• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 01

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 01

"அ..அண்ணா..காப்பாத்துங்கண்ணா.."

அந்தக் காட்சி மங்கி அடுத்து,

"இ..இன்னும் எ..என்னைய தேடி வரல்லண்ணா நீங்க..? நா..நான் வேண்டாம்மாண்ணா...பயமா இருக்குண்ணா..எ..என் மேல அவ்வளவு தானா பாசம்..?"

அவன் உறக்கத்தில்..!!

தூரத்தில் தெரிந்த அந்த அழுகையுடன் கூடிய கணீர் குரலிற்கு சொந்தமான உருவமோ புகையாக கலைந்து மறைந்து போனது.

தூக்கத்திலேயே கை கால்கள் எல்லாம் நடுங்க வார்த்தை வெளிவராமல் தவித்தான்.

தன்னை அழுத்தும் விசையின் பிடியிலிருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டிருந்தவன் ஒருவழியாக மெத்தையில் மொத்த அழுத்தத்தையும் கொடுத்து சட்டென எழுந்தமர்ந்தான்..

அந்த ஏசிக் குளிரிலும் வியர்த்திருக்க நடுங்கும் கை கொண்டு நெற்றியை துடைத்து விட்டவனுக்கு நெஞ்செல்லாம் வலித்தது.

அவனைத் தொடரும் கனவு..!!


***


ஓர் வித அழுத்தத்துடன் அவன்..

அவனருகில் அழுததற்கு சாட்சியாக அவளின் முகம் சிவந்து, களையிழந்து போய் இருந்தது. கல்யாணப் பொண்ணுக்கான எந்த எதிர்பார்ப்புமோ சிரிப்புமோ அவளிடம் இல்லை.. சற்று நேரத்தில் அருகில் இருப்பவனின் சரி பாதியாகி விடுவாள். அதை நினைக்கையில் குனிந்திருந்தவளின் உதடு வேதனையில் துடித்தது..

அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை. தன் மொத்தக் கோபத்தையும் கைமுஷ்டி மடக்கி அடக்கிக் கொண்டிருந்தவனின் மனம் உலையாக கொதித்துக் கொண்டிருந்தனவோ...!!?

அவன் ஆதவ் க்ரிஷ்..

ஆறடியில் இருக்கும் அழகன். உயரத்திற்கேற்ப உடற்கட்டு கொண்டிருப்பனின் உதடுகளோ சிரிப்பை மறந்திருக்கும்...!
பார்வையால் ஒருவரை பஸ்பம் ஆக்க முடியுமா..!? அவனின் தீப்பார்வை எதிரில் நிற்பவர்களை பொசுக்கி விடும். திமிரை குத்தைக்கு எடுத்திருப்பான் போலும், அந்தக் கண்களில் எப்போதும் ஓர் அலட்சியத் திமிர்..!

ஏ.கே குரூப்ஸ் ஒஃப் கம்பனியின் தற்போதைய வாரிசு. பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்து வந்த சொத்துக்களை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மாற்றியது என்னவோ ஆதவ் தான். ஏ.கே கம்பனி தொடக்கம் ஏ.கே ஜூவல்லர்ஸ் வரை கொண்டு வந்தவன் தற்போது உலகத்திலே இருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் ஒருவன். சென்ற வருடம் தான் இளம் முதன்மை தொழிலதிபர் பட்டம் பெற்றிருந்தான்.

இவன் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்திருந்தாலும் மேற்படிப்பை மேற்கொண்டது என்னவோ லண்டனில் தான். இலகுவில் எவரையும் நம்பாதவன் அங்கும் ஒருவித அழுத்தத்துடனும் வெறுமையுடனும் தான் இருந்தான். இவனின் கெட்டப் பழக்கம், பெண்களை நம்ப மறுத்தது தான். லண்டனின் கலச்சாரம் ஆண் பெண் பேதமின்றி பழகுவதாயினும் அந்தச் சூழல் கூட தன்னை மாற்ற இவன் இடம் தரவில்லை.

அனைவருடனும் அளவுடன் பழகுபவனுக்கு ஏனோ பெண்கள் என்றாலே வெறுப்பாகிப் போனது.. அவனை அந்தளவுக்கு மாற்றியது அவன் வாழ்வின் கசந்த பக்கங்கள்...!!

இத்தனை வருடங்களில் அவன் இழந்தவை ஏராளம். சிறுவயதில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தவன் வளர வளர உண்மைகள் உறைக்க தன்னுள் இறுகியவன் தான். இன்று வரை அந்த இறுக்கத்தை தளர்த்தவில்லை. வாழ்க்கையில் பட்ட மிகப் பெரிய அடி அந்த அமைதியானவனைக் கூட அரக்கனாக மாற்றியது தான் விந்தை.

அந்த வெறி மொத்தத்தையும் அவன் கொட்டிய இடம் அவனின் படிப்பு.. ஆம் அதனால் தான் சகலதையும் கற்று பண்டிதன் என்ற நிலையில் வந்து நின்றான். சென்னையில் இருந்து சென்றவன் மீண்டும் இங்கு வந்த இறங்கிய போது புது அவதாரம் எடுத்திருந்தான் என்று தான் கூற வேண்டும்.. திமிரும் கோபமும் தன்னை மொத்தமாக சூழ்ந்திருக்க அவனின் உடல் மொழியிலும் பல மாற்றங்கள். சும்மாவே ஆளை அசத்தும் அழகில் இருப்பவன் இன்று புஜங்கள் இறுகி முகத்தில் புதுப் பொலிவுடன் திகழ்ந்தான்.இவனின் இந்த அழகு, நிச்சயம் மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும். அப்படி அவனின் ஆண்மையுடன் கூடிய அழகில் மயங்கிய மாதுக்கள் அவனை தன் வலையில் சிக்க வைக்க நெருங்கி இருந்தும் தன் கழுகுப் பார்வையில் இருந்த இடம் தெரியாமல் ஓடிய வரலாறும் உண்டு.

இவனின் திமிரும் கோபமும் கரையும் ஓர் இடம் தீக்ஷன்...

இந்த அழகிய அரக்கனின் உயிர்த் தோழன். இவன் டாக்டர் என்றால் அங்கே அவனின் முகத்தில் கொட்டிக் கிடக்கும் சாந்தம் ஏராளம் எனலாம்...! சற்று அடர்ந்த புருவம் தாடி என இருப்பவன். யாருக்கும் தயங்காமல் உதவி செய்பவனோ விரும்பி தன்னை வருத்திப் பெற்ற பட்டம் தான் எம்.பி.பி.எஸ். தற்போது பிரபல மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுபவனோ கயனகொலோஜிஸ்ட் ஆக வேண்டுமென மேற்படிப்பை தொடர்கிறான்.

இவர்களின் நேரடித் தொடர்பு அன்று கல்லூரி கடைசி நாள் வரை தான்.. அதன் பின் தொலைபேசியில் தொடர்ந்து கொண்டிருந்த அழைப்புகளிலும் பேசா மடந்தை தீக்ஷன் வாய் கிழிய பேசினாலும் இவனிடம் ம்ம் மட்டுமே.. நண்பனை அறிந்தவனாய் அவனும் அதனை பொருட்படுத்துவதில்லை.

ஆனால் அங்கே தனிமையில் சிதறியது என்னவோ ஓர் புதைக்கப்பட்ட அழகிய இதயம்...

எதுவும் இல்லாமல் இருப்பதை விட இருந்ததை இழந்த பின் இருக்கும் வலி கொடியதல்லவா..! அந்த மரணவலியைத் தான் ஆதவ் க்ரிஷூம் அனுபவித்துக் கொண்டிருந்தான். வாய் விட்டு அழவும் முடியாமல் தேற்றக் கூட யாருமில்லாமல் இருந்தவனை விட்டு, தனிமை எனும் உடன்பிறப்பு மட்டும் பிரியவில்லை.

அப்போது அவன் எடுத்த முதல் சபதம் தனக்கு இந்த நிலைமையைத் தந்தவர்களை வேறோடு அறுத்தெறிவது..

மீண்டும் தாய் நாட்டிற்கு திரும்பியவன் அதன் ஆரம்ப கட்டத்தை செயல்படுத்த நாடி எடுத்த முடிவே இந்தத் திருமணம்.

இங்கே வேடிக்கை என்னவென்றால் அவன் எடுத்த முடிவே அவனுக்கு எதிரியாக மாறப் போவது தான்...!


...


மண்டபத்தில் ஆதவ் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாலும் கண்ணில் பழி வாங்கும் வெறியே தாண்டவமாடியது.

அங்கே அப்படி இருக்க இன்னொரு இதயமோ சத்தமில்லாமல் கிழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கேசமெல்லாம் களைந்து கண்கள் தெறித்துவிடுமளவு அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தான் தீக்ஷன்..

அப்போது தான் மண்டபத்திற்கு வந்திருப்பான் போலும். நிமிர்ந்து பார்த்தவனின் கால்கள் வாசலிலே தடைப்பட்டு நின்றது.

அவனின் கண்களோ நடப்பவற்றை நம்ப முடியாத திகைப்பில் ஆழ்ந்திருந்தது. ஆனால் நிஜம் அவனை நடப்பிற்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தது.

ஓரிரு சொந்தங்களுடனே நடந்த திருமணத்தில் ஆதவின் சார்பாக வந்ததிருந்ததோ தீக்ஷனின் குடும்பம் மட்டுமே.. வேறு யாரும் சொந்தமென்று இருந்தால் தானே...!

அந்த சத்தத்தில் திகைப்பிலிருந்து விழித்தவனின் இமையோரம் கண்ணீரின் சாயல். அவன் வாயும் மனமும் ஓயாமல் பிதற்றிக் கொண்டிருந்தது.

வாயோ "ப்ரியா.." என்றும் மனமோ "இப்போ நான் லவ் பண்ணுற நிலைமையில இல்லை.." என்றும் பிதற்றியது.

அதன் அர்த்தம் இது தானா என அவன் மனம் ஊமையாக அழுதது. ஆம் அவளே தான் மணப்பெண் அக்ஷய ப்ரியா... தீக்ஷனின் ப்ரியா...!!!

அநாதையாக நின்று உள்ளுக்குள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவனை நண்பனின் தாலி கட்டும் நிகழ்வு நடப்பிற்கு கொண்டு வந்தது. இதோ அனைத்தும் முடிந்து விட்டது. மனதில் சுருக்கென்ற வலி..

இங்கு யாருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அவர்கள் நடக்கும் அனைத்து சடங்குகளிலும் பிடித்தமின்னையுடன் கலந்து கொண்டனர்.

அவன் முறைத்துக் கொண்டிருப்பது நாம் அறிந்த ஒன்று.. ஆனால் அதனுள் புதைந்திருக்கும் வெற்றிப் புன்னகை அவனறிந்த ஒன்று..

இந்த நிலைக்கு அவனை கொண்டு வந்தவனை நினைக்கும் போதெல்லாம் அவனின் கை தசைகள் இறுகின. அதன் வெளிப்பாடு அவனணிந்திருந்த வெள்ளி ப்ரேஸ்லட் கையுடன் இறுகியது.

ஆதவ் அறிந்த மட்டில் தயாளனின் மகள் தான் அக்ஷய ப்ரியா.ஆனால் உண்மை..?

அவனைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவன் கொடுத்த முதல் அடி அவரின் மகளை மணப்பது. இரண்டாவது, அவர்களை சொந்த மகளின் திருமண நிகழ்வைக் கூட பார்க்க அனுமதிக்காதது..

இவை அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவனுக்கு அவள் அவர்களின் மகள் அல்ல என்ற உண்மை தெரிய வந்தால்...!?

ஆனால் அங்கே பாவப்பட்ட ஜீவன் என்றால் அக்ஷய ப்ரியா தான். மனதில் ஒருவனையும் திருமணம் இன்னொருவருடனும் நடந்தால் யாரால் தான் தாங்க முடியும். அனைத்தும் கை மீறிப் போன வலி அவளுள்.. யாரோ ஒருவர் கூறியதை மறுக்க வழியில்லாத தன்னிலையை நொந்து கொண்டு திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு விட்டாள்.

இதோ தன் கழுத்தில் மங்கல நாண் இட்டவனின் நிறம் என்னவென்று கூட தெரியாத அப்பாவிப் பேதையாகிப் போனாள். மண்டபத்தில் அமர்ந்ததிலிருந்து குனிந்தே இருப்பவள் அவனை நிமிர்ந்து பார்க்கும் போது நிலை...?

யாரோ செய்த தவறிற்கு மூன்று ஜீவன்கள் தண்டனையை அனுபவிக்கப் போகின்றன.. இதுவே விதியாகிப் போனது இங்கே...!!

...

மொத்த சக்தியும் வடியப் பெற்றவனாக தீக்ஷன் நின்று கொண்டிருக்க அவனின் தாய் மீரா வந்து தோளைத் தொட சுயத்தை அடைந்தான்.

தந்தை சங்கர் உட்பட மீராவும் மகனின் தோற்றத்திற்கு வேறு அர்த்தம் கண்டவர்களாக "என்னப்பா..நம்ம க்ரிஷ் பத்தி யோசிக்கிறியா?"

ம்ஹூம் அவனிடம் பதிலில்லை.. பார்வை நண்பனிடமும் அவனின் தாலியை தாங்கி நிற்பவளிலும்.

"அவன் நம்மல விட்டு போய்றுவானு கவலப்படுறியாப்பா..? அவன் எங்கே போகப் போறான். இங்க தானே இருக்கப் போறான். கல்யாணமே வேணானு இருந்தவன் இப்போ ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிக்கான். அவன் திருமணம் முடித்த முறை வேணா பிழையா இருக்கலாம். ஆனால் பாரு ரெண்டு பேரோட ஜோடிப் பொருத்தத்தையும்.. என் கண்ணே பட்டும் போல இருக்குப்பா..." என்றவர் அவர்களை கனிவுடன் பார்த்து பின் மகனின் கன்னத்தை தழுவி "இப்படியே நீயும் காலாகாலத்துல ஒரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்தா அது போதும்பா எங்களுக்கு..." என்றாரே பார்க்க விலுக்கென நிமிர்ந்து தாயைப் பார்த்தவனின் உள்ளமோ சுக்கு நூறாக சிதறி இருந்தது.

"நான் எங்கே இனி கல்யாணம் பண்ணிக்க..?" என்று தான் அவன் மனதில் தோன்றியது. அக்கணம் திரும்பி மேடையைப் பார்க்க ஆதவ் தீக்ஷனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

சட்டென கண்களை அழுந்த துடைத்தவன் ஆதவை நேராக எதிர்கொண்டான். யாரிடமிருந்து தன் உணர்வுகளை மறைத்தானோ அவனுமே அவனின் மறைக்கப்பட்ட அழுகையை கண்டு கொண்டான்.

நேரே வந்தவன் தீக்ஷனை ஆரக் கட்டித் தழுவி இருக்க திரும்பி அணைக்கும் சுய சிந்தனைக் கூட இல்லாமல் நின்றிருந்த தீக்ஷனிடம் "ஐ ஹேவ் டு கோ.." என்றதுடன் திரும்பிக் கூட பார்க்காமல் தன் அக்மார்க் நடையுடன் சென்று விட்டான்.

போகும் அவனுள் பல சிந்தனைச் சிதறல்கள். எல்லாம் தீக்ஷனைப் பற்றித் தான்.

தீக்ஷனின் ஒருதலைக் காதலும் அது மறுக்கப்பட்டதும் ஆதவ்விற்கு தெரியும். அதுவும் பெண்களிடம் இருந்து அவனை தள்ளி நிறுத்த காரணமாகிற்று..!

இப்போது நண்பன் இப்படி நின்றிருக்க காரணம் அவனின் காதல் தோல்வி என அவனாக சரியாக பிழையாக கணித்திருந்தான்.

அதற்கு மாறாக இதுவரை இது பழிவாங்க நடத்தப்பட்ட திருமணம் என தீக்ஷன் அறிந்திருக்கவில்லை. நண்பனாக இருந்தாலும் எதனையும் வாய்விட்டு கூறாதவனிடம் இருந்து எப்படி இப்படிப்பட்ட திட்டத்தை அறிவது..!?

இவனோ புரிந்து கொள்ள முடியா புதிர் !!

போகும் அவனின் முதுகையே வெறித்தாள் காரிகை..

அவன் இப்படித்தான் என அறிந்த மீராவும் சங்கரும் வந்திருந்தவர்களை கவனித்து அனுப்பி விட்டு அக்ஷய ப்ரியாவை ஆதவின் இல்லம் நோக்கி அழைத்து சென்றனர்.

இவளின் தாய் தந்தையை நினைத்து அவர்களுக்குமே பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

தீக்ஷனும் சொல்லிக் கொள்ளாமலே மண்டபத்தை விட்டு கிளம்பி விட்டான். அவனிற்கு நடப்பவற்றை கண் கொண்டு பார்க்க முடியாத நிலை..



தொடரும்...


தீரா.
 
Last edited: