழி தான் தகவல் அனுப்பியிருந்தான்.
"தேங்க்ஸ்... நீங்க கால் பண்ணாம இருந்திருந்தா கிளாஸ் மிஸ் பண்ணியிருப்பேன்."
ஆண்டாளுக்கு என்ன அனுப்புவதென்று தெரியவில்லை. சிரிக்கும் இமோஜியோடு, "இட்ஸ் மை பிளஷர் பாஸ்" என அனுப்பி வைத்தாள்.
"காலேஜில் என்னை நோட் பண்றது தான் உங்க வேலையா?" அடுத்து அனுப்பியிருந்தான்.
"நீங்க ஏன் நான் நோட் பன்ற மாதிரி என் கண்ணுல படுறீங்களாம்!"
இதற்கு ஆழியால் என்ன பதில் சொல்லிட முடியும். அவனையே மடக்குகிறாள்.
'க்ளவர்.' தனக்குள் சொல்லிக்கொண்டான்.
அடுத்து எது கேட்டாலும் அவள் பதில் சொல்லாது இப்படித்தான் பேசுவாள் என்று ஆழி அமைதியாகிவிட்டான்.
அந்த அமைதி, கடந்த நாட்களில் அவள் கொண்டுள்ள தன்மீதான பிடித்தம் எந்தவகை என்று ஆராய வைத்தது. இப்போதெல்லாம் அவனுக்கு தன்னுடனே யாரோ இருக்கும் உணர்வு. அவன் கேட்காமல் அவளே கொடுத்திருந்தாள்.
யாருமே இல்லாத தனக்கு, தன்னை நேசிக்கும் ஒரு ஆள் என்ற எண்ணமே நெஞ்சோரம் சுவை கூட்டிட, புன்னகைத்துக் கொண்டான்.
அலைபேசியில் அவள் அனுப்பிய தகவல்கள் எல்லாம் திறந்து பார்த்தான்.
"குட் மார்னிங் பாஸ்.
"சாப்பிட்டிங்களா?
"ரொம்பத்தான் படிக்கிறீங்க.
"சாப்பிட்டு கிளாஸ் போங்க பாஸ்.
"ஹலோ வீட்டுக்கு கிளம்பளையா?"
"குட்நைட் பாஸ்.
"பேய் ட்ரம்ஸ்.
"ரிப்ளை பண்ணமாட்டிங்களா?"
"நீங்க பேசலன்னா என்ன? உங்களுக்கும் சேர்த்து நான் பேசுறேன்.
"ரொம்ப பண்றீங்க நீங்க?"
"என் நெம்பர் சேவ் பண்ணமாட்டிங்களா?"
ஆழியின் கை திரை தள்ளுவதை நிறுத்தியது. அப்போது தான் அவளது எண் சேமிக்கப்படாததே நினைவு வந்தது. தலையில் தட்டிக்கொண்டான்.
"இதை சேவ் பண்ணியிருந்தா எப்பவோ அவள் யாருன்னு பார்த்திருக்கலாம்" என்று முணுமுணுத்து, எண்ணை பதிய முனைந்தான்.
என்னவென்று பதிய வேண்டுமென தெரியாது, தன்னுடைய பெயரை போட்டு பதிந்தான். வேகமாக முகப்புப்படம் திறந்து பார்க்க, அவன் கண்கள் எரிச்சலைக் காட்டியது.
கவனித்துப் பார்க்காததால், எண்ணை பதிவதற்கு முன்பும் அவள் இந்தப் படத்தை தான் வைத்திருந்தாள் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஆழி தான் ஆண்டாளின் எண்ணை சேமித்திருக்கவில்லை. அவள் அவன் எண்ணை சேமித்து தானே வைத்திருக்கிறாள். அப்போது அவளுக்குத்தான் அவனின் படம் தெரியாது. அவனுக்கு அவளுடையதைக் காண முடியுமே! இத்தனை நாள் இந்த கோணத்தில் அவன் பார்க்கவே இல்லை என்பதைவிட, இன்று அவளை பார்க்க வேண்டுமென்று தோன்றிய அதீத முனைப்பு வெறெப்போதும் எழவில்லை... அதனால் அவளின் முகப்புப்படத்தை கண்டிருந்தாலும் கருத்தில் கொள்ளவில்லை.
மனதில் எழும் ஏமாற்றம் ஏனென்று புரியச் செய்திட,
"உன் பிக் டிபி வைக்கும் பழக்கமில்லையா?" எனக் கேட்டு அனுப்பினான்.
ஆழி இப்படியெல்லாம் இல்லவே இல்லை. அவளிடம் மட்டும் தன் இயல்பை தொலைக்கிறோம் என தெரிந்தும், சிலவற்றை அவனால் கட்டுக்குள் வைத்திட முடியவில்லை.
"மனசு வந்ததா?" அவள் கேட்டிட,
"போடி" என முணகியது அவனது வாய். சொல்லிய வார்த்தையை நம்பாது அவன் கண்கள் விரிந்தது.
'நானா இது? பார்த்தே இராத பெண்ணின் மீது எனக்குள் உரிமை உணர்வா?' அவள் மீதான அவனது மனதின் பிடித்தம் இனிக்கவேச் செய்தது.
"இப்போ பாருங்க." ஆண்டாள் அனுப்பிட, முகப்பு படம் திறந்து பார்த்தான்.
"கடுப்பேத்துறா!"
ஏழு பேர் கொண்ட படம். அதில் அவளை எங்கனம் அவன் அறிவான்.
"படுத்துறா." அலைபேசியால் நெற்றியில் குத்திக்கொண்டான்.
அடுத்து தன்னுடைய முகப்பு படத்தை நீக்கிவிட்டு, தன்னுடைய பெயரின் முதல் எழுத்தான ஆங்கில எழுத்து ஏ(A)யை வைத்தான்.
மாற்றிய அடுத்த கணம், அவன் முகப்பு நீக்கிய அவனது படம் ஆண்டாள் அனுப்பியிருந்தாள்.
"சுட்டுட்டனே... நாங்கெல்லாம் எவ்ளோ ஸ்பீடு" என்று படத்திற்கு கீழே அனுப்பி வைத்தாள்.
முதல்முறை முகத்தில் வெட்கம் ஒளிர, அவள் அனுப்பிய தன்னுடைய படத்தையே அத்தனை ரசித்தான்.
"என்னவாம்? சிரிக்கிற மாதிரி தெரியுது."
ஆண்டாள் அனுப்பிட, எட்டி கண்ணாடியில் தன் முகம் பார்த்தான். இதுவரை இப்படியொரு ஒளியில் அவன் முகத்தை அவனே கண்டதில்லை.
"பேசி பேசியே என்னவோ செய்றா." நெஞ்சத்தை கையால் நீவிக்கொண்டான்.
"ஏழு பேர்ல நீ யாரு?"
"இப்போ சொல்ல முடியாது" என்று அனுப்பிய ஆண்டாள், "அந்த ஏழு பேர்ல யாரைப் பார்த்தா உங்களுக்கு ஸ்பார்க் வருது. உள்ளுக்குள்ள உங்களுக்கானவள் அப்படின்னு தோணுது?" எனக் கேட்டு அனுப்பினாள்.
"இந்த ஆட்டத்துக்கு நான் வரல. எனக்கு தூக்கம் வருது." அந்நொடியே புலனம் விட்டு வெளியேறியும் இருந்தான்.
"ரொம்பத்தான் பண்றீங்க பாஸ்" என்ற ஆண்டாள், அவனாக பேசியதில் இதயம் கொண்ட இதத்தால், தன்னை மறந்து...
"ஆண்டாள் ட்ரீம்ஸ்" என்று அனுப்பியிருந்தாள்.
________________________
கீழே தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அத்தியாயம் 3 க்கான இணைப்பு
ஆழி நெஞ்சம் 3
ஆழி நெஞ்சம் 3 தன்னுடைய பெயரை குறிப்பிட்டு அனுப்பிய பின்னரே, பதட்டம் கொண்டு வேகமாக இருவருக்கும் சேர்த்து அழித்திருந்தாள். ஆண்டாளுக்கு தன்னுடைய பெயரை சொல்லக் கூடாதென்றில்லை. இதுவரை அவனாகக் கேட்டதில்லை. ஆதலால் அவளும் சொன்னதில்லை. "அவங்களா கேட்கும்போது சொல்லிக்கலாம் ஆண்டாளு" என்றவள் அறியவில்லை...
vaigaitamilnovels.com
Last edited: