• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராக்கதனின் கண்மணி! 2

kkp2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
36
27
18
Tamil nadu
அத்தியாயம் 2

ஸ்ரீனிவாசன் அவரது மனைவி மிருதுளா இருவரும் அந்த மருத்துவமனையின் உள்ளே நின்றனர்.

மிருதுளா அழுதபடி நிற்க, ஸ்ரீனிவாசன் மனைவியை தாங்கிக் கொண்டு நின்றார்.

"ஏங்க இப்படி செஞ்சான்? அந்த பொண்ணு இல்லைனா வேற பொண்ணே இல்லையா உலகத்துல?" என மிருதுளா இன்னும் ஆதங்கமாய் கேட்டுக் கொண்டிருக்க, தகவல் வந்ததில் இருந்து மனைவியின் வார்த்தைகள் இதுவாய் தான் இருந்தது.

ஸ்ரீனிவாசனுமே இதை எதிர்பார்க்கவில்லை. தான் பெற்ற மகனை போல தானே இவனையும் வளர்த்தார். மனது கேளவே இல்லை.

"ப்பா!" என மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தான் விக்ரம். சற்று நேரம் முன்பு ஸ்ரீனிவாசன் அழைத்து சொல்லி இருக்க, அங்கேயே ஓய்ந்து போனவன் தான் தளர்ந்து சிவந்து வந்திருந்தான்.

"விக்கி!" என பார்த்ததும் அவன் மேல் சாய்ந்து மிருதுளா கதறி அழ துவங்க, விக்ரம் கண்களுமே சிவந்திருந்தது கோபத்திலும் விட்டுவிட்டோமே எனும் ஆதங்கத்திலும்.

"என்ன டா நடந்துச்சு? ஒரு வார்த்தை நீயும் சொல்லல இல்ல எங்ககிட்ட?" என ஸ்ரீனிவாசன் கேட்க,

என்னவென்று சொல்வான் அவன்? அவனுக்காக தானே அத்தனை கோபம் இருந்த போதும் ஒரு திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளையை கடத்தி, அங்கிருந்தவர்களை பயமுறுத்தி அந்த பெண்ணையும் அவனுக்காக இழுத்து வந்திருந்தான்?

இப்படி செய்வான் என எதிர்பார்க்கிவில்லையே விக்ரமும்.

"நீ இருந்தும் விட்டுட்டியே டா!" அன்னையின் இந்த வார்த்தைகள் தான் விக்ரம் காதுக்குள் மீண்டும் மீண்டுமாய் ஒலித்தது.

"விக்கி?" என அதிர்ந்து ஸ்ரீனிவாசன் அழைக்கவும் தான் விக்ரமும் ஸ்ரீனிவாசன் பார்க்கும் திசையில் பார்த்தபோது தான், சுவற்றை ஒட்டிக் கொண்டு பயந்தபடி தங்களைக் பார்த்துக் கொண்டிருந்தவள் நியாபகமே வந்தது விக்ரமிற்கு.

அவளும் அவள் நின்ற அந்த மனகோலமும் என எதுவும் கேட்கவே தேவையாய் இல்லை பெரியவர்களுக்கு.

"விக்கி?" என கேள்வியாய் மகனையும் அந்த பெண்ணையும் பார்த்து மிருதுளா இன்னுமாய் அழ, சுத்தமாய் எதுவும் புரிவேனா என்றது துகிராவிற்கு.

"அந்த பொண்ணை அழைச்சிட்டு வர தான் போறன்னா அதை கொஞ்சம் முன்னவே பண்ணிருக்க வேண்டியது தானே டா? இல்லைனா அவனையும் இழுத்துட்டு போயிருக்க வேண்டியது தானே? இப்படி அவனை பொணமா பார்க்க வச்சுட்டியே!" என விக்ரம் சட்டையை பிடித்துக் கொண்டு மிருதுளா அழ, கலங்கிய கண்களை இறுக மூடிக் கொண்டான் விக்ரம்.

"விஷ்வாவோட ரிலேட்டிவ்?" என மருத்துவர் வர, மூவருமாய் முன் வந்தனர்.

கையெழுத்து வாங்கிக் கொண்ட மருத்துவர் "போலீஸ் வந்துட்டு இருக்காங்க. ப்ரோசீஜர் முடிச்சுட்டு தான் தருவாங்க! ஐம் சாரி!" என சொல்லி செல்ல, சுத்தமாய் தாங்கும் நிலையில் இல்லை மிருதுளா.

விக்ரமின் சகோதரன் போல கூடவே இருந்தவன். மிரும்மா என அழைப்பவன் இப்பொழுது இல்லை என நினைக்கவே பதறியது ஒரு பெண்ணாய்.

விஷ்வா விக்ரமின் நண்பன். கல்லூரி முதலான நட்பு. ஐந்து வருடங்களாய் விக்ரமுடன் அவன் வீட்டில் தான் தங்கி இருக்கிறான். அவனுக்கு சொந்தமென யாரும் கிடையாது. ஸ்காலர்ஷிப்பில் படித்து முடித்தான் கல்லூரியை.

"விக்கி! அம்மாவை வீட்டுல கொண்டு விட்டுட்டு வா!" ஸ்ரீனிவாசன் சொல்ல, மீண்டுமாய் அரண்ட பார்வை பார்த்தாள் ஒளிந்து நின்ற துகிரா.

எல்லாம் புரிகிறது ஆனாலும் பேச முடியவில்லை. அதுவும் இப்படி ஒருவன் உயிரையே விட்டிருக்க அதைக் கேட்டு நெஞ்சம் பிசைய தான் செய்தது அவளுக்கும்.

"கல்யாணம்னு பேசவும் நீ வீட்டை விட்டு வந்திருந்தா ஒரு உயிர் போயிருக்காது!" என தன்னருகே வந்து நின்று கூறிய விக்ரம் வார்த்தைகளில், இல்லை என வேகமாய் அவள் தலையசைக்க,

"பெத்தவங்க செத்துடுவேன்னு சொன்னா எந்த பொண்ணும் எடுக்குற முடிவு தான் இந்த பொண்ணும் எடுத்திருக்கும். விஷ்வா தான் அவசரப்பட்டுட்டான்!" என கூறினார் மிருதுளா.

"ம்மா வாங்க போகலாம்!" விக்ரம் அழைக்க, துகிரா அவர்களைப் பார்க்க,

"இந்த பொண்ணு?" என்ற அன்னை கேள்விக்கு,

"எங்கேயோ போகட்டும். இனி இவ என்ன ஆனா எனக்கென்ன?" என்றவன்,

"போய் அவனை கட்டிக்கிட்டு நிம்மதியா வாழலாம்னு மட்டும் நினைக்காத! உன்னை விற்க கூட தயங்க மாட்டான் அந்த விவேக். உன் அப்பா பார்த்த மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லை. இப்படி விஷ்வா ஒரு முடிவு எடுப்பான்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நீ அந்த விவேக்கையே கட்டிக்கிட்டு செத்து போனு விட்ருப்பேன். இப்ப உன்னை காப்பாத்தி விட்டது என்னோட பாவக் கணக்கு! போய் எங்கேயாவது விழு!" என்ற விக்ரம் அன்னை கையைப் பிடித்துக் கொண்டு நகர, அந்த பெண்ணை திரும்பிப் பார்த்தபடி சென்றார் மிருதுளா.

அங்கேயே அதிர்ந்து சிலையாய் நின்றிருந்தாள் துகிரா.

மண்டபத்தில் இருந்து அடிக்காத குறையாய் இழுத்து வந்தவன் இனி என்னவும் செய் என விட்டு செல்கிறான்.

தான் அடுத்து என்ன செய்ய? வீட்டிற்கு செல்லவா? சென்றால்? அந்த திருமணம் நடக்குமோ? ஏற்கனவே அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தான் இருந்தாள். அதற்காக தப்பிக்க என எதுவும் சிந்திக்கவில்லை. விதி இது தானோ என நினைத்து ஏற்று கொள்ள தயாராய் இருந்த நேரம் இப்படி இழுத்து வந்து விட்டு,

'எப்படியும் போ' என்று சொல்லி செல்பவனை என்ன சொல்ல?

அதுவும் விவேக்கை பற்றி இவன் சொல்லியது இன்னுமே பயத்தை கிளப்ப அப்படியே அங்கேயே அயர்ந்து அமர்ந்துவிட்டாள்.

காலையில் எழுந்ததும் கல்யாணப் பெண் என சொல்லி அதில் அதிர்ந்து நிற்கும் பொழுதே மணப்பெண் கோலத்தில் அலங்காரித்து விட்டு என இப்பொழுது நேரம் பத்தை தாண்டியும் இன்னும் சாப்பிடவில்லை என்பதில் மயக்கம் வரும் போலானது துகிராவிற்கு.

ஸ்ரீனிவாசனும் அந்த பெண்ணை கவனித்தவர் அவளருகே வர, விக்ரமும் திரும்பி வந்துவிட்டான்.

"என்ன விக்ரம்?" தந்தை கேட்க,

"அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க!" என துகிராவைப் பார்க்க, அவளால் நடக்க முடியும் என தோன்றவில்லை.

'அப்ப மாதிரி இழுத்துட்டாவது போயேன்!' என விக்ரமை அவள் மனம் நினைக்கவே செய்து விட, சட்டென நினைவு வந்து தன்னை தானே திட்டிக் கொண்டவள் மெதுவாய் எழுந்து நடக்க, அவள் ஒரு அடிக்கு அவன் பத்து அடி நடந்திருந்தான்.

"அந்த பொண்ணு என்ன நிலைமைல இருக்குன்ணு தெரியாம அப்படியே விட்டுட்டு போறது சரி இல்ல விக்கி. பெத்தவங்ககிட்ட இருந்து கூட்டிட்டு வந்துட்ட. அவ விரும்புன விஷவாவும்..." என்ற மிருதுளா கண்கள் கலங்கிவிட, சரி செய்து கொண்டவர்,

"போய் கூட்டிட்டு வா. வீட்டுக்கு போய் பார்த்துப்போம்!" என்று சொல்லி விக்ரம் மறுத்தும் கண்டித்து மிருதுளா சொல்லியதால் தான் அழைக்கவே வந்திருந்தான் விக்ரம்.

காவல்துறையின் விசாரிப்புகள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என அனைத்தும் முடிந்த பின் தான் விஷ்வாவின் உடல் உயிர் நண்பனான விக்ரம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

விஷ்வா உடலைப் பார்த்து பார்த்து நினைத்து நினைத்து உள்ளுக்குள் அப்படி ஒரு இறுக்கம் விக்ரமிடம்.

நேற்றைய இரவு முழுக்க உறங்காமல் விஷ்வா அவன் காதலி நினைவில் உளறிய பேச்சுக்கள் எல்லாம் சேர்ந்து தான் காலையில் அந்த பெண்ணை கூட்டி வந்து விஷ்வாவிடம் சேர்க்கும் எண்ணத்தையே விக்ரமிடம் கொண்டு வந்திருந்தது.

ஆனாலும் இப்படி விரும்பி உயிராய் இருந்துவிட்டு வீட்டில் பார்ப்பவனை திருமணம் செய்ய எப்படி தான் மனம் வந்ததோ என அந்த பெண் அளவில்லாத கோபமும் இருக்க தான் செய்தது விக்ரம் எண்ணத்தில்.

அவனுக்கு ஆச்சரியம் கொடுக்க விக்ரம் நினைத்திருக்க, இப்படி அதிர்ச்சி தந்து நண்பன் உலகத்தை விட்டே செல்வான் என எதிர்பார்க்கவே இல்லை.

விஷ்வாவின் அனைத்து காரியங்களும் முடிந்து விக்ரம் வீடு திரும்ப இரவு பத்து மணி ஆகி இருந்தது...

மிருதுளாவும் ஸ்ரீனிவாசனும் ஹாலில் தான் அமர்ந்திருந்தனர். கூடவே துகிராவும். யாரும் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவளும் யாரிடமும் பேசி இருக்கவில்லை.

தனி ஒற்றை சோஃபாவில் அமர்ந்திருந்தவள் தூக்கத்தில் கண்ணை மூடுவதும் கடினப்பட்டு திறப்பதுமாய் இருக்க, அவளைப் பார்க்க பார்க்க இன்னுமே ஆத்திரமும் கோவமும் கூட தான் செய்தது விக்ரமிடம்.

மிருதுளா மருத்துவ ஓய்வில் இருப்பவர். அதிக ரத்த அழுத்தம் இருப்பதால் அதற்கான மருத்துவம் அவருக்கு பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.

இந்த நேரத்தில் ஐந்து வருடங்களாய் உடனிருந்த தன் பிள்ளை போன்றவனான விஷ்வாவின் மறைவு இன்னுமே அவரை அழுத்தும் என புரிய, தன் துக்கத்தை விழுங்கி அன்னையைக் கண்டான் விக்ரம்.

