• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆழி நெஞ்சம் 5

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
ஆழி நெஞ்சம் 5

இரண்டு ஆண்டுகள் அதி வேகத்தில் சென்று மறைந்தன.

இடைப்பட்ட நாட்களில் இருவரின் காதல் சுகம் சுகமாய் இதயத்தில் இதம் பரப்பி, நொடி நொடியாய் அதிகரித்து, நீயின்றி நானில்லை எனும் கூற்றைக் கடந்து, நீயின்றி யாவுமில்லை என்ற நிலையில் ஆழ வேர் பிடித்திருந்தது, காதல் சுமக்கும் நெஞ்சங்களில்.

"ரொம்ப வேகமா ஓடிடுச்சு..." ஆண்டாள் இதழ் விரிந்திருந்தாலும், கண்கள் நீரை தேக்கியிருந்தன.

"ம்ம்... ரொம்பவே மிஸ் பண்ணுவேன்" என்ற ஆழி, "லவ் யூ டி" என அவளின் நெற்றி முட்டினான்.

"லவ் யூ ஆழ்" என்ற ஆண்டாள், "ட்ரைனிங் பீரியட் ஜாயின் பண்றதுக்கு முன்ன, வீட்டுக்கு வாங்க. அண்ணாகிட்ட பேசுங்க. அண்ணா ஓகேன்னா, அம்மாவுக்கும் ஓகே தான்" என்றாள். ஆழியின் விரல்களோடு தன்னுடைய விரல்கள் கோர்த்து கையை பிணைத்துக் கொண்டாள்.

"அடுத்து என்ன?"

"உங்களை கல்யாண பண்ணிக்கணும். உங்க சாயல்ல ஒரு குழந்தை பெத்துக்கணும்."

இத்தனை வருட நேசத்தில் இதுபோன்ற பேச்சு, இதுவே முதல்முறை. அதுவும் அவளிடமிருந்து.

அவர்களுடையது, கைகள் மட்டும் தேவைப்படும் நேரம் ஆறுதலாக பிடித்துக் கொள்ளும் காதல். அரவணைப்புக்காக சில நொடிகள் தோள் மட்டும் சாய்ந்து கொள்ளும் காதல்.

ஆழிக்கு சில்லென்ற உணர்வு இதயத்தில் கூரிய வேலெனப் பாய்ந்தது. அகம் கொண்ட உவகை அவனது முகத்தில் தெரிந்தது.

"என்னவாம்?"

ஆழி ஒன்றுமில்லையென இதழ் விரிப்போடு தலையசைக்க,

அவனின் மீசையை பிடித்து இழுத்த ஆண்டாள், "சாருக்கு இந்த ஆசை இல்லையோ?" என்றாள்.

"ஒன்னு இல்லை... ஒரு நாலஞ்சு பிளான் பண்ணி வச்சிருக்கேன்" எனக்கூறி ஆழி கண்ணடிக்க,

"அடப்பாவி... நான் தாங்குவேனா?" என்று அவனின் புஜத்திலே குத்தியிருந்தாள்.

"என்னையவே இத்தனை வருஷம் சுமக்குறியாம். நம்ம குழந்தைகளை சுமக்கமாட்டியாமா?"

"அச்சோ ஆழி போதும்" என்று அவனின் தோளிலே முகம் புதைத்துக் கொண்டாள்.

முதல்முறையான எதிர்பார்ப்புகள் நிறைந்த பேச்சு, பிடித்தது என்பதைத் தாண்டி ரசிக்கவே வைத்தது.

ரயில் நிலைய அறிவிப்பு குரல் ஒலிக்க,

"போஸ்டிங் போட்டதும் ட்ரெயினிங் எங்கன்னு சொல்லுங்க" எனக்கூறி, அவன் நலன் வேண்டி ஆயிரம் பத்திரங்கள் சொல்லி, ரயில் ஏறினாள்.

"லவ் யூ ஆழ்..."

அவனுடைய பயிற்சிக்கு முன்பு தன்னுடைய படிப்பு முடிந்ததில் அத்தனை வருத்தம் அவளுக்கு. அவனைவிட்டு செல்வது நினைத்து.

"சீக்கிரம் வந்திடுங்கப்பா..." கண்கள் கலங்கி நீர் சொட்டிவிட்டிருந்தது.

