நினைவுகளில் இருந்து மீண்ட நயனிகா தன் எதிரில் நின்றிருந்த அபய்யை கண்ட நொடி அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.
ஆதங்கமோ, ஆவேசமோ ,அழுகையோ எதுவுமே இல்லாமல் உணர்வுகள் துடைக்கப்பட்டு இருந்தது அவள் முகத்தில்.
'தன் சோகம் தன்னோடு' என்பது போல தன்னவனை கண்டதும் அவளையும் அறியாமல் அடிவயிற்றில் இருந்து எழும்பிய கேவலையும் உள்ளே தள்ளி திடமாக அவனை பார்த்திருந்தாள்.
வேகமாக அவளை நெருங்கியவன், "எப்படி உன்னால இந்த மாதிரி இருக்க முடியுது நயனி?" என்றான் எடுத்ததுமே...
"ஏன் எப்படி இருக்கேன்?! எப்பவும் போல தான் இருக்கேன்..."
"ப்ச் எவ்ளோ பெரிய பழி சொல்லி உன்னை வீட்டை விட்டும் காலேஜ் விட்டும் துரத்தி இருக்காங்க ஆனா நீ இவ்ளோ சாதாரணமா இருக்க?"
“வேற என்ன செய்யணும் என்று எதிர்பார்க்கறீங்க?! அந்த போட்டோஸ் வீடியோஸ் எல்லாமே உண்மையா இருக்கும் பட்சத்தில் இதுல இதுக்கு மேல நான் என்ன செய்யணும் என்று எதிர்பார்க்கறீங்க?"
"எனக்காக பேச யாருமில்லை.. நான் பேசினாலும் கேட்பதற்கு யாருக்கும் மனமில்லை. அந்தளவு காலேஜ்ல ஸ்டூடெண்ட்ஸ் ஆவேசமா இருந்தாங்க. ராஜன் பணக்கார வீட்டு பையன் அவன் அப்பா கொடுக்கறியா டொனேஷனை இழக்க உங்கப்பாக்கு மனசில்லை. அதனால தான் நான் ஏற்கனவே அவனை பற்றி சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காம இருந்தார்"
"நான் கண்டிக்கவும் அதையும் நீர்த்து போக செய்துட்டாங்க.. கொஞ்ச நாள் அடங்கி இருந்தவன் திரும்ப பொண்ணுங்களை வல்கரா பேசறது, சைகை செய்யறதுன்னு நானே பார்த்தேன். கண்டிச்சேன் அதுல என் மேல அவனோட வன்மம் கூடிடுச்சு"
"அன்னைக்கு ப்ரோக்ராம்ல இருந்த கேர்ள்ஸ்க்கு ஹெல்ப் பண்ணின எனக்கு மயக்க மருந்தை கலந்து கொடுத்து நான் சுயநினைவில் இல்லாதப்போ அவன் எடுத்த போட்டோஸ்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?!"
"சொல்ல வேண்டியது தானே?"
"சொல்லலை என்று நினைக்கறீங்களா?"
"அப்புறம் ஏன்?!"
"ஏன்னா எதையும் நிரூபிக்க என் கிட்ட சாட்சி இல்லை ஆனா அவன் என்கிட்டே பேசினது, சிரிச்சதுன்னு எல்லாத்துக்கும் சாட்சி வச்சுருக்கான்.. ப்ச் மனசு கல்லாகும் வரைக்கும் தான் வலிக்கும் அபய் கல்லான பிறகு உதடு சிரிக்கும்னு சொல்லுவாங்க.. கடந்த பத்து நாட்களில் நான் அனுபவிச்ச வலி இப்போ இல்லை திரும்ப கிளறாம இத்தோடு விட்டுடுங்க.." என்றாள் விரக்தியாக.
அவளுக்கும் ஆதரவாக சாய்வதற்கு ஒரு தோள் ஆறுதலாக அரவணைத்து தேற்றுவதற்கு கணவனின் ஸ்பரிசம் தேவைப்பட்டது. அனால் அவளே வாய்விட்டு கேட்டாலும் அது அவள் கணவனிடம் கிடைக்காது என்பதால் மெளனமாக கைகளை கட்டிக்கொண்டு அவனை பார்த்திருந்தாள்.
"சரி ஆனா நீ ஏன் போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி எந்த ஆக்ஷனும் எடுக்காம இருக்க?"
"என்ன ஆக்ஷன் எடுக்க சொல்றீங்க?" என்று அழுத்தமாக கணவனை பார்த்தவள்,
"நான் எடுக்கலைன்னு உங்களுக்கு தெரியுமா? ஆனா ராஜன் அப்பாவோட பணபலமும், அவன் எடுத்திருக்க போட்டோவும் எனக்கு எதிரா இருக்கிறப்போ நான் என்ன செய்ய முடியும்.."
"உங்களுக்கு சஞ்சு போல உங்க அப்பாவுக்கு குடும்ப கௌரவம் முக்கியமா இருக்கு.. நான் அதை தப்புன்னு சொல்லலை ஆனா நான் தான் மருமகளா வரணும்னு கூட்டிட்டு வந்த உங்கப்பாவுக்கும் சரி தாலி கட்டின உங்களுக்கும் சரி எனக்காக கூட நிற்கணும் என்ற நினைப்பே இல்லாமல் போயிடுச்சு..."
"நான் இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது நயனி" என்றான் உள்ளிறங்கிய குரலில்.
"அப்படி கிடையாது அபய். பலநேரம் இடைவெளிகள் தான் நெருக்கத்தை தீர்மானிக்கின்றன என்றாலும் நெருக்கமற்ற இடைவெளிகள் அர்த்தமற்றது என்று ஒரு கவிஞனோட வரிகளை எப்பவோ எங்கேயோ படிச்சது... ஆனா நம்ம விஷயத்துல அது உண்மையாகிடுச்சு.." என்றாள் விரத்தியான குரலில்.
"இப்படி விட்டேர்த்தியா பேசாத நயனி எனக்கு பயமா இருக்கு.."
"அப்படியா?! ஆமா உங்களுக்கு என் மேல புதுசா என்ன அக்கறை?"
"ப்ளீஸ் நயனி இப்படி யாரோ மாதிரி பேசாத?!"
"யாரோ மாதிரி பேசகூடாது என்றால் உங்களை என்னவா நினைச்சு பேசணும்னு சொல்றீங்க?!"
"ப்ச் நாம இரண்டு வருஷமா தான் புருஷன் பொண்டாட்டி அதுக்கு முன்ன நமக்குள்ள நல்ல அறிமுகம் உண்டு, பழக்கம் உண்டு, புரிதல் உண்டு"
"அப்படியா? அப்படி நினைக்கிறவர் எதுக்காக என்னை விட்டுட்டு போனீங்களாம்"
"சஞ்சுவுக்காக என்று நான் சொல்லி தான் உனக்கு தெரியனுமா என்ன?! ப்ச் இப்போ நான் ஏன் விட்டுட்டு போனேன்னு ஆராய்வதை விட்டுட்டு உன் பக்க உண்மையை நியாயத்தை எப்படி வெளிக்கொண்டு வருவதுன்னு பார்க்கிறது தான் புத்திசாலிதனம்"
"அது என்னோட பிரச்சனை நான் பார்த்துப்பேன் உங்களுக்கேன் அவசியம்?!"
"ஏன் நயனி புரிஞ்சுக்க மாட்டேங்கிற?! இதோபாரு ஏதோ ஒரு விதத்துல உன் மேல இப்படி வழி வர நானும் காரணமாகிட்டேன் என்று எனக்கு ரொம்ப கிலிட்டியா இருக்கு. நான் உன் கூட இருந்திருந்தால் இதை யாரும் நம்பி இருக்க மாட்டாங்க.."
"நீங்க கூட இருந்திருந்தால் மட்டும் உங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் நம்மளோட நிலைமை தெரியாதா என்ன?! ஃபர்ஸ்ட் நைட் ரூமை விட்டு வெளியே அனுப்பியவர் தானே நீங்க?! அதுக்கப்புறம் நீங்க என்னோடு இருந்திருந்தால் மட்டும் எப்படி வாழ்ந்து இருப்பீங்கன்னு அவங்களால கண்டுபிடிக்க முடியாதா என்ன?!"
"புருஷன் அருகாமை கிடைக்காததால தான் இப்படி நடந்துக்கிட்டேன்னு அப்பவும் இந்த பேச்சு வரும் உங்க எங்க அப்படி இல்லைன்னு உங்களால சொல்லிட முடியுமா சொல்லுங்க?!"
"ஸாரி நயனி நான் அப்படி நடந்துக்கிட்டு இருக்க கூடாது ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு.."
"நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க?! உங்களை கட்டாயபடுத்தி கட்டிகிட்டதால நான் தான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்"
"ஐயோ போதும் நயனி இன்னும் எவ்ளோ தான் சொல்லி காட்டுவ. ப்ளீஸ் அன்னைக்கு எங்க அப்பா கிட்ட நீ தப்பானவள் என்று சொல்லி விவாகரத்து வாங்குவேன்னு எந்த நேரத்தில் சொன்னேனோ தெரியல அதே மாதிரி நடந்துடுச்சு ப்ளீஸ் ஐ அம் ஸாரி.."
"யார் என்ன பழி சொன்னாலும் எனக்கு உன்னை பற்றி தெரியும் எதையும் நம்ப நான் தயாரா இல்லை"
"அப்படி என்ன தெரியும் உங்களுக்கு என்னை பற்றி. அதுவும் ரெண்டு வருஷமா ஒரு தகவல் கூட இல்லாம காணாம போனீங்க..."
"அன்னைக்கு இப்படி ஒரு பழி வந்த போது நான் உங்களை எவ்வளவு தேடினேன் தெரியுமா? மாமா மேல மலையளவு நம்பிக்கை இருந்தது ஆனால் அவரும் கைவிட்ட நிலையில நீங்க பக்கத்துல இருந்திருந்தால் எனக்கு இது நடந்திருக்காதுன்னு நான் நினைக்காத நாளில்லை.."
"அதிலும் அன்னைக்கு முழுக்க காலேஜ்ல மற்றவர்களுடைய பார்வை எந்தளவு என் மேல பாவமாகவும், இறக்கமாகவும், கேலியாகவும், இளக்காரமாகவும் படிஞ்சது என்று உங்களுக்கு தெரியுமா?"
"உங்களுக்கு சஞ்சு முக்கியம் தான்! நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே ஆனா தாலி கட்டின பிறகு என்னோடு வாழவில்லை என்றாலும் குறைந்தபட்சம் உங்க வீட்ல நான் எப்படி இருக்கேன், சேஃபா இருக்கேனா என்று தெரிஞ்சுக்க கூட நீங்க விரும்பல அப்படி என்ன உங்களுக்கு என் மேல கோபம்?!"
"இத்தனை வருஷமா என்ன பார்க்கிற, என்னை நல்ல தெரியும்ன்னு சொல்றவர் செய்யற வேலையா இது?!"
"நீங்களே என்னை பற்றி கவலைப்படாத போது மத்தவங்களுக்கு எல்லாம் அது இருக்கவா போகுது? உங்க அம்மா, அப்பா, அண்ணா, மாமா யாரையுமே நான் குறை சொல்ல விரும்பல. யாரும் என் பக்கத்தில் நிற்கலையே என்ற ஆதங்கமும் எனக்கு கிடையாது... கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி போரிடலாம் என்று சொல்வாங்க.."
"ஆனால் நீங்களே துணையா இல்லாத போது மத்தவங்கள பத்தி பேசி என்ன மாறிட போகுது?" என்று முடித்த போது அவளையும் அறியாமல் கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
என்னதான் வெளியில் அவள் தைரியமாக தன்னை நிலை நிறுத்தினாலும் சமூக வலைதளங்களில் வரும் மோசமான கருத்துக்கள் அவளை பற்றிய அவதூறு பேச்சுக்கள் அனைத்தும் அவளை முழுதாக உடைத்திருந்தது.
செய்யாத தவறுக்காக பழி சுமந்து ஆசிரியர் வர்க்கத்திற்கே தீரா களங்கத்தை ஏற்படுத்தியவள் என்ற அவப்பெயரோடு வாழ்நாள் முழுக்க கழித்துவிட முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. நிச்சயம் அவளுக்கான எல்லையை கடக்கும் போது என்னவாகும் என்பது அவள் கையில் இல்லை.
ஆனாலும் சில ஆசிரியர்கள் அவள் மீது அன்பு கொண்ட மாணவர்கள் அவளுக்கு துணையாக இருப்பதில் சிறு ஆறுதல்.
"போதும் நயனின் இதுக்கு மேல என்னால கேட்க முடியாது.."
"அதே தான் அபய் நானும் சொல்றேன். யாரையும் கட்டாயபடுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது என்று புரிஞ்சதால தான் நான் இப்படி இருக்கேன்"
"உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. நானே இந்த பிரச்சனையை ஹாண்டில் பண்ணிக்கிறேன்"
"ஹாண்டில் பண்ணி என்ன பண்ண போறீங்க?"
"நீ கலங்கமில்லாதவள் என்று நிருபிக்காமல் நான் ஓய மாட்டேன்" என்றவனை கண்டவளுக்கு தன்னை மீறி புன்னகை எழுந்தது.
"ஆல் தி பெஸ்ட்" என்றவ இதழ்களை கடித்தபடி சொன்னவளின் இமையோரம் நீர் துளிர்த்தது.
அவளிடம் பேசிவிட்டு சுதர்சனை தேடி சென்றவன் அடுத்த ஒருமணி நேரத்தில் ஏ சி பி விஜயகுமார் முன்பாக அமர்ந்திருந்தான்.
விஜயகுமார் ஸ்ரீவத்ஸனோடு ஒன்றாக படித்த நண்பன்.
"ரொம்ப நாள் கழிச்சு என்னை தேடி வந்திருக்க, சொல்லு அபய் என்ன விஷயம்?"
"ஒரு பெரிய பிரச்சனை மச்சான்.. ஆனா அதை unofficial ஆ உன்னால தான் முடிச்சு கொடுக்க முடியும்.."
"என்னடா சொல்லு .."
"என் மனைவிக்கு ஒரு பிரச்சனை.." என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் அரை மணி நேரம் செலவழித்து முழுதாக சொல்லி முடித்தான்.