சஞ்சுவின் கடிதத்தோடு அமர்ந்திருந்தவனிடம், "அபய் நிதியோட கல்யாண பத்திரிகை வைக்க அம்மா வந்திருக்காங்க கொஞ்சம் கீழ வர முடியுமா?" என்றிட அவனிடம் அசைவில்லை.
"அபய் ஆர் யூ ஓகே?" என்றதும் மெல்ல தலையசைத்தவன் "கொஞ்சம் உட்கார் நயனி உன்கிட்ட பேசணும்" என்றான்.
"அவசரமா? அவங்க வைட் பண்ணிட்டு இருக்காங்க"
"பேசணும். அதிகமில்லை. ஒரே ஒரு பத்து நிமிஷம்?!" என்று அவள் முகம் பார்த்தான்.
"சரி சொல்லுங்க" என்று அவன் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
"உன்னால எப்படி முடியுதுன்னு எனக்கு தெரியலை ஆனா எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு"
"என்ன திடீர்னு.. ப்ச் திரும்பவுமா?! என்ன அபய் நீங்க கொஞ்சம் ப்ராக்டிகலா இருங்க"
"நான் சஞ்சுவை பற்றி சொல்லலை உனக்காக, உனக்கான என்னோட கில்ட் பத்தி பேசிட்டு இருக்கேன்.." என்றதில் ஆச்சர்யத்தோடு அவனை பார்த்தாள்.
"நிச்சயமா உன்னோட இடத்துல வேற பொண்ணு இருந்தா உன் கழுத்துல தாலியை கட்டிட்டு பைத்தியகாரன் மாதிரி இன்னொருத்தி பெயரை சொல்லிட்டு இருக்கிற என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு போயிருப்பா ஆனா நீ எப்படி?! ப்ச் உன்னால எப்படி இதை டாலரேட் பண்ண முடியது?" என்றதும் "இவ்ளோ தானா?!" என்று புன்னகையோடு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவள்,
"நான் கூட ஏதோ பெரிய விஷயம் சொல்ல போறீங்கன்னு பயந்துட்டேன். ஒரே வார்த்தையில் பதில் சொல்லணும் என்றால் லவ்! உங்க மேல நான் வச்சிருக்க அன்கண்டிஷனல் லவ்! (எதிர்பார்ப்பில்லாத காதல்) அவ்ளோதான்! இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை..."
"ஒருவேளை நான் உங்களை விரும்பாமல் இருந்திருந்தால் சஞ்சு சொன்னதுக்காகவே கல்யாணம் பண்ணி இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி இதையெல்லாம் பொறுத்துகிட்டு போயிருப்பேனா என்பது சந்தேகம் தான்.."
"பட் என்னால அப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவு எடுக்க முடியாது. வாழ்க்கையில எதுவுமே நிரந்தரமில்லைன்னு நினைக்கிறவ, இந்த நொடி நாம அனுபவிக்கும் வலியோ சந்தோஷமோ கோபமோ அடுத்த நொடியும் நீடிக்கனும் என்ற அவசியம் இல்லை. ஸோ எதுக்கு நான் ஒரு குயிக் டிசிஷன் எடுக்கணும்?!"
"டைம் ஹீல்ஸ் (Time heals)அபய்! ஐ கேன் ஃபீல் யுவர் பெயின், உங்க வலி குறைய காத்திருக்கேன் போதுமா?! இப்போ போகலாமா எல்லாரும் வைட் பண்ணிட்டு இருக்காங்க.." என்று எழ முற்பட்டவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான் அபய்.
"என்ன பண்றீங்க? கெட் அப்" என்று நயனி சொல்ல, "இருக்கட்டும். எனக்கு பேசணும்னு சொன்னேனே மறந்துட்டியா?"
"எஸ்! பட் ஏன் இப்படி? மேல உட்காருங்க அபய்"
"இருக்கட்டும்!" என்று அவள் கைகளை பிடித்தவன், "ஒன்ஸ் ஃபார் ஆல் ஒரு பெரிய ஸாரி நயனி. இந்த ஸாரி போதுமான்னு தெரியலை பட் என் மனசு சமாதானமாகும் வரையில் சொல்லிட்டே இருப்பேன் நீ கேட்டு தான் ஆகணும்" என்றதில் அவள் புன்னகை இன்னுமே விரிந்தது.
"திரும்பவும் சஞ்சுவை பேசுறேன்னு நினைக்காத.. ஆனா சஞ்சு அவளோட இடத்துல உன்னை இருக்க வச்சிருக்கும் போது அவளுக்கு கொடுக்கக்கூடிய மரியாதையை நிச்சயமா நான் உனக்கும் கொடுக்கனும்.. ஆனா அவளுக்காக இல்லாம உனக்கே உனக்கான மரியாதையை உனக்காக உனக்கு கொடுக்கணும், அதுதான் சரி!"
"என்ன புதுசா.." என்றவளுக்கு அவன் பேச்சில் கண்கள் கலங்கி போனது.
"நீதானே என்னோட வைஃப்! அப்போ என் வைஃப்கான மரியாதையை அவளை கொண்டு இல்லாமல் அடுத்தவங்களை கொண்டு தீர்மானிக்கிறது தப்பு தானே?! சஞ்சு ஆசைப்பட்டபடி அவள் நிச்சயமா நமக்கு மகளா வந்து பிறக்கணும் மாட்டேன்னு சொல்லலை ஆனால் அதற்காக உன்னை நெருங்க மாட்டேன்..."
"என் வாழ்க்கையில் சஞ்சுவுக்கான இடம் எந்த அளவுக்கு பிரத்தியேகமானது அதே அளவு இல்லை அதைவிடவும் அதிகமா உன்னுடையது இருக்கணும் அது தான் சரியும் கூட.."
"இப்போதைக்கு எனக்கு உன் மேல அன்பு இருக்கு மரியாதை இருக்கு விருப்பம் இருக்கான்னு கேட்டா இப்போதைக்கு இல்லைன்னு தான் சொல்லணும்.. நீ சொன்ன மாதிரி என்னோட காயம் ஆற நாளெடுக்கும் இல்லையா?!"
"அதுல வலுக்கட்டாயமா உன்னை திணிக்கிறது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்லை. நிச்சயம் நான் உனக்கு நல்ல கணவனா இருப்பேன்! நம்முடைய வாழ்க்கை நீண்டு இருக்கு உன்னை உனக்காக ஏத்துக்கிறது தான் உனக்கு நான் கொடுக்கக்கூடிய மரியாதை!"
"எனக்கு கொஞ்சம் டைம் கொடு. உன்னை என் மனைவியா பார்க்கும் நாள் சீக்கிரம் வரும் இந்த உதவி மட்டும் எனக்கு பண்ண முடியுமா?" என்று அவள் முன் மண்டியிட்டு யாசகம் கேட்க கலங்கிய விழிகளோடு அவனை பார்த்தவளின் நாசி விடைத்தது.
இதோ அதோ என்று எப்போது வேண்டுமானாலும் நீர் மணி உருண்டோடும் நிலையில் இருக்க அதை துடைத்தவள், "என்ன இப்படி பேசுறீங்க அதெல்லாம் நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன்.."
"அவ என்கிட்ட வாங்கின சத்தியத்தை மீறி தான் உங்ககிட்ட இந்த லெட்டர் கொடுத்தேன் அதுவும் நீங்க விவாகரத்து என்று முடிவுக்கு போனதுனால மற்றபடி இதெல்லாம் நான் எதிர்பார்க்கலை.."
"நீ எதிர்பார்க்காம இருக்கலாம் நயனி, அது உன்னோட பெருந்தன்மை. அதுக்காக உன்னை நான் என் இஷ்டத்துக்கு வளைக்க முடியாது. உன்னோட எதிர்பார்பில்லா காதலை நான் டேக் இட் பார் கிராண்டட்டா எடுக்கிறது தப்பில்லையா?!" என்றதில் நயனி முகத்தில் கண்ணீரும் மகிழ்ச்சியும் ஒருசேர முகிழ்த்தது.
"உனக்கே உனக்கான அபய் ஸ்ரீவத்ஸனாக மாற எனக்கு கொஞ்சம் நேரம் கொடு! உன்னளவு காதலை கொடுக்க முடியுமான்னு தெரியாது ஆனா நீ இழந்ததை முடிந்த வரை ஈடுகட்டி நிச்சயம் உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்.."
"என்.. என்ன இழந்துட்டேன் நான்?"
"சின்ன வயசுல உன் அப்பாவில் ஆரம்பித்து இப்போ இதுநாள் வரை உரிமையா உடனிருக்க முடியாத அம்மா வரை எவ்வளவோ சொல்லலாம்..." என்றவனுக்கு என்னதான் அவர்கள் பந்தம் சஞ்சனாவின் விருப்பப்படி அமைந்து இருந்தாலும் அவர்கள் வாழ்க்கை இருவரின் முழு விருப்பத்துடன் காதலுடன் தொடங்க வேண்டும் என்ற உறுதி.
"ஐ ப்ராமிஸ் யூ நயனி நிச்சயம் நான் உனக்கு நல்ல கணவனா இருப்பேன்.." என்றவன் நெஞ்சம் ததும்ப தன்னை பார்த்திருந்தவளிடம், "எல்லாரும் வைட் பண்ணிட்டு இருப்பாங்க போகலாமா?" என்றான்.
"ஹ்ம்ம்.." என்று எழுந்து கொண்டவள் அவனோடு கீழே வர அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர்.
நிர்மலா மட்டும் தனியாக பரிமாறுவதை கண்டவள், "என்னை கூப்பிட்டு இருக்கலாமே அத்தை.." என்றபடி அவரிடமிருந்து பாத்திரத்தை வாங்கி பரிமாற தொடங்கினாள்.
பொதுவாக கல்லூரியில் இருந்து வந்ததும் சுடிதாருக்கு மாறிவிடுவது தான் நயனியின் வழக்கம். அதுதான் எப்போதுமே அவளுக்கு வேலை செய்ய வசதியான உடை. ஆனால் இன்று அதற்கு நேரமில்லாமல் போனவள் புடவையோடு அனைவருக்கும் பரிமாற தொடங்கினாள்.
அனைவருக்கும் என்றால் அபய், வினோதன், முரளிதரன், தனலட்சுமிக்கு மட்டும்..
சக்கரவர்த்தி அவளை வீட்டை விட்டு அனுப்பியதிலேயே அவர் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை மொத்தமாக பொய்த்து போனது. அபய்யோடு வீட்டிற்கு திரும்ப வந்ததில் இருந்தே அவரோடு அவள் பேசுவதில்லை. பேச்சு மட்டுமல்ல அதுநாள் வரை அவருக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தவள் அதையும் நிறுத்திக்கொண்டாள்.
நிர்மலாவிற்கு இது தெரிய வந்த போதும் அவர் ஒரு வார்த்தை கேட்காமல் மருமகளின் முடிவை ஆதரித்தார். சக்கரவர்த்திக்குமே தன் வீட்டிலேயே தன்னை நயனி ஒதுக்கியது வருத்தத்தை கொடுத்தாலும் அதை வெளிப்படையாக காண்பித்து கொள்ள மாட்டார்.
ஆனால் மகனுக்கு ஆக்ஸிடென்ட் நடந்த பிறகு நயனி அவனை கவனித்து கொள்ளும் விதத்தில் அவர் மனதிலும் பெரும் மாற்றம். அன்று அடுத்தவர்கள் கொடுத்த அழுத்தத்திலும் வீடியோ போட்டோ அனைத்தும் அவளுக்கு எதிராக இருந்த காரணத்தால் குடும்ப கௌரவத்திற்காக வெளியில் அனுப்பினாரே தவிர்த்து அவர் அவளை தவறாக நினைத்ததால் அல்ல.
இனியும் அவளை இங்கே வைத்திருப்பது அவர் கௌரவத்திற்கு இழுக்கு என்பதாலேயே வெளியே அனுப்பினார். கடந்த சில நாட்களாகவே அதை எண்ணி வெகுவாகவே வருந்தி கொண்டிருக்கிறார்.
அவர்கள் வீட்டில் ஏழு மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்து கொள்வது வழக்கம். இந்த இரண்டு வருடங்களில் நயனியுமே அதற்கு பழகி போயிருந்தாள். இவ்ளோ சீக்கிரமா என்று தனலட்சுமி மறுக்க அவரையும் அமர்த்தி இருந்தாள் நயனி.
அபய்க்கு பரிமாறி கொண்டு வந்த நயனியின் புடவை தடுக்கியதில் கை தவறி சாம்பார் முரளிதரன் மீது ஊற்றிவிட்டாள்.
அதை எதிர்பாராத முரளி, "என்ன மா நீ பார்த்து செய்ய மாட்டியா?" என்று சட்டையை உதறிக்கொண்டு எழ, "ஸாரி தெரியாம நடந்துடுச்சு.. ஸாரி" என்றாள்.
"பரவால விடு நீ மத்தவங்களை பாரு, நான் மாமாவை பார்க்கிறேன், நீங்க வாங்க மாமா" என்று அபய் அவரை அழைத்து சென்றான்.
"கண்ணு என்ன உனக்கு பொடறியிலயா இருக்கு, பார்த்து பரிமாற மாட்ட?!" என்று எகிறினார் சேதுராமன்.
"விடு சேது தெரியாம தானே?! அமைதியா உட்கார்ந்து சாப்பிடு" என்றார் சக்கரவர்த்தி.
ஆனால் நயனியை மட்டம் தட்ட நேரம் பார்த்து கொண்டிருக்கும் சேதுராமனா அடங்குவார்?
"உங்களுக்கு தெரியாது சம்மந்தி இவளால எல்லாருக்கும் எவ்ளோ மனக்கஷ்டம். நீங்க மாப்பிள்ளையை பிரிஞ்சு இருந்ததுல தொடங்கி இவ பண்ணி வச்ச காரியத்தால வெளியே தலை காட்ட முடியாம என் பொண்ணு நிச்சயத்துக்கு கூட வர முடியாம போயிடுச்சு.." என்றார் உரத்த குரலில்.
"வாயை மூடுங்க! அதுதான் நயனி மேல எந்த தப்புமில்லைன்னு நிருபணம் ஆகிடுச்சே.." என்ற தனலட்சுமியின் பேச்சு அவரிடம் எடுபடாமல் போக நயனியை இன்னுமே மோசமாக பேசிக்கொண்டு சென்றார்.
தனலட்சுமியும் நிர்மலாவும் அவர் நிருத்தமாட்டாரா என்பது போல பார்த்திருக்க நயனியோ மலையை பார்த்து குலைக்கும் நாயாக சேதுராமனை கண்டது சென்று தனக்கான உணவை பரிமாறிக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.
அதேநேரம் "போதும் வாயை மூடு சேது!" என்று கர்ஜித்த சக்கரவர்த்தி, "எங்க வந்து யாரை பேசுற?! என் மருமகளை இன்னொரு வார்த்தை சொன்ன நாக்கை இழுத்து வச்சு அறுத்துடுவேன்" என்றார் ஆக்ரோஷமாக.
"சம்மந்தி..." என்று அதிர்ந்து போனார் சேதுராமன்.
"என் மருமகள் மேல எந்த தப்பும் இல்லைன்னு தீர்ப்பு வந்த பிறகும் இதென்ன பேச்சு? நீ பேசறது சக்கரவர்த்தி மருமகளை என்பதை மறந்துடாதா?!"
"பார்றா! சக்கரவர்த்தி மருமகளா?! இது எப்போதிருந்து?" என்றான் முரளியோடு அங்கே வந்த ஸ்ரீவத்ஸன்.
"அபய்..." என்றவருக்கு வார்த்தை எழவில்லை..
"சொல்லுங்க டாடி, மத்தவங்க வார்த்தையை வச்சு இவளை வெளியே அனுப்பினது நீங்க தானே இப்போ மட்டும் என்ன இவ்ளோ பாசம் பொத்துக்கிட்டு வருது?!"
"..."
"அன்னைக்கு எவ்ளோ ஈஸியா நயனியை வீட்டை விட்டு போக சொல்லி அந்த பொய்யை உண்மைன்னு நீங்களே மத்தவங்களுக்கு நிருபிச்சுட்டு இப்போ இப்படி பேசற காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?!" என்றவனுக்கு அவரிடம் பதிலில்லை.
"சொல்லுங்க டாடி"
"தப்பு தான் அபய். ஆனா அப்போ எனக்கு வேற வழி தெரியலை.."
"வழி தெரியலையா? என்ன பேசறீங்க நீங்க?! இதுவே உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து, இப்படியொரு பழி அந்த பொண்ணு மேல சுமத்தபட்டிருந்தா இப்படி தான் வீட்டை விட்டு அனுப்பி இருக்கீங்களா? ஐ மீன் உங்க கொளரத்திற்காக பொண்ண தூக்கி போட்டு இருப்பீங்களா?"
"அபய்..."
"டெஸ்ட் ரிப்போர்ட் மத்தவங்க சாட்சிக்கு கொடுத்த மதிப்பை குறைந்த பட்சம் அவளோட வார்த்தைக்கு கொடுத்திருக்கலாமே டாடி?! இவ பக்க நியாயம் எதுவுமே கேட்காம உங்க கௌரவத்தை காப்பாற்ற வெளியே அனுப்பிட்டீங்க அப்படி தானே?!" என்ற மகனின் கேள்விக்கு அவரால் எளிதாக பதில் சொல்லிவிட முடியவில்லை.
"இந்த வீட்டுக்கு வந்த போது நயனிக்கு என் மேல இருந்த நம்பிக்கையை விட உங்க மேல அதிகளவு நம்பிக்கை இருந்திருக்கும் ஆனா அதை ஒண்ணுமில்லாம ஆக்கிட்டீங்களே! சுருக்கமா சொல்லணும்னா என்னை பலி கொடுத்த மாதிரி உங்க கௌரவத்திற்காக நயனியையும் பலி கொடுத்தேன்னு சொல்லுங்க.. அதற்கு ஏன் இவ்வளவு தயங்குறீங்க?" என்றான்.
"போதும் அபய் இதுக்கு மேல எதுவும் கேட்காத என்கிட்டே பதிலில்லை. எனக்கு இந்த குற்ற உணர்ச்சி இருக்கிறதால தான் நயனி கிட்ட என்னால மன்னிப்பு கேட்க கூட முடியல"
"மன்னிப்பா நீங்களா?! நம்ப முடியலையே டாடி.." "நம்பி தான் ஆகணும் அபய். நான் செய்த தப்பு ரொம்ப நாளா என்னை உறுத்திகிட்டே இருந்தது. ஆனா.." என்றவர் நயனியிடம் சென்று.,
"உன்னோட முகத்துல எப்படி முழிக்கிறதுன்னு எனக்கு தெரியலை நயனி. அதோடு நான் உனக்க கொடுத்தது மன்னிப்பு கேட்டு ஆறக்கூடிய காயமில்லையே?!" என்றவர் நயனியின் முன்பாக கையெடுத்து கும்பிட்டு,
"உன்னால முடிஞ்சா என்னை மன்னிச்சுடு மா.." என்று சொல்ல அவள் அமைதியாக நின்றிருந்தாள்.
"என்னம்மா ஒண்ணுமே சொல்லாம இருக்க?"
"நீங்க தப்பு பண்ணி இருக்கீங்க அதற்கு மன்னிப்பு கேட்கறீங்க இதுல நான் சொல்ல என்ன இருக்கு?"
"நயனி.." என்று அவர் அழைக்க நயனியோ பேச்சு முடிந்தது போல அறைக்கு திரும்பி விட்டாள்.
அனைவரும் ஒன்றும் புரியாமல் அவள் சென்ற திசையை பார்க்க நயனி பின்னே வந்த அபய் "என்ன நயனி எதுவும் சொல்லாம வந்துட்ட?!"
"என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கறீங்க?"
"இல்லை டாடி மன்னிப்பு கேட்டதுக்கு நீ ஒண்ணுமே சொல்லலையே?"
"மன்னிச்சா தானே ஏதாவது சொல்லணும்?!" என்றவளின் வார்த்தையில் திகைத்தவன், "அப்போ அவரை நீ மன்னிக்கலையா?" என்றான்.
"இல்லையே! ஏன் கேட்கறீங்க?"
"நயனி..."
"உங்கப்பா தப்பு பண்ணினார் அதனால் மன்னிப்பு கேட்டார். அவர் கேட்டதுக்காக நான் மன்னிக்கணும்னு கட்டாயமா என்ன?! மன்னிப்பு கேட்க வேண்டியது அவரோட கடமை மன்னிப்பதும் மன்னிக்காததும் என்னோட உரிமை.."
"நயனி.."
"இந்த வீட்ல நான் ரெண்டு வருஷம் இருந்திருக்கேன் அபய் வீடு விட்டா காலேஜ் காலேஜ் விட்டா வீடு. என் அம்மா வீட்டுக்கு கூட நான் போனது கிடையாது. நீங்க என்னோடு வாழாம போயிருந்தாலும் என்னோடு இல்லாமல் போயிருந்தாலும் என்னைக்குமே இந்த வீட்டோட மருமகளா என்னோட கடமையில் இருந்து நான் தவறினது இல்லை..."
"அப்படிப்பட்ட நான் வழி தவறுவேன்னு எப்படி நம்பினார்? நீங்க சொன்ன மாதிரி அவர் என்னை பெண் கேட்டு வந்ததுல இருந்து என்கிட்டே நடந்துகிட்ட விதத்துல அவரை நான் என் அப்பா போல நினைச்சிருந்தேன் ஆனா அவரோட ஸ்தானத்தை அவர் இழந்துட்டார்..."
"தப்பு பண்ணினது அவர்! அவருக்கு தான் உறுத்தனும் நான் இங்கே திரும்ப வரப்போறேன்னு சொன்ன போது கூட சுதர்ஷன் அம்மா ஏன் மா அவங்க எதிர்ல போய் நீ இருக்கணும் அபய் உன்னை புரிஞ்சு இருக்கிறப்போ தனியா போகலாமேன்னு கேட்டாங்க.."
"ஆனா நான் எதுக்காக வீட்டை விட்டு போகணும்? நிச்சயம் நான் இந்த வீட்ல தான் இருப்பேன். என்னை பார்க்கிறப்போ எல்லாம் அவருக்கு அந்த குற்ற உணர்வு இருந்துட்டே இருக்கணும்.. என்னை பற்றி என்ன தெரிஞ்சதுன்னு என்னை கல்யாணத்துக்கு கேட்டு வந்தார்?"
“என் புருஷனோடு இதே வீட்ல சந்தோஷமா வாழ்வேன் அதுவும் அவங்க கண் எதிர்ல! இதுதான் உங்க அப்பாவுக்கு நான் கொடுக்க போற தண்டனை.. என்னைக்குமே ஒரு மருமகளா என்கிட்டே இருந்து அவருக்கு எந்த மரியாதையும் கிடைக்காது அவர் எதிர்பார்க்கவும் கூடாது. அந்தளவு என்னோட நம்பிக்கையை சுக்கு நூறா உடைச்சவர்..."
"அப்படி பார்த்தா அவரை விடவும் நான் தானே உன்னை அதிகமா கஷ்டபடுத்தி இருக்கேன் என்னை மட்டும் மன்னிச்சுட்ட?!"
"நீங்க செய்த தப்புக்கு உங்களுக்கு ஒரு நியாயமான காரணம் இருக்கு. அதற்கும் மேல என்னை போலவே அவரால நீங்களும் பாதிக்கப்பட்டவர் அப்புறம் உங்களை நான் எப்படி கோவிக்க முடியும்?”
“என்னை கட்டாயப்படுத்தவில்லை என்றாலும் எங்க வீட்டில் உள்ளவர்களை விலைக்கு வாங்கி கல்யாணம் நடத்தின உங்க அப்பா எனக்கு அவ்ளோ நம்பிக்கை கொடுத்திருக்கார்.."
"ஆனா அன்னைக்கு அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்த போது நான் அவரை தான் தேடினேன் தெரியுமா அபய். நிச்சயம் உனக்கு நானிருக்கேன்னு உங்க அப்பா எனக்காக பேசுவார்ன்னு ரொம்ப எதிர்பார்த்தேன் ஆனா அவரோட கௌரவத்திற்காக என் மனசை கொன்னிருக்காரு அதுக்கு மன்னிப்பே கிடையாது..”
Last edited: