• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னால் உயிர்த்தேன் - 23

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 23

ஆதவ் போன் பேசிக் கொண்டிருந்தது வேறு யாருடனும் இல்லை. ஏ.சி.பி ருத்ரன் உடனே...

அவனிடமிருந்து சில தகவல்களை கேட்டு அறிந்து கொண்டவன் அழைப்பைத் துண்டித்தான். புது டெண்டர் குறித்து வேலைகள் நடந்து கொண்டிருந்தன..!!

ஏற்கனவே சில வேலைகளை செய்து முடித்து இருந்ததால் இப்போது முழுவதும் செய்து முடித்தவனுக்கு வேறு முக்கியமான வேலை இருக்கவில்லை. கோட்டை கையில் எடுத்தவன் உடனே சென்று விட்டான். ஏதோ வேலையாக உள்ளே வந்த விக்ரமை வரவேற்றதோ வெற்று அறை. குழம்பிப் போனவன் அப்படியே சென்று ரிஷப்ஸனிஸ்டிடம் கேட்டவனுக்கு ஆதவ் சென்று விட்டான் என்ற தகவல் கிடைத்தது.

திரும்பி சென்றவனை தொலைபேசி ஒலி கலைத்திருந்தது. அட்டண்ட் பண்ணி காதில் வைத்தவனை டமால் டுமீல் என அர்ச்சனைகள் வரவேற்றன. தொலைபேசியை காதிலிருந்து நீக்கியவன் ஒரு தடவை காதைக் குடைந்து விட்டு மீண்டும் காதை நோக்கி கொண்டு சென்று "இரு...இரு இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல சார் வில் பி தெயா.." என்று கெத்தாக கூறிய போதும் அங்கிருந்து மீண்டும் அதே திட்டுக்கள் வர "அம்மாடியோ..." என்றவாறு பாக்கெட்டில் தொலைபேசியை போட்டுக் கொண்டே நடையைக் கட்டினான்.


*****


தன் பி.எம்.டப்ளியூ பாதையில் சறுக்கிச் செல்ல உள்ளே அதே அழுத்தமான இறுகிய முகத்துடன் அமர்ந்து காரை செலுத்திக் கொண்டிருந்தான் ஆதவ்.

பாதையில் கவனம் செலுத்தியவாறு வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தவன் கண்டதோ ஒரு பிரமாண்டமான ஜவுளிக் கடையை. அப்படியே அவனது காரின் வேகம் குறைய அதனை ஒடித்துத் திருப்பியவனின் முகம் இப்போது நிர்மலமாக இருந்தது. இதழிலும் ஓர் கீற்றுப் புன்னகையோ..!?

கொஞ்ச நேரம் அந்தக் கடையின் முன் காரை நிறுத்தி வைத்திருந்தவன் சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழல விட்டான். பின் திருப்தியான மனதுடன் இறங்கியவன் ஸ்டைலாக தன் கூலர்சை எடுத்து அணிந்து கொண்டான்.

இரண்டு கைகளையும் பாக்கெட்டில் இட்டவாறு கால்களை லேசாக அகற்றி வைத்து அண்ணாந்து அந்த ஷாப்பை மேலிருந்து கீழ்வரை பார்த்தவன் வழமையான தன் நிமிர்ந்த நடையுடன் படியேறி உள்ளே நுழைந்தான்.

இவனின் கார் தெரு முனைவில் வருவதை பார்த்த செக்யூரிட்டி ஏற்கனவே உள்ளே வேலை செய்பவர்களை அலாட் செய்ய இவனை இந்த நேரத்தில் எதிர்பாராத கடை ஊழியர்கள் மொத்தப் பேரும் படபடப்புடன் நின்றிருந்தனர். இவன் உள்ளே செல்லவே செக்யூரிட்டி முதற்கொண்டு கடை ஊழியர்கள் வரை வணக்கம் தெரிவிக்க அதனையெல்லாம் தன் பார்வையாலேயே ஏற்று சென்றவன் அப்படியே சாரி செக்ஸனை நோக்கி நடையை கட்டினான்.

அந்த செக்சனுக்குள் நுழைந்தவுடனே கடையின் அசிஸ்டன்ட் மெனேஜர், ஸ்டூலொன்றை கொண்டு வந்து போட அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் அவரிடம் ஏதோ சொல்ல அடுத்த நிமிடமே அவன் முன் பரப்பிக் கிடந்தன விலை உயர்ந்த பட்டுச் சாரிகள்.

அதையெல்லாம் சும்மா நோட்டமிட்டவனின் கண்ணில் மயில் நீல நிற ஒரு அழகான சேலை பட அதனை உடனே பேக் செய்ய சொன்னவன் கீழ் தளத்தை நோக்கி வந்த வழியே விரைந்து சென்றான். இதுதான் ஆதவ்... அவனுக்கு பிடித்தது என்றால் எதனையும் யோசிக்க மாட்டான்.

ஆனால் ஊழியர்களையும் அசிஸ்டன்ட் மெனேஜரையுமே ஆச்சரியப்பட வைத்த விடயம் என்னவென்றால், இது நாள் வரையில் கணக்கு வழக்கு பார்க்க மட்டும் வந்து செல்லும் கடையின் முதலாளி இன்று எதிர்பாராத நேரத்தில் வந்தது மாத்திரமல்லாமல் சாரி வேறு எடுத்துக் கொண்டு செல்வது அவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதனை கேட்டுவிட தான் முடியவில்லை. அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவன் வந்த சுவடே தெரியாமல் தன் காரில் ஏறி மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.



*****


இங்கே அந்த பூங்காவிலே ஒருவன் காதை பொத்திக் கொண்டு குனிந்து இருக்க இன்னொருவளோ அவனை வார்த்தைகளால் பதம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இடியட்.. ஸ்டுப்பிட்.. நான்சென்ஸ்.. வளர்ந்து கெட்டவனே.. நெட்ட கொக்கு.." என தன் வாய்க்கு வந்த வார்த்தைகளையெல்லாம் அள்ளி விட்டுக் கொண்டிருந்தாள் அம்மு.

அவளின் திட்டுக்களை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதால் விட்டுக் கொண்டிருந்தான் விக்ரம். அவளோ தொண்டைத் தண்ணி வற்றி போகும் மட்டும் கத்தி தீர்த்தவள் இறுதியாக இயலாமல் போக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க "இவ்வளவு திட்டுறேன் சொரணை இருக்கா பாரு..." என முகம் சிவக்க கல் பெஞ்சின் மேல் போய் அமர்ந்து கொண்டாள்.

அவனோ "க்கும்...அது இருந்தா நான் ஏன் உன் பிரண்டா இருக்க போறேன்.." என வாய்க்குள் முனுமுனுக்க, அது கேட்கவேண்டியள் காதில் நன்றாக கேட்டது. அவளோ "என்ன சொன்ன?என்ன சொன்ன?" என மீண்டும் சண்டைக்குத் தயாராக இவனும் அப்பாவி போல மீண்டும் தன் முகத்தை மாற்றிக் கொண்டான்.

வந்தவள் அவனின் அப்பாவி முகத்தைப் பார்த்து மீண்டும் திரும்பி சென்று அதே கல் பென்ஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

நேரமாகியும் அப்பொழுது கூட முகபாவனை மாற்றாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். கோபத்தில் முகத்தை வேறு பக்கம் திருப்பி வைத்திருந்தவள், இவனிடம் இருந்து எந்த ஒரு சத்தமும் வராமலிருக்க திரும்பிப் பார்த்தாள்.

திரும்பிப் பார்த்தவள் புருவத்தை உயர்த்தி "என்ன?" என கேட்க புன்னகை முகமாகவே அமர்ந்திருந்தான். சிறிது நேரம் இவர்களுக்கு இடையே அமைதி நிலவ அந்த அமைதியை விக்ரமே கலைத்திருந்தான்.

"எத்தனை நாட்களாச்சுடி உன் கிட்ட இப்படி திட்டு வாங்கி" எனக்கூற...

இவ்வளவு நேரமும் வாயடித்துக் கொண்டிருந்தவள் அமைதியாக தலையை கவிழ்ந்தாள்.

"இப்போ ஏன் இப்படி ரியாக்ட் பண்ற?" என மன ஆதங்கத்துடன் விக்ரம் கேள்வி கேட்க, அப்பொழுதும் அவள் அதே நிலையில் இருந்தாள்.

அதில் சற்று கோபம் வர பெற்றவன் எழுந்து அவளருகில் சென்று அமர்ந்து கொண்டான். அவளோ அப்படி ஒருவன் அங்கு இருக்கிறான் என்பது கூட நினைவு இல்லாதது போன்று நடந்து கொண்டிருந்தாள்.

அவளின் இந்த செயல்கள் அமைதியான விக்ரமையே கொஞ்சம் கோபமூட்டியது.

"இடியட் என்னை பாருடி" என அவள் தோளை தொட்டு தன் புறம் ஆவேசமாக திருப்ப அவளது கண்கள் கலங்கி போயிருந்தன.

இவ்வளவு நேரமும் கோபம் வர பெற்றவன் அவள் கண்ணீரை பார்த்தவுடன் நண்பனாக மனம் வலிக்க அவள் முகத்தை தன்னிரு கரங்களால் ஏந்தி "ஹேய்.. என்னாச்சும்மா?" என பாசமாக கேட்க இத்தனை நாளும் தனக்கு ஆறுதல் கிடைக்காதா என தன்னுள்ளே மறுகி கொண்டிருந்தவள் அவன் இப்படி கேட்கவும் நிமிர்ந்து அவனை பார்த்தவள் அப்படியே அவனை அணைத்துக் கொண்டு கதறினாள். அவனோ தேற்றும் வழிதெரியாமல் மனக் கவலையுடன் அமர்ந்திருந்தான்.

"என்னாச்சுடி?? ரிலாக்ஸ்!!" என அவன் வாய் ஆறுதல் கூறினாலும் மனமோ தன் நண்பியின் நிலையை நினைத்து மெதுவாய் கலங்கியது.

இந்த சில நாட்களாக அதாவது தீக்ஷன் உடனான தன் இறுதி சந்திப்பின் பின்னர் அம்மு இப்படித்தான் இருக்கின்றாள்.

முந்தியெல்லாம் யாரும் பேசுவதற்கு முன்னரே ஆயிரம் கதை பேசுபவள் இன்று யாருடனும் பேசுவதும் இல்லை. ஏன் விக்ரமிடம் கூட பேசுவதில்லை. அமைதியே மொத்த உருவமாக கொண்டிருந்தாள். சரியாக சாப்பிடுவதில்லை, உறங்குவதில்லை, தன் தாய் தந்தையுடனான பேச்சுக்களை கூட குறைத்திருந்தாள்.

இத்தனை நாட்களாக தனக்குள்ளேயே தன் கவலையை பொத்தி பொத்தி வைத்து கலங்கி நின்றவள் இன்று தன் உயிர் நண்பன் தன்னிடம் இப்படி பேசவுமே அவள் இதோ இவ்வாறு அழுது கரைந்து கொண்டிருக்கிறாள்.

இவள் சுட்டிப்பெண் தான் இருந்தும் தன் தாய் தந்தையால் மிக்க பாசத்துடன் வளர்க்கப்பட்டவள். ஏன் அக்கம் பக்கம் கூட இவள் மீது இரக்கம் கொண்டவர்களாக இருந்தனர். ஏனென்றால் அவளின் மற்றவர்களுடனான பழக்கவழக்கம் அப்படி.. சிறு குழந்தை போல வெகுளியாக பழகுவாள்.

அம்மு குழந்தை போல நடந்து கொண்டாலும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கக் கூடியவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். பெற்றோர் அறியாமல் அவள் செய்த ஒரே செயல் தீக்ஷனை விரும்பியது மாத்திரமே.

அதனால் தான் அன்று தீக்ஷன் அப்படி நடந்து கொள்ளவும் அவளுக்கு வலித்தது.

அதற்காக அவனிடம் தவறு இல்லை என்றும் இல்லை. அவனிடமே முழுத் தவறும் இருந்தது. ஆதவிடமும் இவனிடமும் இருந்த தவறு ஒன்றுதான். அது ஒரு விடயத்தை முழுவதும் ஆராயாமல் முடிவெடுத்ததே...

அம்மு அழுவதை ஒரு கட்டத்திற்கு மேல் விக்ரமிற்கு தாங்கிக்கொள்ள முடியாமல் போய்விட்டது.

அவளை தன்னிடமிருந்து விலத்தி "ஏய்... இப்படியே அழுதுட்டு இருந்த, நான் அந்த அமர்த்திகாவ கரெக்ட் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பேன்.." எனக்கூற அவன் எதிர் பார்த்தது போலவே அவள் விழுகென நிமிர்ந்து அவனைப் புரியாமல் பார்க்க விக்ரமோ "அச்சச்சோ... அவசரப்பட்டு வாயை விட்டுடமோ?" என திருதிருவென விழிக்க அவனின் முழி சரியில்லை எனத் தோன்ற இடது கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை கரத்தால் துடைத்தவள் "யார் அவ?" என கேட்க பதில் சொல்ல தெரியாமல் விழித்திருப்பது இப்போது விக்ரமின் முறையாகியது.

தவளையும் தன் வாயாலே கெடும் என விக்ரமின் மனசாட்சி அவனை கிண்டல் செய்ய அதற்கு முறைப்பை பரிசாக அளித்து விட்டு இவளைப் பார்த்து விழித்து நின்றான்.

அவன் மனசாட்சிக்கு பதிலளிப்பதற்குள்ளே ஃபோமிற்க்கு வந்தவள் "கேக்குறேன்ல...யார்ரா அவ...?" என டா போட்டு பேச விக்ரம் பயத்தில் விழிபிதுங்கினான். ஏனென்றால் அவனுக்குமே தெரியும்.. அவள் உச்சகட்ட கடுப்பாகினாலே அப்படி பேசுவாள் என.

நண்பனை தன்னிடம் இருந்து யாரோ பிரிப்பது போல தோன்றவே அவள் அப்படி அவனிடம் கேட்டது. அது அவனுக்கும் தெரியும். இருந்தும் எப்படி ஆரம்பிப்பது என்றுதான் அவனுக்கு தெரியவில்லை.

ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டவன். அவளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தான்.

"இங்க பாரு" என அவளை தன் பக்கம் திருப்ப அவளோ அவனின் கை பட்டதே பாவம் என கொண்டவள் கையை தட்டி விட்டாள்.

அதில் உஷாரான விக்ரம் "அடியேய் முதல்ல சொல்றதை கேளுடி..." என்று கூறியவன் "பட் நான் என்ன சொன்னாலும் நீ கோபப்படக் கூடாது... இம்போட்டன் எனக்கு எந்த சேதாரமும் வரக்கூடாது" என்ற ஒரு எக்ஸ்ட்ரா வேண்டுதலையும் முன்வைத்தே கூற ஆரம்பித்தான்.

ஆதவின் கம்பெனியில் வேலை செய்பவள் தான் அமர்த்திகா என்ற பெண்.

அமர்த்திகா பற்றி கூற வேண்டும் என்றால் இவள் அழகான மாது. இந்த காலத்திலும் சிம்ப்ளிசிட்டியை விரும்பக்கூடிய ஒரு மங்கை. சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் தான்,இருந்தும் வீட்டுக்கு ஒரே செல்லப்பிள்ளை. அவளும் அதே கம்பெனியில் வேலை செய்கிறாள்.

அங்குள்ள அனைத்து பெண்களிலும் இவள் சிறப்பாகவே விக்ரமின் கண்களுக்கு தோன்றினாள்.

விக்ரம் ஜொள்ளுப் பார்ட்டியாக இருந்தாலும் அது எல்லாம் ஒரு டைம் பாசுக்கு செய்துகொண்டிருந்தான். இவனும் பார்க்க லட்சணமாக இருப்பவன் தானே. அதனாலே அங்குள்ள பெண்களுக்கு இவன் மேலும் ஒரு கண் உண்டு.

ஆனால் தன்னை ஒரு நாள் கூட நிமிர்ந்து பார்த்திராத அமர்த்திகாவில் இவனுக்கு ஈர்ப்பு உண்டானது. காலப்போக்கில் இந்த ஈர்ப்பு காதலாக மாறியது. இதோ இன்று அம்முவிடம் சொல்ல தயங்குவதும் அதற்காகவே. ஏனென்றால் அவன் இன்னும் அவளிடம் தன் காதலை கூறவில்லையே. அப்படி இருக்க எப்படி மற்றவர்களிடம் தான் காதலிப்பதாக கூறுவான்...