"ஆண்டாள்..." என்று சன்னல் வழி அவளின் கரம் பற்றிக்கொண்ட ஆழி, "கண்ணைத் துடை" என்று தானே துடைத்தும் விட்டான்.

"சிரிடா... உன்னை பார்க்காம, இன்னும் த்ரீ மந்த் ஓட்டணும்." ஆழியின் குரல் கரகரத்து ஒலிக்க, பிரிவின் வலி நிறைந்த புன்னகை அவளிடம்.

ரயில் மெல்ல இயங்கத் தொடங்கியது...

ஆண்டாளின் கன்னத்தில் தன்னுடைய உள்ளங்கை அழுந்த வைத்த ஆழி,

"பத்திரம் டா" என்றான்.

மனதின் நினைவில் ரயிலின் ஓட்டம் வேகமெடுக்க, நிகழில் மழை பொழிந்து அடங்கியிருந்தது. சாலை கழுவி விட்டதுபோல பளிச்சென்று இருக்க, கண்களில் ஊர்வலம் சென்ற கடந்த காலத்தின் காட்சிகள் யாவும் ஆழியின் நெஞ்சின் ஓரம் கரை சேர்ந்தன.

நினைவில் மூழ்கி வெளிவந்த ஆழி வீட்டிற்குள் நுழைந்தான். குளித்து முடித்து காக்கிச் சட்டையை அணிந்து கண்ணாடி முன் நின்றான்.

எப்போதும் அவன் கண்ணாடி முன்பு வந்து நின்றிடும் போது, கண்ணாடிக்கும் அவனுக்கும் இடையில் புகுந்து, அவனின் சிகை நீவி, தொப்பியை அவள் தான் அணிவித்து விடுவாள்.

கண்கள் மூடி தன்னை நிலைப்படுத்தி நிமிர்ந்து நின்ற ஆழி, நினைவு கொடுத்த வலியோடு தொப்பியை எடுத்து அணிந்து கொண்டான்.

அவள் விட்டுச் சென்றிருந்தாலும், அவனின் நிகழ் நொடி நொடியாய் அவளின் நினைவுகளோடு தான் பயணித்துக் கொண்டிருக்கிறது.

வாகனத்தில் கண்கள் மூடி அமர்ந்திருந்தான். அவனது அலைபேசி இசைத்தது.

"சார்..." ஆழி களையாது இருக்க, ஓட்டுநர் அவனின் தொடை தொட்டு அழைத்தார்.

மெல்ல கண் திறந்தான். அழைப்பு யாரென்று பார்க்க, ஜெயந்தி.

"ஹாய் அண்ணா..."

"ஹாய்ம்மா... எப்படி இருக்க? குட்டி வாலு என்ன சொல்றான்?" அதுவரை இருந்த தன் சோகங்கள் எல்லாம் ஒதுக்கி வைத்து இன்முகமாக பேசினான்.

"பர்ஸ்ட் டே ஸ்கூல் போறான். உங்ககிட்ட அதை சொல்லனுமாம்."

"நேத்தே சொன்னான். மறந்துட்டேன்" என்ற ஆழி, ஜெயந்தி மற்றும் ராஜேஷின் நான்கு வயது மகனிடம் பேசினான். இப்போது அவனுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள இருப்பது இவர்கள் தான். இந்த உறவும் கூட அவனவளால் அவனுக்கு கிடைக்கப்பெற்றது தான்.

"நான் இன்னைக்கு பர்ஸ்த் தே ஸ்கூல் போறேன். விஸ் பண்ணுங்க மாமா..." மழலையில் ஒலித்த குரல், ஆழின் கண நேர புன்னகைக்கு காரணமாக அமைந்தது.

"அச்சோவ்... குட்டி பறக்க ரெடியாகிட்டாங்களா?" என்ற ஆழி, "அழாம போயிட்டு வரணும். மிஸ் சொல்லிக் கொடுக்குற ரைம்ஸ் வீட்டுக்கு வந்ததும் மாமாக்கு சொல்லிக் கொடுக்கணும்" என்றான்.

"ம்ம்..." என்று ராகமிழுத்த சிறுவனிடம், மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைக்க, போக்குவரத்து சமிக்ஞைக்காக வண்டி நின்றிருந்தது.

ஆழியின் பார்வை சுற்றி சுழன்றது.

தன்பக்க வாகனக் கதவு வெளியிலிருந்து தட்டப்படவும் யாரென்று பார்த்தான்.

ஒரு சிறுமி வெளியில் உண்டியலோடு பள்ளிச் சீருடையில் நின்றிருந்தாள்.

"குட்மார்னிங் அங்கிள்" என்று சிரித்த சிறுமியின் மலர்ந்த முறுவலில் மனம் தொலைந்து மீண்டான் ஆழி அமுதன்.

"குட்மார்னிங் லிட்டில் பட்டர்ஃப்ளை" என்று பளிச்சென்று சொல்லிய ஆழி, போக்குவரத்து சமிக்ஞையைப் பார்த்துவிட்டு, சாலை ஓரம் நடை மேடை அருகில் நின்றிருந்த வாகனத்தின் கதவை திறந்து இறங்கினான்.

"டுடே இஸ் ஃபிளாக் டே... மே ஐ பின் த நேஷனல் ஃப்ளாக் ஆன் யுவர் செஸ்ட்?" என்று தெளிவான ஆங்கில உச்சரிப்பில், தன் கையில் வைத்திருக்கும் மார்பில் பதிந்து கொள்ளும் வகையிலான தேசியக் கொடி அட்டைகளைக் காண்பித்துக் கேட்ட சிறுமியிடம்,

"யா ஷ்யூர்..." என்று சிறுமிக்கு வாகாக தன் உயரம் குறைத்து தாழ்ந்தான்.

கொடியின் பின்னால் ஸ்டிக்கரை எடுத்துவிட்டு, ஆழியின் இதயத்தில் தன்னுடைய பிஞ்சு விரல்கள் ஆழ பதித்து கொடியை ஒட்டிவிட்ட சிறுமியின் முகத்தில் அவனின் கண்கள் ஆதுரமாக படிந்திருந்தது.

1000036460.jpg


சிறுமியின் கை அழுத்தத்தில் சொல்ல முடியா உணர்வு பிரவாகம் அவனிடம். இதயத்தின் துடிப்பு அதிகரித்த மாயம். காரணம் விளங்கவில்லை.

குழந்தை அவன் முன்பு உண்டியலை நீட்டி, "இஃப் யூ ஆர் இன்ட்றெஸ்டிங் டூ பே?" எனக் கேட்டதில் நிகழ் மீண்டு, பேன்ட் பையிலிருந்து வாலட் எடுத்து, உண்டியலில் பணம் போட்டான்.

"தேங்க் யூ ஆங்கிள்" என்று சிறுமி சிரிக்க...

"க்யூட் ஸ்மைல்" என்றான்.

"அம்மாவும் அப்படித்தான் சொல்லுவாங்க" என்ற சிறுமியை கைகளால் அள்ளித் தூக்கிட ஆசை கிளர்ந்த போதும், செய்யாது அமைதியாக நின்றான்.

"யாரோட வந்தீங்க?" ஆழி அவ்விடத்தை அலசிக்கொண்டே வினவினான்.

"அதோ... எங்க மிஸ் அண்ட் என்னோட வந்த ஃபிரண்ட்ஸ்" என்று அவள் கைகாட்ட, சில அடிகள் தொலைவில், அவளுடன் வந்தவர்கள் என்பதற்கு அடையாளமாக, பள்ளி சீருடையில் உண்டியலோடும், கொடியோடும் நின்றிருந்தனர்.

"ஓகே... பைய் அங்கிள்." சிறுமி கையசைத்துவிட்டு தன் ஆட்களிடம் செல்ல...

"பட்டர்ஃப்ளை நேம் என்ன?" எனக் கேட்டிருந்தான் ஆழி.

"ஆழி... ஆழிதா" என்று திரும்பிச் சொல்லிய சிறுமி, "பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட். பவன்ஸ் வித்தியாஷ்ரம்" என்று ஓடிவிட்டாள்.

'ஆழிதா.' ஒருமுறை சொல்லிப்பார்த்தான். தேகம் சிலிர்த்தது. அவனுடைய பெயரை பாதியாக வைத்திருக்கிறாள். தினமும் பலர் சொல்லி அவன் கேட்கும் பெயர். யாரோ ஒரு மழலை வைத்திருக்க, அவனுள் நெகிழ்ச்சி சாரல்.

ஆழிதா தன்னவர்களுடன் இணைந்து அங்கிருந்து செல்லும் வரை பார்த்து நின்றிருந்தான். ஏனென்று அவனுக்கே தெரியவில்லை.

"சார் டைம் ஆச்சு."

ஓட்டுநர் கண்ணன் சொல்லிடவும்,

"சாரி" என்று வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.

ஆழிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் முக்கிய கூட்டம் இருக்கிறது. இப்போது அவன் அங்கு செல்ல வேண்டும்.

ஆற்றில் மணல் எடுப்பதற்காக வருடாந்திர ஏலம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த ஏலத்தின் போது இரு பெரும் புள்ளிகளுக்கு நடுவில் போட்டியோடு சேர்ந்து கைகலப்பும் ஏற்படும். அதற்காக இம்முறை காவல்துறை உயர் அதிகாரி பாதுகாப்பில் நடத்த முடிவு செய்திருந்தனர்.

ஆழி இங்கு வந்து நான்கு நாட்கள் தான் ஆகின்றன. இந்த ஊரும் அவனுக்கு புதிது என்பதால், அலுவலகம் எங்கிருக்கிறது, இன்னும் செல்ல எத்தனை தூரமென்று தெரியாததால், ஓட்டுநர் தாமதமாகிறது என்றதும் தன் தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்டிருந்தான்.

"நீங்க ரொம்பவே வித்தியாசமா இருக்கீங்க சார்."

கண்ணன் சொல்லிட ஏன் எனும் விதமாக பார்த்தான்.

"இதுக்கு முன்னாடி உங்க இடத்தில் இருந்தவங்க எல்லாம் எப்பவும் உர்ருன்னு முறைச்சிக்கிட்டு, சிரிக்கவே தெரியாதுங்கிற மாதிரி கடுகடுன்னு முகத்தை வச்சிகிட்டு, அவங்களுக்கு நாங்க எதோ அடிமை போல நடத்துவாங்க சார். ஆனால் நீங்க, அந்த குழந்தைக்கிட்ட எவ்ளோ தன்மையா நடந்துகிட்டிங்க. என்கிட்ட சாரி வேற" என்றார்.

ஆழி சிரித்தானே தவிர வேறெதுவும் சொல்லவில்லை.

இந்த கனிவு, புன்னகை எல்லாம் அவனின் ஆண்டாள் அவனுக்கு கற்றுக் கொடுத்தது அல்லவா!

ஒருமுறை ரவுடி ஒருவனை ரோட்டில் அடித்து புரட்டி எடுப்பதை பார்த்துவிட்ட ஆண்டாள்,

"அவனை அப்படி அடிக்கிறீங்க... அவன் செய்ததையே தான நீங்களும் செய்றீங்க, உங்களுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்?" எனக் கேட்டவள், "உங்களை அவ்ளோ ஆக்ரோஷமா பார்க்கவே எனக்கு பயமா இருந்தது. என் ஆழிக்கு கோபம் இவ்ளோ வருமா? இந்த ஆழியை எனக்கு பிடிக்கவே இல்லை" என்று சொல்லியிருந்தாள்.

அதோடு ஆழியிடம் இரு நாட்களாக ஆண்டாள் பேசவே இல்லை.

அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தும். ஆண்டாள் மனமிறங்கவில்லை.

"ரொம்ப பன்றடி... இனி யாரையும் அடிக்கமாட்டேன், போதுமா?" என்ற ஆழி, "நீ பேசாம இருக்கிறது என்னவோ மாதிரி இருக்குடி. பிணமா நிக்கிற ஃபீல்... பிளீஸ் பேசு" என்றவனின் அதரத்தோடு இதழ் பொருத்தி விடுத்தவள்,

"போலீஸ் அப்படின்னா விறைப்பா, முரட்டுத் தனமா இருக்கணும் அவசியமில்லை ஆழி. குற்றவாளியா இருந்தாலும், உங்க முன்னுக்கு இருக்கிறது சக மனுஷன். ஒரு உயிரா பாருங்க. தண்டிக்க கோர்ட் இருக்கு" என்றாள்.

"சரிங்க மேடம்..."

அவன் அன்று சொல்லிய சரிங்க மேடம் என்பதற்காக, இன்றும் அத்தனை எளிதில் யார் மீதும் கை வைத்திடமாட்டான்.

"தாசில்தார் நேம் என்ன?"

"புதுசு சார். போன மாசம் தான் இங்க மாற்றலில் வந்தாங்க. பெயர் சரியா தெரியல" என்றார் கண்ணன்.

"ம்ம்..." என்ற ஆழி, அலைபேசியில் கூகுளில் அப்பகுதி வட்டாட்சியர் யாரென்று தேடிட, திரையில் பெயர் ஒளிர்ந்த கணம், "வந்தாச்சு சார்" என்று கண்ணன் வண்டியை நிறுத்தினார்.

பெயரை சரியாக பார்க்காது, அலைபேசியை பாக்கெட்டில் வைத்த ஆழி, இன்னும் சில நிமிடங்களில் தனக்கு நேரவிருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அறியாது வண்டியிலிருந்து இறங்கினான்.

ஆழியை கண்டுவிட்டு வட்டாச்சியரின் காரியதரிசி ஓடிவந்து வரவேற்றார்.

"மேடம் மீட்டிங் ஹாலில் இருக்காங்க சார். எல்லாரும் வந்துட்டாங்க. நீங்க வந்ததும், உங்களை உள்ள கூட்டிட்டு வர சொன்னாங்க" என்ற மணியன், முன் செல்ல, ஆழி அவரை பின்தொடர்ந்தான்.

"ஏலம் ஸ்டார்ட் பாண்ணியாச்சா?", ஆழி.

"இன்னும் இல்லைங்க. உங்களுக்காகத்தான் வெயிட்டிங்" என்ற மணியனிடம், "நான் லேட்டா வந்துட்டேனா?" எனக் கேட்டான் ஆழி.

"இல்லை சார். கரெக்ட் டைம் தான்" என்று சொல்லிக்கொண்டே, மணியன், ஏலம் நடைபெறவிருக்கும் கூடத்தின் கதவை திறக்க, மிடுக்காய் உள் நுழைந்தான் ஆழி ஆமுதன்.

உள்ளே நுழைந்த ஆழியை எதிர்பாராது, வட்டாட்சியரின் முகம் இயல்பை தொலைத்து சடுதியில் சீரானது.

அறைக்குள் வந்ததும்,

"அங்க சார்" என்று, அவ்வறையில் நீள் வட்ட வடிவில் போடப்பட்டிருந்த நீண்ட மேசையில் நடுநாயகமாக தலைமை இருக்கையில் அமர்ந்திருந்த நபரை கண்டுவிட்டு ஆழியின் நடை அதிர்ச்சியில் நின்றது.

கண்கள் ஆச்சரியத்தில் ஒளிர்ந்தன.

நொடியில் உதட்டில் தோன்றிவிட்ட புன்னகையை, அந்நபரின் வெறுமையான பார்வையில் நிறுத்தி, சடுதியில் நிர்மலமாக முகத்தை மாற்றிக்கொண்டான்.

மணியன் வட்டாச்சியரின் அருகில், பக்கவாட்டில் இருக்கையை காண்பிக்க, நீண்ட எட்டுக்களுடன் மிடுக்காய் நடந்து வந்து கம்பீரமாய் இருக்கையில் கால் மேல் காலிட்டு, இருக்கையின் கையில் தன் கை முட்டி பதித்து, முகம் தாங்கி அமர்ந்தான்.

அவனின் பார்வை அவளின் முகத்தில் அழுத்தமாகப் படிந்து, அவள் முன்னிருந்த பெயர் பலகையில் நிலைத்தது.


"திருமதி.ஆண்டாள் ஆழி அமுதன். வட்டாட்சியர்." ஆழியின் அகம் அப்பெயரை அத்தனை கோபமாக உச்சரித்தது.

அத்தியாயம் 6க்கான இணைப்பு
 
Last edited:
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அட எப்போ இவங்களுக்கு கல்யாணம் ஆச்சு 🤔 இது பெரிய ட்விஸ்ட்டா இருக்கே 🧐 அப்போ ஆழிதா 🧐
 
  • Love
Reactions: MK16