• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓலை-19

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
232
63
Kumbakonam

ஓலை - 19


சுஜாதாவின் செல்போன் இசைத்தது.


" யாரு சுஜா போன்ல?"


" உங்க அம்மா தான். " என்றார் சுஜாதா.


"ஏன் என்ன விஷயம்? ஊருக்கு வந்துட்டோம்னு சொல்லலையா." என்று சத்யபிரகாஷ் வினவ.


"அதெல்லாம் சொல்லிட்டேன். எதுக்கு ஃபோன் பண்றாங்கனு தெரியல." என்றவர் யோசனையுடன் ஃபோன் எடுக்க.


அந்தப்பக்கம் சத்யபிரகாஷின் அம்மா பதட்டத்துடன், " சுஜாதா உங்க மாமாவுக்கு உடம்பு சரி இல்லை. உடனே கிளம்பி வாங்க." என்று பதற…


" என்னாச்சு அத்தை."


" என்னன்னு தெரியல மயக்கமாக இருக்கிறார். எனக்கு என்னமோ பயமா இருக்கு. புள்ளைங்கள எல்லாம் கூட்டிட்டு வா."


" இப்ப தானே நாங்க வந்தோம்." என்றார் சுஜாதா.


" என் புருஷனுக்கு முடியலன்னு சொல்றேன். இப்ப தான் வந்தேன், நேத்து வந்தேன்னு சொல்லிட்டு இருக்க. கார் அங்கே தானே நிக்குது. டிரைவரோட வாங்க. சத்யாவிடமும் சொல்லிடு." என்றவர் வைத்து விட.


" என்ன சொன்னாங்க…" என்று கேட்டார் சத்யபிரகாஷ்.


" மாமாவுக்கு உடம்பு சரியில்லையாம். உடனே வர சொல்லுறாங்க." என.


" என்னது அப்பாவுக்கு உடம்பு சரியில்லையா… இப்படி சாவகாசமாக சொல்லிட்டு இருக்க." என்று பதட்டப்பட.


" பயப்படாதீங்க… மாமாவுக்கு ஒன்னும் இல்லைன்னு தான் தோணுது. என்னமோ உங்க அம்மா பிளான் பண்றாங்க. ஆக்ச்சுவலா மாமாக்கு முடியலன்னா உங்களுக்கு தானே ஃபோன் வரும். எனக்கு ஏன் பண்ணனும்." என்று சுஜாதா கேள்வி எழுப்ப‌.


" நீ தேவையில்லாமல் யோசிக்காத சுஜா. நீ கிளம்பு. பிள்ளைங்களையும் கிளம்ப சொல்லு. நானும் கோபிக்கு ஒரு ஃபோன் பண்ணிட்டு வரேன். இங்கே ஆஃபிஸ பார்த்துக்க சொல்லணும்." என்றவர் வெளியே செல்ல.


சுஜாதாவோ, " ஊர்ல இருந்து வந்த டயர்டே போகலை. இதுல மறுபடியும் ஊருக்கா." என்று புலம்பிக் கொண்டே மகள்களை தேடி சென்றார்.


அவர்களோ, சுஜாதாவின் வருகைக்காக தூங்காமல் காத்திருந்தனர்.


" என்னமா என்ன ஆச்சு? அப்பா கிட்ட சண்டை போட்டீங்களா? " என்று பரிதாபமாக சுனிதா கேட்க…


முகம் சிவக்க, " அதெல்லாம் ஒன்னும் இல்லை. அப்புறம் அந்த எழுத்தாளரே உங்க அப்பா தான்." என.


" என்னமா சொல்றீங்க நிஜமா, அப்பா தானா அந்த ரைட்டர்." என்று சந்தியா கேட்க.


" ஆமாம்." என்ற சுஜாதா, மகள்களுக்கு எது தெரியணுமோ அதைக் கூறியவர், " மிச்சத்தை அப்புறம் பேசிக்கலாம். இப்ப உங்க தாத்தாவுக்கு முடியலன்னு பாட்டி ஃபோன் பண்ணுனாங்க. நாம ஊருக்கு மறுபடி கிளம்பணும். சீக்கிரமா ரெடியாகுங்க." என்று சுஜாதா கூற…


"சரி…" என்ற இருவரும் கிளம்பினர்.


காரில் சத்யபிரகாஷிடம், "அப்பா… நீங்க தான் அந்த ரைட்டரா பா‌. உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு." என ஆரவாரம் செய்த சுனிதா,


" அப்பா… உங்க எல்லா கதையையும் நான் படிக்கப் போறேன்." என்று பெருமையாகக் கூற.


" முதல்ல உனக்கு தமிழ் படிக்கத் தெரியுமா?" என்று சந்தியா கிண்டல் பண்ணினாள்.


" அதெல்லாம் கத்துப்பேன். அதுமட்டுமல்லாமல் நானும் அப்பா மாதிரி கதை எழுத போறேன்." என்றாள் சுனிதா.


" உன்னால் முடியும் டா. இப்ப உள்ள டெக்னாலஜி உலகத்துல எழுதுறது ரொம்ப ஈஸி.

உனக்கு ஆசை இருந்தா முயற்சி செய். இது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது. எழுதறதுக்கு முதல் அடி எடுத்து வைச்சிட்டினா, தன்னால எழுத வந்திடும்.

நிறைய எழுது. எழுத எழுதத்தான், எழுத்து நம் வசம் வரும். அதுக்காக பயப்படத் தேவையில்லை. எழுத, எழுத உனக்கே நீ செய்ற தவறெல்லாம் புரிய வரும்."


" சூப்பர் பா… நான் முயற்சி பண்றேன்." என்றாள் சுனிதா.


" அம்மாடி சுனிதா. முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். எழுதனும்னா முதல்ல நிறைய நீ படிக்கணும், நிறைய கத்துக்கணும். அப்புறமா முயற்சி செய்‌. ஆல் தி பெஸ்ட்." என்று சத்யபிரகாஷ் கூற.


அவர்கள் பேசுவதை புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் சுஜாதா.

உள்ளுக்குள்ளோ, ' வீட்ல என்ன

பிரச்சனை நடக்கப் போதோ தெரியலையே.' என்று யோசித்துக் கொண்டே வந்தார்.


அவர் நினைத்தது போல்தான் நடந்தது.

இவர்கள் வீட்டிற்குள் நுழைய…


அங்கு வீடே விழாக்கோலம் பூண்டது.

" என்ன மா இது. எதுக்கு அப்பாவுக்கு முடியலைன்னு பொய் சொல்லி வர வச்சிங்க. " என்று சத்யபிரகாஷ் அவரது அம்மாவிடம் வினவ.


" அப்பாக்கு முடியலைனு சொன்னது உண்மை தான். உங்க அப்பா ரொம்ப பயப்படுறாரு, அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோனு. சீக்கிரமா பேத்தியோட கல்யாணத்தை பாக்கணும்னு ஆசைப்படுறார். எழிலையும் ஃபோன் பண்ணி வர சொல்லியாச்சு. ரெண்டு நாள்ல அவன் வந்ததுடுவான். வந்ததும் மொத முகூர்த்தத்தில் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்‌.

மத்த வேலையெல்லாம் நீங்க பார்க்கணும் இல்ல‌‌. அதுக்காக தான் உடனே வரச்சொன்னேன். நாளையிலிருந்து கல்யாண வேலையெல்லாம் பார்க்க ஆரம்பிச்சிடுங்க." என.


சத்யபிரகாஷோ, என்ன செய்யறதுனு தெரியாமல் முழிக்க.

சுஜாதாவோ, " சந்தியாவுடைய விருப்பம் முக்கியம் இல்லையா அத்தை." என்று மகளுக்காக வாதாட…


" கூப்பிடு உன் மகளை. அதையும் கேட்டுடுவோம்." என.


சத்யபிரகாஷோ, " சந்தியா…" என கூப்பிட.

அங்கு வந்தாள் சந்தியா.


" இங்கே வாடா." என்று அவளது பாட்டி கூப்பிட.


" என்ன பாட்டி…"


" எழில உனக்கு பிடிக்குமா? உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம். உனக்கு சம்மதமா? " என்று வினவ.


" சரி." என்று தலையாட்டியவள், உள்ளே ஓடி விட்டாள்.


" இப்போ உங்களுக்கு சந்தோஷமா? இனி கல்யாண வேலையை பார்க்குறீங்களா?" என.


" சரி மா… " என்றவர், சுஜாதாவையும் அழைத்துக் கொண்டு நகர்ந்தார்.


அவர்களது அறைக்குச் சென்ற சுஜாதாவிற்கோ, இன்னும் முழுமையான நிம்மதி கிடைக்கவில்லை.

எழிலும், சந்தியாவும் பேசி ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.


ஆனால் எல்லாம் அவள் கை மீறி நடந்தது. இரண்டே நாட்களில் எல்லா வேலைகளும் வேகமாக நடக்க… எழிலும் வெளிநாட்டில் இருந்து வந்து விட்டான்.

எல்லோரிடமும் பேசி சிரித்தவன் சுஜாதாவிடம், " அத்தை…" என்று ஆசையாக வர‌.


சுஜாதாவோ பட்டும்படாமலும் பேசினார்.

அவன் பார்க்காத போது அவனை

முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதைக் கண்டுகொண்ட எழிலனோ, தலையில் அடித்துக் கொண்டான்.


இரண்டு நாளில் திருமணம் என்று இருக்கும் போது தான் சந்தியாவை தனியாக பிடித்தான் எழிலன்.

" சந்தியா… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நாளைக்கு கோயிலுக்கு வா‌." என.


" வெளியே எங்கேயும் போக விடமாட்டாங்க." என்றாள் சந்தியா.


" நித்யா அண்ணிட்ட கோவிலுக்கு அழைச்சிட்டு வர சொல்றேன். நீ அவங்களோட கோவிலுக்கு வா. வீட்ல யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க." என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.


இதை ஒரு ஜீவன் கேட்டுக் கொண்டிருந்தது.


அந்த ஜீவன் சுஜாதா.


நேரே சத்யபிரகாஷிடம் சென்றவள்,


"நான் எழில் மேல கோபபடுறேனு சொல்றீங்களே. இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?" என்றவர் சற்று முன் நடந்ததை கூற.


சத்யபிரகாஷோ, " சின்ன சிறுசுங்க. இங்கே பேச முடியாதுன்னு கோயிலுக்கு போலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. இது ஒரு விஷயமா? ஏதாவது வேலை இருந்தா பாரு. நான் அப்பாவை டாக்டர்ட்ட அழைச்சிட்டு போகணும்." என்று சொல்லி விட்டு அவர் கிளம்பி விட.


வெளியே செல்லும் சத்யபிரகாஷை முறைத்துக் கொண்டு இருந்தார் சுஜாதா.


"அம்மா…" என்று அவரது முதுகை சுரண்டினாள் சுனிதா.

திடுக்கிட்டு திரும்பினார் சுஜாதா.


" அம்மா… நான் தான்."


" என்னடி உனக்குப் பிரச்சனை?"


"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. அக்காவையும், மாமாவையும் நினைச்சு நீங்களும் பயப்படத் தேவையில்லை. எனக்கு என்னமோ அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்கனு தோணுது.”


“அப்படியெல்லாம் இருக்காது. இப்போக் கூட எழில், உங்க அக்காவை கோவிலுக்கு வரச் சொல்லி மிரட்டுறான்.”


“அம்மா அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. வேணும்னா நாளைக்கு வாங்க நாமளும் கோயில்லுக்கு போய் பார்க்கலாம்." என்று சுனிதா கூறினாள்.


சுஜாதாவோ, நம்பாமல் தான் சுனிதாவுடன் கோவிலுக்கு கிளம்பினார்.


சந்தியாவோ, பாட்டியிடம், " பாட்டி… அண்ணியோட கோயிலுக்கு போயிட்டு வரேன்." என்றுக் கூற.


" சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க." என்றார்.


" பாட்டி! அம்மா கிட்ட சொல்லிடுங்க." என்றவள் சிட்டாக அங்கிருந்து பறந்தாள்.

கோவிலுக்கு சென்றவள், நேராக குளத்துப் படிக்கு செல்ல…


அவள் பின்னே வந்த சுஜாதாவிற்கும், சுனிதாவிற்கும் ஆச்சரியம்.


அங்கு சென்று பார்த்தால் எழிலோ இவளுக்கு முன்பே அங்கு அமர்ந்து இருந்தான்.

சுஜாதாவும், சுனிதாவும் அவர்கள் இருந்த இடத்துக்குச் சற்றுத் தள்ளி நின்று அவர்கள் பேசுவது காதில் விழுமாறு நின்றுக் கொண்டிருந்தனர்.


" சந்தியா… அத்தை, மாமாவுக்கு லவ் மேரேஜ் பிடிக்காதா?" என்று எழிலன் கேட்டான்.


" தெரியலை." என்று சந்தியா முழிக்க.


" அப்புறம் எதுக்கு டி. நம்மள பத்தி சொல்ல வேணாம்னு சொன்ன? நம்ம மேரேஜை அரேஞ்ச் மேரேஜ்ஜா நடத்த சொன்ன?


அத்தை அவங்க மனசுல என்ன நினைக்கிறாங்கன்னே தெரியல. என்ன பார்க்கும்போதெல்லாம் வில்லனை பார்க்கிற மாதிரி பாக்குறாங்க. " என்று எழிலன் பொரும.


" தெரியல எலி. அவங்களுக்கு லவ் பிடிக்காதுன்னு நினைச்சேன். ஆனா இப்போ தப்பு பண்ணிட்டேனோனு குழப்பமா இருக்கு." என்று பரிதாபமாக சந்தியா சொல்ல.


" முதல்ல உன் தங்கச்சியை அடிக்கணும். எப்பப் பாரு எலினு கூப்பிட்டு, கூப்பிட்டு இப்போ நீயும் அதையே சொல்ற." என்று புலம்ப.


"எங்க என்ன அடிச்சிடுவீங்களா?" என்று அவர்களுக்கு நடுவில் வந்தாள் சுனிதா.


" ஏன் நான் அடிக்க மாட்டேன்னு நினைக்கிறியா?" என்று எழிலன் மல்லுக்கு நிற்க.


அவள் பின்னே வந்த சுஜாதா, " எழில் என்னை மன்னிச்சுடு. உன்னை தப்பா புரிஞ்சுகிட்டேன். உங்க ரெண்டு பேருக்கும் புடிச்சு கல்யாணம் நடக்கணும்னு நெனச்சேன். அதான்." என்று கூற.


" ஈஸி அத்தை. எனக்கும் சரி, சந்தியாவுக்கும் சரி. ஒருத்தொருத்தர் ரொம்ப பிடிக்கும். நான் வெளிநாட்டுக்கு போறதுக்கு முன்னாடி உங்க எல்லார் கிட்டேயும் சொல்லலாம்னு சொன்னேன் . இவ தான் பாட்டி மூலமா அரேஞ்ச் மேரேஜா பண்ணுங்கன்னா. நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க அத்தை. " என்று சமாதானம் செய்தான் எழிலன்.


"எனக்கென்ன பா. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா போதும். நீங்க பேசிட்டு இருங்க. நான் வர்றேன்." என்று புன்னகையோடும், நிம்மதியோடும் கிளம்பி சென்றார்.


சுனிதாவோ, கிளம்பாமல், " அத்தான் நீங்க எலினு ஒத்துக்கோங்க. இல்லன்னா நான் கரடி வேலை பார்ப்பேன்." என்று இருவருக்கும் நடுவில் நின்று கொண்டு வம்பு வளர்க்க.


" சரி தாயே… நீ எப்படி வேணும்னாலும் கூப்பிடு, இப்போ ஆளை விடு." என.


" அது…" என்ற சுனிதா சிரித்துக் கொண்டே சுஜாதா பின்னே சென்றாள்.


வீட்டிற்கு நிம்மதியாக வந்தார் சுஜாதா‌.

அங்கோ மனோகரும், சத்யபிரகாஷும் தீவிரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.


" ஏன் என்னாச்சு? " என்று பயந்து வினவினார் சுஜாதா.



மனோகர் வாயைத் திறந்தான். " கோபிய கல்யாணத்துக்கு வர சொல்லு‌ சுஜாதா. பெரியவன் கல்யாணத்துக்கு தான் வரலை. இந்த கல்யாணத்துக்காவது வர சொல்லேன்." என.


" நான் அவன் கிட்ட பேச மாட்டேன்." என்றார் சுஜாதா.


" நான் தான் மகிழன் கல்யாணத்துக்கு வராத கோபத்தில அவன் கிட்ட பேசாம இருக்கேன். ஆனா உனக்கென்ன சுஜாதா? நீ அவனோட உயிர் தோழியாச்சே?" என்று மனோகர் வினவ.


" ஆமாம். நானும் கேட்கணும்னு நினைச்சுட்டே இருப்பேன். உனக்கும், கோபிக்கும் என்ன பிரச்சனை? ஏன் ஒரு வருஷமா பேசுறதில்லை. சும்மா என்னையும், சுஜாவையும் சேர்த்து வைன்னு தொணத்தொணத்துட்டே இருப்பான். காரணம் கேட்டா மட்டும் சொல்ல மாட்டான். " என்று சத்யபிரகாஷ் வினவ.


சுஜாதாவோ‍, " அது… என்ன பிரச்சனைன்னு மறந்திருச்சு. சரி விடுங்க. சுனிதாவை விட்டு கூப்பிட சொல்லுவோம்." என்றார்.


" ஐயோ! என்னால முடியாது. லீவுக்கு வரும்போது என் டார்லிங்கை எவ்வளவோ கூப்பிட்டு பார்த்தேன். அப்பவே வர மாட்டானேனுட்டாரு. என்னை ஆளை விடுங்க." என்று சுனிதாவும் பின் வாங்க.


என்ன பண்றது என்று தெரியாமல் எல்லோரும் குழம்பி போய் இருந்தனர்…

அப்போது தான் கோவிலிலிருந்து வந்த சந்தியா, " என்னாச்சு ?" என.

மனோகர் பிரச்சனையை கூறினார்.


" அம்மா கூப்பிட்டா கோபி அங்கிள் கட்டாயம் வருவார்." என்றாள் சந்தியா.


" அப்படிங்குற…" என நம்பாமல் மனோகர் பார்க்க.


" ஆமாம் மாமா. அம்மா அவர் கிட்ட பேசுமாட்டேங்குற வருத்தத்தில் இருக்கிறார். சோ… அம்மாவை வச்சு கூப்பிடலாம்." என்று ஈசியாக தீர்வு சொல்ல …


" இது நல்ல ஐடியாவா இருக்கே." என்று எல்லோரும் சுஜாதாவை பார்க்க.


" மனோ அண்ணா கூப்பிட்டே ஊருக்கு வரலை. அதனால் தானே அண்ணன் இன்னும் கோபியோட பேசாமல் இருக்காரு. அதுக்கே அவன் அசையல. நான் கூப்பிட்டா மட்டும் வந்துட போறானா. அதெல்லாம் வர மாட்டான்." என்றார் சுஜாதா.


" சுஜாதா நான் அவன் கிட்ட நேரடியா பேசலை. என்னோட வருத்தத்தை தான் காண்பிக்குறேன். நீயும் என்ன மாதிரி இல்லாமல், அவன் கிட்ட பேசி இங்கே வர வை." என்றார் மனோகர்.


" என்னால பேச முடியாது ." என்ற சுஜாதா ரூமிற்கு செல்ல‌…


அவர் பின்னே வந்த சத்யபிரகாஷ் ஒன்றும் சொல்லாமல் ஆழ்ந்து பார்க்க…


" என்னங்க?" என்றார் சுஜாதா.


"....."

சத்யபிரகாஷோ ஒன்றும் கூறாமல் அமைதியாகவே இருக்க.


சுஜாதாவோ, " நானும், கோபியும் எவ்வளவு க்ளோஸ்னு தெரியும்ல. நீங்க தான் அந்த இதய உதயனு அவனுக்கு தெரியும் தானே. அதை இத்தனை வருஷமா மறைச்சுட்டான். பேச்சு வாக்குல ஒரு வருஷத்துக்கு முந்தி உளறிட்டான். அதான் எனக்கு செம கோபம். என் நட்புக்கு அவன் உண்மையா இல்லை ‌ அதான் அவன் கிட்ட நான் பேசப் போறதில்லை." என.


" சரி… நீ உன் நட்புக்கு உண்மையா இருந்தீயா? உனக்குத் தெரியும்ல. நான் தான் இதய உதயன்னு. அதை நீ சொல்ல வேண்டியது தானே." என்றார்.


" அது நம்ம பர்சனல்…" என்று தயங்கினார் சுஜாதா.


" அதைத் தான் அவனும் நினைத்திருப்பான்." என்று கோபிக்கு வக்காலத்து வாங்கினார் சத்யபிரகாஷ்.


சுஜாதாவிற்கும் தன்னுடைய தவறு புரிய இறங்கி வந்தாள். " சரி நான் அவன் கிட்ட பேசுறேன்." என்றவர், பிறகு கோபியிடம் ஃபோன் செய்து பேச.


அவனோ ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தான்.


' சுஜாவும் இவ்வளவு வற்புறுத்தி கூப்பிடுறா. அதுவுமில்லாமல்

இன்னும் எத்தனை நாள் தான் ஊருக்கு போகாமல் இருப்பது. எல்லோரும் எங்களை மறந்தே இருப்பாங்க. அம்மாவும், தம்பியும், தம்பி பசங்களும் வர சொல்லிகிட்டே இருக்காங்களே... போவோம்.' என்று நினைத்தவன் ஒருவழியாக திருவண்ணாமலைக்கு கிளம்பி விட்டான்.


தம்பி, தம்பி பசங்க, அம்மா எல்லாரையும் பார்த்து பாசப் போராட்டத்தில் தத்தளித்தவன், ஒரு வழியாக சத்யபிரகாஷின் வீட்டு பங்ஷனுக்கு கிளம்புவதாக கூற.


" ஏன் பா. நாளைக்கு கல்யாணத்துக்குப் போனால் போதாதா?" என்று அவரது அம்மா கூற.


" அம்மா… அது என்ன மூணாவது வீட்டு கல்யாணமா? என் ஃப்ரெண்ட் வீட்டு கல்யாணம். நான் வரமாட்டேன்னு சொன்ன என்னை எவ்வளவு வற்புறுத்தி கூப்பிட்டாங்க தெரியுமா… " என்றவர் தன் தம்பி கிரிதரனிடம், " நீ வர்றியாடா." என.


" நான் நாளைக்கு வரேன். நீ வேணும்னா பசங்க வராங்களான்னு கூட்டிட்டு போ." என்று கூற.


சின்னவனோ, " எனக்கு செமஸ்டருக்கு படிக்குற வேலை இருக்கு. நான் நாளைக்கு அம்மா, அப்பாக் கூட வரேன் பெரியப்பா." என்று நழுவி விட‌.


" பெரியவனே நீயாவது பெரியப்பா கூட வர்றீயா?" என.


" பெரியப்பா… என் பேர் நிதிஷ் ஞாபகம் இருக்குல்ல." என்று கேலியாக வினவ.


" அதுமட்டுமா. நீ சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக வேலை பார்க்குறங்குற வரைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கு. டைம் ஆயிடுச்சு வாடா‌" என்று நிதிஷை இழுத்துக் கொண்டு மண்டபத்திற்கு சென்றார்.


கோபி இவ்வளவு எதிர்பார்ப்போடு செல்ல…


அங்கே இவரைக் கண்டுகொள்ள தான் ஆள் இல்லை.


" வாப்பா… கோபி …" என்ற பெரியவர்கள் மற்றவர்களை கவனிக்க…

மனோகரோ, தலையை மட்டும் அசைத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.


" டேய் மனோ…" என்றழைக்க…

முறைப்பு தான் பதிலாக கிடைத்தது‌.

சரி தான் என்று சத்யபிரகாஷை பார்க்க…


அவனோ இவனை கண்டுக் கொள்ளவே இல்லை.அருகிலிருந்து சுஜாதாவிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தான். ' அடப்பாவி… நடக்கப்போறது உன் பொண்ணு கல்யாணம். என்னமோ உனக்கு தான் கல்யாணம் ஆன மாதிரி இப்படி ஜொள்ளு விட்டு பேசிட்டு இருக்கீயே.' என்று மனதிற்குள் புலம்பியவன், நிதிஷை அழைத்துக் கொண்டு, மணமகன் அறைக்குச் சென்றார்.


அங்கு மாப்பிள்ளையை காணவில்லை.

மணமகளறைக்கு செல்ல… இளையவர்கள் எல்லோரும் அங்கு தான் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். மாப்பிள்ளை உட்பட…

எழிலனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்னவர் சந்தியாவிடம், " என்னமா கல்யாண பொண்ணு? அங்கிளை கண்டுக்க மாட்டேங்குற." என்று கூற…


சந்தியாவோ முறைப்பை தான் பரிசளித்தாள்.


" டார்லிங் இன்னும் கோபம் தீரலையா?" என்று சுனிதாவிடம் வினவ.


அவளும் அவரைப் பார்த்து முறைத்தாள்.

அதுவரை பொறுமையாய் இருந்த நிதிஷுக்கு கோபம் வர, " ஹலோ என்ன? கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்திறீங்களா? நானும் வந்ததிலிருந்து பார்த்துட்டே இருக்கேன். யாரும் அவரை ஒரு ஆளாக மதிக்க மாட்டேங்கிறீங்க?" என்று எகிற.


" சும்மா இரு நிதிஷ்." என்று அவனை அடக்கிய கோபி சுனிதாவிடம், " டார்லிங்… இது என் தம்பி பையன் தான். ஆமாம் உனக்கு என்ன கோபம் சொல்லுடா… எதா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்" என்றார்.


" உங்களை நம்பி தானே. யாரு இதய உதயனு கேட்டோம். உங்க ஃப்ரெண்டு தான் அந்த எழுத்தாளர்னு சொன்னீங்களா? என்ன என்ன கதை சொன்னீங்க." என்று சுனிதா முறைக்க‌


" அதானே…" என்றாள் சந்தியா.


அந்த நேரத்திற்கு உள்ளே வந்த மனோகரும், சுஜாதாவும் " இவனை சும்மா விடக்கூடாது. நல்லா மொத்தணும்னு அடிக்க வர…


" ஹேய் சத்யா… உனக்காகத் தானே உண்மையை மறைச்சேன். என்ன காப்பாத்துடா." என்றவர்,

சத்யபிரகாஷின் பின்னே மறைய…


" சரி போய் தொலையுது விடு சுஜா." என.


சுஜாதா அமைதியாக நின்றுக் கொண்டார்.


மனோகரோ அமைதியாக இருக்க…


" டேய் மனோ. இன்னும் உன் கோபம் போகலையா?" என.


இப்போது மதியரசி உதவிக்கு வந்தாள்.

" நீங்க இங்க வரலைன்னு தான் அண்ணா அவருக்கு கோபம். அதான் வந்துட்டீங்கள்ல. அப்புறம் என்ன? சும்மா உங்க கிட்ட விளையாடுறாரு." என.


புன்முறுவல் பூத்த மனோகரை, இறுக கட்டிக் கொண்டான் கோபி.


அங்கு பாச போராட்டம் நடந்துக் கொண்டிருக்க… அங்கு ஒரு காதல் நாடகம் அரங்கேறுவதை யாரும் கவனிக்கவில்லை.

****************************


உறவினர் அனைவரின் ஆசீர்வாதத்தோடு, சந்தியா, எழிலன் திருமணம் நடைபெற எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

யாரும் தங்களை கவனிக்கவில்லை என்று எண்ணிக் கொண்டு,சுனிதாவும் நிதீஷும் பேசிக் கொண்டிருக்க…

அதை இரு ஜோடி விழிகள் கண்டுகொண்டது.


" அடுத்த காதல் ஜோடி தயாராகிடுச்சு." என்று சத்யபிரகாஷ், சுஜாதாவைப் பார்த்து புன்னகைத்தார்.


சுஜாதாவும் மனநிறைவாக உணர்ந்தார்.

தன்னுடைய நண்பன் கோபியின் தம்பி மகனே தனக்கு மருமகனாக வருவதை விரும்பினாள்.

இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க.


அங்கு வந்த கோபி, " டேய் அங்க ஃபேமிலி போட்டோ எடுக்கணும்னு உங்களை கூப்பிட்டு இருக்காங்க. நீங்க என்னடான்னா இங்க ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்களே." என்று கலாய்க்க.


" டேய் பேசிட்டு தான் டா இருக்கோம்." என்றார் சத்யபிரகாஷ்.


" இந்த வயசுல அதுவே உங்களுக்கு அதிகம் தான். வா டா." என்று கோபி கூற.

சிரிப்புடனே சத்யபிரகாஷும், சுஜாதாவும் சென்றனர்.



மொத்த குடும்பமும் இவர்களுக்காக காத்திருக்க…


அவர்களுடன் சேர்ந்து நின்றுக் கொண்ட சுஜாதா, " நீயும் வா கோபி." என.


" ஹேய் நீங்க ஃபேமிலியா முதல்ல எடுங்க. அப்புறமா நாம எடுத்துக்கலாம்." என்றார்.


" டேய் கோபி. இனி நீயும் எங்க குடும்பம் தான். அங்க பாரு… " என்று கூற.


அங்கோ சுனிதா கண்களால் நிதிஷை, தங்களோடு ஃபோட்டோவிற்கு வந்து நிற்குமாறு அழைத்துக் கொணாடிருந்தாள்.


அதைப் பார்த்த மொத்த குடும்பமும் சிரிக்க… அப்பொழுது தான், எல்லோரும் தங்களை பார்ப்பதை உணர்ந்து இருவரும் வெட்கப்பட.


" ஹேய் நம்ம சுனிதாவுக்கும் வெக்கமெல்லாம் வருது." என்று நித்யாவும், அனிதாவும் கேலி செய்ய…

மீண்டும் மொத்த குடும்பமும் சிரிக்க.

அங்கே சந்தோஷ அலைப் பொங்கியது.

அந்த சந்தோஷ அலை என்றும் வற்றாமல் பொங்கி பெருகும் என வாழ்த்தி விடைப்பெறுவோம்.