ராஜன் நயனிகாவை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்ததுமே அதற்கான திட்டத்தை பக்கவாக போடத் தொடங்கி விட்டான்.
எதார்த்தம் போல அவளிடம் பேசுவது ஏதேனும் விசேஷங்களில் புகைப்படம் எடுக்கும் போது எதேர்ச்சையாக நிற்பது போல நைனிகாவின் அருகில் தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டான்.
அதுமட்டுமல்ல பல நாட்கள் லைப்ரரி, ஆடிட்டோரியம், கேண்டின் என்று பல இடங்களில் நயினியை சந்தித்து, “நீங்க இல்லை என்றால் நானே இந்நேரம் கிடையாது. என்னை காப்பாற்றிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு புரியலை மேம்..” என்று உணர்ச்சி பெருக்கில் அவள் கையை பிடித்தபடி நன்றி தெரிவித்து அனைத்தையும் புகைப்படமாகவும் மாற்றியிருந்தான்.
இது எதையும் அறியாத நயனி எதார்த்தம் போல அவனிடம் புன்னகையோடு பேச அதுவே இப்போது அவளுக்கு வினையாகி போய் இருந்தது.
ஆனால் சிறுத்தை என்றும் தம் புள்ளிகளை மாற்றிக்கொள்வது கிடையாது இல்லையா?!
அப்படி தான் மீண்டும் ஒரு மாணவனுடான பிரச்சனையில் நயனி தலையிட்டதில் அவள் மீதான வன்மம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த போது தான் கல்லூரியில் நடைபெற்ற விழா அமைந்தது.
"ஏன் ராஜன் இப்படி பண்ற? மேம் ரொம்ப நல்லவங்க டா.. இதெல்லாம் வேண்டாம்" என்றாள் திவ்யா.
"அடங்குடி! அவளுக்கு என்ன தைரியம் இருந்தா என்னை சஸ்பெண்ட் பண்ணுவா.. இன்னிக்கு நான் அடிக்கிற அடியில இருந்து அவ எழவே கூடாது" என்று சொல்லிவிட்டு சென்றான்.
திவ்யாவை காவலுக்கு நிறுத்திவிட்டு வகுப்பறையில் மயங்கி இருந்த நயனியை நெருங்கி தன் சட்டையை கழற்றிவிட்டு நயனியை அணைத்துக்கொண்டு அவளை முத்தமிட்டு என்று அவளுடன் நெருக்கமான புகைப்படங்களை எடுத்திருந்தான்.
ஆனால் பாடல் முடிந்து மாணவிகள் வருவதாக திவ்யா சொல்லவும் உடனே வெளியேறி விட்டான்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கே வந்து மாணவிகள் நயனி டேபிளில் சாய்ந்திருப்பதை கண்டு ஒருவேளை உறங்குகிறார்களோ என்று நினைத்து அடுத்த பாடலுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
ஒருத்தி நயனியை எழுப்ப முயல, "ஏய் வேண்டாம் விடுடி! மேம் ரொம்ப டயர்டா இருப்பாங்க போல டிஸ்டர்ப் பண்ணாத நாம அடுத்த டான்ஸ்க்கு லேஹெங்கா தானே போட போறோம் நாமளே ரெடியாகிடலாம்" என்று தயாராகி சென்றனர்.
மனம் கேளாத ராஜனின் காதலி திவ்யா அவனுக்கு தெரியாமல் மீண்டும் அறைக்கு வந்து நயனிகாவிற்கு தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றாள்.
ஆனால் முடியாததில் அவளுக்கு துணையாக அங்கேயே இருந்தவள் அடுத்தடுத்து வந்த மாணவிகளிடம் மேம் எழுப்ப வேண்டாம் சொல்லிட்டாங்க பா என்றதில் அனைவரும் அவர்கள் வேலையை பார்க்க சென்று விட்டனர்.
மேலும் இரண்டு மணி நேரம் கடந்த பிறகு கண் விழித்த நயனி அருகே இருந்த திவ்யாவிடம் "என்ன நீ மட்டும் இருக்க மத்த கேர்ல்ஸ் எங்க? நான் தூங்கிட்டனா?!" என்றாள்.
"ஆமாம் மேம்" என்ற அவள் எதுவும் நடக்காதது போல அவளோடு கீழே இறங்கி சென்றாள்.
அடுத்த சில நாட்களிலேயே அனைத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இடையே பரவ செய்திருந்தான். வீடியோவில் மட்டும் அவன் மற்றொரு பெண்ணோடு நெருக்கமாக இருந்ததில் அப்பெண்ணிற்கு பதில் நயனியின் முகத்தை மாற்றியிருந்தான்.
ராஜனை அழைத்து விசாரிக்கையில், “மேம் தான் ஸார் என்னை கூப்பிட்டாங்க” என்று எடுத்ததுமே அனைவரின் தலையிலும் இடியை இறக்கி இருந்தான்.
“யாரை பேசறன்னு புரியுதா? பொய் சொன்னா அதற்க்கான விளைவை நீ அனுபவிக்க வேண்டி வரும் என்று எச்சரித்தார் சக்கரவர்த்தி
"நான் எதுக்கு ஸார் பொய் சொல்லணும்? கரெஸ் ஸார் ரெண்டு வருஷமா இவங்களை பிரிஞ்சு இருக்கிறதுல அவங்க ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றதா சொன்னவங்க, அவங்களுக்கு கம்பனி கொடுக்க சொல்லி கேட்டாங்க”
“முதல்ல என்னால இதை நம்ப முடியலை. ஆனா மேம் தான் அவங்களுக்கு இந்த ஃபேவர் பண்ணினா நான் ட்ரக்ஸ் எடுக்கிற விஷயத்தை யார்க்கும் சொல்ல மாட்டேன் சொன்னாங்க...”
“ஸார் இது அப்பட்டமான பொய்! இவனோட தப்பை மறைக்க பொய் சொல்றான்” என்று சீறினாள் நயனி.
“என் பேரன்ட்ஸ் மேல சத்தியமா இதுதான் ஸார் நடந்தது. அப்பவும் நான் இது தப்பு முடியாது மேம் சொன்னேன் ஆனா அவங்க தான் தப்பை தடயமே இல்லாமல் பண்ணினா தப்பு என்னைக்கும் தப்பாகாதுன்னு சொன்னாங்க” என்றவனை நயனி ஓங்கி அறைந்து,
"யூ ராஸ்கல் என்னடா பேசற?" என்று மீண்டும் அவனை அடிக்க மற்றவர்கள் தடுத்துவிட்டனர்.
“ஸார் நான் அப்போவே நீங்க என்னோட குரு இதெல்லாம் தப்புன்னு சொல்லி நான் முடியவே முடியாதுன்னு சொன்னேன். ஆனா அவங்க ஆசைக்கு சம்மதிக்கலை என்றால் என் இன்டர்னல்ஸ்ல கை வச்சு செமெஸ்டர் எழுத விடாம பண்ணுவேன்னு சொன்னாங்க”
“போதும் நிறுத்து ராஜன். அபாண்டமா பேசாத?! யார் சொல்லி நயனி மேல இப்படி ஒரு பழி சுமத்துற?!”
“ஸார் அதையும் மீறி அவங்களுக்கு என்னை பார்க்கணும் என்று தோணும் போதெல்லாம் என்னை கூப்பிடுவாங்க நான் என்ன ஸார் செய்ய முடியும்? இப்போ இந்த விஷயம் என் லவ்வர்க்கு தெரிஞ்சுடுச்சு..”
“எங்களுக்குள்ள பிரச்சனை அதிகமானதுல அவ தான் என் ஃபோன்ல இருந்து இந்த போட்டோஸ் எல்லாம் லீக் பண்ணிட்டா இல்லைனாலும் நான் இதெல்லாம் வெளியே தெரிய விட்டிருக்க மாட்டேன்” என்றவனின் பேச்சும் நம்பும் படியாக இருந்தது.. எற்கனவே ஒரு ஆசிரியை பதினேழு வயது மாணவனுடன் உறவில் இருந்த செய்தியால்.
'எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று யாருக்கு தெரியும்?! ஒருவேளை இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு' என்று பேராசிரியர்கள் இடையிலேயே பேச்சு முளைத்தது.
என்ன தான் கல்லூரியினுள் அதிகளிவிலான கட்டுப்பாட்டின் காரணமாக போதை பொருட்கள் பரவாமல் இருந்தாலும் வெளியில் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பல மாணவ மாணவிகள் கூட்டாக போதை பொருட்களை எடுப்பது அங்கு வரும் பெண்களோடு உல்லாசமாக இருப்பது என்று நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படி சீனியர் ஜூனியர் என்று பல மாணவ மாணவிகள் இவன் கட்டுப்பாட்டில் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்களில் சிலர் நயனிக்கு எதிராக சாட்சி சொல்லியிருந்தனர்.
“அப்படி என்ன மா பார்த்தீங்க?” என்ற சக்கரவர்த்தியின் கேள்விக்கு..,
“ஸார் நயனி மேம் அடிக்கடி ராஜன் கிட்ட தனியா பேசுவதை பார்த்திருக்கோம். கிளாஸ் மட்டும் இல்ல வெளியிலும் நிறைய முறை சிரிச்சு பேசுறது கையை பிடிக்கிறதுன்னு நாங்களே பார்த்திருக்கோம். ஆனா அப்போ இவங்க இப்படின்னு எங்களுக்கு தெரியாது”.
“ஏம்மா நைனி என்ன ராஜனோட மட்டும் தான் பேசினாங்களா? வேற யாருடனும் பேசவில்லையா?” என்று ஒரு ஆசிரியர் கேட்டதற்கு,
“இருக்கலாம் ஸார் ஆனா மத்தவங்க கிட்ட பேசுறதுக்கும் இவன் கிட்ட பேசறதுக்குமான வித்தியாசத்தை நிறைய முறை பார்த்திருக்கிறோம்...”
“அப்படி என்ன வித்தியாசம்?”
“இவங்க பல இடங்களில் ரொம்ப நேரம் சிரிச்சு பேசி இருக்காங்க, ஒண்ணா சாப்பிட்டு இருக்காங்க..” என்றிட அதுநேரம் அமைதியாக நிண்டிருந்த நயனி,
“ஸார் ராஜன் என்கிட்டே மன்னிப்பு கேட்டு எனக்கு கௌன்சில் பண்ணுங்க மேம் என்று கேட்டுகிட்டதால பல நேரம் பேசி இருக்கேன் ஆனா இவங்க சொல்ற மாதிரி கிடையாது... இந்த போட்டோ எப்படி எடுக்கபட்டது என்று எனக்கு தெரியாது..” என்றபோதும் அதை ஏற்க தான் அங்கு யாரும் தயாராக இல்லை
“ஸார் இது ஏஐ காலகட்டம்! எத்தனை ஃபேக் போட்டோஸ்னாலும் ரெடி பண்ணலாம் ஒரிஜினல் போலவே இருக்கும். இந்த போட்டோஸ் உண்மை தன்மையை சோதிக்காமல் ஒரு முடிவுக்கு வராதீங்க ஸார்” என்று சக ஆசிரியையும் நயனியோடு நட்புறவில் இருப்பவளுமான மகேஸ்வரி சொல்ல சில ஆண் ஆசிரியர்களும் அதை ஆமோதித்தனர்.
நயனியின் விஷயம் கல்லூரி முழுக்க பரவி விட்டதில் அவர்கள் சொன்னது போல உண்மை தன்மையை சோதிக்க அன்றே புகைப்படங்களை அனுப்பி இருந்தனர்.
"வீடியோவின் உண்மைத் தன்மையையும் சோதிக்க அனுப்பி இருக்கிறோம்" என்று நிர்வாகம் சொல்ல,
“இதெல்லாம் கண் துடைப்பு! ஸ்டுடென்ட்டை கட்டாயபடுத்தின டீச்சரை தண்டிப்பதை விட்டுட்டு நீங்க உங்க ஸ்டாஃப் காப்பாற்ற பார்க்கிறீர்கள்” என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
அதற்குள் விஷயம் காட்டுத்தீயாக சமூக வலைதளங்களில் பரவி நயனிக்கு எதிரான கருத்துக்கள் அலைமோதியது. உடனடியாக நிர்வாகம் அவளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கிவிட்டனர் மாணவர்கள்.
“இந்த இடத்துல ஒரு பையன் இருந்திருந்தால் யோசிக்காம விரட்டி இருப்பீங்க ஆனா பொண்ணு செய்தா மட்டும் தப்பிக்க வைக்க பார்க்கறீங்க அதுவும் அவங்க உங்க மருமகள் என்பதால விசாரிக்க கூட முதலில் நீங்க தயாரா இல்லை” என்று சக்கரவர்த்திக்கு அழுத்தம் அதிகரித்தது.
“யாரா இருந்தாலும் தீர விசாரிச்சிட்டு தான் முடிவெடுக்கணும். உங்க அவசரத்துக்கு எடுத்தேன் கவிழ்த்தேன்னு எதையும் செய்ய முடியாது..” என்றவர் ஃபோட்டோவின் உண்மை தன்மையை ஆராய அனுப்பி வைப்பதாக சொல்லி சமாதானபடுத்த முயன்றார்.
“சரி நீங்க அனுப்புங்க ஆனா அதுவரைக்கும் இவங்க காலேஜ் வரக்கூடாது அப்படி வந்தா நாங்க வர மாட்டோம்” என்று அனைவருமே ராஜனின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
நயனியை கல்லூரியில் இருந்து வெளியேற்றும் வரை போராடுவோம் என்று மாணவர்கள் அவர் அறைக்கு வெளியில் குழுமிவிட்டனர். நிலைமை கை மீறி செல்வதை கண்ட சக்கரவர்த்தி நயனியை கிளம்பும்படி சொன்னார்.
கல்லூரியில் இருந்து அவள் வீடு வந்து சேர ஹாலில் அனைவரும் குழுமியிருக்க அவள் பெற்றோரும் அவளுக்காக காத்திருந்தனர்.
நயனி வீட்டினுள் நுழையும் முன்னமே, “அங்கேயே நில்லுமா இனி இந்த வீட்டுக்கு ஒரு அடி எடுத்து வச்ச நடக்கிறதே வேற” என்றார் முரளிதரன்.
ஆனால் அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே நயனியை நெருங்கிய சேதுராமன் எடுத்ததுமே நயனிகாவை ஓங்கி அறைந்தார்.
“எங்க மானத்தை வாங்குறதுக்குனே வந்து பொறந்திருக்கியா நீ?! அப்படி என்ன உனக்கு அவசரம்? மாப்பிள்ளை வர வரைக்கும் கூட காத்திருக்க முடியாதா? உன் லட்சணம் தெரிஞ்சு கேள்வி கேக்குற சம்பந்தி முதல் யாருக்கும் பதில் சொல்ல முடியல..”
“அக்கம் பக்கம் தல காட்ட முடியல.. ஆசிரியர் என்பது உன்னதமான இடம் ஆனா உங்க பொண்ணு ஒரு கரும்புள்ளின்னு அவனவன் காரி துப்புறானுங்க” என்றவர் மீண்டும் அறையும் முன் நிதிஷா அவர் கையை தடுத்து பிடித்தாள்.
“விடு நிதி..”
“பா என்னப்பா பேசுறீங்க? அக்காவை பத்தி நமக்கு தெரியாதா? யாரோ ஒருத்தன் இந்த மாதிரி தப்பா பரப்பினா அதை நம்புவீங்களா? நான் தான் சொல்றேனே அக்கா அந்த மாதிரி கிடையாது எங்கேயோ தப்பு நடந்திருக்கு” என்று சேதுராமனை தடுக்க தனலட்சுமி ஓடி வந்து மகளை கட்டிக் கொண்டார்.
“யார் என்ன சொன்னாலும் நீ கலங்காதே வர்ஷிமா எனக்கு உன்னை பத்தி தெரியும்..”
“என்னடி தெரியும்? ஒழுங்கா பொண்ண வீட்டோடு வச்சு கட்டு கோப்பா வளர்க்க துப்பில்ல தலைக்கு மேல வெள்ளம் போன பிறகு அழுது ஆர்பாட்டம் பண்ணினா சரியாகிடுமா?” என்றபடி தனலட்சுமியை இழுத்து பிடித்து அறைந்தார்.
“இப்ப எதுக்கு அம்மாவை அடிக்கிறீங்க?!” என்று ஆவேசமாக கேட்டாள் நயனிகா.
“ஒழுங்கா உன்னை வீட்ல வச்சு சொல்லி வளர்த்திருந்தா என் மகளை மாதிரி வளர்ந்திருப்ப ஆனா எந்த கட்டுப்பாடும் இல்லாம ஹாஸ்டல்ல விட்டது இவ தானே! அதுக்கு தான் இந்த அடி..”
“நாக்கு மேல பல்லை போட்டு அவனவன் பேசுறான். என்ன பொண்ணு வளர்த்திருக்கீங்கன்னு கேட்கிற சம்மந்தி வீட்டாருக்கு பதில் சொல்ல முடியலை...”
அதற்குள், “இத்தனை அசிங்கத்துக்கு பிறகும் என்ன தைரியத்துல மா இங்க வந்த?” என்று முரளிதரன் முன்னே வந்தார்.
“ஏன் இதுதான் என் வீடு. நான் இங்கு தானே வரணும்!”
“என்னமோ நீ உழைச்சு கட்டின மாதிரி அவ்வளவு உரிமையா பேசுற? நாங்க யாரு எப்பேர்பட்ட குடும்பம்னு தெரியுமா? எங்க வந்து சேர்ந்து இருக்கன்னு கூட தெரியாம கண்டபடி கூத்தடிச்சிட்டு இப்போ குரலை உயர்த்துவியா? முதல்ல வெளியே போ” என்றார்.
“என் பெண்ணை கூட வேண்டாம்னு சொல்லி கட்டி வச்சதுக்கு எங்க அக்கா மாமா மானத்தை மொத்தமா குழி தோண்டி புதைச்சுட்டியே?! என் மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு துரோகம் செய்துட்டு நெஞ்சை நிமிர்த்திட்டு இங்க வந்து நிற்க என்ன தைரியம் இருக்கணும் உனக்கு?!” என்ற முரளிதரன்,
“உங்க பொண்ணு இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது முதல்ல கூட்டிட்டு போங்க” என்றார்.
“என் மேல எந்த தப்பும் இல்லை. என்னோட அபய்க்கு நான் எந்த துரோகமும் இல்லை..” என்று ஹாலில் நயனிகாவையே பார்த்தபடி நின்றிருந்த நிர்மலாவிடம் சென்றவள்,
“அத்தை இந்த ரெண்டு வருஷத்துல உங்களுக்கு என்னை பற்றி நல்லா தெரியும் தானே! யார் என்ன சொன்னாலும் எதையும் நம்பாதீங்க இது எதுவுமே உண்மை கிடையாது. நான் உங்க பிள்ளையை. காதலிக்கிறேன் அவர் மட்டும்தான் என் வாழ்க்கை!!”
“இது அந்த பையன் அவனை கண்டிச்சதுக்காக என் மேல சுமத்தின பழி. நிச்சயமா அது பொய் என்று சீக்கிரமே நிரூபிக்கப்படும்.. ப்ளீஸ் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று திடமாகவே பேசினாள்.
ஆனால் இதே நயனிகாவின் இடத்தில் மற்றொரு பெண் இருந்தால் மொத்தமாக உடைந்து உரு தெரியாமல் தன்னை அழித்துக் கொண்டிருப்பாள் ஆனால் ‘தன் மீது தவறில்லை யார் என்ன சொன்னாலும் அது என்னை பாதிக்காது’ என்ற உறுதியுடன் நின்றிருந்தாள்.
“இதோ பாருமா இதையெல்லாம் கேட்கிறதுக்கு நாங்க தயாரா இல்லை முதல்ல நீ தப்பு இல்லைன்னு நிரூபிச்சுட்டு வா அதுக்கப்புறம் பேசு” என்றிட நயனிகாவோ அங்கிருந்து நகரமாட்டேன் என்பது போல ஹாலில் அமர்ந்துவிட்டாள்.
யார் என்ன சொன்ன போதும் எதையும் கேட்காதவள், “என் மேல தப்பில்லாதப்போ என்னை எப்படி நீங்க வெளியே போக சொல்ல முடியும். இது என் வீடு நான் எங்கேயும் போக மாட்டேன்..” என்றிட சக்கரவர்த்திக்கு அழைப்பு சென்றது.
ஆனால் அவர் தன் நண்பரான காவல்துறை அதிகாரியை சந்திக்க சென்றிருந்தவர் மாலை போல தான் வீட்டிற்கு வந்தார்.
“மாமா நான் ஏற்கனவே ஒருமுறை உங்க கிட்ட இந்த பையனை பத்தி சொன்னேனே..” என்றாள் பரிதவிப்போடு.
“அதை சொன்ன ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கும் சம்பந்தத்தை பத்தி சொல்லவே இல்லையே” என்று கேட்டதில் ஆடிப் போனாள் நயனிகா.
“ஃபோட்டோஸ் வீடியோ ரிசல்ட் வந்துடுச்சு மா..”
“எல்லாமே உண்மைதான். ஏன் நயனி இப்படி?!” என்றவரின் வார்த்தையில் நொறுங்கிப் போனாள் நயனிகா.
“மாமா ஏஐ மூலமாக நிஜத்துக்கும் பொய்க்கும் வித்தியாசம் இல்லாத அளவு எவ்வளவு போட்டோஸ் வீடியோஸ் வேண்டுமானாலும் கிரியேட் பண்ணலாம். ப்ளீஸ் நான் தான் இவ்ளோ தூரம் சொல்றேனே வார்த்தைக்கு மதிப்பில்லையா?”
“நீங்களுமா இதையெல்லாம் நம்பறீங்க? ப்ளீஸ் மாமா நான் உங்க பையனுக்கு உண்மையாக தான் இருக்கேன். அவர் என்னை ஏத்துக்கலைன்னு வழி தவறும் அளவுக்கு நான் மோசமானவள் கிடையாது. அவர் மேல நான் உயிரையே வச்சிருக்கேன் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” என்ற அவள் மன்றாடலை கேட்பதற்கு சக்கரவர்த்தி தயாராக இல்லை.
அந்தளவு விஷயம் பூதாகரமாகி “ஸ்டுடென்ட் கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தது உங்க மருமகளா? கல்யாணத்துக்கு முன்னாடி நல்லா விசாரிச்சிங்களா? ஏன் இப்படி ஒரு பொண்ணு தேர்ந்தெடுத்தீங்க?”
“அவளோட அம்மாவுக்கு இது இரண்டாவது கல்யாணமாமே அம்மாவே கண்ட்ரோல்ல இல்லனா பொண்ணு மட்டும் எப்படி சக்கரவர்த்தி இருப்பா?!” என்று அவருக்கு பல அழைப்புகள். எதற்கும் பதில் சொல்லி மாளவில்லை.
ஒரு புறம் மாணவர்களின் அழுத்தம் மறுபுறம் இப்படிப்பட்ட விசாரிப்புகள் இதற்கு இடையில் அவர்கள் இருவருக்கிடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் உண்மைதான் என்ற செய்தி அவரை நிதானிக்க விடவில்லை.
“நீ இனி காலேஜ்க்கு வர வேண்டாம், முதல்ல இங்கிருந்து கிளம்பு” என்றார்.
“மாமா...”
“எனக்கு குடும்ப கௌரவம் முக்கியம். அதுக்கு களங்கம் ஏற்படுத்தின உனக்கு இந்த வீட்ல இடமில்லை நயனி” என்றவர் “இந்த பொண்ணோட எந்த பொருளும் வீட்ல இருக்க கூடாது” என்று கட்டளையிட்டு சென்றார்.
அதேநேரம், “என் வீட்டு வாசற்படி மிதிச்சிடாத” என்று சேதுராமன் செல்ல தனலட்சுமி அங்கிருந்து நகராமல் மகளை பார்த்து நின்றிருந்தார்.
“என்ன மா பார்க்கிற நீ போ” என்றாள் முயன்று புன்னகைத்து.
“பாவிமகளே இப்போ எப்படிடி உன்னால சிரிக்க முடியுது? நான் போக மாட்டேன். நீ என்கூட வா..”
“வந்து...”
“ப்ச் ம்மா நீ என்னோடு வந்த பிறகு உன்னை திரும்ப அந்த ஆள் வீட்டுக்குள்ள சேர்த்துவானா.. நிதி பார்கவை பார்க்க வேண்டாமா..”
"நீயும் தானே டி என் பொண்ணு. உன்னை யார் பார்ப்பா?!" என்றார் கண்ணீரோடு.
“நான் தனியா இருந்தே பழக்கபட்டுட்டேன் என்னால் முடியும் நீ போ ம்மா. இதுக்காக எல்லாம் நான் ஒன்னும் செத்துட மாட்டேன். என்மேல தப்பில்லை! அது என்னைக்கு இருந்தாலும் நிருபணம் ஆகும்” என்றவளை தேடி சுதர்ஷன் வந்திருந்தான்.
"என்ன நயனி இதெல்லாம்?! போலீஸ் ஸ்டேஷன் போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க" என்றவன் நிலைமையை புரிந்து கொண்டு தன் வீட்டுக்கு அழைத்து செல்வதாக சொல்லவும் தான் தனலட்சுமி கிளம்பினார்.
நினைவில் இருந்து மீண்டவள் முகத்தை அழுந்த துடைத்தபடி திரும்ப அங்கே அபய் ஸ்ரீவத்ஸன் நின்றிருந்தான்.
Last edited: