• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 18

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 18

நிவி கைகாட்டிய திசையில் ராஜ்குமாரின் பெற்றோரை பார்த்த ராம் குழம்பி நிற்க, "இவங்க தான் என் அம்மா அப்பா. ராஜ்குமார் என்னோட அண்ணா தான். அப்புறம்.." என நிவி இழுக்க, அதற்குள் அவளை குறுக்கிட்டு வந்தான் கௌதம்.

"போதும் நிவி, நான் சொல்லிக்கிறேன்" என்ற கௌதம் ராமை திரும்பிப் பார்க்க, அவனோ அதிர்ச்சியுடனே என்றான்

"ராம்! இந்த தப்பு எங்கே எப்படி நடந்ததுனு எனக்கு தெரியல. ஆனா உனக்கு எப்படி தெரியாம போச்சின்னு இப்ப எனக்கு சொல்ல முடியாது. ப்ளீஸ் தயவு செஞ்சு இத பெரிய பிரச்சனையா எடுத்துக்காத. நீ சொன்னதுதான்! ராஜ்குமார் பண்ணின தப்புக்கு நிவி என்ன செய்வா? ப்ளீஸ்டா புரிஞ்சுக்கோ"

கௌதம் அவ்வளவு கெஞ்ச, ராம் தலையில் கை வைத்து அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டான். சத்தியமாய் இப்போது அவனுக்கு என்ன முடிவெடுப்பது என்பது தெரியவில்லை.

"கௌதம், என்னடா நடக்குது? ஐ கான்ட் பிலீவ் எனிதிங்!" ராம் வேதனையுடன் சொல்ல,

"நீ இப்ப தேவையில்லாமல் டென்ஷன் ஆகுற ராம். சக்தி வெளியில தான் நிக்கிறாரு. நீ இந்த ரெண்டு கல்யாணமும் நடக்கும்னு சொன்னா, நான் அவரை போன் பண்ணி வரச் சொல்றேன். இல்ல அப்படின்னா எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு போகலாம். நீயே முடிவ சொல்லு" இவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என எண்ணிய கௌதம் மிரட்டவே செய்தான்.

திரும்பி நிவி முகத்தைப் பார்த்தான் ராம். எதற்கும் கலங்காத அவளே ராமின் முகத்தைப் பார்த்து கலங்கி நின்றாள். நிவியின் முகத்தில் தெரிந்த பயம், கலக்கம், இயலாமை அனைத்தும் ராமை இன்னும் சோர்வடைய செய்தது.

திரும்பி நந்தினியைப் பார்க்க, அவளோ கல் போல இறுகி இருந்தாள். அதன்பின் ராம் யோசிக்கவே இல்லை. "சக்திய வர சொல்லு கௌதம்" என்று சொல்ல, உடனே அழைத்து விட்டான் கௌதம் சக்திக்கு.

"ராம்! நானே சக்திகிட்ட பேசி சம்மதிக்க வைக்கிறேன். நீ போய் மேடையில் உட்காரு" என்று கௌதம் சொல்லிவிட, அவனும் அமைதியா எழுந்து மணமேடைக்கு சென்று விட்டான்.

சக்தி உள்ளே நுழையும்போதே ஆங்காங்கே கூட்டமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மண்டபம் முழுதும் கலவரமாய் இருந்தது. அவன் நேரே கௌதம் அருகில் சென்று நின்றான். "என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?" சக்தி முகத்திலும் பயம் தொற்றிகொண்டது

"ஆமா சக்தி! சின்ன ப்ராப்ளம். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" கௌதம் தன்மையாய் எடுத்துச் சொல்ல, சக்தியோ மணமேடையில் அமர்ந்திருக்கும் ராம் நிவியை ஒருமுறை பார்த்துவிட்டு, திரும்பி தனியாக முகத்தை குனிந்து அமர்ந்திருக்கும் நந்தினியை பார்த்தவாறு நின்றான்.

"உங்களுக்கு நந்தினியை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?" தன் காதில் கேட்ட கேள்வி சரிதானா என திடுக்கிட்டு கௌதமை பார்த்தான் சக்தி.

"சொல்லு சக்தி! நந்தினியை கல்யாணம் பண்ணிக்கிறியா?" எனக் கேட்ட கௌதம் அங்கு நடந்ததை சுருக்கமாய் சொல்ல, ஒரு இக்கட்டில் உதவுவது தப்பில்லைதான் ஆனால் தன் நிலை இப்போதும் மாறிவிடவில்லையே! இதை வைத்து நந்தினிக்கும் எனக்கும் பின்னால் பிரச்சினை வராது என்பது உறுதியில்லை என நொடியில் அவன் மனம் கணக்கிட, அதை எப்படி சொல்வது என தயங்கி நின்றான் சக்தி.

"சக்தி! இப்ப யோசிப்பதற்கு நேரமில்லை. உங்களுக்கு சம்மதம் இல்லைன்னா நீங்க அதை வெளிப்படையாக சொல்லிடலாம். இல்ல உங்க மனசுல வேற ஏதாவது?..." என்று கௌதம் இழுக்க,

"அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தான். நந்தினிக்கு சம்மதம்னா எனக்கு இதுல எந்த பிரச்சினையும் இல்லை" மனதில் ஏதேதோ நினைத்தாலும் வாய் தன்னால் சொல்லிவிட்டது.

அதன்பின் தான் அம்மாவிடம் கேட்கவில்லையே என தோன்ற "ஒரு நிமிஷம். அம்மாக்கிட்ட..." என சக்தி தொடங்கவுமே,

"அத்தைக்கு எல்லாம் தெரியும் சக்தி. அவங்க தான் உங்க நம்பர் தந்தாங்க" என கௌதம் சொல்லவும் சிறு நிம்மதியானது.

"சரி என்கூட வாங்க" என கௌதம் சக்தியை அழைத்து சென்று மாப்பிள்ளை கோலத்தில் கூட்டி வர, அங்கே செல்லம்மாவும் சகுந்தலாவும் அறையில் இருந்து வெளிவந்தனர்.

தன் மகனை திருமண கோலத்தில் பார்த்த செல்லம்மா உள்ளம் பூரித்து தான் போனார். அவனுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதை விட வேறென்ன சந்தோசம் இருந்து விட போகிறது?

இதோ கௌதம், சகுந்தலா இருவரும் பின்னே நிற்க, நந்தினி நாத்தனார் முடிச்சிட, மங்கள நாணை மங்கையவள் கழுத்தில் கட்டி நிவியை தன்னவளாய் உலகிற்கு காட்டினான் ராம்.

திருமணம் முடிந்து ஆசிர்வாதம் வாங்கிய புதுமணத் தம்பதி ஆசியுடன் சக்தி நந்தினி கழுத்தில் அந்த பொன்தாலியை இட்டு மனைவியாக்கி கொண்டான்.

அனைவருக்குமே நிறைவான மனது தான், சில அசம்பாவிதங்களுக்கு இடையில் எல்லாம் சுபமாய் நடந்த விதத்தில்.

ராம் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு மனநிலையில் இருந்தான். அது நிவி யார் என அறிந்து கொள்ளாத தனது முட்டாள் தனத்தினாலா? அல்லது சக்தி என புதிதாக ஒருவன் தன் குடும்பத்தில் இணைந்ததாலா? என அவனுக்கே தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் நிவி தன் மனைவி என்ற நினைப்பும், சக்தி மேல் இருந்த நல்ல மரியாதையும் அவனை வேறு எதையும் அதற்குமேல் சிந்திக்க விடவில்லை.

தயங்கி தயங்கி பயந்த முகத்தோடு நிவி பெற்றோர் மணமக்கள் அருகே வர, அதை பார்த்தும் பாராதது போல தான் இருந்தான் ராம். நிவிமேல் அவனுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறதோ அதில் துளி கூட அவள் பெற்றோர் மீது அவனுக்கு இல்லை.

இன்னொரு பெண்ணை அவன் விரும்புவது தெரிந்தே இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்ற எண்ணமே அவனுக்கு மேல் நின்றது. நிவியின் பெற்றோர் என்பதை அடுத்ததாக்கினான்.

இதுதான் ராம் என்பதை கௌதமை தவிர யாராலும் அறிய இயலாது. அவன் கோபக்காரன் தான். ஆனால் அதிகமாக கோபப்படுபவனில்லை. இதோ இவ்வளவு பெரிய பிரச்சனையில் கௌதம் இல்லையென்றால் என் தங்கை நிலை? என யோசித்த ராம் அதற்கு காரணமானவர்களை எப்படி மன்னித்து விடுவான்?

நிவி அருகில் இருக்கும் கணவனையும் தன்னை நோக்கி வரும் அன்னையையும் பார்த்தாள். அவளால் இப்போது ராமின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

அவன் நினைப்பது தவறில்லையே! எல்லாம் தெரிந்தே இந்த ஏற்பாட்டை செய்து இவ்வளவு இக்கட்டில் கொண்டு வந்தது அன்னை தானே? அதில் ராமிற்கு துணை நிற்க முடிவு செய்தாள்.

முறைப்படி திருமணம் முடிந்ததும் பெண் வீட்டிற்கு செல்வது தான் வழக்கம். அதற்கு கூப்பிட தான் தயங்கிக் கொண்டே அருகில் வந்தார் நிவி அன்னை.

"மாப்பிள்ளை..." என்று அழைத்து ஏதோ சொல்ல வரும்முன் நிவி, "ம்மா! நான் இப்ப என்னோட வீட்டுக்கு போறேன். என்னை ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வையுங்கள்" என்று அம்மா அப்பாவின் காலில் விழுந்துவிட, அவர்களால் எதுவும் சொல்ல முடியாமல் போயிற்று.

சகுந்தலாவும் மகனின் கோப முகத்தை பார்த்து கொண்டு தான் இருந்தார். அதனால் தான் ராமையும் நிவி தாய் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்க சொல்லலாம் என கௌதம் சகுந்தலாவிடம் கேட்டபோது "அவனிடம் இப்போது பேசும் தைரியம் உனக்கு இருந்தால் போய் சொல்லு" என்றுவிட கௌதம் அமைதியாகிவிட்டான். அது புலி குகைக்குள் தானே கைவிடுவது போல அல்லவா!.

ராம், நிவியின் செயலில் தன் மனதை அவள் புரிந்து செயல்படும் விதத்தில் ஏற்கனவே அவளிடம் உருகி போய் இருந்தவன் மேலும் உருகினான். கௌதம் சகுந்தலா மட்டுமே இந்த திருமணத்தில் பெரும் நிம்மதியில் இருந்தது.

சக்தி நந்தினியின் முகத்தை தாலி கட்டியபின் ஒரு நூறு முறையாவது திரும்பி பார்த்திருப்பான். ஆனால் அவள் ஒருமுறை கூட அவனை பார்க்கவில்லை. என்ன மனநிலையில் இருக்கிறாள் என்றும் தெரியவில்லை.

தனியே பேசினால் தான் உண்டு இனி வேறு வழி இல்லை என்பதால் அவனும் அவன் மனநிலையில் உழன்று கொண்டு தான் இருந்தான்.

"காங்கிராட்ஸ் மிஸ்ஸஸ் ராம்! அப்படியே ட்ரீம்ஸ்க்கு போயிடாம இந்த அண்ணன பத்தி உன் பிரண்ட்க்கு கொஞ்சம் எடுத்து சொல்லு. அங்க பாரு யாருக்கு வந்த விருந்தோனு தனியா உக்காந்துட்டு இருக்கு" பிரச்சனைகள் முடிந்து சற்று ஆசுவாசமடைந்த கௌதம் வாசுவை பார்த்துக் கொண்டே நிவியிடம் கூற, அருகில் சிரித்த வண்ணம் நின்றிருந்தான் ராம்.

"அதெப்படி அண்ணா! உங்களுக்கு தான் ரெக்கமன்டேஷன் புடிக்காதே" இனி உங்கள் சாமர்த்தியம் என்பதை அவளும் மறைமுகமாய் சொல்ல,

"அடிப்பாவி! உன் ரூட் க்ளியர் ஆனதும் கழட்டி விட்டுட்டியே" என நெஞ்சில் கை வைத்துக் கூறியவன் பின் நிவிக்கு சைகை காட்டிவிட்டு வாசு அருகே சென்றான்.

அனைவரும் மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்க, வாசு சற்று ஒதுங்கி தனியாய் வந்து அமர்ந்திருந்தாள்.

"என்ன மேடம்! பிரண்ட் கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாளே, இனி தனியா இருக்கணுமேனு பீல் பண்றிங்களா? நோ ப்ரோப்லேம். கௌதம் இருக்க பயமேன்" என கௌதம் வாசு முன் வந்து நிற்க, வேஷ்டி சட்டையில் அவ்வளவு பாந்தமாய் இருந்தவனை இரு நொடி வாசு ரசித்தது என்னவோ நிஜம் தான்.

உடனே முகத்தை மாற்றி கொண்டவள் "ஹெலோ! கல்யாண வீடாச்சேனு பாக்குறேன்"

"இல்லைனா?" குறும்புடன் அவன் கேட்க, இவ்வளவு நேரமும் இரண்டு கல்யாணங்களை அவ்வளவு கஷ்டப்பட்டு நடத்திய அதே கௌதம் தானா இப்படி தன் முன் விளையாடுவது என மீண்டும் அவன் முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ப்ப்ப்ப்பா! என்ன இவ்வளவு க்ரீனா சைட் அடிக்குற? அவ்வளவு நல்லா இருக்கேனா இந்த டிரஸ்ல?" கேட்டுவிட்டு அந்த கேள்விக்கு பொருத்தமாய நின்றவனை விட்டு பார்வையை அகற்றியவள் எழுந்து கொண்டாள்.

"நிஜமாவே கொஞ்ச நேரம் முன்ன இங்க நடந்ததை பார்த்தப்போ கல்யாணம் நடக்குமான்னு தான் எல்லாரும் யோசிச்சோம். நீங்க இல்லைனா இப்படி அவங்க சந்தோசமா இருக்க சான்ஸ்சே இல்ல. தேங்க் யூ சோ மச். வேற என்ன சொல்றதுன்னு தெரில" என்ற வாசு கைகாட்டிய திசையில் நிவியும் ராமும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

"நிவி எனக்கும் சிஸ்டர் தான். ராம் எனக்கு எல்லாமும் ஆனவன். இதுக்காக அதுவும் நீ, எனக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லக் கூடாது. உனக்கு சொல்லணும்னு தோணுச்சுனா நான் கேட்ட ஐ லவ் யூக்கு பதில் சொல்லு" என்றவன் அவள் கோபப்படும் முன் அங்கிருந்து ஓடிவிட்டான்.

வாசுவும் இவனை திருத்த முடியாது என நினைத்து கொண்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.

ராஜ்குமார் காதலை மறைத்த அவன் பெற்றோரையே ராம் மன்னிக்க தயாரில்லை எனும்போது மணமேடை வரை வந்தபின் அவனை அனுப்பிவைத்த நிவியை என்ன செய்ய போகிறான்?

தொடரும்..
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
646
ராம் நிவியை புரிந்து கொள்வான் என்றே தோன்றுகிறது.
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
ராம் நிவியை புரிந்து கொள்வான் என்றே தோன்றுகிறது.
கண்டிப்பா
 
Top