• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓலை-16

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
ஓலை- 16

சுஜாதா லக்கேஜ்களை காரில் ஏற்றிக் கொண்டு இருக்க…
தோட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த தனது அக்காவை, நைசாக தனியே தள்ளிக் கொண்டு வந்தாள் சுனிதா.

" என்ன சுதா. டைமாச்சு அம்மா திட்ட போறாங்க."

"...."

சுனிதாவோ, ஒன்றும் கூறாமல், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

" என்னடி உனக்குப் பிரச்சனை? கேட்க கேட்க ஒன்னும் சொல்லாமல் பார்த்துக்கிட்டே இருக்க." என்று சிடுசிடுத்தாள் சந்தியா.

" நீ தான் கா சொல்லணும். உனக்கு என்ன ப்ராப்ளம் சொல்லு." என்ற சுனிதா, சந்தியாவை ஆழ்ந்துப் பார்த்தாள்.

" என்ன ப்ராப்ளம்? அதெல்லாம் ஒன்னும் இல்லையே." என்று அவசர அவசரமாக மறுத்தாள்.

" பொய் சொல்லாத கா. உனக்கு ஏதோ பிரச்சனை. நீ சொல்ல மாட்டேங்குற. இல்லை யாரையாச்சும் லவ் பண்றியா?" என்று கேட்க …
அதிர்ந்து தங்கையை பார்த்த சந்தியா, வேகமாக தங்களைச் சுற்றி யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்தாள். நல்ல வேளையாக யாரும் இல்லை.
சுனிதா தான் தனியாக பேசுவதற்காக தோட்டத்திற்கு உள்ளே சற்று தள்ளி அழைத்து வந்திருந்தாளே. அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் சந்தியா இல்லை.

" அக்கா… உன் ஆக்டிவிட்டியே அப்பட்டமா சொல்லுது, சம்திங் ராங்னு. எதுவா இருந்தாலும் பயப்படாதே கா. நீ யாரையாச்சும் லவ் பண்ண அம்மா, அப்பாட்ட சொல்லுக்கா. அவங்க புரிஞ்சுப்பாங்க. இல்லனாலும் நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்." என்று அவளது கையை பிடித்து சுனிதா கூற.

வெடுக்கென அவள் கையிலிருந்து தன் கையை பிடுங்கியவள் கண்கள் கலங்க, " அப்படி எல்லாம் எதுவுமில்லை." என்று கூறி விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.

கண்கள் கலங்க ஓடும் சந்தியாவை பார்த்துக்கொண்டே வந்தாள் சுனிதா.

வீட்டில் உள்ள மொத்த குடும்ப உறுப்பினர்களும் வெளியே நின்று, இவர்கள் ஊருக்கு கிளம்புவதற்கு உதவி செய்து கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர்.

சந்தியாவும், சுனிதாவும் வேறு ஒன்றும் கூறாமல் அமைதியாக அங்கே ஐக்கியமாகினர்.

ஒரு வழியாக அவர்களுடைய லக்கேஜ் எல்லாம் காரில் ஏற்றி விட‍, சுஜாதாவோ, ஒவ்வொருவரிடமும் போயிட்டு வருவதாகக் கூறினார்.
பிள்ளைகள் இருவரும் அவளைப் பின்பற்றினர்.

" ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. பார்த்து பத்திரம்… சத்யாவுக்கு நேரம் கிடைச்சா, எல்லோரும் ஒரு நடை வந்துட்டு போங்க." என்று ஆளாளுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்க…
சுஜாதாதான் மதியரசி இல்லாததை முதலில் கண்டு கொண்டார்.

"அத்தை… மதி எங்க?" என்று சுஜாதா வினவ.

" அவ… சமையல் கட்டுல ஏதோ பண்ணிட்டு இருக்கா." என்று தயங்கித் தயங்கிக் கூறினார்.

" சரியத்தை. நான் போய் சொல்லிட்டு வரேன்." என்று உள்ளே செல்ல
அவரது மகள்கள் இருவரும், அவரை வால் பிடித்துக் கொண்டே உள்ளே சென்றனர்‌..

" மதி ஊருக்கு கிளம்பிட்டேன். போய்ட்டு வரேன்." என்றார் சுஜாதா.

மதியரசியோ, திரும்பாமல் சரி என்பது போல் தலையை ஆட்ட…

" மதி… என் மேல கோபமா?" அவளைத் திருப்ப முயல.

" அதெல்லாம் ஒன்னும் இல்ல விடு. அப்புறமா பேசிக்கலாம்." என்று தடுத்தார் மதியரசி.

அதற்குள் சுனிதா, " அத்தை… போயிட்டு வரோம்." என.

சந்தியாவும் தலையாட்டினாள்.

மதியரசியும் பிள்ளைகளிடம் தன் வருத்தத்தக் காட்டாமல், முயன்று சிரித்து, " பார்த்து பத்திரமா போயிட்டு வாங்கடா." என்றவர், அவர்களின் கன்னத்தை தடவி விட்டு, அவரது அறைக்குள் சென்று மறைந்து கொண்டார்.

" அம்மா… அத்தை ஏன் உங்க கிட்ட கோபப்படுறாங்க?" என்றாள் சுனிதா.

"என்ன தான் இருந்தாலும், அவனோட பையனை வேண்டாம்னு சொன்னா அவளுக்கும் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்." என்று மதியரசியின் அறையைப் பார்த்துக் கொண்டே கூறினார்.

" அம்மா… நீங்க ஒன்னும் வேணாம்னு சொல்லலையே. அத்தான் வரவும் இரண்டு பேரையும் பேச சொல்லி, அவங்களுக்கு சம்மதம்னா கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிக்கலாம்னு தானே மா சொன்னீங்க." என்று சரியாக சுஜாதாவின் மனதை புரிந்துக் கொண்டு சுனிதா கூறினாள்.

" நான் எதுக்கு சொல்றேன்னு உனக்குப் புரிஞ்சிருக்கு. ஆனா மத்த யாருமே புரிஞ்சுக்கலை. பட் அதுக்காகல்லாம் நான் பட்ட கஷ்டத்தை, என் மக பட விடமாட்டேன்." என்று முணுமுணுத்தார்.

சந்தியாவோ, இவர்கள் பேச பேச முள்ளில் நிற்பது போல் தவித்து நின்றாள்.

சுனிதா தான் அம்மாவின் மன உணர்வுகளை உணர்ந்தவள்," அம்மா…" என கவலையாக அழைக்க.

" ஹே… விடு டா. அது ஒன்னும் இல்ல. சும்மா தான் சொன்னேன். அப்புறம் கார்ல எல்லாம் எதுவும் இத பத்தி பேசாதீங்க. " என்று வழக்கம் போல் பொது இடங்களில் எப்படி இருக்கணும்னு அறிவுரை கூறினார்.

இரு மகளையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தவர், எல்லோரிடமும் தலையாட்டி விட்டு காரில் ஏறினார்.
சந்தியா தனக்குள்ளே எதையோ யோசித்துக் கொண்டு வர, சுனிதா தான் தன் பாட்டியிடம் அம்மா பட்டும்படாமல் பேசுவதை கண்டு கொண்டாள்.

' அவர் மேல் அப்படி என்ன கோபம்! நான் வளர்த்த பிள்ளை அப்படின்னு மட்டும் தானே சொன்னாங்க. அம்மா இப்படி எக்ஸ்டீரிமா கோபத்தை காண்பீக்குறாங்க. மாமியார்னு ஒரு மரியாதை இல்லை.' என்று தனக்குள் நொடித்துக் கொண்டு வந்தாள் சுனிதா.
டிரைவர் மட்டும் இல்லைன்றால் இந்நேரம், உள்ளுக்குள் யோசித்துக் கொண்டிருந்த, வார்த்தைகள் எல்லாம் வெளியே குதித்திருக்கும்.
டிரைவர் முன்பு எந்த பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுருத்தப்பட்டிருக்கிறாள்.
அதை மீறுகிற தைரியம் இல்லாமல் தான் தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
சுனிதா கண்டு கொண்டது உண்மை தான்.

சுஜாதா மாமியாரின் மேல் கோபமாகத் தான் இருக்கிறார். ஆனால் அதற்கான காரணம் தான் சுனிதா நினைத்தது இல்லை. அது சுஜாதா மட்டும் அறிந்த ரகசியம். யாருக்கும் தெரியாது என்று அந்த வீட்டு கடைக்குட்டி பேரனும், அந்த வீட்டின் மூத்த பாட்டியான அவளது மாமியாரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற எழிலன், இடையில் இந்தியாவிற்கு வந்திருந்த போது, அவனும், அவனின் பாட்டியும் தனியாக பேசிக் கொண்டிருந்ததை சுஜாதா கேட்க நேர்ந்தது.

மொட்டை மாடியில் காற்று வாங்குவதற்காக சுஜாதா வர…

அங்கே, " இருக்கட்டும் டா தம்பி. எதுக்கு இப்போ அவசரம். நீயும் போன வேலையை முடிச்சிட்டு வா, சந்தியாவும் ஒரு வருஷம் வேலைக்குப் போகட்டும். அப்புறம் அவளுக்கும் பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு, கல்யாணம் ஏற்பாடு பண்ணிடலாம்." என்று கூற.

" பாட்டி… " என்று பல்லைக் கடித்தான் எழிலன்.

" எதுக்குடா இப்படி கத்துற?"

" பின்னே என்ன பாட்டி. ஹாஃப்னவரா நான் சொன்னதுக்கெல்லாம் தலையை தலையை ஆட்டிட்டு, இப்போ முதல்ல இருந்து ஆரம்பிக்கிறீங்க. அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு சந்தியாவை ரொம்ப பிடிச்சிருக்கு. அவ்வளவு தான். நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ அது உங்களுடைய பாடு. நான் நெக்ஸ்ட் வீக் கிளம்புறேன். அடுத்த ஆறு மாசத்தில என்னுடைய படிப்பெல்லாம் முடிச்சுட்டு திரும்ப இந்தியாவுக்கே வந்துடுவேன். அப்போ எனக்கு நீங்கள் கல்யாண ஏற்பாடு பண்ணி இருக்கணும். தட்ஸ் இட். "' என்று செல்லமாக மிரட்ட…

" சரி டா தங்கம்." என்று செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தார் அவர்.

சுஜாதாவோ அதைக் கேட்டு அதிர்ந்து நின்றாள்.
'
தான் பார்க்க வளர்ந்தவன் தான் எழிலன். ஆனாலும் தன் மகள் என்று வரும் போது இருவருக்கும் பிடித்தம் இருக்க வேண்டும் என்று எண்ணுவது இயல்பல்லவா. மறுபடியும் இன்னொரு சுஜாதா சத்யபிரகாஷ் உருவாக வேண்டாம்.' எண்ணியவளின் நினைவில் சத்யபிரகாஷ் வந்து போனார். அவரை நினைத்தவுடன் கொலை வெறியல்லவா வருகிறது. அதையெல்லாம் எப்படி அடக்குவதென்று தெரியாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தார் சுஜாதா.

கண்கள் மூடி காரில் சாய்ந்தவளின் கண் முன்னே, கல்யாணம் ஆனதிலிருந்து அவள் பட்ட துன்பங்களை வந்து போயின. மீண்டும் அதை நினைத்து பார்க்க ஆரம்பித்தார் சுஜாதா.

' கல்யாணம் கோலாகலமாக முடிந்து, கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வரும் போது அவளுக்கு தலைவலியும் சேர்ந்து திரும்பியிருந்தது.
வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்போம் என்று நினைத்தால் அதற்கான வழி தான் இல்லை.
எல்லோரும் கேலி பேசுகிறேன் என்று அவளை ஒரு வழியாக்க… லேசாக இருந்த தலைவலி நன்கு வலிக்க ஆரம்பித்தது.

" தூக்கம் வருது மதி." என்று தனக்கு அருகிலே இருந்தவளிடம் சுஜாதா கூற‌.

அதற்கும் கூட இருந்தவர்கள், " ஹேய் பாரேன் டி. சுஜாதா சமர்த்து. நைட்டு தூங்க முடியாதுன்னு இப்பவே தூக்கம் வருதுன்னு சொல்றா" என்று கிண்டல் செய்ய…

கலங்கிய கண்களை சமாளித்துக் கொண்டிருந்தாள் சுஜாதா.

மதியரசி தான் அவளது முகத்தைப் பார்த்து," ஹேய் சும்மா இருங்க டி." என்று விட்டு அவர்களது வாயை அடைத்தவள், அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்று, ஜன்னல் கதவைத் திறந்து விட்டு, " கொஞ்ச நேரம் படுத்துரு… தூக்கம் வரலைன்னாலும் கண்ண மூடி படுத்துரு. தலைவலி குறைஞ்சிடும்." என்று அவளை படுக்க வைத்து விட்டு மற்ற வேலைகளையும் கவனிக்கச் சென்றாள்.

சற்று நேரம் படுத்திருந்தவளது மனமோ அமைதியடைய மறுத்தது.
' தன்னுடைய கனவை விட்டுவிட வேண்டும். இனி கல்யாணம், குடும்பம் என்று போற போக்கில் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.' ஏற்றுக்கொள்ள மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டே படுத்திருந்தாள்.

தூக்கம் தான் வருவேனானு இருந்தது. ஆனால் மனம் கொஞ்சம் நேரத்திலே நிதர்சனத்தை ஏற்று சமாதானம் அடைந்தது.

மாலை மயங்கி இரவு நேரத்தில் வீடு மீண்டும் பரபரப்படைந்தது.

ஆளாளுக்கு அவளை அழைத்து வைத்து அட்வைஸ் பண்ணிக் கொண்டிருந்தனர். கேட்க, கேட்க பயம் இன்னும் அதிகரித்தது. தொண்டைக்குள் ஒரு பய பந்து உருள ஆரம்பித்தது.
காலையில் திருமண சடங்கு முடியும் வரை விரதமாக இருந்தவளுக்கு, மதிய உணவின் போது, சொந்த பந்தங்களின் கேலியில் உணவு இறங்குவேனா என்றிருந்தது.

இரவு நெருங்க, நெருங்க, அவளுக்கு இருந்த பதட்டத்தில் உணவு செல்லவே இல்லை.

ஒரு வழியாக சாமியறைக்கு அழைத்துச் சென்று, சாமி கும்பிட வைத்து, அவள்
கையில் பால் சொம்பைக் கொடுத்தனர்.
கால்கள் பின்ன, தடுமாறிக் கொண்டே நடந்தாள் சுஜாதா. இதற்கே பிறந்த வீடும், புகுந்த வீடும் அவளுக்கு ஒன்றல்லவா. இருந்தாலும் எல்லா பெண்களுக்கும் உள்ள தயக்கமும், தடுமாற்றமும் அவளிடமும் இருந்தது.
அறை வாசல் வரை துணை வந்த மதியரசியும், " பயப்படாதே. சந்தோஷமா இரு டி." என்று கூறி விட்டு, அங்கிருந்து விடைபெற.

தயங்கியபடியே, சத்யபிரகாஷின் வாழ்க்கைக்குள் நுழைந்தவள், அவனது அறைக்குள்ளும் நுழைந்தாள்.
அங்கு சத்யபிரகாஷோ, தனது கோபத்தையும், ஏமாற்றத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் நடைபயின்றுக் கொண்டிருந்தான்.

உள்ளே அடி எடுத்து வைத்த சுஜாதாவோ, அவனது முகத்தில் தெரிந்த கோபத்தில் மிரண்டு பின் வாங்கியவள், கதவில் இடித்து கீழே விழ, அனிச்சை செயலாக அவளது கையைப் பற்றி நிறுத்தியவன், முயன்று தன்னை கட்டுப்படுததிக் கொண்டான்.

சத்யபிரகாஷின் உதவியால் கீழே விழாமல் இருந்த, சுஜாதா நடுங்க ஆரம்பித்தாள்.

அவளது நடுக்கத்தை உணர்ந்த சத்யபிரகாஷ், மெல்ல அவளிடமிருந்து விலகி கட்டிலில் சென்று அமர்ந்தான்.
அவன் நகர்ந்ததும், பெருமூச்சு விட்டுக் கொண்டவள், கையிலிருக்கும் பால் சொம்பை எங்கே வைப்பது என்று அங்கும், இங்கும் விழிகளை அலைபாய விட…

அவளது செய்கையை அவதானித்தப்படி, ' அவள் என்ன தான் செய்கிறாள்னு பார்ப்போம்.' என்று சத்யபிரகாஷ் அமர்ந்திருந்தான்.

அவளோ, பெரியவர்கள் சொன்னதை செய்வதற்காக கையிலிருந்த சொம்பை எங்கு வைப்பது என்று தேடிக் கொண்டிருந்தாள்.

சத்யபிரகாஷ் அமர்ந்திருந்த கட்டிலின் தலைமாட்டருகே ஒரு டேபிளில், தன் கையிலிருந்த சுமையை இறக்கி வைத்தவள், பொம்மை போல் அவனருகே வந்து காலில் விழுந்து எழுந்தாள்.

அவள் காலில் விழவும், பதறிய சத்யபிரகாஷ் வேகமாக காலை கட்டிலில் தூக்கி வைத்து, " ஹேய் என்ன பண்ணுற?" என்று பதறினான்.

" ஹாங் பெரியம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொன்னாங்க." என்று திக்கி திக்கி கூற.

" ஓ… எதுக்கு இந்த தேவையில்லாத பார்மலிட்டிஸ்." என்றான்.

" தெரியலை. செய்யலைனா அம்மா திட்டுவாங்க. "

" ஓ… அப்புறம் வேற என்ன செய்ய சொன்னாங்க." என்று கேலியாக வினவ

" ஹான்…" என்று அதிர்ந்து விழித்தாள் சுஜாதா.

" இல்லை… அப்புறம் வேற என்ன சொன்னாங்கன்னு கேட்டேன்."

"...."

" என்ன மௌன விரதம் இருக்க சொன்னாங்களா?" என்று விடாமல் தனது ஆதங்கத்தை, கேலி என்ற பெயரில் அவளிடம் வினவினான் சத்யபிரகாஷ்.

தலைக்குனிந்து நின்றிருந்த சுஜாதா, மெல்ல பார்வையை உயர்த்தினாள்.

" இல்லை என்னை பார்த்துட்டே இருக்க சொன்னாங்களா." என்று அவள் ஒரு கணம் பார்த்ததையும் கிண்டல் பண்ண.
அவளோ கண் கலங்க, "இல்லை…" என்று தலையசைத்தாள்.

" அப்புறம்?"

" நீங்க சொல்ற மாதிரி நடந்துக்க சொன்னாங்க." என்றவள், சற்று முன் நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

' இங்கே பாரு டி சுஜாதா. உன் துடுக்குத்தனத்தையெல்லாம் மாப்பிள்ளை கிட்ட காண்பிக்காதே.' என்றார் சுஜாதாவின் அம்மா.
நிமிர்ந்து அம்மாவை முறைத்தாள் சுஜாதா.

" அடியே சுஜாதா இன்னைக்கு ஒரு நாளாவது பொண்ணா, லட்சணம் இரேன் டி. " என்றவர் மகளது தோளில் ஒரு அடி வைக்க…

சுஜாதா கண் கலங்கினாள்.

சுஜாதாவின் பெரியம்மாவோ, சுஜாதாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டு, “ எதுக்கு புள்ள மேல கை வைக்குற?” என்று தனது தங்கையை கடிந்துக் கொண்டவர், சுஜாதாவின் தலையை வருடி, “அம்மாடி! நல்ல பொண்ணா சிரிச்ச முகத்தோட இரு. இப்படியெல்லாம் இருக்காதே!” என்று பொறுமையாக எடுத்துக் கூறினார்‌‌.

“ இப்படியெல்லாம் பேசுணா இவக் கிட்ட சரி வராது கா‌. நீங்க நகருங்க. நான் பார்த்துக்கிறேன்" என்ற சுஜாதாவின் அம்மா, " ஹேய் இங்க பாருடி… வாயாடாம மாப்பிள்ளை சொன்ன மாதிரி கேட்டு நடந்துக்க. நீ இன்னும் சின்ன பொண்ணு கிடையாது. கல்யாணம் ஆயிடுச்சு. பொறுப்பா நட. ஏதாவது வம்பு பண்ண, தோலை உரிச்சிடுவேன் புரியுதா?" என்று மிரட்ட.

" சரி." என்பது போல் தலையாட்டினாள்.
அதையெல்லாம் நினைத்தே அவள் மிரண்டாள்.

அவளது மிரட்சி அவனுக்கு ஒரு சின்ன ஆறுதல் கொடுத்தது.

" என்ன யோசனை?" என்று சத்யபிரகாஷே மீண்டும் பேச்சை வளர்த்தான்.

" ஹான்… ஒன்னுமில்லை… ஒன்னுமில்லை."என்று பதற…

" எதுக்கு டென்ஷனாகுற? இங்க உட்காரு." என்று அவளை அமர சொன்னான்.

' அப்பாடா… ' என்று எண்ணியவள் ஒரு ஓரமாக அமர்ந்தாள்.

" அதென்ன பால் தானே… " என்று வினவ.

" ம்…" என்றவள் வேகமாக எழுந்து எடுக்க வர, சத்யபிரகாஷும் தனது அருகிலிருந்த பால் சொம்பை எடுக்க கை நீட்டினான். இருவரது கைகளும் உரச… பதறியவள் கைகளை விலக்க, " ஏய் பார்த்து… " என்றவன் கீழே விழ இருந்த சொம்பை அழுத்தி பிடித்தான்.
அவள் எடுக்கிறாளேனு கையை தளர்த்திருந்தான்.

“ எதுக்கு இவ்வளவு பதட்டம்?” என்று வினவியவன், மனதிற்குள் ‘ பெரிய, பெரிய வேலையைப் பார்த்துட்டு, அமைதியா இருக்க முடியுதோ.’ என்று எண்ணியபடியே பாலை அருந்தியவன், அவளிடம் மீதியை கொடுத்தான்.

அதை கையில் வாங்கியவளோ, அருந்தாமல் வைத்துக் கொண்டு முழிக்க…

" என்ன குடிக்கலையா? ஏன் பிடிக்கலையா? இல்லை…" என்று அவன் இழுக்க…

சுஜாதாவோ, மடக்மடக்கென குடித்தாள்.

" ஏய் பார்த்து…" என்று லேசான புன்னகையுடன் சத்யபிரகாஷ் கூறினான்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் சில நொடிகள் மௌனமாக இருந்தனர்.

சத்யபிரகாஷ் தான் பெருமூச்சு விட்டுக் கொண்டு, " சுஜாதா… " என அழைக்க.

தலைக் குனிந்திருந்த சுஜாதா, பயத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

" பயப்படாதே… எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லு. நீ யாரையாவது விரும்புறீயா?" என்று வினவ.

ஒரு நிமிடம் அதிர்ந்தவள், பிறகு சமாளித்துக் கொண்டு," இல்லை." என்பது போல் தலையசைத்தாள்.

மனதிற்குள்ளோ, ' திமிர்… எப்போ கேட்க வேண்டியதை, எப்போ வந்து கேட்கிறார் பார்.' என்று பொருமிக் கொண்டிருந்தாள்.

அவளது ஒரு நொடி அதிர்ச்சியும், அவளது மௌனமும் அவனை கோபப்படுத்தியது.
சத்யபிரகாஷோ முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

' இப்போது வார்த்தைகளை விட்டுவிட்டால், நிச்சயம் அது அவளை காயப்படுத்தும்.' என்று எண்ணியவன், " சரி படு. எனக்கு டயர்டா இருக்கு." என்று விட்டு கண்களை மூடிக் கொண்டான்.

" அப்பாடா…" என்று பெருமூச்சு விட்ட சுஜாதாவும் உறங்க முயன்றாள். ஆனால் உறக்கம் தான் வருவேனா என்றிருந்தது.

வீட்டில் உள்ளவர்கள் சொல்லியிருந்த படி, அதிகாலையிலேயே குளித்திருந்தாள்.
அதைப் பார்த்ததும் வீட்டில் உள்ளவர்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
சுஜாதாவின் அம்மாவோ, " அக்கா… இங்கே பாருங்களேன். சுஜாதாவுக்கு கல்யாணம் ஆனவுடன் பொறுப்பு வந்துருச்சு. காலைல நம்ம எழுப்ப எவ்வளவு பாடுபடுவோம். இப்போ பாருங்க… நாம சொன்னத கேட்டு நமக்கு முன்னாடியே எந்திரிச்சுட்டா." என்று மனோகரின் அம்மாவிடம் பெருமையாகக் கூறினார்.

" ஆமாம்… நம்ம சுஜாதா சமர்த்து. நீ தான் எப்பப் பார்த்தாலும் பிள்ளைய திட்டிட்டு இருப்ப‌. " என்றார் அவர்.

காலை காஃபிக்காக, கடனே என்று நின்றிருந்தவள், இதையெல்லாம் கேட்டு மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

' ஐயோ! மா… நைட்டு ஃபுல்லா தூக்கம் வராமல் கொட்ட, கொட்ட முழிச்சிட்டு இருந்தேன். ஒரு காஃபி கொடுத்தா, அதைக் குடிச்சிட்டு எங்கேயாவது போய் நிம்மதியாக தூங்கிடுவேன்.'
ஆனால் அவளை நிம்மதியாக விட்டுவிடுவார்களா?

" இந்தா காஃபி. குடிச்சிட்டு, மாப்பிள்ளைக்கும் வாங்கிட்டு போ. குளிச்சிட்டு சீக்கிரமா கிளம்பி வர சொல்லு. கோயிலுக்கு போகணும்." என்றார் சுஜாதாவின் அம்மா.

மண்டையை ஆட்டுவதை தவிர அவளுக்கு வேறு வழியில்லை.
சுஜாதாவிற்கு வேலை வைக்காமல் சத்யபிரகாஷே கீழே இறங்கி வந்தான்.
காஃபியை நீட்டியவள், "கோயிலுக்கு போகணும்." என்று கூற.

சத்யபிரகாஷிற்கு கோபம் சுறுசுறுவென ஏறியது. " நான் வரலை." என்று மூஞ்சிலடித்தாற் போல கூறினான்.

கலங்கிய கண்களை மறைத்தவள், " அம்மா போகணும்னு சொன்னாங்க." என்று கெஞ்சுவது போல கூறினாள்.

" ஓ… அப்போ பெரிய கோயிலுக்கு வேணாம். பிள்ளையார் கோவிலுக்கு போய்ட்டு வரலாம்." என்று முடித்து விட்டான்.

'இந்த அளவுக்காவது இறங்கி வந்தாரே…' என்றவள், சத்யபிரகாஷுடன் கோவிலுக்கு கிளம்பி சென்றாள்.
அதற்குள், பக்கத்தில் இவர்களை எங்கேயாவது வெளியே அனுப்பி வைக்கலாமா என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக அருகிலுள்ள சாத்தனூர் டேமிற்கு அனுப்பலாம் என ஒரு மனதாக முடிவு செய்தனர்.

கோவிலுக்கு சென்று விட்டு, அமைதியாக வந்தவர்களிடம், " சாத்தனூர் டேமுக்கு போயிட்டு வாங்க." என்று சுஜாதாவின் அப்பா கூற…
சும்மா வாய வைத்துக் கொள்ளாமல்," போங்க பா… அங்கே போர் அடிக்கும். நிறைய தடவை பார்த்தாச்சு.சுத்தி பார்க்க ஒன்னும் இல்லை."
பெரியவர்கள் எல்லோரும் முழிக்க, சத்யபிரகாஷிற்கோ, கோபம் சுர்ரென ஏறியது.

" சுஜாதா சொல்றது தான் ரொம்ப சரி. எனக்கும் வெளியே போக வேண்டிய வேலை இருக்கு. " என்றவன் வெளியே கிளம்பி விட.

அதற்கு பிறகு வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சுஜாதாவை திட்டினர்.
சத்யபிரகாஷின் அன்னையோ, " அவனுக்கு லீவு கிடைக்கலை. உடனே சென்னைக்கு கிளம்பணும்னு சொன்னான். மறுபடியும் எப்ப வருவான்னு தெரியாது. இங்கே இருந்தா யாராவது வந்துட்டு, போயிட்டும் இருப்பாங்க. உங்க ரெண்டு பேராலையும் சகஜமா பேச முடியாதேன்னு வெளியே போக சொன்னா…
வாயை வச்சுட்டு பெரிய மனுஷியால சும்மா இருக்க முடியல." என்று ஆற்றாமையாக கூற.

அவளால் முடிந்தது, " அத்தை… நைட்டு சரியா தூங்கல… தூக்கமா வருது. அதான்… " என்று இழுக்க…

ஆண்களோ, வேலை இருப்பது போல் எழுந்து செல்ல…

" இந்த பொண்ணை வச்சுட்டு என்ன தான் செய்யுறது." என்று புலம்பியவர், " சரி போய் கொஞ்ச நேரம் படு." என்று விட்டு வேலையை கவனிக்க சென்று விட்டார்.

வெளியே சென்று விட்டு தாமதமாக வந்த சத்யபிரகாஷின் முகமோ என்னவோ போலிருந்தது.

அவனது முகத்தைப் பார்த்து பயந்து எல்லோரும், " என்ன பா. ஏன் முகம் வாடி கிடக்கு." என்று அவனது அம்மா வினவ.

" அது என்னோட ஃப்ரெண்டுக்கு உடம்பு சரியில்லை. அதான்."என.

" கொஞ்ச நேரத்துல வயித்துல புளியை கரைச்சுட்ட. உன் மூஞ்ச பார்த்து பயந்துட்டேன். சரி கவலைப்படாத.உன் ஃப்ரெண்டுக்கு சீக்கிரம் சரியாய்டும். நீ அதையே நினைச்சுட்டு இருக்காதே."

" சரி மா… சுஜாதா எங்க?"

" அவ ரூம்ல இருக்கா… கூப்பிடட்டு மா."

" இல்லை மா. நான் நாளைக்கு ஊருக்கு கிளம்பணும். அதான்."

" இன்னும் இரண்டு நாள் கழிச்சு போலாம்ல தம்பி. "

" இல்லை மா… என் ஃப்ரெண்டுக்கு வேற உடம்பு சரியில்லை. நான் போய் பார்க்கணும்."என்று மனதறிந்து பொய் கூறினான். அவனுக்கு இப்போது கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது.

" சரிப்பா. சுஜாதாவை எப்போ கூட்டிட்டு போற." என்றார்.

" இன்னும் ஆறு மாசத்துல வீடு பார்த்துட்டு கூட்டிட்டு போறேன். " என்றான்.

" சரிப்பா. லீவு கிடைக்கும் போது வா." என்றார்.

ஒருவழியாக சத்யபிரகாஷ் ஊருக்கு கிளம்பி விட்டான்.

காலையில் எழுந்த சுஜாதா வேலை முடிந்ததும், ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருக்க...

அவள் தலையில் கொட்டிய அவரது அம்மா, " கல்யாணம் ஆயிடுச்சு. இனியாவது கொஞ்சம் பொறுப்பா இரேன் டி."

" மா… அதான் வேலையெல்லாம் முடிஞ்சுடுச்சுல…"

" மாப்பிள்ளையோட ரூமை போய் சுத்தம் பண்ணு. அதை வேற யாரும் தொறந்தா அவருக்கு பிடிக்காது. நீயே போய் சுத்தம் பண்ணு." என.

" போங்கம்மா." என்று சிணுங்கியவள், வேண்டா வெறுப்பாக சென்று அந்த வேலையை செய்தாள்.

ஒவ்வொரு இடமாக சுத்தம் செய்தவள், இறுதியாக அங்கே இருந்த பீரோவை திறந்தாள்.

அங்கிருந்த கடிதங்கள், டைரி எல்லாவற்றையும் அடுக்கி வைக்கும் போது கீழே விழ… அதில் எழுதியிருந்தவை இவளது கண்ணுக்கு புலப்பட்டது.

அங்கிருந்த எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்தவள், அவனது அன்பை எண்ணி கண்கள் கலங்க அமர்ந்து இருந்தாள்.
'மாமாவுக்கு என் மேல் இவ்வளவு பிரியமா? ஆனால் சொல்லியிருக்கலாம்.' என்று எண்ணியவள் எப்போதடா சென்னைக்கு போவோம் என்று காத்திருந்தாள்.

ஆனால்
அவளுக்குத் தெரியவில்லை.

சென்னை சென்ற பின்பும் அவனது பாராமுகத்தை தான் சந்திக்க போவதையும்,

அவளுக்கு ஆறுதலாக அவளின் நண்பன் கோபி மீண்டும் அவளது வாழ்வில் நுழையப் போகிறான் என்பதையும் அறியவில்லை.