நயனிகா சொன்னதை கேட்டு நம்ப முடியாத நிர்மலா, "என்னமா சொல்ற?! நீ சொல்றது நிஜமா?!" என்றார் நம்ப முடியாது..
"ஆமாத்தை, சஞ்சு இப்போ உயிரோட இல்லை அவ இறந்து இரண்டு வருஷத்துக்கு மேலாகுது. எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அவ இறந்துட்டா.. அவருக்கு விருப்பம் இல்லை என்ற போதும் நான் விடாப்பிடியா கல்யாணம் செய்துகிட்டது அவளுக்காக தான்.."
"என்னம்மா இது இவ்ளோ பெரிய உண்மையை இத்தனை நாளா எல்லார் கிட்ட இருந்தும் மறைச்சிருக்க? அதுவும் அபய்க்கு கூட சொல்லாம" என்றார் நிர்மலா கண்ணீரோடு..
"எனக்கு வேற வழி இல்ல அத்தை, சஞ்சு சொன்னதை தான் நான் செய்தேன்" என்றாள் மெல்லியக்குரலில்.
"ஏன் மா இறந்து போனவளுக்காக என் பையனை பைத்தியக்காரனாக்கின?"
"அத்தை.."
"சஞ்சனாவை தேடி சரியான சாப்பாடு, உறக்கம் இல்லாமல் கிட்டத்தட்ட பைத்தியக்காரன் மாதிரி சதா சர்வ காலமும் அவ நினைப்போடவே 2 1/2 வருஷமா எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சான் ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா என் பையனுக்கு அந்த நிலை இருந்திருக்காதே?!"
"அதோடு ரெண்டு வருஷம் அவன் உன்னை விட்டு பிரிந்தும் போயிருக்க மாட்டான். உன் மேல அனாவசியமான பழியும் பேச்சும் எழுந்திருக்காதே மா.." என்று மகன் மருமகள் இருவருக்காகவும் கேள்வி கேட்க,
"அத்தை நான் சொல்லியிருந்தா இந்நேரத்துக்கு நீங்க உங்க பிள்ளையை உயிரோடவே பார்க்காமலும் போயிருக்க வாய்ப்புண்டு.."
"என்ன சொல்ற?"
"அவரை நல்லா புரிஞ்சு வச்சுருக்கிறதால தான் சஞ்சனா அவ இல்லாத விஷயத்தை யாரகிட்டையும் சொல்லகூடாதுன்னு சொன்னா.. ஆனா அதை உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல, ஒரு நிமிஷம் இருங்க.." என்றவள் தாறுமாறாக கிடந்த அறையில் இருந்து சஞ்சு எழுதிய கடிதங்களை கொண்டு வந்து,
"இதை நீங்களே படிச்சு பாருங்க, புரியும்" என்றவள் அவரருகே நின்று இருந்த முரளிதரனிடம்," என்ன இப்படி நின்னுட்டு இருக்கீங்க? அவரு கோபத்தோடு கிளம்பி போயிருக்காரு இந்த மாதிரி நேரத்துல ரேஷ் டிரைவிங் ஆபத்து ப்ளீஸ் கொஞ்சம் அவரோடு போங்க.." என்றதும் சற்று யோசிக்காமல் மருமகனை தேடி சென்றார் முரளிதரன்.
நிர்மலா கடிதத்தை கண்ணீரோடு படித்துக்கொண்டிருக்க, நயனிகா அபய் ஸ்ரீவத்ஸனுக்கு அழைக்க முற்பட்டாள். ஆனால் அவன் கைபேசி அறையினுள் தான் அடித்துக்கொண்டிருந்தது.
"என்னமா இதெல்லாம்?" என்று நெஞ்சை பிடித்தபடி நயனியிடம் கேட்டவர், "மன்னிச்சுடு மா உன்னை தப்பா புரிஞ்சிருந்தேன்.." என்றிட மின்னல் வேகத்தில் கிளம்பி சென்ற அபய் ஸ்ரீவத்ஸனை முரளியால் பின் தொடர முடியாமல் போனது.
ஆனாலும் கல்லூரி தொடங்கி பேக்டரி வரை அவன் செல்லக்கூடிய இடங்கள் சுதர்ஷன் வீடு என்று அனைத்து இடத்திலும் இரவு முழுக்க அலைந்து திரிந்தவர் சக்கரவர்த்திக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு வீடு திரும்பினார்.
"என்ன நீங்க மட்டும் தனியா வந்து இருக்கீங்க? அவர் எங்கே?" என்று முரளிதரன் உள்ளே நுழையவும் ஓடி வந்தாள் நயனிகா.
"எல்லா இடமும் தேடிட்டேன் மா எங்கயும் அவனை பார்க்க முடியலை.." என்றார் தவிப்போடு.
ஆனால் அடுத்த நாள் காலை சுதர்சனிடம் இருந்து அவர்களுக்கு அழைப்பு வந்திருந்தது.
உடனே அவன் சொன்ன மருத்துவமனைக்கு அனைவரும் செல்ல அங்கே அபய் ஸ்ரீவத்ஸன் ஆக்ஸிடென்ட்டாகி பலத்த காயங்களுடன் அனுமதிக்க பட்டிருந்தான்
"என்னாச்சு சுதர்ஷன்? அவருக்கு ஒன்னுமில்லையே.." என்று நயனி முதலில் ஓடி வந்து விசாரிக்க அவனோ பதிலளிக்காமல் "நேத்து என்னமா நடந்தது?" என்றான்.
"எதுக்கு இந்த கேள்வி இப்போ, முதல்ல அவருக்கு என்ன ஆச்சு சொல்லுங்க? டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க பயப்படற மாதிரி ஒன்னுமில்லையே.."
"ஆமா பா அபய் நல்லா தானே இருக்கான்.." என்று நிர்மலாவும் அவன் கைகளை பிடித்தபடி கேட்க,
"சொல்றேன் மா, நயனி முதல்ல நேத்து நடந்ததை சொல்லுங்க.." என்றான்.
"சஞ்சு இஸ் நோ மோர் சுதர்ஷன். அவர் கிட்ட கொடுக்க சொல்லி சஞ்சு கொடுத்த லெட்டரை கொடுத்தேன்" என்று நேற்று அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த சம்பாஷணைகளை சொல்லி முடித்து "இப்போ சொல்லுங்க.." என்றாள்.
"நேத்து அபய் ட்ரிங்க்ஸ் எடுத்து இருக்கான்.. தன்னோட கண்ட்ரோல்ல இல்லாம போனதால தான் இந்த ஆக்ஸிடென்ட்.."
"வாட்? அவருக்கு அந்த பழக்கம் கிடையாதே.."
"ஆமா ஆனா நேத்து அவன் தெரிஞ்சுகிட்ட உண்மையை ஏத்துக்க முடியாமல் அளவுக்கு அதிகமாக ட்ரிங்க்ஸ் எடுத்திருக்கான் அவனை பார்ல பார்த்துட்டு என் ஃபிரெண்ட் கால் பண்ணி எனக்கு விஷயத்தை சொன்னான்..."
அவனை எப்படியாவது அபய்யை அங்கேயே இருக்க வைக்க சொல்லிட்டு நான் கிளம்பி கிளம்பினேன். ஆனா சுத்தமா நிதானமில்லாதவன் அவன் என்ன சொல்லியும் கேட்காமல் முழு போதையில் தானே வண்டியை ஓட்டி போய் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு.
அவனை பார்க்க போன வழியில ஆக்ஸிடென்ட் பார்த்துட்டு உடனே அவனை அட்மிட் பண்ணினேன். உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் கை, கால்கள், முகத்தில் சரியான அடி! கையில ஹேர் க்ராக் பிராக்ச்சர் ஆகியிருக்குன்னு சொன்னாங்க.. என்றிட சிகிச்சை முடிந்து அபய் ஸ்ரீவத்ஸனை பார்க்க அனுமதிக்க பட்டனர்.
மற்றவர்கள் எல்லாம் அவனிடம் கேள்வி கேட்டு அழுது ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்க நயனி அமைதியாக அனைத்தையும் பார்த்து நின்றாள்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு தான் டிஸ்சார்ஜ் என்று சொல்லிவிட்டதில் நிர்மலா மகனுடன் இருக்க நயனி "நான் பார்த்துக்கிறேன் அத்தை நீங்க கிளம்புங்க" என்றாள்.
"இல்ல ம்மா நீ எப்படி?" என்று அவர் தயக்கத்தோடு மகனை பார்க்க அவனோ மருந்துகளின் உதவியோடு நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
"அத்தை நான் அவரோட மனைவி மறந்துட்டீங்களா?! நீங்க போங்க, அவருக்கும் எனக்கும் மதிய சாப்பாடு கொண்டு வாங்க" என்று அனுப்பி வைத்தவள் மருத்துவரை சந்தித்துவிட்டு வந்தாள்.
அபய் ஸ்ரீவத்ஸன் விழிப்பதற்காக நயனி காத்திருக்க மதியம் இரண்டு மணி போல விழித்தவனுக்கு அங்கு நயனி மட்டும் இருப்பதை கண்டு அவளை பார்ப்பதை தவிர்த்தான்.
அதை கண்டும் காணாமல் அவனுக்கான உணவை எடுத்து வைத்தவள், "சாப்பிடுங்க" என்று உணவை நீட்டினாள்.
தனக்கு ஊட்டுவதற்காக நீண்டிருந்த அவள் கரத்தை கண்டவன், "நானே சாப்ட்டுக்கிறேன் நயனி" என்றான்.
"ஒரு கையில கட்டு போட்டிருக்கு இன்னொரு கை விரல்லயும் காயமாகி இருக்கப்போ எப்படி சாப்பிடுவீங்க?"
"அம்மா இல்லை வேற யாராவது வர சொல்லு.." என்றவன் "ஸாரி.." என்றான் அவளை பாராமல்..
"எதுக்கு இந்த ஸாரின்னு தெரிஞ்சுக்கலாமா?!"
"இல்ல கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே நான் உன்கிட்ட ரொம்ப மோசமா நடந்துகிட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்.. பட் அப்போ சஞ்சு எங்க இருக்கான்னு தெரியாம உன்னை அடிச்சு மனம் நோக பேசினேன் ஆனால் இப்போ உண்மை தெரிஞ்ச பிறகும் உன்னை அடிச்சது நினைச்சு எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு.."
"கண்மூடித்தனமான கோபத்துல போய் கண்டபடி குடிச்சு இதோ இப்படி கட்டு போட்டுட்டு வந்து இருக்கேன் இதெல்லாம் உனக்கு கோபத்தை கொடுக்கலையா?"
"எனக்கு உங்களை யாரு என்னன்னு தெரியாமல் இருந்தாலோ இல்லை உங்களுடைய காதல் புரியாமல் இருந்தாலோ நீங்க சொல்றது போல எனக்கும் கோபம் வந்திருக்கும் ஆனா எனக்கு தான் எல்லாமே தெரியுமே இன்ஃபாக்ட் எனக்கு உங்க மேல கோபத்தை விட பரிதாபம் தான் அதிகமா இருந்தது இப்பவும் இருக்கு.."
"உங்ககிட்ட ஆரம்பத்துலயே விஷயத்தை சொன்னால் நிச்சயமா சஞ்சுவோட பயம் உண்மையாகிடுமோ என்று எனக்கும் உள்ளுக்குள் உதறல் இருந்தது அதனால தான் நான் அப்படி செய்யலை.. ஆனா.."என்றவள் பேச்சை நிறுத்திவிட்டு அவனுக்கு உணவை கொடுக்க மறுத்தான்.
"உனக்கு எதுக்கு இந்த கஷ்டம்?"
"அப்போ இதுக்கு முன்ன எனக்கு கொடுத்த கஷ்டத்தை எல்லாம் திரும்பி வாங்கிக்கிற எண்ணம் இருக்கா?!" என்றவளின் கேள்வி புரியாமல் பார்த்தான்.
"ஊட்டி விடறதே எனக்கு கஷ்டமா இருக்கும்ன்னு நினைக்கிறவர் எனக்கு கொடுத்த அடியை எல்லாம் திரும்ப வாங்கிக்க போறீங்களான்னு கேட்டேன்.." என்றதில் அரண்டு போனான்.
"முடியாது இல்லை?! அப்புறம் ஏன் இந்த மாதிரி அசட்டு கேள்வி? நீங்களே மறுத்தாலும் நான் தான் உங்க மனைவி மாத்த முடியாது.. பேச்சை குறைச்சுட்டு சாப்பிட்டா நானும் சீக்கிரம் சாப்பிடுவேன்.."
"நீ இன்னும் சாப்பிடலையா?" என்றான் அதிர்வோடு.
"இல்லை. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி புருஷன் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடற கேட்டகிரி நான் கிடையாது... தாயும் பிள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேறன்னு சொல்லுவாங்க நானெல்லாம் பசி எடுத்தால் சாப்பிடற ஆள்!"
"இன்னைக்கு லேட்டா தான் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்ட்டேன் சரி நீங்க விழிக்கிறதுக்குள்ள சாப்பிடலாம் என்று எடுக்கவும் நீங்க விழிச்சுட்டீங்க.. அதுதான் முதல்ல உங்களுக்கு கொடுத்துட்டு சாப்பிட நினைச்சேன்" என்றவள் முடிக்கவும் அபய் ஸ்ரீவத்ஸன் எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டான்.
அவன் உணவை முடிக்கவும் தானும் முடித்து வந்தவளிடம், "நர்ஸ் இருந்தா கூப்பிடுறியா நயனி.." என்றான்.
"எதுக்கு?"
"இல்ல படுத்திருக்கிறது ஒருமாதிரி இருக்கு. எந்திரிச்சு உட்கார முடியலை.." என்றதும் அவனருகே வந்து அவன் தோள்களை பிடித்து அவன் அமர உதவி செய்தாள்.
"நீ.. நீ ஏன்.."
"ப்ச் ஓவ்வொரு முறையும் உங்களுக்கு நான் சொல்லிட்டு இருக்க முடியாது அபய். நீங்க என் சஞ்சுவை என்னன்னு லவ் பண்ணீங்கன்னு எனக்கு சுத்தமா புரியலை..."
"என்ன பேசற நீ?!" என்றவனுக்கு உண்மை புரியாமல் நயனியிடம் எந்தளவு தான் மோசமாக நடந்து கொண்டோம் என்ற நிகழ்வுகள் மனதில் நிழலாடியது.
அனைத்தையும் தன் உயிரானவளின் வார்த்தைக்காக தாங்கியவளின் மேன்மையை புரிந்து கொள்ளாமல் அவள் பெண்மை கலங்கப்பட தானும் ஒரு காரணமாகி போனோமே என்று குற்ற உணர்ச்சி அவனை அலைக்கழித்து கொண்டிருக்கிறது.
அனைத்திற்கும் மேலாக சஞ்சுவின் விருப்பத்திற்கு மதிப்பளித்து விடாப்பிடியாக தன்னை திருமணம் செய்து கொண்ட நயனியை அவன் வதைத்த நிமிடங்கள் கண் முன் வலம் வந்து அவனை கூறு போட்டது.
"பின்னே இப்போ நீங்க பேசறது, நடந்துக்கிறது, செய்யறது எதுவுமே அவளுக்கு சந்தோஷத்தை கொடுக்காது. ஆனா அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது என்றுத் தான் எனக்கு புரியலை.."
"உங்களுக்கு எப்படியோ தெரியாது ஆனா எனக்கு சஞ்சுவோட வார்த்தை வேதவாக்கு மாதிரி! அவள் இருக்கும் போதே அவ வார்த்தையை நான் மீறமாட்டேன்.."
"குடும்பத்தை விட்டு பிரிஞ்சு இருந்த எனக்கு ஹாஸ்டல்ல கூட அவ்வளவா ஃப்ரெண்ட்ஸ் கிடையாது.. ஒரே ஹாஸ்டல் ஒரே ரூம் என்ற முறையில் பேசுவோம், பழகுவோம், ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணிப்போம் மத்தபடி யார்கிட்டயும் மனசுல உள்ளதை ஷேர் பண்ற ரிலேஷன்ஷிப் எனக்கு ஸ்கூல் காலேஜ் எங்கேயுமே இருந்தது கிடையாது என் சஞ்சுவை தவிர்த்து.."
"சஞ்சு எனக்கு ஃப்ரெண்ட் மட்டும் கிடையாது. என்னோட அப்பா அம்மா எல்லாமே அவதான் எனக்கு என்ன வேணும்னு என்னை விட அவளுக்கு நல்லா தெரியும். அவளுக்கு எது பிடிக்கும்னு அவளை விட எனக்கு நல்லா தெரியும்.. இப்போ அவளோட கடைசி ஆசை தெரிந்த பிறகு நிச்சயம் முடியாது.. கமான் கெட் அப்!" என்று அவனை எழுப்பி அமர்த்தினாள்.
"லைம் ஜூஸ் எது சாப்பிடறீங்களா?" என்றவளை புரியாமல் பார்த்தான்.
"இல்ல ஹாங் ஓவர்ல இருப்பீங்க அதுதான் லைம் ஜூஸ் குடிச்சா இப்படி உளறாம நார்மல் ஆகுவீங்கன்னு தான் கேட்டேன்.." என்றிட அவனிடம் கனத்த மௌனம்.
"குடிப்பதால் எல்லாம் மாறிடுமா அபய்?! இல்லை கவலை தான் தீர்ந்திடுமா? விஷயத்தை கேட்டு ரெண்டு மணி நேரம் கூட முழுசா முடியாம கவலையை மறக்க குடிக்க போயிட்டீங்களே ரெண்டு வருஷத்துக்கும் மேல யார்கிட்டயும் சொல்லவும் முடியாம வேதனையை கடக்கும் முடியாம என் மனசுக்குள்ள வச்சு மருகிகிட்டு இருக்கிற நான் எவ்ளோ குடிக்கிறது சொல்லுங்க?"
"குடிச்சா கவலையை மறக்கலாம் சஞ்சுவோட இழப்பில் இருந்து மீளலாம் என்றால் இந்நேரம் நான் குடிகாரியா தான் மாறியிருக்கணும்.." என்றாள் காட்டமாக.
"ஸாரி நயனி என்னால என் சஞ்சுவோட இறப்பை அக்செப்ட் பண்ணிக்க முடியலை.. கடைசியா அவளை பார்க்கிற கொடுப்பனை கூட எனக்கு இல்லாமல் போயிடுச்சு அவளை இப்பவே பார்க்கணும்னு ஒருவித வெறி அதுல தான் உன்னை அடிச்சு, நான் குடிச்சுன்னு எவ்வளவோ செய்துட்டேன்.."
"இது தான் உங்களோட இந்த கண்மூடித்தனமான கோபமும், காதலும் தான் அவளை உண்மையை உங்க கிட்ட இருந்து மறைக்க சொல்லி சொல்லியிருக்கு.. நீங்க மட்டுமில்லை நானுமே தான் அவளை பார்க்கலை இவ்ளோ ஏன் அவ ஏன் இல்லாமல் போனான்னு கூட எனக்கு இப்போ வரை தெரியாது.."
"ஆனாலும் அதையெல்லாம் கடந்து தான் வந்திருக்கேன். இப்போதைக்கு என் மனசுல இருக்கிறதெல்லாம் என் சஞ்சுவோட ஆசையும் அவளை நான் பார்க்க போற அந்த நாளுக்கான காத்திருப்பும் தான். நீங்க ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது பக்குவமான ஆண்மகன் ஸோ ப்ளீஸ் பீ நார்மல் அன்ட் ட்ரை டூ அக்செப்ட் தி ஃபேக்ட் அபய்!"
"ஒரே ஒருநாள் குடி உங்களை எங்க கொண்டு வந்து சேர்த்திருக்குன்னு புரிஞ்சுக்கோங்க, கண்டிப்பா சஞ்சுவுக்கு இது சந்தோசம் கொடுக்காது. இதையெல்லாம் விட்டுட்டு எப்படி நம்ம வாழ்க்கையை சரி பண்ணலாம்னு யோசிங்க.." என்றவள் அடுத்து வந்த நாட்களிலும் அவனை கவனித்துகொள்ள மூன்றாம் நாள் வீடு திரும்பினான் அபய் ஸ்ரீவத்ஸன்.
அவன் வீடு திரும்ப ஆர்த்தி எடுத்து மகனை அழைத்துக்கொண்டார் நிர்மலா.
மருத்துவமனையில் இருந்த போது செவிலியர் அவனுக்கு ஆடை மாற்ற உதவி செய்திருந்தார் ஆனால் குளிக்க அனுமதிக்கவில்லை. வீடு திரும்பிய பிறகு குளிக்க சொல்லியிருக்க தன் அறைக்கு திரும்பியவனுக்கு மருத்துவமனை வாசம் போக குளிக்க வேண்டிய நிர்பந்தம்.
ஆனால் தனியாக எப்படி என்று யோசித்தவன் அண்ணனுக்கு அழைக்க அவனோ முக்கியமான மீட்டிங்கிற்கு கிளம்பி சென்றிருந்தான்.
"யாருக்கு கூப்பிடறீங்க?" என்றபடி அவனுக்கான மாத்திரை மருந்துகளோடு அறைக்குள் வந்தாள் நயனிகா வர்ஷி.
"குளிக்கணும் அதுதான் வினோக்கு கால் பண்ணிட்டு இருந்தேன்.."
"ஏன் நான் செய்ய மாட்டேனா?! அவரை எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க?"
"நீயா?" என்றான் பேரதிர்ச்சியோடு..
"ஏன் நான் செய்யக்கூடாதா?! லிசென் அபய் நீங்க ஏத்துக்காமல் போனாலும் நான் உங்க மனைவி தான்! பொதுவாவே திருமண பந்தம் ஆண்டவன் போடும் முடிச்சுன்னு சொல்லுவாங்க ஆனா இது என் சஞ்சு போட்டது நிச்சயம் நான் தோற்க விட மாட்டேன்.."
"ஃபர்ஸ்ட் ஆப் ஆல் கிடைச்சது வாய்ப்புன்னு உங்களை செட்யூஸ் பண்ற ஐடியாவும் எனக்கில்லை.." என்றதும் பதறிபோனான்.
"நீ தப்பா புரிஞ்சுகிட்ட நயனி.. நான் அப்படி எதுவும் நினைக்கலை.." என்றான் அவசரமாக..,
"நீங்க அப்படி நினைச்சாலும் ஐ டோன்ட் கேர்னு சொல்ல வரேன் அன்ட் இதெல்லாம் நான் செய்யறதால உங்க கற்பு ஒன்னும் கெட்டு போயிடாது ஸோ ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா உட்காருங்க" என்று அவனை அமர்த்தி சட்டையை களைந்தவள் அவன் குளிக்க உதவி செய்து அழைத்து வந்தாள்.
ஆனால் மனைவியின் ஒவ்வொரு செய்கையிலும் அவனுக்கு தான் குற்ற உணர்வு அதிகரித்தது.
"ஐ'ம் ஸாரி நயனி நம்மோட பர்ஸ்ட் நைட்ல நான் உன்னை ரொம்பவே மோசமா நடத்திட்டேன்.. ப்ளீஸ் அதெல்லாம் மறந்துடு.." என்றவன் கையில் இருந்த டீஷர்ட்டை வாங்கியவள் அவனுக்கு எளிதாக கழற்றி மாற்ற ஏதுவாக வேறொரு சட்டையை எடுத்து அணிவித்தாள்.
"உன்கிட்ட தான் பேசறேன் நயனி.." என்றதை காதிலேயே வாங்காமல்,
"உங்களுக்கு தண்ணி டம்பளர்ல வச்சுருக்கேன் எடுத்துக்கோங்க, அப்புறம் வெயிட் எதுவும் தூக்காதீங்க.. ஏதாவது தேவை இருந்தா என்னை கூப்பிடுங்க நான் லஞ்ச் பார்க்கிறேன்" என்றவள் அவன் படுப்பதற்கு வசதியாக தலையணைகளை அடுக்கியபடி சொன்னாள்.
"நயனி நான் சொல்றது கேட்குதா?!"
"கேட்குது சொல்லுங்க.."
"நீ என்னை லவ் பண்ணினதா சஞ்சு சொல்லி இருந்தா அது உண்மையா?" என்றவனின் கேள்வியில் அவள் கரம் தன் செயலை நிறுத்தியது.