• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆழி நெஞ்சம் 7

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
ஆழி நெஞ்சம் 7

அப்படியொரு நிலையில் ஆழியைப் பார்த்த ஆண்டாள் பயத்தில் உறைந்து நின்றாள். அவளுடைய ஆழி அவன். அவளவன். ஆனாலும் ஒருவித அச்சம் நொடிப்பொழுதில் அவளின் மனதைக் கவ்வியது.

ஹரியின் வார்த்தைகள் காதில் எதிரொலித்தது.

"அவனும் நம்ம அப்பா மாதிரி பொண்டாட்டி, பிள்ளை முக்கியமில்லைன்னு போய் சேர்ந்துட்டா என்ன பண்ணுவ நீ?"

ஹரி முடிப்பதற்கு முன், "அண்ணா" என்று காதுகளை மூடிக்கொண்டு கத்தியிருந்தாள்.

ஆண்டாளின் தந்தை காவல்துறை அதிகாரி. அந்த காக்கியின் மீது அவருக்கு அலாதி விருப்பம். அந்த விருப்பம் குடும்பத்தையும் விஞ்சியதாக இருந்தது.

ஹரி பிறந்து இரண்டு நாள் கழித்து தான் பார்க்கவே வந்தார். வழக்கு ஒன்றிற்காக அன்டர்க்கிரவுண்ட் வேலையென்று காரணம் கூறினார்.

இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு காரணம். அவருக்கு பிரதானமாக இருந்தது அவரது காக்கி மட்டுமே!

இதனால் அவரின் குடும்பத்தின் சூழல் அவருக்குத் தெரியாமலே போனது. கணவனை எதிர்பார்த்து ஏமாறும் மனைவியின் தவிப்புகள், அப்பாவுக்கான பிள்ளைகளின் ஏக்கங்கள், எதுவும் அவரின் கண்களுக்குப் புலப்படவில்லை.

உற்ற உறவினர்கள் வீட்டிற்குக் கூட சாந்தா தனித்து தான் செல்வார். ஹரியின் தந்தை வராதது குறித்து உறவினர்கள் பேசும் பேச்சினை மௌனமாகக் கேட்டுக்கொண்டு வருவார்.

"இதற்கு கூட வரமுடியாதா?" என்பார்கள்.

இன்னும் ஒருசிலர், "பார்த்து கவனி சாந்தா, வேலைன்னு வீட்டுக்கே வராமல் இருக்கார். எதும் வேற வீடு இருக்கப்போகுது" என்று சொல்ல, சாந்தாவும், விவரம் தெரியத் தொடங்கிய வயதான ஹரியும் உறவினர்களுக்கு நடுவில் குறுகி நின்றனர்.

சொந்தங்கள் தங்களுக்கு தான் அக்கறை இருப்பது போலக் காட்டிக்கொள்ள பேசும் நயமான பேச்சுக்கள் தானே இவையெல்லாம். ஆனால் அது உரியவர்களுக்கு எத்தனை வேதனையைக் கொடுக்கும்.

சாந்தா இதனை கணவரிடம் சொல்லி அழ, "இதையெல்லாம் ஒரு பேச்சுன்னு பேசுவியா நீ?" என்று மனைவியை அதட்டியவர் அவரின் அழுகையை கண்டுகொள்ளாது காக்கியை அணிந்துகொண்டு சென்றுவிட்டார்.

அன்று மாலை அவர் வீட்டிற்கு பிணமாகத்தான் வந்தார்.

பிரபலமான ரவுடி ஒருவனை என்கவுண்டர் செய்தபோது தவறுதலாக அவரின் உயிரும் போய்விட்டது என்று காரணம் கூறினார்கள்.

ஆனால் அது உண்மையல்ல என்று சில மாதங்களுக்குப் பின்னர் தான், சாந்தாவிற்கு அவருடன் பணிபுரிந்த மற்ற காவல் அதிகாரியின் மூலம் தெரிந்தது.

அந்த ரவுடியை தப்பிக்க வைக்க, ஹரியின் தந்தைக்கு மேலான உயர் அதிகாரி திட்டம் வகுக்க, அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. நேர்மையானவர் அல்லவா, அவருக்கு பணம் கொடுத்தும் சரிகட்ட முடியவில்லை. ஆதலால் அவரை கொன்றுவிட்டு ரவுடியை தப்பிக்க வைத்தனர். வெளியுலகில் ரவுடி தப்பிப்பதற்காக, பிடிக்கச் சென்றவரை கொன்றுவிட்டான் என்று கதை கட்டியிருந்தனர்.

உண்மை அறிந்து ஹரி உயர் அதிகாரிகளிடம் நியாயம் கேட்க, பணம் கொடுத்து சரிகட்டவே நினைத்தனர்.

அது முதல் காவல்துறை என்றாலே அவர்களுக்கு கசப்புத்தான். அதுவும் ஆண்டாளுக்கு, நியாயம் கேட்க சென்ற ஹரியை பதினைந்து வயது சிறுவன் என்றுகூட பாராது அடித்து அனுப்பியிருக்க, அவளுக்கு அத்துறையின் மீது வெறுப்பைத் தாண்டிய பயமும்.

அதனாலேயே ஆழியின் மீது காதல் வந்ததும், அவனுடைய காவல்துறை விருப்பம் தெரிந்து விலகியிருந்தாள்.

ஆனால் காதல், அனைத்தையும் கொண்ட நேசத்திற்காக ஏற்றிடும் என்று அவளும் காட்டிவிட்டாள்.

இன்று அதே அடிக்கும் இடத்தில் ஆழியை காணவும், அவளுக்கு தன் தந்தையின் வாழ்வு கண்முன் வந்து செல்ல, நீர் வழியும் விழிகளை வேகமாகத் துடைத்துக் கொண்டு ஆழியை வெறித்துப் பார்த்தாள்.

காவல் நிலையம் உள்ளே அடி வைக்கும் முன் ஆழி பெரியவருடன் நின்றிருந்த ஆண்டாளை பார்த்துவிட்டான்.

அவனுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள். எப்படி இருக்கிறதாம்?

மற்றொரு காவலாளியின் கையில் திருடனை ஒப்படைத்துவிட்டு ஆண்டாளின் அருகில் வேகமாக வந்தான்.

"ஆண்டாள்..." அவளை கண்ட ஆழியின் மகிழ்வு அவனது விழிகளில் பிரதிபலித்தது.

"என்ன சார் நீங்க, பொண்டாட்டி போன் போட்டா எடுக்கிறது இல்லையா?" என்ற பெரியவர், "நம்ம ஊரை நம்பி தனியா வர சொல்லியிருக்கீங்க. நீங்க பல்வால் போயி கூட்டியாந்திருக்க வேண்டாமா?" எனக் கேட்டார்.

அவர் பொண்டாட்டி என்று சொல்லியதிலே ஆழி இன்பமாக உறைந்துவிட்டான்.

ஆண்டாள், தான் ஒரு ஆண் மகனை தேடிச் சென்றால் வீணாக எழும் பேச்சுக்களை தவிர்ப்பதற்காக பெரியவரிடம் ஆழியைப் பற்றி விசாரிக்கும் போது மனைவி என்று குறிப்பிட்டிருந்தாள்.

அதனை பெரியவர் பேச்சோடு சொல்லிக் காண்பிப்பார் என்று ஆண்டாள் எதிர்பார்க்கவில்லை.

"ஆண்டாள்..." என்று மென்மையாக விளித்த ஆழி, அவளின் தோளில் மாட்டியிருந்த பையினை வாங்கி தன் தோளில் மாட்டிக்கொண்டான்.

"செம ஹேப்பியா இருக்குடி. வரன்னு சொல்லவே இல்லை" என்று ஆழி கேட்க, அவளோ...

"தாத்தா வீட்டுக்கு எப்படிப்போகணும்?" என்று பெரியவரிடம் கேட்டாள்.

"மேடம் கோபமா இருக்காங்க போல." ஆழி சிரித்தபடி கூற, பெரியவரும் சிரித்தார்.

ஆண்டாள் முறைக்க...

"எம்மாடி!" அதிர்ந்து பயம் கொள்வது போன்று பாவனை செய்தான்.

"தாத்தா..." ஆண்டாள் பல்லைக் கடிக்க,

"இந்தப்பக்கம்" என்று கை காண்பித்தான் ஆழி. அவன் காட்டிய திசையில் ஆண்டாள் முன் செல்ல...

"டப்புன்னு காலில் விழுந்திடுங்க சார். பொண்டாட்டி காலில் யோசிக்காம விழுறவன், எல்லாத்தையும் ஜெயிச்சிடுவான்" என்று அவனிடம் ரகசியமாக திருமண வாழ்வின் சூட்சுமத்தை சொல்லிச் சென்றார்.

வெட்கம் ஆட்கொள்ள பின்னந்தலையை வருடியபடி, ஆண்டாள் பின் ஓடினான் ஆழி.

ஆண்டாளிடம் சென்று இணைந்து நடந்த ஆழி,

"இன்னும் பத்து நாளில் நானே வந்திருப்பேன். எதுக்கு இவ்வளவு தூரம் தனியா வந்த?" என்றான்.

பக்கவாட்டில் அவனை முறைத்தாள். எதுவும் பதில் சொல்லவில்லை.

"என்ன கோபம் இப்போ உனக்கு?" என்ற ஆழி, "உனக்கு தெரியும் தானே... இங்கு சிக்னல் பிராப்ளம். அப்புறம், இப்போ பார்த்தியே... அவனை பிடிக்க நாள் முழுக்க அதோ இருக்கே காடு அதுக்குள்ள சுத்திட்டு இருந்தேன்" என்று அவள் இதுக்காகத்தான் கோபமாக இருக்கிறாள் என்று விளக்கம் கொடுத்தான்.

அப்போதும் ஆண்டாள் எதுவும் பேசவில்லை.

"ரொம்ப கோபம் போல" என்ற ஆழி, அவளின் கையோடு தன் கை கோர்த்துக் கொண்டான்.

வீட்டிற்கு வந்ததும், "வீட்டில் என்ன சொல்லிட்டு வந்த? எத்தனை நாள் இருக்கப்போற?" எனக் கேட்டான்.

எதுவும் சொல்லாது வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். அங்கு எல்லாம் மரத்தினாலான வீடுகள் தான். ஒரு படுக்கையறை, அதனுடன் இணைந்த குளியலறை, கூடம், ஓரத்தில் சமயலறை என்று மரப்பலகைகளால் ஆன அளவான வீடு.

படுக்கையறைக்குள் நுழைந்த ஆண்டாள், சுற்றி பார்வையை ஓட்டி குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.

அவளின் பின்னோடு வந்த ஆழி, "ஹீட்டர் ஆன் பண்ணிட்டு கொஞ்சம் வெயிட் பண்ணி ரெப்ரஷ் பண்ணு ஆண்டாள். சட்டுன்னு தண்ணி சேராது. இங்க நார்மலாவே ஐஸ் மாதிரி இருக்கும்" என்றான்.

குளித்து முடித்த பின்னர் தான், பை ஆழியின் கையிலிருந்ததால், ஆடை எடுக்காது உள்ளே வந்தது தெரிந்தது. தற்போது அவனை அழைக்கவும் முடியாது திணறினாள்.

குளியலறையில் நீர் கொட்டும் சத்தம் நின்றதும், ஆழி கதவினைத் தட்டினான். ஆண்டாள் மௌனமாக இருக்க,

"எவ்வளவு நேரம் ஈரத்தில் நிப்ப? ட்ரெஸ் வேண்டாமா?" என்று ஆழி கேட்டதில், கதவினை மெலிதாக திறந்து கையை மட்டும் வெளியில் நீட்டினாள்.

அவளின் கையில் ஆடைகளை வைத்த ஆழி, சன்னமாக புன்னகைத்துக் கொண்டான்.

ஆண்டாள் வெளியில் வர உணவு தயார் செய்திருந்தான்.

"வா சாப்பிடலாம்" என்ற ஆழி அழைத்ததும் மௌனமாக சென்று அமர்ந்தாள். அவன் தட்டில் சப்பாத்தி மற்றும் சப்ஜி வைத்து நீட்டிட, அவளோ வாய் திறந்து காண்பித்தாள்.

"என் சோப், டவல் எல்லாம் யூஸ் பண்ணுவீங்க. ஊட்டியும் விடணும். ஆனால், பேசமாட்டிங்க" என்று அவளுக்கு உணவு ஊட்டிய ஆழி, "நான் பாவம்டி... பிளீஸ் பேசு" என்றான்.

"வேணும்னா இப்போ கால் பண்ணு. நான் அட்டென்ட் பண்றேன்" என்றான்.

போதுமென்று கை காண்பித்தவள், அவனது கையிலிருந்த தட்டை வாங்கி, அவனுக்கு ஊட்டினாள்.

"ரொம்பத்தான்" என்றாலும், அவனுள் சந்தோஷத்தின் ஆர்ப்பரிப்புகள்.

உணவு நேரம் முடிய, ஆழி பாத்திரங்களை எடுத்து வைத்தான். அவள் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, மர நீள்விருக்கையில் ஒரு பக்கம் அமர்ந்தாள்.

ஆழி பாத்திரங்களை கழுவி வைத்து வருவதற்குள் அப்படியே உறங்கியும் இருந்தாள்.

பயண அலுப்பென புரிந்தது.

அவளின் உறக்கம் கலையாது கைகளில் தூக்கிய ஆழி, உள்ளே மெத்தையில் படுக்க வைத்து, ஹீட்டரை ஆன் செய்துவிட்டு நேரத்தைப் பார்த்தான். அவன் உறங்கும் நேரமும் வந்திருந்தது.

தனக்காக பல தூரங்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை எனும் விதமாக வந்திடுபவளின் நேசம் எப்போதும் போல அவனை அவளுக்கு அடிமையாக்கிட, அவளின் முகம் பார்த்து...

"லவ் யூ ஆண்டாள்" என்றான்.

"லவ் யூ ஆழ்." உறக்கத்தில் அவளும் அவனுக்கு பதில் வழங்கிட, அவளின் நெற்றியில் முத்தம் வைக்க குனிந்த ஆழி, நொடியில் விலகி...

"முதல் கிஸ். உனக்கு, நமக்குத் தெரிந்து தான்" என்று கூடத்தில் பாய் விரித்து, அறைக்குள் அவளின் முகம் பார்த்து படுத்துவிட்டான். சில நிமிடங்களில் உறங்கியும் விட்டான்.

அதிகாலையில் ஆழி கண் விழிக்கையில், ஆண்டாள் அவனின் மார்பில் தலை வைத்து, ஒட்டி படுத்திருந்தாள்.

அவனுள் இனிய அதிர்வு இன்பமாய்.

இந்த நெருக்கத்தை அவனால் நம்பவும் முடியவில்லை.

"ஒரு முடிவோடு வந்திருக்காள்" என்று நினைத்த ஆழி, தானும் கையிட்டு அவளை அணைத்தவாறு, மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

என்னதான் அவனுடன் நெருக்கமாக இயல்பாக இருந்தாலும், இன்னமும் ஆண்டாள் அவனிடம் வாய் திறக்கவில்லை.

"ஆண்டாள் பேசுடி..."

காவல் நிலையம் செல்லத் தயாராகி சாப்பிடுவதற்கு அமர்ந்த ஆழி, தன் முன் உர்ரென உணவினை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் ஆண்டாளிடம் பேசச்சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்கிறான்.

அவள் வந்து இரு நாட்காளாகின்றன.

ஆழியை அப்படி பார்த்தவளால், அதனை ஏற்கவே முடியவில்லை.

"இப்போ பேசுவியா மாட்டியா?" உம்மென்று கேட்ட ஆழி, "நீ பேசாம முடியலடி. பிணமா நிக்கிற மாதிரி இருக்கு" என்று அவன் முடிக்கும் முன், வாயில் கை வைத்து வேண்டாம் என்பதைப் போல தலையை அசைத்தாள்.

"எதுக்கு அவனை ரோட்டிலே அப்படி அடிச்சீங்க?"

"பயந்துட்டியா?" எனக் கேட்ட ஆழி, நடந்ததைக் கூறினான்.

"ம்ம்... இருந்தாலும் அடிச்சது தப்பு" என்று அவள் வாதிட, "சரிங்க மேடம். இனி யாரையும் அடிக்கல. அன்பால திருத்த முயற்சிக்கிறேன்" என்று ஆழி தான் அவளிடம் அடங்கிப் போனான்.

அதன் பின்னர் தான் ஆண்டாளின் முகம் மென்மையானது.

"இப்போ தான் என் ஆண்டாள் முகம் பார்க்க நல்லாயிருக்கு" என்ற ஆழி, "எப்போ ஊருக்கு கிளம்புற?" எனக் கேட்டான்.

"நான் போகணுமா? வந்ததுல இருந்து நிறையவாட்டி இந்தக் கேள்வி கேட்டாச்சு" என்றாள்.

"நான் எப்போ அப்படி சொன்னேன். உன் அண்ணா ஸ்ட்ரிக்ட் ஆச்சே! என்ன சொல்லிட்டு வந்த?" என்றான்.

"ஆமா, சொல்லிட்டுதான் வந்தேன்" என்றாள் ஆண்டாள். ஆழிக்கு அவளின் பொருள் விளங்கவில்லை.

"சொல்லிட்டு வந்தியா? அப்போ இன்னும் எத்தனை நாள் இருப்ப?" என்று விசாரித்தான்.

"நான் இருக்கிறதுல சாருக்கு அவ்ளோ கஷ்டமா?"

"அடியேய்..." என்ற ஆழி, "கஷ்டம் தான். ரொம்பவே கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். எப்போ கெட்ட பையன் ஆவேன்னு எனக்கே தெரியல" என்றான். விஷமத்துடன். அவள் முறைப்பாள், திட்டுவாள் என்று ஆழி எதிர்பார்க்க, அவளோ அவனை அதிர வைத்தாள்.

"கல்யாணம் பண்ணிக்கலாம் ஆழ்."

"நிஜமாவா?"

"ம்" என்று அவனை இடையோடு கட்டிக்கொண்டு நெஞ்சில் கன்னம் அழுந்த சாய்ந்து கொண்டவள், எல்லாம் கூறினாள். ஹரி பேசியது என அனைத்தும்.

ஆழிக்கு ஆண்டாள் தன்னுடைய வரமென்றே அக்கணம் தோன்றியது. அவனுக்காக எல்லாம் விட்டு, இவ்வளவு தூரம் வந்திருக்கிறாளே!

"ஆண்டாள்..." என்று கரகரப்பாக அவளின் கன்னங்களை இரு கரத்தாலும் அழுத்தமாகப் பற்றிய ஆழி...

தன் காதலை ஒற்றை நெற்றி முத்தத்தில் அவளுக்குள் கடத்தியிருந்தான்.

மேலும் நான்கு நாட்கள் சென்றிருக்க, ஆழி திருமணம் குறித்து எதுவும் பேசாது இருக்க, "நான் வந்தது தப்பா ஆழி? உங்களுக்கு பிடிக்கலையா?" எனக் கேட்டாள்.

"ம்ப்ச்" என்று இழுத்து, அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்ட ஆழி, "எனக்காக வந்த தேவதைடி நீ" என்றதோடு, "ஹரி கிட்ட நானொரு முறை பேசி பார்க்கட்டுமா?" எனக் கேட்டான்.

"நிச்சயம் ஒத்துக்க மாட்டான்" என்று ஆண்டாள், "உங்களை எதும் பேசிட்டா, காலத்துக்கும் அது வடுவாகிடும் ஆழி. பின்னாடி சேரும் சூழ்நிலை வந்தால் இன்னும் கஷ்டமாகிடும்" என்றாள்.

அவள் சொல்வதும் சரிதான். ஆனால் தனக்காக உறவுகளை விட்டு வந்தவளுக்கு அவ்வுறவுகளை மீட்டுக் கொடுக்கவே ஆசைப்பட்டான்.

ஆண்டாள் நேரில் சென்று சந்திக்க விடமாட்டாள் என்பதால், அவளுக்குத் தெரியாது அவளுடைய அலைபேசியிலிருந்து ஹரியின் எண்ணை எடுத்து, காவல் நிலையம் சென்ற சமயம் ஹரிக்கு அழைத்தான்.

ஆழி தன்னை யாரென்று அறிமுகம் செய்தது தான் தாமதம், ஹரி வார்த்தையால் அத்தனை ஆட்டம் ஆடிவிட்டான். இறுதியில் ஆண்டாள் என்பவள் எங்கள் அளவில் உயிருடனே இல்லையென்று சொல்லிவிட, ஆழி துடித்துப்போனான்.

தன் தேவதைப் பெண்ணுக்காக ஹரியிடம் ஒரு வார்த்தை அதிகம் பேசாது வைத்துவிட்டான். ஆண்டாள் பேச்சை மீறி ஹரியை தொடர்புகொண்டதை எண்ணி தன்னையே நிந்தித்துக் கொண்டான்.

அன்று மாலை வீட்டிற்கு வந்த ஆழி,

"நாளைக்கு டெல்லி கிளம்புறோம் ஆண்டாள்" என்றான்.

"ம்ம்" என்ற ஆண்டாள், "அண்ணாகிட்ட பேசுனிங்களா?" என்றாள் முறைத்துக் கொண்டு.

ஆழி பதில் சொல்லாது நிற்க,

"எனக்கு கால் பண்ணி திட்டினாங்க" என்றாள்.

"ஆண்டாள்... நான்" என்றவனை கைக்காட்டி தடுத்த ஆண்டாள், "ஏன்ப்பா... எனக்காகன்னாலும் நீங்க பேச்சு வாங்குறது பிடிக்கல ஆழி. அண்ணா ரொம்ப திட்டிட்டாங்களா?" எனக் கேட்டாள்.

"ம்ப்ச்..." என்று கண் சிமிட்டிய ஆழி, "உனக்காக என்னவும் செய்யணும்னு தோணுதே" என்றான்.

"இனி யார்கிட்டவும், என் குடும்பமாகவே இருந்தாலும், நீங்க இறங்கிப்போகணும்னு அவசியமில்லை" என்றாள். கட்டளையாக.


"உத்தரவு மேடம்" என்ற ஆழி, "டெல்லி போய் ஆர்டர் வாங்கிட்டு, கோவைக்கு போறோம். அங்க கல்யாணம். அடுத்து" என்று ஆழி சில்மிஷமாக வார்த்தையை முடிக்காது இழுக்க, அவனுள் தன் செம்மையை மறைத்திருந்தாள்.

1000037009.jpg


அத்தியாயம் 8க்கான இணைப்பு
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஊடலோட ஆரம்பிச்சு இனி போஸ்டிங் ஆர்டர் வாங்கியதும் கல்யாணம் 😍

ரெண்டு பேருமே அவங்க காதலுக்காக என்ன வேணா செய்ய தயாரா இருக்காங்க 🤩 ஆனா பிரிவு... எதனால🤔
 
  • Love
Reactions: MK16

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
ஊடலோட ஆரம்பிச்சு இனி போஸ்டிங் ஆர்டர் வாங்கியதும் கல்யாணம் 😍

ரெண்டு பேருமே அவங்க காதலுக்காக என்ன வேணா செய்ய தயாரா இருக்காங்க 🤩 ஆனா பிரிவு... எதனால🤔
அடுத்த அத்தியாயத்தில் அக்கா. மிக்க நன்றி.