• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆழி நெஞ்சம் 6

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
ஆழி நெஞ்சம் 6


கோவிலுக்குச் சென்று பழகியது இல்லை. அதற்காக தெய்வ நம்பிக்கை இல்லை என்றும் சொல்லிட முடியாது. தள்ளி நின்று கொண்டான் அவ்வளவே!

ஆனால் இப்போது, எல்லாம் நீயே என்று சரணாகதி அடைந்துவிடுகிறான். ரொம்பவும் முடியாத தருணங்களில் இப்படி வந்து உட்கார்ந்திடுவான். இது அவள் பழக்கப்படுத்திய ஒன்று.

வாழ்வில் தனித்து இருந்தது தான் அதிகம். அதற்காக ஒருநாளும் வருந்தியது கிடையாது. ஆனால் இப்போது ஒவ்வொரு கணமும் யுகமாய் ஊர்ந்தது. வலிக்க வலி கொடுத்தது. தனிமையின் வேதனையை பரிசளித்துச் சென்றவளின் மீது இந்நொடியும் காதல் தீராது கூடிக்கொண்டு செல்வது தான் அவளின் ஆத்மார்த்த காதலுக்கு சான்று.

அவள் தான் விட்டுச் சென்றுவிட்டாள். காரணம் ஏதுமில்லை அவனளவில். அவளுக்கு இருந்திருக்குமோ?

சேர்ந்து வாழ்ந்த வாழ்வு சொர்க்கம். நொடிக்கு நொடி இனிமை. மொத்தத்தையும் இமைப்பொழுதில் களைத்துச் சென்றுவிட்டாள்.

விரக்திப் புன்னகையுடன், சாந்தம் தவழும் முகத்தில் கனிவு காட்டி கல்லென அமர்ந்திருக்கும் தெய்வத்தை திரும்பி பார்த்தான்.

"அவளை என் கண்ணுல காட்டிடாதேன்னு சொன்னேன் தானே!" என்று சொன்னவனின் இதயம் நொடியில் தகிப்பைக் கூட்டி, கண்களில் தணலை எரியவிட்டது.

வெறும் கோபம் மட்டுமா இது? காதல் கொடுக்கும் கோபமல்லவா?

தன்னைப் பார்த்ததும் அவள் விழிகளில் வந்துபோன நொடி நேர அதிர்ச்சியை உள்வாங்கியிருந்தானே!

எதற்கு இந்த அதிர்ச்சி? ஆழியினுள் பெரும் வினா.

'கண் முன்னால் வந்துவிட்டேன் என்று அதிர்ந்தாளா? விட்டுச் சென்றிருந்தாலும், என் மீதான காதல் அவளுள் இல்லையா? எனக்கு எல்லாம் அவள் தானே! அவளின்றி நானிருப்பேன், எப்படி நினைத்தாள்?' மனதில் பல கேள்விகள் வரிசை கட்டின.

"நீ எனக்கு வேணும் ஆண்டாள்."

ஏலத்திற்கான கூட்டம் முடியவே, மதிய உணவு வேளை கடந்திருந்தது. இருவர் முட்டிக்கொண்டு நான் நீயென போட்டி போட்டு ஏலம் கேட்டதில், அரசு எதிர்பார்த்ததற்கும் இருமடங்கு மேலாக தொகை சென்றிட,

ஆண்டாள் "இதோடு ஒருவர் நிறுத்தி ஏலத்தை முடித்து வைங்க" என்று சொல்லியும் கேட்காது தர்கம் செய்தனர்.

அப்போது ஆழி தான் இடைப்புகுந்து, போட்டி போட்ட இருவருக்கும் தராது,

"நீங்க இருவருமே அரசு நிர்ணயித்த இலக்கு தொகை தாண்டி சென்றுவிட்டீர்கள். இது உங்களுக்கும் நஷ்டம், அரசு விதிமுறைகளுக்கும் புறம்பானது. அதனால் நியாயமான தொகைக்கு கேட்ட மூன்றாவது நபருக்கு இம்முறை உரிமம் செல்கிறது" என்று முடித்து வைத்தான்.

ஆழியின் கருத்து சரியானதாக ஏற்கப்படவே, ஆண்டாளும் மூன்றாவது நபருக்கு உரிமை வழங்கி கையெழுத்திட்டாள்.

இருவரும் தனியாக சந்திக்க நேர்ந்த தருணம், ஆழி அவளிடம் சொல்லியது.

ஆண்டாளின் கண்ணிலிருந்து நீர் இறங்க, அவனை இமை சிமிட்டாது பார்த்திருந்தவள், வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. பார்த்தது பார்த்தபடி இருந்தாள்.

ஆண்டாளின் உதட்டின் நடுக்கம், அவள் கட்டுப்படுத்தும் உணர்வுகளையும், அவனுக்கான அவளின் தவிப்புகளையும் அழகாய் ஆழிக்கு காட்டிக்கொடுத்திட்டது.

கோபமிருக்கிறது. அதை மிஞ்சியதல்லவா அவன் கொண்ட காதல். அவள் காட்டிய நேசத்தில் அவளின் தவறை மன்னிக்கத்தான் தோன்றுகிறது.

கோபமாகத் திட்டிவிட்டால் கூட அவனுக்கு அழுத்தம் குறைந்துவிடும். அவள் முகம் பார்த்து அவனால் அதுவும் முடியவில்லை.

"காரணம் தெரியல... ஆனாலும் நீயில்லாம முடியலடி! விட்டு போறதுக்கு எதுக்கு வந்த?" எனக் கேட்ட ஆழி,

"கோபமிருக்கு. ஆனாலும், நீ எனக்கு வேணும் ஆண்டாள்" என்று திரும்பி நடந்தவன்,

"சீக்கிரம் என்கிட்ட வரப்பாரு. குவார்ட்டரஸ்ஸில் தான் தங்கியிருக்கேன்" என அங்கிருந்து கிளம்பி தன்னுடைய அலுவலகம் வந்து கொண்டிருந்தவன், வழியில் கோவிலை பார்த்துவிட்டு இறங்கிக் கொண்டான்.

பசிக்கும் உணர்வு இல்லை. மனம் அவளருகில் மண்டியிட ஆசை கொள்கிறது. ஏனென்று காரணமேயின்றி நீ வேண்டாமென தவிக்கவிட்டுச் சென்றவளிடம் தன்மானத்தை விட்டு, நீ வேண்டுமென சொல்லிவிட்டு வந்திருக்கிறான். வருவாளா என்று தெரியவில்லை. வரவில்லை என்றாலும், அவளிடம் தான் செல்ல முடிவெடுத்துவிட்டான்.

இக்கணம் கூட, தனக்காக அவளுக்கானவை எல்லாம் விட்டு வந்த ஆண்டாள், தன்னை பிரிந்து செல்ல காரணமான விடயமறிந்து அதனை சரிசெய்துகொள்ளவே நினைக்கிறான்.

ஆம்! ஆண்டாள் ஆழிக்காக தனக்கென இந்த இயற்கை அமைத்துக் கொடுத்த அனைத்தையும் உதறித் தள்ளி, அவன் மட்டுமே போதுமென வந்திருந்தாள்.

அப்படிப்பட்டவள் விட்டுச்சென்ற காரணம் தெரியாது ஆறு வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கிறான்.

நெஞ்சம் சூழ்ந்த வேதனைகள் முழுக்க, இன்பமாய் தெவிட்டாத சுவையுடன் இருவரும் வாழ்ந்து களித்த கடந்த காலத்தை எண்ணிப்பார்க்க விழைந்தது.

எப்போதும் போல் இப்போதும் தூர நினைவுகளை புறம் ஒதுக்காது, ரசிக்கத் தயாராகினான். கோவில் தூணில் தலை சாய்ந்து கண்களை மூடிய ஆழிக்குள், அவனவள் சிரித்த முகம்.

டெல்லியிலிருந்து ஆண்டாள் புறப்பட்ட, அடுத்த இரு வாரங்களில் களப்பயிற்சிக்காக ஹரியானா சென்றான் ஆழி.

ஹரியானாவில் பல்வால் மாவட்டத்தில் உள்ள மலாய் கிராமம்.

அங்குதான் அவனுக்கு மூன்று மாதம் இறுதி பயிற்சியாக காவல்நிலையத்தில் பணி பயிற்சி அமைந்தது. இந்த மூன்று மாதம் முடிந்துவிட்டால், நிரந்தர பணிக்கான உத்தரவு வழங்கிடுவர்.

வந்த முதல் நாளே இந்த மூன்று மாதங்கள் விரைந்து செல்ல வேண்டுமென பெரும் ஆவல் அவனிடம். ஆண்டாள் சொல்லிச் சென்றிருக்கிறாளே... பணியில் சேர்வதற்கு முன்பு வீட்டில் வந்து பேச வேண்டுமென்று, இப்போதே இருவரும் ஒன்றாக வாழும் வாழ்வை மனதில் ஓட்டிக்கொண்டே நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தான்.

மலைகிராமம் என்பதால் அலைபேசி அலைவரிசை சரிவரக் கிடைக்காது. அதனால் தகவல், பேச்சுக்கள் கூட இருவருக்குமிடையில் வெகுவாக குறைந்திருந்தன. ஆனால் மனதின் நேசத்தில் உரையாடிக் கொண்டுதான் இருந்தனர்.

அழைத்து பேச வேண்டுமென்றால், ஆழி சிறுநகர் பகுதிக்கு வரும் பொழுது ஆண்டாளுக்கு அழைத்து பேசுவான்.

அப்படி பேசுகையில், "இன்னும் பத்து நாளில் ட்ரெயினிங் பீரியட் ஓவர் ஆண்டாள். ஆர்டர் கையில் வாங்கினதும் உங்க வீட்டுக்குத்தான். அப்படியே உன்னை தூக்கிட்டு வந்திடுவேன்" என்று சொல்லிய ஆழியின் குரலில், தன்னுடன் அவன் வாழப்போகும் வாழ்வின் எண்ணத்திற்கே அவன் கொள்ளும் மகிழ்வின் அளவை விளங்கிக் கொண்ட ஆண்டாளுக்கு கண்ணீர் கரை கடந்து பொழிந்து கொண்டிருந்தது.

இதற்கு மேலான காத்திருப்பு அவளாலும் முடியாது.

ஆழிக்கு பயிற்சி காலம் முடிய இருக்கிறது என்றதும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளின் அண்ணன், ஹரியின் முன்பு சென்று நின்றாள்.

ஆண்டாள் மேல் படிப்பு முடிந்து வந்தது முதல், இந்த மூன்று மாத காலமாக அவளுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறான் ஹரி.

அவளுக்கு முடிக்காது அவன் செய்துகொள்ள முடியாது. அவனுக்கோ அத்தை மகள் தயாராக இருக்கிறாள். அவர்கள் வீட்டில் தங்கள் பெண்ணுக்கு வயதாகிறது எனும் அழுத்தம். ஆதலால் இந்த மூன்று மாதங்களில் நான்கு மாப்பிள்ளையை வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டான்.

அவசரமென்றாலும் தங்கைக்காக அதி கவனத்துடன் தான் மாப்பிள்ளை தேர்வு செய்தான்.

ஆனால் ஆண்டாள் வந்த மாப்பிள்ளைகள் எல்லாரையும் இல்லாத காரணம் கண்டுபிடித்து வேண்டாமென்று சொல்லிவிட்டாள்.

அவளுடைய திருமணம், பையன் அவளுக்கும் பிடித்திருக்க வேண்டுமென ஹரி முதல் மூன்று மாப்பிள்ளைகளை ஆண்டாள் மறுக்கும் போது நேர்மறையாகவே நினைத்தான்.

ஆனால் நான்காவதாக அழைத்து வந்த பையனுக்கு ஆண்டாள் சொல்லிய காரணம் இடிக்க,

"அடுத்து வர மாப்பிள்ளை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும், நீ சரின்னு தான் சொல்லணும். உன் மனசுல வேறெதுவும் நினைப்பு இருந்தால், அதை இப்போவே அழிச்சிடு" என்று மிரட்டவே செய்தான்.

ஆழி அருகில் இல்லாத சமயம் தன்னுடைய காதலை சொன்னால், ஹரி அவசரமாக எதும் செய்துவிடுவானோ என நினைத்த ஆண்டாள், அமைதியாகவே இருந்தாள்.

அவளின் அமைதியும் ஒருநாள் முடிவுக்கு வந்தது.

"நாளைக்கு நேரடியாக நிச்சயம் செய்யவே வருகிறார்கள்" என்ற ஹரியின் பேச்சில்.

இதற்கு மேலும் அமைதியாக இருந்தால், இன்னொருவன் பக்கத்தில் தான் நிற்க நேரிடுமென கசந்த ஆண்டாள், ஹரியின் முன் சென்றாள்.

"என்ன?", தங்கையை உறுத்து விழித்தபடி வினவினான்.

"நான் ஒருத்தரை விரும்புறேன்." தடுமாற்றம் சிறிதுமின்று மொழிந்தாள்.

"நினைச்சேன்... இப்படித்தான் எதுவும் சொல்லுவன்னு" என்ற ஹரி, "மேல சொல்லு" என்றான்.

அவர்களின் அன்னை சாந்தா ஓரமாக நின்றிருந்தார். வாய் திறக்கவில்லை. அவர் எப்போதும் மகன் பக்கம் தான். கணவர் இல்லா குடும்பத்தை மகன் தூக்கி நிறுத்துகிறான் எனும் பெருமை. குடும்பத்துக்காக தன் வயதுக்கு ஆசைகளை மகன் புறம் ஒதுக்குவது அவருக்கு தியாகமாகப்பட்டது. அதனால் ஹரி எது சொன்னாலும் சந்தாவுக்கு சரி தான்.

ஆண்டாள் ஆழிப்பற்றி எல்லாம் கூறினாள்.

"இது ஒத்து வராது ஆண்டாள்." உடனடியாக சொல்லியிருந்தான். நேரடி மறுப்பு. அவளால் ஏற்கவே முடியவில்லை.

"அண்ணா பிளீஸ். ரொம்ப நல்லவங்க..."

"நல்லவங்கிற சர்ட்டிஃபிகேட் எனக்குத் தேவையில்லை. நான் நினைக்கிற காரணம் உனக்கே தெரியும்" என்ற ஹரி, "நாளைக்கு கண்டிப்பா நிச்சயம் நடக்கும்" என்று எழுந்து சென்றான்.

"அண்ணா... ஒருமுறை அவங்களை கூப்பிட்டு பேசிப்பார்" என்றாள்.

"சரி, அப்போ இந்த பயிற்சியே வேண்டாம்னு வர சொல்லு" என்று நின்று திரும்பி வேண்டாம் என்ற வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் பிரித்து அழுத்தமாக உச்சரித்தான்.

"அண்ணா!" ஆண்டாள் வெகுவாக அதிர்ந்தாள்.

"அவனை காதலிக்கிற நீ வேணும்னா அவனுக்காக எல்லாம் மறக்கலாம். ஆனால் நாங்க?" என்று கேள்வியாக நிறுத்திய ஹரி, "உனக்காக இதைக்கூட செய்யமாட்டானா அவன். அவனோட காதல் அவ்வளவு தானா?" என்று கேலியாக உதடு சுழித்தான்.

"ஒருத்தரை அப்படியே ஏத்துகிறது தான் காதல். எனக்காக இதை நீ செய் அப்படின்னு சொன்னா, அந்த இடத்தில் காதல் தோத்துப்போகும். என் காதல் ஜெயிக்கிற காதல் ண்ணா. எனக்காக இதை செய்யுங்கன்னு நான் மனசால் நினைச்சாலே அதை செஞ்சிடுவாங்க. ஆனால் நான் சொல்லமாட்டேன். எனக்காக அவங்க எதுவும் செய்ய வேண்டாம். அவங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்" என்றாள்.

ஆண்டாளின் மனதின் திடம் அவளின் கண்களில் தெரிந்தது.

"என்ன செய்வ..." என்று வேட்டியை மடித்துக்கட்டி எகிறிக் கொண்டு வந்த ஹரியின் தோரணையில் பயந்து ஓரடி பின் வைத்திருந்தாள் ஆண்டாள்.

"என்னவும் செய்வியா நீ?"

"கண்டிப்பா."

"வீட்டை விட்டுப் போய்டுவியா?"

ஹரி அவ்வாறு சொன்னதும், சாந்தா அதிர்ந்தார்.

"ஹரி...", சாந்தா.

"நீங்க இருங்கம்மா" என்ற ஹரி, "சொல்லுடி... போய்டுவியா என்ன?" என்றான். ஆண்டாளிடம்.

"போக வேண்டிய சூழ்நிலை வந்தா கண்டிப்பா போவேன்" என்ற ஆண்டாள், "அவங்க உலகமே நான் தான் அண்ணா" என்றாள். கன்னத்தில் நீர் இறங்க.

"அப்போ போடி... அவன் கிட்டவே போ" என்ற ஹரி, ஆண்டாளை பிடித்து வெளியில் தள்ளினான்.

"ஹரி என்னப்பா?" சாந்தா முன்வர, தடுத்திருந்தான்.

"போகமாட்டேன் நினைக்காத" என்ற ஆண்டாள், வீட்டிற்குள் நுழைய,

"உன்னை போன்னு சொல்லிட்டேன். எப்போ அவனுக்காக எங்களை விட்டு போவன்னு சொன்னியோ அப்போவே உனக்கு இந்த வீட்டில் இடமில்லை" என்று கத்தினான் ஹரி.

"நானும் இனி இங்கிருக்கப் போவதில்லை" என்ற ஆண்டாள், தன்னுடைய அறைக்குள் நுழைந்து தனக்கு வேண்டியவற்றை எடுத்துகொண்டு வெளியில் வந்தாள்.

அவள் கையில் பெட்டியை கண்டதும்,

"அவன் எதோ கோபத்தில் சொல்றான் ஆண்டாள்" என்று சாந்தா பதறி மகளின் கையைக் பிடிக்க,

"இங்கிருந்தா... நான் சொல்றதை கேட்டுதான் இருக்கணும். நான் சொல்ற பையனோடத்தான் கல்யாணம் நடக்கும். அதுவும் அடுத்த வாரத்திலேயே" என்றான் ஹரி.

அவனை அடிபட்ட பார்வை பார்த்த ஆண்டாள்,

"இப்போ நீங்க என் மேல கோபப்படலாம்மா. நான் மகளே இல்லைன்னு கூட நினைக்கலாம். அதுக்காக கவலைப்பட்டு நான் அவங்க வேண்டாம்னு முடிவு எடுத்தா வருந்தப்போறது நாங்க தான். இப்போ நீங்க என்னை வெறுத்தாலும், கொஞ்ச நாளில் சேர்த்துக்க வாய்ப்பிருக்கு. ஆனால் அவங்களை வேண்டாம்னு முடிவெடுத்து, அவங்க எனக்கு கிடைக்கவே மாட்டாங்க அப்படிங்கிற சூழ்நிலை வந்து, திரும்ப எனக்கு அவங்க வேணும்னு நீங்களே முடிவெடுக்கும் நேரம் எல்லாம் கடந்திருந்தால் நான் மொத்தமா அவங்ககளை இழந்திடுவேன் ம்மா" என்று கண்ணில் நீர் வழிந்தாலும் குரலில் தழுதழுப்பைக் காட்டாது கூறிய ஆண்டாள் விறுவிறுவென வெளியேறியிருந்தாள்.

ஹரி அசையாது சிலையென நின்றிருந்தவன், ஆண்டாள் சென்றதும்...

"மொத்தமா முழுகிடும்மா. நமக்கு நிறைய மிச்சம்" என்று உள் சென்றுவிட்டான்.

வீதியில் நடந்த ஆண்டாள் எங்கும் நிற்கவில்லை, நேராக ரயில் நிலையம் வந்தவள், ஒன்றரை நாள் (37 மணிநேரம்) பயணத்தில் ஹரியானா வந்து சேர்ந்தாள். அதன் பின்னரே ஆழிக்கு அழைத்தாள். அழைப்பு செல்லவில்லை. அவனது அலைபேசி முழுதாக அலைவரிசை இன்றி கிடந்தது.

மாலை நேரம். இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடும். கொஞ்சமும் தயங்காது, பல்வால் செல்லும் பேருந்தில் ஏறிவிட்டாள். தன் வருகையை தகவல் அளித்தவள், அங்கு சென்று சேரும் வரையிலும் ஆழிக்கு அழைத்துக் கொண்டிருந்தாள். அவனது புலனம் திறக்கப்படவே இல்லை. அவள் விடுத்த அழைப்புகள் செல்லவே இல்லை.

ஏற்கனவே மனதால் சோர்ந்தவள், இரண்டு நாளாக ஒன்றும் சாப்பிடாது உடலாலும் வலுவிழந்து போனாள்.

பல்வால் வந்து சேர்ந்த ஆண்டாள் மெல்ல பேருந்திலிருந்து இறங்கினாள்.

ஒருமுறை தன்னுடைய அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். தகவல் திறக்கப்படவில்லை.

அடுத்து மலாய் கிராமம் எப்படி செல்வதென்று கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

நாற்பது நிமிட பயணம். மேற்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை இல்லை. விடுதிக்கு சென்றவள், அந்தவூர் உணவுகளை உண்ண முடியாது, வேண்டிய வலுவிற்காக கொஞ்சம் கொரித்துவிட்டு எழுந்து கொண்டாள்.

மலைக் கிராமம் என்பதால் ஜீப் பயணம் தான்.

ஜீப்பில் ஏறி அமர்ந்து ஆண்டாள், ஆழிக்கு முயன்றபடி இருந்தாள். பெயர் வைத்து கிராமத்திற்கு சென்றுவிட்டாலும், அங்கு சென்று எப்படி அவன் இருப்பிடம் செல்வது என்கிற பயம். அந்த ஊர் பாஷையும் அவளுக்கு விளங்கவில்லை. ஜீப் குறித்து விசாரிக்கவே பெரும்பாடு பட்டிருந்தாள். இரண்டு வருடம் டெல்லியிலிருந்ததால், ஹிந்தி நன்கு தெரியுமென்றாலும், பல்வால் மலைப்பகுதி என்பதால், இங்கிருக்கும் மக்கள் மலைவாழ் பழங்குடிகள். அவர்களின் தங்களின் ஆதி மொழியை வழக்கத்தில் வைத்திருக்க சற்று சிரமமாகவே உணர்ந்தாள்.

ஜீப் நின்றிட, கிராமம் வந்துவிட்டதா என்று ஆண்டாள் பார்க்க, அவளுடன் பயணித்த மற்ற பயணிகள், இறங்கி முன்னர் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் இறங்கி நடக்கத் துவங்கினர்.

ஜீப்பும் ஆற்றில் செல்ல... என்னவென்று விசாரித்தாள்.

அதிக எடையுடன் ஆற்றில் பயணிக்க முடியாது என்பதால் ஆற்றை கடந்து ஜீப்பில் ஏறிக்கொள்ள வேண்டுமென்று தெரிந்துகொண்ட ஆண்டாள், நீரில் இறங்கி அடி வைக்க, அவளால் அந்த சில்லிப்பை தாங்க முடியவில்லை.

அங்கு சாதாரண வெப்பநிலையே 20°க்கும் கீழ் தான். தற்போது இரவு நேரமென்பதால் அதுவும் குறைந்து அத்தனை குளிர் நிரம்பியிருந்தது.

"ஆழி... உங்களை பார்த்திட்டால் போதும்" என்று மனதில் வலுப்பெற்றவள் பெரும் அகலம் கொண்ட ஆற்றில் மெல்லவே நடந்தாள். நீரின் ஓட்டத்தில் அதற்கு மேல் வேகமாகவும் நடக்க முடியவில்லை.

ஜீன்ஸ் அணிந்திருந்தாள். நனைந்து அதுவும் உடலில் சில்லிப்பைக் கூட்டியது.

ஆற்றைக் கடக்கவே முழுதாக பத்து நிமிடங்கள் கடந்தன.

ஆண்டாளுக்கு உடலெல்லாம் நடுங்கத் துவங்கியது. உள்ளங்கை தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

ஆற்றின் ஓரம் இராணுவ வீரர்கள் வேறு அங்குமிங்குமாக அமர்ந்திருந்தனர். அக்காட்சியிலேயே ஊரின் சூழல் அவளுக்கு புரிந்தது.

"ஊருக்கு புதுசா?" அவளை கவனித்து பெரியவர் ஒருவர் கேட்க, அவளுக்கு அவர் மொழி விளங்கவில்லை.

ஆண்டாள் விழிப்பதை வைத்து ஹிந்தியில் பேசினார்.

ஆண்டாள் ஆம் என்க, அவளைப்பற்றி தெரிந்துகொண்டு, தன்னுடைய சால்வையை அவளிடம் கொடுத்தார்.

"உன் தாத்தாவா நினைச்சிக்கோம்மா" என்றார். மறுப்பின்றி வாங்கி போர்த்திக் கொண்டாள். அப்போதும் குளிர் அடங்கவில்லை.

அந்த தாத்தா கனிவாக பேசவும், அவரும் அக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், ஆழியின் பெயர் மற்றும் வேலைப்பற்றிக் கூறி அவரிடம் விசாரித்தாள்.

அவரும் ஆழியைத் தெரியுமென்று அவன் வந்ததற்கு பிறகான ஊரின் சூழல் குறித்து பெருமையாகப் பேசினார்.

அங்கு எப்போதும் எதோவொரு அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கும். அவை யாவும் ஆழியால் குறைந்த நாட்களிலேயே ஓரளவுக்கு குறைந்து இருப்பதாகக் கூறினார்.

பெருமையாக மகிழ்ந்து கொண்டாள்.

"ஊர் வந்திருச்சும்மா. அடுத்த தெருவில் தான் ஸ்டேஷன் இருக்கு" என்ற பெரியவர் தானே அவளை அழைத்தும் சென்றார்.

அப்போதுதான் வீட்டில் கொள்ளையடித்த திருடன் தப்பிப்பதற்காக அவ்வீட்டுப் பிள்ளையை காட்டுப்பகுதிக்குள் தூக்கிச்சென்று பதுங்கியிருந்தான். அவனைக் கண்டுபிடிப்பதில் ஆழி மும்முரமாக காட்டில் சுற்றிக் கொண்டிருந்ததால் தான், அவனால் ஆண்டாளின் அழைப்புகளை ஏற்கவும் முடியவில்லை. அவளுக்கு தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

அவனை இரவு சூழ்ந்த நேரத்தில் தான் கண்டுபிடிக்க முடிந்திருக்க, காட்டுக்குள்ளிருந்து ஊருக்குள் வந்து சிறுவனை பெற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, காவல் நிலையம் வரும்போது மீண்டும் அவன் தப்பிக்க முயல, ஆழி அவனை அடித்து புரட்டி எடுத்தவனாக காவல் நிலையம் அழைத்து வந்து கொண்டிருந்தான்.


மூன்று மாதங்களுக்கு பின்பு அவள் பார்த்த ஆழி, அத்தனை ஆக்ரோஷமாகவும், கடுமையாகவும் இருந்தான். அவனை அப்படி பார்த்ததும் அவளின் உடல் அப்பட்டமாக பயத்தில் நடுங்க, அவளின் நினைவுகள் இரு நாட்களுக்கு முன்பு ஹரியுடனான வாக்குவாதத்தில், அவன் நினைவு கூர்ந்த நிகழ்வில் நிலைத்தது.

1000036790.jpg



7வது அத்தியாயம்
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஆழிக்காக குடும்பத்தையே உதறி தள்ளிட்டு வந்த ஆண்டாள் எதுக்காக அவனை விட்டு விலகிப் போனா 🤔
 
  • Love
Reactions: MK16

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
ஆழிக்காக குடும்பத்தையே உதறி தள்ளிட்டு வந்த ஆண்டாள் எதுக்காக அவனை விட்டு விலகிப் போனா 🤔
சின்ன காரணம் அக்கா. அவளளவில் பெரியதாக இருந்திருக்கலாம்.
 

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
70
50
18
Tamilnadu
Super 😍 y police na pudika maatingu? Love la no eqo nu irukan aazhi i love it ❤❤
 
  • Love
Reactions: MK16