• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 8

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 8

வகுப்பு முடிந்து நந்தினியும் தான்யாவும் அடித்து பிடித்து சத்யாவைப் பார்க்க வர, அவன் கோபமாய் பிரின்சிபால் அறையின் கதவை தள்ளிக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தான்.

"சத்யா? ஏன் கிளாஸ் வர்ல? சங்கர் எங்கே?" நந்தினி கேட்க, பதில் சொல்லாமல் வேகமாய் நடந்தான் அவன்.

"சத்யா நில்லு! ஏன் இப்படி பிஹாவ் பண்ற? என்ன ப்ரோப்லேம்?" என நந்தினி அவளை இழுத்து நிறுத்தி கேட்டாள்.

"ப்ச்! நான் போனும் நந்தினி விடு!" என்றவனை அவள் விடாமல் இருக்க,

"என்னனு சொல்லு டா" என்றாள் தான்யாவும்.

"சொன்னா? சொன்னா என்ன பண்ணிடுவிங்க?" சத்யா கோபமாகவே பேச, அதில் சுற்றிலும் பார்த்த நந்தினி,

"சத்யா ப்ளீஸ்!" என்றாள்.

கண்களை மூடி திறந்து தலை கோதிக் கொண்டவன்,

"இனி இங்க நான் வர மாட்டேன் நந்தினி.. நீயும் ஜாக்கிரதையா இரு" என்று விட்டு வேகமாய் செல்ல,

"சந்தியாக்காகவா?" என்றாள் பின்னாலே வந்து.

"ஆமா! ஒரு பொறுக்கிக்கு துணையா.. கவெர்மென்ட்ல இருந்து காலேஜ் வரைக்கும் சப்போர்ட் இருக்கு.. நியாயத்துக்கெல்லாம் மதிப்பே இல்லாம போச்சி.." சொல்லிக் கொண்டே அவன் நடக்க,

"சத்யா நில்லு! ஏன் சத்யா இவ்வளவு கோபம்? யாருக்கோ என்னவோ ஆனா நமக்கு என்ன? உன் ஸ்டடிஸ் மட்டும் நீ பாரு" என்றவளுக்கு அவன் வேதனை புரியவில்லை என்பதை ஆழ்ந்த பார்வை மூலம் வெளிப்படுத்தினான்.

அதில் அவளுக்குமே ஒரு மாதிரி ஆகி விட, இருந்தாலும் "நம்ம பேரண்ட்ஸ் படிக்க தானே அனுப்பி இருக்காங்க?" என்று அவள் கேட்க,

"நீயா இப்படி பேசுற?" என்றவன்,

"ப்ச்! உனக்கும் புரியலை இல்ல? எங்கேயோ எவனோ செத்தா நமக்கு என்னன்ற? உயிருக்கு அவ்ளோ தான் மதிப்பு இல்ல?" என்றவன் ஒற்றை உதறலான கண்ணசைவுடன் கிளம்பிவிட்டான்.

"சத்யா! சத்யா நில்லு டா!" என தான்யா அழைக்க, அவன் கண்ணசைவின் பாஷையில் அப்படியே நின்றிருந்தாள் நந்தினி.

"ண்ணா!" என்ற அழைப்பில் சத்யா நிமிர்ந்து பார்த்த பொழுது நேற்று சந்தியாவின் தோழிகளாய் அறிமுகமானவர்களில் ஒரு பெண் மட்டும் நின்றிருந்தாள்.

"சொல்லுங்க!" அவன் கேட்க,

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள்.

சுற்றிலும் யாரும் தங்களை கவனிக்கிறார்களா என பார்த்தான்.. அவன் பாதுகாப்பு முக்கியம் இல்லை.. அந்த பெண்ணிற்கான பாதுகாப்பு முக்கியம் தானே.. சந்தியாவின் தோழி என்ற பச்சத்தில் நிச்சயம் ஒரு பார்வை அவள் மேல் இருக்கும்.

நினைத்தவன், "ஒரு நிமிஷம்!" என்று கூறி, வந்த வழி சென்று அங்கே நின்றிருந்த நந்தினியின் கைகளைப் பற்றி அந்த பெண் அருகே கூட்டி வந்தவன்,

"இந்த பொண்ணை சிக் ரூம் கூட்டிட்டு வா!" என்று சந்தியாவிடம் கூறி சென்றான். அருகே தான்யாவும் நின்றிருந்தாள்.

என்ன என்று யோசிக்கும் முன் அவன் கூறிவிட்டு சென்றிருக்க, நந்தினியும் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு அங்கே சென்றாள்.

"ஸ்ரீதர் தானே சந்தியா இறந்ததுக்கு காரணம்?" நேராய் சத்யா கேட்க,

"அவன் மட்டும் தான் காரணம்.." என்றவள்,

"டிபார்ட்மென்ட் ஜூனியர் வெல்கம் டான்ஸ்க்கு ட்ரெஸ் வாங்க போயிருந்தோம்.. ஒரே மாதிரி ட்ரெஸ்ன்றதால சந்தியா மட்டும் தான் ட்ரெஸ் ட்ரையல் பார்த்தா.. அதை தான்..." என்றவள் சொல்ல முடியாமல் அழ, கேட்ட விஷயத்தில் நந்தினி, தான்யாவுக்குமே திக்கென்று இருந்தது.

"ஆனா ஸ்ரீதர்?" சத்யா கேட்க,

"அது அந்த ஸ்ரீதர் அப்பா பினாமி பேர்ல இருக்க கடையாம்.. அங்க அவன் தான் கேமரா செட் பண்ணி வச்சிருக்கான் போல... அந்த வீடியோவை இவளுக்கு அனுப்பி இருக்கான்.. அடுத்த நாளே அந்த கடைக்கு போய் சண்டை போட்டு ட்ரையல் ரூமை எல்லாம் கிளீன் பண்ண சொல்லி சொன்னா.. கூட நாங்களும் போனோம்.." என்று கூறும் பெண்ணை விழி அகலாமல் பார்த்தனர் பெண்கள் இருவரும்.

"மன்னிப்பு கேட்டு அனுப்பவும் அவ நம்பாம ஸ்ரீதரை தேடும் போது அவனே எங்க கிளாஸ்க்கு வந்தான்.. எல்லாரையும் வெளில போக சொல்லிட்டு அவகிட்ட பேசினான்.. என்ன பேசினான்னு எங்களுக்கு தெரியல.. அவன் பிரண்ட்ஸ்ஸும் கூட தான் இருந்தாங்க.. அன்னைக்கு நாங்க கூப்பிட கூப்பிட அழுதுட்டே தான் போனா.. அடுத்த நாள் சந்தியா காலேஜ் வர்ல.. வந்துடுவா பேசலாம்னு தான் நாங்களும் நினைச்சோம்.." என்று கூறி அழ, தான்யா அந்த பெண்ணை தலை கோதி ஆறுதல் படுத்தினாள்.

கேட்டதை ஜீரணிக்க முடியாமல் நின்றிருந்தாள் நந்தினி.

"யார் என்ன கேட்டாலும் எதுவும் வாயே திறக்க கூடாதுன்னு கூப்பிட்டு நேரடியா டீனே பேசவும் எங்களுக்கு ரொம்ப பயமா இருந்தது.. இதனால எங்களுக்கும் எதாவது பிரச்சனை வரலாம்" அந்த பெண் கூற,

"அப்படி எதுவும் வராது.. நீ போ மா" என்றவனிடம் மொபைலை எடுத்துக் காட்டினாள்.

"பத்திரமா இருங்க டி.. நான் போறேன்.. எனக்கு என் குடும்பம் ரொம்ப முக்கியம்.. அவன் என்னை வாழ விட மாட்டான்.. இதுக்கு மேல நான் உயிரோட இருந்தா என் குடும்பமே அவமானத்துல இறந்திடுவாங்க" என்று குரல் வழி அனுப்பி இருந்தாள் சந்தியா.

"சந்தியா இறந்துட்டான்னு நியூஸ் வர்றதுக்கு முந்தின நாள் நைட்டு பன்னிரண்டு மணிக்கு இத நாங்க பிரண்ட்ஸ் மட்டும் இருக்க குரூப்ல அனுப்பி இருக்கா.. என் பிரண்ட்ஸ் எல்லாம் உங்ககிட்ட சொல்லலாம்னு தான் முடிவு பண்ணினோம்.. ஆனா வீட்டுக்கு போனதும் பயத்துல வேண்டாம்.. நம்மோட போகட்டும்னு எல்லாருக்கும் பயந்து விட்டுட்டோம்.. இப்பவும் எனக்கு பயமா தான் இருக்கு.. ஆனா உங்களால முடிஞ்சா சந்தியாக்கு ஹெல்ப் பண்ணுங்க" என்று கூறி செல்ல, நந்தினி, தான்யா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"சத்யா! நந்தினி பயத்துல சொன்னதை பெருசா எடுத்துக்காத" தான்யா கூற, நந்தினியை திரும்பிப் பார்த்தான் அவன்.

"நீ காலேஜ் படிச்சப்போ எவ்ளோ ஜாலியா, ஹாப்பியா இருந்தியோ அப்படிதானே நந்து அந்த பொண்ணும் இருந்திருப்பா? ஒரு நாள்ல அவளோட லைஃப் மாறி, அவளே இல்லைனு ஆனா அந்த இழப்பை உன்னால பீல் பண்ண முடியலையா? அதுவும்... எவ்ளோ கஷ்டத்தை அந்த பொண்ணு தானக்குள்ள வச்சிருப்பான்னு நினைக்க நினைக்க எனக்கு தலைக்கு ஏதோ ஓடுற மாதிரி ரத்தம் கொதிக்குது.. இதை தப்புன்னு நீ சொல்றியா?" என்றான்.

"இல்ல சத்யா நான் அந்த அர்த்தத்துல சொல்லல.." நந்தினி கூற,

"போலீஸ் என்ன சொன்னான் தெரியுமா? படிக்க வந்திருக்க கண்டும் காணாம போய்டுன்றதை டீசண்டா சொன்னான்.. உள்ள.. பிரின்சி! எனக்கும் தெரியும்.. என்னால என்ன செய்ய முடியும்ன்றான்.. அவன் காலேஜை விட்டு போற வரை எல்லாத்தையும் தாங்கி தான் ஆகணுமாம்.. நாளைக்கே வேற ஒரு அமைச்சர் பையன், மந்திரி பையன்னு வந்து இதே அட்டூழியம் பண்ணினா? அவனுக்கும் நாலு வருஷக் கெடு தான் குடுப்பானுங்க போல" என்றவன் மனது ஆறவே இல்லை.

"சந்தியா பாவம் நந்தினி.. அவ தங்கச்சி அவ்ளோ குட்டியா இருக்கா.. அவ்ளோட பார்வையை என்னால பேஸ் பண்ண முடியல.. அவங்க அம்மா கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல.. ஆனா போலீஸ் பதில் சொல்றான்.. இங்க எல்லாம் தெரிஞ்சவனும் ஈசியா பதில் சொல்றான்.. அப்போ தப்பு யார் மேல? எல்லாம் தெரிஞ்சும் கடந்து போற நாம தான் தப்பு.. நான் என்ன செய்ய முடியும்னு தெரியல.. எதாவது செய்யுறேன்" என்று கூறியவன் காதில் ஸ்ரீதர் பேசும் சத்தம் ஹெட்செட் வழி கேட்க, ஒரு பார்வையோடு நந்தினியிடம் இருந்து சென்றுவிட்டான் சத்யா.

"எங்க டா போன? நாய் மாதிரி உன்னை தேடி அலைஞ்சேன்.. ஏன் டா சொல்லாம போன?" சங்கர் விடுதிக்கு வந்த சத்யாவை உலுக்க,

"காலேஜ்ல தான் இருந்தேன்" என்றான்.

"பொய் சொல்லாத.. நீ காலேஜ் வர்லனு மார்னிங்கே தனு போன் பண்ணிட்டா.."

"ப்ச் காலேஜ் தான் போனேன்.. கிளாஸ் போகல.. போகவும் மாட்டேன்"

"என்ன டா சொல்ற.. என்ன தான்..."

"தயவு செஞ்சு என்னை எதுவும் கேட்காத சங்கர்!" என்றவன் படுத்துக் கொள்ள, புரியாமல் பார்த்தவன் தான்யாவிற்கு அழைக்க, அவளும் தெரிந்ததைக் கூறினாள்.

"ப்ச்! ஏன் டா தனியா போன? அந்த ஆள் யார்கிட்டயும் சொல்லிட்டா?" என்று சங்கர் கேட்க,

"அதனால தான் தனியா போனேன்" என்றான்.

"இப்ப என்ன தான் பண்ணலாம்னு இருக்க.. தயவு செஞ்சு என்ன பண்ணினாலும் நானும் உன்கூடவே இருக்கேன்.. தனியா போகாத" சங்கர் கூற, காதில் இருந்த ஹெட்செட்டை கழட்டிவிட்டு ஸ்பீக்கர் ஆன் செய்தான்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல ப்பா.. நல்லா தான் போய்ட்டு இருக்கு" என்ற ஸ்ரீதர் குரல்.

"ஹான் சரி ப்பா.. நான் பார்த்துகிறேன்.. இனிமே இப்படி நடக்காது ப்பா.."

"சரி ப்பா.."

"இல்லை ப்பா!"

"ஓகே ப்பா!"

என பல வகையாய் ஸ்ரீதர் குரல் கேட்டுக் கொண்டே இருக்க, அவன் அலைபேசியில் பேசுவது புரிந்தது.

"அப்பா என்ன சொல்லறாரு டா?" ஸ்ரீதரிடம் அவன் நண்பன் கேட்க,

"வேற என்ன சொல்வாரு.. தப்பு பண்ணினா தடயம் இல்லாம பண்ணுன்னு சொல்லறாரு.." என்று சிரித்தான் ஸ்ரீதர்.

"அப்போ ஆரம்பிச்சுடலாம்ன்றாரு இல்ல?" என்று கேட்க,

"ஒரு ஒரு வாரம் போகட்டும் டா.. பிரச்சனை இல்லைனாலும் இந்த சந்தியாவை எல்லாரும் மறக்கட்டும்" என்றான் ஸ்ரீதர்.

"ஆமா டா! கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்.. தப்பா எதுவும் ஆச்சுன்னா ஸ்ரீதர் அப்பாக்கு பதில் சொல்ல முடியாது" என்றான் இரவு பயத்தில் பேசியவன்.

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை டா.. ஸ்ரீதரை எவன் என்னை செய்வான்? என்ன செய்ய முடியும்?" என ஒருவன் பெருமையாய் கூற, அதை அத்தனை கர்வமாய் தலைக்கு ஏற்றிக் கொண்டான் ஸ்ரீதர்.

"சரி சரி! செம்ம தலைவலி.. பசி வேற.. கீழ சாப்பிட என்ன இருக்குன்னு எடுத்துட்டு வா" என்று ஸ்ரீதர் கூறவும் நண்பர்கள் இருவர் கீழே செல்ல,

"என்ன டா இப்படி இருக்கானுங்க.. இது தொடர்ந்து போயிட்டே தான் இருக்குமா?" என்றான் சங்கர் சத்யாவிடம்.

"போகாது! போக விட மாட்டேன்!" என்றான் சத்யா.

அடுத்த நாள் காலை சந்தியா இறந்த செய்தியை விட தீயாய் கல்லூரி முழுவதும் பரவியது ஸ்ரீதர் இறந்த செய்தி.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
செத்துட்டானா செத்துட்டானா அரக்கன் ஒழிஞ்சான் சம்ஹாரம் சிறப்பா நடந்துடுச்சு 👍👍👍👍👍👍