• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 10

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 10

அதேசமயம் அங்கே அந்த பங்களாவில் இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவன் வலியில் அலறிக் கொண்டிருக்க அவனுக்கு முன்னே தனது முழுக் கோபத்தையும் கண்களில் தேக்கி வைத்தவனாக அமர்ந்திருந்தான் ஆதவப் பிறவி.

கண்களிலோ அத்தனைக் கோபம் அவனிடம். தன் வீட்டில் இத்தனை நாளும் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தன் யாரோ ஒருவனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதைத் தான் ஆதவ் காலையில் கேட்டுக் கொண்டிருந்தது.

ஆதவ் எனும் நெருப்பு தன்னைப் பொசுக்க பின்னால் உருமாறி நிற்பதறியாதவனோ "ஆமா சார். அவனுக்கு அந்த ஃபைல எடுத்தது நான் தானு தெரியாது. அன்னைக்கு வீட்டுக்குள்ள அவர் நுழைஞ்சப்ப என் உசுரே போய்ட்டு சார். நானும் உண்மை தெரிஞ்சு தான் வாராருனு பயந்து பயந்து அங்க நிற்க, அவரு என்னைக் கடந்து போன பிறகு தான் எனக்கு மூச்சே வந்துச்சு..." என்றவனிற்குப் பின்னே நின்றிருந்தவனின் கை முஷ்டி இறுகியது.

மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ "தெரியல சார். நான் நெனைக்கிறேன் அந்தப் பொண்ணுக்கும் அவருக்கும் ஆகாது போல. விட்டாரு பாருங்க ஒரு அறை. எனக்கே உடம்பெல்லாம் ஆடிப் பொய்ட்டு. அன்னைக்கு அந்த இடத்துல நான் இருக்க வேண்டியது. பாவம் அந்தப் பொண்ணு அடி வாங்கிச்சு...சரியான பேசா மடந்தையா..." என்று சொல்லி முடிப்பதற்குள் ஃபோனுடன் போய் தொலைவில் விழுந்தவனை கீழே கிடந்த கல் பதம் பார்த்திருந்தது.

ஆம் ஆதவ் தான் அவனை எட்டி உதைந்திருந்தான். எதிர்பாராமல் நடந்த தாக்குதலில் நிலைகுலைந்து திரும்பிப் பார்த்தவனுக்கு ஆதவ்வின் விம்பம் இரண்டிரண்டாக தெரிந்தது. அந்தளவுக்கு அவனை தாக்கி இருந்தவன் பாய்ந்து அவனது காலரைப் பிடித்து தூக்கி தலையால் அவனை இடிக்க அவனுக்கு இடி கலங்கியது. தலையை உலுக்கி தன்னிலை உணர முற்பட்டவனுக்கு அவனது அடியை தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது. "சா..சார்.. " என கூற வந்தவனுக்கு வெறும் காற்றே வெளியே வந்தது.

சர்வ நிச்சயம் அவன் ஆதவின் இந்த வரவையோ தாக்குதலையோ எதிர்பார்த்திருக்கவில்லை என அவனது அதிர்ந்த முகம் காட்டிக் கொடுக்க அவனை விட மனமில்லாமல் ஆவேசமாக தாக்கினான் ஆதவ்.

மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனரே தவிர எதுவும் செய்திருக்கவில்லை. பயத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்க ஆதவைப் பார்த்தான் அவன். அவனது பார்வை இன்னும் அவனை வெறியாக்க எட்டி உதைத்தே அவனது அரை உயிரை வாங்கி இருந்தான். காட்ஸிடம் கையசைக்க அவர்களும் அவனை அள்ளித் தூக்கிப் போட்டு கொண்டு சென்று விட்டனர். அதன் பின்னரே இதோ பங்களாவில் மீண்டும் அவனுக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கிறான் ஆதவ் க்ரிஷ்.

காட்ஸ் ஒருவன் ஓங்கி மூக்கில் குத்த குபீரென இரத்தம் எட்டிப் பார்த்தது அந்த துரோகிக்கு.

அவனோ "சொல்லுடா..யாரு சொல்லி இந்த வேலை பார்த்த..?" என மறுபடியும் குத்த கை ஓங்க அவனைத் தடுத்திருந்தான் ஆதவ்.

அந்த ஒற்றையனின் நிலை அங்கிருந்த விக்ரம் உட்பட யாருக்குமே இரக்கத்தை தருவிக்கவில்லை. எதிரிக்கு மன்னிப்பு வழங்கலாம். ஆனால் துரோகிக்கு...?! ம்ஹூம். கை நீட்டி சம்பளம் வாங்கியதோ ஆதவிடம் என்றிருந்தாலும் சேவகம் என்னவோ அந்த கண்காணாத எதிரிக்கல்லவா செய்திருக்கிறான். இவனுக்கு இந்த நிலை தேவை தான் என அவரவர்கள் மனதில் நினைத்துக் கொண்டனர்.

கூலாக இடது காலுக்கு மேலிருந்த வலது காலை தூக்கி தரையில் வைத்த ஆதவோ இரு கைகளையும் தொடையில் ஊன்றியவாறு நிதானமாக அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

இவனின் இந்த அமைதி புயலுக்கு முன் இருக்கும் அமைதியென அங்கிருந்த அனைவருக்குமே புரிந்து போனது.

வெகு கவனமாக அவனை ஆழ்ந்து பார்த்தவன் "ம்ம் இப்போ சொல்லு. யாரவன்..? " என்றவனே சலுகையாக "நீ உண்மைய சொன்னேன்னா இப்படியே உய்ய்யி...ரோட விட்டுறேன்..." என்றவன் அந்த உயிரில் அழுத்தத்தை கூட்டி இருந்தான்.

அந்த இழுவையே அங்கு கட்டப்பட்டிருந்தவன் தவிர அனைவருக்குமே அடுத்து ஆதவ் என்ன செய்வான் என்பதை உணர்த்தியது.

ஆனால் பாவப்பட்ட அவனோ உயிருக்கு ஆசைப்பட்டு உண்மையை ஒன்று விடாமல் உலறிக் கொட்டி முடிய அவனின் உயிர் இந்த பூமியை விட்டு சென்றிருந்தது.

அவன் கூறியது ஆதவும் அறிந்த உண்மைகள் தான். ஆனால் அவன் வேறு மாதிரியல்லவா ஃபைல் கைமாறி இருக்கிறது என்று நினைத்திருந்தான்.

அடுத்த கணம் விக்ரமுடன் புறப்பட்டிருந்தான் அந்த ஹோட்டலை நோக்கி.

அங்கே அனைத்து தொழிலதிபர்களும் கூடி இருக்க இவன் வந்தவுடன் தங்கள் கருத்துக்களைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டனர். புது டெண்டருக்கான அறிவிப்பு குறித்து சலசலத்துக் கொண்டிருக்க அங்கே குறிப்பிடப்பட்ட பெயரில் அத்தனை நிசப்தம்.

இது வழமையாக நடப்பது தானே என நினைத்துக் கொண்டவர்கள் அனைவரும் ஆதவிற்கு வாழ்த்து தெரிவிக்க இதனைப் பார்த்துக் கொண்டு அங்கே தான் அமர்ந்திருந்தார் தயாளன். வெகுவாக தன் முகத்தில் படபடப்பை மறைத்தாலும் அவன் கண்டு விட்டான்.

சுட்டெரிக்கும் பார்வையில் பிறரை வீழ்த்துபவன் இங்கும் அதே வித்தையை பிரயோகிக்க தயாளனுக்கோ அந்த ஏசிக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது.

அதனைத் தொடர்ந்து அன்று கைமீறிப் போன டெண்டரும் இவனுக்கே கிடைத்திருக்கிறது என்ற செய்தி அங்கிருந்த அனைவருக்கும் புதிது. மீண்டும் அங்கே சலசலப்பு நிலவ அதனை கலைக்கும் முகமாக ஒருவர் எழுந்து அன்று நடந்த ஊழல் பற்றியும் அதற்கு தயாளன் தான் காரணம் என்று கூற மொத்தக் கூட்டமும் கொந்தளித்து விட்டது.

ஏனென்றால் எவ்வளவு தான் தொழிலில் போட்டிகள் இருந்தாலும் யாரிடமும் பொறாமையோ ஊழல் மோசடிகளோ இருந்ததில்லை. அப்படி இருக்க தயாளனின் இந்த செயல் அவர்களை கோபமூட்டி இருந்தது. எல்லோரும் தயாளனை நறுக்கி தாளித்து விட்டனர். நக்கல் சிரிப்பொன்றை அவர் மீதெறிந்தவன் அப்படியே வந்த வழியே போக எத்தணிக்க அவனை மறைத்தது போல வந்து நின்றார் அம்முவின் தந்தை.

இவர் ஆதவின் அப்பாவின் நண்பன். தன் நண்பனின் மகனின் வளர்ச்சியில் உண்மையிலே அகம் மகிழ்ந்தவர் "கங்ராட்ஸ் பா..." என வாழ்த்த "தெங்ஸ் அங்கிள்... " என தலையாட்டி ஏற்றுக் கொண்டான்.

விக்ரமைப் பார்த்து சினேகிதமாக புன்னகைத்தவர் ஆதவின் புறம் திரும்பி "அப்பறம் மனைவி எப்படிப்பா இருக்கா..? லைஃப்லாம் எப்படி போகுது...?" எனக் கேட்ட பின்னரே அவனுக்கு அவள் நினைவு வந்தது.

சட்டென முகம் கறுத்தவன் "ம்ம் வெல் அங்கிள்..." எனப் பொதுப்படையாக கூறிய விட்டு அவரிடம் விடை பெற்று சென்று விட்டான்.

அவன் திருமணம் செய்துள்ளான் என்பது வரை அறிந்து கொண்டவர் அந்தப் பெண் யாரென்று தான் அறிந்திருக்கவுமில்லை பார்த்திருக்கவுமில்லை...!!


...


ஆபிஸ் வந்தவனுக்கோ குழப்பமாகிப் போனது. தலையை கைகளில் தாங்கியவாறு அமர்ந்திருந்தவனின் சிந்தனை முழுக்க முழுக்க அக்ஷய ப்ரியா பற்றியது தான்.

சிட்.. எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டேன்? நானா செய்தேன்..? என்று யோசித்தான். (ஆமா நீ தானே செஞ்ச..)

யாரோ ஒருவன் செய்த தவறுக்காக அவளை தண்டித்து விட்டோமே என பல வருடங்கள் கழித்து ஒருத்திக்காக வருந்துகிறான். நடந்ததை மீட்டிப் பார்க்க அங்கே அக்ஷய ப்ரியாவின் தவறு ஒன்றுமே இல்லை. அன்று அவன் அறைந்த போது வலியில் முகத்தை சுளித்து உதட்டை பிதுக்கி நின்றிருந்தவளின் குழந்தை முகம் இன்று இவனது உள்ளத்தை காயப்படுத்தியது. ஆனால் ஏன் தவறை அவள் செய்யாதிருந்த போது தன்னிடம் உண்மையைக் கூறவில்லை..?(நீ எங்கடா அவள சொல்ல விட்ட..)

தான் அவளுக்கு பேச அவகாசம் தரவே இல்லையே என்பது அவனுக்கு இடித்துரைக்க ஓர் நொடி கண்களை மூடித் திறந்தான்.

அவனொன்று நினைத்தால் வேறு ஏதோவல்லவா நடக்கிறது. அவளை தண்டித்து அவளுக்கு கண்ணீரைக் கொடுத்தால் பெற்றவர்களுக்கு வலிக்கும் என்றல்லவா நினைத்திருந்தான். ஆனால் இங்கே இவளுக்காக யாரும் வருந்தி தன்னிடம் நியாயம் கேட்டு வருவதாக தெரியவில்லையே..? ஏன்.??

அவனுள்ளோ விடை தெரியாத பல கேள்விகள்..!! அப்போது தான் இவளை மணந்து கொண்ட வழியை நினைத்துப் பார்த்தான்.


...


ஆதவ் பாரினில் இருந்து தாய் நாட்டில் காலடி எடுத்து வைத்த தருணம் அது. பல தடைகளைத் தாண்டி தொழில்துறையில் தனக்கென ஓர் உயரத்தைப் பிடித்து மற்றவர்களுக்கு எட்டாக்கனியாய் வெற்றி வாகை சூடி இருந்தான். அவனுக்கு அன்றும் சரி இன்றும் சரி அவன் ஆரம்பித்த அனைத்திலும் ஏறு முகம் தான். அவன் ரத்தினவேல் ஆதவ் க்ரிஷ். சன் ஒஃப் ரத்தினவேல்.

தீக்ஷனும் நண்பனின் வெற்றியில் சந்தோஷமாக கழித்த நாட்கள் அவை. அதில் ஆதவ் புதிதாக மருத்துவமனை கட்டி இருக்க அதன் பொறுப்பை எதிர்பாராத விதமாக தீக்ஷனின் கையில் ஒப்படைத்திருக்க தீக்ஷனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. இருந்தும் தன் உயிர் நண்பனின் மருத்துவமனையை வேறொருவர் பொறுப்பேற்பதை விட தானே கையில் எடுப்பது நல்லது எனக் கருதி உடனே அதனை ஏற்றுக் கொண்டான்.

அந்த சமயம் தான் ஆதவ்விற்கு ஏன் இங்கே வந்தோம் என்பதே நினைவுக்கு வந்தது. உடனே அதற்கான ஆரம்ப கட்டத்தை செயல்படுத்த நாடி தீக்ஷனிடம் தான் திருமணம் செய்யப் போவதாகக் கூற, ஏற்கனவே அவனிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என நினைத்திருந்தவனுக்கு இந்தத் தகவல் திருடித் தின்ன நினைத்தவன் கையில் அல்வா கிடைத்த மாதிரி இருக்க யார்? எவர்? ஏன் திடீரென்று இப்படி? என கேட்காமல் விட்டது அவன் செய்த தவறோ...!?

இதனை மீராவிடமும் சங்கரிடமும் கூற அவர்களுக்கும் அத்தனை சந்தோஷமும் நிம்மதியும். எங்கே இப்படியே திருமணம் வேண்டாம் என்று இருந்து விடுவானோ என்று எத்தனை நாட்கள் வருந்தி இருப்பார்கள். அப்படியே தீக்ஷனிற்கும் நல்ல வரன் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது அவன் ப்ரியா என்ற பெண்ணைக் காதலிப்பது. ஏன்? அது காதலிக்கப்படுபவளுக்கே இன்னும் தெரியாது...

அன்று தீக்ஷன் ப்ரியாவிடம் தன் காதலைக் கூற அவளோ மறுத்து விட்டாள் என்ற செய்தி ஆதவ்வின் காதை எட்டி இருக்க இன்னுமே பெண்களை வெறுத்தான்.

இந்தப் பக்கம் இப்படி இருக்க, அங்கே இந்த தகவலை தயாளனிடம் கூறிய ஆதவ் சலுகையாக அவரது மகளையே மணக்க இருப்பதாக கூறியவனின் பேச்சில் அதிர்ச்சியின் உச்சிக்கே கொண்டு செல்லப்பட்டவர் ஆதவைப் பற்றி ஓர் விடயம் அறிந்திருந்ததால் ஓர் திட்டத்துடன் சம்மதித்தார். ஏன் என்றால் அவன் அந்தளவுக்கு அவரின் தொழிலில் நட்டத்தை ஏற்படுத்தி முடக்கி இருந்தான்.

அவர் உடனே சம்மதித்தது அவனது நெற்றியை சுருங்க வைத்தாலும் தன் முடிவில் உறுதியாக நின்றிருந்தவன் தயாளனைப் பற்றி தெரிந்தளவுக்கு அவரது மகளைப் பற்றி தெரிந்திருக்காதது அவன் செய்த முதல் பெரும் தவறு. விதி தன் திருவிளையாடலை இங்கிருந்தே சிறப்பாக தொடங்கி இருந்தது.

உண்மை என்னவென்றால் அக்ஷய ப்ரியா என்பவள் அநாதைப் பெண். சிறுவயதில் இருந்தே கமலா என்ற பெண்ணிடம் ஆச்சிரமத்தில் வளர்ந்து வந்தவள்.

தன்னைப் போலவே ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்த்து வந்த கமலாவின் கையில் தான் குழந்தையாக அக்ஷய ப்ரியா வந்து சேர்ந்தாள். பாதையோரம் சென்று கொண்டிருந்தவருக்கு குழந்தையொன்று புதர் பக்கம் அழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்க பதறிக் கொண்டு ஓடியவர் கண்டதோ குழந்தை அக்ஷயாவை. குண்டு விழிகளை உருட்டிக் கொண்டு முகம் சிவக்க பசியில் அழுது கொண்டிருந்த அக்ஷய ப்ரியாவை பார்த்த உடன் பிடித்துப் போக கைகளில் ஏந்தி உச்சி முகர்ந்தார்.

பின் அங்குமிங்கும் யாராவது இருக்கிறார்களா என்று தேடிப் பார்க்க யாரும் கண்களில் படவில்லை. குனிந்து மீண்டும் அக்ஷய ப்ரியாவைப் பார்க்க அந்தக் குழந்தையோ தான் கழுத்தில் அணிந்திருந்த மாலையை இழுத்து பசியில் சப்பிக் கொண்டிருந்தது.

அந்த அழகு அவரைக் கவர சங்கிலியைப் பார்க்க அதில் அழகாக அக்ஷய ப்ரியா என எழுதப்பட்டிருக்க அன்றிலிருந்து இவருக்கும் அவள் அக்ஷய ப்ரியாவாகினாள்.

போகப் போக ஆச்சிரமத்தில் குழந்தைகள் வந்து சேர்ந்திருக்க அந்தச் சின்னப் பருவத்திலே கிடைத்த ஒரு பாசத்தையும் இழக்க வேண்டிய துர்பாக்கியசாலியானாள் அக்ஷயா.

அன்றிலிருந்து தனக்கு தான் மட்டுமே என்ற நிதர்சனத்துடன் தனிமையில் வாழ ஆரம்பித்தாள். அந்த சமயம் அந்தளவுக்கு அந்த ஆச்சிரமத்தில் வசதிகள் இருக்கவில்லை. குழந்தைகளோ இருட்டில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் பயந்து ஒடுங்கியதென்னவோ அக்ஷய ப்ரியா தான். இருட்டு என்றால் இவளுக்கு அத்தனை பயம். எங்கே கண்களை மூடினால் இருட்டி விடுமோ எனப் பயந்து அந்தக் குழந்தை இமை மூடாமல் இரவில் கொட்டக் கொட்ட விழித்திருந்த வரலாறும் உண்டு.

அங்கு சமைக்கும் உணவுகளும் சில நேரங்களில் போதாமல் போய் விடும். அதனால் தன்னிடம் இருக்கும் உணவை தன்னை விட சின்னக் குழந்தைகளுக்கு தந்து விட்டு அக்ஷயா பசியுடன் இருப்பாள். அந்த வயதிலே பக்குவம் நிறைந்தவளாய் இருந்த அக்ஷயாவைப் பார்க்க பார்க்க கமலாவிற்கு கண்களை கரித்துக் கொண்டு வரும். இந்தக் குழந்தையை எப்படி அநாதையாக்க அவளது தாய் தந்தைக்கு மனம் வந்ததோ தெரியவில்லை என நொந்து போவார்.

படிப்பில் அதீத ஆர்வம் கொண்ட அக்ஷய ப்ரியாவை அரசாங்க பள்ளிக் கூடம் ஒன்றில் சேர்த்து படிக்க வைத்தார் கமலா. அங்கும் யாருடனும் ஒட்டமாட்டாள். தன் நிலை இது தான் என புரிந்த பின்னும் அவள் மற்றவர்களிடம் ஒட்டுவாளா..?

யார் பேசினாலும் ஓரிரு வார்த்தைகளுடன் பேச்சை கத்தரித்து விட்டு சென்று விடுவாள். இப்படியே நாட்கள் நகர அவள் பத்தாம் வகும்பு படித்துக் கொண்டிருந்த நேரம், பாடசாலை விட்டு வந்தவளை வரவேற்றதோ வெற்று ஆசிரமம்.

பதறிக் கொண்டு கமலாவின் அருகில் சென்றவளுக்கு அவரின் முகத்தில் இருந்த சந்தோஷத்திற்கான காரணம் தான் புரியவே இல்லை.

அவரிடம் கேட்டு விடயம் அறிந்து கொண்டவளுக்கு அவரை விட அத்தனை சந்தோஷம்.

"என்னம்மா சொல்லுறிங்க...?" என்றவளின் சந்தோஷமான முகத்தையே வாஞ்சையுடன் பார்த்து "ஆமாம்மா. யாரோ ஒரு தம்பி அவர்ட அரண்மனைய நமக்காக தானமா தந்திருக்காருமா. இதோ இந்த டாக்டர் தம்பி தான் நம்ம எல்லாரையும் அழைச்சிட்டு போக வந்திருக்காரு..." என்றவரின் கூற்றில் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே தீக்ஷனைக் கண்டு மெல்ல புன்னகைத்தவளை பார்க்காமல் சென்றது தீக்ஷனின் விதியோ...!?

இங்கிருந்து அந்த அரண்மனைக்கு சென்றவளின் மனதில் முதன் முதல் முகம் தெரியாத நபராக பதிந்து போனான் ஆதவ் க்ரிஷ் என்பவன்.

இப்படியே அவளது பத்தாம் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இருக்க மாவட்டத்திலே முதல் மதிப்பெண் பெற்று தன் அடையாளத்தை அங்கே வெளிப்படுத்தி இருந்தாள் அக்ஷய ப்ரியா.

அவளின் திறமையில் கவரப்பட்டு நிறைய ஸ்பொன்சர்ஸ் அவளின் மேற்படிப்பை தொடர உதவி செய்திருக்க சிறுவயதிலிருந்தே ஆசிரியப் படியில் ஆர்வம் உள்ளவள் பிரபல கலைக் கல்லூரி ஒன்றில் தனது பட்டப் படிப்பை தொடர்ந்தாள்.

அங்கே இவளின் அழகில் ஈர்க்கப்பட்டு நிறையப் பேர் அவளை காதலிப்பதாகக் கூறி இருக்க ஒரேடியாக மறுத்து விட்டாள். அதில் கோபப்பட்ட சில கயவர்கள் அவளை அநாதையென்றும் யாருமற்றவள் என்றும் தூற்றி காயப்படுத்தி இருக்க அவை அனைத்தையும் தூசி போல கடந்து விட்டவளுக்கு என்ன செய்தாலும் அந்த அநாதை என்ற வார்த்தையைத் தாங்க முடியாமல் தானே போய்விடுகிறது. அன்றிலிருந்து அவளை கலங்க வைக்கும் ஓர் வார்த்தை இந்த அநாதை என்பது தான்.பெண் மனம் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது தவிக்கிறது இன்று வரை.


தொடரும்...


தீரா.