• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 4

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 4

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தான் ஆதி. அவ்வளவு கோபம்.

"க்கா! அந்த சிஸ்ஸரக் குடு" மாரி கேட்க, சாரு அதை தூக்கி ஏறிய கேட்ச் பிடித்துக் கொண்டவன், அந்த ரோஜாப் பூ மாலையின் நுனியை வாசலில் கட்டிவிட்டு நூலை வெட்டினான்.

"உங்க அம்மா இன்னும் வரலையா மாரி?" சுமதியும் அந்த ஷெட்டை அலங்கரித்துக் கொண்டே கேட்க,

"வரும் க்கா.. வர சொல்லிட்டு தான் வந்தேன்" என்றான் மாரி.

சாருவும் ப்ரீத்தியும் அங்கிருந்த கடவுளின் புகைப்படத்திற்கு பூவினை உதிர்த்து வைத்துக் கொண்டிருந்தனர்.

தேவி மீனாட்சியுடன் இணைந்து சர்க்கரை பொங்கல் தயாரித்துக் கொண்டிருந்தார்.

"ஆதி!" என்று வந்த தியாகு, அங்கே அனைவரும் இருப்பதைப் பார்த்துவிட்டு சந்தனம் வைத்துக் கொண்டிருந்த ஆதி அருகே செல்ல,

"எல்லாம் ரெடி ண்ணா.. சாமி கும்பிடலாம்" என்றாள் சுமதி.

"என்ன ஆதி வேலை எல்லாம் முடிஞ்சதா?" என்று தியாகுவும் கேட்க,

"அதான் இத்தனையும் வேலை இல்லாம இருக்கே.. முடிச்சுடுச்சுங்க" என்றான் கோபமாய்.

"என்ன டா.. ஆதி ஏன் இவ்ளோ கோபமா இருக்கான்?" மாரியிடம் தியாகு கேட்க,

"ஆதிண்ணா கோபமா இல்லைனா தானே அதிசயம்" மாரி கூற, சாரு சிரிக்க, தியாகுவின் பார்வையில் முகத்தை மாற்றிக் கொண்டனர்.

"என்ன டா?" ஆதியிடம் கேட்க,

"இப்ப எதுக்கு எல்லாம் வேலையை கெடுத்து இங்க வந்து நிக்கணும்? வேண்டாம்னு தானே சிம்பிளா வைக்கலாம்னு சொன்னேன்?" ஆதி கேட்க,

"இவ்வளவு தானா?" என்றான் தியாகுவும்.

"ண்ணா! காலேஜ் கட் அடிச்சிட்டு நிக்குறான்" மாரியை கூற,

"ஒரு நாள்ல காலேஜ்ல போய் கலக்டராவா ஆக போறான்? விடேன் டா" என்றார் மீனாட்சி.

"இதுக்கு நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணாமலே இருந்திருக்கலாம் ஆச்சி" மாரி கூற,

"நீயும் லீவ்வா ப்ரீத்தி?" என்றான் தியாகு.

"இல்ல ண்ணா மதியம் போகணும்.. அப்பா வர்ராங்க இல்ல?" என்று கூற,

"ஓஹ்! அங்கிள் வர்றாரா?" என்று விசாரித்தான் தியாகுவும்.

யாரும் தன் பேச்சை கேட்க போவதில்லை என ஆதி அமைதியாகிவிட,

"என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா?
நான் தூவும் விதை எல்லாம் உன் நெஞ்சில் பூக்குதா?"


என்று ஓரக் கண்ணால் ஆதியைப் பார்த்து சாரு பாட, பல்லைக் கடித்து நின்றான் ஆதி.

"கிளாஸ் போகலையா சாரு?" தியாகு கேட்க,

"போலாம்னு தான் கிளம்பினேன்ணா" என்றவள் ஆதியைப் பார்த்துவிட்டு,

"மதியாதார் தலைவாசல் மிதியாதேனு எனக்கும் தெரியும்.. ஆனாலும் இந்த மனசுக்கு தான் சூடு சொரணையே இல்லை போல.. மீனாட்சிம்மா கூப்பிட்டதும் ஓடி வந்துடுச்சு.. சொல்லி வையுங்க.. வேற யாருக்காகவும் நான் வரல" யாருக்கும் கேட்காமல் மெதுவாய் என்றாலும் வீராப்பாய் சொல்லியவள்,

"தொலைதூரம் நீயும்... தொட முடியாமல் நானும்..." என பாடலைத் தொடர, தியாகு சிரிக்க மீண்டும் பல்லைக் கடித்தான் ஆதி.

"அழகா பாடுற சாரும்மா.. ஒரு சாமி பாட்டா பாடேன்" மீனாட்சி கூற,

"அய்யயோ சாமி பாட்டா? இப்பவா?" என ப்ரீத்தி பதற, தேவி கூட பயந்தார் எங்கே பாடி விடுவாளோ என்று.

"ஏன்? சாமி பாட்டு தான்.. பூஜைக்கு சாமி பாட்டு பாடினா என்ன தப்பு?" என்று சுமதியும் கேட்க,

"சுமதிக்கா நீங்களுமா? அக்காவை உங்களுக்கு தெரியாதா? அம்மா வீட்டுல சாமி பாட்டு பாட சொன்னதுக்கு புஷ்பா பட சாமி பாட்டு பாடினா.. தெரியுமா உங்களுக்கு?" என்று சுமதி அருகே சென்று கூற,

சுமதி திரும்பி தேவியைப் பார்க்க, தேவியும் ஆமாம் என்று தலையாட்டினார்.

"வாலு! ஆதி தொழில் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிட்டு நல்லா பாடு" தியாகு சாருவிடம் மெதுவாய் கூற,

"நீ பாடு சாரு.. ஆதி சாமிக்கு தீபம் காட்டு டா" என்று மீனாட்சியும் கூற, பயந்தது போல அல்லாமல் அழகாய் பாடினாள் சாரு.

தேவி, தியாகுவின் அன்னை தந்தை, மாரியின் தாய், என இவர்களை மட்டுமே அழைத்திருக்க எளிதாய் முடிந்தது ஆதியின் புது கட்டிட பூஜை.

"ரொம்ப சிறப்பா வரணும் பா" என வாழ்த்தி தேவி விடைபெற,

"ஆமா பா.. சீக்கிரம் வரணும்" என்று கூறி கண்ணடித்து சென்றாள் சாரு.

"இவளுக்கு ஒரு முடிவு கட்டணும் ண்ணா.. சீக்கிரம் ஒரு பையனைப் பார்த்து கட்டி வைக்க சொல்லுங்க" ஆதி தியாகுவிடம் கூற,

"கேட்கணுமே அவ" என்றான் தியாகு.

"கேட்காம என்ன? வர வர ரொம்ப பன்றா" என்றுவிட்டு செல்ல,

சாருவின் விளையாட்டு, குறும்புத் தனம் எல்லாம் தெரிந்தாலும் ஆதி மேல் அவள் காட்டும் ஆர்வம் எந்த அளவிற்கு என்று தெரியாமல் பேச முடியவில்லை தியாகுவால்.

ஸ்ரீரங்கம் வரும் போது நேரம் பதினொன்றை தொட்டது.. ஆர்ப்பாட்டம் அதிகமாய் இருந்தது என்னவோ ப்ரீத்தியிடம் தான்.

ஆதியின் கடை பூஜையை முடித்துவிட்டு தேவி வீட்டிற்கு வந்துவிட, பின்னோடே மகள்களும் வந்துவிட்டனர்.

ஸ்ரீரங்கம் வந்ததும் ப்ரீத்தி அணைத்துக் கொள்ள, "வாங்கப்பா" என வரவேற்று புன்னகைத்தாள் சாரு.

"எப்படி இருக்கீங்க டா?" என்று உள்ளே வந்தார் தந்தை.

"நான் கூட அம்மா தான் இப்படி கட்டிப் புடிச்சி உங்களை வெல்கம் பண்ணுவாங்கனு நினைச்சேன்.. ப்ரீ முந்திக்கிட்டா.. அம்மா பாவம்ல ப்ரீ?" சாரு கிண்டல் செய்ய,

"உதை வாங்குவ சாரு" என்ற தேவி,

"போய் குளிச்சுட்டு வாங்க.. சாப்பிடலாம்" என சிரித்த கணவனை முறைப்புடன் அனுப்பி வைத்தார்.

"இருந்தாலும் என் பொண்டாட்டி தேவி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு பா" மனைவியை கிண்டல் செய்துவிட்டு உள்ளே செல்ல,

"வாய் கூடி போச்சு டி உனக்கு" என சாரு தலையில் கொட்டிவிட்டு சென்றார் தேவி.

"ப்பா! இதெல்லாம் பக்கத்து ஸ்வீட் கடையில வாங்கினதுன்னு நினைச்சுக்காதீங்க.. அம்மா ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து பதம் பார்த்து உங்களுக்காகவே செஞ்சுருக்காங்க" என அங்கிருந்த பதார்த்தங்களை காட்டி ப்ரீத்தி கூற,

"ஆமாப்பா.. இதுல பாதி ஐட்டம்ஸ் பேர் கூட எனக்கு தெரியாது" என்றாள் சாரு..

"ஏன் டி உங்களுக்கு நான் இதெல்லாம் செஞ்சு தந்ததே இல்லையா?" தேவி கேட்க,

"இத்தனையும் ஒண்ணா செஞ்சு தந்தது இல்லையே.. அதானே இங்க பஞ்சாயத்தே" என்றாள் சாரு..

"எல்லா வீட்லயும் பெருசு அமைதியா இருக்கும் சின்னது சேட்டை பண்ணும்.. இங்க கழுதை வயசானது தான் வாலு இல்லாத..." என்று முடிக்கும் முன்,

"தேவி மா!" என்று பாதியில் தடுத்திருந்தார் ஸ்ரீரங்கம்.

"சின்ன பசங்க தானே? பேசிட்டு போகட்டும்னு ரசிக்குறது இல்லாம.. என்ன பேசற.. ஆமா என் புருசனுக்கு அப்படி தான் செய்வேன்னு சொல்லிட்டு போவியா அதை விட்டுட்டு" என்று கூற,

"அப்படி சொல்லுங்க பா.. அதெல்லாம் சொல்லுவாங்க.. ஆனா புருஷனை ரொம்ப நாள் கழிச்சு பாக்குற வெட்கத்துல கை கால் ஓடலை" என இன்னும் கலாய்த்தாள் பெரிய மகள்.

"இவ நிறுத்த மாட்டா.. ஏங்க.. நம்ம பக்கத்து வீட்டு மீனா பையன் ஆதி இருக்கான்ல! கடையை விரிவு பண்ணிருக்கான்.. காலையில தான் பூஜை போட்டான்.." என்று கூற, சாருவைப் பார்த்தார் தந்தை.

அவரைப் பார்த்து சாரு கண்ணடிக்க, சிரித்துக் கொண்டவர்,

"பரவாயில்லையே.. நல்ல முன்னேற்றம் தான்.. சாயந்திரமா போய் ஒரு எட்டு பார்த்துட்டு வர்றேன்" என்று கூற,

"ம்ம் ஆமா.. ஆனா லோன் போட்டு தான் பண்ணிருப்பாங்க போல.." என்று கூறவும்,

"அவங்க பொண்ணு சுமதி கல்யாணம் வேற இருக்கே.. யோசிக்காமலா வாங்கியிருப்பாங்க..ஆதி அப்பா இறந்து நாலு அஞ்சு வருஷம் இருக்குமா? அதுக்குள்ள இவ்வளவு தூரம் வர்றதும் பெருசு தானே தேவி?" என்று கணவர் கூற,

"இல்லனு சொல்ல மாட்டேன்ங்க.. ரொம்ப பொறுப்பான பையன் தான்.." என்று கூறியபடி பாதுஷாவை எடுத்து தட்டில் வைக்க,

"ஏன் தேவி நம்ம சாருக்கு கூட வயசாகுது தானே.. ஏன் நாம அவ கல்யாணம் பத்தி யோசிக்கவே இல்ல?" ஸ்ரீரங்கம் கேட்க,

முகமெல்லாம் பல்லாக சிரித்த தேவி "நானும் இதே தான்ங்க உங்ககிட்ட பேசணும் நினச்சேன்" என்றார்.

"பாரேன் க்கா.. உனக்கு கல்யாணம்னு எல்லாம் அம்மா பல்லை காட்டல.. அவுகள மாதிரியே அவுக ஹஸ்பண்ட்டும் யோசிச்சிருக்காங்ளாம்.. அதுக்கு தான் இவ்வளவு சந்தோசம்.." என்று ப்ரீத்தி எடுத்து கொடுக்க,

"ம்மா! இதெல்லாம் ஓவர்" என்றாள் சாரு.

"சும்மா இருங்க டி.. உங்களுக்கு லீவ் எவ்வளவு நாள்? முடிஞ்சா லீவ்வை கூட்டிட்டு சாரு கல்யாணத்தை முடிச்சுட்டே போகலாம்ல?" தேவி கணவனிடம் கேட்க,

"ம்மா! கல்யாணம்னா எவ்ளோ இருக்கு.. என்னவோ நாளைக்கேன்ற மாதிரி பேசுறீங்க?" ப்ரீத்தி கேட்க,

"சாருக்கு எல்லாம் தான் இருக்கே ப்ரீத்தி.. மாப்பிளை மட்டும் தான் பார்க்கணும்.. கையோட முடிச்சுட்டா அடுத்த ரெண்டு வருஷத்துல உனக்கு பண்ணிடலாம்ல?" என்று தேவி முடித்தார்.

"க்கா! அம்மா செம்ம ஸ்பீட்ல இருக்காங்க" சாருவிடம் கூற,

"அப்பா பார்த்துப்பாங்க பிரீ!" என்றாள் தந்தை மேல் இருந்த நம்பிக்கையில்.

தந்தையிடம் தான் ஏற்கனவே இதைப் பேசிவிட்டாளே! அவரும் அதற்கு
எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே என்ற நம்பிக்கை.

மகள் இதை பேசும் பொழுதே எவ்வளவு தூரத்தில் இதில் உறுதியாய் இருக்கிறாள் என அறிந்தவர் அதை எதிர்த்து பேசி பயனில்லை எனவும் எதிர்ப்பதற்கு காரணம் இல்லை எனவும் கூட யோசித்துக் கொண்டார்.

"ஒன்னறை மாசம் லீவ்.. அதுக்குள்ள முடிக்குறதுன்னா.." என்று யோசித்தவர்,

"அடுத்த லீவையும் சேர்த்து வேணா எடுத்துக்கலாம்.. சரி பார்ப்போம்" என்று முடித்துக் கொண்டார் ஸ்ரீரங்கம்.

வரும் பொழுதே முடிவு செய்திருந்தார் இந்த முறை ஆதியிடம் பேசுவது என்று. ஆனால் இப்பொழுது குழப்பம் அவனிடம் பேசுவதா இல்லை ஆதியின் வீட்டில் பேசுவதா என்று தான் இருந்தது.

முதலில் தேவியுடன் கலந்து பேச வேண்டும்.. அடுத்து முடிவு செய்து கொள்ளலாம் என நினைத்தவர் ஓய்வு எடுக்க சென்றார்.

காதலிக்கின்றேன் என்ற மகள் அடுத்து ஆதியைப் பற்றியோ அடுத்தக் கட்டத்தைப் பற்றியோ என்று எதுவும் எப்பொழுதும் தந்தையிடம் பேசியதில்லை.

சொல்ல வேண்டும் என்று தோன்றியிருக்க, அதை மறைக்காமல் சொல்லியும் விட்டாள். இனி அவர்கள் பாடு என்பதாய் தான் இருந்தது அவளது நடவடிக்கை.

ஸ்ரீரங்கம் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, அன்றே ஆதி வீட்டில் சுமதியைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளை வீட்டினர் கையோடு பூவையும் வைத்து சென்றனர்.

தொடரும்..
 
  • Like
Reactions: Jeyalakshmi

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
அப்பாவிடம் காதலைச் சொன்ன
அசால்ட்டு சாரு அசத்தல்....
ஆனா ஆதி சம்மதிக்க வேணுமே???💐💐💐
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அப்பாவிடம் காதலைச் சொன்ன
அசால்ட்டு சாரு அசத்தல்....
ஆனா ஆதி சம்மதிக்க வேணுமே???💐💐💐
சம்மதிப்பாரா 😍🫣