தனலட்சுமி பார்கவ்வை தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அபய் ஸ்ரீவத்ஸன்.
அன்று பிரிவு என்ற முடிவை எடுத்த போதே மகளுக்கும் மருமகனுக்கும் சொல்லி விட்டிருந்ததால் அபய் தன் வீட்டினரை தயார்படுத்தி விட்டான்.
சக்கரவர்த்தி ஏதோ பேச முற்பட அவரை இடையிட்டவன், "மாமா இத்தனை வருஷமா குடும்பத்தோடு இந்த வீட்ல இருக்கிறப்போ என் பொண்டாட்டியோட அம்மாவும் தம்பியும் இங்கே இருந்தால் என்ன தப்பு?
"ஒருவேளை இதுலயும் உங்க கௌரவம் பாதிக்கப்படும் என்று நீங்க நினைச்சா நான் என் மனைவி மாமியார் மச்சானோடு வெளியே போயிடுறேன்.. உங்க கௌரவத்தை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க.." என்றதை சக்கரவர்த்தியால் மறுத்து பேசிவிட முடியுமா என்ன?!
சேதுராமனை போலீஸார் கைது செய்யும் முன்னமே சேது கட்டியிருந்த தாலியில் கழற்றி அவரிடமே கொடுத்துவிட்டார் தனலட்சுமி.
"இனி இது என் கழுத்துல இருக்கிற காரணத்தை சாக்கா வச்சு கூட என்னை தேடி வந்துடாத.. அப்படி வந்தா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்" என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
வீட்டிற்கு வந்தது முதலே தன்னை விட்டு நீங்காமல் தன் கைகளை பிடித்துக்கொண்டு தோள்களில் சாய்ந்திருந்த மகளை கண்ட தனலட்சுமிக்கு
"இன்னும் என்ன தனா பழைசை பேசிக்கிட்டு?! இத்தனை வருஷம் இழந்ததை இனியும் ஈடு கட்ட முடியும். உன் மகளை வளர்க்க மூடியாட்டி என்ன உன் பேரன் பேத்தியை வளர்த்து அழகு பாரு.."
"பொதுவாவே ஒரு பொண்ணுக்கு பிரசவ காலத்துல தான் அம்மாவோட இருப்பு அதிகமா தேவைப்படும். நல்லவேலை ஆண்டவனா பார்த்து உன் மகளோட பிரசவத்துக்கு முன்னாடியே உன்னையும் அவளையும் சேர்த்து வச்சதா நினைச்சுக்கோ.."
"முடிஞ்சு போனதை பேசி ஆக போறது என்ன? என்று நிர்மலா தான் தனலக்ஷ்மியை தேற்றினார்.
"என்ன இருந்தாலும் பொண்ணு வீட்ல எத்தனை நாளைக்கு இருக்க முடியும் அண்ணி.. மாப்பிள்ளையோட பெருந்தன்மை என்னை இங்க கூட்டிட்டு வந்தது அதுக்காக நான் இங்கேயே இருந்திட முடியுமா? எனக்கு துணைக்கு பார்கவ் இருக்கான்.. ஒரு வீடு மட்டும் பிடிச்சு கொடுத்துட்டா போதும் நாங்க இருந்துப்போம்.."
"பக்கத்துலையே இருந்தா என் மகளை காலையிலயும் சாய்ந்திரமும் பார்த்துக்க வசதியா இருக்கும்"
"அவளோ தானே கவலையை விடுங்க... இங்க பக்கத்துலையே நம்ம பழைய வீடு இருக்கு. நாங்க இங்க வரதுக்கு முன்னாடி இருந்தது.
அன்று இரவு அறைக்கு திரும்பிய அபய்யை ஓடி சென்று கட்டிக்கொண்டாள் நயனிகா.
முதலில் புரியாமல் நின்றிருந்தவள் அவள் விசும்பலில் மெல்ல மனைவியின் முகம் நிமிர்த்தி, "என்னாச்சு நயனி?" என்றான்.
"தேங்க்ஸ்!! தேங்க் யூ ஸோ மச் அபய்!!"
"எதுக்கு?"
"என் அம்மாவை எனக்கே எனக்காக திருப்பி கொடுத்ததுக்கு.."
"இது அத்தையோட முடிவு. இதுல நான் பெருசா என்ன செய்துட்டேன்னு இப்போ தேங்க்ஸ் சொல்ற?!"
"அம்மா இந்த முடிவு எடுத்திருந்தாலும் அவங்களை செயல்பட வச்சது நீங்களும் நீங்க அவருக்கு கொடுத்த நம்பிக்கையும் தானே!" என்ற நயனியின் வார்த்தைகள் நூறு சதவிகிதம் சரியே!!
ஆம் தனலட்சுமி தன் முடிவை சொன்ன போது தான் கொண்ட அதிர்ச்சியில் நயனிக்கு பேச்சு வரவில்லை. பின்னே இத்தனை நாட்கள் தாயை தம்பி தங்கைக்கு விட்டுகொடுத்து விட்டவளுக்கு இப்போது அவர் முழுவதுமாக தனக்கே தனக்கு கிடைக்க போகிறார் என்பது எத்தனை பெரிய பேரு!!
அதீத மகிழ்ச்சியை தாள முடியாது தவித்தவள் தம்பி தங்கையை பார்க்க அவர்களோ 'இனி அம்மா முழுக்க உனக்கே உனக்கு தான் க்கா நாங்கள் பங்கு போட வர மாட்டோம்' என்பது போல மகிழ்ச்சியோடு நயனியை பார்த்திருந்தனர்.
"நிதியும் பார்கவ்வும் ரொம்ப ஸ்வீட் அபய். ஆனா அவங்களுக்கு கொடுக்காம அம்மாவை நான் மட்டுமே வச்சுக்க மாட்டேன் அவங்களுக்கும் அப்பப்போ கொடுப்பேன்.."
"சரி.." என்று புன்னகையோடு அவள் உச்சியில் நாடி பதித்து சொன்னான்.
"அம்மா சொன்ன மாதிரி முதல்ல அவங்களுக்கு நல்ல வீடு பார்க்கணும்..."
"அந்த கவலை உனக்கு வேண்டாம் நான் ஆல்ரெடி பார்த்து வச்சுட்டேன்.."
"ரியலி!" என்று கணவனின் நெற்றியில் இதழ் பதித்தவள்,
"இனி நான் எப்போ வேண்டுமானாலும் அம்மாவை பார்க்க வரலாம் தானே?! அம்மா கூடவே இருக்கலாம் தானே?! அம்மவோடவே தங்கலாம் தானே?! அவங்க எனக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சு கொடுப்பாங்க தானே?!"
"ஏன் இல்லாம தினமும் உனக்கு ப்ரேக்பாஸ்ட் லஞ்ச் எல்லாமே அத்தை செய்து கொடுப்பாங்க.. அவங்களை எப்போ வேண்டுமானாலும் நீ பார்க்கலாம் அவங்களோடவே தங்கலாம்.."
"என்னால இன்னுமே நம்ப முடியலை அபய். இதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.. அம்மாக்கு கெஸ்ட் ரூம்ல எல்லா பெசிலிட்டி இருக்குமா? புதுசா வாங்கியிருந்த போர்வையை எங்கே வச்சேன்.." என்று அவனோடு பேசிக்கொண்டே கப்போர்டை திறந்தவள் முழங்கை சுவரில் பலமாக இடித்துக்கொண்டது.
"ஸ்ஸ்ஸ்ஆஆ.." என்றவளின் குரலில் தன் வேலையை நிறுத்திவிட்டு மனைவியிடம் வர முகம் சுணங்க அவனை பார்த்தாள்.
"இனி யாருக்காவும் நான் அம்மாவை விட்டு தள்ளி இருக்க வேண்டியது இல்லை தானே.. யாருமே எங்களை பிரிக்க முடியாது தானே அபய்?!"
"ஆமாடி ஆனா தலைகால் புரியாம ஓடினா இப்படி தான். அப்படி என்ன அவசரம் உனக்கு?! மெதுவா தான் செய்யேன்.." என்று கடிந்தவன் ஐஸ் கட்டிகளை கொண்டு வந்து வீக்கம் கண்ட இடத்தில் ஒற்றடம் கொடுத்தான்.
"இன்னைக்கு நீங்க அவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்ததை நான் என்னைக்கோ செய்திருக்கலாம் ஆனா என் தம்பி தங்கச்சிக்காக செய்யாம் இருந்தேன்.. தப்பு பண்ணிட்டேனா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை.." என்றவனை இறுக்கமாக கட்டிக்கொண்டவள் அவன் கன்னத்தில் இதழ்களை பதிக்க எப்போது அவர்களின் முத்தம் இதழ்களில் நிறைவு கொண்டது என்பதை அவர்களே அறியவில்லை.
மேலும் சில மாதங்கள் கழிந்த நிலையில்:
நேரம் நள்ளிரவு பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது ஆனாலும் உறக்கம் வராத நயனிகா மெதுவாக எழுந்தமர்ந்து எட்டு மாதத்தின் முடிவில் இருந்த தன் வயிறாய் சுற்றி கரங்களை படரவிட்டாள்.
"தூக்கம் வரலையா சஞ்சு? என்ன இன்னைக்கு ரொம்ப நேரம் முழிச்சுட்டு இருக்க?" என்று உள்ளிருக்கும் மகளோடு பேச தொடங்கிட குழந்தையும் காலை உதைத்து தன் இருப்பை உறுதி செய்தது.
"இன்னும் ரெண்டு நாளுல வளைகாப்பு! உனக்கு பிடிச்ச கலர்ல தான் வளையல் அடுக்கனும்னு சொல்லிருக்கேன்.. உனக்கு பிடித்த மெனு தான் செய்யணும்னு சொன்னேன் ஆனா அபய் அதுக்கு ஒத்துக்கவே இல்லை.. எனக்கு பிடிச்சதை தான் செய்யணும்ன்னு சொல்லிட்டார்.."
"ஏன் என்று கேட்டதற்கு நம்ம ரெண்டு பேருக்குமான விசேஷத்துல ரெண்டு பேருக்கு பிடிச்சதும் இருக்கணும்னு சொல்லிட்டார்.. அவருக்கு மனைவியும் மகளும் ரெண்டு கண்கள்னு சொல்றார் சஞ்சு.."
"உனக்கு தெரியுமா?! அவரை விட எனக்கு தான் நீ எப்போ வருவன்னு இருக்கு சஞ்சு... நீ சீக்கிரம் வரணும் உன்னை என் மடியில போட்டு பாலூட்டனும், தாலாட்டனும், சீராட்டனும், உன்னை அழகா அலங்கரிக்கணும்.. நம்ம ரெண்டு பேருக்கும் எப்பவுமே ஒரே மாதிரி ட்ரெஸஸ் தான் அபய் கிட்ட சொல்லிட்டேன்.."
"உனக்கு நியாபகமிருக்கா?! அந்த தீபாவளிக்கு நாம ரெண்டு பேரும் ஃப்ளாரசென்ட் கிரீன்ல ஒரே மாதிரி ட்ரெஸ் எடுத்து வச்சோமே போட்டுக்கிறதுக்காக ஆனா அதை நாம போடவே இல்லடி.. அந்த தீபாவளி மட்டுமில்லை அதுக்கு அப்புறம் வந்த எந்த தீபாவளிக்கும் நான் புது ட்ரெஸ் போடறதே இல்லை தெரியுமா?!" என்று கண்ணீரை துடைத்தவள்,
"நீ வந்த பிறகு நாம செலிபரேட் பண்ண போற முதல் தீபாவளியில தான் நான் புது ட்ரெஸ் போட போறேன்.. என் மனசு கஷ்டப்படும் என்று அபய் என்கிட்டே சொல்லலை என்றாலும் அவரும் உனக்காக எந்தளவு காத்துகிட்டு இருக்கார்ன்னு எனக்கு புரியுது சஞ்சு... ஆனா இப்போ வரையிலும் நீ ஏன் எங்களை விட்டு இல்லாம போனான்னு அவர் சொல்லவே இல்லை..."
"அப்படி என்ன நான் தெரிஞ்சுக்க கூடாத ரகசியம்?! இதுவரைக்கும் சொல்லாம மெயின்டெயின் பண்றார் தெரியுமா?" என்று கண்ணீரோடு கோபித்தவள்,
"சரி எது ரகசியமாவே இருந்துட்டு போகட்டும் ஆனா நீ எங்க கைக்கு வந்த பிறகு உன்னை நானாக பத்திரமா பார்த்துப்போம்.. உன் மேல சின்ன துரும்பு கூட பட விடமாட்டோம்.. நீ ஆசைப்பட்ட மாதிரி எங்களோடு வாழ நினைச்ச வாழ்க்கையை வாழலாம்.." என்று அறையினுள் நடந்து கொண்டே பேசியவள்,
"இன்னொரு விஷயம் கவனிச்சியா சஞ்சு..?!" என்று மகளை வருடியவள் அபய் அருகே அமர்ந்தபடி,
"என்னோட வளைகாப்பை உன் பிறந்தநாள் அன்னைக்கு குறிச்சிருக்காங்க.. இது எதேர்ச்சையா நடந்ததா இல்லை நீ நடத்துறியான்னு தெரியலை ஆனா எனக்கு ஒரு ஆசை இருக்கு.." என்ற போதே மனைவியின் பேச்சிலும் அசைவிலும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்த அபய் அவள் அமர்ந்திருப்பதை கண்டு,
"என்ன ஆச்சு நயனி பெயின் ஸ்டார்ட் ஆயிடுச்சா? ஏன் உட்கார்ந்திருக்க.." என்று அவள் வயிற்றை தொட்டுப் பார்த்தான்.
ஆனால் இத்தனை நேரம் விழித்திருந்த அவர்களின் மகள் நயினியின் ஸ்பரிசத்தில் மெல்ல உறக்கத்தை தழுவி இருந்தாள்.
"அச்சோ அபய் தூக்கம் வராம உட்காரந்திருந்தா உடனே பெயின் ஸ்டார்ட் ஆகிட்டதா அர்த்தமா? இப்ப எதுக்கு நீங்க இவ்ளோ ஹைப் ஆகறீங்க? பாஸ் இப்போ தான் ஒன்பது ஆரம்பிக்க போகுது பொதுவாவே பெண் குழந்தைகள் ஒன்பது மாதத்தை நிறைவு செய்துட்டு தான் பிறப்பாங்கன்னு சொல்லுவாங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நம்ம பொண்ணு வர இன்னும் நாளிருக்கு" என்றாள் சிரிப்போடு.
"உள்ள மேடம் ரொம்ப சேஃப்பா இருக்காங்களாம் நம்ம அவசரத்துக்கு எல்லாம் வர மாட்டாங்களாம் உங்ககிட்ட சொல்லி வைக்க சொன்னா ஆனா நீங்க என்னடானா இப்பவே லேபர் கொண்டு போய் சேர்த்துவிடுவீங்க போல"
"எங்கே பெயின் வந்துடுச்சோன்னு பயந்துட்டேன் நயனி.. உனக்கு கால் வலி ஒன்றும் இல்லையே போன வாரம் எல்லாம் நடக்க முடியாம தூங்க முடியாம அவஸ்தப்பட்டியே..." என்றபடி அவள் கால்களை பிடித்து விட்டான்.
அவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று நயனியிடம் நேரம் கேட்ட அபய் என்னதான் அவ்வப்போது அவளிடம் கணவனாக உரிமையை நிலைநாட்ட முயற்சித்தாலும் முழுமையாக ஒன்ற முடியாமல் தவித்துப் போனான்.
அன்றைய அவர்களின் முதல் இதழ் பரிமாற்றத்திற்கு பின்னர் முழுதாக ஆறு மாதங்கள் எடுத்தது அபய் ஸ்ரீவத்ஸனுக்கு நயனிகாவை தன் மனைவியாக முழு மனதோடு ஏற்றுக் கொள்ள!!
அதற்காக இருவரும் தள்ளி இருக்கவில்லை. ஏற்கனவே நல்ல நட்புறவு கொண்டிருந்தவளிடம் கணவன் மனைவிக்கு இடையேயான சீண்டல் தீண்டல் அனைத்தும் இருந்தது. ஆனால் ஒரு எல்லைக்குள்ளாகவே தான்!
"நான் தான் உங்கள் மனைவி நீங்கள் தான் என் கணவன்!!" என்று அடிக்கடி சொல்லி அவளில் உரிமையை எடுத்துக் கொண்டாலும் அளவுக்கு மீறி அவனை சோதித்தது கிடையாது.
சில நேரம் முத்தத்தோடு அவன் அன்றைய இரவை நிறைவு செய்தாலும் கணவனின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவனோடு கை கோர்த்து நின்ற நயனி சில நேரம் அபய்யை விளையாட்டிற்கு சீண்டி வம்பிழுத்தாலும் அவன் உணர்வுகளோடு என்றுமே விளையாடியது கிடையாது.
அதுவே அவனுக்கு அவள் மீது பெரும் மரியாதையை தோற்றுவித்தது. தன்னால் நயனிகா அளவிற்கு காதலிக்க முடியுமா? என்ற சந்தேகத்தோடு அவளை காதலிக்க முயற்சி செய்தவனின் காதலில் ஒவ்வொரு நாளும் திளைத்து கொண்டிருந்தாள் நயனிகா.
சஞ்சு பற்றிய நினைவுகள் இருவருக்குமே அவ்வப்போது எழுந்தாலும் அவர்கள் அதை ஆரோக்கியமாக பகிர்ந்ததில் உள்ளம் தெளிந்த நீரோடையாக இருந்தது. அபய் மனதில் மனைவி மெல்ல மெல்ல நயனிகா நீக்கமற நிறைய தொடங்கினாள்.
ஆறு மாதங்களுக்கு பின்பான நயனிகா பிறந்த நாளின் போது அவர்களின் முதல் சங்கமம் அரங்கேறியதில் அடுத்த நான்காம் மாதமே நயனிகா கருவுற்றிருந்தாள்.
அன்று முதலே அவள் கால்களை தரையில் பட விடுவதில்லை அபய். கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டவன் தினமும் தானே காலையில் சென்று தனலட்சுமியை அழைத்து வந்துவிடுவான். என்ன தான் நிர்மலா மருமகளை மகள் போல பார்த்துக்கொண்டாலும் தனலட்சுமியை தான் மனைவியின் மனம் தேடும் என்பதை நன்கு அறிந்திருந்தவன் தானே அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.
நயனி உடல்நிலை சற்று வீக்காக இருப்பதால் முதல் மூன்று மாதங்கள் அவள் எங்குமே ட்ராவல் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டதில் பத்து நிமிட தூரத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு கூட அவளை அனுப்ப மறுத்து விட்டான்.
கணவன், தாய், மாமியார் என்று அனைவரின் கவனிப்பிலும் தாய்மையின் பூரிப்பிலும் மிளிர்ந்து கொண்டிருந்த நயனி தன் எதிரே இருந்த கணவனிடம், "அபய் எவ்வளவு கால் வலி இருந்தாலும் நீங்க பிடிச்சு விடும் போது அது மாயமா மறைஞ்சு போயிடுது" என்றபடி மற்றொரு காலையும் எடுத்து அவன் மடியில் வைக்க இரு கால்களையும் இதமாக பிடித்து விட்டான்.
"மணி பன்னிரண்டை தாண்டிடுச்சு இன்னுமாடி உனக்கு தூக்கம் வரலை? என்னை எழுப்பி இருக்கலாமே ஏன் தனியா உட்கார்ந்திருந்த?"
"நான் எங்கே தனியா இருக்கேன்?! அதுதான் நம்ம பொண்ணு கூட இருக்காளே இவ்ளோ நேரம் அவகிட்ட தான் பேசிட்டு இருந்தேன்... போதும் அபய் கால் வலி தெரியலை ஆனா இப்போ பசிக்கிற மாதிரி இருக்கு"
"10 மினிட்ஸ் வெயிட் பண்ணு நான் சமைத்துக் கொண்டு வருகிறேன்..." என்று அறைக்கதவை திறக்க போனவன்,
"இன்னைக்கும் ஸ்வீட் கார்ன் தானே?!" என்று கேட்க "பரவால்ல பாஸ் தேறிட்டிங்க" என்று சிரித்தால் நயனி.
"ஏன்டி இத்தனை மாசமா எத்தனை மணிக்கு பசிச்சாலும் நீ கேட்கிறது ஸ்வீட் கார்ன் தான்! நான் எத்தனை வகை கொண்டு வச்சாலும் ஸ்வீட் கார்ன் சாப்பிடாமல் உனக்கு பசி அடங்காது அதனால தான் இப்போ எல்லாம் முதலிலேயே ஸ்வீட் கார்ன் கொண்டு வந்துடுறேன்.." என்று சமையலறைக்கு சென்றவன் சுட சுட ஸ்வீட் கார்ன் உடன் வந்து சேர்ந்தான்.
அறையில் நடந்து கொண்டிருந்த நயனிகா துள்ளி குதிக்காத குறையாக அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு வேகம் வேகமாக சாப்பிட, "நயனி இந்த நேரத்துல கார்ன் அதிகமா சாப்பிடக்கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்காங்க அவங்களுக்கு தெரியாம தான் நான் கொண்டு வந்து இருக்கேன் மெதுவா சாப்பிடு.." என்றவன் கையோடு கொண்டு வந்திருந்த வெந்நீரையும் ஊற்றி கொடுத்தான்.
"அதெல்லாம் ஒன்னுமாகாது அபய். ஸ்வீட் கார்ன் இஸ் குட் ஃபார் ஹெல்த்.. லாஸ்ட் டைம் செக்கப் போன போதே டாக்டர் கிட்ட கார்ன் க்ராவிங் இருக்குன்னு சொன்னேன் அவங்க சொன்னது போல தான் எடுத்துக்கிறேன் டோன்ட் வொரி"
"நான் சமையல் அறை பக்கமே போனது கிடையாது இந்நேரத்துக்கு என்னை எங்க அம்மா மட்டும் பார்த்திருந்தா.." என்று அபய் முடிக்கும் முன்னமே.,
"என்ன பண்ணிடுவாங்க? என் மருமகளுக்கு இது எல்லாம் பிடிக்கும் வாப்பா ராஜா சொல்லி கொடுக்கிறேன்னு என் மாமியார் உங்களுக்கு கிளாஸ் எடுப்பாங்க.. அவ்ளோ தான்!! இதுக்கு போயி அலட்டிக்கலாமா பாஸ்!!" என்று கண் சிமிட்டினாள்.
"எல்லாம் நேரம் தான்டி! என் அப்பா உட்பட மொத்த குடும்பத்தையும் உன் விரல் அசைவுல ஆட்டி வைக்கிற.. எப்படி நயனி உன்னால முடிந்தது? அதுவும் எங்க அப்பா எல்லாம் எந்த விஷயம் இருந்தாலும் அம்மா மூலமா இல்லை என் மூலமாக உன்னோட அபிப்பிராயத்தை கேட்காமல் செய்யறதே கிடையாது... அந்தளவுக்கு அவரை பயமுறுத்தி வச்சிருக்க நீ!!"
"அதை பார்த்தா உங்களுக்கு பயம் மாதிரி தெரியுதா?"
"நிச்சயம் அவருக்கு உன்மேல மரியாதை இருக்கு, குற்ற உணர்ச்சி இருக்கு அதனால அப்படியும் சொல்லலாம் ஆனால் ஒன்னு சொல்லணும் நயனி நாம இந்த வீட்டை விட்டுப் போய் இருந்தால் கூட அப்பா கிட்ட இந்த மாற்றம் வந்து இருக்குமா என்று தெரியாது..."
"ஆனால் இங்கேயே இருந்து அதுவும் அவரோடு ஒரு வார்த்தை பேசாம அவரை எவ்வளவு மாற்றி வச்சிருக்க நீ!! அவருக்கான தண்டனையே உன்னை பார்க்கிறப்போ எல்லாம் குற்ற உணர்ச்சி அதிகமாகனும் என்று அன்னைக்கு நீ சொன்னது சரி!!"
"அப்ப கூட அவரு இப்படி மாறுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை... கிரேட் ஜாப் நயனி!!" என்றதற்கு அவளிடம் எந்த பதிலும் இல்லை.. அமைதியாக கார்ன் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
************
அன்று அந்த பிரம்மாண்ட திருமண மண்டபத்தில் நயனியின் வளைக்காப்பு ஜோராக நடை பெற்று கொண்டிருந்தது. சந்தனம் குங்குமம் கை நிறைய வளையல் என்று கணவன் அருகே பூரித்து போய் அமர்ந்திருந்தாள் நயனிகா வர்ஷி.
பொதுவாகவே சக்கரவர்த்தி தூரத்தில் இருந்து மருமகளின் நலன் விசாரித்து கொள்வதோடு சரி இப்போதும் விருந்தினர்களை வரவேற்று கொண்டிருந்தவர் தூரத்தில் இருந்தே மகன் மருமகளின் மகிழ்ச்சியை கண்டு ரசித்திருந்தார்.
அனைவரும் நலங்கு வைத்திருந்ததில் நேரம் செல்ல இறுதியாக ஐந்து பெண்கள் சேர்ந்து நயனிக்கு ஆலம் சுற்றி அறைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவளுக்கு பிரசவ வலி ஆரம்பித்துவிட்டது.
நயனி முக மாற்றத்தை கண்ட தனலட்சுமியும் நிர்மலாவும் அவளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்று சொல்லிவிட்டனர்.
உடனே மனைவியை பத்திரமாக காரில் அமர்த்திய அபய் அடுத்த நாற்பது நிமிடத்தில் மருத்துவமனையில் இருந்தான்.
லேபர் வார்டிற்கு நயனியை கொண்டு செல்ல மருத்துவமனை சம்பிரதாயங்களை முடித்த அபய் உரிய பாதுகாப்போடு பிரசவ அறைக்கு செல்ல அங்கே அவன் மனைவியை அதிகம் கஷ்டபடுத்தாமல் அவர்களின் பூமகள் பூமியில் அவதரித்து இருந்தாள்.
ஆம் சஞ்சனா ஆசைப்பட்டபடியே ஸ்ரீவத்சன் நயனிகா மகளாக பிறந்திருந்தாள்.. அதுவும் சஞ்சனா பிறந்த அதே தேதி மட்டுமல்ல அதே மணித்துளிகளில்!!
மகளை கண்ட அபய் முகத்தில் எல்லையில்லா ஆனந்தம்!
"நயனி நம்ம சஞ்சு வந்தாச்சு.." என்று குண்டு குண்டு கன்னங்களோடு சிப்பியில் இருந்து கண்டெடுத்த முத்தை போல ஜொலித்த மகளை மயக்கத்தில் இருந்து மெல்ல கண் விழித்த மனைவியிடம் காண்பிக்க அவள் இமையோரம் நீர் கசிந்தது.
மேலும் ஒரு வருடம் கழிந்த நிலையில்...
"சஞ்சு மா" என்ற தந்தையின் குரலில் கையில் இருந்த பொம்மையை தூக்கிக்கொண்டு "ப்பா.. ப்பா" என்று கால் கொலுசு சிணுங்க தளிர் நடை போட்டு வந்தாள் அபய் ஸ்ரீவத்ஸனின் ஒரு வயது மகள் சஞ்சனா.
அச்சு அசல் சஞ்சனாவை வார்த்தது வைத்தது போலவே இருந்தது அவர்கள் மகளின் தோற்றம்!
நயனி தன்னிடம் இருந்த சஞ்சுவின் குழந்தை பருவ புகைப்படத்தை காண்பித்த போது முதலில் எப்படி இந்தளவு உருவ ஒற்றுமை இருக்க முடியும் என்று நிர்மலா உட்பட மற்றவர்களால் நம்பவே முடியவில்லை. ஆனால் நயனியும் அபய்யும் சஞ்சு சொன்னது போலவே தங்கள் கரம் சேர்த்திருந்த மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தனர்.
"அடடே என் செல்லம் ரொம்ப அழகா ரெடியாகி இருக்கீங்களே.. அம்மா எங்கே?!" என்று மகளை தூக்கி முத்தமிட அவனை கட்டிக்கொண்டு தோள் சாய்ந்த குழந்தை அவர்களின் அறையை கை காட்டியது.
அறையினுள் செல்ல அங்கே கண்ணீரோடு அமர்ந்திருந்தாள் நயனிகா.
"என்னாச்சு நயனி? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? உடம்பு முடியலையா?" என்றவனின் தோளில் சாய்ந்தவள்,
"என்ன தான் இந்த நாளுக்காக நாம காத்திருந்தாலும் என்னால முடியும்னு தோணலை அபய்..."
"ஏன்டா? நேத்து பாப்பாக்கு விஷ் பண்ணின உடனே அந்த லெட்டரை ஓபன் பண்ணி படிச்சதே நீதான்! நாம கேரளா போறதுக்கான எல்லா ஏற்பாட்டையும் நான் பண்ணியாச்சு இப்போ இப்படி சொன்னா எப்படி?"
"சஞ்சுவோட கடைசி ஆசை அதுவும் அவளோட பிறந்தநாளான இன்னைக்கு நிறைவேற்றாமல் போனா எப்படி? நிச்சயம் அவ நமக்காக காத்திருப்பா" என்று சொல்ல அவர்கள் மகளும் தாயின் கண்ணீரை துடைத்து அவள் முகம் முழுக்க முத்தமிட்டாள்.
"ஒரே ஒருமுறை பார்த்துட்டு வந்துடலாம். உனக்கு விருப்பம் இல்லையென்றால் இதுக்கு அப்புறம் நீ வரவேண்டாம்.."
"அப்படி இல்லை அபய்... ஆனா மனசு கெடந்து அல்லாடுது ஏன் என்றே தெரியலை.."
"நான் இருக்கிறப்போ உனக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுது?" என்றிட குழந்தையும் அவள் கையை பிடித்து வா என்று அழைத்தது.
ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்ட நயனிகா அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப தனலட்சுமி மகளுக்கு துணையாக அவளுடன் வந்திருந்தார்.
அனைவருக்குமே சஞ்சு எழுதிய கடிதம் இப்போது அவள் நிரந்தர உறக்கம் கொள்ளும் இடம் குறித்து தெரியும். அனைத்தையும் அறிந்த சக்கரவர்த்தியை குற்ற உணர்ச்சி அரித்து தின்றது.
அன்று ஜாதியை காரணம் காட்டி சஞ்சுவை அவர் ஒதுக்காமல் இருந்திருந்தால் இன்று நல்லதொரு வாழ்வை வாழ்ந்திருப்பாளே என்ற குற்ற உணர்ச்சி அவளை போலவே இருக்கும் பேத்தியை பார்க்கும் போதெல்லாம் அதிகரிக்கும்.
ஆனால் சஞ்சுவை ஒதுக்கிய அவரால் இப்போது பேத்தியை என்ன செய்துவிட முடியும்?
ஒவ்வொரு முறையும் பேத்தியின் கால்களை தொட்டு மன்னிப்பு கேட்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்.
அபய் குடும்பம் விமானம் மூலம் கேரளா வந்து சேர்ந்து கடிதத்தில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு அழைக்க மறுபுறம் இருந்தவர் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லி அதேபோல அவர்களை வந்து அழைத்து சென்றார்.
"நீங்க சஞ்சுவுக்கு உறவா?" என்று நயனி கேட்க,
"இல்லை பக்கத்து வீடு. சஞ்சு இங்கே வந்த போது அவங்க ட்ரீட்மென்ட்க்கு அழைச்சு போனது நான் தான்.." என்றவர் சஞ்சு இவர்கள் இருவரை குறித்து சொன்னதை எல்லாம் சொல்லிக்கொண்டே காரை செலுத்த அபய் நயனி இருவருமே உணர்ச்சி பெருக்கில் வார்த்தை வசப்படாது அவரை பார்த்திருந்தனர்.
ஒருபுறம் அவளின் இறுதி நொடிகளை கிரகிக்க முடியாமல் போனாலும் அந்நொடிகளில் அவளுடன் தான் இருக்க முடியவில்லை குறைந்தபட்சம் அறிந்து கொள்ள மனம் துடித்தது. பயணம் முழுக்கவே ஒருவித அழுத்தம் சூழ்ந்திருந்த போதிலும் அவர்கள் சென்று சேர்ந்த இடத்தில் அப்படி ஒரு குளுமை.
இயற்கை அன்னையின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தது போல சுற்றிலும் பசுமை படர்ந்திருக்க நேராக அவள் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
இவர்களின் வருகையை சஞ்சுவின் தாய் ஏற்கனவே எதிர்பார்த்து காத்திருந்ததால் வாசலிலேயே ஆலம் கரைத்து காத்திருந்தார்.
வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த அபய் கரங்களில் இருந்த குழந்தையை கண்டதும் ஓடி சென்று வாங்கிக்கொண்டவர், "சஞ்சு..." என்று வாஞ்சையாக தன் மார்போடு சேர்த்து கட்டி அணைத்துக்கொண்டார்.
குழந்தையும் பொதுவாகவே புதிய ஆட்களிடம் அத்தனை எளிதாக ஒட்டிக்கொள்ளாது என்றாலும் சஞ்சுவின் தாயிடம் அத்தனை பாந்தமாக ஒட்டிக்கொண்டாள் சஞ்சனா.
"எப்படி இருக்கீங்க ம்மா?" என்ற நயனியின் கையை உணர்ச்சி பெருக்கில் பிடித்துக்கொண்டவர் அடுத்த சில நிமிடங்களுக்கு அவளை கட்டிக்கொண்டு அழுகையில் கரைந்து கொண்டிருந்தார்.
யாராலுமே அவரை தேற்ற முடியவில்லை.
அபய் இங்கு வந்த பிறகு சஞ்சு எடுத்திருந்த அவள் புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தான்.
"சொன்ன மாதிரியே என் சஞ்சு என்னை பார்க்க வந்துட்டா உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை தம்பி.." என்றவர் அவர்களை அழைத்துக்கொண்டு சஞ்சு உறங்கிக்கொண்டிருக்கும் இடத்திருக்கு அழைத்து சென்றார்.
தனியாக அவளுக்கென்று கூடாரம் அமைக்க பட்டிருந்தது. அங்கு சென்ற அபய் நயனி இருவரின் முகத்திலும் எண்ணற்ற உணர்வுகளின் படையெடுப்பு!! கண்ணீர் அதில் முதன்மை பெற அமைதியாக அவளுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அமர்ந்து கொண்டனர்.
இருவருமே கண்களை மூடி மனதோடு சஞ்சுவிடம் பேசிக்கொண்டிருக்க எத்தனை மணி நேரம் அமர்ந்திருந்தனர் என்று அவர்களுக்கே தெரியாது. குழந்தை பாலுக்காக நயனியை பிடித்து இழுக்கவும் தான் சுயம் பெற்றவள் அவளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினாள்.
"இல்லைமா வேண்டாம். அது நல்லா இருக்காது. நீங்க என் மகளை நல்லா பார்த்துப்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.. சந்தோஷமா போயிட்டு வாங்க.. எனக்கு தோணும் போது சொல்றேன் அப்போ இவளை கொண்டு வந்து காட்டினா போதும் அதுக்கு மேல நான் பெருசா ஆசைப்படலை..." என்று அவர்களை வழியனுப்பி வைத்தார்.
கனத்த இதயத்தோடு கேரளாவிற்கு வந்து இறங்கியவர்கள் மனதில் என்றுமில்லா நிம்மதி பரவ நயனி கரத்தில் இருந்த சஞ்சு செய்த சேஷ்ட்டையில் அவள் முகத்தில் படர்ந்த புன்னகை மெல்ல அபய்யையும் தொற்றிக்கொள்ள இருவரின் கவனமும் மகள் புறம் திரும்பியது.
மூவரின் பயணமும் சஞ்சுவின் ஆசியோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.