• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆழி நெஞ்சம் 3

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
ஆழி நெஞ்சம் 3

bd43cbcf3ff6a99eabe9a1e3c8d9386d.jpg


தன்னுடைய பெயரை குறிப்பிட்டு அனுப்பிய பின்னரே, பதட்டம் கொண்டு வேகமாக இருவருக்கும் சேர்த்து அழித்திருந்தாள்.

ஆண்டாளுக்கு தன்னுடைய பெயரை சொல்லக் கூடாதென்றில்லை. இதுவரை அவனாகக் கேட்டதில்லை. ஆதலால் அவளும் சொன்னதில்லை.

"அவங்களா கேட்கும்போது சொல்லிக்கலாம் ஆண்டாளு" என்றவள் அறியவில்லை, அவள் அனுப்பியதும் திரையின் மேல் எம்பி குதித்த அறிவிப்பில் ஆழி அவளது "ஆண்டாள் ட்ரீம்ஸ்" என்பதை பார்த்த பின்னரே அவள் அழித்தாள் என்பதை.

"ஆண்டாள்..." உச்சரித்த ஆழி, "பக்கத்துல இருந்துட்டுதான் போக்கு காட்டுறியா நீ?" எனக் கேட்டு புன்னகைத்தான்.

"நாளைக்கே உன்னை பார்க்கிறேன்" என்ற ஆழி, அடுத்தநாள் விடுமுறை தினம் என்றதால், மூன்று அறைகளுக்கும் நடுவில் இருக்கும் பரந்த கூடத்தில் உள்ள ஒற்றை இருக்கையில் புத்தகத்தோடு அமர்ந்துவிட்டான்.

"என்ன சீனியர் அதிசயமா ரூமுக்கு வெளியில் எல்லாம் உட்கார்ந்திருக்கீங்க?" விடியலில் கதவை திறந்த ரேஷ்மா, ஆழி என்றுமில்லா அதிசயமாக கூடத்தில் இருப்பதை கண்டு வினவினாள்.

"சும்மா தான்."

ஆழி இதை வாய் திறந்து சொல்லியதே பெரிது என சிறு சிரிப்போடு உள்ளே சென்றுவிட்டாள் ரேஷ்மா.

ரேஷ்மாவின் குரலில் கதவை திறக்க வந்த ஆண்டாள், ஆழி தங்கள் அறைக்கு நேரெதிர் அமர்ந்திருக்கிறான் என்பதை சன்னல் ஊடே பார்த்து அறைக்குள்ளே முடங்கிவிட்டாள்.

"கதவு திறக்கலையா நீ?" என்ற ஜெய்ந்தி திறந்திட, திறக்கும் சத்தத்தில், புத்தகத்தை விடுத்து ஆழியின் பார்வை மட்டும் எதிரே உயர்ந்தது.

ஆழியின் பார்வையில் ஏமாற்றம் படர, ஜெயந்தி ஈ என்று அனைத்து பற்களையும் காட்டி உள்ளே ஓடிவிட்டாள்.

"இந்த அண்ணா என்னத்துக்கு வாசலிலே உட்கார்ந்திருக்கார்?", ஜெயந்தி.

"தெரியலையே" என்ற ஆண்டாள், அப்போது தான் ஒன்றை உணர்ந்தாள்.

தானாக தான் யாரென்று காட்டிக்கொள்ளாது ஆழிக்கு தன்னை தெரிந்திட வாய்ப்பில்லை என்று. நெற்றியிலே தட்டிக் கொண்டாள்.

"நீ இந்நேரம் மொட்டை மாடியில் சூரியனை சைட் அடிச்சிட்டு இருப்பியே! இன்னும் ரூமுக்குள்ள இருக்க?"

"போகணும்" என்ற ஆண்டாள், "என் பெயர் கூட சொல்லாம தானே இதுவரை பேசியிருக்கோம்... கண்டிப்பா என்னை தெரிஞ்சிக்க சான்ஸ் இல்லை" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளாக எழுந்த ஆண்டாள், "நீயும் வா" என்று ஜெயந்தியை பிடித்து இழுத்து தனக்கு முன் நிறுத்தியவளாக தள்ளிக்கொண்டு வெளியில் வந்தாள்.

ஆழி நிமிர்ந்து பார்க்க,

"குட்மார்னிங் அண்ணா" என்றாள் ஜெயந்தி.

"நான் உங்க பிரண்டை பார்க்கணுமே?"

ஆழி அவ்வாறு கேட்டதும் அப்படியே அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாள் ஆண்டாள்.

ஆழிக்கு ஜெயந்தி பின்னால் ஆண்டாள் நின்றிருந்தது தெரிந்தது தான். ஆனால் யாரோ எனும் அளவில் அடையாளம் காணக்கூடியதாக மட்டுமே. முகம் தெரியவில்லை.

"அது...?" என்று ஜெயந்தி இழுக்க, "கண்ணு" என்ற குரலில் ஜெயந்தி மற்றும் ஆழி சத்தம் வந்த குரலில் திரும்பி பார்க்க, ஜெயந்தியின் தந்தை மாடிப்படிகளின் ஆரம்பத்தில் நின்றிருந்தார்.

மகளைக் காண வந்திருப்பார் போலும்.

"அப்பா" என்று ஜெயந்தி ஓடிச்சென்று அணைக்கவும்,

'இனி தான் இங்கு அமர்ந்திருப்பது சரிவராது' என்று ஆழி உள்ளேச் சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் ஆழியும் சிவில் சர்வீஸ் தேர்விற்கான பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டான்.

'என்னை கண்டுபிடிச்சிட்டாரா?' ஆண்டாள் குழம்பிப்போனாள்.

'சும்மா கூட அவங்க வீட்டில் தங்கியிருக்கும் பெண் என்கிற முறையில் பார்க்க நினைத்துக் கேட்டிருக்கலாம்.'

தனக்குத்தானே கேள்வியும் பதிலுமாக அந்த நாளை அறைக்குள்ளே கழித்தாள். இருப்பினும் வழமையான தன்னுடைய தகவல்களை அவனுக்கு அனுப்பிட மறக்கவில்லை.

இந்த குறைந்த நாட்களில், தானாக அவனுக்கு தகவல் அனுப்புவதை பழக்கப்படுத்திக் கொண்டிருந்தாள்.

நேற்றைய இரவு ஆழியாக பேசியதற்கு பின்பு, இனி அவன் தனக்கு பதில் அனுப்புவான் என்று ஆண்டாள் நினைத்ததற்கு மாறாக, இன்று அவள் அனுப்பியவற்றை ஆழி திறந்துக்கூட பார்க்கவில்லை.

மனதால் சோர்ந்து போய்விட்டாள்.

அன்று ஆழி வீட்டிற்கும் இரவு தாமதமாக வர, அவனை பார்க்க முடியவில்லை.

மறுநாள் கல்லூரி செல்ல வேண்டுமென ஜெயந்தி தான் அதட்டி உறங்க வைத்திருந்தாள்.

அடுத்த நாள் அவளுக்கு முன்பே, ஆழி கல்லூரிக்கு கிளம்பியிருந்தான்.

"அதுக்குள்ள போயிட்டாங்களா?", ஆண்டாளின் முகம் சுருங்கியது.

"இப்போ என்ன காலேஜ் போனதும், அவங்க கிளாஸ் போயிட்டு பாரு" என்றாள் ஜெயந்தி.

கல்லூரியில் ஆழி வழக்கமாக இருக்கும் இடங்கள் எல்லாவற்றிலும் சென்று பார்த்துவிட்டாள். அவன் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

அடுத்த நாளும் இப்படியே நகர...

"அவங்களுக்கு நான் யாருன்னு தெரிஞ்சிடுச்சு நினைக்கிறேன் ஜெயா. அதான் அவாய்ட் பண்றாங்க. வேணுன்னே என் கண்ணில் படாமல் இருக்காங்க" என்று அழுதேவிட்டாள்.

"திரணி..." என்று தோழியை தோள் சாய்த்துக்கொண்ட ஜெயந்தி, "லவ் பன்ற தானே! அப்புறம் எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம். இப்போ ரூமில் தான் இருப்பாங்க. நேரா போய் பேசிடு" என்றாள்.

முடியாதென ஆண்டாள் தலையசைக்க,

"என்னடி?" என்று முறைத்தாள் ஜெயந்தி.

"நான் யாருன்னு தெரிஞ்சதும், என்னை பார்க்க நினைக்காம அவாய்ட் தானே பண்றாங்க. அப்புறம் நான் எப்படி அவங்க முன்னாடி போய் நிக்கிறது? ஏதோவொரு தைரியத்தில் லவ் பண்ணிட்டேன். இப்போ அண்ணாவை நினைச்சா பயமா இருக்கு. அவங்களுக்கு முன்னாடி போய் நின்னு ஹோப் கொடுத்து..." அதற்கு மேல் சொல்ல முடியாது தேம்பினாள்.

அவளுக்கு எங்கிருந்து ஆழியின் எண்ணம் தெரிந்திருக்கப் போகிறது.

'தான் இப்படி விலகினால், அவள் தானாக தன் முன்னால் வருவாள்' என்பது ஆழியின் எண்ணம்.

அவரவர், அவரவர் எண்ணத்தில் இருந்தனர். அவளால் தவறாது அனுப்பப்படும் தகவல்கள் யாவும் பார்க்கப்படமாலே போயின. இதில் இருவருமே அதிகம் தவிப்புக்குள்ளாகினர்.

அப்போது தான் ஆழிக்கும், முகம் பாராமலே தன் மனம் அவளை நேசிக்கத் தொடங்கிவிட்டது என்பதும் தெரிந்தது.

இன்னும் எத்தனை நாளுக்கு இந்த ஆட்டமென பார்ப்போமென்று, காதலை உணர்ந்தபோதும் தன்னிலையில் பிடியாக இருந்துகொண்டான் ஆழி அமுதன்.
_________________________

தேகம் நனைத்திடாத மெல்லிய தூறல்... பனிச்சாரலாய் மெல்ல அதிகரிக்கத் துவங்கியது.

நூலகத்தில் இருந்தவனுக்கு வெளியில் மழை துளிர்த்துக் கொண்டிருப்பது தெரியவில்லை. அடுத்த வகுப்பு ஆரம்பிக்க இருக்கும் இறுதி நொடிவரை புத்தகத்தோடு ஒன்றியிருந்துவிட்டான்.

சற்று தங்கி செல்வோம் என்பதற்கும் வாய்ப்பில்லை. முக்கியமான வகுப்பு. கையில் இருக்கும் புத்தகத்தை தலைக்கு மேல் உயர்த்தி பிடித்தவனாக, நீண்ட எட்டுக்கள் வைத்து முன்னேறிச் சென்றான்.

சட்டென்று தன் தோள் இடித்து, உயர்ந்த கரத்தினைக் கண்டு தலையை மேல் உயர்த்தி பார்த்தான்.

மெல்லிய பூங்கரம் குடை பிடித்திருந்தது.

சிவந்த மென் விரல்களில் மனம் லயித்ததுவோ? பூமுகம் காண பார்வையை தழைத்தவன் கையில் குடையை கொடுத்துவிட்டு ஓடி மறைந்திருந்தாள் பூவை.

அவனின் மார்பளவு இருந்தவளின் உச்சி மட்டுமே காண முடிந்தவனால், அத்தனை பக்கமிருந்தும், இன்றும் அவளின் முகம் பார்த்திட முடியவில்லை.

"ஹேய் ஆண்டாள்..."

அவனுக்கும் பின்னால் ஒலித்த குரலில் திரும்பி பார்த்தான் ஆழி அமுதன்.

ஆண்டாள் திரும்பியும் பாராது ஓடியிருந்தாள்.

ஒரு வகுப்பு முடிந்து, அடுத்த வகுப்பிற்கு வேறு கட்டிடம் செல்ல ஒன்றாக வந்துகொண்டிருந்தனர் ஆண்டாள் மற்றும் ஜெயந்தி.

