• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரைத் தொலைத்தேன் உனக்குள்ளே...!!! ❤ - அத்தியாயம் 1

Priyamudan Vijay

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2021
39
34
18
Madurai
அத்தியாயம் - 1


அந்த விளையாட்டு மைதானத்தில் குவிந்திருந்த ரசிக ரசிகைகளின் கூச்சல் ஆரவாரத்தில், அந்த மைதானமே அதிர்ந்தது. அந்தக் கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்ற கால்பந்து விளையாட்டு போட்டியின் இறுதிக்கட்டம் அது. அக்கால்பந்தாட்ட அணி கேப்ட்டனாக இருந்த அந்த ஆறடி ஆடவனின் காலுக்கடியில் இருந்தது கால்பந்து. போட்டியின் கடைசி பந்து என்பதால் அனைவரும் அந்தக் கேப்டனின் பெயரை ஜெபம் செய்வது போலக் கத்திக் கொண்டிருந்தனர்.

“ராஜீவ்… ரா...ஜீவ்… ரா...ஜீவ்… ராஜீவ்…” என்று அவ்வணி கேப்டனின் பெயரை அந்த மைதானமே அதிரும் அளவிற்கு கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். ராஜீவ் என்றழைக்கப்பட்ட அந்த இளைஞனோ, தனது கண்களை ஒரு வினாடி இறுக மூடிக்கொண்டான். அவனது நெற்றியிலிருந்து வழிந்த வியர்வை துளிகளைத் தன் இடக்கையால் துடைத்தவன், கண்களைத் திறந்து கோல் கம்பத்தை கூர்மையாகப் பார்த்தான். தனது வழுவான காலினைக் கொண்டு இழுத்து ஒரு எத்துவிட, பந்து சரியாகக் கோல் அடித்துவிட்டது.

பந்துக் கோல் அடித்த கணத்தில் தனது இருகைகளையும் மேலே தூக்கிக்கொண்டு தன் பெயரை உச்சரித்த ரசிக-ரசிகைகள் பக்கம் திரும்பிக் கைக்காட்டினான். தங்கள் கல்லூரி அணி ஜெயித்துவிட்டதால், அவ்வணியை ஆதரிக்கும் ‘ச்சியர் கேர்ள்ஸ்’ (cheer girls) அனைவரும் உற்சாக நடனமாடினர்.

“இந்த விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற சத்யா கல்லூரி அணிக்கு எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றிக்கோப்பையைப் பெறுவதற்கு சத்யா கல்லூரி கால்பந்தாட்ட அணி கேப்டன், திரு. ராஜீவலோச்சனனை மேடைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று மைக்கில் பேசிய அக்கல்லூரியின் ஆசிரியர் ஒருவரின் ஒலியைக் கேட்டுத் துள்ளிக்குதித்து மேடைப்படிகளில் ராஜீவ் ஏறவும், அதுவரை அமைதியாக இருந்த மாணவ-மாணவியர் அரங்கம் அதிரும் கரகோசத்துடன் அவன் பெயரை உச்சரித்து ஆரவாரம் செய்தனர். அதில் பெரும்பாலும் மாணவிகளின் கோசமே பெரிதாக ஒலித்தது. தன்னைப் பார்த்து ஆரவாரமாகச் சப்தம் எழுப்பிய மாணவர்களிடம் கைக்காட்டியவன், மாணவிகள் புறம் திரும்பிக் கண்ணடித்தான். இதனைப் பார்த்துக் கடுப்பான ஆசிரியர்,

“ராஜீவ், கம் டூ தெ ஸ்டேஜ் ப்ளீஸ்” என்று பொறுமை இழந்தவராக அவனை அவர் மைக்கில் அழைக்க…

“ஓ சாரி சார். இதோ வர்றேன்.” என்று தனது கம்பீரமான குரலில் பதிலளித்துவிட்டு, படிகளில் ஏறி மேடைக்குச் சென்றவன் வெற்றிக்கோப்பையினை பெற்றுக்கொண்டது தான் தாமதம். உடனே அவனைச் சுற்றி வெடிகள் வெடித்தன. பலபல வண்ணக் காகிதங்கள் பறக்க வெடித்த அவ்வெடியின் சப்தத்தை விட அதிகமாய் மாணவ-மாணவிகளின் ஆரவார சப்தம் கேட்டது. மேடையிலிருந்த மற்றொரு ஆசிரியர், ராஜீவின் கையில் மைக்கினைக் கொடுத்துவிட,

“இந்த வெற்றியைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க மிஸ்டர். ராஜீவலோச்சனன்?” என்று மைக்கில் பேசிய அந்த ஆசிரியரின் குரலில் வேண்டாவெறுப்பு இருந்தது. இதனை உணர்ந்த ராஜீவின் உதட்டில் புன்னகைத் தவழத் தன் பேச்சினை ஆரம்பித்தான்.

“இந்த வெற்றிப் பத்தி சொல்லணும்னா, இது நான் மட்டும் உழச்சு வேர்வ சிந்தி வாங்கின வெற்றி இல்ல. இதுல என் டீம்மேட்ஸுக்கும் பங்கு உண்டு. அவங்க மட்டும் ஆடாம இருந்திருந்தா, இந்த வெற்றி சாத்தியமாகிருக்காது. சோ, இந்தக் கப்ப அவங்களும் சேர்ந்து வாங்கிக்கணும்னு நான் விரும்புறேன்.” என்ற நம் நாயகன் ராஜீவின் பேச்சிற்கு பலத்த கரகோசம் எழும்ப, அவனுடன் ஆடிய அணியினர் அனைவரும் மேடையேறி வந்தனர். அவர்களிடம் அவ்வெற்றிக்கோப்பையினைக் கொடுத்த ராஜீவ்,

“இந்த வெற்றி உங்களுக்கும் சேர்த்து தான் ஃப்ரெண்ட்ஸ்” என்ற அவன் வார்த்தையில் புல்லரித்த அவ்வணியினர், ஒவ்வொருவராகச் சென்று அவனை ஆறத்தழுவிக்கொண்டனர்.

“மேட்சில் வெற்றிப்பெற்ற பிறகு…” என்று கல்லூரி விடுதிக்குத் தன் அணியினருடன் கல்லூரி பேருந்தில் செல்லும்பொழுது, தனது முகபுத்தகத்தில் கையில் கப்புடன் நின்ற தன் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தான் ராஜீவலோச்சனன். அதனைத் தன் முகபுத்தகத்தில் பார்த்த அவனது ஆருயிர் நண்பன் சூர்யா,

“இந்தப் போஸ்ட்ட பார்த்துட்டு எத்தன பொண்ணுங்க மெசேஜ் பண்ண போகுதுங்களோ??!! ஏன் டா? நானும் தானே உங்கூட மேட்ச் ஆடுனேன்? என்னைய எவளாச்சும் கண்டுக்குறாளுகளா? உன் பேர மட்டுமே சொல்லிட்டு இருக்குதுங்க! எப்படி டா?” என்று அவன் கேட்க… அதற்கு விழுந்து விழுந்து சிரித்த ராஜீவ்,

“அதுலாம் தொழில் ரகசியம் டா அய்யாசாமி” என்று சிரித்தான்.

“அடப்பாவி, என்னைய பெத்த அம்மா அப்பா அழகா சூர்யானு பேரு வச்சிருக்காங்கள்ல? அத ஏன் டா கெடுக்குற?” என்று கொட்டாவி விட்டபடி அவன் கூற,

“அப்போ அய்யாசாமி ங்கற பேரு அசிங்கமா இருக்கா?” என்று பேருந்தில் தன்னுடன் வந்த அணியினர் அனைவரையும் கைத் தட்டி அழைத்தான், “எல்லாரும் கேளுங்க… அய்யாசாமிங்கற கடவுளோட பேர, அசிங்கம்னு இதோ இங்க என் பக்கத்துல உக்கார்ந்து இருக்குற திரு. சூர்யா சொல்லுறான். என்னனு விசாரிங்க.” என்று சூர்யாவை கோர்த்துவிட்டு விட்டு, சாதுவைப் போல் முகத்தை வைத்தபடி தன் இருக்கையில் அமர்ந்த ராஜீவை அதிர்ந்து பார்த்தான் சூர்யா.

“அட க்ராதகா! ஒரு மனுசன, நிம்மதியா நாலு வார்த்த பேச விடுறீயா? ஒரு கொட்டாவி விட விடுறீயா?” என்று அப்பாவியாகக் கேட்ட சூர்யாவின் முகத்தைப் பார்க்காமலே பதலளிக்க ஆரம்பித்தான் ராஜீவ்.

“உன்னைய யாரு நிம்மதியா பேசவோ, கொட்டாவியோ விட விடல? நீ உன் இஷ்டம் போல என்னனாலும் பண்ணு. யாரு உன்னைய தடுத்தா?” தன் கைப்பேசியில் முகப்புத்தகத்தை நோண்டிக்கொண்டே கேட்டுவைக்க…

“நீ பேசுவ டா… பேசுவ… உன் வாய், உன் நாக்கு. என்னனாலும் பேசுவ.” என்று சூர்யா விளையாட்டுக் கோபத்துடன் ராஜீவிடம் கூறினான்.

“ஆமா, என் வாய் தான். என் நாக்கு தான். அத வச்சு தான் நான் பேச முடியும். பின்ன, உன் நாக்கு, உன் வாய் வச்சா பேச முடியும்?” என்று மீண்டும் சூர்யாவின் பேச்சுக்கு அவன் முட்டுக்கட்டை போட…

“யெப்பா சாமி! உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது டா. ஆள விடு.” என்று சிரித்தபடி சூர்யா தன் தலைக்கு மேல் கைக்கூப்பி ‘போதும்’ என்பது போல் கூற, ராஜீவோ கைப்பேசியைப் பார்த்தபடி சூர்யாவின் செயலுக்குச் சிரித்துவைத்தான். இதனைக் கவனித்த சூர்யா,

“அப்படி என்னத்த தான் டா பார்த்துட்டு இருக்க மொபைல்ல?” என்று கேட்க… அதற்கும் அவனைப் பார்க்காமல் தன் கைப்பேசியைப் பார்த்தபடி பதிலளிக்கலானான் ராஜீவ்.

“அந்த மினிஸ்டர் பொண்ணு கேத்ரீன் மெசேஜ் பண்னுது டா இப்போ. அதான்….” என்றபடி தன் கைப்பேசியில் மூழ்க,

“எதே! கேத்ரீனா? அவள் பசங்கட்ட அவ்வளவா பேசமாட்டாளே டா!” என்ற சூர்யாவின் குரலில் உண்மைக்குமே ஒரு அதிர்ச்சி தெரிந்தது.

“ஆமா. ஆனால், எங்கிட்ட ஜொள்ளுவிடுறாளே டா…” என்றவன் புன்னகைத்தபடியே அந்தக் கேத்ரீனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருக்க… அதற்குள் அவர்களது பேருந்து அவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தது.

“காலேஜ் வந்திருச்சு பசங்களா. எல்லாரும் ஹாஸ்ட்டலுக்கு ஓடுங்க.” என்றபடி ஓட்டுனர் கூறிவிட, கால்பந்து வீரர்கள் அனைவரும் பேருந்திலிருந்து இறங்கினர். கல்லூரியிலிருந்து விடுதிக்குச் செல்லும் பாதை யாவும், ராஜீவலோச்சனன் தன் கைப்பேசியைப் பார்த்தபடியே நடந்துவர, அவனைக் கண்ட சூர்யா,

“டேய் போதும். வழியப் பார்த்து நட.” என்று கூறவும் அவனை முறைத்துப் பார்த்த ராஜீவ்,

“உன் வேலைய மட்டும் பாரு டா மச்சான்.” என்றவனின் முகம் நொடிப்பொழுதில் புன்னகைப் பூப்பூத்தபடி கைப்பேசியைப் பார்த்தது.

“உன்னலாம் திருத்த முடியாது டா.” என்று தன் தலையில் அடித்துக்கொண்டான் சூர்யா.

அவர்கள் இருவரின் அறை வரவே, அதற்குள் நுழைந்தார்கள். அறைக்குள் வந்ததும், ராஜீவ் நேராகக் குளியலறைக்குள் விரைந்தான். குளித்துமுடித்துவிட்டு வெளியே வந்தவன், சுவர்கடிகாரத்தைப் பார்த்தான். அது, மணி சாயங்காலம் ஏழு என்றது. தன் கைப்பேசியை எடுத்து, தன் உதட்டினை பிதுக்கிய நிலையில் ஒரு செல்ஃபியை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினான் ராஜீவ்.

“பசி எடுக்குது. என்னுடன் இன்னைக்கு டின்னர் சாப்பிட யாருல்லாம் வர்றீங்க? ஒருத்தருக்கு மட்டுமே அனுமதி.” என்று அவன் போட்ட பதிவில் பத்து நிமிடத்தில் நூறு லைக்குகளை அடைந்தது. அதனைப் பார்த்தவன், வேகமாக சூர்யாவிடம் சென்று,

“டேய் மச்சான்… மச்சான்… மச்ச்ச்ச்ச்சாஆஆஆன்……!!” என்று சூர்யாவின் தோளைப் போட்டுக் குலுக்கு குலுக்குவென்று ராஜீவ் குலுக்கியெடுக்க…

“அடேய் எருமகுட்டி…! மெதுவா குலுக்கு டா. எனக்குச் சுலுக்கிக்க போகுது. இப்போ என்ன அவசரம்னு என்னைய இந்த ஆட்டு ஆட்டுன?” என்று சூர்யா தனது துவைத்த துணிகளை மடித்து வைத்தபடி கேட்டான்.

“போஸ்ட் போட்டுப் பத்து நிமிசத்துல 100 லைக்ஸ் டா.” என்று ராஜீவ் கண்கள் மின்னக் கூறவும், அதனை எதிர்பார்த்தைப் போன்ற முகபாவத்துடன் சூர்யா அவனைப் பார்த்துவிட்டு, தன் வேலையில் மூழ்கினான்.

“டேய் சூர்யா… என்னடா? ஒன்னும் சொல்லமாட்டேங்குற?” என்று ராஜீவ் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க… அதற்குச் சூர்யாவோ,

“உனக்கு என்ன பா? நீ யுனிவர்சிட்டி டாப்பர். ஃபுட்பால் டீம்மோட சக்ஸஸ்ஃபுல் கேப்டன்… அது மட்டுமா? காலேஜ் கல்சுரல்ஸ்ல டேன்ஸ் ஆடுனா கூட அதுலையும் நீ தான் முதலிடத்த பிடிக்குற. இதுக்கே உன் பின்னாடி நிறைய மின்விசிறிகள் சுத்தும். எல்லாத்துக்கும் மேல நீ பார்க்க ஹீரோ மாதிரி இருக்க. உனக்குலாம் இந்த நூறு லைக்ஸ்லாம் சாதாரணம் டா ராஜீவ்.” என்றவன் தான் மடித்துவைத்த துணிகளைத் தன் கப்போர்டினுள் அடுக்கி வைத்தான். அதற்கு வெறும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்த ராஜீவிற்கு, வரிசையாகக் குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தன. அவ்வளவும் இளம்பெண்களின் குறுஞ்செய்திகளே!

“மச்சான் சூர்யா… பொண்ணுங்க ‘நான் வரவா? நான் வரவா?’னு மெசேஜ் பண்ணுதுங்க டா.” என்ற ராஜீவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.

“என்னமோ பண்ணு டா. நான் என் வேலைய பார்க்கப் போறேன்.” என்றவன் தன் பையிலிருந்து சில காகிதங்களை எடுத்து அவர்களுக்குக் கொடுத்திருந்த அசைன்மெண்டை செய்யத் தொடங்கினான். “ராஜீவ், நீ இந்த அசைன்மெண்ட் முடிச்சுட்டியா டா?” என்று அவன் கேட்கவும்,

“ம்ம்... அன்னைக்கே முடிச்சுட்டேன்.” என்ற ராஜீவ் தன் கைப்பேசியில் மூழ்கிருந்தான்.

“எது எப்படியோ டா. இந்த விசயங்கள்ல உன்னைய குறையே சொல்ல முடியாது. அந்த அசைன்மெண்ட்ட எங்கிட்ட கொடு டா. பார்த்து எழுதிட்டு தர்றேன்.” என்று சூர்யா கேட்கவும், தனது பையிலிருந்து தான் எழுதி முடித்திருந்த அசைன்மெண்டினை எடுத்துக்கொடுத்தான் ராஜீவ்.

அரைமணி நேரத்திற்கு பிறகு, சூர்யாவை மீண்டும் அழைத்தான் ராஜீவ். “மச்சான். இன்னைக்கு டின்னர் டைம்ம யாருகூட செலவு பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்று ராஜீவ் கூற, அவனைத் திரும்பிப் பார்த்த சூர்யா,

“யாரு டா அந்த அப்பாவிப் பொண்ணு?” என்று கவலையுடன் கேட்டு வைக்க…

“நீயே கண்டுபிடிச்சிருப்பனு நினச்சேன் டா மச்சான். ரைட்டு விடு. வேற யாருமில்ல… நம்ம கேத்ரீன் தான்.” என்றவன் வேக வேகமாகத் தன் உடைகளை மாற்றச் சென்றான். அவன் பின்னாடியே சென்ற சூர்யா,

“டேய்!! அந்தப் பொண்ணு பாவம் டா. விட்டுடு.” என்று கவலைத்தோய்ந்த குரலில் சூர்யா கூரவும், அவனை முறைத்துப் பார்த்தான் ராஜீவ்.

“கொலப் பண்ணிருவேன் டா சூர்யா உன்னைய. நான் பொதுவா ஒரு போஸ்ட் போட்டேன். அது நிஜமா அந்தக் கேத்ரீன்ன கவுக்க இல்ல. நானா வேணும்னே எந்தப் பொண்ணுங்கட்டையும் வழியமாட்டேன்னு உனக்கே நல்லா தெரியும். அவங்களா வர்ற பொண்ணுங்கள்ல நான் ஏத்துக்குறேன். அவ்வளவு தான். இப்படி வர்ற பொண்ணுங்ககிட்ட, ‘ஒரு மாசம் தான் உங்ககூட நான் பழகுவேன், அப்பறம் என் விசயத்துல தலையிடக் கூடாது’ னு ஒரு நிபந்தனையோட தான் பழகவே ஆரம்பிப்பேன். அந்த ஒரு மாசத்துலையும் அவங்கள நான் தப்பா நடத்தவே மாட்டேன். என் கைவிரல் கூடப் படாம பார்த்துப்பேன். அவங்களையும் என்னைய தொடவிடமாட்டேன். என்னமோ சினிமால வர்ற பொறுக்கி கிட்ட பேசுறதுப் போல, ‘அவள விட்டுடு’ னு சொல்லுற?” என்றவன் தனது அடர்சிவப்பு நிற வெல்வட் கோட்டினை அணிந்துக்கொண்டு, அதன் முதல் பட்டனை மட்டும் மாட்டிவிட்டு தனது கருமை நிற ஷூவினை அணியச் சென்றான்.

“சரி டா யெப்பா. இன்னைக்கு டின்னர் முடிச்சுட்டு எப்போ வருவ?” என்று சூர்யா கேட்கவும், ராஜீவ் தனது சில்வர் செயின் கைக்கடிகாரத்தினில் நேரத்தைப் பார்த்தான். மணி எட்டு இருபது என்றது.

“பக்கத்துல இருக்குற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தான் டா டின்னருக்கு அவள வர்ற சொல்லிருக்கேன். அவளும் நம்ம காலேஜ் லேடீஸ் ஹாஸ்ட்டல்ல தானே இருக்கா? போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்துருவோம். ராத்திரி பத்து மணிக்கு மேல எந்தப் பொண்ணையும் கூட்டிட்டு வெளிய சுத்தக் கூடாது. ஸோ, ஒன்பது இருபதுக்குலாம் ஹாஸ்ட்டலுக்கு வந்துருவோம். ரூம் கதவ பூட்டிராத. சும்மா சாத்தி மட்டும் வை. வந்துருவேன். லைட்லாம் அமத்திரு. அப்பறம் வார்டன் என்ன ஏதுனு கேக்க வருவாரு. அவர்கிட்ட பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. போவேன், சிரிச்சு பேசிச் சாப்பிட்டுட்டு, அவள அவள் ஹாஸ்ட்டல் வாசல்ல இறக்கிவிட்டுடு வந்துருவேன். சரி, பை. கிளம்புறேன். என்னைய எங்கேனு யாரும் கேட்டா, மெடிக்கல் ஷாப்புக்கு போயிருக்கேன்னு சொல்லிரு.” என்று கூறிவிட்டு, தன் அறையைவிட்டு வெளியேறிய ராஜீவ், ஹாஸ்ட்டல் வாசலில் நிறுத்திவைத்திருந்த தனது சிவப்பு நிற யமஹா ஆர்-ஒன்-ஃபை பைக்கினை உயிர்பித்து ஹெல்மெட் மாட்டிக்கொண்டு பெண்கள் விடுதிக்குச் செலுத்தினான்.

***********************

preview (6).jpg
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அருமை சகோ ♥️♥️♥️♥️♥️♥️♥️
ராஜீவலோச்சனன் பெயர் வித்யாசமா இருக்கு சகோ 😀😀😀கட்டுப்பாடுகளுடன் இருக்கும் playboy ராஜிவ் 🤩🤩🤩🤩🤩