• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 33

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 33

"எங்க ப்பா இருக்கிங்க?" என மரியாதையாய் தந்தையிடம் பேசிய சத்யாவின் குரலில் ஏகத்திற்கும் கலக்கமும் பதட்டமும்..

சுத்தமாய் இப்படி ஒன்றை அவன் எதிர்பார்க்கவே இல்லையே! இப்படி அரக்கப் பறக்க ஊருக்கு ஓடி வருவோம் என்றும் நினைத்தும் பார்த்திருக்கமாட்டான்.

"டேய்! அம்மா பேசுதேன் டா.. கிளம்பிகிட்டே இருக்கோம்.. நம்ம முனிசாமி அய்யா வீட்டுல வெத்தல இருக்குன்னு அப்பா வாங்க போயிருக்காங்க.. நீ என்ன பண்ற? சாப்பிட்டியா?" என்று சத்யாவை பேச விடாமல் அன்னை பேச,

"ம்மா ம்மா! நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. நான் வந்துட்டே இருக்கேன்.. இன்னும் ஒரு மூணு மணி நேரம்..." சத்யா பேசிக் கொண்டு இருக்க,

"மூணு மணி நேரமா? நீ வேற! உன்னை யாரு இப்ப கிளம்பி வர சொன்னது.. உன் அப்பா காலங்காத்தால அஞ்சு மணிக்கெல்லாம் எந்திச்சதும் இல்லாம கிளம்புவோமான்னாரு.. நான் தான் நல்ல நேரம் பத்து மணிக்கு தான்னு தூங்க வச்சேன்.. அந்த மனுஷனுக்கு இப்போ தான் பிள்ளைக்கு நல்லது பண்ணனும்னு நினைப்பு வந்திருக்கு.. மூணு மணி நேரம் எல்லாம் தள்ளி போட முடியாது.. நீ வரும் போது வா.. நாங்க அஞ்சு நிமிஷத்துல கிளம்பிருவோம்.."

"அய்யோ ம்மா! நான் சொல்றத கொஞ்சம் நீயாவது புரிஞ்சிக்கோ.. அங்க என்ன நிலவரம்னு தெரியாம எதையாவது செஞ்சு வைக்காதிங்க ம்மா.. இந்த ரெண்டு மாசத்துல ஒரு போன் ஒரு மெசேஜ் கூட வரல அவகிட்ட இருந்து எனக்கு.. நான் கால் பண்ணினாலும் சுவிட்ச் ஆஃப்.. என்னனு சங்கர் மூலமா கேட்க சொல்லிருக்கேன்.. இப்ப போய்...!"

"போதும் நிறுத்து டா.. அரைச்ச மாவையே அரைச்சிகிட்டு.. நைட்டும் இதையே தான சொன்ன? உன் அப்பா சொன்னாரு.. அவன்கிட்ட சொல்லாத.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதும் சொல்லுவோம்னு.. நான் தான் நீ சந்தோசப்படுவியேனு சொன்னேன்.. இப்ப தான் அது தப்புன்னு தோணுது.." என்று புலம்ப,

நெற்றியில் கைவைத்து பேருந்தில் அமர்ந்திருந்தவன் மனம் அப்படி அடித்துக் கொண்டிருந்தது.

முந்தைய நாள் இரவு பதினோரு மணிக்கு வைதேகியிடம் இருந்து போன் வரவும் உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் அதை எடுத்திருந்தான் சத்யா.

ஊரில் இருந்து கிளம்பி வந்து ட்ரைனிங்கில் சேர்ந்து மூன்று மாதங்களை தாண்டுகிறது. முதல் மாதம் முடிந்த சில நாட்களில் வந்து கல்லூரியையும் வெற்றிகரமாய் முடித்துவிட்டே சென்றனர் சத்யாவும் சங்கரும்.

கல்லூரி விடுதியில் இருக்கும் பொழுதெல்லாம் சத்யா தான் அன்னைக்கு அவ்வபோது அழைத்து பேசுவான்.. அவராய் அழைத்தது எல்லாம் இல்லை.

வேலைக்கு என்று வெளியே வந்தாலும் வந்தான் நாள், மணி, நேரம் எல்லாம் இல்லாமல் இரவு ஒரு மணிக்கு கூட அன்னையிடம் இருந்து அழைப்பு.

"என்னம்மா இந்நேரம்? அப்பா நல்லாருக்காங்க தான? அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என பதட்டமாய் சத்யா கேட்க,

"நீ நல்லாருக்கியா டா.. தூங்கிட்டு இருந்தியா?" என்பார்.

"ம்மா! மணி ஒன்னு.. இப்ப போன் பண்ணிருக்க? என்ன ம்மா? சொல்லு!"

"ஒன்னும் இல்ல டா.. ஒரு கெட்ட கனவு.. அதான்.. நீ நல்லாருக்க தான? தூக்கத்த கலைச்சிட்டேனோ? தூக்கத்துல எழுப்பினா வேற உனக்கு தூக்கம் வராத! காலையில பண்ணலாம்னா என் மனசுக்கு ஒப்பல.. உடனே பேசிட்டா நிம்மதினு தான் பண்ணிட்டேன்" என்று கூறுவார்.

"அப்பா தான் பண்ண சொன்னார் டா!" என்றார் இன்னோர் நாள் இரவு.

அதெல்லாம் இப்பொழுது பழகி இருக்க, பதினோரு மணி என்பது குறைவு தான் என நினைத்து மொட்டை மாடியில் காற்றாட நின்றவன் ப்ளூட்டூத்தை அழுத்தினான்.

"என்னம்மா இவ்வளவு நேரம்?" என்று கேட்டு முடிக்கும் முன்,

"டேய்! ராஜா! உனக்கு கல்யாணமா? நீ புது மாப்பிள்ளையா? இப்ப தான் டா உன்னை பெத்து கையில வாங்கின மாதி இருக்கு!" என்று பூரித்து வைதேகி பேச, சில நொடிகள் புரியாமல் நின்றான் சத்யா.

"ம்மா? என்ன கனவு எதுவும் கண்டியா? சாமி முன்னாடி திருநீறு இருக்கும்.. எடுத்து வச்சுட்டு தூங்கு ம்மா!" என்றவன் தெளிந்து புன்னகைத்தான் அன்னையின் கனவென நினைத்து.

"ஆமா! இப்பவே இருட்டுது எனக்கு.. நான் என்னைக்கு இவ்வளவு நேரமெல்லாம் கண்ணசந்தேன்?" என்றவர்,

"நிஜமா தான் டா சொல்றேன்.. உன் அப்பா நாளைக்கு உனக்கு பொண்ணு பாக்க அந்த போலீஸ் தம்பி அதான் அந்த புள்ள நந்தினி வீட்டுக்கு போக ஏற்பாடு பண்ணிட்டார்" என்று கூற, கொஞ்சம் கொஞ்சமாய் புன்னகை மறைந்து கொண்டிருந்தது சத்யாவிற்கு.

"ம்மா! என்ன விளையாட்டு இது?" என்றவனுக்கு என்ன கேட்பது என்று கூட புல்லப்படாமல் நேரத்தைப் பார்த்தான்.

"நீ இன்னும் கனவுலயே காதலிச்சுட்டு இரு.. நாங்க பேசி முடிச்சு நல்ல செய்தியோட வர்றோம்!" என்றவர் வைத்துவிட,

"ம்மா ம்மா!" என காற்றோடு பேசியவன் நேரம் காலம் பாராது க்
சங்கரிடம் மட்டும் சொல்லிவிட்டு கிடைத்த பஸ்ஸில் ஏறி கிளம்பிவிட்டான்.

காலை ஆறு மணியில் இருந்து அன்னைக்கும் தந்தைக்கும் எனக்கு மாறி மாறி அழைக்க, இருவருமே அழைப்பை ஏற்கவில்லை.. அவ்வளவு மும்முரமாய் அவர்கள் வேலையில் கவனமாய் இருக்க,

ஒன்பதரை மணிக்கு அலைபேசியை எடுத்த அன்னையும் திட்டிவிட்டு வைத்துவிட, கண்கள் இருட்டியது.

எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என அவன் எதிர்பார்த்த ஒன்று தான்.. ஆனால் இப்படி திடீரென அன்னை தந்தை சென்று நின்று... சங்கர் கூறியது அப்பொழுது தான் நியாபகம் வந்தது.

'யார் என்னன்னே பாக்காமல் அவ அண்ணன் பேசி வார்த்தைய விட்டுடுவான்.. கைவைக்கவும் தயங்க மாட்டான்!' என்று சத்யாவை அலர்ட்டாக இருக்க சங்கர் கூறும் போது அசட்டையாய் கேட்டவனுக்கு தன் தாய் தந்தை என வரும்போது அப்படி ஏற்றுகொள்ள முடியவில்லை.

தான் பேசியதற்கு மறுப்போ விருப்பமோ இன்னும் கூறவில்லை நந்தினியின் அண்ணன்.. பற்றாததற்கு நந்தினியும் ஃபேர்வெல் என கல்லூரி இறுதி நாளில் பார்த்து பேசியத்தோடு சரி..

அலைபேசியில் செய்தி அழைப்பு வரவில்லை என்றாலும் பரவாயில்லை.. தான் அனுப்புவதற்கு என்றும் பதில் அனுப்பமாட்டாள் தான் என்றாலும் அவள் பார்த்துவிட்டாள் என்பதை மட்டும் பார்த்தே மகிழ்ச்சி கொண்டு வந்தவனுக்கு இந்த இரண்டு மாதமும் இவன் அனுப்பிய செய்தி எதுவும் அவளுக்கு சென்று சேரவில்லை என்பது சந்தேகத்தை தர, சங்கர் மொபைலில் இருந்து அழைத்துப் பார்க்க அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தான்யாவை அனுப்பலாம் என்றால் பிரச்சனை ஆகி விடுமோ என எண்ணி ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாய் செயல்பட்டு நந்தினியுடன் பள்ளியில் படித்த பெண்ணை அவள் வீட்டிற்கு அனுப்ப சங்கர் மூலம் ஏற்பாடு செய்யலாம் என நினைத்திருக்க,

இப்படி தனியாய் சென்று பெற்றோருக்கு என்று ஏதேனும் அவமானம் ஏற்பட்டால்... என்னவோ நெஞ்சம் அதிகமாய் துடித்தது.

எந்த நிலையிலும் நந்தினியை தான் திருமணம் செய்வான் என்றாலும் நினைத்தும் பார்க்க முடியவில்லை.. இவை எல்லாம் காலம் முழுக்க மாறாத வடுவாக அல்லவா துரத்தும்.

நினைக்க நினைக்க பந்தய குதிரையாய் ஓடியது உள்ளம்.

இப்பொது அழைத்தாலும் நந்தினி எண் சுவிட்ச் ஆஃப் என்றே வர, ஏழு மணிக்கெல்லாம் தான்யாவிற்கு அழைத்து விஷயத்தை சொல்லி அவளையே நேரில் நந்தினி வீட்டிற்கு அனுப்பிவிட்டான் சத்யா.

அங்கே அப்படி அனுப்பிவிட்டும் நிம்மதி இன்றி வீட்டிற்கு அழைப்பு விடுத்தால் கிளம்பியே விட்டனர் தாயும் தந்தையும்.

மீண்டும் தான்யாவிற்கு அழைக்க, "நான் என் வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன் சத்யா!" என்றாள் தான்யா.

"நந்தினி வீட்டுக்கு போனியா? அவகிட்ட பேசினியா? நான் சொன்னத சொன்னியா?" என்றவன் பேச்சில் அத்தனை பதட்டம்.. இதுவரை அந்த சந்தியாவின் கேஸ் தவிர்த்து இப்படி கண்டதில்லை அவனை யாரும்.

"போனேன் சத்யா! ஆனா..." என்று அவள் இழுக்க,

"அய்யோ டென்ஷன் பண்ணாத தான்யா! என்னனு சொல்லு!" என்றான்.

"என்ன சொல்ல? நான் வீட்டு வாசலுக்கு தான் போனேன்.. அங்க ஒரு குரூப் உட்கார்ந்து இருந்துது.. நந்தினி அண்ணி தான் சொன்னாங்க நந்தினிய பொண்ணு பாக்க வந்திருக்காங்க.. உள்ள வான்னு.. எப்படி போக?" என்று உடைத்துவிட,

"அம்மா அப்பா அதுக்குள்ள அங்க போய்ட்டாங்களா?" என்று அவன் அதிர்ச்சியாக,

"இது உன் வீட்டுல இருந்து வந்தவங்க இல்ல.. மதுரை மாட்டுதாவணில இருந்து வந்தவங்க.. மாப்பிள்ள என்ஜினீயர்னு சொன்னாங்க.. அங்க போய் பொண்ணுக்கு துணை பொண்ணா நிக்கவான்னு தான் வந்துட்டேன்.. உனக்கு எப்படி சொல்லனு நினச்சுட்டே வந்தேன்.. நீயே கூப்பிட்டுட்ட!" என்று கூற, விழியசைவு கூட நின்றுவிட்டது அங்கே சத்யாவிற்கு.

தொடரும்..