ஜெயந்தி பாடம் சம்மந்தமாக கதைத்துக் கொண்டுவர, கடந்த சில தினங்களாக கல்லூரியில் எங்கு சென்றாலும் ஆழியை பார்க்க முடியுமா என தேடும் ஆண்டாளின் விழிகள் தற்போதும் அதையே செய்து கொண்டிருந்தது.

என்றுமில்லாது இன்று, தேடியவனை கண்களில் கண்டுவிட்டாள். ஆழி மழையில் நனைகிறான் என்றதும் கொஞ்சமும் தாமதிக்காது, ஜெயந்தியின் கையிலிருந்த குடையை பிடுங்கிச்சென்று ஆழியின் கையில் கொடுத்துவிட்டு ஓட, அவள் திடீரென ஓடியதும் கத்தி அழைத்திருந்தாள் ஜெயந்தி.

அழைத்த பின்னரே ஜெயந்தி தனக்கும், ஆண்டாளுக்கும் நடுவில் ஆழி நின்றிருப்பதை கண்டாள்.

"போச்சு" என்று ஜெயந்தி நினைத்து முடிக்கும் முன், ஆண்டாள் ஓடியிருக்க, ஆழி ஜெயந்தியை அருகில் அழைத்தான்.

தூறலும் விட்டிருந்தது.

"நாளைக்கு வந்திடுவீங்களா?"

வகுப்பை மறந்தவனாக அருகிலிருந்த மரத்தில் சாய்ந்து நின்றுவிட்டான். ஜெயந்தி அடி மேல் அடி வைத்து அவனை நெருங்கினாள்.

"அச்சோ அண்ணா சாரி அண்ணா... எனக்கு எதுவும் தெரியாது. அவள் தான், அவள் தான் உங்களை லவ் பண்றேன்னு..."

ஜெயந்தி, ஆழி திட்டிவிடுவானோ எனும் பயத்தில் எல்லாம் உளற, கைகாட்டி தடுத்திருந்தான்.

ஆழிக்கு, தன்னவள் தன்மீது கொண்டுள்ள காதலை அவள் சொல்லிக் கேட்டிட விருப்பம். அதனாலேயே ஜெயந்தியை சொல்ல வேண்டாமென்று நிறுத்தினான்.

"சோ, ஷீ இஸ்...?" என்று ஆண்டாள் சென்ற திசையை பார்த்துக் கேட்டான்.

ஜெயந்தியின் தலை வேகமாக ஆமென்று ஆடி, எல்லா பக்கமும் சுழன்றது.

"சரி... நீ போ" என்றான் விட்டால் போதுமென்று ஜெயந்தி ஓடியேவிட்டாள்.

ஜெயந்தியின் மூலம், ஆழி அவளிடம் பேசியதை வைத்து தன்னை அறிந்திருக்கிறான் என்பதை ஆண்டாள் கண்டுகொண்டாள்.

உண்மை தெரிந்த பின்னர் அவனே தன்னிடம் பேசுவான் என ஆண்டாள் நினைத்ததற்கு மாறாக, முன்பு போல அமைதியாகவே இருந்தான் ஆழி.

தகவல் அனுப்பி அனுப்பி சோர்ந்து போனாள்.

ஜெயந்தி பிறந்தநாள், விடுமுறையாகவும் இருக்க பெண்கள் நால்வரும் பிரியாணி செய்தனர்.

ஆண்டாள் ஆழிக்கும் கொடுப்போமென்று சொல்ல,

"அவங்க வாங்கமாட்டாங்க" என்றாள் ரேஷ்மா.

"நீங்களா எப்படி சொல்றீங்க அக்கா. இதுக்கு முன்ன எதுவும் கொடுத்து இருக்கீங்களா?" என ஆண்டாள் கேட்க, ரேஷ்மா இல்லையென்றாள்.

"அப்போ இன்னைக்கு கொடுப்போம். ஜெயாவே கொடுப்பாள். அவளுக்கு தானே பர்த்டே" என்று நண்பியை கோர்த்துவிட்டாள் ஆண்டாள்.

"ஆக மொத்தம் உன் காதலில் நான் தான் சட்னின்னு அப்பப்போ காட்டுற நீ" என்று ஆண்டாளின் காதில் முணுமுணுத்து, அவள் சிரித்துக்கொண்டே கையில் கொடுத்த பிரியாணியை எடுத்துக்கொண்டு ஆழியின் அறையை நோக்கிச் சென்றாள் ஜெயந்தி.

"எனக்கு அவங்க வாங்கமாட்டாங்க தோணுது..." ரேஷ்மா சொல்லிட, "எதுவும் திட்டி அனுப்பாம இருந்தால் சரி" என்றாள் ஜனனி.

ஆண்டாள் இருவரையும் பார்த்துவிட்டு, தயங்கித் தயங்கி சென்று கொண்டிருந்த ஜெயந்தியிடம் ஓடினாள்.

"பயமா இருக்கு திரணி..."

"பிளீஸ் ஜெயாம்மா... எனக்காக. இவ்வளவு பக்கமிருந்தும், பார்த்து ரொம்ப நாளாகுது ஜெயா. இங்க பெயின் ஆகுது" என்று தன் இதயத்தை தொட்டுக் காண்பித்து, "இப்போ நீ இதை கொடுக்கும் சாக்கு வைத்து பார்த்துக்கிறேனே" என்றாள். கண்கள் கலங்கியிருந்தது.

"ம்ப்ச்... இப்போ என்ன அண்ணாவை நீ பார்க்கணும். அவ்ளோதானே! பார்த்திடலாம்" என்று ஆண்டாளின் கன்னம் கிள்ளிய ஜெயா, "ஒளிஞ்சிக்கோ" என்றாள்.

"இல்லை... நான் இங்கவே இருக்கேன். அவங்களும் என்னை பார்க்கனும் தானே?" என்றாள்.

ஜெயந்தி சென்று கதவினைத் தட்ட, வெளியில் வந்த ஆழி, ஜெயந்தியை கடந்து பார்வையை எங்கும் பதிக்கவில்லை.

"எனக்கு பர்த்டே" என்று அவள் பாத்திரத்தை ஆழி முன் நீட்ட,

"ஹேப்பி பர்த்டே" என்றவன், "என்னதிது?" எனக் கேட்டான்.

"ஆண்டாள் கொடுக்க சொன்னாள்." எங்கு தான் கொண்டு வந்ததாக சொன்னால் வாங்கிக்கொள்ளமாட்டானோ என்று ஆண்டாளை சொல்லியிருந்தாள்.

"அவங்க என் முன்ன வரமாட்டாங்களா?" கேட்டுக்கொண்டே உணவை வாங்கிக்கொண்டான்.

"எனக்கு பின்னாடி தான், ரேஷ்மா அக்கா ரூம் முன்னாடி நிக்கிறாள்" என்றாள் ஜெயந்தி.

"ஹோ, இப்போ அவங்களா என் முன்னாடி வராமா, நானா எட்டிப் பார்த்து, அவங்க முகத்தை தெரிஞ்சிக்கணுமா?" ஆழியின் குரலின் வெறுமை ஜெயந்திக்கே என்னவோ போலிருந்தது.

"நிறைய லவ் பன்றாள். ஆனாலும் பயம் அவளுக்கு. அவங்க அண்ணாவுக்கு ரொம்பவே பயம்" என்றாள். தோழியை விட்டுக் கொடுக்காது.

"ம்ம்..." என்ற ஆழி, "முகத்தை காட்டாமலே என்னை விழவச்சிட்டாள். அவளுக்கா தோணும் போதே வரட்டும்" என்ற ஆழி, "பிரியாணிக்கு தேங்க்ஸ்" என்று உள்ளே சென்றுவிட்டான்.

ஜெயந்தி, ஆழி பேசியதை சொல்ல, ஆண்டாளுக்கு காதல் நெஞ்சம் நிறைந்தது.

அடுத்து பலமுறை அழைக்க ஆழி அழைப்பை ஏற்கவே இல்லை. தகவல்களும் பயனற்றுப் போனது.

மேலும் இரண்டு நாட்கள் கடக்க, அவளே அவன் கண் படுமாறு தன் இருப்பைக் காட்டினாலும், அவனின் பார்வை அவளின் பாதம் தாண்டி மேல் உயராது.

கல்லூரியில் பல பேருக்கு நடுவில் அவளை பார்த்தாலும், அவளின் முகம் காணாது, இனம் கண்டுகொள்ள இயலாது கடந்திருப்பான். ஆனால் வீட்டில், அவனுடன் மேல் தளத்தில் தென்படும் அரவத்தில் மற்ற மூன்று பெண்களை ஆழி தெரிந்திருக்க, ஆண்டாளை எளிதாக இனம் கண்டு அவனால் தவிர்க்க முடிந்திருந்தது.

இதற்கு மேல் முடியாதென்று, அன்று ஆண்டாள் ஜெயந்தியின் எண்ணிலிருந்து ஆழிக்கு அழைத்தாள்.

ஆழி அழைப்பை ஏற்று ஹலோ சொல்வதற்கு முன்பு,

"ரொம்ப பண்றீங்க? மெசேஜஸ் பார்க்க முடியாதா? ஒரு ரிப்ளை இல்லை. என் நெம்பரில் கால் பண்ணா எடுக்க முடியாதா? காலேஜில் பார்க்கக்கூட முடியல? எங்கதான் இருக்கீங்க? நீங்க போற இடமெல்லாம் பைத்தியக்காரி மாதிரி சுத்திட்டு இருக்கேன். உங்களுக்கு என் முகம் தான் தெரியாது. ஆனால் நான் யாருன்னு தெரியும் தானே? வீட்டில் உங்க கண்ணு முன்ன வந்து நின்னாலும் பார்க்காம போறீங்க" என்று படபடவென கேள்வியாகக் கேட்டு, இறுதியில் அழுகையில் தன் தவிப்புகளை வெளிப்படுத்தியிருந்தாள், அவனை காணாத தன்னுடைய ஏக்கத்தையும்.

அவள் அழுகிறாள். அவனுக்காக அழுகிறாள். அவனுக்காக அழும் முதல் நபர் அவள். எப்படியிருக்கிறதாம் அவனுக்கு.

"உன்னோட பிடித்தம் எனக்குள்ளவும் வந்திடுச்சு. உனக்கு பயம் எதுவா இருந்தாலும், நான் பாதுகாப்பா இருப்பேன்னு தோணுச்சுன்னா, என் காதல் மேல நம்பிக்கை இருந்தால், என் முன்னாடி வாடி... யாருமேயில்லன்னு இருந்த எனக்கு நீயா வரண்ணு சொல்லும் போது நான் எப்படி வேணாம் சொல்லுவேன். எனக்கே எனக்குன்னு, மொத்தமா ஒரு உறவு."

மனதின் உணர்வுகளை முழுதாய் சொல்லி வைத்திட்டான்.

ஆழி சொல்லியதில், அவனின் காதலைவிட வலிகளையே ஆண்டாள் அதிகம் உள்வாங்கியிருந்தாள்.


அவனின் வலி போக்கிட தன் பயம் நீங்கிடுவாளா?

அத்தியாயம் 4கிற்கான இணைப்பு 👇🏻
 
Last edited:
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
வாவ் 😍 ஆழி அவனோட உணர்வுகளை ஆண்டாள்கிட்ட சொன்னவிதம் அருமை ❤️👌

ஆனா இவளா நேர்ல போய் அவனுக்கான அவளோட உணர்வுகளை சொல்லணுமே 😍

இந்த ஜெயந்தி பொண்ணு ஒரு நல்ல நட்பு ஆண்டாளுக்கு 🤩

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 
  • Love
Reactions: MK16

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
வாவ் 😍 ஆழி அவனோட உணர்வுகளை ஆண்டாள்கிட்ட சொன்னவிதம் அருமை ❤️👌

ஆனா இவளா நேர்ல போய் அவனுக்கான அவளோட உணர்வுகளை சொல்லணுமே 😍

இந்த ஜெயந்தி பொண்ணு ஒரு நல்ல நட்பு ஆண்டாளுக்கு 🤩

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
Thank you so much kaa ☺️😊