இந்த இரண்டு வருடங்களில் சந்தனாவை தேடி பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருந்தான் அபய் ஸ்ரீவத்ஸன்.
நயனி சஞ்சனாவின் நெருங்கிய தோழி என்றாலும் சஞ்சு குணத்திற்கு அவள் நட்பு வட்டம் சற்று பெரியது தான். அவர்களில் பாதி பேருக்கு மேல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செட்டில் ஆகி இருந்தனர்.
கடந்த ஆறு மாதங்களாக அனைவரையும் சந்தித்து விசாரித்த போதும் பலன் என்னவோ பூஜ்யமாகி போயிருந்தது. அவள் நட்பில் சிலர் திருமணமாகி வெளிநாடுகளில் வசித்திருக்க ஒருவேளை அங்கு சென்று இருப்பாளோ என்று இந்த இரண்டு வருடங்களில் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து அவளை வலை வீசி தேடிய போதும் எங்குமே கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருவேளை வட மாநிலங்கள் பக்கமாக சென்று இருப்பாளோ என்ற ஐயம் ஏற்பட டெல்லி மும்பை வட்டத்திலும் அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் அவன் தேடி களைத்து போனது தான் மிச்சம்.
சஞ்சுவை தேடும் முயற்சியில் படுதோல்வி அடைந்தவன் வேறு வழியில்லாமல் வீடு வந்து சேர்ந்தான்.
இந்த இரண்டு வருடங்களில் அனைவரின் தொடர்பையும் துண்டித்து விட்டவன் சுதர்சனுக்கு கூட அவன் இருக்கும் இடமோ அலைபேசி எண்ணோ கொடுக்கவில்லை.
அவனுக்கு தன் நண்பனை பற்றி தெரியும் அதனால் தான் அவனிடமிருந்தும் தன் பயண திட்டத்தை மறைத்திருந்தான்.
‘எப்படி இருந்தாலும் திருமணம் ஆகிவிட்டது. மற்றவர் பேச்சுக்கு ஆளாகாமல் மீண்டும் வா’ என்று தான் அழைக்கப் போகிறார்கள் அதைக் கேட்கும் பொறுமையும் நிதானமும் அவனுக்கு கிடையாது.
எப்படியாவது சஞ்சுவை வீட்டிற்கு அழைத்து வந்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தான்.
குளித்து முடித்து தயாராகி அபய் ஸ்ரீவத்ஸன் கீழே இறங்கி வர குடும்பமே அவனுக்காக காத்திருந்தது.
இரண்டு வருடங்கள் எங்கிருக்கிறான் என்று அவர்கள் அறிய முடியாமல் செய்ததில் நிச்சயம் மற்றொரு பூகம்பம் ஏற்படும் என்று தான் அபய் ஸ்ரீவத்ஸன் காத்திருந்தான்.
ஆனால் அவன் எதிர்பார்ப்பிற்கு மாறாக தந்தையின் எதிரில் அபய் ஸ்ரீவத்ஸன் அமர்ந்திட நிர்மலா அமைதியாக பரிமாறினார்.
அவராக கேட்காமல் பதில் சொல்ல கூடாது என்ற பிடிவாதத்தோடு அபய் காத்திருக்க சக்கரவர்த்தியின் அமைதி அவனுக்கு பெரும் ஆச்சர்யம் அளித்தது.
ஒருவேளை உணவை முடித்து பேசுவாரோ என்று அவன் காத்திருக்க அவரோ அமைதியாக எழுந்து சென்றுவிட்டார்.
அவர் மட்டுமல்ல நிர்மலாவின் விட்டேர்த்தியான பாவனை அண்ணனின் மௌனம் என்று அத்தனையும் சேர்ந்து அவனை தன்னை அறியாமல் நயனிகாவை தேட செய்தது.
அன்று அவள் பேசிய பேச்சுக்களுக்கு நிச்சயம் வீட்டை விட்டு போக மாட்டாள் என்று தான் அவன் நினைத்திருந்தான். ஆனால் இப்போது அவள் அங்கு இல்லாததில் ஒருவேளை கல்லூரிக்கு சென்றிருப்பாளோ என்று தான் முதலில் எண்ணினான்.
ஆனால் கப்போர்டிலும் அவள் உடமைகள் எதுவும் இல்லாமல் போனதை கண்டவனுக்கு ஒருவேளை அவன் இல்லாத நேரத்தில் வீட்டில் ஏதேனும் சச்சரவு நிகழ்ந்து அதனால் வெளியேறி விட்டாளோ என்ற கேள்வி எழுந்தது.
அப்படி இருந்தால் இந்நேரத்திற்கு அதை நிர்மலாவே சொல்லி இருப்பார்.
ஆனால் அவரே பேசாமல் இருக்கிறார் என்றால் விஷயம் நிச்சயம் பெரிதாக தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான். ஆனால் அன்றே அவள் திருமணத்தை மறுத்திருந்தால் இதெல்லாம் நிகழ்ந்திருக்காது என்று தான் நினைக்க தோன்றியதே தவிர்த்து அவளுக்காக என்ன பிரச்சனை என்று யோசிக்க தோன்றவில்லை.
இருந்தாலும் அவனால் ஏனோ ஒதுங்கி இருக்க முடியாமல் போக, "நயனி எங்கம்மா?" என்று கேட்டுவிட்டான்.
“இப்போ எதுக்குப்பா அந்த பேச்சு? நமக்கு வேண்டாம், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மாதிரி நம்ம நல்ல நேரம் அந்த பொண்ணு உன் வாழ்க்கையை விட்டு போயிட்டா..”
“ம்மா என்ன சொல்றீங்க? என்ன நடந்ததுன்னு கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றீங்களா?”
“வேண்டாம் விடுப்பா. நடந்தது எல்லாமே நல்லதுக்குன்னு தான் தோணுது ஆனா அதை சொல்லவே எனக்கு நாக்கூசுது” என்றவர் அமைதியாக சமையலறைக்குள் சென்று விட்டார்.
அப்படி என்ன கூச செய்திடும் நிகழ்வு நடந்து விட்டது என்ற கேள்வியுடனே காரை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான்.
வழி நெடுக நயனிகாவின் யோசனை தான். அவளுக்கு அழைக்க வேண்டி கைபேசியை எடுத்தானே தவிர்த்து அழைக்கவில்லை. அதற்கு அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.
ஆனால் கல்லூரியின் உள்ளே நுழைந்தது முதல் அபய் ஸ்ரீவத்ஸனை அனைவரும் வித்தியாசமாக பார்க்க அவனுக்கு ஒன்றும் புரிபடவில்லை.
‘ஏன் இந்த பார்வை?!’ என்று குழப்பத்துடனே தன் அறையினுள் சென்று அமர்ந்தவன் தன் கணினியை திறந்து பார்வையிட தொடங்கினான். அதில் பேராசிரியர்களின் விபரம் பார்க்க நயனிகாவின் பெயர் அதில் இல்லை.
தன் மனைவியை பற்றி மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்பாவன் மேலும் விபரங்களை பார்க்க அதில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக அவள் கல்லூரிக்கு வரவில்லை என்பதை அறிந்து கொண்டான்.
“என்னவாயிற்று இவளுக்கு?! வீட்டை விட்டு சென்றவள் ஏன் கல்லூரிக்கு வராமல் இருக்க வேண்டும்?’ என்று புரியாது பார்த்திருக்க அங்கே வந்து சேர்ந்தான் சுதர்ஷன்.
“மச்சான்...” என்று அபய் ஸ்ரீவத்ஸன் தன் நாற்காலில் இருந்து எழும் முன்னமே வேகமாக அவனிடம் வந்தவன் அபய்யின் சட்டையை கொத்தாக பிடித்து, “மனுஷன் தானடா நீ!” என்றான் கட்டுக்கடங்காத ஆவேசத்தோடு.
“என்னடா ஆச்சு ஏன் இவ்ளோ கோபமா இருக்க?!”
“பேசாதடா. ச்சை நீ இவ்ளோ மோசமானவன்னு தெரியாம போயிடுச்சு. தெரிஞ்சிருந்தா உன்னை கல்யாணம் பண்ணவே விட்டிருக்க மாட்டேன். கல்யாணத்துக்கு உண்டான மரியாதை கொடுக்க முடியாத உனக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு..” என்றான் வெறுப்போடு.
“டேய் என்ன பிரச்சனைன்னு சொல்லாம உன் இஷ்டத்துக்கு பேசினா எப்படி? என்னன்னு சொல்லு மச்சான்”
“ரெண்டு வருஷம் வனவாசம் போனியே உன் சஞ்சு கிடைச்சுட்டாளா?”
“இல்லை..” என்று வேதனையோடு தலையசைத்தான்.
“நீ உன் காதல் முக்கியம்ன்னு கிளம்பிட்ட ஆனா உன்னால நயனி பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை. இப்படி கமிட்மென்ட் எடுக்க முடியாதுன்னா நீ தாலி கட்டி இருக்கவே கூடாது. ஆனால் தாலியும் கட்டிட்டு இரண்டு வருஷம் எங்கடா போய் தொலைச்ச?”
“எத்தனை முறை உன் நம்பருக்கு கால் பண்ணி இருப்பேன் தெரியுமா? பாவம் டா நயனி உன்னால இந்த நிலைக்கு ஆளாகி இருக்கா இதுக்கு காரணம் நீ மட்டும் தான்!”
“டேய் என்ன நடந்ததுன்னு சொல்லாம நான் தான் காரணம்னு சொன்னா என்ன அர்த்தம்?!”
“காரணம் சொன்னா நடந்ததை மாத்திடுவியா?! ப்ச் உன்னை நான் இந்த அளவுக்கு நினைக்கவே இல்ல மச்சான்.. பெண் பாவம் பொல்லாதது...”
“டேய் சும்மா பேசிட்டு இருக்காம என்ன நடந்தது என்று சொல்லு. சொன்னால் தானே எனக்கு புரியும்..”
“அதை நான் எப்படி டா சொல்ல?! எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது.. அதுவும் நயனிக்கு இப்படி நடந்திருக்க கூடாது, நயனிக்கு புருஷனா இல்லாட்டியும் நீ மனுஷனா இருந்தா பரவால்ல உன்கிட்ட சொல்லலாம் ஆனா ப்ச் போடா” என்று வெறுப்பை உமிழ்ந்துவிட்டு வெளியேறினான்.
சுதர்ஷன் செல்லவும் தன் நாற்காலியில் அமர்ந்த அபய் ஸ்ரீவத்ஸனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்.
‘என்ன நடந்தது’ என்று சொல்லாமலே பேசி விட்டு செல்பவனை வெறித்திருந்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் வீடு திரும்பியிருந்தான்.
அங்கே வந்த முரளிதரன் “எப்படி இருக்க மாப்பிள்ளை? என்னடா ஒரு வார்த்தை கூட சொல்லாம போயிட்ட?!”
“மாமா அதெல்லாம் இருக்கட்டும் நயனிகா எங்க? அவளுக்கு என்ன ஆச்சு?”
“யாருக்கு தெரியும். நீ எதுக்கு மாப்பிள்ளை இப்ப அவளை பத்தி விசாரிக்கிற?”
“காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும் என்ன நடந்தது என்று எனக்கு தெரியணும் சொல்ல போறீங்களா இல்லையா?” என்றான் உரத்த குரலில்.
“கண்ட கண்ட கழிசடைகளை பத்தி எல்லாம் நமக்கு எதுக்கு மாப்பிள்ளை?”
“மாமா என்ன பேசுறீங்க?” என்றதும் தான் தாமதம்,
“நிஜமா தான் மாப்பிள்ளை சொல்றேன் உன் விருப்பத்துக்கு மாறா அவசரப்பட்டு இந்த கல்யாணத்தில் நடத்தினது எவ்ளோ பெரிய தப்புன்னு மாமாவுக்கு புரிஞ்சுடுச்சு...”
“என்ன புரிஞ்சது..”
“அந்த பொண்ணோட லட்சணம் தான்டா....”
"மாமா...”
“பின்ன என்ன மாப்பிள்ளை, தகுதி தராதரம் பார்க்காம இப்படி அவசரத்துல அள்ளி தெளிச்சா அலங்கோலமா தான் போகும்ன்னு அந்த பொண்ணு உன் அப்பாவுக்கு புரிய வச்சுட்டா...”
“எதுவும் புரியற மாதிரி பேச மாட்டீங்களா?”
“சரி மாப்பிள்ளை உனக்கு புரியற மாதிரி உடைச்சு சொல்றேன் கேளு...” என்றவர்,
“புருஷன் போனதும் இன்னொருத்தனை தேடிக்கிட்ட அம்மாவுக்கு பிறந்தவ இப்படி இல்லன்னா தான் நாம் ஆச்சரியப்படனும்..”
“என்ன சொல்றீங்க?”
“நீ இல்லாத இந்த ரெண்டு வருஷத்துல அவ இன்னொருத்தனை தேடிகிட்டு போயிருக்கா மாப்பிள்ளை. பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் இருண்டு போயிடாது தானே?! காலேஜுக்கு போறேங்கிற பேருல இஷ்டத்துக்கு வரது போறதுன்னு இருந்தா...”
“மாமா...” என்றவனுக்கு அதிர்ச்சியில் வார்த்தை எழவில்லை.
“நாங்க அதை தட்டி கேட்டா எங்களையே மரியாதை இல்லாமல் எவ்ளோ பேச்சு பேசினா தெரியமா மாப்பிள்ளை. இதுக்கு உன் அப்பாவும் சப்போர்ட்டு ஆனா கடைசியில அவர் மூஞ்சியிலேயே கரியை பூசிட்டா”
“நாம மோசம் போயிட்டோம் மாப்பிள்ளை அந்த பொண்ண பத்தி முழுசா தெரியாம மோசம் போயிட்டோம்.. மாமாவாலே காலேஜ்ல தலை காட்ட முடியல” என்றபடி தன் கைபேசியை எடுத்து குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும் படி அவனிடம் சொல்ல வாங்கிப் பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியில் நிலைகுத்தி போயின.
பின்னே அவன் கண்ட காட்சியில் நயனிகா மற்றொரு ஆணோடு அந்தரங்க நிலையில் இருந்தாள். ஆண் என்பதை விட அவளிடம் படிக்கும் மாணவன் என்ற சொல் தான் பொருத்தமாக இருக்கும்.
அந்த மாணவனோடு உல்லாசமாக நயனிகா இருந்த வீடியோவை நம்ப முடியாமல் பார்த்திருந்தான் அபய் ஸ்ரீவத்ஸன்.
“புருஷன் இல்லனா கண்டுபடி ஊர் மேய சொல்லுமா? நம்ம மானமே போச்சுடா.. இவளை மாதிரி ஒருத்தி படிப்பு சொல்லி கொடுக்கிறதை ஏத்துக்க மாட்டோம்ன்னு காலேஜ்ல பெரிய ஸ்ட்ரைக்கே நடந்தது..”
"ரொம்ப பெரிய பிரச்சனை ஆயிடுச்சு டா.. மாமா மனசு ஒடிஞ்சு போயிட்டாரு அக்காவை பத்தி சொல்லவே வேண்டாம்... கெட்டதுலயும் ஒரு நல்லதுன்னு அந்த பொண்ணு வீட்டை விட்டு கிளம்பவும் கோவில் கோவிலா நன்றி சொல்லி இப்போ வேண்டுதலை நிறைவேற்றி கிட்டு இருக்காங்க” என்றதில் ஆடிப்போய் விட்டான் அபய்.
Last edited: