• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராக்கதனின் கண்மணி! 3

kkp2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
36
27
18
Tamil nadu
அத்தியாயம் 3

"இப்ப என்ன உனக்கு? இவளும் அவன் கூட சேர்ந்து சாகனுமா?" என மிருதுளா கேட்க, விக்ரம் பேசவில்லை.

"அப்படித்தான்! அதான் அமைதியாகிட்ட இல்ல?" என கோபமாய் கேட்டவர்,

"அவன் கூடவே இவளும் சேர்ந்து செத்திருந்தா புனித காதல்னு பட்டம் குடுத்து கொண்டாடி இருப்பிங்க. இப்போ அவன் செத்து இவ உயிரோட இருக்குறது உனக்கு பொறுக்கல இல்ல?" என்றார் இன்னும் கோபமாய்.

"ம்மா! நான் என்ன சொல்றேன் நீங்க என்ன பேசுறீங்க? இப்ப விஷ்வா இல்ல. அது தான உண்மை. இவளை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திங்க?" என்றான் குறையாத கோபமாய்.

"வேற என்ன பண்ண சொல்ற? அவ சூழ்நிலை என்னனு உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. போனவன் போய்ட்டான். அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை அவ வீட்டுல பார்த்து வச்சதையும் கெடுத்து கூட்டிட்டு வந்துட்ட. இனி என்ன பண்ணுவா அவ?" என்றார் மிருதுளா.

"அதை அவ வீட்டுல பார்த்துக்கட்டும். நமக்கு என்ன தலைவிதியா?"

"அப்போ கூட்டிட்டு வந்த நீ தான் நடந்ததை சொல்லி கொண்டும் விடணும்!"

"நோ சான்ஸ்! என்னம்மா விளையாடுறீங்களா? அவ பண்ணின பாவத்துக்கு தான் இப்படி தங்க இடமில்லாம நிக்குறா. இதுல இவ வீட்டுல போய் நான் என் விஷ்வா இறந்த கதையை சொல்லி உங்க பொண்ணை நீங்களே வச்சுக்கோங்கனு சேர்த்து வச்சுட்டு வரணுமா? நெவர்!" என அதே கோபத்தோடு விக்ரம் சொல்ல,

"விக்ரம்! நீ பேசுறது எந்த விதத்துல சரி? அந்த பொண்ணு இப்போ..." என மிருதுளா பேச வர,

"கொஞ்சம் ரெண்டு பேரும் சண்டையை நிறுத்துறிங்களா?" என அதுவரை பார்த்து நின்ற ஸ்ரீனிவாசன் தான் அதட்டல் குரலில் அழைக்க, அனைவருமே அமைதியாகிவிட்டனர்.

"அந்த பொண்ணையும் கூட வச்சுட்டே என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? அவனுக்கு தான் அறிவில்லைனா உனக்கு என்னாச்சு மிரு?" என ஸ்ரீனிவாசன் கேட்க, அப்போது தான் தன் தவறையும் உணர்ந்தார் மிருதுளா.

"ம்மா! நீ போய் அங்க தூங்கு. யாரும் எதுவும் பேச மாட்டாங்க. எதுவா இருந்தாலும் காலைல பார்த்துக்கலாம்!" என ஸ்ரீனிவாசன் சொல்லவும் தலையசைத்து சென்றவள் கால்கள் எல்லாம் பின்னின. மயக்கம் வரும் போல இருந்தது. பசி மயக்கம். விடிந்தது முதல் இப்பொழுது வரை எதுவும் சாப்பிடாதவளுக்கு அழவோ உண்மையை சொல்லி போராடவோ கூட தெம்பில்லை.

"விக்கி! நடந்தது நடக்குறது தெரியாம என்ன பேச்சு பேசுற? மொபைலை எடுத்துட்டு போக வந்து ஷாக் ஆகி நிக்கிறோம் நம்ம மகனா இப்படி பேசினதுன்னு அதிர்ச்சில!" என ஸ்ரீனிவாசன் சொல்ல, இன்னும் கோபமாய் நின்றவன் மறுப்பேதும் கூறவில்லை.

பேசிய எதுவும் தவறில்லை என்பது தான் அவனது எண்ணம்.

"போ! நல்லா தூங்கி எழுந்தா எல்லாம் சரியாகும். போனவன் போனது தான். அதை மாத்த முடியாது!" என ஸ்ரீனிவாசன் கண்டிக்க,

"இன்னொன்னு நல்லா தெரிஞ்சிக்கோ விக்கி! விஷ்வா செஞ்சது கோழைத்தனம். நிஜமா எனக்கு அவன் மேல இப்ப அவ்வளவு கோபம் இருக்கு. எதிர்த்து நின்னு வாழ்க்கைல போராடி ஜெயிக்க முடியாதவன் தான் தற்கொலையை தேர்ந்தெடுப்பான்." என்ற மிருதுளா,

"அதுக்கு வாழ்ந்துட்டு போய்டலாம்னு ஒரு நிமிஷம் அவன் யோசிச்சிருக்கலாம்!" என்று சொல்லி சென்றுவிட்டார்.

விக்ரம் எண்ணமும் அது தான். தன் மேல் உள்ள காதல் ஒருத்தியை பாதித்திருந்தால் அவளால் இன்னொருவனை திருமணம் செய்ய மனம் வருமா? அப்படி சென்றவளுக்காக உயிரை மாய்த்துக் கொள்வதா என தான் அவனது கோபமும்.

வேகமாய் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டவன் காலையில் அவளை வீட்டில் இருந்து அனுப்பிவிட வேண்டும் என மீண்டுமாய் நினைத்துக் கொண்டான்.

மொபைலை கையில் எடுத்தவன் தன் நண்பர்களுக்கு விஷ்வா இறந்த செய்தியை தகவலாய் அனுப்பிட, எப்படி ஏன் எதற்கு என தொடர் கேள்விகள் கூடவே அழைப்புகள் வேறு மற்ற நண்பர்களிடம் இருந்து.

எதையும் எடுக்கவில்லை. சுருக்கமாய் காரணத்தை நண்பர்கள் இருக்கும் குழுவில் அனுப்பி வைத்தவன் எண்ணம் விஷ்வாவிடம் தான் இருந்தது.

விக்ரமை விட படிப்பில் சிறந்தவன். திறமையானவன். ஐடியில் நல்ல பணியில் இருந்தவன். நண்பர்களாகி கல்லூரி முடித்து தங்க வேறு இடம் தேடிய போது தான் தன்னுடன் அவனை அழைத்துக் கொண்டான் விக்ரம் தன் வீட்டிற்கு.

முதலில் வரவே மாட்டேன் என்று தான் விஷ்வா கூறினான்.

"அம்மா கூப்பிட்டாலும் வர மாட்டியா விஷ்வா?" என மிருதுளாவின் ஒற்றை வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து உடனே வந்துவிட்டான்.

மூன்று வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை விரும்புவதாய் வந்து விக்ரமிடம் அவன் சொல்லும் பொழுதே,

"போச்சு! நீயுமா டா? நல்லா தானே இருந்த?" என கிண்டல் செய்திருந்தான் விக்ரம்.

அடுத்தடுத்து என கல்லூரி முடித்த இரண்டு வருடங்களிலேயே நல்ல நிலைக்கு வந்திருந்தான் விஷ்வா.

"ரொம்ப பொறுப்பான பையன். அம்மா அப்பா இல்லைனாலும் எவ்வளவு பொறுப்பா இருக்கான். கத்துக்கோ விக்கி!" என அன்னை கூட அடிக்கடி சொல்வதுண்டு.

"அவங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்க போறாங்களாம் விக்கி! நான் அவங்க வீட்டுல பேசட்டுமா?" என ஒரு வருடம் முன்பு ஒரு நாள் வந்து கேட்டான்.

"இப்பவே என்ன டா கல்யாணத்துக்கு அவசரம்?" என்றது விக்ரம் தான்.

"ஆனா அவ வீட்டுல அவசரப்படுத்துறாங்களே!" என்ற விஷ்வாவும் முடிந்தளவு தன் காதலியை தான் சமாளிக்க கூறினான் முதலில்.

அடுத்து ஆறு மாதங்களில் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாக கூறி அவள் அழுததாய் சொல்லிய விஷ்வா, "நான் அவங்க வீட்டுல பேச தான் போறேன் டா!" என்றான் விக்ரமிடம்.

"அவசரப்படாத விஷ்வா. முதல்ல அந்த பொண்ணை அவங்க வீட்டுல பேச சொல்லு. லவ் பண்றதை சொல்ல சொல்லு. அடுத்து அவங்க சம்மதம் சொல்லட்டும் நீ தனியா போக வேண்டாம். அம்மா அப்பா எல்லாருமா போகலாம்!" என்றான் விக்ரம்.

விக்ரம் நினைத்தது ஒன்று தான். விஷ்வா சென்று பெண் கேட்டால் யாருமில்லை என எதுவும் அவனை பேசிக் காட்டி விடுவார்களே தாங்க மாட்டானே என்று தான்.

நடந்ததுவும் அது தான். அவள் வீட்டில் சொல்லவுமே அனாதையையா காதலிக்குற என சொல்லி தான் அவளை வருத்தி இருந்தனர். வீட்டில் அடைத்து வைத்தனர். விஷ்வாவை அவளால் பார்க்க முடியாத சூழலை உருவாக்கினர்.

அப்படியும் கூட வீட்டிற்கு தெரியாமல் அலைபேசியில் அவனுடன் பேசிக் கொண்டு தான் இருந்தாள்.

திடீரென திருமணம் என சொல்லவும் அதுவும் அடுத்த நாள் காலையே திருமணம் என சொல்லவும் உடனே விஷ்வாவிற்கு அழைத்து சொல்லி இருந்தாள்.

அவளுக்குமே தாமதமாய் தான் தெரிந்தது இந்த திருமண பேச்சு வார்த்தைகள் ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்து மண்டபம், பத்திரிக்கைகள் என சிறப்பாய் தான் ஏற்பாடு செய்திருக்கின்றனர் என்று.

அன்று இரவு முழுக்க அவ்வளவு புலம்பினான் விஷ்வா விக்ரமிடம்.

"வா டா பொண்ணை தூக்கிட்டு வருவோம்!" என சொல்லியதற்கும் கூட,

"அங்க என்னவோ பிரச்சனை போலடா. காலைல கல்யாணம்னு அழுதவ அடுத்து போன் பண்ணவே இல்லை. போன் பண்ணினாலும் அவளுக்கு போகல" என சொல்லி அழ,

"என் ஆளுங்களை வச்சு பார்த்துப்போம். நீ கவலைப்படாத!" என கூறி இருந்தான் விக்ரம்.

"இனியா பாவம் டா. அவளுக்கு அவ்வளவு விவரம் எல்லாம் தெரியாது. நான் தான் காதல் அது இதுன்னு அவ மனசை குழப்பி இப்படி அவ நிலைமையை கொண்டு வந்துட்டேன்!" என வேறு புலம்பல் நிற்கவே இல்லை விஷ்வாவிடம்.

அடுத்து தான் காலை விஷ்வாவிடம் சொல்லிக் கொள்ளாமல் விக்ரம் அந்த மாப்பிள்ளையை கடத்தியது, மண்டபதிற்கு சென்றது, பெண்ணை அழைத்து வந்தது என அனைத்தும் நிகழ்ந்தது.

இப்பொழுதும் நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. நேற்று இவ்வளவு நேரம் தன்னுடன் இருந்தவன். இன்று இந்த நேரம் உலகிலேயே இல்லை. காரணம் காதலும் பெண்ணும். இப்படி தான் தோன்றியது விக்ரமிற்கு.

இப்படி அவன் மறைவிற்கு காரணமானவளுக்கு வேறு வீட்டில் இடம் கொடுத்து வைத்திருப்பது இன்னும் தான் கோபத்தை கொடுத்தது.

விக்ரம் தனியாய் பணம் இன்ட்ரெஸ்ட் கொடுக்கும் தொழிலில் இருக்கிறான். அதுவும் பெரிய பெரிய நிறுவனங்கள், சினிமாத்துறை என பெரிய இடங்களில்.

கூடவே படங்கள் தயாரிக்கும் நிறுவனமும் கூட. அதில் எல்லாம் சுத்தமாய் விருப்பம் இல்லை மிருதுளா ஸ்ரீனிவாசனுக்கு.

"நமக்கென்னனு நானும் ஐடில போய் உக்காந்துட்டா எல்லாம் சரியாகிடுமா?" என பேசி தன் முடிவில் இருந்து மாறாமல் தனக்கான இடத்தை தானே தேர்வு செய்து தானே தான் அதில் நிலைத்து நிற்க பாடுபட்டான்.

ஒவ்வொன்றாய் நினைத்து அறையில் அலைபேசியை பார்த்து படுத்திருந்த விக்ரம் உறக்கம் கண்களை தழுவவும் தண்ணீரை எடுக்க, அது காலியாய் இருந்தது ஜக்கில்.

சலிப்போடு எழுந்து பாட்டிலை எடுத்துக் கொண்டு டைனிங் டேபிளில் பார்க்க, அங்கும் தண்ணீர் இல்லை என்றதும் சமையலறை சென்றான்.

விளக்கினை போடவும் பிரிட்ஜின் பின்னே பாதி ஒளிந்திருந்தவளைக் கண்டு அவனுமே முதலில் திட்டுக்கிட்டான் யாரோ என்று.

அவள் தான் என்றதும் வேக வேகமாய் அவன் அவளை நெருங்க, "சாரி சாரி ப்ளீஸ் ப்ளீஸ்!" என கையில் இருந்த தண்ணீருடன் அவன் முகம் பார்க்காமல் கைகளை தூக்கி கும்பிட்டாள் துகிரா.

அவன் படிகளில் இறங்கும் போதே பார்த்துவிட்டவள் அவன் சென்றதும் தான் ஓடி விடலாம் என நினைத்து தான் ஒளிந்திருந்தாள்.

"நேத்து நைட்டுக்கு அப்புறம் எதுவுமே சாப்பிடல. ரொம்ப பசிக்குது. கையெல்லாம்.." என கைகள் நடுங்க தான் அதையும் கூறினாள்.

"சத்தியமா சாப்பிட தான் வந்தேன்!" என அவள் சொல்ல,

"யாருக்கு தெரியும். உண்மையை சொல்ல என்ன அரிச்சந்திரன் பேமிலியா? இதே கதையை என் அம்மாகிட்ட சொல்லு நம்புவாங்க. உன்னை பார்க்க பார்க்க அப்படி வருது எனக்கு. இன்னொரு முறை என் கண்ணு முன்னாடி வந்துடாத" என்றவன் தண்ணீரை எடுத்துக் கொண்டு,

"காலைல எங்கயாவது போய் தொலைஞ்சுடு!" என்று சொல்லி செல்ல, செல்பவன் மேல் அத்தனை கோபம். கூடவே பேசவே முடியாத பசி நிலையில் தன்னை நினைத்து தனக்கே சுயபட்சாதாபம் என நின்றவள் இவர்களிடம் உண்மையை சொல்லவாவது தைரியமும் தெம்பும் வேண்டுமே என சாப்பிட எதாவது கிடைக்குமா என தேடி பிரேட்டை கண்டுவிட்டவள் அதை தண்ணீரோடு சேர்த்து சாப்பிட்டு அதே அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.

தொடரும்..
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,340
556
113
Tirupur
ஆக... ஆள் மாத்தி தூக்கிருக்கார் தலைவர். அப்படித்தானா?
 
  • Haha
Reactions: Rampriya and kkp2

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
247
106
43
Tamilnadu
அடேய் விக்ரம் உண்மை தெரிஞ்சால் உன் ரியாக்ஷன் என்னனு பார்க்க வெய்ட்டிங்
 
  • Haha
Reactions: Rampriya and kkp2