"தூங்கலையா?" என கேட்டு அவரருகே விக்ரம் அமர,

"அந்த மினிஸ்டர் பையன் இப்ப தான் வந்துட்டு போறான் விக்கி!" என்றார் ஸ்ரீனிவாசன்.

"ஓஹ்!" என்றவன்,

"இத்தனை மணிக்கா?" என நேரத்தைப் பார்க்க,

"நீ பாக்கற வேலை அப்படி" என கோபமாய் கூறினார் மிருதுளா.

"ப்ச்! இப்ப இந்த பேச்சு தேவையா?" என்றவனுக்கு உள்ளுக்குள் அத்தனை அழுத்தம். எங்கேயாவது வெடித்து சிதற வேண்டுமாய் ஒரு கனல்.

"விஷ்வா!" என சொல்லிக் கொண்டவன்,

போய் தூங்குங்க!" என எழ,

"ரொம்ப நேரம் முழிச்சுட்டு இருக்க நீ. முதல்ல வா!" என அழைத்தார் ஸ்ரீனிவாசன் மனைவியை.

"நீங்க விக்கி கூட தூங்குங்க. இந்த பொண்ணு என் கூட...." என சொல்ல வந்த அன்னையை தடுத்த விக்ரம்,

"ம்மா! யார் என்னனு தெரியாத...." என சொல்ல வந்தவன்,

"பேசாம போய் தூங்குங்க ம்மா. வேற ரூம் இல்ல?" என அத்தனை அதட்டல்.

"விக்கி!" என அன்னை அழைக்க,

"ப்ச்! கெஸ்ட் ரூம் குடுங்க. அவ்வளவு தான்!" என சொல்லியவன், தானே சென்று அந்த அறை கதவை திறந்து வைத்துவிட்டு,

"நீங்க போறிங்களா இல்லையா?" என கேட்க, அந்த பெண்ணைப் பார்த்துவிட்டு கணவனுடன் சென்றுவிட்டார் மிருதுளா.

"நீ என்ன பண்ண போற? எங்க போக போற? முடிவு பண்ணிட்டியா?" என அவர்கள் சென்றதும் விக்ரம் கேட்க, விழித்தாள் அவள்.

"லுக்! உன்னை கொன்னுட்டா என்னனு வருது. பைத்தியக்காரன் உனக்காக போய் உயிரை விட்டான் பாரு!" என கை முஷ்டிகளை இறுக்கி, அவன் தன்னைக் கட்டிப்படுத்த,

"எனக்கு அவங்களை தெரி...." என சொல்ல வந்தவளை பேச விடவில்லை விக்ரம்.

"நீ பேசி நான் கேட்குற நிலமைல இல்ல. கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தலை இல்ல உனக்கு? உன்னால உன்னை காதலிச்ச பாவத்துக்கு ஒருத்தன் செத்துருக்கான். நடு ஹால்ல இருந்து தூங்குற? உனக்கு தூக்கம் கூட வருதா?"

"நீங்க தப்பா பேசுறீங்க. இன்னைக்கு மண்டபத்துல..." என அவள் பேச முயற்சிக்க,

"பேசாத! கொன்னுட போறேன்!" என்றவன்,

"ஹ்ம்! வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க மேடை ஏறினவ தானே! செத்தவன் தான் பைத்தியம். யாருமில்லாத ஒருத்தன் அனாதையா வளந்து தனக்குன்னு ஒரு குடும்பம்னு கனவு கண்டு இப்படி காத்தோட கரைஞ்சு போனான்ல. அவன் தான் பைத்தியம்!" என சொல்லி அவன் பார்த்த அந்த அருவருப்பான என்ற பார்வையில் இங்கே உடலெல்லாம் கூச, அவன் கொடுத்த பட்டத்தில் அசைவற்று நின்றிருந்தாள் துகிரா.

"டேய்!" என்ற சத்தத்தில் இருவரும் பார்க்க, மிருதுளா அவன் பேசியதை கேட்டபடி வந்திருந்தார்.

தொடரும்..
 

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
247
106
43
Tamilnadu
அப்போ விஷ்வா லவ் பண்ணது இனியாவை. விக்ரம் பொண்ணை மாத்தி தூக்கிட்டானா 😓
 
  • Haha
Reactions: Rampriya and kkp2

Rampriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 13, 2022
6
1
3
Otteri, Chennai
அருமையான பதிவு 🤩 🤩 விக்ரம்....பெண்ணை மாற்றி தூக்கிட்டு ஓவரா பேசற டா 😧😧😧