• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 7

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 7

"இல்ல சார்.. இது சரி வராது" இரண்டாம் முறையாய் ஸ்ரீரங்கம் முன்பு ஆதி கூற, அவனை முறைத்தபடி அருகில் நின்றார் மீனாட்சி.

சரியாய் இரண்டு மாத முடிவில் திருமணத்திற்கும் அதற்கு முந்தைய நாளே நிச்சயத்திற்கும் என குறித்து வாங்கி வந்திருந்தனர் ஆதி மீனாட்சியுடன்.

வந்து மீனாட்சி காபி எடுத்து வர, அதைப் பருகியபடி சுமதியிடம் ஆதி பேசிக் கொண்டிருக்க வீட்டிற்குள் வந்திருந்தனர் தேவியும் ஸ்ரீரங்கமும்.

"வா தேவி.. வாங்க அண்ணே" என்று மீனாட்சி வரவேற்றார்.

"வாங்க சார்!" என்ற ஆதி அவர்களின் வரவு ஏன் என்று யோசித்தபடி நிற்க, மீனாட்சி அதை எல்லாம் நினைக்கவே இல்லை.

"சுமதி பால் காய வச்சுட்டேன்.. காபி கலந்து எடுத்துட்டு வா" என்று கூற,

"அதெல்லாம் வேண்டாம் மீனா..உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அதான்" என்றபடி ஆதியை அவர் பார்க்க,

அவரை பார்த்தவன் "சரி நீங்க பேசுங்க.. நான் கடையைப் பாக்குறேன் மா" என்று நகரப் போனான்.

"ஒரு நிமிஷம் ஆதி!" என்று நிறுத்தி இருந்தார் ஸ்ரீரங்கம்.

அதில் என்ன என்று ஆதியுடன் மீனாட்சியுமே பார்க்க,

"முக்கியமான வேலையா ஆதி? நாங்க உன்கிட்டயுமே பேசணும்.. அவசர வேலைனா பாருங்க.. நாங்க அப்புறம் கூட வர்றோம்" என்று கூற, அவருக்கு பதில் கூறாமல் அன்னையைப் பார்த்தான் ஆதி.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அதான் மாரி கடையில இருக்கானே.. அவன் பார்த்துக்குவான்.. நீங்க உட்காருங்க.. ஆதி இப்படி வா" என்ற மீனாட்சிக்கு என்னவோ என்று தான் தோன்றியது.

அனாலும் ஏதோ முக்கியமான விஷயம் என்பது வரை புரியவும் உடனே நிலைமையை கையில் எடுத்துக் கொண்டார்.

"சொல்லுங்க ண்ணே.. ஏதோ பேசணும்னு வந்துருக்கீங்கனு தெரியுது.. ஆனா என்னனு பிடிபடல" என்று மீனாட்சியே சில நொடிகள் கடந்ததும் எடுத்துக் கொடுத்தார்.

சுமதியும் உள்ளே இருந்து கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

"நாள் குறிக்க போயிருக்குறதா மாரி சொன்னான் மீனா.. குறிச்சாச்சா?" தேவி கேட்க,

"ஆமா தேவி.. கையோட அந்த வேலையும் முடிஞ்சது.. இன்னும் ரெண்டு மாசம் இருக்கு" என்றவர் தேதியைக் கூற, தேவியும் ஸ்ரீரங்கமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"ஒன்னும் இல்ல.. நம்ம சாருக்கு கூட சுமதி வயசு தானே! அவ கல்யாணத்தை பத்தி தான் பேசணும்" என்றதும் ஆதிக்கு பக்கென்று தான் ஆனது.

அவன் விழித்த விதத்தை பார்த்தபடி தான் அமர்ந்திருந்தார் ஸ்ரீரங்கம்.

'அவ கல்யாணத்தை பேச இங்க வந்திருக்காங்கன்னா...' என நினைத்தவனுக்கு ஓரளவு புரிந்தது.

"நல்ல விஷயம் தான் தேவி.. நம்ம சாருக்கு என்ன? அவளுக்கெல்லாம் உடனே அமைஞ்சிடும் பாரு" என்றார் மீனாட்சி மனதில்பட்டதை.

"அதில்லங்க.. நாங்க சாருக்கு தான் ஆதியை கேட்டு வந்திருக்கோம்" பட்டென்று ஸ்ரீரங்கம் சொல்லிவிட, தான் கேட்டது உண்மை தானா? என்பதை போல ஒருசில நொடிகள் புரியாமல் அமர்ந்துவிட்டார் மீனாட்சி.

"என்ன சொன்னிங்க?" சரிதானா என சரி பார்க்க மீனாட்சி கேட்க,

"ம்மா!" என்றவன்,

"தப்பா எடுத்துக்காதீங்க சார்! இப்ப தான் சுமதிக்கு நல்ல இடம் வந்திருக்கு.. இன்னும் எனக்கு நிறையவே நேரம் வேணும்.. எனக்கு இப்ப கல்யாணம் பண்ற ஐடியா எல்லாம் இல்ல" என்று ஆதி முடிக்க,

சந்தோஷத்தில் தான் கேட்ட வார்த்தைகள் சரி தானா என மீனாட்சி யோசிக்கும் முன் அதை சரி தான் என்று கூறி வெட்டியும் விட்டிருந்தான் ஆதி.

இப்பொழுது தான் மகனுக்கு எதிராய் மற்றவர் முன் பேசினால் சரியாய் இருக்காதே என மீனாட்சி இருக்க,

"நான் எதுவும் தெரியாம வர்ல ஆதி.." என்ற ஸ்ரீரங்கம்,

"மீனாட்சி அம்மா! என் பொண்ணு சாருக்கு ஆதி மேல விருப்பம்.. விருப்பம்னா அவளுக்கு ஆதியை புடிச்சிருக்கு.. அதை என்கிட்ட சொன்னா.. ஆதி கூட வேண்டாம்னு சொல்லிட்டதாவும் சொன்னா" என்று அவர் போக்கில் பேசிக் கொண்டிருக்க, வாயில் கைவைக்காத குறையாய் கேட்டிருந்தார் மீனாட்சி.

"ஆதி! அவ விளையாட்டு பொண்ணு தான்.. ஆனா உங்ககிட்ட சொன்னது விளையாட்டு இல்ல.. அவ ரொம்ப சீரியஸ்ஸா தான் இருக்கா உங்க விஷயத்துல" என்றும் அவர் கூற, ஆதிக்கு தர்மசங்கடமாய் இருந்தது அவர் இப்படி தன் முன் பேசுவதை பார்த்து.

"ஆதி! என்ன டா இதெல்லாம்? என்கிட்ட எதுவுமே நீ சொல்லலையே?" என்று அன்னை கேட்க,

"ப்ச்! ம்மா" என்றவன்,

"இல்ல சார்.. அதெல்லாம் எப்பவோ நடந்து நான் மறந்தும் போனது.. சாருக்கு நல்ல மாப்பிள்ளையாவே கிடைக்கும் சார்.. இது சரி வராது" என்றே மீண்டும் கூற,

"நல்ல மாப்பிள்ளை கிடைப்பாங்க தான்.. ஆனா சாரு சம்மதிக்கணுமே?" என்றார் தேவி.

"நிஜமாவே சாருக்கு ஆதியை புடிச்சிருக்காமா?" முகமெல்லாம் புன்னகையுடன் ஆதி பேசியதை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை போல மீனாட்சி தேவியிடம் கேட்க, அவன் அன்னையை கண்களால் எரித்ததை எல்லாம் கவனிக்கவே இல்லை அவர்.

"ஆமா மீனா.. சாரு என்கிட்ட கூட சொல்லல.. இவருக்கிட்ட தான் முதல்ல பேசி இருக்கா.. இன்னும் ரெண்டு மாசத்துல இவர் ஊருக்கு கிளம்பனும்.. அதான் இப்ப பேசிடலாம்னு என்கிட்ட சொன்னாரு" என்று தேவி விளக்கம் கொடுக்க,

"ஹையோ எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? முன்னாடியே தெரிஞ்சிருந்தா..." என்று மீனாட்சி பேசிக் கொண்டிருக்க,

"ம்மா!" என்ற ஆதியின் சத்தம் அதிகமாகி இருந்தது.

"என்ன டா பிரச்சனை உனக்கு? சாரு... சாருவை போய் வேண்டாம்னு சொல்லி இருக்கியே? இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்ல" என்று அவன் அருகே வந்து புலம்ப, மீனாட்சி விருப்பம் தெரிந்துவிட்டது சாரு அன்னை தந்தைக்கு.

"ம்மா கொஞ்சம் சும்மா இரும்மா!" அவரை அடக்கும் விதமாய் அவருக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாய் கூறினாலும் பல்லைக் கடித்து தான் பேசினான் ஆதி.

"ஆதி! எனக்கு புரியுது.. ஆனா ஏன் உங்களுக்கு விருப்பம் இல்லைனு தெரிஞ்சுக்கலாமா? ஏன்னா அது தெரிஞ்சா தான் சாருகிட்ட நாங்க அடுத்து பேச முடியும்" இப்பொழுதும் தன்மையாய் மட்டுமே கேட்டு நின்றார் ஸ்ரீரங்கம்.

அவருக்குமே ஆதியின் மேல் நல்ல மதிப்பு இருக்க, காரணம் என்னவாய் இருக்கும் என்று ஒரு வகை குழப்பம். அன்னை சரி எனும் போது ஏன் என்பது போன்ற ஒரு பார்வை அவரிடம்.

"வேற யாரையாவது?" என்று ஸ்ரீரங்கம் கேட்கும் பொழுதே,

"இருந்துட்டாலும்..." என்றது ஆதியின் மரியாதைமிகு அன்னை.

"ம்மா!" என மீண்டும் மீண்டும் அவரை அடக்க நினைக்க முடியத்தான் இல்லை அவனால்.

"சரி நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு.. கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிற ஐடியா இருக்குதா இல்லையா?" மீனாட்சியே அவனிடம் கேட்க, இப்பொழுது சுமதியும் வெளியே வந்திருந்தாள்.

'அண்ணன் சம்மதித்தால் என்ன?' என்று தான் அவளுக்கும் எண்ணமே.

"நான் அதை எல்லாம் இன்னும் நினச்சு கூட பார்க்கல மா.."

"அப்படின்னா? புரியலையே?" அன்னையும் அவனை விடுவதாய் இல்லை.

"ஓப்பனா சொல்லிடலாமே ஆதி" ஸ்ரீரங்கம் கேட்க,

"சார் ப்ளீஸ்! நீங்க என்கிட்ட இப்படி நிக்கிறதே எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. ஓப்பனா சொல்லனும்னா எனக்குன்னு ஏகப்பட்ட கடமை இருக்கு சார்.. உங்களுக்கே தெரியும்.. அப்பா இறந்த அப்புறம் நாங்க எத்தனை வருஷம் பின்னாடி போய்ட்டோம்னு.." ஆதி சொல்ல,

"அதான் சுமதிக்குன்னு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிடுச்சே?" என்றார் தேவி.. இவ்வளவு தானே என்பதாய் அவர் சொல்லி இருக்க,

"கல்யாணம் தான் முடிவாகி இருக்கு.. இன்னும் எவ்வளவோ இருக்கே.. கல்யாணம் அடுத்து சீர், அடுத்தடுத்துன்னு அவளோட வளைகாப்பு.. குழந்தைனு வந்த பின்னாடி அந்த குழந்தைக்குன்னு செய்ய நிறைய இருக்கு சார்.. இந்த கடைக்கு கூட நான் லோன் தான் போட்டிருக்கேன்.. அதுக்கெல்லாம் எவ்வளவு டைம் எடுக்கும்னு தெரியல.." ஆதி சொல்ல,

"ஓஹ்! அப்ப இதெல்லாம் முடிச்சிட்டு தான் கல்யாணம் பண்ணுவியா?" மீனாட்சி கேட்க, ஆதி முறைத்தான்.

"டேய்! இதெல்லாம் சாதாரணமா ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்குறது தான்.. அதுக்காக நல்ல ஒரு வாழ்க்கையை வேண்டாம்னு சொல்ற நீ.. உனக்கு அது புரியுதா?" என்ற மீனாட்சிக்கு இப்போது ஆதங்கமாய் இருந்தது ஆதியின் பேச்சில்.

"அப்பா இருந்திருந்தா எல்லாம் அந்தந்த நேரத்துல நல்லபடியா நடந்திருக்கும் அப்படினு நான் நினச்ச மாதிரி நீங்க எப்பவும் நினைச்சிட கூடாது மா.. அது எனக்கு தான் வேற பேர் கொடுக்கும்" என்றவன் பேச்சு புரிவதாய் இருந்தது மற்றவர்களுக்கு.

"உங்களுக்கு புரியும்னு நினைக்குறேன் சார்" என்ற ஆதி கடைக்கு சென்றுவிட, எதுவும் சொல்லாமலே வெளியேறினர் தேவி, ஸ்ரீரங்கம்.

"ஏய்! கேட்டியா? சாருக்கு இவனை புடிச்சிருக்காம்" ஆதி சொல்லி சென்றதெல்லாம் பெரிதில்லை என்பதை போல சந்தோஷத்துடனே மீனாட்சி மகளிடம் கூற,

"எனக்கு தெரியும் மா" என்ற பதிலில் சுமதிக்கும் நான்கு கொட்டு விழுந்தது.

"ம்மா சாரு அண்ணனை எப்ப பாரு வேணும்னே வம்பிழுக்கும்.. அண்ணனுக்கு தெரிஞ்சாலும் காட்டிக்க மாட்டாங்க.. ஆனா இவ்வளவு தூரம் அதுவும் அவங்க அப்பாவே என் பொண்ணு உன்னை தவிர யாரையும் கட்டிக்க மாட்டான்னு சொல்லியும் அண்ணன் என்னம்மா இப்படி சொல்லிட்டு போறாங்க?" சுமதியும் அண்ணன் மேல் கோபமாய் கேட்க,

"உன் அண்ணனுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சு போல.. உனக்கு இனி தான் கல்யாணமே நடக்க போகுது.. இதுல அவன் உனக்கு குழந்தை பொறந்து அது நடந்து பழகின்னு அந்த புள்ள வளர்ர வரை கணக்கு வச்சுட்டு கல்யாணம் வேணாம்ங்குறான்.. இனி சாரு இவனை திரும்பி பார்த்தாப்புல தான்" மீனாட்சி மகளிடம் புலம்பினார்.

அவருக்கு புரியவில்லை ஆதி நினைப்பதில் தவறில்லை என்று.

தந்தை இல்லாத இடத்தில் இருப்பவன், 'தந்தை இல்லை தானே இப்படி தான் இருக்கும்' என்ற சொல் வராமல் இருக்கவே அவன் இவ்வளவு பேசியதும்.

அப்படி நினைக்கும் பொழுது தன் திருமணம் எல்லாம் இரண்டாம் பட்சமாகி போனது அவனுக்கு.

ஊர், உலகம், உறவு இவர்களின் பேச்சுக்கு எல்லாம் காது கொடுக்க கூடாது என எவ்வளவு தான் கூறினாலும் இவர்கள் இல்லாத உலகத்தில் நாம் வாழவில்லையே?

அதற்காக அவர்களுக்காக என்றும் இல்லாமல் இது தான் உண்மை என்று தான் பேசி இருந்தான் ஆதி.

கொஞ்சம் கவலை இருந்த போதும் சாருவின் விருப்பத்தை அவள் தந்தையோடு இப்பொழுது சுமதியுமே கூறியிருக்க, ஆதி கூறியது ஒரு ஓரம் இருந்தாலும் ஒருவித சந்தோஷ மனநிலையில் தான் இருந்தார் மீனாட்சி.

அதே போல தான் சாருவும் கூறிக் கொண்டு இருந்தாள் அவள் தந்தை அன்னையிடம்.

"கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லல இல்ல ஆதி? அப்புறம் ஏன் இப்படி இருக்கிங்க? நடக்கும் போது நடக்கட்டும்" என்று எப்பொழுதும் போலவே இருந்து கொண்டாள்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
கடமையும் கடனயும்
கண்முன் நிறுத்தி
கல்யாணம் வேண்டாம் என ஆதி....
காத்திருப்பேன் நான் என சாரு.....
காலம் இவர்களுக்கு வைத்திருக்கும்
கோலம் என்னவோ????
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
கடமையும் கடனயும்
கண்முன் நிறுத்தி
கல்யாணம் வேண்டாம் என ஆதி....
காத்திருப்பேன் நான் என சாரு.....
காலம் இவர்களுக்கு வைத்திருக்கும்
கோலம் என்னவோ????
Well said.. Semma lines pa thank u