• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 21

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
21. எந்தன் ஜீவன் நீயடி..!

நித்யமூர்த்தி அப்போது ராணுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று திருமணம் வேண்டாம் என்ற முடிவுடன் இருந்தார். ஆனந்த்வள்ளி எவ்வளவோ வற்புறுத்தியும் உறுதியாக மறுத்துவிட்டிருந்தார்.

அக்காவின் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்துவிட்டு, அவர் ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இடையே சென்னையில், நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருத்தி ஏறினாள். அவருக்கு முன்பிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள். அவளுடன் ஒரு 3வயது சிறுமியும்.

அந்தப் பெண்ணை பார்த்ததும், நித்யமூர்த்திக்கு, பெருத்த அதிர்ச்சி. பின்னே விபத்தில் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட பெண், உயிரோடு அவர் முன்னால் இருந்தால் அதிராமல் என்ன செய்வார். அந்தப் பெண் வேறு யாருமல்ல, மீனாட்சிசுந்தரத்தின் தங்கை மனோகரி. அப்படி எனில், காதலனோடு அவள் போனதால் தான், அத்தான் அப்படி ஒரு கதை காட்டிவிட்டு இருக்கிறார், என்று புரிந்தது.(உண்மையில் அவள் வேற்று பிரிவை சார்ந்தவனோடு திருமணம் செய்து கொள்வதாக எழுதி வைத்து விட்டு, சென்றிருந்தாள். அது ஊருக்குள் தெரிந்தால் சாதி கலவரம், குடும்பத்திற்கு அவமானம் என்று அப்படி கதை பரப்பியதாகவும், அவள் செய்த அந்த காரியத்தினால் தான் தன் மகள்களை அவசரமாக திருமணம் செய்து கொடுத்து விட்டதாகவும் அக்காவின் மூலம் பின்னாளில் அவர் அறிநது கொண்டது)

ஏன் தனியாக இருக்கிறாள்? அவள் கணவன் என்ன ஆனான்? ஏற்கனவே ஏதோ ஒரு காரணமாக அவள் அழுது கொண்டிருக்கிறாள். ஒருவேளை கணவன்தான் கைவிட்டுவிட்டானோ? என்று அவர் யோசனையில் இருக்க,

வண்டியில் ஏறிய சிறிது நேரத்திலேயே, தாயின் மடியில் தலை சாய்த்து, தூங்கியிருந்த அந்த குழந்தை இப்போது, தூக்கம் கலைந்து எழுந்து கொண்டே "அப்பா, அப்பா.. என்று மெதுவாக சிணுங்கியது , மனோகரி தட்டி கொடுத்தவாறே,"நாம் அப்பாக்கிட்டே தான் போகிறோம், நீங்க அழாமல் தூங்கு கண்ணம்மா" மென்குரலில் அவள் கூற.. அதில் சற்று சமாதானமாகி, சிறுமி, மீண்டும் படுத்து தூங்க ஆரம்பித்தாள்.

நித்யமூர்த்தி, தான் இளைஞன் என்பதால் அவளிடம் சட்டென பேச தயங்கினார்..! நேரம் ஆக ஆக, அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் சாப்பிட்டு,

அவரவர் இடத்தில் முடங்கிக் கொள்ள, மனோகரியோ
இன்னும் அதே நிலையிலேயே ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள். தெரிந்த பெண் என்பதாலும்,அவள் இருந்த கோலமும், அவருக்கு அவளது அழுகை மிகவும் வேதனையாக இருந்தது.
அவரால் உறங்க முடியவில்லை. அவளுக்கு உதவலாம் என்றால் எந்த வகையில் என்றும் தெரியவில்லை. மேலும், உள்ளூர அவள், ஏதும் தவறான முடிவை எடுத்து விடுவாளோ என்ற அச்சத்தில், இருக்க, அப்போது அவளுக்கு வலி எடுத்தது...! அம்மா..! என்று முதலில் முனங்கலாக, பிறகு சற்று சத்தமாக..! அவள் கத்தியதில், பெரிய குழந்தை, பயந்து எழுந்து வீறிட்டு அழுக, பெட்டியில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டாலும் யாரும் என்னவென்று கேட்கக்கூட முன்வரவில்லை.

மனோகரி, கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்டுப்பாட்டை இழப்பது புரிந்தது, நித்யமூர்த்தி, முதல் காரியமாக, அழுது கொண்டிருந்த சிறுமியை தூக்கி, தோளில் போட்டு, தட்டிக் கொடுத்தபடியே எழுந்து வாசல் புறம் சென்றார்..! அங்கே, தூங்கிக் கொண்டிருந்த டிடி யை எழுப்பி, விவரம் சொன்னார். அவர் அடுத்த பத்து நிமிடத்தில் வரவிருக்கும் நிலையத்திற்கு தகவல் சொன்னார்.

நித்யமூர்த்தியின், கழுத்தைக் கட்டிக் கொண்டது அந்த பெரிய குழந்தை! அவர் மீண்டும் உள்ளே வந்து, "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளம்மா, என்றுவிட்டு, தனது உடமைகளையும் அவளது உடைமைகளையும் கொண்டு போய் வாசல் பக்கம் வைத்துவிட்டு வந்து, அவளது கையைப் பற்றி, மெல்ல அழைத்துக் கொண்டு செல்ல, சரியாக நிலையம் வந்துவிட, காத்திருந்த ரயில்வே சிப்பந்திகள், ஸ்டிரெச்சரில் அவளை படுக்க வைத்து கொண்டு செல்ல, நித்யமூர்த்தியும் குழந்தையுடன் இறங்கிக் கொண்டார்.

அருகில் இருந்த மருத்துவமனையில் மனோகரி அனுமதிக்கப் பட்டாள். அழகான பெண் குழந்தை பிறந்திருப்பதாக மருத்துவர் சொன்னார். சற்று நேரத்தில் மனோகரி அழைப்பதாக செவிலிப் பெண் தெரிவிக்க, நித்யமூர்த்தி உள்ளே சென்றார்.

"நீங்க யாருன்னு தெரியலை, கடவுள் எனக்கு உதவ என்றே உங்களை அனுப்பியிருப்பதாக தோன்றுகிறது..! என் கணவர் ஒரு விபத்தில் இறந்து போனார். அதன் பிறகு சென்னையில் வாழ வழியில்லை. இந்த குழந்தைகளுக்காக வாழ வேண்டிய நிர்பந்தம்..! என் கணவருடையை நண்பர் எனக்கு ஆந்திராவில் உள்ள ஒரு பெரிய கம்பெனியில வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார். அதற்காக தான் போயிட்டு இருந்தோம். ஆனால் ..என் பயணம் இதுவரை தான் போல.. என்று திக்கி திணறியபடியே பேசினாள்..!

"அப்படி சொல்லாதீங்க, மனோகரி என்றவர், நான் உங்க அண்ணி ஆனந்தவள்ளியோட ஒன்றுவிட்ட தம்பி நித்யமூர்த்தி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

மனோகரியின் முகத்தில் அதுவரை இருந்த வேதனை சட்டென வடிந்து, ஒருவித அமைதி, ஆசுவாசம் குடிகொண்டது..!

"நான் இனி பிழைக்க மாட்டேன். நான் என் அண்ணனுக்கு துரோகம் செய்துவிட்டேன். இனி அங்கே என் பிள்ளைகளை அனுப்ப முடியாது..! யாராவது ஓடிப்போனவ பிள்ளைனு என் குழந்தைகள் காதுபட பேசிட்டா? அந்த அவலம் என் பிள்ளைகளுக்கு வேண்டாம். அதனால என் பிள்ளைகளை ஏதாவது ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட்டுடுங்களேன். உங்களுக்கு புண்ணியமாக போகும்.. ! கடைசியாக இந்த ஒரு உதவியை பண்ணிடுங்க, ப்ளீஸ்..! என்றாள் உயிரை கண்களில் நிறுத்தியபடி!

"குழந்தைகள் இனி என் பொறுப்புமா. அவங்களுக்கு எந்த காலத்திலும் அந்த அவப்பெயர் வராமல் பார்த்துக்கிறேன்" என்று நித்யமூர்த்தி, சொல்ல காத்திருந்தார் போல மனோகரியின் உயிர் பிரிந்து விட்டது.

அதன் பிறகு தன்னுடன் பணிபுரிந்து கொண்டிருந்த நண்பன் கனகராஜின் சித்தி, சந்திரலேகாவின் ஆசிரமத்திற்கு குழந்தைகளுடன் சென்றார். அந்த அம்மாள் திருமணமே செய்து கொள்ளாது அந்த சமூகசேவையில் ஈடுபட்டிருந்தார். இதற்கு முன் ஆதரவற்ற குழந்தைகளை கொணரந்து அங்கே சேர்த்திருந்தார் நித்யமூர்த்தி. அந்த பழக்கத்தில் தான் இந்தக் குழந்தைகளையும் அங்கே கொண்டு சென்றார்.


ஆனால் சுதாகரி, அப்பா, அப்பா என்ற அனத்தலும் காய்ச்சலுமாக அவரை விட்டு விலகவே இல்லை. குடும்ப வாழ்வே வேண்டாம் என்றிருந்தவருக்கு அந்த குழந்தையின் ஸ்பரிசமும், பாசமும் நெகிழ செய்தது.

ஆகவே,"ஆசிரமத்தில் சேர்க்க எனக்கு மனம் இல்லை ஆன்ட்டி. இந்த குழந்தைகள் பெரிய இடத்து பிள்ளைகள். அதற்கு ஏற்றார்போல கௌரவமான வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும். ஆலோசனை சொல்லுங்க ஆன்ட்டி" என்றார்.

சற்று நேரம் ஆழமாக யோசித்தார். பிறகு, இவர்கள் என் பேத்திகளாக என்னுடன் வளரட்டும்..! படிக்கும் பருவம் வந்ததும் ஏதேனும் பள்ளி விடுதிகளில் சேர்த்துவிட்டால், லீவிற்கு வரும்போது அவங்களை பார்த்துக்கிட்டால் போதும்தானே? என்றார்.

தொடர்ந்து ஆறு மாத காலங்கள், அந்த ஊரில் தான் அவருக்கு வேலை. அதன்படி பார்த்தால் சந்திரலேகா,
சொன்ன யோசனை அவருக்கு சரியாக இருந்த போதும், அதன்பிறகான காலத்தில், மாற்றல் வந்தால் என்ன செய்வார்? சுதாகரி இப்போதே அவ்வப்போது அம்மாவை தேடி அழுகிறாள். அவரும் அருகில் இல்லாது போனால் குழந்தை கஷ்டப்படுவாள் என்று வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு, அந்த ஊரிலேயே ஒரு நல்ல வேலையை தேடிக்கொண்டார். சந்திரலேகா குழந்தைகள் மீது மிகுந்த பாசத்தை பொழிந்தார். பிள்ளைகள் இருவருக்கும் ஓரளவிற்கு விவரம் புரியும் வயதுவரை வாழ்க்கை தெளிந்த நேரிடையாக சென்றது. வயோதிகம், காரணமாக சந்திரலேகா,
நோய்வாய்ப்பட்டு சில தினங்களில், சிகிச்சைகள் பலனளிக்காமல் இறந்து போனார். குடும்பத்தில் அங்கமாகிவிட்டிருந்த அம்மாளின் மறைவு, அனைவருக்கும் மிகுந்த வேதனை தான்.


நித்யமூர்த்திக்கு, இப்போது மீண்டும், இரண்டும் கெட்டான் வயதுப் பெண்களை வைத்துக் கொண்டு செய்வதறியாது நின்றார். வெகுவாக யோசித்து விட்டு, விஷயத்தை சொல்லாமலே அத்தானிடம் குழந்தைகளின் பொறுப்பை ஒப்படைத்து விடலாம், தான் அவ்வப்போது வந்து பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து, அக்காவின் வீட்டிற்கு கிளம்பி வந்தார். ஆனால் வாழ்க்கை அவரை அடுத்த பயணத்திற்கு அழைத்துச் செல்ல காத்திருந்தது..!

💜🤎💜

மறுநாள் காலையில்..

கீர்த்திவாசன் சற்று முன்னதாக எழுந்து விட்டான். இரவில் அவனுக்கு சரியான தூக்கம் இல்லை. மாமாவிடம் பேசிவிட்டு வந்தபிறகு அவனுக்குள் பல எண்ண கலவைகள். மாமாவைப் பற்றிய உண்மை.. அது அவனை ரொம்பவே பாதித்தது. எப்பேர்ப்பட்ட மனிதர் இந்த மாமா. அவரை நினைத்து ஒருபுறம் ஆச்சர்யம் என்றால், இன்னொரு புறம், அவர் இப்படி திடுமென வெளியூர் கிளம்புவதை நினைத்து, மனதில் ஒருவித சஞ்சலம். ஆகவே அவர் கிளம்பிவிடுமுன் அவரிடம் பேசிவிட நினைத்து அவுட்ஹவுஸ் சென்றான்.

நித்யமூர்த்தி, அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தார். அவனை அந்த நேரத்தில எதிர்பார்க்கவில்லை என்று அவர் முகமே சொன்னது. ஆனாலும் வா என்றுவிட்டு தலையசைத்து வரவேற்றார்.

அவன் செய்திருந்த முடிவின்படி, அவரை பேசவிடாது, தொடங்கினான் கீர்த்தி. "நேற்று இரவே இதைப் பற்றி நான் பேசியிருப்பேன் மாமா. ஆனால் அப்போது நான் பேசியிருந்தால் அதை கேட்கும் மனநிலையில் நீங்க இருக்கவில்லை. அது மட்டுமில்லாம, நானும், அம்பரியை பற்றிய எண்ணத்தில் பெரும் சஞ்சலத்தில் இருந்தேன். அதனால நான் ஏதும் பேசாமல் போய்விட்டேன் மாமா"

"என்ன கீர்த்தி, பீடிகை எல்லாம் பலமா இருக்கு? எதுக்கு இவ்வளவு முஸ்தீப்புகள்? நேரடியாக என்ன விஷயம் என்று சொல்லு..! என்றவாறு அவனை அமரச் செய்து தானும் அமர்ந்தார் நித்தியமூர்த்தி.

"மாமா, இப்போ நீங்க என் அம்மாவோட தம்பி மட்டுமல்ல, என்னோட மாமனார், என் மனைவியின் அப்பா, அந்த முறையில், உங்க நல்லது கெட்டது எதுவானாலும் அதைப் பத்தி எனக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம்..! அதனால..

நித்யமூர்த்தி, பேசாமல் அவனை கூர்ந்து நோக்கினார்.

கீர்த்திவாசன் வந்த நோக்கம் நிறைவேறுமா?

@ஜீவ ராகம் தொடரும்..!
 

Attachments

  • ei6KFI930963.jpg
    ei6KFI930963.jpg
    93.8 KB · Views: 52

Jothi jo

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 16, 2022
1
1
3
Madurai
இனி மேல் தான் இந்த கதை பதிவுகள் அனைத்தும் படிக்க வேண்டும் படித்த பின் இனி வரும் பதிவுக்கு கருத்து பதிவு செய்கிறேன் மிக்க மகிழ்ச்சி படித்து விட்டு வருகிறேன் 🌺🌺🌺வாழ்க வளமுடன் நலமுடன் 🌺🌺🌺
 

EswariSasikumar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
74
2
18
Chennai
Nice update. Muzhuthaaga endruthaan ppadiththen.Kathai nagarum vitham arumai. Waiting for next update sis 😍😍😍