உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -6
அவன் சொன்னதைக் கேட்டு பார்த்தியும் சஹாவும் வாயைப் பிளந்து "என்னாது பொண்ணா?"
என்று காந்தனைப் பார்க்க அவன் ஒன்றும் தெரியாதவனைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து கண்ணடித்தான்.
அவர்கள் இருவருக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று புரிந்துக் கொண்டு "டேய் நிரஞ்சா நீ எப்பவும் பொண்ணுங்களை இன்வைட் செய்ய மாட்டியே! உனக்குத் தான் பிடிக்காதே" என்று அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான் பார்த்திபன்.
"உண்மை தான் சூழ்நிலை அப்படி நான் என்னச் செய்ய முடியும்? பார்ட்டிக்கு இன்வைட் செய்வீங்க தானேன்னு சாம்பவி கேட்கும் போது நான் எப்படி பார்ட்டி இல்லைன்னு பொய் சொல்ல முடியும்? நைட் பார்ட்டி முடிஞ்சதும் செல்பியா எடுத்து போஸ்ட் போடுவீங்க அப்பவே எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமா தெரிஞ்சிடும் நாம பார்ட்டி செய்தோம்னு எடுத்த உடனே எதுக்கு நம்மளப் பத்தி ஒரு அதிருப்தி வரனும்? அதான் உங்ககிட்ட கேட்கமாலேயே வாங்கன்னு இன்வைட் செய்துட்டேன்.இனிமேல் இதைப் பத்தி பேச ஒன்னும் இல்லை நீங்களே நல்ல பெரிய ரெஸ்ட்ராண்ட் பார்த்து புக் பண்ணுங்க, அதோட முதல் இன்வைட் சந்திப்பு எல்லாமே சோ நீட்டா ரெடியாகுங்க" என்று அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் நேராக தன்னுடைய அறையை நோக்கி நடந்து கதவை தாழிட்டுச் சென்று விட்டான் நிரஞ்சன்.
அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சஹாவும், பார்த்தியும் அவன் சென்றதும் காந்தனைப் பிடித்துக் கொண்டு என்ன நடந்தது? என்று முழுவதும் அறிந்துக் கொண்டனர்.
அப்பொழுது அவர்களிடம் காந்தன் "நான் நினைக்கிறேன் சாம்பவிக்கு தான் நிரஞ்சன் மேலே ஏதோ க்ரஷ் இருக்குன்னு அப்படின்னா பார்ட்டிக்கு வந்தாலும் கொஞ்ச நேரத்துல போய் விடுவாங்க பார்க்கலாம்"என்று பேசி அதோடு பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
மாலை ஆறு மணிக்கு மேல் நிரஞ்சன் சாம்பவியை அலைபேசியில் அழைத்து முறையாய் பார்ட்டிக்கு அழைத்தான்.அவளும் வருகிறேன் என்று சொல்லி பதில் சொன்னாள்.
இரவு பத்து மணிக்கு மேல் பார்ட்டி அவர்கள் பேசியிருந்த உணவகத்தில் காத்திருந்தனர்.
சாம்பவியும் நேரங்கடத்தாமல் சரியான நேரத்திற்கு வந்துச் சேர்ந்தாள்.
வந்தவள் சஹாவிடமும் பார்த்தியிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அவர்கள் இருவருக்கும் சாம்பவியைக் கண்டதும் அசந்து போயினர்.அழகுப் பதுமையாய் அவள் ஜொலித்தாள்.
அவள் அழகில் சற்று அசந்துப் போய் இருக்க… சாம்பவி நிரஞ்சன் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.முதலில் அவர்களைப் பற்றிய அறிமுகப் படலம் நடந்தது.அதிலேயே தொடர்ந்து பலக்கதைகளைப் பற்றியும் நிறைய பேசினர்.
சாம்பவியின் அழகான அணுகுமுறையும் அவளின் திறம்பட பேச்சும் நால்வரையும் சற்று ஆச்சரியத்தில் மூழ்கடிக்கத் தான் செய்தது.
அவர்கள் கேட்ட உணவு வகைகள் எல்லாம் மேசையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.அதை அனைத்தையும் ஒரு பார்வை பார்த்தவள் "என்ன எல்லாமே உணவு வகைகளாக இருக்கு பார்ட்டின்னா இது தானா?" சாம்பவி சிரித்துக் கொண்டு கேட்டாள்.
"ஆமாம் சாம்பவி வேற என்ன நீங்க நினைச்சீங்க? நீங்க நினைக்கிற மாதிரி பசங்க நாங்க கிடையாது.இந்த மாதிரி பார்ட்டி இருந்தால் தான் வெளியே வந்து நாங்க சாப்பிடுவோம் இல்லைன்னா நாங்க வீட்டுச் சாப்பாடு தான் ஏன்னா ஹெல்த் ப்ளஸ் வாய்ஸ் ரெண்டுமே நல்லா இருந்தால் தானே நல்ல உழைப்பைக் கொடுக்க முடியும்னு நிரஞ்சனோட அன்பான கட்டளை அதனால எங்களுக்கு இது தான் பார்ட்டி" என்றான் பார்த்தி.
அவன் சொன்னதைக் கேட்டு அவள் இன்னுமாய் சந்தோஷமடைந்தாள்.அவள் நினைத்த மாதிரியான நம்பிக்கை மற்றும் நேர்மையான பேண்ட் அதனால் மனம் நிறைந்தவளாய் "நீங்க எல்லோரும் டூ ஹண்ட்ரண்ட் ப்ரெசென்ட்டேஜ் செலக்ட் ஆய்டீங்க"
அவள் சொன்னதைக் கேட்டு நால்வரும் ஒன்றும் புரியாமல் சாம்பவியைப் பார்த்தனர்.
அவள் சிரித்துக் கொண்டே… "எங்க தாத்தா தான் சங்கீத மேளாவை உருவாக்கியவர் அவர் சங்கீதத்துல ரொம்ப ஈடுபாடு உள்ளவர்.எப்பவும் எல்லோருக்கும் நல்ல புது வாய்ப்பை உருவாக்கி கொடுக்கனும் தான் இந்த கம்பெனியை ஆரம்பிச்சது.எல்லாம் தாத்தா நினைச்ச மாதிரி தான் போய்ட்டு இருந்தது,தாத்தாக்கு உடல்நிலை சரியில்லாததுனால அடுத்து எங்க அப்பா அந்த பொறுப்புக்கு வந்தாங்க நல்ல பெயரும் மதிப்பும் கிடைச்சது,ஆனால் சில வருஷங்களா அப்பா எடுக்க வேண்டிய முடிவுகளை என்னோட அண்ணண் யார்க்கிட்டேயும் கேட்காமல் அவனாக முடிவு செய்ததில் சில மியூசிக் பேண்ட்ஸ் அவங்க சொன்ன மாதிரி சரியா நடந்துக்கலை, ஒழுங்கான ப்ராக்டீஸ் இல்லாம பார், பார்ட்டி, ஔட்டிட்ங் என்று இருந்ததால் சரியான ப்ராக்டீஸ் இல்லாம ஒழுங்கீனமாக நடந்து பேர் கொஞ்சம் கொஞ்சமாய் போய்ட்டு இருக்கு அதனால அப்பாவும் தாத்தாவும் ரொம்பவே கவலைப்பட ஆரம்பிச்சிட்டாங்க அதுக்காகத் தான் நான் இப்போ இந்த கம்பெனியை நடத்தி பழைய மாதிரி மாத்திக் காட்டுறேன் என்று அண்ணன்கிட்டே சவால் செய்து இப்போ இந்த கம்பெனி ஹெட் பதவிக்கு வந்து இருக்கேன் உங்க பாட்டு, அப்புறம் உங்க நாலு பேருடைய பெர்மான்ஸ் இதெல்லாமே நானே நேர்ல வந்து பார்த்து திருப்தியாகி தான் இந்த காண்ட்ராக்ட் பற்றி பேச அனுப்பினேன் ஏற்கனவே நிறைய பேர் ஏமாத்தினதுனால இப்பவும் நானும் அதே தப்பை செய்யக் கூடாது என்று தான் உங்க எல்லோரைப் பற்றி தெரிஞ்சக்கவும் தான் நானே பார்ட்டிக்கு வரேன்னு நிரஞ்சன்கிட்ட சொல்லி வந்தேன் இப்போ எனக்கு ரொம்ப திருப்தியாகவும் இருக்கு" என்று தான் வந்த உண்மையை அவர்களிடம் விளக்கமாய் சொன்னாள்.
ஒரு நீண்ட அமைதி அங்கு நிலவியது.சாம்பவியின் நுணுக்கங்களைப் பார்த்து அவர்கள் அசந்தே போயினர்."என்ன யாரும் எதுவும் பேச மாட்டேங்கிறீங்க?"
உடனே சஹா "எ...ப்படி சாம்பவி உங்களால இவ்வளவு வெளிப்படையா பேச முடியுது?"
"ரொம்ப ஈஸி நான் என்னோட சேர்ந்து வொர்க் பண்ணுறவங்களோடு வெளிப்படையா இருக்கனும்னு நினைக்கிறேன் அப்பத் தான் அவங்களும் தங்களுக்கான ஐடியா, எதாவது தயக்கம் எல்லாமே அவங்களும் சொல்வாங்க இதுவும் ஒருவகையில் எனக்கான லாபம் தான்"
"ம்ம்… சூப்பர்"என்றான் காந்தன்.
"எல்லாத்துக்கும் நான் நிரஞ்சனுக்குத் தான் தாங்ஸ் சொல்லனும் நான் சொன்னேன்னு அவங்க தான் என்னை இங்கே பார்ட்டிக்கு இன்வைட் பண்ணது அதோட என்னைப் பற்றியும் உங்களால புரிஞ்சுக்க முடிந்தது" என்று நிரஞ்சனைப் பார்த்துச் சொல்ல…
அவன் அமைதியாக இருந்தான்..அங்கிருந்த பழச்சாற்றை மட்டும் சாம்பவி அருந்தி விட்டு "நான் கிளம்புறேன்" என்று அவள் எழுந்துக் கொள்ள…
நிரஞ்சன் அவசரமாய் "என்னாச்சு சாம்பவி? சாப்பிடமால் ஏன் சீக்கிரமா கிளம்புறீங்க?"
"முக்கியமான மெஸேஜ் ஒன்னு வந்து இருக்கு,அதனால இப்போ கிளம்பிய ஆகனும் நாளைக்கு உள்ள புரோஜியர் பற்றி பேச வேண்டி இன்னொரு வேலை இருக்கு" என்றாள்.
பார்த்தி "ஏங்க இன்னைக்கு எங்க கூட சாப்பிட விருப்பம் இல்லையா?"
"ஏன் பார்த்தி அப்படி சொல்லுறீங்க? இனி நாம ஒன்னா வொர்க் செய்யப் போறோம் அதனால இந்த மாதிரி எல்லாம் பேசக் கூடாது சீக்கிரமா நானே உங்களுக்கு பெரிய பார்ட்டி வைக்கப் போறேன்.அதனால எதுவும்
யோசிக்காதீங்க இப்போதைக்கு உங்க பார்ட்டியை என்ஜாய் பண்ணுங்க எஞ்சாமிகளா பாய்" என்று அவள் அழகாய் சிரித்துச் சொன்னாள்.
அவர்களும் அவளின் சிரிப்போடு கலந்துக் கொண்டனர்.நிரஞ்சன் சாம்பவியை அந்த உணவு விடுதியின் வாயில் வரை வந்து வழி அனுப்ப வந்தான்.
சாம்பவியின் மகிழுந்து வரும் வரை அவனும் அவளோடு நின்றுக் கொண்டிருந்தான்.
"ரொம்ப தாங்ஸ் நிரஞ்சா நல்ல பர்பெக்ட்டான டீம்மை உருவாக்கி இருக்கீங்க"
"அதுக்கு நீங்க எனக்கு மட்டும் தாங்ஸ் சொல்லக் கூடாது என்னுடைய ப்ரெண்ட்ஸ்க்கும் சேர்த்து சொல்லனும். ஏன்னா அவங்க எல்லோரும் ஒத்துழைக்கலைன்னா இதை என்னால செய்து இருக்க முடியாது"
"உங்க தன்னடக்கம் எனக்கு பிடிச்சிருக்கு"என்று கண்கள் மின்னச் சொன்னதும் மகிழுந்து வர… அவன் கையைப் பிடித்து "கூடிய சீக்கிரம் சந்திக்கலாம்" என்று கன்னம் சிவக்க சொல்லிச் சென்றாள்.
அவளது அணுகுமுறை அவனுக்கு யோசனை தர அப்படியே ஆழ்ந்த யோசனையில் நிற்க… பின்னால் வந்த மூவரும் அவனது தோள்களைப் பிடித்து பார்த்தி
"ஒன்னுமே புரியலை உலகத்துல என்னமோ நடக்குது மர்மா இருக்குது தொடக்கத்திலே"என்று அவன் இனிமையாய் பாட…
மற்ற இருவரும் அவனை உலுக்க…
நிரஞ்சன் "டேய் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னுமே கிடையாதுடா அவங்களா பேசினால் அதுக்கு நான் பொறுப்பு கிடையாது.வாங்க சாப்பிட போகலாம்"
"அப்படிங்கிற" என்று காந்தன் கேட்க...
"ஆமாம் காந்தா நீ வேற இவனுங்க ரெண்டுபேர் கூட சேர்ந்து என்னை கிண்டல் செய்றீங்க"
அவன் சிரித்துக் கொண்டே… "எங்களுக்கு உன்னைப் பத்தி நல்லாவே தெரியும்டா.இருந்தாலும் நடந்ததை மறந்து உன் மனசு மாறனும்னு நாங்க விரும்புகிறோம், அதோட சாம்பவியைப் பார்க்கும் போது பெண்களைப் பற்றிய உன்னுடைய எண்ணம் மாறும்னு நாங்க நினைக்கிறோம் நிரஞ்சா" என்று அவன் தோள் மேல் கைப் போட்டு அவன் கேட்க… மற்ற இருவரும் நிரஞ்சனையே பார்த்தனர்.
ஒரு வெற்று சிரிப்பு சிரித்தவன் "அதெல்லாம் சட்டென்று மாறாது காந்தா. சாம்பவியைப் பொறுத்தவரை இப்போக் கூட அவங்க நினைச்ச விஷயம் முடியனும் தான் அவங்க நல்லா படியா நம்மளை நடத்துறாங்கன்னு படுதே தவிர மற்ற எண்ணங்கள் எதுவும் மாறவில்லை,அதனால இப்போ நமக்கு இது முக்கியம் இல்லை நம்ம அடுத்த இலக்கு தான் அதனுடைய ஆரம்பத்தை இன்றைக்கு பார்ட்டி ஆரம்பித்து ஆரம்பிக்கலாம்"என்று அவனும் தோள் மீது கைப்போட்டு நால்வரும் ஒன்றாக நடந்தனர்.
ஆனால் சஹாவின் மனதிலோ 'உன் எண்ணம் நிச்சயம் மாறும் நிரஞ்சா.மாத்த ஒருத்தி வராமலா போய் விடுவாள்'
என்று நினைத்துக் கொண்டு அவனின் தோள்களை இறுக்கப்பற்றியவாறு நடந்தான் சஹா.
மறுநாள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தனர் சிற்பியின் குடும்பத்தார்.
அவர்கள் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே யாரோ கதவை தட்டும் கேட்டு கதவை திறந்தாள் சிற்பி.
அங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார்.அவரைப் பார்த்ததும் சிற்பி "யாரு நீங்க? யாரைப் பார்க்க வந்து இருக்கீங்க?"
"அருள்மணியோட வீடு இது தானே"
"ஆமாம்"
"நான் உங்க அப்பாவோட கடை ப்ரெண்ட்டு சொல்லும்மாதெரியும்"
என்றார்.
சிற்பியும் சரியென்று சொல்லி விட்டு அப்பாவிடம் வந்து விவரத்தைச் சொன்னாள்.அவரும் "உள்ளே அவரை அழைத்து வா" என்றார்.
சிற்பியும் அவளது அப்பா படுத்து இருந்த அழைத்து வந்தார்.
அருள்மணியும் அவரைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்துக் கொண்டார்.
வந்தவர் "இப்போ உடம்பு தேவலையா?"
"ம்ம்… பரவாயில்லை.என்ன விஷயமா என்னை நேர்ல பார்க்க வந்து இருக்கீங்க?"
அவரும் என்னச் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்.சிறிது அமைதிக்குப் பின் வந்தவரே பேசினார்.
"அருள்மணி அண்ணே! நீங்க இந்த மாதிரி இருக்கும் போது மனசாட்சி இல்லாமல் நடந்துக்கிறேன்னு தப்பாக என்னை நினைக்காதீங்க"என்று அவர் தயங்கி தயங்கியே சொன்னார்.
"என்ன விஷயம்னு சொல்லுப்பா"என்றார் அருள்மணி.