• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆழி நெஞ்சம் 8

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
ஆழி நெஞ்சம் 8

கோவையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோவிலில் சுகவதனம், ஜெயந்தி மற்றும் ஆழியின் வீட்டில் பல வருடங்களாக குடியிருக்கும் தம்பதியினர் முன்பு இறைவனின் சந்நதியில், கடவுளின் சாட்சியாக, ஆழி அமுதன், ஆண்டாள் திரணிதாவை தன் மனைவியாக்கிக் கொண்டான்.

இருவரும் சுகவதனத்திடம் ஆசிபெற,

"ரெண்டு பேரும் ரொம்ப நல்லாயிருக்கணும்" என்று மனதாரா வாழ்த்தினார்.

"கங்கிராட்ஸ் அண்ணா" என்று ஆழியின் கையை பிடித்து குலுக்கிய ஜெயந்தி, ஆண்டாளை அணைத்து விடுத்தாள்.

ஆழிக்கு அவன் விருப்ப மாவட்டமாக கோவையிலேயே பணிபுரிய கேட்டிருக்க, அங்கேயே அவனுக்கு பணி நியமிக்கப்பட்டது.

ஹரியானாவிலிருந்து டெல்லி சென்று, பணி நியமன உத்தரவுப் படிவம் வாங்கியதும் தமிழ்நாடு கிளம்பிவிட்டனர். கோவை வந்த இரண்டாவது நாள் திருமணம் முடித்த கையோடு, பணியில் சேர்ந்துவிட்டான்.

அலுவலகம் சென்று பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆழி, மதியம் வீட்டிற்கு வர ஆண்டாள் உம்மென்று அமர்ந்திருந்தாள். தற்போது ஆழி கீழ் வீட்டை மட்டுமே வாடகைக்கு விட்டிருந்தான். மேல் தளம் முழுக்க தங்களின் உபயோகத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருந்தான்.

திருமணமான அன்றே இப்படி தனித்துவிட்டுச் சென்றுவிட்டானே என்று சுணங்கிய ஆண்டாளுக்கு அவளின் தந்தையின் நினைவு தான் வந்தது. ஆழியும் தன்னுடைய தந்தை போல் அவனது பணிக்கு பின்னர் தான் குடும்பமென்று சொல்லிடுவானோ எனும் பயம் தானாக துளிர்விடத் தொடங்கியது. அதற்காகவெல்லாம் அவனை அவளால் விட முடியாதே!

"சாரிடா..." வீட்டிற்குள் நுழைந்ததும் சிறிதும் தயக்கமின்றி மன்னிப்பு வேண்டினான்.

"இன்னைக்கு ஜாயின் பண்ணியிருக்கணும். சுகவதனம் சார் இன்னைக்கு நாள் நல்லாயிருக்கு சொன்னதும் மேரேஜ் வச்சாச்சு. இல்லைன்னா வேலையில் ஜாயின் பண்ணிட்டு, ரிலாக்ஸா மேரேஜ் பண்ணத்தான் நினைத்திருந்தேன்" என்றான்.

ஆண்டாள் எதுவும் பேசாது இருக்க...

"நமக்கான எல்லா நேரமும் அழகா அனுபவித்து கடந்து போகணும் ஆண்டாள்" என்றான். ஆழியின் இந்த வார்த்தைகளில் அவனுக்கு எப்போதும் தான்தான் முதன்மை என்றவளின் நம்பிக்கை மேலும் ஆழம் கொள்ள, தன்னுடைய தேவையில்லா பயத்தை புறம் ஒதுக்கினாள்.

"ஸ்டேஷனில் சைன் பண்ணிட்டு வந்திருக்கேன்" என்று அவளின் அருகில் அமர்ந்த ஆழி, மடியில் தலை வைத்துக் கொண்டான்.

"என்னப்பா?" அவனின் சிகை கோதினாள்.

"ரொம்ப நாள் ஆசை ஆண்டாள்" என்ற ஆழி அப்படியே அவளை இடைச்சுற்றிக் கட்டிகொண்டான்.

"எங்கேயும் வெளியில் போலாமா?" ஆழி கேட்க, வேண்டாமென்றாள்.

"நீங்க கூடவே இருந்தால் போதும்" என்ற ஆண்டாளின் குரலில் என்ன உணர்ந்தானோ!

மனைவியின் மடியில் முகம் புதைத்திருந்தவன், அவளின் முகம் பார்த்தவாறு தன்னுடய முகம் நிமிர்த்தி, அவளின் மார்போடு உரசிக் கொண்டிருந்த தான் கட்டிய புத்தம்புது தாலியை இரு விரல்களால் பிடித்து,

"உனக்கு அப்புறம் தான் ஆண்டாள் எதுவும். வேலைக்காக குடும்பத்தை மறந்த உன் அப்பா மாதிரி நான் இருக்கமாட்டேன். எனக்கு எல்லாமாவும் வந்தவடி நீ. உன்னை எப்படி விடுவேன். நான் என்ன பண்ணாலும் என் நினைப்பு உன்னைச் சுற்றியே இருக்கும்" என்றான்.

"சின்ன வயசில் அளவுக்கு அதிகமாக அந்த ஃபீல் அனுபவிச்சிட்டேன் ஆழி. அதனால் எனக்கே தெரியாம லைட்டா கோவம் வருது. இப்போ நீங்க பக்கத்தில் இருக்கும்போது ஓகே தான்" என்ற ஆண்டாள்,

"உங்களோட சூழல் என்னால் புரிஞ்சிக்க முடியும் ஆழ். நான் புரிஞ்சிக்கிறேன். நானும் உங்க வேலைக்கு ஏற்ற மாதிரி நடந்துக்கிறேன்" என்றாள்.

"தேங்க்ஸ் ஆண்டாள்."

"உங்களுக்காக" என்ற ஆண்டாள் குனிந்து அவனது நெற்றியில் முத்தம் வைத்தாள்.

"அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கணும்ல?"

ஆழி கேட்பது ஆண்டாளுக்கு புரியவில்லை.

"என்னது ஆழி?"

"ரொம்ப அவஸ்தையா இருக்கு ஆண்டாள்" என்று அவளின் உதட்டில் விரலால் வருடினான்.

"ஏசி சார் எதுக்கோ அடிபோடுற மாதிரி தெரியுதே" என்ற ஆண்டாள், ஆழியின் குறும்புப் பார்வையில், அவனின் மீசை நுனி பிடித்து இழுத்தாள்.

"போங்க... போய் குக் பண்ணுங்க பசிக்குது" என்றாள்.

"சமைக்க கத்துக்கோ ஆண்டாள்" என்று அவளின் மடியிலிருந்து எழுந்தான்.

"சாருக்கு அதுக்குள்ள எனக்கு சமைச்சுப்போட்டு அலுத்துப் போயிடுச்சா?" ஆண்டாள் இடையில் கைகளை குற்றி முறைத்துக் கொண்டு கேட்க,

"என் அம்மா கையில் சாப்பிட்ட நினைவே எனக்கு இல்லை ஆண்டாள். உன் கையால் சாப்பிடணும்..." என்றான். குரலில் விவரிக்க இயலா ஏக்கம்.

"ஆழி..." என்று தாவி எழுந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

"எல்லாமே... உறவுகளுக்கான பந்தம், செயல்கள், பிணைப்பு எல்லாமே உன்கிட்ட தான் தெரிஞ்சிக்கணும்" என்றான்.

என்னுடைய உலகமே உனக்குள் தான் அடக்கம் என்று சொல்லாது சொல்லிவிட்டான். அவளுக்கு வேறென்ன வேண்டுமாம்.

"லவ் யூ ஆழி" என்று அணைப்பைக் கூட்டினாள்.

"நீ இப்படியெல்லாம் பண்ணா, உன்னை தான் சாப்பிடணும்" என்று ஆழி கல்மிஷமாக மொழிய, "எனக்கு ஓகே தான்" என்று மெல்லிய ஒலியில் தன்னுடைய உதடு அவனது மார்பில் உரச கூறியவளின் இணக்கம் அவனுள் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகளை கட்டவிழ்க்க, முயன்று தன்னை நிலை நிறுத்தினான்.

"ஃபர்ஸ்ட் சாப்பாடு" என்ற ஆழி மனைவியை தூக்கிகொண்டு வந்து சமயலறை மேடையில் அமர வைத்தான்.

ஆழி ஒவ்வொன்றையும் லாவகமாக கையாள, ஆண்டாள் அவனையே ரசித்திருந்தாள்.

ஆழி அப்பளம் சுட்டுக் கொண்டிருக்க, இறங்கி அவன் பின் வந்து நின்ற ஆண்டாள், அவனின் முதுகில் தன் முகம் பதிய கட்டிக்கொண்டாள்.

"நீ சமைக்கணும், நான் வந்து இப்படி பண்ணனும். இங்க எல்லாம் உல்டாவா நடக்குது" என்று ஆழி சிரிக்க...

"அச்சோ ஆழி" என்று அவனை அடித்தாள் ஆண்டாள்.

"கல்யாணம் பண்ண அன்னைக்கே புருஷனை வேலை வாங்க ஆரம்பிச்சாச்சு... இப்போ அடிக்கவும்" என்று ஆழி சொல்ல,

"போங்க... போங்க... எனக்கு எல்லா உரிமையும் இருக்கு" என்று அவனை தனக்குள் அப்போதும் கட்டி வைத்துக் கொண்டாள். அணைப்பால் மட்டுமல்ல அன்பால். அதீத காதலால். அவனும் விரும்பியே அவளுள் கட்டுண்டான்.

சிறு சிறு நொடியையும் தித்திக்கும் காதலாக வாழத் தொடங்கினர்.

அன்று மாலை ஆறு மணி போல் சுகவதனம் வந்துவிட்டார். அவர் ஆழியிடம் பேசியபடி அமர்ந்துவிட நேரம் கடந்தது.

கீழ் வீட்டுப் பெண்மணி இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே ஆண்டாள் இருந்த அறைக்குள் சென்றார்.

ஆழிக்கு காரணம் விளங்கிவிட்டது.

"எதுக்கு அங்கிள் இந்த பார்மாலிடிஸ்?" என்றான்.

அந்த பெண்மணியை அவர் தான் வர சொல்லியிருப்பாரென்று ஆழிக்குத் தெரியும். அவன் மீது அவனது ஆண்டாளுக்கு முன்பிருந்து அக்கறை கொண்ட ஒரே நபர் அவரல்லவா.

"எதுக்கும் முறைன்னு ஒன்னு இருக்கு இல்லையா?" என்றவர், "இந்த நேரத்தில் அம்மான்னு கூட இருந்திருந்தா எதும் பொண்ணுக்கு சொல்லுவாங்க இல்லையா? அதான்" என்றதோடு,"உனக்கு சொல்லணும் அவசியமில்லை. இருந்தாலும் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. உனக்காக வந்திருக்க பொண்ணு, நல்லா பார்த்துக்கோ. அவ்ளோதான்" என்றார்.

ஆழி சிரித்துக் கொண்டான்.

உண்மைக்கும் அவள் தான் அவனை அதிகம் பார்த்துக் கொள்கிறாள்.

சிறிது நேரத்தில் அறையிலிருந்து வெளியில் வந்த பெண்மணி கஸ்தூரி, "உள்ள போங்க தம்பி" என்று சொல்லிவிட்டுச்" சென்றார்.

"சரி ஆழி... அப்போ நான் நாளைக்கு வரேன்" என்று சுகவதனமும் கிளம்பிவிட்டார்.

கதவினை அடைத்து விட்டு அறையின் வாயிலில் வந்து நின்ற ஆழிக்கே மெல்லிய படபடப்பு. இருவரும் ஒன்றாக இருப்பது புதிதல்ல. ஆனால் நடக்கவிருக்கும் நிகழ்வு, எதிர்பார்ப்புகளில் நிறைந்தது என்றாலும் அந்நேரத்திற்கு உரிய அவஸ்தை, இனிய பதட்டம் தானாக இருக்கத்தான் செய்தது.

ஆழி முன் வாயில் கதவடைக்கும் சத்தம் கேட்டு வெகு நேரமாகியும், அவன் அறைக்குள் வராததால், அவன் கதவினை திறக்கும் முன் ஆண்டாள் திறந்திருந்தாள்.

"என்ன இங்கவே நின்னுட்டிங்க?"

ஆண்டாள் அவனின் முகத்தில் கண்டுவிட்டு பதட்டத்தில், நிலைப்படியில் சாய்ந்து, இடையில் கை குற்றி மிதப்பாகப் பார்த்தாள்.

"நான் வரதுக்குள்ள நீயே வந்துட்ட." அவளின் முகம் பாராது, பார்க்க முடியாது எங்கோ பார்த்தபடி பதில் கூறினான்.

சத்தமின்றி சிரித்துக் கொண்டாள்.

"எல்லாம் பேச்சு தான் போல" என்ற ஆண்டாள் ஆழியை நெருங்கி நின்று, அவனின் கன்னத்தில் ஒற்றை விரலால் கோடு இழுத்தவளாக, "உங்களுக்கு பயம் தானே?" என விஷமமாகக் கேட்டாள்.

"என்னா... என்னா பயம்? யாருக்கு பயம்?" என்று திணறிய ஆழி, ஆண்டாளின் அடக்கப்பட்ட சிரிப்பில், அசடு வழிந்தான்.

"அப்போ பயமில்லையா?" என்ற ஆண்டாள் மேலும் அவனை ஒட்டி நிற்க, ஆழி பின் நகர்ந்தான்.

"இல்லை..."

அவனை நோக்கி அடி வைத்தாள்.

"ஆஹான்..."

ஆண்டாள் பட்டென்று ஆழியின் சட்டையின் கழுத்துப் பட்டையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவளாக, அவனது உதட்டோடு தன் மென்னிதழ் உரச...

"வேண்டாமா?" என்று அவனது விழிகளோடு தனது விழிகள் பந்தாட கேட்டாள்.

"நான் எப்போடி வேண்டாம் சொன்னேன்" என்று அவளின் இடையில் கையிட்டு அழுத்தம் கொடுத்து தன்னோடு நெருக்கியவன்,

"உனக்கு என் பக்கத்தில் வெட்கமே இல்லையாடி?" எனக் கேட்டான்.

"வெட்கப்பட வைங்க பாஸ்" என்ற ஆண்டாள், அவனிலிருந்து விலகி அறைக்குள் நுழைய, பின்னால் சென்று கதவடைத்த ஆழி... அவளின் கரம் பற்றி சுண்டி இழுத்தான்.

பஞ்சுப் பொதியென தன் மீது சாய்ந்தவளை வளைத்து கட்டிக்கொண்ட ஆழி, அவளின் வெற்றுத் தோளில் தன் நாடி பதித்து...

"ஷல் ஐ..." என்க,

இமைகள் மூட, அவன் மார்பில் பின் சாய்ந்தாள்.

ஆழி தன் நாடி பதிந்த இடத்தில் மென்மையில் அழுத்தமாக சூடான முத்தம் வைத்திட, ஆண்டாளின் கால் விரல்கள் தரை மடிந்தன.

"ஆழி." தவிப்புகள் நிறைந்த உச்சரிப்பு காற்றாய் வெளிவர, ஆண்டாளின் வெற்றிடையில் ஆழியின் வெம்மை அழுந்த தடம் பதித்தது.

தோள் படிந்த ஆழியின் அதரங்கள் ஊர்வலம் நடத்திட, உணர்வுகள் ஆர்ப்பரிப்பில் சிக்கிக்கொண்ட ஆண்டாள் மொத்தமாய் அவனிடம் தன்னை ஒப்புக் கொடுத்து அவனோடு இணைந்தாள்.

கைகள் சுமந்தவன் மஞ்சம் கிடத்தி தன் நெஞ்சம் சுமந்து, தன்னை வாரிச்சுருட்டிடும் அவளுள் தன்னைப்போல் அடங்கி நின்றான்.

யாவும் அகம் நிறைய, இரவும் நிறைவு கொள்ளும் வேளை துயில் கொண்டனர்.

காலை பத்து மணியளவில் கண் விழித்த ஆண்டாள், அவனுள் அவனாக ஒன்றிக் கிடக்கும் நிலை கண்டு நாணச் சிரிப்போடு எழுந்து குளியலறை புகுந்து வெளிவந்தாள்.

அவனது தவிப்புகளை எல்லாம் நேற்று ஒற்றை இரவில் காட்டிவிட்டிருந்தான். அவனுக்கு அவளை எத்தனை பிடிக்கும் என்பதையும்.

ஆழி இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவனருகில் சென்றவள், அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

தித்திப்பாய் தொடங்கிய அவர்களின் வாழ்வு நொடிக்கு நொடி சுவை கூட்டியது. ஆனந்தமாகக் கடந்தது.

ஆழி வேலைக்கு எத்தனை முக்கியத்துவம் அளித்தானோ அதைவிட பல மடங்கு மனைவியிடத்தில் முக்கியத்துவம் கொண்டிருந்தான்.

அவளுக்கு அடுத்து தான் யாவும் என்ற நிலை அவனிடம். அவளின் அன்புக்கு அடங்கியிருந்தான் என்பதைவிட அடிமையாகி இருந்தான்.

அவனுக்காக என்பதால் வெகு விரைவாகவே சமைக்கக் கற்றுக் கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் சுமாராக செய்தாலும், அவனுக்கு பிடித்த உணவுகளை பார்த்து பார்த்து காதல் கலந்து செய்திட நன்றாகவே வந்தது.

காலையில் அவள் கொடுக்கும் நெற்றி முத்தத்தில் ஆரம்பிக்கும் அவனது நாள், இரவில் அவளினுள் இனிமையாய் அடங்கிடும். தொடக்கமும் அவளாக, முடிவும் அவளாக.

அவன் எழுந்தது முதல் அவனுடைய சிறு சிறு தேவைகளையும் தானே முன் நின்று பூர்த்தி செய்தாள்.

குளிப்பதற்கு துண்டு எடுத்து கொடுத்து, அவன் வெளி வரும்போது சிகை துவட்டி, சட்டையின் பொத்தான் அணிவித்து, கண்ணாடிக்கு அவனுக்கும் நடுவில் நின்று கேசம் ஒதுக்கி, தொப்பியை அணிவித்து, கன்னத்தில் முத்தம் வைத்து நகர்பவள், உணவினை தானே ஊட்டியும் விட்டு வழியனுப்பி வைப்பாள். மூன்று வேளையும் அவள் சமைத்த உணவு என்பதை விட அவளின் விரல்கள் தீண்டிய உணவு தான் அவனது வயிற்றை நிரப்பின.

எத்தனை வேலை இருந்தாலும் உணவு நேரம் சரியாக வந்திடுவான். நீர் அருந்துவது கூட மனைவியின் கையால் தான். அதில் தான் அலாதி மகிழ்வு.

அவன் இழந்த யாவும் அவள் அன்பின் வழி மிச்சமின்றி கொடுத்திட, விரும்பியே அனுபவித்தான். ஆழியின் வாழ்வே ஆண்டாளால் வானவில்லாக மாறியிருந்தது.

ஆண்டாள் காட்டும் அன்பிற்கு கொஞ்சத்துக்கும் குறைவில்லாதது ஆழியின் அன்பும்.

ஆண்டாளின் பாசத்தில் உருகுபவன், தன் பாசத்தால் அவளையும் உருக வைத்தான். அவளுக்கு சின்னதாக வலி என்றாலும் துடித்திடுவான். கண்களில் நீர் திரண்டு விடும்.

நகரத்தையே தன்னுடைய கட்டுக்குள் வைத்து ஆட்டி வைப்பவன்,

"ஆழி" என்ற ஆண்டாளின் ஒற்றை விளிப்பிற்கு சிறுவனாக அடங்கிவிடுவான்.


வேலைப்பளு அதிகம் இருப்பினும், ஆழி அவளுக்காக ஒதுக்கும் நேரம் ஆண்டாளுக்கு அவன் மீது காதல் அதிகரிக்க போதுமானதாக இருந்தது.

இதன் தொடர்ச்சி கீழே👇🏻
 
Last edited:
  • Love
Reactions: Kameswari

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu

அன்று இரவு உணவின் போது என்றுமில்லா வழக்கமாக, "நீங்க சாப்பிட்டிட்டே எனக்கும் ஊட்டுங்க" என்றாள். ஆசைப்படுகிறாள் என்று ஆழியும் மறுக்காது செய்தான்.

இரவு படுக்கையில் இருவருக்குமான நேரத்தில் அவன் கரம் அவளின் கரத்தோடு இணைந்த நொடி அவளிடமிருந்து வந்த ஒலி வித்தியாசமாக இருந்ததோடு அவளின் முகமும் வலியை காட்டியது.

பட்டென்று விலகி மின்விளக்கை ஒளிரச் செய்தவன் அவளின் கரத்தினை பார்க்க முயல, வேகமாக மறைத்திருந்தாள்.

"கையில என்ன காட்டு?" ஆழி அவளின் செயலில் துணுக்குற்று கேட்க,

"ஒண்ணுமில்லை ஆழி. தூங்கலாம்" என முதுகுகாட்டி படுத்தவளை ஒரே சுழற்றில் தன் மடியில் அமர்த்தியிருந்தான்.

"கையை காட்டுடி..." அவனது குரலில் கோபம். முதல்முறை அவளிடம் கோப முகம் காட்டுகிறான்.

"அதான் ஒண்ணுமில்லைன்னு சொல்றேன்ல... அப்புறம் என்ன?" அவனுக்கு மேல் அவளும் கோபமாகத் தன்னைக் காட்டிக் கொண்டாள்.

"ஆண்டாள்..." அதீத அதட்டல் அவனிடம்.

அவளின் கையை பிடித்து உள்ளங்கை திருப்ப முயன்றான். அவளோ திமிறி விலகி அமர்ந்தாள்.

அதற்கு மேல் பொறுமை ஆழியிடம் இல்லை.

ஒரே இழுவையில் அவளை தனக்கு கீழ் கொண்டு வந்து சிறை வைத்தவன், அவளின் வலது உள்ளங்கையை ஏறிட்டான். தீ கொப்புளம். சட்டென்று ஆழியின் கண்கள் சிவந்து கலங்கியது.

