• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - 15 :

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu
தவிப்பு - 15 :



சிறிது நேரம் அமைதியாக இருந்த ரகுவீர் பின்னர் தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். அவன் கண்களை திறந்து பார்த்த போது கண்ணத்தில் கைவைத்தபடி அவன் எப்போது கண்களை திறப்பான் என்று காத்திருப்பவளை போல சங்கமித்ரா அவனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.



அதை பார்த்தவன் "சாரி... ஏதோதோ நியாபங்கள்... அதான் அமைதியாகிட்டேன்" என்றான்.



"புரியுது சார்" என்று அவள் கனிவுடன் சொன்னாள்.



அதன் பிறகு என்ன பேசுவதென்று அவனுக்கு தெரியவில்லை. அவனிடம் என்ன கேட்பதென்று அவளுக்கும் புரியவில்லை. ஆனால் அங்கு நிலவிய அமைதி இருவருக்குமே பிடிக்கவில்லை. எனவே அவனே மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.



"அதுசரி சங்கமித்ரா... எனக்கு ஒரு சந்தேகம் கேட்கவா?" என்று ரகுவீர் கேட்டான்.



அவன் குரலே ஏதோ ஏடாகூடமாக கேட்கப் போகிறான் என்று சொல்லாமல் சொல்லியது.



எனவே அவள் உஷாராக "கேளுங்க சார்... இந்த நாட்ல எல்லாருக்கும் பேச்சுரிமை இருக்கு... அதனால நீங்க என்ன வேணும்னாலும் பேசலாம்... கேட்கலாம்" என்றாள்.



"அதாவது எனக்கு கேட்க உரிமை இருக்குன்ற மாதிரி பதில் சொல்றதும் சொல்லாததும் உன்னோட உரிமைன்னு மறைமுகமா சொல்ற அப்படித்தானே?"



"அட கற்பூரம் மாதிரி கப்புன்னு பிடிச்சிக்கிட்டீங்களே... அதே அதே" என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.



"பெருசா எதுவும் இல்ல... என்னை மாதிரி ஒரு வயசு பையனோட யாருமில்லாத வீட்ல ஒரே அறையில தனியா இருக்க உனக்கு பயமா இல்லை?"



"இல்லையே... உண்மையை சொல்லணும்னா நீங்களும் இல்லைனா பேச ஆளில்லாம போர் அடிச்சிருக்கும்"



அவள் முகத்தை உற்றுப் பார்த்த ரகுவீர் "நான் எதை மீன் பண்றேன்னு உனக்கு நிஜமா புரியலை?"



"புரியாம என்ன? நீங்க என்மேல புலி மாதிரி பாஞ்சிடுவீங்களோன்னு எனக்கு பயமா இருக்குன்னு தானே கேட்கறீங்க... அதுக்கெல்லாம் வாய்ப்பில்லைனு தெரியும் போது எதுக்கு பயப்படணும்?"



"என்மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கையா?" என்று அவன் ஆர்வத்துடன் கேட்டான்.



அவனை ஓரக்கண்ணால் பார்த்தவள் "நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்றாள்.



அவள் சொன்னதை கேட்டு ஒருகணம் திகைத்தவன் "ஏய் என்ன சொன்ன" என்றபடி எழுந்தான்.



அதைப் பார்த்தவள் எழுந்து ஓட ஆரம்பித்தாள். அவனும் அவளை துரத்தினான்.



சிறிது நேரம் அந்த அறையை சுற்றி ஓடி விளையாடிய இருவரும் பின்னர் நின்று மூச்சுவாங்கியபடி ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.



சிரித்து முடித்ததும் "தேங்க்ஸ் சங்கமித்ரா... நான் இப்படி சிரித்து விளையாடி ரெண்டு வருஷம் ஆச்சு... இன்னைக்கு உன்னாலதான் நான் சிரிக்கிறேன்" என்றான்.



"தேங்க்ஸ் அக்ஸப்டெட்" என்றவள் பின்னர் சீரியஸான குரலில் "ஆனா ஒன்னு சார்... நீங்க இப்போ பழையபடி இலகுவாக நானோ, என் பேச்சோ காரணமில்லை. இவ்வளவு நாள் உங்களுக்கு இறுக்கத்தை ஏற்படுத்தின விஷயம் இப்போ முடிவுக்கு வந்திருக்கும்... அதனால தான் உங்களால என் பேச்சை, செய்கையை ரசிக்க முடியுது. இல்லைனா என் பேச்சு உங்களுக்கு எரிச்சலைத் தான் கொடுத்திருக்கும்" என்றாள்.



அவன் அதைப் பற்றி மேலும் பேச விரும்பவில்லை.



எனவே பேச்சை மாற்ற விரும்பி "சங்கமித்ரா எனக்கு தலைவலிக்கிற மாதிரி இருக்கு... ஒரு டீ போட்டு கொடுக்க முடியுமா?" என்று கேட்டான்.



'பேச்சை மாத்த வந்த தலைவலி போல' என்று நினைத்தவள் ஏதுமறியாதவள் போல "ஓகே" என்று சொல்லிவிட்டு டீ போட சென்றாள்.



அவள் பாலை சூடுபடுத்திக் கொண்டிருந்த நேரம் ரகுவீர் தன் போனை பொருத்தி அதை ஸ்விட்ச் ஆன் செய்ய முயன்று கொண்டிருந்தான். ஆனால் போன் ஸ்விட்ச் ஆன் ஆகவில்லை. எனவே அதை மீண்டும் கழற்றி துடைத்து சரிப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.



பாலை சூடுபடுத்திவிட்டு சங்கமித்ரா மேலே இருந்த அலமாரியை திறந்து முதலில் சர்க்கரை பாட்டிலை எடுத்தாள். பின்னர் டீத்தூளை எடுக்க முயன்றாள். ஆனால் அது சற்று உள்ளே தள்ளி இருந்ததால் இவள் கைக்கு கிட்டவில்லை. ரகுவீரிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்து திரும்பி பார்த்தால் அவன் போனோடு போராடிக் கொண்டிருந்தான்.



அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் எக்கி எக்கி டீத்தூளை எடுக்க முயன்றாள். ஒருவழியாக ஒரு குதித்து அதை எடுத்துவிட்டாள். ஆனால் அருகே இருந்த கோதுமை டப்பாவை அதனோடு சேர்த்து இழுத்துவிட்டாள். அதனால் கோதுமை இருந்த டப்பா அலமாரியில் இருந்து நேராக அவள் தலை மீது விழுந்தது.



சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த ரகுவீர் சங்கமித்ரா இருந்த கோலத்தை பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். ஏனென்றால் கோதுமை டப்பா அவள் தலைமீது விழுந்ததும் மூடி திறந்து மாவு அவள் தலை, முகம், உடல் முழுவதும் கொட்டியிருந்தது. அது சிறிய டப்பாவாக இருந்ததால் அவளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.



சிரித்தபடி எழுந்த ரகுவீர் "கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ சொன்னதை இப்போ நான் ஒத்துக்கிறேன். இப்போதான் நீ பார்க்க ரொம்ப அழகா இருக்க" என்றான்.



சங்கமித்ராவால் அவனுக்கு பதிலடி கொடுக்க முடியவில்லை. முகத்தின் மீது மாவு கொட்டியதால் அதில் சில துகள்கள் மூக்கில் ஏறி தொடர்ந்து தும்மிக் கொண்டிருந்தாள். மேலும் கண்களை கசக்கினாள்.



அதை பார்த்த ரகுவீர் வேகமாக அவளருகே சென்றவன் அவள் கையை பற்றி தடுத்தபடி "ஏய் லூசு கண்ணை கசக்காத..." என்றவன் அவள் கண்களை திறந்து வாயை குவித்து ஊதினான்.



இரண்டு, மூன்று முறை ஊதியவன் "இப்போ ஓகேவா" என்று கேட்டான்.



"முன்னைக்கு பரவாயில்ல... ஆனாலும் கண்ணை திறக்க கஷ்டமா இருக்கு"



"சரி வா" என்றவன் சமையலறையில் இருந்த சிங்கின் அருகே அவளை அழைத்துச் சென்று குழாயை திறந்தவன் "முகத்தை கழுவு... சரியாகிடும்" என்றான்.



அவன் சொன்னபடியே செய்தவள் குழாயை மூடிவிட்டு நிமிர்ந்து அவனை பார்த்து "தேங்க்ஸ் சார்" என்றாள்.



"அம்மா தாயே உன் தேங்க்ஸை நான் ஏத்துக்கறேன்... அதுக்காக நான் வீடியோ கால்ல இருக்கும் போது பின்னாடி பேய் மாதிரி வந்து நின்னு பயமுறுத்தாத... சரியா?" என்று நமுட்டுச் சிரிப்புடன் சொன்னான்.



அவனை முறைத்துப் பார்த்தவள் "என்னை பார்த்தா பேய் மாதிரி இருக்கா?" என்று இடுப்பில் கைவைத்தபடி கேட்டாள்.



"சங்கமித்ரா மாதிரி நானும் பொய் சொல்றது இல்லை" என்று அவன் தோளை குலுக்கியபடி சொன்னான்.



"என்னையா பேய்னு சொல்றீங்க... இருங்க உங்க கழுத்தை நெரிச்சி ரத்தத்தை குடிக்கிறேன்" என்றபடி தன் கைகளால் அவன் கழுத்தை நெரிப்பது போல சென்றவள் பால் பொங்கும் சத்தம் கேட்டு அடுப்பின் அருகே சென்றாள்.



பின்னர் வேகமாக டீயை போட்டவள் தனக்கும் அவனுக்கும் டீயை கோப்பையில் ஊற்றிக் கொண்டுவந்து அவனிடம் ஒரு கோப்பையை கொடுத்துவிட்டு "என்னை பேய்னு சொன்னதுக்கு பனிஷ்மெண்டா என்னோட டீயை குடிங்க சார்" என்றாள்.



அவள் கொடுத்த டீயை வாங்கிக் குடித்த ரகுவீர் "நீ பயமுறுத்தின அளவுக்கு உன்னோட டீ மோசமா இல்லை... அப்புறம் இப்போதான் நாம ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே அதனால நீ என்னை ரகுன்னே கூப்பிடு" என்றான்.



"ஓகே"



அவர்கள் இருவரும் டீயை குடித்து முடித்த நேரம் பிரேம் தன் காரில் அங்கு வந்தான்.



நேராக ரிகசெல் அறைக்கு சென்றவன் அங்கு யாருமில்லாததால் வெளியே வந்து "ரகு, ஆத்விக், சங்கமித்ரா எல்லாரும் எங்க இருக்கீங்க?" என்று குரல் கொடுத்தான்.



ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.



அவர்கள் அனைவரின் பெயரையும் சொல்லி கத்தியபடி அவன் அவர்களை தேடத் தொடங்கினான்.



பிரேமின் குரல் கேட்டதும் வேகமாக கதவருகே வந்த ரகுவீர் "பிரேம் நான் இங்க இருக்கேன்" என்று சொன்னவன் கதவை வேகமாக தட்டத் தொடங்கினான்.



சத்தம் கேட்டு சமையலறையை நோக்கி சென்ற பிரேம் கதவு வெளிப்புறம் பூட்டப்பட்டிருப்பதை பார்த்தவன் வேகமாக கதவைத் திறந்தான்.



அவன் கதவை திறந்ததும் வெளியே வந்த ரகுவீரை பார்த்து "யாரு மச்சான் உன்னை கிச்சன்ல வச்சி பூட்டினது?" என்று கேட்டான்.



"எல்லாம் அவனோட வேலைதான்... அதுசரி நீ எங்க போன? எவ்ளோ நேரம் உன்னை கூப்பிட்டேன் தெரியுமா?"



"கம்பெனியில ஒரு சின்ன பிரச்சனை... அதை சால்வ் பண்ணிட்டு வந்துடறேன்னு அவன்கிட்ட சொல்லிட்டு தான் போனேன்... அதுசரி நீ எனக்கு போன் பண்ண வேண்டியதுதானே... நான் உடனே வந்துருப்பேன் இல்ல"



"என் போனை தான் இவ உடைச்சிட்டாளே" என்றபடி ரகுவீர் உள்ளே கைகாட்டிய பிறகே பிரேம் சங்கமித்ராவும் உள்ளே இருப்பதை கவனித்தான்.



அவள் இருந்த கோலத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.



சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு ரகுவீரை பார்த்தவன் "இவளையும் உன்கூட சேர்த்து வச்சி பூட்டிட்டு போய்ட்டானா?" என்றான்.



"ஆமா... நான் இவளை பார்த்தாலே கடுப்பாகறேன் இல்ல... அதான் அவன் இப்படி பண்ணியிருக்கான்..." என்று ரகுவீர் கோபமாக சொன்னான்.



"சரி விடு மச்சான்... விளையாட்டுக்காக பண்ணியிருப்பான்" என்று பிரேம் அவனை சமாதானம் செய்தான்.



"எதெதில விளையாடணும்னு ஒரு அளவு இருக்குடா... ஒருவேளை இந்த விஷயம் நாளைக்கு வெளியில தெரிந்தா ஒரு பொண்ணா இவளுக்குத் தானே பாதிப்பு அதிகம்... இதையெல்லாம் அவன் யோசிச்சிருக்க வேண்டாமா?"



"சரி விடு... நீ கோபப்படாத..." என்று ரகுவீரிடம் சொன்னவன் பின்னர் சங்கமித்ராவை பார்த்து "ஆத்விக் இப்படி பண்ணதுக்கு நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன்" என்றான்.



"அவன் பண்ணதுக்கு அவன்தான் சாரி கேட்கணும்... நீங்க இல்லை"



"ப்ளீஸ் அவனை தப்பா நினைக்காதீங்க... அவனுக்கு கொஞ்சம் விளையாட்டுத்தனம் அதிகம்... அதான் இப்படி பண்ணிட்டான்"



"அவன் என்னோட ப்ரெண்ட்... என்கூட விளையாட அவனுக்கு ரைட்ஸ் இருக்கு... என்ன என்னை ஒரு சிங்கத்தோட அடைச்சு வச்சிட்டான்... அது என்னை எப்போ கடிச்சு தின்னுடுமோன்னு நான் உயிரை கையில புடிச்சிட்டு இருந்தேன்" என்று அவள் சொன்னதும்



அவள் காதை பிடித்து திருகிய ரகுவீர் "யாரு நீ உயிரை கையில பிடிச்சிக்கிட்டு இருந்தியா?" என்றான்.



"பின்ன இல்லையா?" என்றவள் "விடு ரகு... காது வலிக்குது" என்று சிணுங்கினாள்.



அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை பார்த்து திகைத்த பிரேம் "மச்சான் நீங்க ரெண்டு பேருமா இப்படி பேசிக்கிறீங்க?" என்றான்.



சங்கமித்ராவின் காதில் எடுத்து கையை எடுத்தவன் "நாங்க இப்போ ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம் மச்சான்" என்றான்.



"ரொம்ப சந்தோசம்டா... சரி வாங்க... இனி எங்க மியூசிக் கம்போஸ் பண்ண? நாளைக்கு வந்து வேலையை ஸ்டார்ட் பண்ணலாம்" என்ற பிரேம் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.



பிரேம் சங்கமித்ராவை அவள் வீட்டில் இறக்கி விட்டதும் குளித்துவிட்டு வீட்டை விட்டு கிளப்பியவள் நேரே சென்று நின்றது ஆத்விக்கின் முன்பு தான்.



புயலை போல அவன் அறைக்குள் நுழைந்தவள் "நான் உன்னை என் பிரெண்டுன்னு நினைச்சேன் ஆத்விக்... ஆனா நீ என்னை அப்படி நினைக்கலைன்னு எனக்கு இப்போதான் புரிஞ்சிது... நீ ரகுவீரை வெறுப்பேத்த தான் என்னை யூஸ் பண்ணியிருக்க அப்படித்தானே... இல்லைனா ஒரே ரூம்ல என்னை அவனோட அடைச்சு வச்சிருப்பியா?" என்று கோபமாக கேட்டாள்.



"இங்க பார்... நான் விளையாட்டுக்காக தான் அப்படி பண்ணேன்... மத்தபடி நீ நினைக்கிற மாதிரி எதுவுமில்ல"



"என்னது விளையாட்டுக்கா? என் வாழ்க்கை உனக்கு விளையாட்டா போச்சா? ஒருவேளை அந்த ரகு என்னை ஏதாவது பண்ணியிருந்தா என்னாகிறது?"



அவள் அதை சொல்லிக் கூட முடிக்கவில்லை.



தனக்கு முன்பிருந்த மேஜையின் மீது கைகளால் வேகமாக அடித்தவன் "ஷட் அப்... ஜஸ்ட் ஷட் அப்... ரகுவை பத்தி நீ ஒரு வார்த்தை தப்பா பேசக் கூடாது" என்று உறுமினான்.