• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் கேட்கும் அமுதம் நீ - 5

kkp11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
78
116
33
Tamil nadu

அமுதம் - 5​

“நயனியின் நடத்தை சரியில்லை என்று காரணம் காட்டி விவாகரத்து பெறுவேன்” என்ற மகன் பேச்சில் முற்றிலுமாக ஆடி போய் விட்டார் சக்கரவர்த்தி.​

“கல்யாணம் ஒன்னும் விளையாட்டு கிடையாது அபய். நீ நெருப்போடு விளையாட பார்க்கிற.. நயனி உன்னோட மனைவி அதை மறந்துட்டு பேசாத” என்று எச்சரித்தார்.​

“காதலும் விளையாட்டு கிடையாது ப்பா. நீங்க என்னோட உணர்வுக்கு மதிப்பு கொடுக்கலை. இனி யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் கட்டின இந்த தாலி அவளுக்கு சுருக்கு கயிறு தான்”​

“அபய்!!”​

“நீங்க கேட்ட மாதிரி உங்க கௌரவத்தை காப்பாற்ற மருமகளை கொண்டு வந்துட்டேன். இனி நீங்களாச்சு அவளாச்சு ஆனா என்னைக்கும் அவ எனக்கு பொண்டாட்டியா மாற முடியாது..”​

“உங்க கனவுல கூட அது நடக்காது. எனக்கு என்னைக்குமே பொண்டாட்டி என்றால் அது என் சஞ்சு மட்டும் தான்..”​

“அபய் சஞ்சு உன்னை விரும்பினது உண்மையா இருந்தா இந்நேரம் வந்திருக்கணும்”​

“இல்லையே! அவளை இல்லாமல் ஆக்கினதை நீங்க தானே!!”​

“அபய் கொஞ்சம் பொறுமையா கேளு, நான் இந்த விஷயத்தில் எதுவுமே செய்யல..”​

“இன்னமும் அதை நம்புறதுக்கு நான் முட்டாள் இல்லை.. உங்களோட ஜாதி வெறிக்கு நானும் சஞ்சனாவும் பலியாகலாமே தவிர்த்து எங்க காதலை பலி கொடுக்க மாட்டேன்..”​

“அப்போ நயனிக்கு கட்டின தாலிக்கு என்ன அர்த்தம்?”​

“அதுதான் ஏற்கனவே சொல்லிட்டேனே நீங்க அந்த பசங்க வாழ்க்கையில விளையாட நினைச்சீங்கன்னா உங்க மருமக வாழ்க்கையில நான் இன்னும் மோசமா விளையாடுவேன்..” என்றான் தீவிரக்குரலில்.​

“அபய் என்னப்பா பேசுற?” என்று பதறிப்போனார் நிர்மலா.​

“எல்லாமே கை மீறி போயிடுச்சுமா..” என்றவன் அதற்கு மேலும் நொடி நேரம் கூட தாமதிக்காமல் கிளம்பி சென்றான்.​

‘எங்கே செல்கிறான்?’ என்று யாருக்குமே தெரியவில்லை.​

அவன் திரும்பி வருவதற்காக அனைவரும் மண்டபத்தில் காத்திருக்க அபய் வருவது போல தெரியவில்லை.​

“இன்னும் எவ்ளோ நேரம் இங்கேயே காத்திருக்கிறது வீட்டுக்கு கிளம்பலாம். அபய் பிடிவாதத்தை பற்றி தெரியாதா அவனுக்காக காத்திருந்தா நாள் முழுக்க இங்கேயே இருக்க வேண்டி வரும். ஏற்கனவே ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சுட்டாங்க” என்று வினோதன் சொல்ல ஒருவழியாக பதினோரு மணி போல அனைவரும் நல்ல நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.​

வழி நெடுக அபி ஸ்ரீவத்ஸனுக்கு அனைவரும் மாற்றி மாற்றி அழைக்க அவன் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை.​

சுதர்ஷனும், விநோதனும் மண்டபத்தில் இருந்தே அவனை தேடி தனித்தனியே கிளம்பி இருந்தனர்.​

எப்படியும் இவர்கள் வீடு சென்று சேர்வதற்குள் அவனை அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்திருக்க அதில் மண்ணள்ளி போட்டிருந்தான் அபய்.​

மணமக்கள் இருவரும் ஒன்றாக தான் வீட்டினுள் வரவேண்டும் ஆனால் அபய்யை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. நிர்மலா முதற்கொண்டு சேதுராமன் வரை யாருடைய அழைப்பையும் அவன் ஏற்பதாக இல்லை.​

இறுதியில் நயனி தானே அவனுக்கு அழைக்கவும் அழைப்பை ஏற்றான்.​

“ப்ளீஸ் அபய் எங்க இருக்கீங்க? தயவு செய்து வீட்டுக்கு வாங்க..”​

“எதுக்கு?”​

“நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் வீட்டுக்குள்ள போகணும் இன்னும் மற்ற சம்பிரதாயம் எல்லாம் இருக்கு சொந்தக்காரங்க எல்லாரும் சுற்றி இருக்காங்க.. இந்த மாதிரி நடத்துக்காதீங்க..”​

“.....”​

“நீங்க என்னை அவமானப்படுத்துவதாக நினைச்சு உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்குறீங்க”​

“வாயை மூடுடி!! இன்னொரு வார்த்தை பேசாதே. அதுதான் நீ நினைச்சதை சாதிச்சுட்டியே?! எனக்கு யாரைப் பத்தியும் கவலை இல்லை இனி வாழ்க்கை முழுக்க உனக்கு தனிமை மட்டும் தான்..”​

“அப்போவே சொன்னேன் இந்த கல்யானத்தை பண்ணிகிட்டா நீ நரகத்தை மட்டும் தான் பார்ப்ப என்று அதனால தனியாவே உள்ள போ” என்றான் தீர்க்கமான குரலில்.​

“இங்க எல்லாரும் என் காதல் படவே ஒரு மாதிரி பேசுறாங்க உங்களுக்கு என் மேல இருக்க கோபத்தை நான் காட்ட வேண்டாம் என்று சொல்லல. ஆனால் இப்படி எல்லாரும் பார்க்க.. ப்ச், எனக்கு கஷ்டமா இருக்கு”​

“ப்ளீஸ் அபய் படிச்சவர் மாதிரி நடந்துக்கோங்க. உங்க தகுதிக்கும் பதவிக்கும் நீங்க செய்யறது தப்புன்னு உங்களுக்கே தெரியலையா?”​

“அப்போ உண்மைய சொல்லுடி என் சஞ்சுவுக்கு என்ன ஆச்சு? அவளை என்ன பண்ணின?”​

“எனக்கு தெரியாது..”​

“பொய் சொல்லாத, கடைசியா உன்னை பாக்கணும்னு சொன்னவளை உன்னோட ஹாஸ்டல்ல கொண்டு வந்து விட்டவன் நான்! அதுக்கப்புறம் அவளை பார்க்கவே முடியல...”​

“அவளோட ஃபோன் சுவிட்ச் ஆஃப்! எந்த சோஷியல் மீடியாலயும் அதுக்கு அப்புறம் அவளை பார்க்க முடியல.. சுத்தமா அவளை ரீச் பண்ண முடியல, என்னோட சொத்துக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு நீதான் அவளை என்னமோ செய்திருக்க, எனக்கு தெரியும்!”​

“என்ன பேசுறீங்க உங்களை போல தான் நானும்!! சஞ்சுவை அன்னைக்கு தான் கடைசியா மீட் பண்ணேன் அதுக்கு அப்புறம் அவளை பார்க்கவே இல்லை. நிஜமாவே எனக்கு எதுவும் தெரியாது நம்புங்க..” என்று சொல்ல அபய் அழைப்பை துண்டித்தான்.​

“மாப்பிள்ளை என்னம்மா சொன்னாரு?” என்றார் தனலட்சுமி.​

“ஒரு முக்கியமான எமர்ஜென்சி மா அதனால தான் ஹாஸ்பிடல் போய் இருக்காரு. வர நேரம் ஆகுமாம் அவருக்காக காத்திருக்க வேண்டாம்னு சொல்லிட்டாரு..” என்றாள் குரல் கரகரக்க..,​

“வர்ஷி..”​

“ம்மா ப்ளீஸ் எதுவும் பேசாதீங்க..” என்ற மகளின் உணர்வை புரிந்தவராக அமைதி காத்தார் தனலட்சுமி.​

“நீ ஒன்னும் கவலைப்படாத நயனி. இப்போ உள்ள போ ம்மா நான் அவனை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு கொண்டு வரேன்” என்றார் சக்கரவர்த்தி.​

“ப்ளீஸ் மாமா இதுக்கு மேல அவரை எந்த விஷயத்திலும் ஃபோர்ஸ் பண்ணாதீங்க. நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தைக்குமான விலையை நான் கொடுத்துட்டு இருக்கேன்..” என்றவளுக்கு கண்களில் நீர் கோர்த்துவிட்டது.​

என்னதான் இயல்பாக அந்நொடிகளை கடக்க வேண்டும் என்று அவள் முயன்றாலும் முடியவில்லை. அபய் மீதான அவள் காதல் அதற்கு விடவில்லை.​

ஆம் காதல் தான்! அதுவும் பத்து வருடங்களுக்கும் மேலான காதல்!​

“அவர் கோபம் தீர்ந்து எப்போ வரணும்னு நினைக்கிறாரோ அப்போ வரட்டுமே” என்று கண்ணீரை உள்ளே இழுத்தபடி சொல்ல சக்கரவர்த்தியும் அவள் பேச்சை ஆமோதித்தார்.​

ஒரு வழியாக நயனிக்கு மட்டும் ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.​

பூஜையறையில் விளக்கேற்ற சொல்ல, நயனி பெரும் தயக்கத்துடன் நின்றிருந்தாள்.​

"என்னமா யோசனை விளக்கு ஏற்று.." என்று சக்கரவர்த்தி சொல்ல,​

"அண்ணா முதல் நாள் தம்பதியா தான் வீட்டுக்குள்ள வரணும், ஆனா என் பெண்ணுக்கு அந்த கொடுப்பனை இல்லாம போயிடுச்சு இப்போ விளக்கேற்றும் போதும் தனியா எப்படின்னா?" என்ற தனலட்சுமிக்கு அழுகை பொங்கியது, ஆனாலும் கட்டுபடுத்தி கொண்டு கேட்டார்.​

"இதற்கெல்லாம் வாய்ப்பு இருக்குன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன் மா. இப்போ புதுசா கேட்டா என்ன அர்த்தம். இதுக்கெல்லாம் சேர்த்து தானே.." என்றவரை இடையிட்ட சேதுராமன்,​

"வாயை மூடுடி! இன்னொருமுறை சம்மந்தி கிட்ட இப்படி பேசின பல்லை தட்டி கையில் கொடுத்துடுவேன்" என்று அதட்டிய சேதுராமன்,​

"நீ என்ன பார்த்துட்டு நிக்கிற போய் விளக்கேற்று" என்றபடி நயனியிடம் திரும்ப அவளோ அதற்கு முன்பாகவே விளக்கேற்ற சென்றிருந்தாள்.​

மேலும் ஒரு மணி நேரம் காத்திருந்த போதிலும் ஸ்ரீவத்ஸன் வராததில், “சம்ம்ந்தி பொண்ணு மாப்பிள்ளை எங்க வீட்டில் அடி மதிக்கணும், பால்பழம் சாப்பிடணும், இன்னும் நிறைய சம்பிரதாயம் இருக்கு” என்றார் சேதுராமன்.​

“அபய் வந்ததும் நான் அனுப்பி வைக்கிறேன்” என்றவரின் முகம் கறுத்து போயிருந்தது.​

“அப்புறம் சம்மந்தி அந்த ரெஜிஸ்ட்ரேஷனையும் அப்படியே பாத்துட்டீங்கனா நல்லா இருக்கும்” என்று தன் காரியத்தில் அவர் குறியாக இருக்க,​

“சொன்ன மாதிரி நாளை மறுநாள் ரெஜிஸ்டர் ஆகிடும் போதுமா?!”​

“நீங்க சொன்னா எல்லாம் சரியா தான் இருக்கும்” என்று பல்லை இளித்தபடி விலகினார்.​

“சரி தனா அப்போ நாம கிளம்பி போய் ஆக வேண்டிய வேலையை பார்க்கலாம்” என்று மனைவி மகளை அழைக்க அவர்களுக்கு நயனியை தனியே விட்டு செல்ல மனமில்லை.​

அதேநேரம் ஸ்ரீவத்ஸனின் ஜிபிஆர்எஸ் ட்ராக் செய்து அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்ற சுதர்ஷன் என்ன சொன்ன போதும் ஸ்ரீவத்ஸன் தன் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை.​

“இவ்வளவு நாள் கிடைக்காத சஞ்சு இனியும் கிடைப்பான்னு உனக்கு நம்பிக்கை இருக்கா டா?”​

“என்னமோ தெரியல மச்சான் ஆனா இந்த கல்யாணம் நடக்கணும் என்பதற்காகவே அவளை பற்றின உண்மை மறைக்கப்பட்டு இருக்கும் என்று எனக்கு சந்தேகமா இருக்கு..”​

“யாரடா சந்தேகப்படுற?”​

“நயனி”​

“என்ன மச்சான் இது? உனக்கு அப்பத்தமா தெரியலையா?!”​

“இல்லடா அவ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காமல் இருந்திருந்தால் நான் அவளை சந்தேகப்பட்டு இருக்க மாட்டேன். ஆனா கிட்டத்தட்ட நாலு அஞ்சு மாசமா நாயா பேயா நான் அலையறதை கண்கூட பார்த்தவ..”​

“என்னோடு சேர்ந்து சஞ்சுவை தேடுற மாதிரி நடிச்சவ வாய்ப்பு கிடைக்கவும் உடனே ஒத்துக்கிட்டா அதுதான் என்னோட சந்தேகத்துக்கு காரணம்”​

“நீ ஏன்டா இப்படி நினைக்கிற நயனிக்கும் ஏதாவது கட்டாயம் அல்லது அழுத்தம் இருந்திருக்கலாம் இல்லையா?!”​

“எனக்கு அப்படி தோணலை..”​

“மச்சான் வீட்ல இருந்து கால் வந்துட்டே இருக்கு அம்மாக்காகவாவது வீட்டுக்கு வாடா.., எதுவா இருந்தாலும் அங்க பேசிக்கலாம்”​

சேதுராமன் அழைக்கவும், “நீ இங்க அக்காவுக்கு துணையா இரு நிது” என்ற தனலக்ஷ்மி மகன் கணவரோடு கிளம்பினார்.​

நிர்மலா அதிகமாக நயனியோடு பேசிக்கொள்ளவில்லை என்றாலும் மருமகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட வில்லை.​

மூத்த மருமகளான ராகவியிடம் அவளை ஒப்படைத்து பார்த்து கொள்ள சொன்னவர் மதிய உணவை பார்வையிட சென்றுவிட்டார்.​

“வீடு பிடிச்சிருக்கா நயனி” என்று ராகவி நயனியிடம் நேசக்கரம் நீட்டினாள்.​

“பிடிச்சிருக்கு” என்றவளின் மனதில் அபய்யின் நிலைப்பாடு பெரும் அச்சத்தை தோற்றுவித்திருந்தது.​

‘தவறு செய்து விட்டோமோ?!’ சஞ்சனாவின் வார்த்தைக்கு கொடுத்த மதிப்பையும் மரியாதையையும் கணவனின் உணர்வுக்கும் கொடுத்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம் மேலெழுந்து அவளை வதைத்தது.​

புது இடம் புது மனிதர்கள் என்று முதல் நாளே அந்நியத்தன்மையை தோற்றுவித்தாலும் முயன்று தன்னை அந்த சூழலுக்கு பொறுத்த முயன்றாள் நயனிகா வர்ஷி.​

மதிய உணவை முடித்தவள் மீண்டும் மீண்டும் அப்ய்க்கு அழைக்க மறுபுறம் எந்த எதிரொலியும் இல்லை.​

"எதாவது ஹெல்ப் பண்ணட்டுமா அத்தை" என்று நிர்மலாவிடம் கேட்க, 'இல்லை' என்ற தலையசைப்பு மட்டுமே அவரிடம்.​

என்ன தான் நயனி அவர்கள் வீட்டு மருமகள் என்பது மாறப்போவது கிடையாது என்றாலும் மகன் படும் வேதனைக்கு இவளும் ஒரு காரணம் தானே என்ற கோபம் அவரிடம் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.​

மாலை மங்கி இரவு கவிழ்ந்த போதும் அபய் வராததில் நயனிக்கு குற்ற உணர்வு மேலோங்கியது​

இரவு பத்து மணி போல அபய் ஸ்ரீவத்ஸன் வீடு வந்து சேர நிர்மலாவிடம் நிம்மதி மூச்சு.​

“சொந்தக்காரங்க எல்லாரும் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியல.. எந்தப் பிரச்சினையும் நம்ம குடும்பத்தோடு இருக்கட்டும் கண்ணா, வெளி ஆட்களுக்கு தெரிய வேண்டாம் அது நமக்கு தான் வினையா முடியும்” என்று மகனிடம் சொல்ல அவனிடம் எந்த அசைவும் இல்லை.​

“சாப்பிட வா ப்பா..”​

“பசி இல்லமா”​

“நானும் இன்னும் சாப்பிடல எனக்காகவாவது ஒரு வாய் சாப்பிடு பா” என்றுவரை மறுக்க முடியாமல் அமர்ந்தான்.​

ஒருவழியாக உணவை முடித்துக்கொண்டு ஸ்ரீவத்ஸன் தன் அறையை திறக்க மலர்களின் நறுமணம் அவனை வரவேற்க உள்ளே உரிமையாக அமர்ந்திருந்த நயனிகா வர்ஷியை கண்டவனின் உள்ளம் தணலாய் தகித்தது.​

 

Rampriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 13, 2022
39
41
18
Otteri, Chennai
நைஸ் எபிசோட் 🤩🤩
சஞ்சனா நயனியிடம் என்ன சொல்லிட்டு போனா....??!!
அவள் இருக்கும் இடம் இவளுக்கு தெரியுமா...??!!

அபய்..... உன் அப்பாவோடு நேரடியாக மோதறதுக்கு இல்லாமல் 😟😟😟😕😕😕 நயனியின் ஒழுக்கத்தோடு விளையாடுவேன் என்று அபத்தமாக பேசிட்ருக்க 😤😤😡😡😠😠😠
 

Indhumathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 8, 2021
102
39
43
Madurai
அப்போ ஸ்ரீ சந்தேகப்படுற மாதிரி சஞ்சனா பத்தி நயனிக்கு தெரிஞ்சிருக்கு...

ஏற்கனவே வெறி கொண்டு திரியிறான் இதுல இந்த ஏற்பாடு எல்லாம் தேவையா 🤷‍♀️🤷‍♀️🤷‍ இதுக்கும் நயனியை தான் கடிச்சு குதறுவான் 😧😧😧😧
 
  • Love
Reactions: kkp11