"என்னாச்சுடி?" என்ற ஆழி அழுவதை கண்டு ஆண்டாள் துடித்தாள். நேசம் கொண்டவர்களுக்கு மட்டுமே உரித்தான வலியின் கண்ணீர் அது.

"சாதம் வடிக்கும் போது கஞ்சி கையில் பட்ருச்சு. அவ்ளோதான். ரெண்டு நாளில் சரியாப்போகும். இதுக்கு அழுவாங்களா?" என்று சாதாரணம் போல் கேட்டவள், தன் காயம்பட்ட கையை ஆழியின் கன்னம் வைத்து, "நீங்க இப்படி பறிதவிக்கிறது தான் அதிகம் வலிக்குது ஆழி" என்றாள்.

வேகமாக கண்களை துடைத்துக் கொண்ட ஆழி, அமைதியாகி விட்டான். அடுத்து அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

அவள் ஏற்கனவே அதில் மருந்து வைத்திருக்க, அவளை தன் மார்பில் போட்டுக் கொண்டு படுத்துக்கொண்டான்.

சில நிமிடங்கள் அமைதியில் கழிந்தது. ஆழியின் கரம் ஆண்டாளின் கன்னம் வருடியபடி இருக்க, இருவருக்கும் தூக்கமில்லை.

"கோபமா?", ஆண்டாள்.

"ஆமா" என்ற ஆழி, "எதுக்கு மறைக்க ட்ரை பண்ண?" எனக் கேட்டான்.

"இப்போ கண்ணு கலங்கி பார்த்தீங்களே... அதுக்குத்தான்" என்றவள், அவனின் மார்பில் கடித்து வைத்தாள்.

"போடி..." என்ற ஆழி, "எதுவா இருந்தாலும் நான் ஃபீல் பண்ணுவேன் நினைச்சு என்கிட்ட மறைக்காத ஆண்டாள். உனக்கு ஒன்னுன்னா நான் என்னடி பண்ணுவேன்?" என்றான். ஆழியின் குரல் முதல்முறை கலங்கி ஒலிக்கக் கேட்கிறாள். அவளுக்காக துடிக்கின்றான். எப்படி இருக்கிறதாம்? இந்த அன்பிற்கு முன்னால் அவளின் பயம் யாவும் விலகிச் சென்ற உணர்வு. ஆனால் அடி ஆழம் புதைக்கப்பட்டிருகிறது என்று அக்கணம் அவள் அறியவில்லை. புதைந்த விதை யாவும் சரியான தருணத்தில் வீறு கொண்டு வெளிவருவது தானே நியதி. அதில் தான் ஆண்டாளும் சிக்கிக் கொண்டாள். மேலெழும்பிய பயத்தால்.

எதையும் மறைக்க வேண்டாமென்று ஆழி சொல்லியும், தன் மனதில் அடுத்தடுத்து தோன்றிய பயத்தை அவனிடம் முழுதாக மறைத்துவிட்டாள். அதன் விளைவு மொத்தமாக பிரிந்து சென்றிருந்தாள்.

திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் ஓடியிருந்தன. தெவிட்டாத காதல் வாழ்வு. இருவருக்கும் தங்கள் கூடு சொர்க்கமாய்.

ஆண்டாள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். அலைவரிசை மாற்றுகையில் நூலிழையில் உயிர் தப்பினார் கோவை ஏசி.ஆழி அமுதன் எனும் குரல் கேட்டு பக்கென்று தொற்றிக் கொண்ட பதட்டத்துடன் அதற்குரிய அலைவரிசையை வைத்திட ஆழியின் புகைப்படம் திரையை நிறைத்திருந்தது.

"ரவுடிகளை பிடிக்கசென்ற இடத்தில், ரவுடிகள் மற்றும் காவல்துறையினர் இருவருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் ஆழி உயிர் தப்பினார்" என்று எழுத்துக்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தன.

ஆண்டாளுக்கு அதுவரை மறைந்திருந்த தன் அப்பாவின் நிகழ்வுகள் யாவும் நெஞ்சுக்கு மேலெழும்ப, ஆழி குறித்து அமிழ்ந்திருந்த பயம் உயிர் கொண்டது.

"ஆழி" என்று அரற்றியவள், அவனுக்கு விடாது அழைப்பு விடுக்க, அவனிருந்த சூழலில் எடுக்க முடியவில்லை.

இருந்தும் ஆண்டாளின் தவறிய அழைப்புகளின் எண்ணிக்கையின் பொருளுணர்ந்து விரைந்து வீட்டிற்கு வந்திருந்தான்.

உள்ளே நுழையும் முன் பாய்ந்து கட்டிக்கொண்டவள், "உங்களுக்கு ஒண்ணுமில்லையே" எனக் கேட்டு, முழுதாய் அவனை பார்வையால் ஆராய்ந்து, முகம் முழுக்க முத்தம் வைத்து, தன்போக்கில் அவனின் நலன் குறித்து அரற்றிக் கொண்டே இருந்தாள்.

அவளை அமைதிப்படுத்த முடியாது திணறிய ஆழி, அவளின் இதழில் அழுத்தமாக முத்தம் வைத்து விலக, முடியவில்லை. அவன் தொடங்கி வைத்த முத்தத்தை பயம் கொண்ட அழுத்தத்தால் அவள் தொடர்ந்து கொண்டிருந்தாள். முற்றுப்பெறா தொடராக நீண்ட முத்தத்தை, அவளே கூடலில் முடித்து வைத்தாள். ஆழிக்கு பெருத்த ஆச்சரியம். அவளிடம் அவன் மீதான காதலை அத்தனை வன்மையாகக் காட்டியிருந்தாள்.

தனக்குள் கணவன் அடங்கியிருக்கிறான் எனும் உணர்வு தான் அவளை அமைதியாக்கியது. அவன் நன்றாக இருக்கிறான் எனும் நிம்மதியை அளித்தது.

அவனின் கையில் தலை வைத்து அவள் கண் மூடியிருக்க...

"ரொம்ப பயந்திட்டியா?" எனக் கேட்டான்.

பதில் சொல்லவில்லை. ஆனால் இருவருக்குமிடையில் இல்லாத இடைவெளியை குறைத்தாள்.

"உனக்காகவே நான் ரொம்ப கவனமா இருப்பேன் ஆண்டாள்" என்ற ஆழியின் நெற்றி முத்தம் அவளை சுயம் மீட்டது.

அந்த நிம்மதியும் சில நாட்கள் தான்,

அன்று வீட்டிற்கு வந்த ஆழியின் காலில் பெரிய கட்டு, மற்றொரு காவலர் தான் அவனை கைத்தாங்கலாக அழைத்து வந்து அமர வைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

வெளியில் சென்றிருந்த ஆண்டாள் வீட்டுக்கு வந்ததும் அவனது காலில் கட்டினை பார்த்து அழுதிட, ஆழிக்கு அவளை சமாதானம் செய்திட நான்கு நாட்கள் ஆனது.

காவல்துறை பணி அத்தனை எளிதல்ல. அதீத ஆபத்துகள் நிறைந்ததும் கூட, அதில் எவ்வளவு கவனமாக இருந்தாலும் இது போன்று சிறு சிறு அனர்த்தங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.

தன்னிடம் சொல்லவில்லை என்றாலும், காவல் நிலையம் சென்று அவன் வீட்டிற்கு வருவதற்குள் ஆண்டாளிடமிருந்து வரும் அழைப்புகளில் அவளின் பயத்தைக் கண்டு கொண்டான் ஆழி.

அது சிறு வயதில் அவளின் தந்தையின் நிகழ்வால் மனதில் ஆழப் பதிந்த ஒன்று. அதனை அத்தனை எளிதாக போக்கிட முடியாதென ஆழிக்குத் தெரிந்திட, மிக நிதானமாகவே அவளைக் கையாண்டான்.

அவளை இதிலிருந்து வெளிக் கொண்டுவர வேறு செயலில் ஈடுபடுத்த வேண்டுமென நினைத்த ஆழி, "படிச்சிட்டு ஏன் சும்மா இருக்க? வேலைக்கு எதும் ட்ரை பண்ணு ஆண்டாள்" என்றான்.

"குழந்தை பிறக்கட்டும் ஆழி. அப்புறம் போகிறேன்" என்று அடுத்து எதுவும் கேட்க முடியாத அளவுக்கு அவனின் வாயை ஒரே பதிலில் அடைத்துவிட்டாள்.

ஆனால் அடுத்த நாளே "வீட்டில் வேலையில்லாம உனக்கு போர் அடிக்கும் நேரம் அரசு தேர்வுக்கு படி" என்று தன்னுடைய தேர்விற்காக வாங்கிய புத்தகங்களை எல்லாம் எடுத்து கொடுத்தான்.

ஆழியின் மனம் அவளுக்கு புரியுமே. அவனின் அமைதிக்காக படிக்கத் தொடங்கினாள். ஆனாலும் அவன் குறித்த பயம் மட்டும் அவளுக்கு நீங்கவில்லை.

மேலும் இரு மாதங்கள் சென்றிருக்க அன்று, அவளின் எண்ணிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

"உன் புருஷன் பெரிய போலீசா இருந்தா எங்ககிட்ட மோதுவானா அவன ஒழுங்கா விலகியிருக்க சொல்லு. இல்லை உயிரோடு வீடு திரும்பமாட்டான்" என்று எச்சரித்து வைக்க, இங்கு ஆண்டாளின் நெஞ்சுக்கூடு வற்றியது.

பயத்தில் அழுதபடி இருந்தவள், ஆழியின் அரவம் உணர்ந்து, கண்களைத் துடைத்துக் கொண்டு இயல்பாக இருப்பதைப்போல காட்டிக் கொண்டாள்.

"அழுதியா?" மனைவியின் முகம் கண்டு எளிதாக கண்டுபிடித்திருந்தான்.

"அம்மா நியாபகம்" என்று அவனில் சாய்ந்து அவள் சொல்ல, அவனால் நம்பாது இருக்க முடியவில்லை.

ஆண்டாளுக்கு அவனிடம் சொல்ல முடியவில்லை. இந்தப் பேச்சை ஆரம்பித்தால், அவள் முதலில் கூறுவது வேலையை விடுவது குறித்து தான் இருக்கும். ஆனாலும் அவளால் அதனை சொல்லிட முடியாது. அவளுக்கு அடுத்து அவனுக்கு அதிகம் பிடித்ததாயிற்றே இந்த காக்கி. எப்படி சொல்லிடுவாள். மனதிற்குள் மருகவே செய்தாள்.

"எதுவும் மறைக்கிறியா ஆண்டாள்?" இரண்டு நாள் அவளின் முகம் பார்த்து அமைதியாக இருந்த ஆழி, ஏதோ இருக்கிறதென அவளிடம் விசாரிக்க இல்லையென்று சாதித்துவிட்டாள்.

அன்று ஆழி காவல் நிலையம் சென்ற பின்னர், தலைச்சுற்றலோடு சேர்ந்து வாந்தியும் எடுக்க, நீண்ட நாட்களுக்குப் பின்னர் அகம் நிறைந்த மகிழ்வு அவளுள். உடனே வெளியில் செல்வதாக ஆழிக்கு தகவல் அனுப்பிவிட்டு, மருத்துவமனை சென்றாள். கருத்தரித்திருப்பது உறுதியாக, வரும் வழியில் கோவிலுக்குச் சென்றாள். மனம் அத்தனை அமைதியாக இருந்தது.

கோவிலில் வைத்தே கணவனிடம் சொல்ல ஆசைகொண்ட ஆண்டாள், அவனுக்கு அழைத்து கோவிலுக்கு வரச்சொல்ல... காரணம் கேட்டதற்கு,

"வந்து தெரிஞ்சுக்கோங்க" என்று வைத்திருந்தாள்.

நேரம் சென்று கொண்டிருக்க ஆழி வர தாமதமாகியது. கோவிலுக்கு வெளியில் வந்து காத்திருக்கத் தொடங்கினாள்.

ஆழி வந்து சேர, யாரோ நால்வர் ஆண்டாளை சூழ்ந்தனர்.

"அன்னைக்கே உனக்கு ஃபோன் போட்டு சொன்னோமா இல்லையா? இப்போ உன் புருஷன், எங்க அண்ணனை ஜெயிலில் போட்டுட்டான். உன்னை கடத்தி, உன் புருஷனை மிரட்டி, எங்க அண்ணனை வெளியில் கொண்டுவரப் போறோம்" என்று கையில் கத்தியை வைத்துக் கொண்டு ஒருவன் கூற, அய்யனார் தோரணையில் அவனுக்கு பின்னால் வந்து நின்ற ஆழியின் சிவந்த விழிகள் கண்டு ஆண்டாளுக்கு முதுகுத்தண்டு சில்லென்றானது.

"நீ பயந்ததுக்கு... இந்த புற****** மிரட்டுனது தான் காரணமா?" என்று ஆண்டாளிடம் தன் கோபம் சற்றும் குறையாத வினவிய ஆழி, "அன்னைக்கே சொல்லியிருந்தா மொத்தமா தூக்கியிருக்கலாம்" என்றான்.

ஆண்டாளின் விழிகள் பயத்தில் மேலும் விரிய, "உன்கிட்ட கொடுத்த வாக்குக்காக இதுவரை யார் மேலையும் கை நீட்டினதில்லை. ஆனால் எவ்ளோ தைரியம் இருந்திருந்தா உன்னையே மிரட்டிப் பார்த்திருப்பானுங்க, இப்போ கடத்த வேற... ம்ம்" என்று நால்வரையும் புரட்டி எடுக்கத் துவங்கியிருந்தான்.

அவனின் அடியில் துடித்த நால்வரில் ஒருவன் லாவகமாக தப்பித்து, அங்கு உறைந்து நின்றிருந்த ஆண்டாளின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான். அந்நேரம் இன்னொருவன் ஆழியை குத்திட முனைய, அவனை ஆழி வளைத்து பிடித்த இடைவெளியில், மற்றொருவன் தப்பித்து ஆண்டாளிடம் வந்து நின்றான்.

"இப்போ அவனை நீ விடல உன் பொண்டாட்டியை குத்திடுவேன்" என்று அவன் ஆண்டாளின் வயிற்றை நோக்கி கத்தியைக் காட்டிக்கொண்டு ஆழியை மிரட்டினான்.

தன் கழுத்தில் ஒருவன் கத்தியை வைத்தபோது வராத பயம், வயிற்றில் வைக்கவும் ஆண்டாளுக்கு உயிரே போய்விட்டது.

தன் உயிரானவனின் உயிரில் உதித்த கருவின் வரவைத் தெரிந்துகொண்ட ஒரு நாளில், அவ்வுயிருக்கு ஆபத்து என்றால் தாயின் உள்ளம் எத்தனை பதைப்பிற்குள்ளாகும்?

அதுநாள் வரை அவள் கொண்ட பயமெல்லாம் ஒன்றுமே இல்லை எனும் விதமாக அன்று அந்த கணம் அவளின் பயம் உச்சம் பெற்றது. உயிரிருந்தும் கூடாக கணவனை வெறித்திருந்தாள்.

சடுதியில் நால்வரையும் தனது கட்டுப்பாட்டில் வீழ்த்தி, மனைவியைத் தன்னுடைய கை வளைவிற்குள் கொண்டு வந்திருந்தான்.

ஆண்டாளின் அப்பட்டமான நடுக்கம், ஆழியின் தேகம் உணர்ந்தது.

"ஆண்டாள்..."

அவனின் தோள் சாய்ந்து கண்களை மூடிக்கொண்ட ஆண்டாள் எதுவும் பேசவில்லை.

காவல் நிலையம் அழைத்து காவலர்களை வரவழைத்த ஆழி, பிடித்து வைத்த நால்வரையும் அவர்களிடம் ஒப்படைத்து அனுப்பி வைக்கும் வரை மனைவியின் பயம் உணர்ந்து தன் அணைவிலேயே வைத்திருந்தான்.

ஆண்டாள் முகம் தெளிவில்லாது இருக்க, கோவிலுக்குள் அழைத்துச் சென்று சிறிது நேரம் கழித்தே இல்லம் அழைத்து வந்தான்.

அவனின் மார்பில் ஒன்றியபடியே இருந்தாள். கொஞ்சமும் அவனை விட்டு விலகவில்லை. ஆழியும் அவளின் மனம் அறிந்து தனக்குள் பொத்தி வைத்தபடியே இருந்தான்.

தன் கை வளைவில் படுத்து இருந்தவளின், வெகுநேர அமைதி என்னவோ போலிருக்க...

"எதோ சொல்லணும் சொன்னியே என்னது?" எனக் கேட்டான்.

ஆண்டாள் அமைதியாக கண் மூடியிருக்க,

"கோவிலில் வைத்து சொல்ற அளவுக்கு முக்கியமான விஷயமா?" என்றான்.

ஆழியை இன்னும் நெருங்கி கட்டிக்கொண்டாலே தவிர்த்து எதுவும் பேசவில்லை. அவளின் மனம் தன் மகவுக்கு எதுவும் ஆகியிருந்தால் என்ற பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.

"நான் இருக்கும்போது என்ன பயம் உனக்கு?"

'பயமே உன்னால் தான். உன் வேலையால் தான்' என்று அவளால் எப்படி சொல்ல முடியும்?

மௌனமாக கண்ணீர் சிந்தினாள்.

தூக்கத்திலும் அவளால் தன் பயத்தை துறக்க முடியவில்லை. கணவனின் கையணைவில் அவன் முகம் பார்த்து கொட்ட கொட்ட விழித்திருப்பாள்.

ஒரு வாரம் சென்ற நிலையிலும், தன் வயிற்றில் கத்தியை வைத்து மிரட்டிய காட்சி அவளுள் நீங்கா தடம் பதித்திருக்க, எப்போதும் ஆழியின் அருகில் பாதுகாப்பை உணர்ந்து பயம் துறப்பவள், தற்போதெல்லாம் அவனருகில் தான் அதிக பயம் கொண்டாள். தன் மகவுக்காக பயம் கொண்டாள்.

இந்த பயமே தன் பிள்ளைக்கு எமனாக வந்து நின்றிடுமோ என்று அதற்கும் அஞ்சியவள், பிள்ளைக்காக அந்த விபரீத முடிவை எடுத்தாள்.

கணவனை... தன் உயிரான ஆழியை பிரிவதென்று.

வாழ்நாளில் தன்னால் செய்ய முடியாத ஒன்றை அத்தனை திடமாக எடுத்திருந்தாள்.

காதலை, கணவனின் மீது கொண்ட உயிர் நேசத்தை, தாய்ப்பாசம் வென்றிருந்தது.

தானில்லை என்றால் அவனில்லை என பலமுறை அவன் சொல்லியே கேட்டிருக்க, அவனின்றி தான் தங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்க முடியுமென உயிர்வதை கொண்டு கணவனை பிரிய முடிவாக நினைத்துவிட்டாள்.

தனக்கு போதும் போதுமென்கிற அளவு ஆழியின் அன்பில் திக்குமுக்காடி இருக்கிறாள். இனி அதற்கு வாய்ப்பில்லை என்ற உண்மையை அவனின் அருகில் வேண்டுமட்டும் நிரப்பிக் கொண்டு, அவனிடம் சொல்லாது சென்றுவிட்டாள்.

ஆழி காவல் நிலையம் சென்றிருக்க, அவளுக்கு முக்கியமாகத் தேவைப்படும் உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இதயம் வலிக்க அவ்வூரை விட்டே சென்றிருந்தாள்.

வீட்டிற்கு வந்த ஆழி மனைவியின் இருப்பு இல்லாது வீட்டைச் சுற்றிவர, அவன் கண்ணில் பட்டது, அவளின் அலைபேசியும் அதற்கு கீழாக காற்றில் படபடத்த காகிதமும்.

விரல்கள் நடுங்க எடுத்து பார்த்த ஆழி, துடித்த துடிப்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கதறி அழுதான்.

காக்கிச் சட்டையில் கம்பீரமும் மிடுக்குமாய் காட்சியளிப்பவன் தரையில் சுருண்டு, அழுகையில் கரைந்தான்.

"ஆண்டாள்." காரணம் அறியாது அரற்றி அழுதான்.

"தேட வேண்டாம். தேடுறீங்கன்னு தெரிந்தாலே நான் இல்லாம போயிடுவேன்." கையில் கசங்கியிருந்த காகிதத்தை பார்த்தவன் வெறி கொண்டு கத்தினான். தொண்டையில் நரம்புகள் புடைக்க வெளிவந்த கேவலில் அவனது இல்லமே கிடுகிடுத்து நடுங்கியது.

இருந்தும் இறந்துவிட்டான் இன்று அவன்(ஆழி அமுதன்).

1000037245.jpg
 

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
அழி நெஞ்சம்

அத்தியாயம் 9 க்கான இணைப்பு

 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஆழிக்கு எல்லாத்தையுமே குடுத்த ஆண்டாளே மொத்தமா அவன்கிட்ட இருந்து பறிச்சிட்டு போயிட்டாளே 😢

இனி ஆழிதா பத்தி தெரிய வந்தா 🤔
பாவம் ஆழி அவனுக்கு எவ்வளவு பெரிய வலியை கொடுத்திட்டா 😢

ஆண்டாள் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் குழந்தை விஷயத்தை ஆழிகிட்ட மறைச்சது தப்பு தான் 😢
 
  • Love
Reactions: MK16

MK16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
30
17
18
Tamil nadu
ஆழிக்கு எல்லாத்தையுமே குடுத்த ஆண்டாளே மொத்தமா அவன்கிட்ட இருந்து பறிச்சிட்டு போயிட்டாளே 😢

இனி ஆழிதா பத்தி தெரிய வந்தா 🤔
பாவம் ஆழி அவனுக்கு எவ்வளவு பெரிய வலியை கொடுத்திட்டா 😢

ஆண்டாள் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் குழந்தை விஷயத்தை ஆழிகிட்ட மறைச்சது தப்பு தான் 😢
எஸ் கா... Thank you so much