• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 1

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 1

“சொல்ற பேச்ச கேக்காத புள்ள எதுக்கு? வுடு! எக்கேடு போகட்டும்.. கழுதை கெட்டா குட்டி செவுருன்னு நம்மகிட்ட தான வரணும்? அப்போ தெரியும் இந்த வீரபாகு யாருன்னு” என்று மீசையை நீவியபடி வீரபாகு சென்றுவிட,

“அம்மா சொல்றதை கேளு டா கண்ணு! பக்கத்துல எத்தனையோ காலேஜு இருக்கு.. எவ்வளவு செலவானாலும் பரவால்ல.. நான் பாத்துக்குறேன்.. இங்கேயே படி டா!” என்றார் வைதேகி கணவன் சென்றதும் மகனிடம்.

“இவ்வளவு நாளும் உங்க விருப்பப்படி தானே ம்மா படிச்சேன்? இனி என் ஆசைக்கு இருந்துக்குறேன்” என்றான் அவன்.

“அவனை பேச விட்டு நீ அடி வாங்காத.. துரை முடிவோட தான் வந்துருக்காரு..” வீரபாகு உள்ளிருந்து கூற,

“இப்போ எதுக்கு இவ்வளவு சீனு? காலேஜ் முடிச்சி ட்டேன். அதுவும் நீங்க தான் பார்த்து சேர்த்து விட்டிங்க.. மேல படிக்க ஹாஸ்டல் போறேன்னு சொன்னா லபோதிபோன்னு கத்துறீங்க..” என்று கோபமாய் மகன் கேட்க,

“கொஞ்சம் மெதுவா பேசு டா!” என்றார் அன்னை வைதேகி.

“வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்தணும்னு அக்கறை இல்லாதவனுக்கு கோபத்துக்கு ஒன்னும் குறை இல்லை” – வீரபாகு.

“ம்மா! நான் ஒரு பைசா உங்ககிட்ட இருந்து கேட்கல.. ஸ்காலர்ஷிப் போக நான் பார்ட்டைம் ஜாப் பாத்துக்குறேன்.. முடிஞ்சவரை வீட்டுக்கும் தர ட்ரை பண்றேன்.. அது மட்டும் இல்லை.. ரெண்டு வருஷம் தான்..அப்புறம் இன்னும் ஈஸியா என்னால நல்ல ஜாப்க்கு போக முடியும்”

புரியும்படி எடுத்துக் கூறியவனை அப்படித்தானோ என நினைத்து வைதேகி பார்க்க,

“அப்போ நீ அந்த பொண்ணுக்காக போகல.. படிக்க, வேலை பாத்துட்டே படிக்க தான் போற! இதை நாங்க நம்பனும்? அப்படித்தான? “ என்ற கேள்வியில் மௌனமாக்கி இருந்தார்.

“என்னது? பொண்ணா!” மகனருகில் அமர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்த வைதேகி எழுந்து நிற்க,

“பின்ன உன் மவன் திருந்திட்டான்னு நினைச்சியாக்கும்? அந்த புள்ள படிக்க காலேஜ்ல தான் சீட்டு வாங்கிட்டு வந்து ரொம்ப நல்லவன் மாதிரி வியக்கியானம் பேசிகிட்டு இருக்கான்” என்று மகனைப் பற்றி புட்டு புட்டு வைத்தார்.

“அப்பா சொல்றது உண்மையா டா?” கோபமாய் வைதேகி கேட்க, தந்தைக்கு கேட்காத வண்ணம் சத்தம் வராமல் வாயசைத்து அவன் கெஞ்ச,

“எடு துடப்பகட்டைய! நினச்சேன்! நான் ஒரு கிறுக்கி! உன்னை பத்தி தெரிஞ்சும் எங்க படிச்சி உருப்பட தான் கிளம்பிட்டியோன்னு நினச்சேன் பாரு.. என்னைய சொல்லணும்.. ச்சீ! எந்திச்சி போ டா.. நீ எங்கிட்டு வேணா போ!” என்றவர் கோபமாய் தந்தை இருக்கும் அறைக்கு எதிர்புறமாய் செல்ல, இரு பக்கமும் திரும்பி திரும்பிப் பார்த்தவன் முகத்தில் கொஞ்சமும் பயமோ கவலையோ இல்லை.

கல்லூரி செல்ல அனுமதி வாங்கிய சந்தோசம். தந்தை வெளியே வரும் முன் தன் அறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டான்.

சத்ய பிரியன்! வீரபாகு – வைதேகியின் ஒரே மகன். இளங்கலை கணினிமுடித்துவிட்டு அதில் முதுகலையில் சேர விண்ணப்பதுடன் வீட்டிற்கு வந்து நிற்கும் மாணவன்.

அலைபேசியில் பத்து தவறிய அழைப்புகள் காட்ட, அழைத்திருந்த தன் நண்பனிற்கு அழைத்தான் சத்யா.

“சொல்லு டா!” சத்யா கூற,

“உன்னை அலெர்ட் பண்ண தான் கூப்பிட்டேன்.. அதான் செமத்தியா வாங்கிட்ட போலயே!” என்றான் சங்கர்.

“நீ தான் அவர்கிட்ட போட்டு குடுத்ததா?” சத்யா கோபமாய் கேட்க,

“எனக்கென்ன வேலை இல்லையா டா? என்னை பெத்தவர் தான் உன்னை பெத்தவரை ரோட்ல பார்த்து முழுசா ஒப்பிச்சி விட்ருக்கார்.. தப்பிச்சிக்கோன்னு சொல்ல தான் கால் பண்ணேன்.. நீ எடுக்கலைன்னதுமே மாட்டிக்கிட்டன்னு தெரிஞ்சிடுச்சிடுச்சி” என்றான் அவன்.

“சரி என்ன நிலவரம்? காலேஜ் போறியா இல்லை பிளான் கேன்சல்லா?” சங்கர் கேட்க,

“விடுவேனா? அதெல்லாம் பக்காவா ரெடி! ஆமா போட்டு குடுத்ததுக்கே என் அப்பா இந்த கேள்வி கேட்குறார்.. உன் அப்பா உன்னை ஒன்னும் சொல்லல? “ திருப்பி சத்யா கேட்க,

“ஏன் இல்லாம! கையில மாட்டி இருந்தா அடிக்கிற அடியில பிதாமகன் சூர்யா ஆகி இருப்பேன்.. ஜஸ்ட்டு மிஸ்ஸு.. உன் காதலுக்கு நான் தலைமறைவா திரிய வேண்டி இருக்கு.. “

“விடு டா! விடு டா.. காதல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே? சரி நாளைன்னைக்கு கிளம்பனும்.. ரெடியா இரு” என்றவன் அழைப்பை துண்டித்து எட்டிப் பார்க்க, தந்தை வண்டி வீட்டில் இல்லை.

“ம்மா! ம்மா!” என்று சத்தமாய் அழைத்து சமையலறை வர,

“உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா டா? அப்பா வீட்டுல இல்லைனா மட்டும் சவுண்ட்டு எகுறது” என்றார் வைதேகி.

“அப்பாக்கு பயந்த புள்ள ம்மா நானு” என்றவனை மேலும் கீழுமாய் பார்த்தார் வைதேகி.

“பயந்தவன் பண்ற வேலையா டா இது? அந்த புள்ள என்னைக்கு போலீஸ் கம்பளைண்ட் குடுக்கோ அன்னைக்கு தான் நீ உருப்பட போற!”

“உன் மருமக ரொம்ப நல்லவ மா.. அப்படி எல்லாம் பண்ண மாட்டா.. அதையெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. அப்பாவை மட்டும் சமாளிச்சு…” என்று இழுக்க,

“சமாளிச்சு?” என்று முறைத்தார் அவன் சொல்ல வருவது புரிந்து.

“ஸ்காலர்ஷிப் வர ரெண்டு மாசம் ஆகும்.. அப்புறம் வேலையும் போனதும் கிடைக்காது.. ஒரு ரெண்டாயிரம் மட்டும்…” என்று கேட்க,

“இந்த வெட்கம்,மானம், சூடு, சொரணை இதெல்லாம் உனக்கு என்னைக்கு தான் டா வரும்?”

“வீரபாகுக்கு பொறந்த என்கிட்ட இவ்வளவு கேட்கலாமா நீ?”

“அடிங்க! காசு வேணும்னு கேட்க தெரியுது.. இந்த வெட்டி பந்தாக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல”

“இப்ப வாங்கி தருவியா இல்லையா?”

“இல்ல டா! என்ன பண்ணுவ?”

“அப்படிலாம் சொல்லாதீங்க ம்மா!”

“உங்க அப்பாகிட்ட எல்லாம் என்னால கேட்க முடியாது.. அந்த வெந்தய டப்பாக்குள்ள எவ்வளவு இருக்கோ அவ்வளவு தான்.. வேணும்னா எடுத்துட்டு ஊரைக் காலி பண்ணு” என்று கூற,

“இது பத்தாது ம்மா!” என்றான்.

“அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்ய முடியாது.. அவ்வளவு தான் இருக்கு.. போய்ட்டு நீ சொன்ன மாதிரியே இருந்துக்க.. பத்து பைசா கேட்டும் வந்துறாத! நானே துடப்பத்தால அடிப்பேன்.. அந்த புள்ளையையும் ரொம்ப டார்ச்சர் பண்ணாத.. எந்த பிரச்சனையும் பண்ணாம படிப்பையும் பார்த்துக்க”

“கொஞ்சமா டார்ச்சர் பண்ணலாம்ன்ற?”

“போலீசு கேசுன்னு வந்து நின்னா உன் அப்பா தலையில தண்ணிய ஊத்தி நீ என் மகனே இல்லைனு சொல்லிடுவாரு பாத்துக்கோன்னு சொல்றேன்” என்றார் வைதேகி.

“அப்பாக் கூட சேர்ந்து நல்லா பேச மட்டும் கத்து வச்சுருக்க ம்மா.. போலீஸ் கேஸ் எல்லாம் ஆக வாய்ப்பில்லை.. அவளுக்கும் என்னை தெரியும்.. பிடிக்கும்.. என்ன ஒத்துக்க மாட்டேன்ங்குறா!”

“இப்படி தான் டா சொல்லுவீங்க! கடைசில அவ உன்ன அண்ணா…”

“ம்மா! நீ காசு தரலன்னாலும் பரவால்ல.. உன் வாயால அந்த வார்த்தையை சொல்லிடாத! நெஞ்சு வெடிச்சிடும் எனக்கு” என்றவன், நெஞ்சில் கைவைத்து தலையை உலுக்கிக் கொள்ள,

“படிக்குற பையன்.. எங்க போனாலும் பொழச்சுக்குவன்ற நம்பிக்கைல தான் நான் நிம்மதியா இருக்கேன்.. நம்பிக்கையை பொய்யாக்கிடாத.. படிக்குற வேலையையும் பாரு.. காதல் வர்றது எல்லாம் சரி தான்.. ஆனா அதுவே முத்தி போற அளவுக்கு வர கூடாது.. உனக்கு இருக்க அறிவுக்கு நீ ரொம்ப பெரிய ஆளா வருவன்ற எண்ணம் எனக்கு இருக்கு.. அதை பொய்யாக்குற எந்த ஒரு எண்ணமும் உனக்கு வர கூடாது.. உன் அப்பாவும் ரொம்ப எல்லாம் பேசல.. பார்த்த தானே? அவருக்கும் நீ மேல படிக்குறதுல இஷ்டம் தான்.. இந்த காதல்னால என்னாக போறியோன்னு அவருக்கும் பயம்” என்று கூற,

அன்னையின் புரிதல்கள், பயம், தனக்கு தரும் ஆறுதல் என மொத்தத்தையும் உணர்ந்தான் அவன்.

“சரி சரி! கிளம்புற நேரத்தை சொல்லு… இட்லி பொடி கூட கொஞ்சம் பலகாரம் செய்யுறேன்..” என்ற அன்னையைப் பார்த்து சிரித்து நின்றான் சத்ய பிரியன்.

“நந்து! எப்படி இருக்க டா?” ஜீவன் கேட்க,

“நல்லாருக்கேன் ண்ணா! நீங்க, அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்றாள் நந்து என்ற நந்தினி.

“நல்லா இருக்கோம் டா.. உனக்கு காலேஜ், ஹாஸ்டல் எல்லாம் ஓகே தானே? சாப்பாடு எப்படி இருக்கு?” ஜீவன் கேட்கவும்,

“எல்லாம் ஓகே ண்ணா.. சாப்பாடு பரவால்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..” என்றவள்,

“அம்மா எங்கே ண்ணா? சாப்பிட்டாங்களா?” என்று கேட்க,

“ஆச்சு நந்து.. அம்மா கோவிலுக்கு போனாங்க.. வந்ததும் பேச சொல்றேனே!” என்றவன்,

“இரு! ஜெயா பேசணுமாம்” என கொடுத்தவன் வெளியில் சென்றுவிட,

“நல்லாருக்கீங்களா அண்ணி!” என்றாள்.

“ஹான் ஹான்! நல்லாருக்கோம்.. என்ன போன் எல்லாம் உங்க அண்ணனுக்கு?” என்று கேட்கவும் சில் நொடி மௌனம் நந்தினியிடம்.

“உன் அம்மாகிட்ட பேசணும்னா அவங்களுக்கு பண்ண வேண்டியது தானே?” என்று ஜெயா கேட்க,

“இல்ல! அம்மாக்கு தான் பண்ணினேன்.. அவங்க கால் அட்டன் பண்ணல.. அதான்.. “ என்று நந்தினி இழுக்க,

“ஏன்? எடுக்கலைனா ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு திரும்ப பண்ண முடியாதா?” என்றாள்.

“அண்ணா நைட் கால் பண்ணி இருந்தாங்க.. நான் பேசலை.. தூங்கிட்டேன்.. அதான் பேசலாம்னு பண்ணினேன்”

“ஓஹ்! அதானே பார்த்தேன்.. உன் அண்ணனுக்கு வேற வேலையே இல்ல” என்றவர்,

“இங்கே இருக்கும் போது என்னை டார்ச்சர் பண்ணினது போதாதா உனக்கு? என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டிங்களா நீயும் உன் அம்மாவும்? “ என்றவள், ஜீவன் உள்ளே வரவும்,

“சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கா.. சரி சரி நந்து.. நல்லா சாப்பிடு.. அத்தையை நான் பார்த்துக்குறேன்.. “ என்றவள் வைத்துவிட, ஒரு பெருமூச்சுடன் அணைத்தாள் நந்தினி.

“நந்து என்ன சொல்றா?” ஜீவன் கேட்க,

“ஹாஸ்டல் ரொம்ப புடிச்சி போச்சாம்.. பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்துட்டாங்களாம்.. அடிக்கடி போன் பண்ண வேண்டாம்னு சொல்ல சொன்னா.. வார்டன் திட்டுவாங்களாம்” ஜெயா கூற,

“வீட்டுல இருந்து கூட பண்ண கூடாதாமா? சரி தான்.. நிலைமை அந்த மாதிரி இருக்கு” என்றவன் போலீஸ் உடையை அணிந்து கிளம்பி இருந்தான்.

நந்தினி கல்லூரியில் சேர்ந்து ஐந்து நாட்கள் ஆகிறது. அன்னை விஜயலட்சுமி. அண்ணன் ஜீவன், அண்ணி ஜெயா என்பது அவளது குடும்பம். அண்ணன் பாசமானவன். அண்ணியும் பாசமானவள் அண்ணன் இருக்கும் பொழுது மட்டும்.

இப்படிபட்ட குடும்பத்தில் இருக்கும் நம் நந்தினியின் நாயகன் தான் வைதேகியின் மகன்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
கத்தும் மொழிகள் எல்லாம்
காதில் விழாது
காதல் கனவில் இருக்கும் சத்யா....
காவல் அண்ணண்
கண்டிப்புடன் அண்ணி...
காதல் இங்கிருந்து வருமா....நந்தினி....
நல்ல தொடக்கம் 💐💐👍👍👏👏
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
சத்யாவுக்கு சூடு சொரணை கம்மி தான் ஆயி அப்பன் எவ்வளவு கரிச்சு கூட்டினாலும் அவன் வேலைக்குதான் முக்கியதுவம் தாரான் பொழச்சுக்குவான். இவே நிஜமாலுமே part time வேலை பாப்பானோ, பாப்போம் பாப்போம் 😄😄😄😄😄😄