தன் சோகக் கதையை ஒரு பெருமூச்சுடன் கூறி முடித்தவன் தயக்கத்துடன் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

அவளோ நண்பனின் நிலை புரிந்தும் போலி கோபம் கொண்டவளாக தன் பையை கையில் எடுத்தவள் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள். அவளிடமிருந்து இப்படி ஒரு செயலை எதிர்பாராத விக்ரம், முதலில் திணறி பின் அவள் உண்மையிலேயே கோபித்து விட்டாளோ என்ற கவலையுடன் "ஏய் காரப் பொடி நில்லுடி...ஏதாச்சு சொல்லிட்டு போடி..." என அவள் பின்னே ஓட அவளோ அவனை விட்டு நடந்து சென்று கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் நடந்து சென்றவள் அவன் வருகிறான் என எதிர்பார்த்து திரும்பிப் பார்க்க அவனோ சற்றுத் தள்ளி அமைதியாக நின்றிருந்தான்,ஆனால் கண்ணில் கலக்கத்துடன்...!

இவள் சும்மா விளையாட்டுக்கு செய்தது இப்படி வினையாகும் என எதிர்பாராதவள் அவனிடம் தவிப்புடன் ஓடிச் சென்றாள். அவள் வருவதை பார்த்தவன் கலங்கிய விழிகளுடன் இதழ்களை பிரிக்க அவளோ அவனருகில் வந்து அவன் கையில் தன் கையை கோர்த்து, "அவட அட்ரஸை மட்டும் தா... மீதியை நான் பாத்துக்குறேன்..." என வீர வசனம் பேசிவிட்டு அப்படியே மீண்டும் தன் வழியில் சென்று விட்டாள்.

அவளின் பேச்சே அவளிடம் கோபமில்லை என்பதை உணர்த்த, மறுபக்கம் திரும்பி தலையை கோதிக்கொண்டவன் சிரித்துவிட்டு, "ராட்சசி..!! நில்லுடி..." என்ற வண்ணம் அவளிடம் ஓடிச் சென்றான். அவளோ அவன் வருவதை பார்த்தும் புன்னகை முகமாகவே திரும்பாமல் நடந்தாள்.

...

வீட்டின் வாசலில் ஆதவினுடைய கார் வந்து நிற்பதற்குள்ளே மெயின் கேட்டினை திறந்து வைத்து காத்திருந்தான் அவனுடைய செக்யூரிட்டி. பின் அவனுடைய கார் உள்ளே வந்தவுடன் கேட்டினை மூடிவிட்டு ஓடிவந்து ஆதவுக்கு வணக்கம் வைத்தான்.

இவனோ எப்போதும் போல தன் தனிப்பட்ட ஸ்டைலுடன் காரிலிருந்து இறங்கியவன் பின் சீட்டின் கதவைத் திறந்து அந்த பார்சலை எடுத்தான். அது அவளுக்காக எடுத்த வந்திருந்த சாரி...

அதனை கையில் எடுத்தவனுக்கோ புது மாதிரியான உணர்வு தோன்ற நிற்கக்கூட பொறுமையற்று விறுவிறுவென தன் கோட்டைக்குள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவனின் பார்வையோ தன் மனைவியை தேடியது. இவன் வந்து கொண்டிருக்கும் போதே இவனை கவனித்த மரகதம் என்னானதோ என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவனிடம் கேட்க திராணியற்று பின்னர் தன் வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார்.

இவனோ முதலில் கிச்சன் பக்கமே அவளை தேடினான். அவள் அங்கு இல்லாமல் போகவே தன் தோட்டத்துக்குச் சென்று தேடியவன் அங்கும் அவளைக் காணாமல் போக ஏமாற்றத்துடன் மீண்டும் படிகளை இரண்டிரண்டாக தாவி அவளது அறையை தேடிச் சென்றான்.
அங்கு அவனை ஏமாற்றாமல் கட்டிலில் அமர்ந்து இரு கால்களையும் கட்டிக்கொண்டு தலையை அதில் வைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள், அவனின் தேடலுக்குரியவள்.

இந்த சில நாட்களாக தனிமையே தன் துணையென அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாள் பேதை. அவள் உள்ளமோ தனிமையை நாடிச் சென்றது. ஆரம்பத்தில் எப்படி யாருடனும் ஒட்டாமல் இருந்தாளோ அதே மனநிலையில் இப்போதும் இருக்கிறாள். அது எதனால் என்று அவள் மட்டுமே அறிவாள்.

சத்தம் எழுப்பாமல் அவளின் நிலையை ரசித்துக் கொண்டிருந்தன ஒரு சோடிக் கண்கள். அது வேறு யாருடையதா தான் இருக்கும். சாக்ஷாத் ஆதவினுடையதே.

வழமைபோல சிபோன் சாரியில் அழகு பதுமையாக அமர்ந்திருந்தாள். அவள்முகம் அவளது கால்களுக்கிடையில் புதைந்திருந்ததால் அதன் தரிசனம் இவனுக்கு கிட்டவில்லை.

எனினும் தன் மனைவியை ரசிப்பதை மட்டும் விடவில்லை. நீண்ட கூந்தலை சுருட்டி கொண்டையிட்டிருந்தவள் அந்நிலையில் அப்சரஸ் போல காட்சியளித்தாள்.

தான் தானா இப்படி என்று இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. இருந்தும் அந்த மாற்றங்கள் அவனுக்கு பிடித்து இருந்ததால் அதனை ரசித்து அனுபவித்த வண்ணம் தன் இணையை பார்த்துக்கொண்டிருந்தான் அந்த ராட்சச வேட்டைக்காரன்.

ஆனால் அவளோ அப்படி ஒருவன் அங்கு நிற்கின்றான் என்பது கூட தெரியாமல் தன் உலகில் தனிமையுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். பின்னர் சிறிதுநேரம் அப்படியே நின்றவன் ஓசை எழுப்பாமல் தன் கால்களை எடுத்து வைத்தவன் அவள் அருகில் சென்று பின்னுக்கு கையைக் கட்டிக் கொண்டு நின்றான். அப்படியே பொறுமையுடன் நின்றிருந்தது தான் உலக அதிசயம்.

ஆனால் அவள்தான் எழும்புவதாக இல்லை. எனவே ஒரு கையை தன் வாயில் வைத்து க்கும்...என்கவும், கனைத்தல் சத்தத்திலே திடுக்கிட்டு எழுந்து சுற்றுமுற்றும் தன் தலையை திருப்பி பயத்துடன் தேடினாள் மாது. இவனுக்கு தான் "ஏன்டா.. சத்தம் போட்டோம்" என்றாகியது... பெருமூச்சை வெளி விட்டவன் மீண்டும் தன் கைகளை பின்னுக்கு கட்டிக் கொண்டு நின்றான்.

அவளோ ஒரு பக்கம் தலையை சுழற்றி விட்டு அடுத்த பக்கம் திரும்ப அப்படியே அவனைக் கண்டு பயத்தில் கட்டிலில் அமர்ந்த வண்ணமே ஓரடி பின்னே நகர்ந்தாள். இவளின் செயல்களையே விசித்திரமாக பார்க்க வேண்டியது அவளது கணவனின் முறை ஆகியது. "ஏன் இப்படி பயப்படுறா. முதல்ல இப்படி பயப்படுவதிலிருந்து இவளை வெளியே கொண்டு வர வேண்டும்" என்று அவனது மனதில் தோன்றாமல் இல்லை.

முன்னப்பின்ன பெண்களுடன் பழகி இருந்தால் தானே இயற்கையாகவே அவர்களிடம் இருக்கும் பயந்த சுபாவத்தை அறிந்து கொள்வான். இவன்தான் சிறுவயதிலிருந்து பெண்களுக்கும் அவனுக்கும் ஏதோ போர் நடக்கப் போவதை போல திரிந்தவன் ஆயிற்றே...!! என்ன செய்வது அதுவும் விதியின் விளையாட்டே!!!

ப்ச்.. என்ற வண்ணம் திரும்பியவன் அப்போதுதான் அவள் கண்களைப் பார்த்தான். அவை கலங்கிப் போயிருந்தன. கண்கள் கலங்கிப் போய் இருப்பது நாம் அறிந்த ஒன்று... ஆனால் அந்தக் கண்களில் குடிகொண்டிருந்த சோகத்தை தான் இவனால் தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது. தன் இதயத்தில் ஏதோ முள் தைப்பது போல இருந்தது.

அவனின் வாழ்க்கையை சொர்க்கம் ஆக்கியது அல்லவா இந்த கண்கள்...!!

அப்படியிருக்க அதிலுள்ள சிறு சோகத்தையும் தாங்க முடியுமா என்ன??

ஆனால் அந்த சோகத்தை நீக்க முடியாமல் எட்ட நின்று பார்க்கும் நிலையாகி விட்டது இவனது!!!

தன்னையே நொந்து கொண்டவன் சந்தோச பூமியை தன் மனைவிக்கு பரிசு அளிப்பதற்கான அந்த நாளுக்காக காத்திருந்தான்.

ஆனால் அவன் அறியவில்லை அதற்கு முன்பு அந்தக் கண்களில் தன்னாலேயே மீண்டும் சொல்லொண்ணா துயரம் வந்து ஒட்டிக்கொள்ள போவதை....

அவள் தன்னையே விழி விரித்து பார்த்திருப்பதை மறந்து அவளின் கவலையைப் போக்குவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தவன், அப்போதுதான் சுயத்தை அடைந்தான். தன் தலையில் மானசீகமாக தட்டியவன் தான் அமர்ந்தால் அவள் எழுந்து கொள்வாள் என்று சரியாக கணித்து விட்டு நின்ற வண்ணமே அவளிடம் "வாட் ஹேப்பன்?" என கேட்க, இவளுக்கோ வார்த்தைகள் தந்தி அடித்தன.

"அ..அ...வந்..." என இவள் வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்க இவனுக்கோ அவளின் நிலை கழிவிரக்கத்தை தோற்றுவித்தது.

பின்னர் இவ்வளவு நேரமும் தன் பின்னே மறைத்து வைத்திருந்த பார்சலை அவள் முன் நீட்டினான் வேங்கை.

அவளோ புரியாமல் அவனை நோக்க அந்த மான் விழிகளில் தன்னைத் தொலைத்தவன், அவளைப் பார்த்த வண்ணமே "திஸ் இஸ் போர் யூ" என அவளிடம் நீட்டினான்.

ஆனால் அக்ஷய ப்ரியாவோ ஏதும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டாள்.

இவனோ ஏதோ எதிர்பார்த்து வர இங்கு நடந்தது வேறு மாதிரியாக இருந்தது. இப்போது குழம்புவது இவன் நிலை ஆகிவிட்டது...

அவனது மனசாட்சியோ, "டேய் ஆதவ் என்னடா இது?" என கேட்க அவனோ மனசாட்சியை முறைத்துவிட்டு, "அதைத்தான் நானும் பார்த்துட்டு இருக்கேன்" என்று கூற மனசாட்சி, இவனுக்குப் பயந்து ஒளிந்து கொண்டது.

அவள் பேசுவாள் என இவனும் இவன் எதற்காக நிற்கின்றான் என அவளும் இருக்க இதற்கு மேலேயும் பொறுத்திருக்க முடியாதவன் அப்படியே வெளியேறி விட்டான்.

அவன் மனமோ ஏமாற்றத்துடன் சென்றது. தான் கொடுத்ததுக்கு மகிழ்வாள் என்று நினைக்க அவளோ வாய்க்கு பூட்டு போட்டு வைத்திருந்தாள். அட்லீஸ்ட் தேங்க்ஸாவது சொல்லுவாள் என பார்த்திருக்க அதிலும் ஏமாற்றமடைந்தவன் தன் மீதே கோபம் கொண்டவனாக அப்படியே சென்று விட்டான்.

பின் அக்ஷயா பிரஷ் ஆகிக் கொண்டு கீழே வர அவள் பின்னே யாருமறியாமல் அவனும் இறங்கி வந்தான். கீழே வந்தவள் தேடி சென்றது மரகதத்தை.

கிச்சனுக்குள் நுழைய அங்கே சமையல் வேலையில் மும்முரமாக இருந்தார் மரகதம். அவர் அருகில் சென்றவள், "அம்மா..." என்றழைக்க கனிவுடன் திரும்பினார் அந்தப் பெண்மணி.

"என்னமா ஏதாச்சு வேணுமா?" என பாசமாக அவர் கேட்க இவளும் சிறு புன்முறுவலுடன் "வேண்டாம்" என மறுத்து விட்டாள்.

"வேற என்னமா?" என்று அவர் கேட்க "அது...வந்து..." என அக்ஷயா தடுமாற "என்னமா கேட்கணும்? தயங்காம கேளு..." என எடுத்துக் கொடுக்க "அது ஒன்னும் இல்லம்மா... இ..இவர் எப்பயாச்சும் உங்க எல்லாருக்கும் துணிமணிகள் எடுத்து தருவது உண்டா?" எனக்கேட்க அவரோ ஆதவைத்தான் கேட்கிறாள் என சரியாக கணித்து "ஆமாமா.. ஏதாவது பண்டிகைன்னா எடுத்து தருவார்" எனக்கூற இவ்வளோ ஓஓஓ... என்ற ஓசையுடன் திரும்பி சென்று விட்டாள்.

சமையல் வேலையில் மும்முரமாக இருந்தவருக்கு அவளுடைய கேள்விக்கு பதில் அளிப்பது மட்டுமே தலையாய கடமையாக இருந்தது. அவள் எதற்காக கேட்கிறாள் என்றெல்லாம் அவர் அறிய முற்படவில்லை.

இவளோ எப்போதும் போலவே தன்னிலையை கடந்து சென்றுவிட்டாள், ஆனால் மனக்கவலையுடனும் விழிகளில் கண்ணீருடனும்..!!

இதை கேட்டுக்கொண்டிருந்த மற்ற உள்ளம் தான் குற்ற உணர்வில் வெந்து கொண்டிருந்தது. ஆம் அது ஆதவேதான்.

அவள் எதற்காக கேட்டாள் என்றால், அவன் ஆடை வாங்கி கொடுக்கும் போதே தன் வீட்டு வேலைக்காரர்களுக்கு வாங்கிக் கொடுப்பது போலவே தனக்கும் வாங்கித் தந்துள்ளான் என்றே நினைத்தாள். அதனாலேயே அமைதியாகவும் இருந்தாள். ஆனால் அதைத் திறந்து பார்த்தவளுக்கு தான் சந்தேகம் ஆகிப்போனது. ஏனென்றால் அதில் இருந்ததோ விலை உயர்ந்த சாரி. இது ஏன் தனக்கு? என்று யோசித்தவள் அவன் தகுதி பற்றி பேசியது நினைவு வர மனம் வலிக்க அதனை தடவிப் பார்த்தாள்.

அதன் பின்னரே மரகதத்தை தேடி வந்து கேட்டது. அவள் மனதில் நினைத்தது போலவே அவரும் பதிலளிக்க ஏதாவது விழாவாக இருக்கும் போல அதனால் தான் தனக்கும் வாங்கித் தந்துள்ளான் என்றே எண்ணிக் கொண்டாள். அவள் மனதில் உள்ளதை அச்சொட்டாக படித்தவன் போல அவன் அனைத்தையும் கேட்டுக்கொண்டு நின்றதுதான் விதி செய்த சதியோ..!!!

எப்போதும் போலவே தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவன் சுவற்றில் ஓங்கி குத்தினான்.

அதில் அவன் கை சதை கிழிந்து ரத்தம் பீறிட்டு வழிய அதைக் கூட உணராதவனுக்கு தன் கோபமே பெரிதாகிப் போய்விட்டது. அப்படியே தடதடவென படிகளில் ஏறி தனது அறை சென்று அறைந்து சாத்தினான் கதவை. அதிலே அவன் கோபம் விளங்கலாயிற்று...

ஏதோ வேலையாக மீண்டும் திரும்பி கிச்சன் பக்கம் வந்தவளுக்கு தான் அது கண்ணில் பட்டது. ஆம் அவனது இரத்தம் தரையில் சிந்திக் கிடந்தது. என்ன இது?என்று கீழே அமர்ந்து அதனைத் தொட்டுப் பார்த்து இரத்தம் என்று உறுதிபட, அதிர்ந்து விட்டாள் பேதை. யாருடையது? இது எப்படி இங்கு வந்தது? என்று தன்னுள்ளே கேள்விகள் கேட்டு கொண்டவள், திரும்பிப்பார்க்க ரத்தத் துளிகள் படிகளிலும் கிடந்தன.

அப்படியே மேலே பார்த்தவளுக்கு ஆதவின் அறையே தென்பட கதிகலங்கி விட்டாள் காரிகை.


தொடரும்...


தீரா.