• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 10

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 10

"நான் வேணா ஒரு சாரி கேட்டுடட்டுமா?" வீட்டுக்கு திரும்பிய தியாகுவைப் பார்த்து திடீரென ஆதி கேட்க அதில் நின்றிருந்தான் தியாகு.

"ம்ம்க்கும்! இவரு பேசுவாராம்.. அப்புறமேட்டு போய் சாரி கேட்பாறாம்.. ஏன் பேசும் போது மூளையை கழட்டி வச்சிருந்தாராக்கும்?.." இது தான் சாக்கென்று மாரியும் விடாமல் பேச,

அதை கேட்கும் நிலையில் வேறு இருக்கிறோமே ஏன நொந்து கொண்டான் ஆதி

"டேய்!" என தியாகு அதட்டியவன்,

"பெரியவங்க அதெல்லாம் மனசுல வச்சுக்க மாட்டாங்க டா" என்றான் ஆதியின் முகத்தில் தெரிந்த கவலையைப் பார்த்து.

"ஆனா சாருக்கா இதை விடாது" என்று மாரி கூற,

"அடங்கவே மாட்ட இல்ல?" என்றவன்,

"உனக்கு தோணுறதை செய்" என்றுவிட்டு தியாகு சென்றுவிட, என்ன செய்ய என்று தான் தோன்றவில்லை ஆதிக்கு.

அதற்கு மேல் வேலையில் கவனமும் செல்வேனா என்றிருக்க வீட்டிற்கு சென்றுவிட்டான்.

பாட்டு வகுப்பில் அமர்ந்திருந்த சாருவிற்கு கவனம் அங்கு திரும்பவே இல்லை. மீண்டும் மீண்டும் சட்டென தன்னை திரும்பிப் பார்த்த ஆதியின் முகம் தான் கண்முன் வந்து கொண்டே இருந்தது.

அதில் பாட முடியாமல் போனவள், அங்கிருந்த சிறுவர்களை பாட சொல்லி கேட்டபடி அங்கேயே அமந்துவிட்டாள்.

"வாத்தி இப்படி தான்னு உனக்கு தெரியும் தானடி? அதுக்கு தான் தெரியலைன்னா உனக்குமா? இப்படி இருந்தா நாளபின்ன என்னனு குடும்பம் பண்ண போறியோ!" தனக்கு தானே பேசியபடி அமர்ந்திருந்தாள்.

"அய்யோ பாவம் மூஞ்சே சுருங்கி போச்சு.. அது தான் கடமை கன்னியாகுமரி, நேர்மை நாங்குநேரினு இருக்கே.. அதுகிட்ட இந்த டைம்ல போய் கட்டிக்க சொன்னா ஈஈனு பல்ல காட்டவா செய்யும்? அப்பாகிட்ட நீ தான் இப்ப பேச வேண்டாம்னு சொல்லி இருக்கனும்"

மனம் முழுதும் இப்பொழுது ஆதியின் பக்கமாய் உள்ள நியாயத்தை எல்லாம் அடுக்கிவிட, காலையில் இருந்த மனநிலை இங்கே வந்ததும் முற்றிலும் மாறியது.

ஏற்கனவே தந்தை சொல்லியதில் தெளிவாய் தான் இருந்தாள் என்றாலும் ஒரு சிறு வருத்தம் இருந்திருக்க, இப்பொழுதோ

"அறியா பிள்ளை தெரியாம செஞ்சிடுச்சி.. விடு சாரு" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் பழையபடி மீண்டிருந்தாள்.

அதனாலேயே இரண்டு மணி நேரம் கழித்து வீடு வரும் போது மலர்ந்த முகமாய் வர, அங்கே மாரி மட்டுமே அமர்ந்திருந்தான்.

"வாத்தியார எங்க சில்ற?" நேராய் அவன் கடைமுன் சென்று வண்டியை நிறுத்தி அவள் கேட்க, ஆச்சர்யமா அதிர்ச்சியா என்று சொல்ல முடியா வண்ணம் பார்த்தான் மாரி.

"டேய் உன்ட்ட தான கேக்குறேன்.. எங்க நம்ம ஆளை?" என்றபடி குதித்து, சாய்ந்து என்று கடைக்குள்ளும் வீட்டிற்குள்ளுமாய் அவள் தாவி தாவி பார்க்க,

"க்கா! இவ்வளவு தானா?" என்றான் மாரி.

இப்படி சப்பையாய் முடிந்துவிட்டதே என்பதை போல தான் இருந்தது அவன் கேட்டது.. அவனுக்கு தெரியும் என்று தெரியாத சாரு அவன் பதிலில் புரியாமல் பார்த்தவள்,

"கேட்ட கேள்விக்கு பதில சொல்லு டா" என்று மண்டையிலும் அவள் வந்து தட்ட,

"உள்ள தான் போச்சு.. ஏன் இன்னும் எதனா பாக்கி இருக்கா?" என்றான்.

"என்ன டா ஒரு மாதிரியா பேசுற.. உன் மேல கைய நீட்டிடுச்சா என்ன? எதுனாலும் சொல்லு டா.. ஒரு கை பார்த்துடுவோம்" என்று சண்டை செய்பவள் போல கேட்க,

"எப்படிக்கா ஒன்னுமே நடக்காத மாதிரி பேசுற.. காலையில நீ பேசுனதை கேட்டு, தியாகுண்ணா பேச்சை வச்சு நான் வேற நாலு கேள்வி எக்ஸ்ட்ராவா கேட்டு வச்சுட்டேன்.. இப்ப மட்டும் வந்துச்சுன்னு வையேன்.." என்றவன் தலையை உலுக்க,

"எது? என் ஆளை நீ கேள்வி கேட்டியா? நான் வந்து கேட்டேனா உன்கிட்ட? அதெப்படி டா நீ கேட்கலாம்?" என்றவள் உண்மையாய் போட்டிருந்த குர்த்தியின் முழுக்கையை மடித்து அருகே வர,

"க்கா.. க்கா.." என்று ரெண்டடி பின்னால் சென்றான் மாரி.

"குடும்பம்னா ஆயிரமுமும் இருக்கும் ரெண்டாயிரமும் இருக்கும்.. அதுக்காக நீ நாட்டாம பண்ணுவியா?" என்று கேட்ட நேரம் கடைக்குள் இதை கேட்டபடி வந்திருந்தான் ஆதி.

கையைக் கட்டி ஆதி இருவரையும் முறைத்தபடி பார்க்க,

"தோ! வந்துட்டாரு உன் சீமராசா.. போக்கா.. என்னையே அடிக்க வந்துட்டல்ல!" என்று தன் இடத்தில் வந்து மாரி அமர,

"பின்ன! நீ வாத்தியை கேள்வி கேப்பியா?" என்றவள்,

"அவன் கேட்டா பார்த்துட்டு தான் இருப்பிங்களா வாத்தியாரே? நாலு தட்டு தட்டி உட்கார வைக்குறது இல்ல?" எனவும் ஆதியிடம் கூற, ஆதி உணர்ந்த நிம்மதி இருக்கிறதே! அப்பப்பா வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அந்த நிம்மதி ஏன் என்று கொஞ்சம் அதிர்ச்சியையும் அவனிடம் கொடுத்திருந்தது.

"நம்ம பெர்சனல எல்லாம் ஏன் கடை பரப்புறீங்க?" என்று ஆதியிடம் சாரு கேட்ட அடுத்த நொடி விழித்துக் கொண்டான் ஆதி.

"ஏய்! உன்னை யாரு உள்ள வர சொன்னது? உன்னை என்ன டா சொல்லிட்டு போனேன்?" என்று ஆதி கேட்க,

"எங்க சொல்லிட்டு போனீங்க? ஏதோ பீலிங்கா போன மாதிரில்ல இருந்துச்சு!" என்று வேறு போகிற போக்கில் சொல்லி வைத்தான் மாரி.

"பீலிங்கா?" சாரு கேட்க,

"அடிச்சேன்னா தெரியும்.. வேலையை பாரு டா" என்ற ஆதி, சாருவையும் முறைத்துவிட்டு இவர்களை தாண்டி உள்ளே சென்றுவிட்டான்.


நாட்கள் அப்படியே நகர, சுமதியின் திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன.

ஆதிக்கு வேலைகள் அதிகமாய் இழுத்துக் கொண்டது. முடிந்தவரை துணை நின்றனர் தியாகுவும் மாரியும்.

சொந்தங்கள் என்பவர்கள் வருவதும் எதாவது குறை சொல்லி செல்வதும் என இருக்க, ஏற்கனவே அதிகமாய் அவர்களிடம் பற்றில்லாதவன் இப்பொழுதும் எதற்கும் அவர்களை தேடவில்லை.

பொறுத்து போவதும் கூட அன்னைக்காக என்று தான். மீனாட்சிக்கு கூட்டமாய் இருக்க வேண்டும். சின்ன சின்ன விழாக்களிலும் முடிந்த வரை தடுக்க மாட்டார். உறவுகளை விட்டுவிட கூடாது என்பார்.

தனியாய் வேலைகளை செய்பவனுக்கு உதவியாய் அவ்வபோது இணைந்து கொண்டனர் தியாகுவுடன் மாரி.

அதுவும் ஆதி கேட்கவே மாட்டான்.. தானாய் வந்துவிடுவார்கள். மாரியையாவது கோபம் வரும்போது திட்டி அனுப்ப முயற்சிப்பான்.. தியாகுவிடம் அது கூட முடியாது.

ஸ்ரீரங்கம் இரண்டு நாட்களுக்கு முன் தான் வெளிநாடு கிளம்பினார். கிளம்பும் போது எப்போதும் இல்லாமல் ஆதி கடையில் இருக்கும் பொழுது போய் போய் வருவதாய் சொல்லி வர, ஆதியும் வழியனுப்பி வைத்தான்.

மீனாட்சி, தியாகு, மாரி, சாரு என அனைவரும் அவனிடம் பேசியதில் ஆதியின் மனதில் சிறிதாய் ஒரு மாற்றம்.

அதை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லையே தவிர, அதை உணரவே செய்தான் நன்றாய்

எப்பொழுதும் போலவே சாரு வீட்டில் இருந்து கிளம்பும் பொழுதும் வரும் பொழுதும் அவனை வம்பிழுக்க, அவளை திட்டவெல்லாம் மாட்டான். அமைதியாய் இருந்து விடுவான்.

சாருவிற்கு ஆதியின் மாற்றம் பெரிதாய் தான் தெரிந்தது.

"என்ன சில்ற உன் அண்ணா வாய்க்கு எதாவது போட்டு போட்டியா என்ன?" என அதற்கும் அவள் கிண்டல் செய்ய,

"நான் வர்ல பா உங்க விளையாட்டுக்கு.. உங்க குடும்பத்துக்குள்ள ஆயிரம் இருக்கும்" என்று மாரி சொல்ல,

"அது அந்த பயம் இருக்கட்டும்" என்று சாரு கூறினாள் என்றால் இதழ்களுக்குள் அதை அடக்கிவிட்டிருந்தான் ஆதி.

திருமணத்திற்கு புடவை எடுக்க என மாப்பிள்ளை வீட்டினர் வந்து அழைத்து செல்ல, ஆதி குடும்பமாய் அவர்களுடன் சென்று வந்தான்.

மீனாட்சி கூறியது போலவே மாரிக்கும் ஆதிக்கு போல வேஷ்டியும் சட்டையும் எடுத்து வைத்தார்.

"ஏன் டி.. சாருக்கும் ஒரு புடவை எடுப்போமா?" மீனாட்சி சுமதி காதுகளில் கேட்க,

"இருங்க அண்ணன்கிட்ட கேட்டு சொல்றேன்" என்று சிரிப்புடன் நகர்ந்தவளை இழுத்துக் கொண்டார்.

"ஆணவமா டி உனக்கு? சாருவை என் மருமகளா ஆக்கி காட்றேனா இல்லையா பாரு.. அப்ப வருவ எனக்கும் அண்ணிக்கு மாதிரி புடவை வேணும்னு அப்போ இருக்கு டி உனக்கு" என்று சொல்ல,

"நடக்கட்டும் மா.. எனக்கு மட்டும் ஆசை இல்லையா? இப்ப மாரிக்கு எடுத்து குடுக்குற மாதிரி எனக்கு எடுத்து தர மாட்டிங்களா என்ன?" என்று கூறி கண்ணடித்தாள் சுமதி.

எந்த வேறுபாடும் காட்டாமல் சாரு மீனாட்சியைப் பார்க்கும் பொழுதுகளில் எப்போதும் போலவே பேசி செல்ல அதுவே நிம்மதியாகவும் ஒரு வித நம்பிக்கையையும் கொடுத்திருந்தது அவருக்கு.

"ஆச்சி! எடுத்தது தான் எடுத்தீங்க.. நல்ல கலரா எடுத்திருக்க கூடாது?" என்று கேட்க,

"இவனுக்கெல்லாம் எடுக்கலாமா மா நீங்க? பாருங்க வாயை!" என்று ஆதியும் கிண்டலாய் சொல்ல,

"என்ன இருந்தாலும் உங்களைவிட எனக்கு தான்ண்ணா இந்த சட்டை சோக்கா இருக்கும்.. கல்யாணத்தன்னைக்கு அசத்திட மாட்டேன்.." என்று சொல்ல,

"ஆமா சாரு அப்படியே வெள்ள வேட்டி சட்டைல அரவிந்த் சாமி மாதிரி இருப்பாரு.. போ டா.." என்ற மீனாட்சி,

"நாளைக்கு நலங்கு வைக்கணும்.. வெளியூர்ல இருந்து வர்றவங்க நேரத்துக்கு வந்துருவாங்க.. நம்ம சுத்தி மட்டும் இப்ப போய் நீங்க சொல்லிட்டு வந்துடுங்க" என்று மீனாட்சி கூற,

"நீங்க போய்ட்டு வாங்க ம்மா.." என்றதோடு உள்ளே சென்றுவிட்டான் ஆதி.

"இவனை பத்தி தெரிஞ்சி தான் அப்படி சொன்னேன்.. இல்லைனா என்னை போக விட்ருப்பானாக்கும்" என்று தந்திரத்தை சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

நேராய் அவர் சென்று நின்றது சாருவின் வீடு தான். மகனிடம் சொல்லிவிட்டு செல்ல முடியாதே!

அன்று தேவி தன் கணவருடன் வந்த பிறகு இன்னும் ஆதியின் வீட்டிற்கு வந்திருக்கவில்லை தேவி.

என்னவோ சாருவாய் நினைத்து பயம் இல்லாமல் இருந்தாலும் தேவி கோபமாக இருப்பாரோ என்ற எண்ணம் தோண்றிக் கொண்டே தான் இருந்தது.

சமாதனப்படுத்த என செல்ல விருப்பம் இல்லை.. சம்மந்தம் பேச என வந்தவர்களிடம் அதற்கு தானே உத்திரவாதம் கொடுக்க வேண்டும்?

அவர்களின் முடிவு என்ன என்று தெரியாவிட்டாலும் தன் மனதில் இருப்பதை தெளிவாய் கூறிவிட சென்றார்.

இதனால் ஆதி எவ்வளவு கோபம் கொண்டாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கும் வந்து விட்டார்.

நல்லபடியாய் முடிந்திருக்க வேண்டிய சம்மந்தம் என்ற ஆற்றாமை வேறு அவர் மனதில் இருக்க, மகனை எல்லாம் சமாளித்து கொள்ளலாம் என்ற திடம் வந்திருந்தது.

மகனும் அதற்கு மறுப்பு கூற மாட்டான் என்று தெரிந்திருந்தால் இவ்வளவும் தனியாய் செய்திருக்க மாட்டார் அல்லவா?

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
ஆத்திரம் மறைந்து
அமைதி வந்ததே
ஆதியின் பக்கம் இருந்து வரும்
ஆத்ம திருப்தி சாருக்கு....
அன்னைக்கு எப்பிடியாவது
ஆதிக்கு சாருவை முடிக்க
அடுத்த கட்டம் நோக்கி.....
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
ஆத்திரம் மறைந்து
அமைதி வந்ததே
ஆதியின் பக்கம் இருந்து வரும்
ஆத்ம திருப்தி சாருக்கு....
அன்னைக்கு எப்பிடியாவது
ஆதிக்கு சாருவை முடிக்க
அடுத்த கட்டம் நோக்கி.....
Lovly