• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! 13

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
எந்தன் ஜீவன் நீயடி.. ! - 13

ஈஸ்வரியும் ,சங்கரியும், கோபத்துடன் சென்றதை பார்த்த நித்யமூர்த்தி, மனம் கலங்க நின்றிருந்தார். முன்னைப் போல அவரால் திடமாக எதையும் ஒதுக்க முடியவில்லை. ஆறு மாதங்களுக்கு முன் மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்தது முதல் அவரது மனதில் மகளின் எதிர்காலம் குறித்து கவலை தான் அதிகம். வீட்டில் அட்டாக் வந்தது பற்றி அவர் தெரியப்படுத்தவில்லை. வீணாக, எல்லோரையும் கலங்க வைப்பானேன் என்று நினைத்து மறைத்துவிட்டார். இப்போது ஏதோ ஒரு வகையில் அந்த கவலையும் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், சற்று நிம்மதியாக இருந்தார். ஆனால் இந்த கல்யாணத்தில் தடை ஏதும் நேர்ந்து விடுமோ என்று லேசாக பயம் வந்திருந்தது. என்னதான் கீர்த்திவாசன் தைரியம் சொல்லியிருந்தாலும், அவருக்கு உள்ளூர பதற்றமாகத்தான் இருந்தது..ஆகவே மேலும் அங்கே இருந்தால் தனக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்ற அச்சம் உண்டாக, வீட்டிற்கு சென்றார்..

அம்பரியும், கீர்த்தியும் அப்போதுதான் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

தந்தையின் முகத்தை பார்த்தவள்," நீங்க போய் காரில் இருங்க நான் வர்றேன்" என்று அவனை அனுப்பிவிட்டு,"என்னாச்சு அப்பா? உடம்பு சரியில்லையா? என்றாள் கவைலயுடன்..

"அதெல்லாம் ஏதும் இல்லைமா.. நீங்க போய் வாங்க, அக்காவுக்கு உடம்புக்கு முடியாமப் போனதுல இருந்து எனக்கு சரியான தூக்கம் இல்லையா.. அதான் லேசாக சோர்வா இருக்கு. கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்தா எல்லாம் சரியாகிடும், நிறைய கல்யாண வேலை இருக்கு" என்றார் சிறு புன்னகையுடன..

அம்பரிக்கு தான் காண்பது கனவா நனவா என்று ஒருகணம் பிரமிப்பாக இருந்தது.. முன்னர் தந்தையிடம் இப்படி கேட்டால் அவர் வழக்கமாக சற்று கடுப்பாக ,"ஒரு மண்ணும் இல்லை.. ஏதாவது நீயா கற்பனை பண்ணிக்காதே என்றுவிட்டு உடனே இடத்தைவிட்டு போயவிடுவார்..இன்றைக்கு ஹூம், அப்பா ரொம்பத்தான் மாறிவிட்டார்.. ஆனாலும் மனதுக்கு சற்று இதமாக இருந்தது..

"சரி, அப்பா, உடம்பை பார்த்துக்கோங்க, நாங்க போய் வரறோம்" என்று வெளியேறினாள் அம்பரி.

அங்கே அதே நேரம் ஒரு அறையில்,ஜெயந்தனும்,
சுகந்தனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

"அண்ணே கீர்த்தி ரொம்பவே மாறிட்டான் இல்ல?"

"ஆமா சுகன், நல்ல மாற்றம்.. அவன் வாழ்க்கையில் செட்டிலாகப் போறான். எனக்கு இப்பத்தான் நிம்மதியாக இருக்கு. ஆனால் இவளுங்க அவனை நிம்மதியா இருக்க விடமாட்டாளுங்க போல இருக்குதே.. என்றார் ஜெயந்தன் கவலையுடன்..

"அண்ணே , அவங்களை நான் பார்த்துக்கிறேன்.. நீங்க என்கூட சேர்ந்து நான் சொல்றதுக்கு ஆமாம் போடுங்க போதும்" என்றார் சுகந்தன்.

"உன் அண்ணியை கட்டினப்பிறகு அதைத்தானே சொல்றேன் தம்பி, " என்றபோது, சகோதரிகள் இருவரும் உள்ளே நுழைந்து வேகமாக கதவை மூடிவிட்டு பொரிய ஆரம்பித்தனர்..

"இந்த மூர்த்தி மாமாவுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் பார்த்தீங்களா? நேத்து நாங்க தம்பிக்கு பொண்ணு பார்த்திருக்கிற விசயத்தை சொன்னோம். அப்போ அவர் அம்பரிக்கும் கீர்த்திக்கும் கலயாணம் முடிவான விசயத்தை பத்தி மூச்சு விடலை.. ஆனா எங்க விசயத்தை தம்பிக்கிட்டே சொல்லிட்டார். அவன் எதுவுமே தெரியாத மாதிரி ,எங்களை பேச விடாம கல்யாண விபரத்தை அறிவிக்கிறான்.. ஈஸ்வரி

"இப்ப என்னடான்னா கல்யாண வேலையில் நம்மளை கலந்துக்க வேண்டாம்னு சொல்லிட்டு, அந்த மூனாவது மனுஷி டாக்டர் சம்சாரத்துக்கிட்டே பொறுப்புகளை கொடுக்கிறான்.. நமக்கு எந்த அளவுக்கு மரியாதைனு பார்த்தீங்களா ?"_சங்கரி

"இரண்டு பேரும் இப்படி உட்காருங்க, நான் சொல்றதை முதல்ல கேளுங்க.. என்று சுகந்தன் சொல்லவும், வேண்டா வெறுப்பாக ஆளுக்கு ஒரு சோபாக்களில் அமர்ந்தனர்..

" கல்யாண வேலையை, மாலா மேடம்கிட்டே கொடுத்தது சரிதான்.. கொஞ்சம் கோபப்படாம கேளுங்க, நீங்க இந்த ஊரில் பிறந்திருந்தாலும், எங்கே என்ன கிடைக்கும்னு ஏதாவது தெரியுமா? தெரியாதுல்ல? அதுவும் இரண்டு நாளில் சகல ஏற்பாடுகளையும் உங்களால செய்ய முடியுமா? சோ, கீர்த்தி செய்தது சரிதான். அடுத்தது, மூர்த்தி மாமா என்ன தப்பு பண்ணினார்? அவர்கிட்டே நீங்க சொன்னதை மச்சான்கிட்டே சொன்னார் தானே? அவன் ஏற்கனவே அம்பரிகிட்டே ஃபிக்ஸ் ஆயிட்டான்.. இப்ப நீங்க இரண்டு பேரும் பொண்ணுங்களை பத்தி சொல்லி,அதை அவன் மறுத்திருந்தா யாருக்கு அசிங்கம்? நமக்குதானே? சோ, அது நடக்காம தப்பிச்சீங்க.. எந்த விதத்திலும் அவன் நம்ம சொல்றதை இப்ப கேட்கிற நிலையில் இல்லை.. காரணம் அத்தையோட உடல்நிலை அப்படி.. அதுக்கு என்ன தீர்வோ அதைத்தான் அவன் சீக்கிரமாக செய்ய வழி தேடுவான்! இதுல உங்க இரண்டு பேருக்கும் என்ன பாதகம்சொல்லுங்க? வெளிநாட்டுல அவன் கூத்தடிச்சுட்டு சீரழியாம, கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கையை அர்த்தமாக்க போறான்னு சந்தோஷப்படுங்க"என்று நிறுத்தினார்..

"இன்னொரு விஷயம் நான் சொல்றேன், என்று ஜெயந்தன் தொடர்ந்தார் "வெளியில் இருந்து எவளோ வந்திருந்தா தான் கவலைப்படணும்.. அம்பரி நம்ம உறவுக்காரி, அவளுக்கு நம் எல்லார் மீதும் பாசம் உண்டு.. அதனால பாசத்தால் அவளை கைக்குள் போட்டுக்கிட்டு சாதிக்கப் பாருங்க, கல்யாணம் வேண்டாம் என்று இருந்தவன் அவளை பார்த்ததும் சம்மதம் சொல்லியிருக்கிறான். அப்படிப்பட்டவன், நாம அவனோட மனைவியை விரோதிச்சுட்டா, எப்படி மாறுவான்னு சொல்ல முடியாது. அதோட நம்மக்கிட்டே என்ன குறைச்சல் ? கடவுள் கிருபையால எல்லாமும் இருக்கு.. உங்களுக்குனு சேர வேண்டியது ,கண்டிப்பா வந்து சேரும்.. நாமளும் இங்கே வருஷத்துல ஒரு தடவை வந்து பத்து நாளோ பதினைஞ்சு நாளோ தங்கிட்டு போகப்போறவங்க, அதனால புரிஞ்சு நடந்துக்கோங்க" என்று அழுத்தமாக சொன்னவர், "தம்பி, கீழே போய் ஒரு ஜூஸ் சாப்பிட்டு வருவோம் "என்று எழுந்து கொள்ள, மற்றவரும் உடன் சென்றார்.

சங்கரியும், ஈஸ்வரியும் , சிலகணங்கள் யோசினையில் ஆழ்ந்திருந்தனர், அவர்களுக்கு பிறந்த வீடு என்று இருந்தால் தான் புகுந்த வீட்டில் ஒரு மரியாதை இருக்கும்.. அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணாக இருந்தால் பிறந்த வீட்டிலும் தங்களது கை உயர்ந்து இருக்கும் என்று கருதினார்கள். ஆனால் ஆண்கள் இருவரும் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டனர்..

💜🖤💜

வீட்டின் பெரிய கூடத்தில் மணவறையை அமைத்து, வீட்டையும் அலங்கரிக்க வைத்தது முதல், பெண்ணுக்கும் மாப்பிள்ளக்கும் துணிமணி எடுப்பது,தாலி வாங்குவது, சாப்பாட்டுக்கு மெனு கொடுப்பது, இடையில் அழகு நிலைய பெண்களை அழைத்து அம்பரிக்கு மருதாணி அலங்காரம் செய்ய வைத்தது வரை, எல்லாவற்றையும் மணிமாலா வெகு திறமையாக கையாண்டிருந்தார். சொல்லப்போனால் இது அவர் வீட்டு கல்யாணம் இல்லை.. ஆனாலும் ஆனந்தவள்ளியின் நல்ல குணமும்,பேச்சும், தாயில்லாத பெண் அம்பரி என்ற காரணமும் தான், அவர் தன் வீட்டு விசேஷமாக பாவித்து எல்லாம் செய்தார்.

அப்படியே சங்கரி ,ஈஸ்வரியையும் அவ்வப்போது கலந்து கொள்ளவும் மறக்கவில்லை. அவர்களும் தங்கள் தம்பியின் திருமணம் என்று முழு மனதுடன் அவருடன் ஒத்துழைத்தனர். அம்பரியிடமும் நல்லபடியாக நடந்து கொண்டனர்.
அநேகமாக அவள் மணிமாலாவுடன் தான் இருந்தாள். அப்படி இருக்கும்படி கீர்த்திவாசன் ஏற்பாடு செய்திருந்தான் .

ஆயினும் மருதாணி வைத்த போது நாத்தனார்களே அவளுக்கு உணவை ஊட்டி விட்டனர். பாராதது போல பார்த்திருந்த நித்யமூர்த்தியின் மனது ஒருவாறு சமாதானம் ஆனது..

இது நாடக திருமணம் என்றாலும், நடக்க இருப்பது முறைப்படியான திருமணமே என்று கீர்த்திவாசன் சொல்லியிருந்ததால், ஓரளவுக்கு தன் உள்ளத்து உணர்வுகளை அடக்கி, உதட்டில் புன்னகையுடன் வலம் வந்தாள் அம்பரி.

ஆகவே திருமண நாள் பொழுது, ஒரு நல்விடியலாக மலர்ந்தது.. வெகு காலத்திற்கு பிறகு பெரிய வீட்டில் நடக்கும் விசேஷம், அந்த வீட்டின் கடைசி வாரிசின் திருமணம் என்பதால், சகோதரிகள், அத்தான்கள், மாமா, மற்றும் மணிமாலா சேர்ந்து எல்லாமும் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதிகாலையில் திருமணம் என்பதால்,மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமாக குழுமியிருந்தனர்.

அம்பரியை கடந்த இரண்டு தினங்களும், ஒழுங்காக சாப்பிட வைத்து,போதிய ஓய்வும் எடுக்க வைத்து, மூன்று பெண்களுமாக நன்றாக பார்த்துக்கொண்டனர். அதன் விளைவாக, ஏற்கனவே அழகியாக இருந்தவள், இப்போது கல்யாணக் களையும் சேர்ந்து பேரழகியாக தோன்றினாள்.

கீர்த்திவாசனும், பட்டு வேஷ்டி அணிந்து, முகச்சவரம் செய்து, பார்க்கவே, ராஜகளையோடு அம்சமாக தெரிந்தான்.

மங்கள வாத்தியங்கள் முழங்கிட , திருநாணை, அம்பரியின் சங்கு கழுத்தில் பூட்டினான் கீர்த்திவாசன். அவனது கரம்பட்டு ஒருகணம் அவளது தேகம் சிலிர்த்து அடங்கிற்று.. அதன்பின் நெற்றியில் குங்குமம் வைத்த கணத்தில் இருவரின் கண்களும் ஒருகணம் தீவிரமாக சந்தித்துக் கொள்ள, ஆடவனோ அவசரமாக தன்னை மீட்டுக் கொண்டு பார்வையை விலக்கிக் கொண்டான்.."சே, என்ன செய்துட்டு இருக்கிறேன் என்று தன்னையே உள்ளுர கடிந்து கொண்ட, அம்பரியின் முகம் லேசாக சிவந்தது. அதை மறைக்க தலையை கவிழ்ந்து கொண்டாள்..

இருவரின் ஜோடி பொருத்தம் அங்கிருந்த அனைவருக்கும், முக்கியமாக, சக்ர நாற்காலியில் அமர்ந்து இருந்த ஆனந்தவள்ளிக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அந்த ஒருகணம் பார்வை தீண்டலை அவர் கவனிக்க தவறவில்லை.. உள்ளுர சிறு உறுத்தல் அவருக்கு, தனக்காக என்று இருவரும் பெயருக்கு திருமணம் செய்து கொள்கிறார்களோ என்று.. இரண்டு தினங்களாக மனதுள் தோன்றிக்கொண்டே இருந்தது.. அப்படி இல்லை என்பது போல அந்த விழிகளின் சந்திப்பு உணர்த்திவிட, கண்களில் நீருடன் பார்த்திருந்தார்.

முன்தினம் தான் அம்மாள் சற்று எழுந்து அமர ஆரம்பித்து இருந்தார். அதிகாலையில் எழும்ப வேண்டாம் என்று சொல்லியும், அலாரம் வைத்து எழுந்து தாதியின் துணையுடன் தயாராகிவிட்டார். அவரது நீண்ட நாள் ஆசை என்பதை விட கனவு என்றே சொல்லலாம்.. அதை கண்ணால் காணும் பாக்யம் கிடைத்ததே அவருக்கு மனம் நிறைந்து போயிற்று..

"அக்கா, பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணுங்க" என்ற மூர்த்தியின் கரகரத்த குரலில் நிகழ்விற்கு திரும்பி, முகம் மலர அட்சதையை தூவினார்.. இருவரையும் அணைத்து உச்சி முகர்ந்தபோது கண்களில் சரசரவென்று நீர் வழிய, எல்லோருமே பதறிப் போயினர்..

" அம்மா , அக்கா, அத்தை என்ற குரல்களில் தன்னை மீட்டுக்கொண்டு, " எனக்கு ஒன்றுமில்லை.. இனிமே ஒன்றும் ஆகாது.. இது ஆனந்த கண்ணீர்.. இந்த நாளை பார்க்காமலே போயிருவேனோனு நினைச்சேன்.. கடவுள் அருளால என் பிள்ளைகளை மணக்கோலத்தில் பார்த்துட்டேன்" என்றவர், "மாலா, உனக்கு என்ன கைமாறு செய்யப் போறேன் என்று தெரியவில்லையம்மா.. குறைஞ்ச அவகாசத்தில் இத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டாயே.. என்றபோது,

"அது என் பாக்யம் அம்மா.. நீங்க சீக்கிரமாக பழையபடி எழுந்து நடமாடினாலே எங்க எல்லோருக்கும் போதும்மா.. " என்றார் மணிமாலா..

"ஆமா, சீக்கிரமாக உடம்பை தேற்றிக் கொண்டு,பேரன் பேத்தியை கொஞ்ச ரெடியாகுங்க" என்றார் கமலக்கண்ணன்..

அந்த பேச்சில், அம்பரியின் முகம் லேசாக சிவந்தது.. உள்ளூர ஏதோ உணர்வு ஆட்கொள்ள, அவசரமாக தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

"இதெல்லாம், இனி அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும் அம்பரி. அதனால அதுக்கு உன்னை பழக்கப்படுத்திக் கொள்.. " என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறிவிட்டு, நகர்ந்து கொண்டான் கீர்த்திவாசன். அவன் சொன்னது சரிதானே?.. திருமணம் என்றால் இந்த பேச்சு அடுத்து வருவது இயல்புதானே? தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்..

திருமணத்திற்கு வந்திருந்த உறவுகளும், சம்பந்திகளும், ஆளாளுக்கு ஆனந்தவள்ளியிடம் குசலம் விசாரித்துக்கொண்டிருக்க,
உண்டான சோர்வை காட்டிக்கொள்ளாது அம்மாள் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவள்,

"சரி, அத்தை, இன்னிக்கு இவ்வளவு பேசுனதே போதும் ..
என்றவள், "எல்லோரும் மன்னிக்கணும், உங்களுக்கே தெரியும் ,அத்தைக்கு இப்பத்தான் உடம்பு தேறிட்டு வருது. ரொம்ப .. ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாதுனு டாக்டர் அங்கிள் சொல்லியிருக்கார். அதனால் அவங்க கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் " என்றாள் அம்பரி.

அவர்களும் ஆமோதித்து, விலகிச் சென்றனர். ஜெயந்தனும் சுகந்தனும் வந்தவர்களை கவனிக்க சென்றனர்.

வீல் சேரை தள்ளியபடி, "அத்தை இனிமேல் இப்படி எல்லாம் உணர்ச்சிவசப்படக் கூடாது.. உங்க உடம்பு தேறுற வரை நான் சொல்றபடிதான் கேட்கணும் சரியா? என்றவள்,"இங்க அண்ணிங்க இருக்காங்க, எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க, அதனால இப்ப நீங்க கொஞ்சம் ஓய்வு எடுங்க," என்று குழந்தையிடம் சொல்வது போல அம்பரி சொல்ல..

பின் தொடர்ந்த ,மகனிடம்
"பார்த்தியா வாசு, இந்த அம்மு, மருமகள் ஆனதும் என்னை எப்படி அதிகாரம் பண்றானு? புகார் பத்திரம் வாசிக்க..

உடன் நடந்தபடியே, கீர்த்திவாசன் மலர்ந்த முகத்தோடு,"அம்மா, நீங்களாச்சு, உங்க ஆசை மருமகளாச்சு.. உங்க நடுவுல என்னை இழுக்காதிங்கமா, அதோட, அவள் சொல்றதும் சரிதானே? என்றான்..

கூடவே வந்த மகள்களைப் பார்த்து "பார்த்தீங்களாடி,
உங்க தம்பியை, இரண்டு பக்கமும் பேசுறாப்ல பேசி, அவன் பெண்டாட்டிக்கு தான் சப்போர்ட் பண்ணுறான்" என்றபோது அவர் குரலில் சிரிப்புத்தான் இருந்தது..

"சரிதானே அம்மா, நாம எல்லோரும் நினைச்ச மாதிரி தம்பியோட கல்யாணம் நல்லபடியாக நடந்திருச்சுமா, இனிமே,
அவனுக்கு அவள்தானே மா எல்லாம்..என்னக்கா நான் சொல்றது ?என்று புன்னகைத்தாள் சங்கரி..

"ரொம்ப சரி சங்கரி.. என்றாள் ஈஸ்வரி,

"இது என்னடி ஒரே நாளில் எல்லோரும் அவள் பின்னாடி போயிட்டீங்க?" என்று போலியாக சிணுங்கினார்..

அதற்குள் கட்டில் அருகே சென்றுவிட, அவரை தூக்கி, படுக்க வைத்தான் கீர்த்திவாசன். மேலும் அம்மாள் ஏதோ சொல்ல வரவும், "ஷ் ஷ்.. அத்தை போதும், உங்க கோட்டா முடிஞ்சது..இனிமே தேவைன்னா மட்டும் தான் பேசணும்.. இப்ப நல்லபிள்ளையா ரெஸ்ட் எடுங்க.." என்றதும் அவர் பயந்தார்போல ஒற்றை விரலை உதட்டில் வைக்கவும், அங்கே மெலிதாக சிரிப்பலை எழுந்தது..

"நர்ஸ் பார்த்துக்கோங்க, என்றவளை, "நீ வாம்மா அம்பரி, நல்ல நேரம் போறதுக்குள்ளே முதலில் விளக்கேற்றணும், நீயும் வா தம்பி" என்று ஈஸ்வரி அழைத்துப் போவதை, பெரியவர்கள் இருவரும் மனநிறைவோடு பார்த்திருந்தனர்..

விளக்கேற்றி முடித்து, சில சாங்கியங்களை செய்து முடித்த பிறகு, காலை உணவை குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டனர்.
சின்னவர்கள் சின்ன சின்ன கலாட்டா செய்தனர்.. ஊட்டிவிடச் சொன்னார்கள், அம்பரி தான் கொஞ்சம் திணறிப் போனாள். கீர்த்திவாசனோ இயல்பாக இருந்தான். ஒருவாறு பெரியவர்கள் தலையிட்டு அதட்டியபிறகே பிள்ளைகள் விட்டார்கள்.. உணவு முடிந்த பிறகு இருவரையும் ஓய்வெடுக்க அனுப்பினார்கள்.

அம்பரிக்கு கீழே இருந்த விருந்தினர் அறைகளில் ஒன்றை கொடுத்திருந்தனர். உடையை மாற்றிவிட்டு படுத்தவள்,அத்தை சீக்கிரமாக குணமாகி விடுவார் என்ற நிம்மதியுடன் அப்படியே தூங்கிப் போனாள்..

ஆனால் அன்று மாலையில், அனைவரது மனநிலையும், முக்கியமாக மணமக்களின் மனநிலை பாதிக்கப்பட போவதை அப்போது யாருமே அறியவில்லை..


_ஜீவ ராகம் தொடரும்..
 

Attachments

  • ei190LF58149.jpg
    ei190LF58149.jpg
    53.5 KB · Views: 31
Last edited:

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அய்யோ கடவுளே 😳😳😳😳😳😳😳😳😳என்ன விபரிதம் நடக்க போகுதோ தெரியலையே ஆயிஷா அம்மாவுக்கு தான் தெரியும் 😜😜😜😜😜
 
Top