• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓலை-10

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
232
63
Kumbakonam
ஓலை- 10


கடந்த காலம்…


சத்யபிரகாஷ் நீட்டிய பையை பார்த்த சுஜாதா, மீண்டும் கோபப்பட…


அவளுக்கு முன்பு அந்த பையை ஆட்டிய, சத்யபிரகாஷ், " என்ன வேணாமா?" என்று புன்சிரிப்புடன் கேட்டான்.


"எனக்கு ஒன்னும் வேணாம். " என்றவள் முகத்தை திருப்பிக் கொள்ள.


"என்ன சுஜா பாப்பா. கோபமா இருக்கீங்களா? மாமா, உனக்காக கஷ்டப்பட்டு, ஊரெல்லாம் தேடி எடுத்துட்டு வந்தேன்."


" எனக்கு வேணாம்னா, வேண்டாம்." என்றாள்.


" அப்ப சரி… இது நான் யார்கிட்டயாவது கொடுத்துடுறேன். பாவம் எப்பப் பார்த்தாலும், மருதாணி வைச்சா, கையை மோப்பம் புடுச்சுட்டே இருப்பியேனு, இங்கே கிடைக்காமல், அடி அண்ணாமலையார் கோவில் வரைக்கும் போனேனே என்ன சொல்லணும். அப்புறம் தீபாவளி முடிஞ்சு ஸ்கூலுக்கு போனீன்னா, எல்லாரும் ஏன் மருதாணி வைக்கலைன்னு கேட்டா என்ன சொல்லுவ… ஏதாவது சொல்லி அவங்களை சமாளிக்கணும். காரணத்தை இப்பவே யோசிச்சு வச்சுக்க… " என்றவன் அங்கிருந்து கிளம்ப முயல.


அவள் முகம் யோசனையில் இருந்தது. ' தீபாவளி முடிந்து, பள்ளிக்கு போகும்போது அவரவர் போட்டு வரும் ஆடைகளைப் பற்றியும், யார் கை அதிகம் சிவந்திருந்தது, என்று ஆராய்ச்சி செய்வதிலும், வீட்டில் செய்யும் பலகாரங்களை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளுவதில் அல்லவா பொழுது போகும்.' என்று எண்ணியவளோ, அடுத்த நிமிடமே பல்டி அடித்தாள்.

" நீங்க பாவம். ரொம்ப கஷ்டப்பட்டு பறிச்சிட்டு வந்திருக்கீங்க. நான் வாங்கிக்கலைன்னா, உங்க மனசு வருத்தப்படும். அதான் வாங்கிக்கிறேன்." என்றவள் ரெண்டு எட்டு எடுத்து வைத்தவள், மீண்டும் திரும்பி வந்து, " அப்புறம் இன்னொன்னு மாமா. இனிமே என்னை வம்பிழுக்கக் கூடாது." என்று ஆர்டர் போட்டு விட்டு குதித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.


தனது அன்னையிடம் கொடுத்து, அரைத்து தரச் சொல்லி, ஆர்ப்பாட்டம் செய்யும் அவளையே, அவன் பார்த்துக் கொண்டிருக்க…


" ம்ஹூம் ." என்ற கணைப்பு சத்தம், அவனது கவனத்தை ஈர்த்தது.

திரும்பிப் பார்த்தால், மனோகர் கைக் கட்டிக் கொண்டு, அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.


' ஐயோ! மாட்டிக்கிட்டேனே…' என்று மனதுக்குள் அலறிய சத்யபிரகாஷோ, " என்ன மனோ?" என்று ஒன்றும் நடக்காதது போல வினவ.


" நீ நடந்துக்குறது சரியில்லை. அவ சின்ன பொண்ணு." என ஒரு அண்ணனாக கண்டிப்புடன் வினவ.


" டேய்… எனக்கும் அந்த வெங்காயம் எல்லாம் தெரியும். நேத்து எப்படி அழுதா, உன் தங்கச்சி. ஒரு அண்ணனா, நீ செய்ய வேண்டியது. நான் செய்துருக்கேன், என் அத்தை மகளுக்காக." என்று தைரியமாக நிமிர்ந்து பார்த்து கூறினான்.


" ம்… நீ நடத்து டா. ஆனால் நீ என் கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம். நானும் வீட்டிலேயே இருந்திருப்பேனே. க்ரவுண்டுக்கு போய் அசிங்கப்பட்டுருக்க மாட்டேன்." என்றான் மனோகர்.


" அதான் டா மச்சான் நான் சொல்லலை." என்ற சத்யபிரகாஷ், மனோகரின் கையில் சிக்காமல், நைசாக வெளியே நழுவ.


" டேய்… உன்னை கொல்லாமல் விட மாட்டேன்." என்று கத்தியவாறே, அவனை துரத்தினான் மனோகர்.

அதற்கு பிறகு இருவரும், அப்படியே வெளியே ஊர் சுற்ற சென்றனர்.


உள்ளே சென்ற சுஜாதாவோ, " அம்மா… இந்தா மருதாணி. அரைச்சு தா." என்றாள்.


" ஏது டி‌?"


"சத்யா மாமா பறிச்சுட்டு வந்தாங்க மா."


" சரி வச்சுட்டு போ. அரைச்சு தரேன்."


"அம்மா…" என்றபடியே சுஜாதா அங்கேயே நிற்க.


" இன்னும் என்னடி. அதான் அரைச்சுத் தரேன் என்று சொல்லிட்டேனே. வேலைப் பார்க்க விடேன் டி."


" இல்லை மா. சீக்கிரமா அரைச்சு தா மா. நான் சாயந்திரம் பாட்டு கேட்கணும்." என்றாள் சுஜாதா.


"அடியே பாட்ட காதால கேக்கப் போற. மருதாணியை வைக்கப் போறது நான். உன்னோட ஒரே அக்கப்போரா இருக்கு. அடி வாங்காம ஒழுங்கா ஓடிப் போயிடு." என்றார் சுஜாதாவின் அம்மா.


" அம்மா… புது பாட்டு போடுறதே வாரத்துக்கு ஒரு தடவை தான். நான் அதே கேப்பேனா, இல்லை நீ ஒழுங்கா வைக்கிறீயா என்று பார்க்க முடியுமா?" என்றாள் சுஜாதா.


" அடராமா… இவக் கிட்ட இருந்து என்னை யாராவது காப்பாத்துங்களேன்." என்று அவர் புலம்ப.


அவருக்கு அபயம் அளிப்பதற்காகவே அங்கே வந்தார் மதியரசியின் அன்னை.


" என்னாச்சு அண்ணி? எதுக்கு பிள்ளையை திட்டுறீங்க."


" ம்கூம் நீ தான், உன் அண்ணன் மகளை மெச்சுக்கணும்." என்றவர் சுஜாதாவிடம் திரும்பி, " உன் சின்ன அத்தை கேக்குறா, அவக் கிட்ட சொல்லு, அவளே வச்சுவிடுவா." என்றவர் மகளிடமிருந்து நகர்ந்துக் கொண்டார்.


என்னவென்று சுஜாதாவிடம், விசாரித்த அவரது அத்தை, சுஜாதா கேட்டது போலவே‍, நேரத்தோடு அரைத்து, அழகாக வைத்து விட்டார்.



சுஜாதா ஆசைப்பட்ட மாதிரியே பாட்டும் கேட்டாள்.



வாரத்திற்கு ஒரு நாள், வெள்ளிக்கிழமை அன்று தான் சென்னை வானொலியில் புது பாடல்கள் போடுவார்கள்.


அதை கேட்பது தான் அவர்களது பொழுதுபோக்கு. சில நாடகங்களும் அதில் வரும். சுஜாதாவிற்கு, அதில் பெரிதாக ஆர்வம் கிடையாது. புது பாடல்கள் கேட்பது தான் உயிர். எப்பொழுது வெள்ளிக்கிழமை வரும் என்று காத்திருப்பாள்.


அன்றைய பொழுது விடியும் போது இருந்த சோகமான மனநிலை, முடியும் போது இல்லை. மகிழ்ச்சியாகவே அவளுக்கு முடிந்தது. காலையில் கையில் இல்லாத மருதாணியை, இப்போது போட்டியிருந்தாள். அவள் முகமோ மலர்ந்திருந்தது.'


" வாவ் சூப்பர் மா. பாருங்க அப்பா, அப்பவே உங்களுக்காக, எவ்வளவு மெனக்கெட்டுருக்கிறார். ஆனாலும் அப்பா இப்படிலாம் இருப்பாங்கன்னு நினைக்கவே இல்லை. ஹவ் ரொமான்டிக்." என்று சுனிதா ஆர்ப்பரிக்க.


சந்தியா அதை அமோதித்தாள்.


" அடியே… பொண்ணுங்களா… உங்க அப்பா என்ன அழ வைச்சதுலாம், உங்க கண்ணுக்கு தெரியல. மருதாணி கொண்டு வந்து மட்டும் தான் தெரியுது. என்னவோமலையையே புரட்டிட்டு வந்தது மாதிரி இவ்வளவு ஆர்ப்பாட்டம்." என்ற சுஜாதா, இருவரையும் பார்த்து முறைக்க.


" அம்மா… சின்ன விஷயமாக இருந்தாலும், உங்க ஆசைக்காகத் தானே அப்பா, மெனக்கெட்டு இருக்கார்

இவ்வளவு பிரியமா இருக்கிற அப்பாவை விட்டுட்டு வேற ஆள் மேல காதல் எப்படிமா வந்தது?" என்று சுனிதா தாளமாட்டாமல் வினவ.


"ஏன்னு ஈஸியா கேட்டுட்ட. ஆனால் இதற்கு என்னிடம் பதில் இல்லை‌. ஒரு வேளை இப்போ நான் உங்கக் கிட்ட சொன்ன மாதிரியே என் லைஃப் ஸ்மூத்தா போயிருந்தா, ஒரு வேளை என் மனம் அலைபாயாமல் இருந்திருக்குமோ? தெரியலை.

இதுவரைக்கும் சந்தோஷம் மட்டுமே இருந்த என் வாழ்க்கையில சில சங்கடங்கள் வர ஆரம்பிச்சது. கவலையே இல்லாமல் சிறகடிச்சிட்டு இருந்த என்னை, சிறையில் அடைக்க முயன்றனர்.


யாரோ ஒருவர் செஞ்ச தவறால, பாதிக்கப்பட்டது நான். நான் என்று சொல்றதை விட நாங்க நாலு பேரும் தான், என்று சொல்றது இன்னும் பொருத்தமாக இருக்கும்." என்ற சுஜாதா பெருமூச்சு விட‌…


' நீங்க நாலு பேர் மட்டும் தான் பாதிக்கப்பட்டீங்களா? நான் இல்லையா?' என்று தலையை சாய்த்து கோபி மனதிற்குள் வினவ.


அந்த கேள்விக்கான பதிலை சொல்ல முயன்ற மனசாட்சியை தட்டி வைத்தாள் சுஜாதா.


" என்னமா ஆச்சு?" மென்மையாக வினவினாள் சந்தியா.


தன் கையிலிருந்த செல்ஃபோனில் மணியைப் பார்த்தவள், " இப்பவே நேரமாச்சு… அந்த கதையை ஆரம்பிச்சா, கோவில் நடை சாத்தணும்னு நம்மளை வெளியே போக சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


அதுவுமில்லாமல் பாட்டிங்க வேறு ஏதாவது சொல்ல போறாங்க. இங்கே இருக்குற பேரன், பேத்திங்க கண்ணுக்குத் தெரியாது. உங்களைத் தான் தேடுவாங்க." என்று தனது மன சுணக்கத்தை மறைத்து மகள்களை வம்பிழுத்தாள் சுஜாதா.


" இல்லையா பின்ன… எப்பவோ ஒரு தரம் வரும் நாங்கள் ஸ்பெஷல் தான்." என்று சுனிதா போர்க்கொடித் தூக்க.


சுஜாதாவிற்கு அது தானே வேண்டும். பிள்ளைகளின் மனதை மாற்றியவள், வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.


" அம்மா… வீட்டுக்கு போனா சொல்ல மாட்டியே…" என்றாள் சுனிதா.

அவளுக்கு அவள் கவலை. மீதிக் கதையைக் கேட்காமல் தலை வெடித்து விடும்.


" நைட் மொட்டை மாடிக்குக் கூட்டிட்டுப் போய் சொல்றேன்." என்றார் சுஜாதா.

மொட்டை மாடிக்கு போறோம் என்று அவர் சொன்னதும் குடும்பமே நிலா சோறு சாப்பிட கிளம்ப போவதை அப்போது அறியவில்லை.


கோவிலில் இருந்து வந்த இவர்கள் மூவரையும் அவருடைய பெரிய பாட்டி கடிந்து கொண்டார். " சுனிதா, சந்தியா… உங்க அம்மா தான் கோவிலே கதியா இருப்பான்னா, நீங்களும் அவக் கூட சேர்ந்துக்கிட்டீங்களா? கோயிலுக்கு போனமா, வந்தோமான்னா இருக்க மாட்டீங்களா? அங்கே போய் இருக்கறதுக்கு, இந்த பாட்டிங்களோடு பேசிட்டு இருந்தா என்ன குறைந்தா போய்டுவீங்க‌" என்று கேட்க…


" சாரி பாட்டி. இனி ஃபுல்லா உங்க கூட தான் இருக்கப் போறோம்." என்று சுனிதா, பாட்டியை சமாதானம் செய்தாள்.


சொன்ன மாதிரியே சந்தியாவும், சுனிதாவும் மாலை வரை அவர்களோடு இருந்துவிட்டு, இரவு நைசாக மொட்டை மாடிக்கு கிளம்ப வேண்டும் என்று தங்களுக்குள்ளே திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.


அன்றைய பொழுது முழுவதும் நித்யாவுடன், அனிதாவுடனும் சேர்ந்து ரகளை பண்ணிக் கொண்டிருந்தனர்.

சாய்ந்திரம் ஆனதும் தோட்டத்தில் பேசிக்கொண்டிருக்கலாம் என்று சின்ன பாட்டி கூப்பிட‌‌.


என்ன சொல்வது என்று தெரியாமல் சுனிதாவும், சந்தியாவும் முழிக்க…



சுஜாதா வந்து பதிலளித்தாள். " அது அம்மா… மொட்டை மாடியில் போய் காத்தாட உட்கார்ந்து இருக்கலாமுனு இருக்கோம். என்று கூற…


உடனே சுஜாதாவின் பெரியம்மா, " இது நல்ல ஐடியாவா இருக்கே. பௌர்ணமி வந்து ரெண்டு மூனு நாள் தானே ஆகுது. நம்ம சின்ன வயசுல நிலாச்சோறு சாப்பிடுவோமே. அதை மாதிரி செய்யலாமா? இன்னும் நைட்டுக்கு டிஃபன் ரெடி பண்ணலை. வகை சாதம் செய்யலாமா?" என்று வினவ.


அனிதாவும், நித்யாவும் " செய்யலாமே…" என்று உற்சாகமாக கத்த…


நிலாச்சோறுனா என்ன என்று புரியாமல் சுனிதாவும், சந்தியாவும் சுஜாதாவைப் பார்த்தனர்.


" கேண்டில் லைட் டின்னர் போல நிலா வெளிச்சத்தில் சாப்பாடு. பௌர்ணமி அன்னைக்கு சின்ன வயசிலே சாப்பிடுவோம்." என்றார்.


" ஓ…" என்றவர்கள், ஏமாற்றமாக சுஜாதாவைப் பார்க்க…


சுஜாதாவோ, கண்களாலேயே அப்புறம் சொல்வதாக சமாதானம் செய்தார்.

பெரியவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய கிச்சனுக்குள் சென்றனர்.


ஆளுக்கோரு வேலையை பகிர்ந்து இரவு உணவை தயார் செய்தனர்.


மதியரசியோ சிறு பிள்ளையாக உற்சாகமானாள். கடைக்கு ஃபோன் செய்து ஆண்களை சீக்கிரமாக கடையை சாத்தி விட்டு வீட்டிற்கு வர சொன்னார்.

அனிதாவும், நித்யாவும் சுனிதா, சந்தியாவை அழைத்துக் கொண்டு, மொட்டை மாடிக்கு சென்றனர்.


அங்காங்கே மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தனர். நிலா வெளிச்சத்திலும், மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் அந்த மொட்டை மாடி தேவலோகமாக காட்சியளித்தது.


வேலையாட்கள் ஒரு பெரிய ஜமுக்காளத்தை விரித்தனர்.


ஒவ்வொருவராக அங்கு ஆஜரானார்கள். சத்யபிரகாஷின் அன்னை தான் வீட்டிற்கு மூத்தவர். அவரே ஒவ்வொரு உருண்டையாக உருட்டிக் கொடுக்க, ஆவலாக எல்லோரும் சாப்பிட்டீர்கள்.


"சத்யாவும் இருந்தால் நல்லா இருக்கும்." என்று எல்லோரும் புலம்பிக்கொண்டே இருக்க…


சந்தியா, " ஏன் சுனி? எழில் மாமாவும் தானே இங்கே இல்லை. அவரைப் பத்தி யாருமே பேசலை." என்று தனது சந்தேகத்தை கேட்க.


" ம்‌… எலியை நீ மறக்கவே மாட்டேங்குற… சரி உன் சந்தேகத்தை விசாரிச்சுடலாம்." என்று சந்தியாவைப் பார்த்து நக்கலாக சிரித்த, சுனிதா, "

ஹேய் வேணாம் டி." என்று கெஞ்சிய சந்தியாவைக் கண்டுக் கொள்ளவில்லை.


"மதி அத்தை…" என ராகமாக இழுத்தாள் சுனிதா.


“என்னடா தங்கம் பசிக்குதா?” என்று வாஞ்சையாக வினவினார் மதியரசி.


" அதில்லை அத்தை. அப்பா இங்கே இல்லைன்னு வருத்தப்படுறீங்க‌. ஆனால் எழில் மாமாவும் இங்கே இல்லையே… அவரைப் பத்தி யாரும் கவலைப்படற மாதிரி தெரியலையேன்னு சந்தியா கேட்குறா." என்று எல்லோருக்கும் முன் போட்டுடைக்க.


இப்போது எல்லோரும் அவளையே பார்க்க…


" சும்மா தான் கேட்டேன்." என்ற சந்தியாவோ தங்கையை முறைத்தாள்.


" நீ கேட்டா ஒன்னும் தப்பில்லை. அவனும் இங்கே தான் இருக்கான். அதான் அவனைப் பத்தி யாரும் கவலைப்படலை." என்ற மதியரசியின் அன்னை, அங்கு வீடியோ காலில் இங்கு நடப்பதை லைவ்வாக காண்பித்துக் கொண்டிருந்த நித்யாவை காண்பித்தார்.


அந்த ஸ்கீரீனில் சிரித்த எழிலைப் பார்த்து, பேந்த பேந்த விழித்தவள், அவன் கண் சிமிட்டவும் கண்களைத் திருப்பிக் கொண்டாள்.


எல்லோரும் கலாட்டவாக சிரிக்க… சிவந்த முகத்தை மறைக்க பாடுபட்டாள் சந்தியா.


சுஜாதாவோ தனது மகளை யோசனையாகப் பார்த்தார்.


"சரி சரி போனை வச்சுட்டு வா நித்யா. அந்தப் பையன் பார்த்த வரைக்கும் போதும்." என்ற பாட்டியின் பேச்சுக்கு செவி சாய்த்தாள் நித்யா.



சுனிதாவும், சந்தியாவும் இயல்புக்கு மாறாக நிறைய உணவை உண்டனர்‌.


" சூப்பர்… செமையா இருக்கு…" என்று சுனிதா கூற…



சுஜாதாவோ, " இப்ப விட அப்போ இன்னும் சூப்பரா இருக்கும். இப்போ என்னென்னா டுர்,டுருன்னு ஆட்டோ சத்தம் கேட்டுகிட்டே இருக்கு. அப்பல்ல்லாம் இந்த அளவுக்கு நாய்ஸ் பொல்யூஷனும் கிடையாது, ஏர் பொல்யூஷனும் கிடையாது. சுத்தமான இயற்கை காற்று வீச… சூப்பரா இருக்கும். நாங்க அடிக்கடி சாப்பிடுவோம்." மலரும் நினைவுகளில் ஆழ்ந்தார் சுஜாதா.


ஒரு வழியாக நிலாச்சோறு சாப்பிட்டு விட்டு எல்லோரும் அவரவர் அறைக்கு உறங்க செல்ல…



சுஜாதாவை உறங்க விடாமல் சுனிதாவும், சந்தியாவும் பிடித்துக்கொண்டனர்.



மீதிக் கதையைக் கேட்காமல் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. சுஜாதா பழைய நினைவுகளுக்கு அவர்கள் அழைத்துச் சென்றார்.

*************************

நிகழ்காலம் ‌…


" உன்னால நான் சொல்ற பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா?" என்று கேட்ட கோபியைப் பார்த்து‍, சத்யபிரகாஷ் அயர்ந்து நின்றதெல்லாம் ஒரு சில நொடிகளே… .


அதற்குள் கோபியோ, " தி க்ரெட் பிஸ்னஸ்மேன் இப்படி ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறது பார்க்கும் போது, கொஞ்சம் பாவமா தான் இருக்கு." என்று கேலி செய்ய.


சத்யபிரகாஷோ, கோபியை பார்த்து தீயென விழித்தார்.


" கூல் சத்யா." என்ற கோபியின் முகத்தைப் பார்த்த சத்யபிரகாஷ்,


" கோபி… எனக்கு மட்டும் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி இருந்துச்சுன்னா, இருபத்தி எட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை, நம்ம வாழ்க்கையில் இருந்து அழிச்சிருப்பேன்." என்று நா தழுதழுக்க சத்யபிரகாஷ் கூற.


"லீவ் இட் சத்யா." என்றார் கோபி.

இவ்வளவு நேரம் கேலி செய்து, சத்யபிரகாஷை பழைய நினைவுகளில் இருந்து மாற்ற முயன்ற கோபி, இப்போது நேரடியாகவே அந்தப் பேச்சை விட்டு விட சொல்லி இருந்தார்.


" சரி டா. நேரா ஆஃபிஸுக்குத் தான் … வா ஒன்னாகவே போகலாம்." அழைப்பு விடுத்தார் சத்யபிரகாஷ்.


" இல்லை டா. நீ போ. நான் ப்ளாட்க்கு போயிட்டு, குளிச்சிட்டு வரேன்." என்றார் கோபி.


" அடக்கடவுளே! குளிக்காமல் தான் இங்கே வந்தியா?" என்ற சத்யபிரகாஷ் கோபியை விட்டு இரண்டெட்டு தள்ளி நின்று, சிரிக்க.


" டேய் சிரிக்காதடா. நீ எப்படியும் பத்து மணிக்கு தான் வருவேன்னு நினைச்சுட்டு ஃபோன் போட்டா‍, நீ சென்னைல தான் இருக்கேன் சொல்ற. நீ சொன்ன விதமே சீக்கிரமா இங்கே வந்துடுவேன்னு தோணுச்சு.

அதான் கையில கிடைச்ச டிரஸ்ஸை மாட்டிக்கிட்டு வேகமா ஓடி வந்தேன்.

இனிதான் ரெடியாயிட்டு வரணும். ஆஃபீஸ்ல பார்க்கலாம்." என்று கோபி அங்கிருந்து கிளம்ப முயன்றார்.


" டேய் வாடா. என் வீட்ல போய் ஃப்ரெஷ்ஷாயிட்டு, சாப்பிட்டுட்டு அப்படியே ஆஃபீஸுக்கு போகலாம்." என சத்யபிரகாஷ் அழைக்க.


" நீ இங்கே இருந்தே ஆஃபிஸுக்கு போகலாம்னு தானே பிளான் பண்ணி இருந்த. எனக்காக மாத்த வேண்டாம். நோ ப்ராப்ளம். யூ கேரியான். அல்ரெடி நான் உன்னை நிறைய தொந்தரவு பண்ணிட்டேன். ஐயம் சாரி டா." என்று கோபி கூற.


அவனைப் பார்த்து முறைத்த சத்யபிரகாஷ், " இது ஒரு சின்ன பிரச்சனை. இதைக் கூட உன்னால சமாளிக்க முடியாதா? " என்று கடிந்துக் கொள்ள.


" ஆள் வளர்ந்த அளவுக்கு, அறிவு மட்டும் வளர மாட்டேங்குது. என்ன பண்றது டா? நானும் எவ்வளவோ முயற்சி பண்ணேன். பட் என்னால சால்வ் பண்ண முடியலை. சரி நான் கிளம்புறேன். அப்புறம் ஆஃபிஸுக்கு லேட்டா வந்துட்டேனு குதிப்ப. பை டா." என்ற கோபி அங்கிருந்து கிளம்பி விட்டார்.


எதிலேயும் ஆர்வம் இல்லாம இருக்கும் கோபியைப் பார்த்த சத்யபிரகாஷிற்கு இளவயது கோபி நினைவுக்கு வந்து சென்றான். அந்த நினைவில் ஆழ்ந்திருக்க விடாமல், ஆஃபிஸில் இருக்கும் வேலைகள் நினைவுக்கு வந்து போனது.



ஆஃபீஸில் இரண்டு நாட்கள் இல்லாததால், வேலைகள் நிறைய இருக்க…



அதெல்லாம் முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து இரவு உறங்கும் போது தான், மீண்டும் கோபியை பற்றி நினைப்பதற்கு நேரம் கிடைத்தது‌.

சத்யபிரகாஷ் கண்களை மூடினால், உறக்கம் வரவில்லை. மனதோ சிறுவயது நினைவுகளை அசைப் போட்டது.


இந்த முறை சத்யபிரகாஷ், சுஜாதா இருவருமே கடந்த காலத்தை நினைத்து பார்க்க சென்று விட்டனர்.