பழச்சாறு எடுத்துக்கொண்டு சென்ற அம்பரிக்கு சுப்பம்மா சொன்னது புதிதாக இருந்தது.. அவளது தந்தை நித்யமூர்த்தி எப்போதும் சைவம் தான்.. எப்போதாவது அரிதாக முட்டை சாப்பிடுவார்.. ஆனால் கீர்த்திவாசன் அசைவப் பிரியன்.. அவன் விடுமுறையில் வந்தாலே அத்தை விதவிதமாக கோழி மீன் நண்டு என்று சாப்பிடக்கூடிய அசைவ வகைகள் எல்லாம் சமைக்க சொல்லுவார்.. இன்றைக்கு அவன் சைவம் சாப்பிடுகிறானாமே? நம்பமுடியவில்லை. யோசனையுடன் அலுவலக அறையை அடைந்து கதவை தட்டப் போனவள்.. பேச்சு சத்தம் மிகவும் தாழ்ந்த குரலில் ஏதோ ரகசியம் பேசுவது போல கேட்கவும்.. நிதானித்தாள்..
"ப்ளீஸ் மாமா அந்த நினைப்பை மட்டும் விட்டுவிடுங்கள். இப்போது நான் சொன்னது போல சீக்கிரம் ஏதாவது ஏற்பாடு செய்யப் பாருங்க... கடவுள் புண்ணியம், அம்மா கண் முழிச்சுட்டாங்க.. ஆனால் அவங்க அதிக நாள் உயிர் வாழ்வாங்க என்று அங்கிள் உத்தரவாதம் ஏதும் தரவில்லை. என் கல்யாணம் நடந்தால் அந்த மகிழ்ச்சியில் மாதக் கணக்கில் வாழவைக்க முடியும் என்றுதான் சொன்னார்.. அதற்காக எந்த பெண்ணோட வாழ்க்கையையும் நான் பாழாக்க தயாராக இல்லை மாமா" கீர்த்திவாசன் தாழ்ந்த குரலில் அழுத்தமாக சொல்லிக்கொண்டிருந்தான்.
"அட, ஒரே அதிசயமாக இருக்கிறது..? துரை என்ன திடீரென்று இத்தனை உத்தமனாக மாறிவிட்டான்?என்று ஆச்சர்யத்துடன் அவள் நினைக்க.. தொடர்ந்து தந்தையின் குரல் தாழ்ந்தே இருந்தாலும் சற்று தெளிவாக ஒலித்தது..
"தம்பி டாக்டர் சொல்றது நல்ல யோசனை.. அவர் முடிக்குமுன்பாக கீர்த்தி குறுக்கிட்டான்..
"மாமா உங்களுக்கே அது நியாயமாக தெரிகிறதா? நீங்களாவது சற்று யோசித்து, நடக்ககூடியதாக பேசுங்களேன், அங்கிளுக்கு என்ன அவர்பாட்டில் சொல்லிவிட்டு போய்விடுவார்.. அவருடைய நோயாளியை எப்படி பிழைக்க வைப்பது என்ற கோணத்தில் பார்த்து ..எளிதாக இருக்கிற வழியை சொல்லியிருக்கிறார்.. அது உங்களை பொருத்தவரை ஒருவகையில் சரியாக இருந்தாலும்.. எனக்கு கொஞ்சமும் சரியாகப்படவில்லை மாமா..
என்றபோது குரலில் .. வேதனை வருத்தம் போன்று எதுவோ இருந்து அம்பரியை லேசாக பாதித்தது..
"தம்பி அவர் சொல்லி எனக்கு இந்த யோசனை தோன்றியதே என்று குன்றலாக இருக்கிறது. நியாயமாக நானே இதை யோசித்திருக்க வேண்டும்.. அத்தோடு நீ சொல்லும் ஏற்பாட்டிற்கு எத்தனையோ மலிவான பெண்கள் வரக்கூடும் என்பது உண்மை தான். ஆனால் அதன் பிறகு அவர்கள் உன்னை அட்டையாக உரிஞ்சி விடுவதோடு உன் வாழ்வு நரமாகிப் போகும்? அப்படி ஒரு நரகத்தில் உன்னை நானே எப்படி தள்ளுவேன்.. அத்தோடு நேற்று வரை பிடிவாதமாக இருந்துவிட்டு,உன் இந்த திடீர் மாற்றத்தை அக்கா எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்கு கவலையா இருக்கு தம்பி ... ஆனால் நாங்கள் சொல்கிற ஏற்பாட்டில் யாருக்கும் துளியும் சந்தேகம் வராது.. முக்கியமாக அக்காவுக்கு.. அவங்க ரொம்பவே சந்தோஷமும் படுவாங்க.."
அவர் சொல்வது சரி என்பது கீர்த்திவாசனுக்கு தெரியும்.. ஆனால் அவரது கூற்றை ஒத்துக்கொள்வது அவனுக்கு உசிதமாகப் படவில்லை.. எப்படி அவரை தன் வழியில் சம்மதிக்க வைப்பது என்று அவன் தீவிரமாக யோசிக்க..
அப்பாவும் அவனும் பேசிக்கொண்டது எதுவும் அவளுக்கு விளங்காத போதும் அந்த இடைவெளியில் கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ளே சென்றாள் அம்பரி..
அவளைப் பார்த்ததும் கீர்த்திவாசன் அவசரமாக பார்வையை விலக்கிக் கொண்டான்..
"வாம்மா அம்பரி... ஏன் நீ கொண்டு வர்றே.. மாரி எங்கே? என்றார்..
"மாரி, வெளியே அண்ணிங்களோட போயிருக்காளாம்.. ஏன் அப்பா, நான் கொண்டு வந்தால் என்னப்பா?" என்றவாறு ட்ரேயை மேசை மீது வைத்துவிட்டு.. நகரப் போனவளிடம்..
"அதனால் ஒன்றுமில்லை அம்பரி, என்று தொடர்ந்து ஏதோ சொல்ல வந்த மாமனின் கையை கீர்த்திவாசன் சட்டென்று பற்றிக்கொண்டு, அவரை நேராக பார்க்கவும், அதே நேரம் அறையின் கதவை தட்டி,"அம்பரி சீக்கிரம் வாம்மா.. சுப்பம்மா கூப்பிடுது" என்று ராமாயி குரல் கொடுக்கவும்.. சரியாக இருந்து.
"அம்பரி, பதிலளிக்குமுன்," சரி,சரி நீ போ ராமாயி. அவள் இப்ப வந்துருவா.. என்ற கீர்த்திவாசன் "நீ போ அம்பரி, எங்கேயும் வெளியே போவதானால் மாமாக்கிட்டே இல்லைன்னா சுப்பம்மாக்கிட்டே சொல்லிட்டு போ" என்றான்.
தந்தையிடம் ஒரு தலையசைப்போடு அம்பரி வெளியேறினாள்.. அப்பாவும் மகளும் பேசுவதில் இவன் எப்படி தலையிடலாம்? நாட்டாமை அதிகாரம் தூள் பறக்கிறதே? துரைக்கு எப்போதிலிருந்து அவள் மீது இத்தனை அக்கறை? இதற்கு முன் அவள் அவனிடம் அதிகம் பேசியதுகூட கிடையாது.. இன்று என்னவோ பல காலம் பழகியவன் மாதிரி எத்தனை இயல்பாக பேசுகிறான். நானும் அவன் சொன்னதும் கிளம்பி வந்துவிட்டேனே.. அப்பா என்ன நினைப்பார்? என்று எண்ணுகையில் உள்ளூர தன் மீதே கோபம் வந்தது..
நேராக சமையல் அறைக்கு சென்றபோதும் அவர்கள் பேசியது மீண்டும் நினைவில் ஓடியது.. இரண்டு பேருக்கு சரியாக தெரிகிற விஷயம் அவனுக்கு சரியாக வராது என்று ஏன் தோன்றுகிறது? பெண்கள் பற்றி பேசினார்கள்.. அப்பா ஏதோ மலிவான பெண்கள் என்றார்.. எதற்காக இப்போது பெண்களை பற்றிய பேச்சு? அதுவும் அத்தை இருக்கும் நிலைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல்.. இதில் அவளை வேறு சம்பந்தப்படுத்துகிறார்கள்.. அது என்ன விஷயம்? யாரிடம் , எப்படி தெரிந்து கொள்வது என்று யோசித்தபோது டாக்டர் அவளை வீட்டிற்கு அழைத்தது நினைவு வந்தது.
"கண்ணு, மதியம் சாப்பிட புலாவ்,மீன் வறுவல், மீன் குழம்பு , அப்புறம் உனக்கு பிடிக்கும்னு காலையில் அவங்களுக்கு செய்ததில் கொஞ்சம் சிக்கனும் எடுத்து வச்சிருக்கேன், ஏதாவது ஒரு இனிப்பு செய்றது வழக்கம் தானே? அதை உன்கிட்டே கேட்டு செய்ய சொல்லுச்சு தம்பி.. என்ன செய்யட்டும் கண்ணு, இப்பவே சொன்னாத்தான் செய்ய வசதிப்படும்"
அம்பரிக்கு எல்லாம் வினோதமாகத்தான் தோன்றியது. ஆயினும், காட்டிக்கொள்ளாது "பால் பாயாசம், செய்யலாம்.. நீங்க சொல்லி கொடுங்க,நான் வேண்டுமானால் செய்யவா?
"அட, அதெல்லாம் வேணாம்மா, பால் பாயாசம் தானே செய்துடுறேன்.. நீ இந்த ஜுசு குடிம்மா" என்று தன் வேலையை பார்க்க சென்றாள் சுப்பம்மா.
அதை மறுத்துவிட்டு, சுப்பம்மாவிடம் தான் வெளியே செல்லும் விவரம் தெரிவித்து அவுட்ஹவுஸ் சென்றாள். டாக்டர் வீட்டிற்கு இருபது நிமிடங்கள் நடக்க வேண்டும்.. வேகமாய் நடப்பதற்கு சுடிதார் தான் வசதி, என்று ஒரு சுடிதாரை உடுத்திக்கொண்டு கிளம்பிவிட்டாள். சுற்றிலும் பார்த்தவாறு நடந்தாள்..
❤
தேனி பக்கத்தில் அது ஒரு சின்ன விவசாய கிராமம். சுற்றிலும் வயல்வெளி. எங்கே திரும்பினாலும் தென்னந்தோப்பும், மாந்தோப்பும், வாழைத் தோட்டமுமாக... பசுமை பட்டாடையுடன் காட்சியளிக்கும்.. ஒருபுறம் அங்கே பல வண்ணங்களும் வாசனைகளும் கொண்ட மலர் தோட்டமும் உண்டு. அவை பார்க்க பார்க்க கண்கொள்ளா காட்சி தான்... மழைக்காலம் என்பதால் காற்றில் குளிர்ச்சி இருந்தது. வெயில் இல்லாமல் மந்தாரமாக எந்த நேரத்திலும் மழை பெய்யலாம் என்பதை உணர்த்தியது.. ஷால் எடுத்து வராதது அப்போது தான் புரிந்தது.. ஆனால் இப்போது அவ்வளவு தூரம் திரும்பிப்போய் எடுத்து வரவும் விருப்பமில்லை.
டாக்டர் கமலக்கண்ணன் தேனியில் பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறார். கிராமத்து ஏழை ஜனக்களுக்காக இங்கும் வீட்டோடு கிளினிக் வைத்திருக்கிறார். அவரது மகளுக்கு கீர்த்திவாசன் வயது இருக்கும். அவளும் டாக்டர் தான். அவள் கணவனோடு வெளிநாட்டில் வசிக்கிறாள். தந்தையையும் அழைத்துக் கொண்டு இருந்தாள். அவருக்கு அந்த கிராமத்தையும் இங்குள்ள மக்களையும் விட்டுச் செல்ல மனமில்லை.
டாக்டர் வீட்டை அடைந்த போது மணிமாலா மாடியில் இருந்து துணிகளை எடுத்துக்கொண்டு இறங்கி வந்தாள்.
"ஹே .. அம்பரி, வா வா.. எப்படி இருக்கிறே?
"நல்லா இருக்கிறேன் ஆன்ட்டி.. நீங்க எப்படி இருக்கீங்க. உங்க பொண்ணு பேரன் எல்லோரும் நல்லா இருக்காங்களா??"
"எல்லோரும் சுகம். அங்கிள் சொன்னார் நீ வருவேன்னு.. ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவேனு நினைக்கலை.. சரி நீ முதலில் உள்ளே வந்து உட்கார். நான் துணிகளை வச்சிட்டு வந்திடுறேன்.. என்று அழைத்து போய் உட்கார செய்துவிட்டு உள்ளறைக்குள் சென்றாள் மணிமாலா.
சில கணங்களில் திரும்பி வந்து அவள் எதிரே அமர்ந்தபடி," என்ன சாப்பிடுறே ? காபியா டீயா? என்றாள்.
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ஆன்ட்டி. இப்பத்தான் டிபன் சாப்பிட்டு வர்றேன். உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சே.. அதான் வந்தேன்."
"நீ வந்தது தெரிந்தால் அக்கா ரொம்ப சந்தோஷப்படுவாங்க அம்பரி. ஆமாம் அங்கிள் சாப்பிட்டுட்டு இருக்கிறப்போ நர்ஸ் போன் பண்ணினாளே.. அத்தைக்கு உணர்வு திரும்பிடுச்சா? இப்ப எப்படி இருக்காங்க? என்று விசாரித்தாள்.
"இப்போதைக்கு பிரச்சினை இல்லைனு அங்கிள் சொன்னாங்க..ஆனால்
.ஆனால் அத்தை அதிக நாள் இருக்க மாட்டாங்கனு.. என்று சொல்லும்போதே கண்கள் கலங்கி குரல் தழுதழுத்துவிட்டது..
அவளது கையைப் பற்றி தட்டிக் கொடுத்த மணிமாலா, "அப்படி எல்லாம் ஆகாது அம்பரி.. கடவுள் கைவிடமாட்டார். அக்காவுக்கு மனசுல ஒரு குறை இருக்கு.. அதை நிவர்த்தி பண்ணினால் நிச்சயம் அத்தை சீக்கிரம் குணமாகிடுவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏன் உன்னோட அங்கிளுக்கும் கூட அதே நம்பிக்கை தான். நாலு நாளைக்கு முன்னாடி மூச்சு பேச்சு இல்லாமல் படுத்தவங்கதான்.. பொண்ணுங்க வந்தப்புறமும் கண் முழிக்கலை.. மதுரையில் இருந்து வேலூரில் இருந்து எல்லாம் டாக்டர்கள் வந்து பார்த்துட்டு நாள் கணக்கில் தான் அவங்க ஆயுள் னு.. எந்த நிமிஷமும் என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை என்று கைவிரிச்சுட்டாங்க.. அவர்களும்கூட மனது சார்ந்த பிரச்சினை என்பதால் கடைசி முயற்சியாக அவங்க ஆசையை நிறைவேற்றப் பாருங்கனு.. தான் சொன்னாங்க. ஏன்னா அக்கா உடம்பில் ஒரு குறையும் இல்லை.. மனதில் தான் ஏதோ வருத்தம்..
"என்ன சொல்றீங்க ஆன்ட்டி? அத்தைக்கு அப்படி என்ன மனசுல குறை? என்றபோதே அவளது குரல் தாழ்ந்து போயிற்று.. தொடர்ந்து. ம்ம்.. இப்படி ஒரு பிள்ளை இருந்தால் எந்த அம்மாவால் தான் நிம்மதியாக இருக்க முடியும்" என்றாள் முணுமுணுப்பாய் ..
ஆனால் அது தெளிவாக மணிமாலாவின் காதில் விழுந்தது. அவளை ஒருகணம் விசித்திரமாக பார்த்துவிட்டு, "அம்பரி நீ கீர்த்தியோட பழைய குணத்தை பத்தி பேசறேன்னு நினைக்கிறேன்" என்று நிறுத்தினாள்.
"பழைய குணமா? இந்த ஆன்ட்டி என்ன சொல்கிறாள் என்று புரியாமல் நோக்கினாள் அம்பரி.
"நிஜமாதான் சொல்றேன் மா. அவன் முன்னைப்போல இல்லை.. ஊருக்குள் போய் பார்த்தியா? பத்தாவது வரைக்கும் படிக்கிறாப்ல பள்ளி வந்துவிட்டது.. அரசு சுகாதார மருத்துவமனை, இப்ப உன் அங்கிள் அங்கேதான் போயிருக்கார்.. இப்படி எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று உனக்கு தெரிய வரும்... எல்லாவற்றிற்கும் காரணம் அவன்தான்.. அக்காவுக்கு அவன் மேல் முன்னாடி இருந்த வருத்தமெல்லாம் இப்ப துளியும் இல்லை. இப்ப இருக்கிற ஒரே கவலை அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமாக இருக்கிறது தான்.. நானும் அங்கிளும் கூட பேசி பார்த்தோம்.. அவன் தன்னோட வாழ்க்கையில் அதற்கு இடமே இல்லைனு சொல்லிவிட்டான்.. ஒரு வாரத்திற்கு முந்தி அவனோட 29 வது பிறந்தநாள் வந்தப்போ எங்களையும் வச்சுட்டு தான் அக்கா அவன்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசினாங்க.. என்று சொல்லிக்கொண்டே வந்தவள், "கொஞ்சம் இரு அம்பரி" என்று பேச்சை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்..
கீர்த்திவாசன் மாறிவிட்டானா? இது எப்போது நடந்தது? அம்பரிக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததோடு.. நம்புவதற்கு கடினமாகவும் இருந்தது. அவளிடம் யாருமே ஏன் அத்தைகூட சொல்லவில்லையே எப்படி மாறினான் ..என்று அவள் யோசிக்கும் போதுதான்.. மூன்று ஆண்களும் பேசிக்கொண்டது எதைப் பற்றி என்று விளங்க.. புதிராக இருந்தது எல்லாம் இப்போது தெளிவாக புரியத் தொடங்க.. அம்பரி அப்படியே அசைவற்றுப் போனாள்..