அண்ணே என் பையனுக்கு சென்னைல உள்ள காலேஜ்ல சீட் கிடைச்சு இருக்குன்னு அதுக்கு பணம் கெட்டனும்.நான் உங்க பொண்ணு கல்யாணத்துக்கு கொடுத்த ஐந்து லட்சம் ஏற்கனவே சின்னச் சின்னதா வாங்குன கடனே மூணு லட்சத்துக்கு மேல போகுது, அதனால ஆறு மாசத்துல பாதி பணத்தையும் மீதி பணத்தை அதை விட சீக்கிரமா கொடுத்துடுங்க" என்று வந்தவர் சட்டென்று அவர் சொல்ல வேண்டியதைச் சொன்னார்.
அருள்மணிக்கு இது பெருத்த அதிர்ச்சி செய்தி தான்.ஆனால் தன் குடும்பத்திற்காக உடல்நிலைக் கருதி எந்த அதிர்ச்சியும் பட வைக்காமல் தன் மனதை அமைதிப்படுத்திக் கொண்டார்.சிற்பிக்கு என்னச் சொல்வதென்றே தெரியவில்லை.இன்னும் அக்காவின் திருமணத்தை நடத்துவதற்கு முன் என்ன நிலைக்கெல்லாம் செல்ல வேண்டி வருமோ? என்று நினைத்தே அவள் வருந்திக் கொண்டிருந்தாள்.
வந்தவருக்கு தேநீர் வைக்க வந்த தாமரை நடந்த பேச்சுவார்த்தையைக் கேட்டு அப்படியே நின்று விட்டார்.
சில நிமிட அமைதிக்குப் பின் "நீங்க சொன்ன மாதிரி பணத்தை ரெடி பண்ணித் தரேன்.நீங்க கவலைப்படாமல் இருங்க நான் பணத்தை தரேன்"என்றார்.
வந்தவர் எல்லோரிடமும் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.அருள்மணி யோசனையில் அப்படியே உட்கார்ந்து விட்டார்.தாமரையும் சிற்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அருள்மணியைப் பார்த்து தாமரை "என்னங்க இப்போ என்னச் செய்ய போறோம்?எனக்கு ஒன்னுமே புரியலை"
"நீ கவலைப்படாதே தாமரை.எல்லாம் நல்ல விதமா நடக்கும், முதல்ல நாம கனிகாவுடைய திருமணத்தை நடத்தி அவளை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைப்போம், அதுக்கு பிறகு இந்த விஷயத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கலாம் முக்கியமா கனிகாக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியவேக் கூடாது அவ சந்தோஷமா நிம்மதியா புருஷன் வீட்டுக்கு போகட்டும் இல்லைன்னா நமக்கு கல்யாணம் நடப்பதினால் தான் இவ்வளவு சிக்கல்னு நினைச்சு வருதப்படுவா என் பொண்ணு புதுப்பொண்ணா சந்தோஷத்தை மட்டும் அனுபவிக்கட்டும்.எல்லாம் முடிஞ்ச பிறகு ஒரு வாரத்துல இதற்கான தீர்வை நான் யோசிக்கிறேன் அதோட இனிமேல் இந்த வீட்டில் இந்த கடன் பத்திய விஷயத்தை யாரும் பேசக் கூடாது"என்று அன்பாய் கட்டளையிட்டார் அருள்மணி.
மறுநாள்…
நால்வரும் சங்கீத மேளாவின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு இது முதல் அனுபவம் என்பதால் சற்று பதற்றமாகவே இருந்தது.சங்கீத மேளாவின் மூலமாக எந்த இசைக்குழுவோ,பாடகர்களோ அறிமுகமானால் அவர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள் என்பதில் உறுதி.ஏனென்றால் அவர்களின் தேர்வு அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.
இதை எல்லாம் நினைத்து நிரஞ்சனுக்கும் கொஞ்சம் பதற்றமாக இருந்தது.சபரி அவர்களை அழைத்துச் செல்வதற்காக மகிழுந்துடன் வெளியில் காத்திருந்தார்.
நால்வரும் தயாராகுவதற்கு தாமதமானது.நேரம் வேகமாய் கடந்தது.கடிகாரத்தைப் பார்த்தால் அது அவர்கள் செல்ல வேண்டிய நேரத்தை விட அரைமணி நேரம் கூடுதலாக சென்றிருப்பதைக் காட்ட நால்வருமாய் வேகமாய் வெளியே வந்தனர்.
அங்கே சபரி காத்திருப்பதைப் பார்த்த காந்தன் "சார் நீங்க இன்னுமா எங்களுக்கா வெயிட் செய்றீங்க?"
அவரோ சிரித்துக் கொண்டே "ஆமாம் உங்க நால்வரையும் அழைச்சுட்டு வரனும் அப்படிங்கிறது மேலிடத்து உத்தரவு அதை நான் நீங்க எவ்வளவு தாமதமாக்கினாலும் சரியா செய்யனும் இது என்னோட வேலை அதை நான் சரியாக செய்யனும் அதனால நாம இப்போ கிளம்பலாமா?" என்றதும் நால்வரும் சரியென்று தலையசைப்பை தந்ததும் விலையுயர்ந்த அந்த மகிழுந்தில் சபரி முன்னால் அமர்ந்திருக்க… பின்னால் நால்வரும் அமர வாகனம் வேகமாய் சென்றது.
இவர்களுக்காக அங்கே எல்லோரும் காத்திருந்தனர்.'ஏன் தாமதம்? என்று கேட்டால் உண்மையைச் சொல்லி விட வேண்டும்' என்ற முடிவில் இருந்தான் நிரஞ்சன்.
ஆனால் சாம்பவி உட்பட யாரும் அவர்களிடம் எந்த கேள்வியையும் கேட்கவில்லை.மாறாக எல்லோரும் அவர்களிடம் மரியாதையுடனும் நட்புடன் பாராட்டிக் கொண்டனர்.
முதலில் இவர்கள் நால்வரை அறிமுகப்படுத்தப்பட்டது.அடுத்து இவர்களுடன் பணிபுரியப் போகும் மற்றவர்கள் பற்றி இவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதோடு இவர்கள் வெளியிட்ட ஆல்பம் வகைப் பாடல்கள் சமூகவலைதளத்தில் பிரபலமானதைப் பற்றி பேசப்பட்டது.அதோடு இவர்களின் குரல்கள் உள்ள ஈர்ப்புத் தன்மையைப் பற்றியும் பேசப்பட்டது.
கடைசியாக நால்வரும் முழுசம்மதம் மற்றும் திருப்தியோடு கையெழுத்திட்டனர்.
மேலும் அவர்கள் பங்கு கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள்,விளம்பரங்கள்,பேட்டிகள்,இசைகள் என எல்லாம் பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டன.
வந்ததும் சாம்பவி அறிமுகமானதோடு சரி பிறகு அவளுக்கான வேலைகள் நிறைய இருந்தன.அதனால் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையவே இல்லை.
அதனால் தான் சாம்பவி முன்னரே வந்து சந்தித்து நட்பு பாராட்டி சென்றிருக்கிறாள் என்று நால்வரும் விளங்கிக் கொண்டனர்.
எல்லாம் பேசி முடித்து கடைசியில் ஒரு சிறுவிருந்து நிகழ்ச்சியுடன் அவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இறுதியில் விடைப்பெற்று செல்லும் நேரம் சாம்பவி இவர்களைச் சந்தித்து நிரஞ்சனிடம் "நிரஞ்சன் இரண்டு நாள்ல உங்க வேலையைப் பற்றியும் அதற்கான பைலையும் அனுப்பி வைக்கிறேன் இன்னும் நான்கு நாள் கழிச்சு நம்ம வேலையை ஆரம்பிக்கலாம் முக்கியமான விஷயம் ரூல்ஸ்ஸை எல்லோரும் பாலோ பண்ணனும் எனக்கு அதுதான் முக்கியம் நான் அதுல ரொம்பவே கண்டிஷனா இருப்பேன்" என்று தன்னைப் பற்றிய விவரத்தையும் கூடுதல் தகவலாகச் சொன்னாள் சாம்பவி.
அதற்கும் நிரஞ்சன் சரியென்று ஒத்துக் கொண்டு நால்வரும் விடைபெற்றுச் சென்றனர்.
நால்வரும் தங்கள் இருப்பிடத்திற்கு வந்ததும் சஹா நிரஞ்சனிடம் "நிரஞ்சா சங்கீத மேளாவுடைய திட்டமே என்னன்னு எனக்கு புரியலை. எதுக்காக அவங்க நமக்காக இவ்வளவு மெனக்கெடல் செய்றாங்க?" என்று தன் மனதில் உள்ள எண்ணத்தைப் பற்றிக் கேட்டான்.
அதற்கு நிரஞ்சன் அதைப் பற்றிய விளக்கத்தைச் சொன்னான்.
சஹா நம்ம குரூப்பை அவங்க அறிமுகப்படுத்தும் போது நம்மளை விட அவங்களுக்குத் தான் லாபம்,ஏன்னா நாம இந்த போட்டியில் வெற்றி பெற்றோம் என்றால் அவங்க உருவாக்கிற ஒவ்வொரு நபரும் சிறந்தவங்க அப்படிங்கிற பேரு கம்பெனிக்கு கிடைக்கும் அதுக்காக நம்மோடு சேர்ந்து வேலைப் பார்க்கிறவங்க நம்ம குரூப்பை எப்படி பிரபலப்படுத்தலாம்? என்று யோசனை செய்து அதை முறையா அவங்க மக்கள்கிட்ட கொண்டு சேர்ப்பாங்க அதனால நாம இன்னும் அதிகமாக மக்கள்கிட்ட ரீச் ஆகலாம்.
அதோடு எல்லோருக்கும் நம்மை அறிமுகப்படுத்துவாங்க மக்களும் நம்மளை மறக்காமல் நினைவு வைத்துக் கொள்ள விளம்பரம் தேவை அதையும் அவங்களே செய்றாங்க அதனால அடிக்கடி நம்ம முகத்தை அவங்க பார்க்கும் போது பாட்டும் கேட்க பிடிக்க ஆரம்பிக்கும் நம்ம வேலை புதுசா இசையமைத்து பாட்டு எழுதுவது தான் சில நேரங்கள்ல இதில் நமக்குத் தேவையான உதவியையும் அவங்களே செய்றாங்க அதனால நமக்கு நஷ்டத்தை விட லாபம் தான் அதிகம்" என்றான் விரிவாக…
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்ற மூவரும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தனர்.
நாட்கள் வேகமாக செல்ல நான்கு தினங்கள் வேகமாய் கடந்தது.கனிகாவின் திருமணத்தன்று தான் மூவரின் முகத்திலும் புன்னகையே வந்தது.அதுவரை எதாவது புது குழப்பம் உருவாகி விடுவோமோ? என்ற யோசனையிலும் கவலையிலும் நேரங்கள் சென்றது.
கனிகாவின் திருமணத்தின் விடியற்காலையில் தான் தாய்மாமானின் மனைவி பூர்ணா அத்தை வெளியூரிலிருந்து வந்தார்.
அவரைக் கண்டதும் தாமரை வாசலில் சென்று வரவேற்றாள்.முதலில் நலம் விசாரிக்குப் பின் நேராக தன் மருமகள் கனிகாவை அலங்காரம் செய்யும் அறைக்குச் சென்றனர்.
அங்கே கனிகாவும் சிற்பியும் இருந்தனர்.கனிகாவைக் கண்டதும் பூர்ணா அவளை கட்டி அணைத்து "என் அழகு மருமகளை என்னா அழகு" என்று திருஷ்டி சுற்றி விட்டார்.
பக்கத்தில் இருந்த சிற்பி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
கனிகாவைப் பார்த்து "கனிகா நீ மட்டும் கல்யாணப் பொண்ணா அலங்காரம் செய்து இருக்கேன்னு உன் தொங்கச்சி சாரி தங்கச்சி கோவிச்சுட்டு இருக்காளோ? உன் பக்கத்திலேயே அலங்காரம் பண்ணி உட்கார வைக்க வேண்டியது தானே"என்று சிரித்துக் கொண்டு சொல்ல…
"அத்தை உங்களுக்கு இந்த நையாண்டி மட்டும் விடாது.என்னை தொந்தரவு செய்யலைன்னா வந்த வேலை முடிஞ்ச மாதிரி இருக்காதுல்ல அத்தை"
"ஆமாம் நானே அவ்வளவு தூரத்துல இருந்து வரேன்.என்னைப் பார்த்து முகத்தை திருப்பி உட்கார்ந்தால் நான் அப்படித் தான் கிண்டல் செய்வேன்" என்றார்.
அதற்கு சிற்பி "உங்க நியாயம் தான் உங்களுக்கு எனக்கு என்னன்னு கேட்க மாட்டீங்க.அப்படித்தானே"
அவளின் கோபத்தை பார்த்து சிரித்துக் கொண்டு "என்ன விஷயம்னு சொல்லு"
"ஏன் அத்தை கல்யாணத்துக்கு காலைல வந்தீங்க? ஒருநாள் முன்கூட்டியே வந்து இருக்கலாம்" என்று சிற்பி பேசிக் கொண்டிருக்கும் போதே தாமரை பூர்ணாவிடம் "அண்ணி கல்யாணத்துக்கு நீங்க மட்டும் வந்து இருக்கீங்க? அண்ணே வரலையா?"
"வரலை தாமரை அவங்களுக்கும் இங்கே கனிகாவுடைய கல்யாணத்திற்கு வரணும்னு ரொம்ப ஆசை ஆனால் என்ன செய்ய? கம்பெனில புதுசா ஏதோ கான்ட்ராக்ட் கிடைச்சதுனால நிறைய வேலை"
"அண்ணி அண்ணே இன்னைக்கு ஒரு நாளாவது வந்து இருக்கலாமே"
"அதைத் தான் நானும் கேட்டேன்.என்னால கொஞ்ச மாதத்திற்காவது எங்கேயும் நகர முடியாதுன்னு சொல்லிட்டாங்க.அவங்க கல்யாணத்தை லைவ்ல பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாங்க"
"ஆமாம் மருமகன் எங்கே?"
உடனே சிற்பி "செழியனையும் கூடிட்டு வரலையா? இந்த அத்தை ரொம்ப மோசம்.ஏற்கனவே சாரு ரொம்ப பிஸின்னு பேசுவாரு இப்போ கேட்கவா வேணும்" என்று செழியனை இவள் கிண்டல் செய்துக் கொண்டிருக்கும் போதே அவள் பின்னால் வந்து நின்றுக் கொண்ட செழியன் சிற்பியின் காதைப் பிடித்து திருகி "அடியே வாலு ஒரு தடவை போன்ல பேசும் போது கொஞ்சம் பிஸியா இருக்கேன் அப்புறமா பேசுறேன்னு சொன்னேன்னு இதையே சொல்லி என்னை டேமேஜ் செய்றியா?" என்று அவன் அவளின் காதை அழுந்த பிடிக்கும் போது…
தன் மெல்லிய கரங்களால் அவனின் சட்டை காலரைப் பிடித்து "அத்தான் வலிக்குது வலிக்குது விடுங்க" என்று சின்னச் சிறு விழிகளை உருட்டிக் கேட்க…
அவளின் செய்கையில் அவனும் சட்டென்று திணறித் தான் போனான்.ஆனால் அதை அவன் வெளிக்காட்டால் அவனைப் பிடித்திருந்த கைகளை தன் கைகளுக்கு அழுந்த பிடித்தவன் "கெஞ்சும் போது கூட மேடம் திமிரா என் காலரை பிடிச்சு இழுத்து தான் கேட்பீங்களோ?" என்று அவன் மிரட்டுவது போல் கேட்க…
அவளோ சிரித்துக் கொண்டு "சரிங்க அத்தான் நான் உங்ககிட்ட இப்படி மன்னிப்பு கேட்கட்டுமா?" என்று அவனின் தோள்களில் லேசாய் சாய்ந்துக் கொண்டே கேட்க…
அழகாய் அலங்கரித்து தேவதையாய் தன் முன்னே நிற்பவள் சட்டென்று ஆடவன் நெஞ்சிலே சாய்ந்துக் கொள்ளும் போது அவனின் உள்ளமும் அவளோடு சாய்ந்துக் கொண்டது