துளி துளியாய் துரோகம் 27
வெண்பாவை பழைய நினைவுகள் அன்றிரவு தனக்குள் உள்ளிழுத்துக் கொண்டன. உறக்கமும் அல்லாமல் விழிப்பும் அல்லாத நிலை அவளை பாடாய்ப்படுத்தியது.
சுந்தரி தன் மீது ஆத்திரத்துடன் அமிலத்தை வீசிய காட்சி மனதில் தோன்ற படக்கென கண் திறந்தாள். தான் இப்போது இனியாவாகச் சிந்து பைரவி வீட்டில் இருப்பது நினைவுக்கு வந்தது.
தான் பட்ட துன்பங்கள் நினைக்கையில் எப்படி இதைக் கடந்து வந்தோம்? எனத் தன்னையே கேட்டு கொண்டாள்.
நீரில் மூழ்குபவனுக்கு நீச்சல் தெரியவில்லை என்றாலும் தத்தளித்துக் கரைசேர முயல்வான். தானும் அப்படிதான் தப்பித்தோம் என எண்ணினாள். தனக்கு உறுதுணையாக இருந்தது துஷ்யந்த் மற்றும் அஸ்வத்.
ஏசிட் வீச்சுக்கு அடுத்து முதல் கட்டமாய் சுந்தரி மற்றும் வர்ஷாவை எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் மனதாலும் உடலாலும் சோர்வடைய வைக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். மனம் சோர்வடைந்து குழம்பி இருக்கையில் எந்தவொரு முடிவையும் எட்ட இயலாது.
இப்படியான திட்டங்களுக்கு துஷ்யந்த் மற்றும் அஸ்வத் இல்லையேல் நிச்சயமாக நினைத்ததை முடித்திருக்க முடியாது.
இனியாவாக மோகன் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டது அஸ்வத் தான். வர்ஷாவை முடிந்தவரை மனதளவில் குழப்பிச் சோர்வடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவே சேர்ந்தாள்.
பல பெண்கள் வாழ்க்கையைச் சீரழித்த சுந்தரியின் மகள் என்பதால் வர்ஷா மேல் சொல்ல முடியாத வெறுப்பு உண்டாயிற்று. அது மட்டுமின்றி அவளின் பணத் திமிர், எவரையும் மதிக்காமல் நடந்து கொள்வது போன்ற பழக்கவழக்கமும் ஏற்புடையதாக இல்லை.
சிந்து மற்றும் பைரவி உடன் வீட்டில் வசித்த காரணம் “உன் நட்புகள் இனி எனக்கானவர்கள்” என வர்ஷாவை மட்டம் தட்டத்தான்.
வெண்பா இனியாவாக மாற காரணம் சுந்தரி மீண்டும் வெண்பாவை தாக்க முற்படலாம். அது மட்டும் அல்லாமல் வெண்பாவின் தந்தைக்கு ஏதேனும் தொந்தரவு கொடுக்கலாம். வெண்பா என்றொரு பெண் இல்லை எனில் சுந்தரி வெண்பாவை பற்றிச் சிந்திக்கக் கூட தேவையிராது.
சுந்தரி புற்றுநோயால் மருத்துவமனையில் இருந்தாலும் எதாவது வில்லத்தனம் செய்வார் என எதிர்பார்த்தனர். எதிரியின் பலம் பலகீனம் இரண்டும் அறிந்து செயல்பட்டனர். நோயின் தீவிரம் சுந்தரியின் நரிதனத்தை மீண்டும் தலையெடுக்காமல் தடுத்தது.
இனியா அன்றொரு நாள் இரவு தன் பழைய நினைவுகளில் மூழ்கி மீண்டவள் அடுத்த செய்ய வேண்டியவற்றை கவனமாகத் திட்டமிட்டாள்.
அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு சுந்தரியைக் காண துஷ்யந்த் மற்றும் இனியா மருத்துவமனைக்குச் சென்றனர்.
கமலா கண்ணாடி சோதனை குழாயைக் காண்பிக்க .. அதை வாங்கினாள் இனியா. அதனுள் மங்கிய வெள்ளை நிற திரவம் இருந்தது. பாதுகாப்பான முறையில் மூடியிருந்தது.
இனியா மற்றும் துஷ்யந்த் சுந்தரி படுத்திருந்த அறைக்குச் சென்றனர். சுந்தரி இருவரையும் கண்டார்.
துஷ்யந்தை கண்டதும் இதயமே ஒரு நொடி துடிக்க மறந்தது. வர்ஷா சொன்னது உண்மை எனப் புரிந்தது.
இனியா மற்றும் துஷ்யந்த் சுந்தரியை மூன்று வருடங்கள் கழித்துச் சந்திக்கின்றனர். கடைசியாக விடுதியில் சண்டையிட்டது இருவர் மனதிலும் நிழலாடியது.
“எப்படி இருக்கிங்க அத்தை? சாரி டு டிஸ்டர்ப் யூ” எனப் பேச்சைத் தொடங்கினான் துஷ்யந்த்.
சுந்தரி பதிலளிக்காமல் அதிர்ச்சியாக விரிந்த கண்களுடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஒரு பிசினஸ் டீல் பேசத்தான் வந்திருக்கேன்” என்றவன் “இவங்களை அறிமுகப் படுத்த மறந்துட்டேன் பாருங்க .. இவங்க வெண்பா .. அன்னிக்கு ராத்திரி இவ முகத்துல தான் ஏசிட் வீசினிங்க” என்றதும்
சுந்தரிக்கு அதிர்வலைகள் அதிகமாக இதயத் துடிப்பு பன்மடங்கு அதிகரித்தது .
இனியா கையிலிருந்த கண்ணாடி சோதனை குழாயை அவரிடம் காட்டினான். “ இது கருமுட்டை ஒவ்வொரு துளியும் எத்தனை லட்சம்? நீங்களே ரேட் சொல்லுங்க? உங்களுக்குத்தான் இதில் அனுபவம் அதிகம். கோடி கணக்குல பெண்களுடைய கருமுட்டைகளை முறைகேடா எடுத்து விற்பனை செய்தவங்க நீங்க” என்றான்.
சுந்தரி எதுவும் பேசவில்லை. கண்களில் ஒருவித அச்சம் தோன்றி மறைந்தது. உதடுகள் துடித்தன.
“இந்த கருமுட்டை நீங்க எதிர்பார்க்கும் படி இளம் பெண்ணுடையதுதான். அவ பெயர் வர்ஷா” என முதல் முறையாகப் பேசினாள் இனியா.
வார்த்தை காதில் விழுந்த நொடி சுந்தரி கண்ணீர் துளிர்விட. குரோதத்துடன் இருவரையும் பார்த்தார்.
மெதுவாக குரல் நடுக்கத்துடன் சுந்தரி “வர்ஷாக்கு எதுவுமே தெரியாது. எடுப்பார் கைப்பிள்ளை. இன்னமும் வர்ஷா அவளுடைய காதலுக்காகத்தான் உங்க ரெண்டு பேரையும் கொலை செய்ததா நினைச்சிட்டு இருக்கா. என்னுடைய இந்த இல்லீகல் பிசினஸ் பத்தி அவளுக்கு எதுவும் தெரியாது.”
“சின்ன வயசல இருந்து அவ கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். தற்செயலா நான் முக்கியமான பிசினஸ் டீல் பேசும் போது வர்ஷா வந்தா .. அவளுக்கு எதுவும்த் தெரியக் கூடாதுனு அவ கேட்டதை விட நாலு மடங்கு வாங்கிக் கொடுத்திடுவேன். அது எதுவாக இருந்தாலும் சிந்து பைரவி உட்பட”
“என் தொழிலை அவத் தொடரணும் நினைச்சேன். ஆனா அவகிட்ட அதுக்கான முதிர்ச்சி இல்ல. சிந்து பைரவி போர்வைக்குள்ள வர்ஷா ஒளிந்து இருக்கா. அவளுக்கு சுயமா எதுவும் சிந்திக்கத் தெரியாது. சிந்து பைரவியோட முழுநேர வேலையே வர்ஷாவோட குறை வெளியே தெரியாம காப்பாத்தணும். வர்ஷாவோட ஒவ்வொரு சொல்லும் சிந்துவின் எழுத்து. காதலைக் கூட சரியா செய்யத் தெரியாத பொண்ணு. சுயமா முடிவெடுக்கத் தெரியாது.”
“நான் செய்யும் சட்டவிரோத செயல் சிந்துவுக்குக் கொஞ்சத் தெரியும் நினைக்கிறேன். ஆனா அவ வெளியில் சொல்ல மாட்டா. வெண்பா உன் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும். வர்ஷாக்கு பதில் நீ எனக்கு மகளா பிறந்திருக்கலாம். சிந்து கூட புத்திசாலி ஆனா வர்ஷா?? எதுக்கும் லாயக்கு இல்ல நீ மட்டும் நேர்மை நியாயம்னு இல்லாமல் என் பக்கம் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்” பல வருடமாக மனதைத் தைத்த முள்ளை வெளி எடுத்தது போன்றதொரு உணர்வு
“என் மகள் வர்ஷா இப்படி ஆக நான்தான் முழுக் காரணம். அவளைத் தனியா இயங்க விடலை. கூர்க் எஸ்டேட் கூட வர்ஷா போகிறதுக்கு முன்னமே மோகன் விலை பேசி எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டார். அவ சந்தோஷத்துக்காக நாங்க எதையும் சொல்லலை. ” இவற்றைச் சொல்லி முடித்தபோது சுந்தரிக்கு மூச்சு முட்டியது. அதற்கு மேல் அவரால் அமர முடியவில்லை. தலைசாய்ந்து படுத்துக் கொண்டார்.
துஷ்யந்த் மற்றும் வெண்பா அசிரத்தையாகக் கவனித்தனர். சுந்தரி மேலிருந்த வெறுப்பு அவர் பேச்சைக் கேட்க மறுத்தது. சுந்தரி சொன்னது போல சிந்து பைரவி இல்லாமல் வர்ஷா தனியே இருந்தது இல்லை என துஷ்யந்த் நினைத்தான்.
சுந்தரியின் பேச்சைக் கேட்ட வெண்பா “உங்களுக்குக் குற்ற உணர்ச்சியாவே இல்லையா? பல பெண்கள் உங்க பேராசையினால் குழந்தை பெத்துக்க முடியாமல் போயிருப்பாங்க??”
“அதுக்குத் தான் பணம் கொடுத்தது” குரலில் துளி கூட குற்ற உணர்வு இல்லை.
“இப்பவாவது உண்மையை ஒத்து கிட்டு நீங்க போலீஸ்லச் சரண் அடையுங்க” வெண்பா கூறவும்
சீறும் பாம்பைப் போல முறைத்த சுந்தரி “ஆனா உன்னை பாராட்டியே ஆகணும் வெண்பா. யாராலையும் என்னை எதுவும் செய்ய முடியாதுனு நினைச்சேன். உன்னுடைய ஒரே அடி என்னை இப்படி ஆக்கிடுச்சு” இதைச் சொல்லுகையில் முகத்தில் அத்தனை வெறுப்பு.
சரணடைவது பற்றி சுந்தரி எதுவும் சொல்லவில்லை. ஆனால் வாழ்க்கையின் மீது நம்பிக்கை குறைந்திருந்தது.
இருவரும் சுந்தரியிடம் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பும் முன் “இது வர்ஷா கருமுட்டை இல்ல … சோப்பு தண்ணி” என்றனர். சுந்தரி முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
வெண்பா துஷ்யந்த் அறையைவிட்டு வெளியே வந்து லிப்டிக்குள்ப் புகுந்தனர். மறைவிடத்திலிருந்து வெளி வந்தாள் வர்ஷா.
பிரமை பிடித்தது போல நின்றாள் “வர்ஷா எதுக்கும் லாயக்கில்ல. அவளுக்குப் பதில் வெண்பா நீ என் மகளா பிறந்திருக்கலாம்.” எனச் சுந்தரி பேசியது வலித்தது.
தன் அன்னையைக் காண மருத்துவமனைக்கு வந்திருந்தாள். அறைக் கதவு முழுமையாக மூடியிருக்கவில்லை. இனியா மற்றும் துஷ்யந்த் அறையில் இருப்பதைக் கண்டவுடன் வர்ஷா துணுக்குற்றாள். அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்தாள்.
அவர்கள் பேச்சைக் கேட்டு நிலைகுலைந்து போனாள். சுந்தரியைச் சந்திக்காமல் அப்படியே திரும்பினாள். அன்னை மேல் வைத்திருந்த பிம்பம் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது. அதையும் விட “வர்ஷா எதற்கும் லாயக்கில்லை” என்னும் வாசகம் மீண்டும் மீண்டும் அவளுள் ரீங்காரமிட்டது.
தன் அன்னைக்காக மனநலம் சரியில்லாத துஷ்யந்தை திருமணம் செய்ய முடிவெடுத்தவள். அன்னைக்காக தன் வாழ்க்கையைப் பணயம் வைக்க முயன்றவளுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தன் மீது பொய்யான அன்பு பொழிந்துள்ளாரா? என நினைக்க வேதனையாக இருந்தது.
தன் அன்னை முறைகேடான வியாபாரங்கள் செய்துள்ளார் என நினைக்க அருவருப்பாக இருந்தது. சிந்துவின் பெற்றோரைக் கொலை செய்துள்ளார். வெண்பா துஷ்யந்து மீது தாக்குதல் இப்படி பல கொடுமைகள் செய்தவர் தன்னை விமர்சித்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இத்தனை கொடுமைகள் செய்தால் வீரமா? இவற்றைச் செய்யாத தான் கோழையா? இதுதான் அவரின் வாழ்க்கை கோட்பாடா? எனப் பல கேள்விகள் அவளுள்.
தனிமை தேவைப்பட்டது பங்களாவிற்கு வந்தாள். தாயின் சொற்களை ஏற்க முடியவில்லை. தந்தை இளம் மனைவியே கதி என்று சென்றுவிட்டார். காதலும் கை கூடவில்லை. நட்புகளான சிந்து பைரவியும் பிரிந்து போய்விட்டனர். இவ்வுலகில் தான் அனாதை ஆக்கப்பட்டோம் அதற்கு காரணம் சுயநலம் மிக்க தாயின் செயல்பாடுகள் என்றே நினைத்தாள். தாயின் சுயநலத்திற்கு தன் வாழ்க்கை பலியாகிவிட்டது.
அன்றொரு நாள் வர்ஷா வேண்டுமென்றே சிந்துவிடம் சண்டைக்குப் போனபோது “நீ இனியா கழுத்தை பிடிச்சி கொலை செய்ய முயற்சி செய்ததா போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திடுவேன் வர்ஷா” என மோகன் லேப்டாப்பிலிருந்து எடுத்த வீடியோவை காட்டி மிரட்டினாள் சிந்து.
சிந்து இப்படி பேசக் கூடியவள் இல்லை. ஆனால் தன்னால்தான் அவள் இப்படிப் பேசுகிறாள் எனச் சிந்தித்தவளுக்கு தலை சுற்றியது.
ஒரு முடிவோடு இரவு மீண்டும் தன் அன்னையைக் காண மருத்துவமனைக்குச் சென்றாள். சுந்தரி தங்கை உணவு அருந்தச் சென்றிருந்தார். யாருமற்று அந்த தளம் வெறிச்சோடி இருந்தது.
சுந்தரி “என்னடி இந்த நேரத்துல?” எனப் புருவத்தைச் சுருக்கி சந்தேகமாகக் கேட்டார்.
“நான் எதுக்கும் லாயக்கில்லாதவள் அப்படிதானே அம்மா” எனக் கேட்டவள் குரல் கம்மியது.
சுருக்கென்றது தான் பேசியது இவளுக்கு எப்படித் தெரிந்தது “அப்படியில்ல வர்ஷா” எனச் சமாளித்தார் சுந்தரி.
“என் காதலைப் பிரித்த வெண்பா உனக்கு முக்கியமாகிட்டா .. நான் நான் எதுக்கும் லாயக்கில்லாதவள் இல்லையா?” அடக்க முடியாத கோபத்தில் தொடர்ந்து பேச முடியாமல் உதடுகள் துடித்தன. கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
வர்ஷாவிற்கு என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை. எல்லை மீறிய கோபம் ஏமாற்றம். எல்லாமே வெறுமையாகிவிட்ட உணர்வு. கடவுளுக்கு இணையாக நம்பிக்கை வைத்த நபர் தன்னை இப்படி சொன்னதும் ஒரு நொடி என்ன செய்கிறோம் என்றேத் தெரியாமல் செய்தாள். சரி தவறு என்னும் கோட்டுபாடுகள் அங்கு மறைந்தன.
கோபத்துடன் வெளியே வந்தாள். கண்முன் ஓர் அறையில் இருந்த ஆபரேட்டிங் சிசர் (Operating Scissor) என்னும் கத்தரிக்கோலை எடுத்தாள். அன்னை அருகே சென்றவள் சுந்தரி கழுத்தில் சரக்கெனக் குத்தினாள். மலுக்கென ரத்தம் வெளியே வந்தது. சுந்தரி கண்கள் தெரித்து விழுந்துவிடும் போல அதிர்ச்சியில் அகன்று வெறித்தது. வர்ஷா மீண்டும் மீண்டும் கத்திரி கோல் கொண்டு சுந்தரி கழுத்தில் குத்தினாள்.
தன் தாய் என்று கூடப் பாராமல் பலமுறை குத்தினாள். எத்தனை பாசம் வைத்தாளோ அது அத்தனையும் இன்று வெறுப்பாகக் கோபமாக வன்மையாகவும் மாறியிருந்தது. வெள்ளை படுக்கை விரிப்பு முழுவதும் ரத்தமாகி அச்சுறுத்தியது. வர்ஷாவின் மேல் ரத்த துளிகள் தெரித்து. அவளைக் காணவே பயங்கரமாக இருந்தாள்.
சுந்தரி கண்கள் விட்டத்தை நிலைக்குத்திப் பார்த்தபடி அப்படியே நின்றன. சுந்தரி விண்ணுலகத்தை அடைந்தும் வர்ஷாவின் ஆத்திரம் தீரவில்லை பலமுறை உடலில் குத்தினாள்.
“வர்ஷா எதுக்கும் லாயக்கில்ல” என்னும் வாசகம் மீண்டும் மீண்டும் அசரீரியாக காதில் ஒளித்துக் கொண்டே இருந்தது. வர்ஷா காதுகளை மூடி “நோ” எனக் கிறீச்சிட்டாள். “நான் லாயக்கில்லாதவ இல்ல .. என்னால எல்லாம் செய்ய முடியும் முடியும் முடியும்” எனக் கத்தினாள்.
சத்தம் கேட்டு சுந்தரியின் தங்கை அங்கு வந்துப் பார்த்து திகைத்து சிலையாகிவிட்டார். உடனே மோகனுக்கு போன் செய்தார். அடுத்து வெண்பா துஷ்யந்து என அனைவருக்கும் போன் செய்தார். அலறியடித்த அனைவரும் வந்தனர்.
சிறிது நேரத்தில் காவல்துறை வந்தது வர்ஷா “கொலை செய்தது நான் தான் .. . கொலை செய்தது நான் தான்” என மீண்டும் மீண்டும் கத்தினாள். வர்ஷா அப்போதே கைது செய்யப்பட்டாள்.
மோகன் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி வர்ஷாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் வர்ஷா சொத்து பிரச்சனை காரணமாகக் கொலை செய்தது தான் தான் என நீதிபதியிடம் கூறினாள். அது வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவளுக்கு யாரையும் பிடிக்கவில்லை வெளியே இருப்பதை விட யாரையும் காணாமல் உள்ளே இருப்பது உத்தமம் என அப்படிக் கூறினாள். மேலும் யாரையும் இதில் இழுத்துவிடவும் அவள் விரும்பவில்லை.
மோகன் தரப்பு வழக்கறிஞர் வர்ஷா மனநலம் சரியில்லாதவள் என்னும் கோணத்தில் வழக்கை எடுத்துச் செல்ல முயன்றார். வர்ஷா அதற்கும் தான் சுயநினைவோடு தான் கொலை செய்தேன் என்றுவிட்டாள்.
வெண்பா அழுது அழுது கண்கள் சிவந்திருந்தன. “இப்படி நடக்க நான் ஆசைப்படலை துஷ்யந்த். சுந்தரி சிறையில் தண்டனை அனுபவிக்கணும். வர்ஷா திருந்தவேண்டும். இது ரெண்டும் நடக்கத்தான் நான் ஆசைப்பட்டேன். ஆனா வர்ஷா இப்படி அவசரப்பட்டு செய்திட்டா. ஒரு வகையில் எல்லாத்துக்கும் நானும் காரணம் ஆகிட்டேன்” என விம்மி விம்மி அழுதாள்.
“உன் மேல எந்த தப்பும் இல்லை வெண்பா. நீ மனசைப் போட்டு ரொம்ப குழப்பிக்காத … அவங்க ரெண்டு பேரும் திருந்தி வாழணும் தான் நாம ஆசைப்பட்டோம். வர்ஷா செய்த எதுக்கும் நீ பொறுப்பில்ல” என ஆறுதலாகப் பேசி சமாதானம் செய்தான்.
மோகன் மிகவும் துவண்டு போனார். சுந்தரியின் செயல்கள் அனைத்தும் அவர் அறிவார். எத்தனை முறை தடுத்துத் திருத்த முற்பட்டார். ஆனால் சுந்தரியின் திமிர் பேச்சுக்கு முன்னால் அனைத்தும் அடிபட்டுப் போனது. ஆனால் இப்படி ஒரு முடிவு எதிர்பார்க்கவில்லை. அதுவும் வர்ஷா இப்படிச் செய்தது அதிர்ச்சி அளித்தது.
அவருக்கு ஓய்வு கொடுத்து அஸ்வத் மற்றும் துஷ்யந்த் அனைத்து வேலைகளையும் செய்தனர்.
மோகனின் செல்வாக்கு மூலம் சுந்தரியின் இறுதிச் சடங்கில் வர்ஷா கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார். ஆனால் வர்ஷா வர மறுத்துவிட்டாள்.
சிந்து பைரவி கலங்கிப் போயினர். வர்ஷா எத்தனை கடிந்து கொண்டாலும் அவளுடன் இருந்திருக்க வேண்டும் என்று தங்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டனர்.
அது பைரவி விகாஸ் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த தருணம். சட்டென அனைத்தும் நின்று போனது. ஆனால் வெண்பாவும் துஷ்யந்தும் குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடக்கட்டும் என்றனர். விகாஸ் குடும்பம் இதனால் பாதிக்கபடக் கூடாது என அறிவுரைத்தனர். அதனால் பைரவி விகாஸ் திருமணம் குறிப்பிட்ட தேதியில் நடந்தது.
அஸ்வத் மற்றும் துஷ்யந்த் முழு பொறுப்பை ஏற்று. வர்ஷா வழக்கறிஞருடன் பேசுவது. வழக்கிற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் மேற்க் கொண்டனர். இது விஷயமாக அஸ்வத் இரண்டொரு முறை சிறையில் வர்ஷாவை சந்தித்தான்.
தான் எத்தனை நல்ல உறவை விட்டுவிட்டோம் என வர்ஷா உணர்ந்தாள். அஸ்வத் நினைத்தால் வர்ஷாவின் சொத்துகளை தன் வசமாக்கித் தீங்கிழைக்கலாம் ஆனால் அவனோ தன் தங்கையை மீட்பதில் அக்கறை செலுத்தினான். சுந்தரியால் அண்ணன் தங்கை பிரிந்தனர்.
“அண்ணா .. சாரி பார் எவரிதிங்” என்றாள் கண்கலங்க. அஸ்வத் ஒரு நொடி கலங்கிவிட்டான். வர்ஷா அவன் மேல் சாய்ந்து அழத் தொடங்கினாள். அவளுக்கு என்றும் தான் இருப்பதாகத் தைரியமூட்டினான்.
அஸ்வத் கவனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து சுந்தரி செயல்கள். வெண்பா மற்றும் துஷ்யந்த் பாதிக்கப்பட்டது போன்றவற்றைக் கூறினான்.
வெண்பாவின் துணிச்சல் வர்ஷாவை வியக்க வைத்தது. யார் என்றே தெரியாத பெண்களுக்காக வெண்பா சிக்கலில் மாட்டிக் கொண்டது. அவள் மேல் நல்ல எண்ணத்தை விதைத்தது. “வெண்பாவை நான் சந்திக்கணும்” என்றாள். அஸ்வத் ஏற்பாடு செய்வதாக வாக்களித்தான்.
அடுத்த சில நாட்களில் சிறையில் வெண்பா வர்ஷா சந்திப்பு நிகழ்ந்தது. வெண்பாவை கண்டதும் இப்போது வெறுப்பு கோபம் வன்மம் ஏற்படவில்லை மாறாக அவள் மேல் மதிப்பும் மரியாதையும் உண்டானது.
காலமும் நேரமும் தான் ஒருவரை நமக்கு நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் காட்டுகிறது என்பதை வர்ஷா உணர்ந்தாள். அரசியலில் ஒரு கூற்று உண்டு நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என. ஆனால் அது சாதாரண வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும்.
இத்தனை நாள் வில்லியாக நினைத்தவள் இன்று கதாநாயகியாகத் தெரிந்தாள். சுந்தரி மற்றும் வர்ஷா கண்களுக்கு என்றுமே வெண்பா ஏண்ட்டி ஹீரோயினாக திகழ்ந்தவள் ஆயிற்றே. இன்று வர்ஷா உண்மையை புரிந்து கொண்டாள்.
நம் கருத்துக்குச் செவி சாய்ப்பவர் நல்லவர். இல்லை எனில் தீயவர். இதுதான் நல்லவர் கெட்டவர் என்பவருக்கான இன்றைய இலக்கணம். வர்ஷாவும் இதைத் தானே பின்பற்றினாள்.
முதல் முறையாக முழுமனதுடன் வெண்பாவை பார்த்துப் புன்னகைத்தாள் வர்ஷா. ஆனால் வெண்பாவுக்குத் தான் குற்ற உணர்ச்சி மனதை குடைந்தது.
“நீ என் அம்மா வயித்துல பிறந்திருந்தா அம்மா நல்வழியைப் பின்பற்றி இருந்திருப்பாங்க. நான் எதுக்கும் தகுதியில்லாமல் போயிட்டேன்” என வர்ஷா சொன்னதும் வெண்பா அவளை அணைத்து அழுதுவிட்டாள். “அப்படிச் சொல்லாத வர்ஷா” என அவளைத் தேற்றினாள்.
வர்ஷாவிற்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை எனத் தீர்ப்பு வந்தது. அதை வர்ஷா முழுமனதோடு ஏற்றுக் கொண்டாள். மேல் முறையீடு வேண்டாம் என்ற முடிவெடுத்தாள். துறவியைப் போல சிறைக்குச் சென்றாள்.
மோகன் சுந்தரியின் கருத்தரிப்பு மையத்தை நிரந்தரமாக மூடிவிட்டார். சுந்தரியின் மருத்துவமனை கமலா எடுத்து நடத்தினார். மோகனின் செல்வாக்கும் பணமும் இதற்கு மேல் எதையும் தோண்டி துருவாமல் அப்படியே விட்டுவிட்டனர்.
சில மாதங்களுக்குப் பிறகு வெண்பா சட்ட வல்லுநர்கள் மூலம் தான் உயிரோடு இருப்பதாக சட்டப்படி அறிவிக்க விண்ணப்பித்தாள். ஒரு நாள் இரவு யாரோ இருவர் சண்டையிட்ட போது ஒருவன் அமிலத்தை மற்றொருவன் மேல் வீச அது அவள் முகத்தில்பட்டது. அப்படியே கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடி பட்டதில் நினைவு தவறிவிட்டது.
மருத்துவரான அஸ்வத் தற்செயலாக அவளைக் கண்டு காப்பாற்றினான். அவளுக்கு அம்னீஷியாவால் தான் யாரென்று மறந்து போனது. பின்பு பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தொடர் சிகிச்சையால் இப்போது குணமாகிவிட்டதாகக் கூறினாள்.
அஸ்வத் அவள் யாரென தெரியாததால் இனியா எனத் தான் பெயர் வைத்தேன் எனக் கூறி அவளுக்கு எடுத்த சிகிச்சைகள் பற்றிய தகவல்கள் மற்றும் கோப்புகளை சமர்ப்பித்தான்.
அவளுக்கு மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனால் வெளி உலகில் அவள் பழக வேண்டும் என்பதற்காக தன் தந்தையின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்த்தேன். முக்கிய அலுவல் வேலை எதையும் கொடுக்காமல் சாதாரண வேலை மட்டுமே செய்ய அனுமதித்தனர்.
இது அவள் நினைவை மீட்க பெரும் உதவியாக இருந்தது என்றான்.
இப்படிச் செய்ய வேண்டும் என வெண்பா மற்றும் அஸ்வத்தின் திட்டம். அதனால்தான் வெண்பா அப்பாவை காவல் நிலையத்திற்கு அனுப்பி மகளைக் காணவில்லை என்று சொல்லவைத்து பின்பு விபத்தில் இறந்தது தன் மகள் எனவும் சொல்ல வைத்தனர். பின்பு தந்தையைச் சென்னையைவிட்டு அனுப்பினாள்.
வெண்பா தந்தை விபத்தில் இறந்தது தன் மகள்தான் என அடித்துக் கூறியதால் டி.என்.ஏ சோதனை எடுக்கவில்லை. சட்டப்படி வெண்பா உயிரோடு இருக்கிறாள் என அறிவிக்கப்பட்டு அவளின் டெத் சர்டிபிகேட் ரத்து செய்யப்பட்டது.
மோகன் சிந்து மற்றும் பைரவி மூவருக்கும் இது பேரதிர்ச்சியாக இருந்தது. அஸ்வத்தும் துஷ்யந்தும் புரிய வைத்தனர். தங்கள் சொற்படி விசாரணையில் பேச வைத்தனர். மீண்டும் மோகனின் செல்வாக்கும் பணமும் நன்றாக வேலை செய்தது. இல்லையேல் அவரின் தொழில் பாதிப்படையும்.
இனியா என்ற பெயரில் சான்றிதழ்களை மோகன் அலுவலகத்திலிருந்து வெண்பா அப்புற படுத்திவிட்டாள். ஆனால் பரத் மூலம் வர்ஷா கண்டுபிடிக்கச் சொன்னது யாருக்கும் தெரியாது. ஆனால் பரத் வர்ஷா தண்டனைப் பெற்றதை அறிந்ததும் அவள் கொடுத்த காகிதங்களை தீயிலிட்டான்.
இந்த செயல்முறை முழுவதுமாக முடிந்த பின்னர் துஷ்யந்த் வெண்பா திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
மணமேடையில் வெண்பா அழகிய பட்டுச் சேலை உடுத்தி மிதமான ஒப்பனையுடன் கண்ணை உறுத்தாத நகைகள் அணிந்திருந்தாள். அவள் அருகில் பட்டு வேட்டி சட்டையில் துஷ்யந்த் அமர்ந்திருந்தான். இருவரும் மணமக்களாக வீற்றிருந்தனர்.
”கெட்டி மேளம் கெட்டி மேளம்“ என்று குரல்கள் ஒலிக்க துஷ்யந்த் மங்கள தாலியை வெண்பா கழுத்தில் கட்டினான். அனைவரும் பூவும் அஷதையும் தூவி தங்கள் வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்தனர். பின்பு துஷ்யந்த் குங்குமத்தை தன்னவளின் நெற்றி வகிட்டிலும் தான் அணிவித்த தாலியிலும் வைத்தான்.
மெட்டி அணிவிப்பது என்று அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தது. இருவரும் தங்களின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து அனுபவித்தனர். வெண்பா வெட்க புன்னகையுடன் அவ்வப்பொழுது துஷ்யந்தை ரசித்தாள். துஷ்யந்த் “சைட் அடிக்காத பொண்டாட்டி எல்லாரும் பார்க்கிறாங்க” என்றான்.
வெண்பா தந்தை ஆனந்தக் கண்ணீருடன் மகிழ்ச்சியாக மணமக்களை வாழ்த்தினார். துஷ்யந்த் பெற்றோர் வெண்பாவை மகிழ்ச்சியுடன் தங்கள் குடும்பத்தின் புதிய நபராக வரவேற்றனர். எத்தனை எத்தனை இடர்கள் அனைத்தையும் கடந்து இன்று இந்த இடத்திற்கு இருவரும் வந்துள்ளனர்.
வெண்பா தந்தை அஸ்வத் தான் பார்த்த மாப்பிள்ளை என்று வெண்பாவிடம் சொல்ல வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. அதை அஸ்வத்தும் விரும்பவில்லை. அவர்களின் அழகிய நட்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால் அப்படியே விட்டுவிட்டனர்.
மோகன் கல்பனா பைரவி விகாஸ் தம்பதியராகத் திருமணத்தில் கலந்து கொண்டனர். அஸ்வத் மற்றும் அவன் தங்கை அஸ்வினி தங்கள் குடும்பத்துடன் திருமணத்திற்கு வந்திருந்தனர். சிந்து கலந்து கொண்டாள். உறவினர் நண்பர்கள் உடன் இனிதே திருமணம் நடந்தது.
துஷ்யந்த் வீட்டிற்கு மணமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு பாலும் பழமும் கொடுத்தனர். துஷ்யந்தின் அன்னைக்கு சொல்ல முடியா ஆனந்தம்.
திருமணத்தில் மோகன் “சிந்து என் பழைய பிரெண்ட் ஒருத்தனை கல்யாணத்துல பார்த்தேன். அவனுடைய மகனுக்கு பொண்ணு தேடிட்டு இருக்காங்க. பையனும் நல்ல வேளை பாக்க லட்சணமா இருக்கான். உனக்கு விருப்பம்னா மேற்படி பேசவா?” மோகன் கேட்டார்.
“உங்க விருப்பம் பெரியப்பா” என்றாள்.
“சரி என் கூட நீயும் வா .. அப்படியே பையனை பாரு. அவங்க துஷ்யந்த் அண்ணி பக்க சொந்தமாம்” என்றபடி முன்னே நடந்தார்.
வர்ஷாவிற்கு எப்படி எல்லாமோ திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார் மோகன். ஆனால் என்னவெல்லாம் நடந்துவிட்டது. சிந்துவின் திருமணம் உறுதி செய்யப்பட்டது.
தான் இப்போது திருமதி துஷ்யந்த் என நினைக்கையில் தித்திப்பாக உணர்ந்தாள். மெல்ல துஷ்யந்த் என்ற பெயரை நாணத்துடன் உச்சரித்தாள். இன்றுதான் முதல் முறைப் பெயரை உச்சரிப்பது போன்றதொரு சிலிர்ப்பு உண்டானது. வெண்பா துஷ்யந்த் வாழ்க்கை இனிதே துவங்கியது.
சுபம்