• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓலை-2

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
ஓலை - 2

சத்யபிரகாஷின் முகத்தில் இருந்த புன்னகை மேலும் மலர்ந்து விரிந்தது. அதே புன்னகையுடன் தனக்கும், தனது மனைவிக்கும் இடையில் வந்தவளைப் பார்த்தவன், " சுதா மா, உனக்குத் தானே ஃபர்ஸ்ட் வேணும் இரு. " என்றுக் கூறியவாறே, சுனிதாவிற்கு அந்தப்பக்கம் இருந்த மனைவியை கை பிடித்து, இழுத்து தனது அருகில் நிறுத்தினான்.

அவளது கையையும் பற்றி, சேர்த்து கேக்கை எடுத்தவன் சுனிதாவிற்கு ஊட்டி விட்டான்.

மேடையில் நின்றிருந்த எல்லோரும், " ஓஹோ…" என்று கத்த…

கீழிருந்தவர்கள் கரகோஷத்தை எழுப்பினர்.

" போங்க டாட்." என்று சிணுங்கினாள் சுனிதா.

'ஐ நோ மை டியர் லிட்டில் ஏஞ்சல்.' என்று எண்ணியவர் அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தி புன்னகைத்தார்.

சத்யபிரகாஷ், சுஜாதாவின் இளைய மகள் தான் சுனிதா. சரியான அறுந்தவாலு. எப்பவும் இது போல ஏதாவது கலாட்டா பண்ணிக் கொண்டே இருப்பாள். அவள் எதற்காக இப்படி செய்தாள் என்று புரியவில்லை என்றாலும், மனைவியை விட்டுக் கொடுக்காமல் நடந்துக் கொண்டான் சத்யபிரகாஷ்.

"அண்ணா… " என்று அழைத்த மதியரசியின் குரலில் சுற்றுப்புறத்தை உணர்ந்தவன், அடுத்த கேக் துண்டை எடுத்து தனது சரிபாதிக்கு ஊட்டினான்.
சுஜாதாவும் ஊட்ட… விழா களை கட்டியது.

சில்வர்ஜுப்ளி பங்ஷன் தான் நடந்துக் கொண்டிருக்கிறது.
சத்யபிரகாஷும், சுஜாதாவும் திருமண பந்தத்தில் இணைந்து இன்றோடு இருபத்தி ஐந்து ஆண்டு ஆகிறது.
அதை வெற்றிகரமாக கொண்டாடுவதற்காகவே இந்த பங்ஷன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சத்யபிரகாஷ் முகம் மலர, சிரித்து, சிரித்து விருந்தினர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.

சுஜாதாவின் முகத்தில் என்ன இருந்தது என்பதே புரியவில்லை. அமைதியாக, மெல்லிய புன்னகையை முகத்தில் படர விட்டுக் கொண்டிருந்தாள்.

தன் அம்மாவைப் பார்த்த சந்தியாவிற்கு இப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது.
சந்தியா அவர்களின் மூத்த மகள். அம்மா செல்லம். அம்மா செல்லம் என்று சொல்வதை விட, அம்மாவின் நிழல் என்று சொல்லலாம்.
சுஜாதாவின் முகம் மலர்ந்தால், இவளது முகமும் மலரும். அவருடைய வதனத்தில் குழப்பம் இருந்தால், இவளுக்கும் கவலையாகிவிடும்.
இப்போதும் கூட மனோகருக்கு உதவி செய்துக் கொண்டிருந்தவள், அவ்வப்போது அவளது பார்வையை தன் தாயின் முகத்தில் படர விட்டுக் கொண்டிருந்தாள்.

" சந்து… கெஸ்டுக்கு ரிட்டர்ன் கிஃப்ட் குடுக்கணும். ரூம்ல இருக்கு. இவரைக் கூட்டிட்டு போய் எடுத்துக் கொடு." என்ற மனோகர், உதவிக்கு ஆளையும் அனுப்பினார்.

" சரிங்க மாமா." என்றவள், ஃபர்ஸ்ட் ப்ளோரில் உள்ள ரூமிற்கு சென்றாள்.
அவள் பின்னாடியே வந்தாள் சுனிதா.
அவளைக் கண்டுக்கொள்ளாமல், தன் கூட வந்த ஆளிடம்‍, " அண்ணா… இந்த மூட்டையை எடுத்துட்டு போங்க." என்றவள், பிறகு நிதானமாக தங்கையை திரும்பி, 'என்ன?' என்பது போல் பார்த்தாள்.

" என் மேல கோபமா இருக்கீயா அக்கா?"

" தெரிஞ்சுக்கிட்டே கேட்காத சுனிதா?"

"லூசு அக்கா… நீ தேவையில்லாமல் டென்ஷனாகுற? "

" சுதா… நான் ஒன்னும் தேவையில்லாமல் டென்ஷனாகலை.கொஞ்ச நாளா அம்மாவையும், அப்பாவையும் பார்த்துட்டு தான் இருக்கேன். ஏதோ ஒரு பிரச்சனை அவங்களுக்கு நடுவுல இருக்கு. பட் ஷ்யூரா தெரியலை. " என்றவள், திடீரென்று நினைவு வந்தவளாக, " ஆமாம்… என்னடி மரியாதை எல்லாம் தர… அக்கான்னு சொல்ற, நீயெல்லாம் அப்பா, அம்மாவுக்கே மரியாதை தர மாட்டியே‌… நான் உன் மேல கோபமா இருக்கேன். அதை டைவர்ட் பண்றதுக்காக இந்த மரியாதையா?" என்று ஆராய்ச்சியாக தங்கையைப் பார்த்தாள் சந்தியா.

" ஹேய் சந்து! ஸ்டாப்… ஸ்டாப். உன்னோட ஆராய்ச்சி எல்லாம் அம்மா, அப்பாவோட நிறுத்திக்க. என் கிட்ட வேண்டாம். நானே எல்லாத்தையும் சொல்லிடுறேன்."

" அப்படி வழிக்கு வாங்க மேடம்." என்ற சந்தியா தங்கையை பார்க்க.

" உன் கோபம் கேக் வெட்டும் போது, அவங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்ட்ரி ஆனது தானே. ஆனால் அதுக்கு ஒரு காரணம் இருக்கு தெரியுமா? "

" ம்… எங்க அம்மாவை விட நீ தான் அப்பாக்கு முக்கியம்னு நிரூபிக்கணும்னு நினைச்சிருப்ப. அதானே." என்று கோபத்துடன் இடையிட்டாள் சந்தியா.

" அது தான் இல்லை சுதா டியர். அம்மாவை, அப்பா எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கமாட்டார். அதை நிரூபிக்க நினைச்சேன், அதே மாதிரி நம்ம டாட் நிரூபிச்சுட்டார். அப்புறம் இன்னொன்னு…" என்று ராகம் இழுத்தவள் மெதுவாக, " அம்மாவை, அப்பாவை நான் பெயர் சொன்னாலே, முறைக்கிற உன்னையும் சொல்ல வைக்கணும்னு நெனச்சேன். அதையும் செஞ்சிட்டேன்.

இன்னைக்கு ஃபுல்லா நான் ஒரு பத்து தடவையாவது நான் அவங்க ரெண்டு பேரையும் சுஜா, மிஸ்டர் சத்யபிரகாஷ் அப்படின்னு சொல்லிட்டு இருந்தேன். பேச்சுவாக்கில் நீயும் சொல்லிட்ட…" என்று கூறிய சுனிதா கலகலவென நகைக்க.

சந்தியா தங்கையை பார்த்து முறைக்க முயன்று, அது முடியாமல் சிரித்தாள்.

தங்கையின் தலையை லேசாக தட்டியவள், " வாலு… நல்ல வேளை நான் பேர் சொன்னதை யாரும் கேட்கலை. இல்லைன்னா அவ்வளவு தான்." என்றாள் சந்தியா.

ஆம் சந்தியா தாயைக் கூட அபூர்வமாக சுஜா என செல்லமாக அழைப்பாள். ஆனால் தந்தையிடமிருந்து சற்று விலகி மரியாதையுடனே இருப்பாள்.

ஆனால் கடைக்குட்டி சுனிதாவுக்கு இருவருமே விலக்கு கிடையாது. இருவரையும் பேர் சொல்லிக் கூப்பிட்டு வம்பிழுப்பாள்.

என்னைக்காவது பெரியவர்கள் இருக்கும்போது கூப்பிட்டால் அவ்வளவுதான் எந்த பாட்டி இருந்தாலும் சரி திட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

ஆம் இவர்களது குடும்பம் கூட்டுக்குடும்பம். சத்யபிரகாஷோட அப்பா மகேந்திரேன் தான் அந்த வீட்டின் மூத்தவர். அவரது மனைவி விஜயா.
தம்பி நரேந்திரன் அவரது மனைவி மங்கையர்க்கரசி. அவர்களுக்கு ஒரே பெண் மதியரசி. இரண்டு தங்கைகள். மூத்த தங்கை ஜெயலட்சுமி, அவரது கணவர் கார்த்திக்கேயன். பையன் மனோகர். கடைக்குட்டி தங்கை அன்னலட்சுமி அவரது கணவர் சக்திவேல் மகள் சுஜாதா. இது தான் அவர்களது குடும்பம்.
நான்கு பேருமே ஒரே குடும்பமாக திருவண்ணாமலையில் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள்.

அந்த காலத்தில் எல்லோரும் நாலு, ஐந்து என்று குழந்தை பெற்றுக்கொள்ள… இவர்கள் வீட்டின் மேல் கடவுளுக்கு என்ன கோபமோ? என்னமோ தெரியவில்லை? பிறக்கும் குழந்தைகள் இறந்து விட… ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை தான்.
நான்கு பேரின் வாரிசுகளுமே தங்களுக்குள்ளே திருமணம் செய்துகொள்ள, குடும்பம் ஒற்றுமையாக இருந்தது.

சத்யபிரகாஷ், சிவில் இன்ஜினியர் படித்து விட்டு, சென்னையில் இரண்டு வருடம் ஒரு பெரிய கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனியில் வேலைப் பார்த்தவர், பிறகு தனியாக பிஸினஸ் ஆரம்பித்தார். தொட்டதெல்லாம் துலங்க… கன்ஸ்ட்ரெக்ஷன் பிஸினஸில் மிகப் பெரிய ஆளாக வந்தார்.

மனோகரோ, படித்து விட்டு, அவர்களது குடும்பத் தொழிலான பாத்திரக்கடையில் ஐக்கியமாகி விட்டார்.
ஒரு கடையாக இருந்தது, இன்று அவரது அசுர உழைப்பால் நான்காக பெருகியது.
அவர் திருவண்ணாமலையில் பெரியவர்களுடன் இருக்கிறார்.
மனோகருக்கு இரண்டு பையன், ஒரு மகள். மூத்த பையனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இரண்டாவது பையன் வெளிநாட்டில் படித்து கொண்டிருக்கிறான். இன்னும் ஆறு மாதத்தில் வந்துவிடுவான். வந்தவுடனே அவனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விழாவிற்கு வந்திருந்த பிரமுகர்கள் எல்லோரும் சத்யபிரகாஷை புகழ்ந்து தள்ள,பெரியவர்களுக்கு சத்யபிரகாஷை நினைத்து பெருமையாக இருந்தது.

விழாவிற்கு வந்தவர்களை புன்முறுவலுடன் வரவேற்ற சத்யபிரகாஷோ,அவரது கண்ணசைவில் ஊழியர்களை அழைத்து உணவருந்தவும் கட்டளையிட்டு கொண்டிருந்தார்.

ஒரு வழியாக பங்ஷன் முடிந்து, ஒவ்வொருவராக விடைபெற… டயர்டாகிய சத்யபிரகாஷ், சுஜாதா தம்பதியினர் உட்கார்ந்தனர்.
அவர்களுக்கு அருகே வந்த மனோகர், " சரி டா. நாங்க கிளம்புறோம்." என்றார்.

" வாட்? வீட்டுக்கு வராமல் போய்டுவீங்களா? நாங்களும் அங்கே தானே வரோம். எல்லோரும் ஒன்னா போறதா தானே ப்ளான்."என்று சத்யபிரகாஷ் வினவ.

" இல்லை டா மாப்பிள்ளை. நாளைக்கு
காலையிலேயே அபிஷேகத்திற்கு சொல்லியிருக்காங்க. இப்போ நாங்க கிளம்புனா தான், அங்கே எல்லா ஏற்பாடும் செய்யறதுக்கு கரெக்டா இருக்கும். பெருசுங்களும் ரெஸ்ட் எடுக்க சரியா இருக்கும்."

" டேய்… எப்பப் பாரு பெரியவங்களை மரியாதையில்லாமல் பேசுறதே வேலையா போச்சு." என்று முறைத்தார் சத்யபிரகாஷ்.

" அதெல்லாம் பாசத்துல சொல்றது. சரி விடு. நீங்க வீட்டுக்கு போயிட்டு, விடியற்காலையில் கிளம்பி வாங்க.
காலைல எட்டு மணிக்கு அபிஷேகம்."

" டேய் நாளைக்கு ஈவினிங் தானே அபிஷேகத்திற்கு கொடுக்க சொல்லியிருந்தேன். அப்படி இருந்தா எல்லோரும் ஒன்னாவே ஊருக்கு போயிருக்கலாம்." மீண்டும், மீண்டும் தன் அதிருப்தியை காண்பித்தான் சத்யபிரகாஷ்‌.

" டேய் அத்தை தான் ‍காலையில் அபிஷேகம் செய்தால் நல்ல அமைதி கிடைக்கும் என்று சொல்லிட்டாங்க. விடேன் டா. இன்னமும் நீ அதே சத்யபிரகாஷ் தான்டா. இருபத்திஐந்து வருஷத்துக்கு முந்தி, சென்னையில தனிக்குடித்தனம் வைக்க வந்தப்ப, கண்கலங்கிட்டு நின்னியே. அதே மாதிரியே இப்பவும் இருக்க." என்று மனோகர் கலாய்க்க.

சத்யபிரகாஷ் முறைத்தான்.
சுஜாதாவோ நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.
தன் நண்பனைப் பார்த்த மனோகர், " பைடா… " என்று விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.

ஊரிலிருந்து வந்த இவனது குடும்பத்து ஆட்கள் எல்லோரும் கிளம்பி இருக்க.
இவர்கள் நால்வரும், வீட்டிற்கு சென்று சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு, விடியற்காலையில் திருவண்ணாமலைக்கு கிளம்பினர்.

அவர்கள் வீட்டிற்கு வந்தபோதோ மணி ஏழு. எல்லோரும் கோவிலுக்கு பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தனர்…

சத்யபிரகாஷும், அவர்களது குடும்பமும் எல்லோரையும் பார்த்து ஒரு அட்டெனன்ஸ் போட்டு விட்டு, மாடியில் அவர்களின் அறை இருக்கும் பகுதிக்கு வந்தனர்.

கீழே முழுவதும் பெரியவர்களுக்கான அறைகளும், விருந்தினர் அறைகளும், சமையலறை, ஹால் என இருக்க… முதல் மாடியில் இரு பிரிவாக இருந்தது. ஒரு பகுதியில் சத்யபிரகாஷின் குடும்பத்திற்கும், மறுபகுதி மனோகருக்குமானது.
திருமணமான மனோகரின் மூத்த பையன் மகிழனுக்கு அடுத்த ப்ளோரில் அறை.

ஊரிலே குளித்து விட்டு கிளம்பியிருந்ததால், ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான் சத்யபிரகாஷ்.

டிவியில்,
"ராசாவே உன்னை காணாத
நெஞ்சு காத்தாடி போலாடுது….
….
…..
அத்தை மகனோ மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட …" என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

ரெஸ்ட் ரூமிலிருந்து ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்து சுஜாதாவிற்கு என்ன தோன்றியதோ, அங்கிருந்த ரிமோட்டை எடுத்து அந்தப் பாட்டை மாற்றினாள்.

" எதுக்கு அந்த சாங்க மாத்துற? வை சுஜா… எனக்கு ரொம்ப பிடிக்கும்." என்றார் சத்யபிரகாஷ்.

" எனக்கு அந்த பாட்டு கேட்டாலே பிடிக்காது. ரொம்ப எரிச்சலா இருக்கு. " என்றவாறே வேறு சேனலை மாற்றினாள் சுஜாதா.

" உனக்கு கேட்க பிடிக்கலைன்னா ரூமுக்குள்ள போ… நான் பார்க்கிறதை எதுக்கு மாத்துற?" என்று சத்யபிரகாஷ் சண்டை போட.

" எனக்கும் இந்த வீட்ல ரைட்ஸ் இருக்கு. நான் எங்கே இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும். நீங்க கிடையாது."

" லூசா நீ. இங்கே மட்டும் இல்ல… சென்னையிலுள்ள வீட்டிலேயும் உனக்கு ரைட்ஸ் இருக்கு. பட் நான் பார்த்திட்டு இருந்ததை மாத்துறதுக்கு எந்த ரைட்ஸும் இல்லை புரியுதா?"என்று சத்யபிரகாஷும் எகிற.

வழக்கம் போல முட்டிக் கொண்டு நிற்கும் இருவரையும் பார்த்த சந்தியாவோ," ப்ளீஸ் பா. சண்டை போடாதீங்க." என்று தந்தையிடம் கூறியவளோ,
சுஜாதாவிடம், " ஏன் மா இப்படி இருக்கீங்க ? எப்பப் பாரு சண்டைப் போட்டுட்டே…" என்று கடிந்துக் கொண்டாள்.

"ஆமாம் டி. நான் அப்படித்தான். இந்த அத்தை மகன், மாமன் மகள்னு பாட்டை கேட்டாலே எரிச்சலா இருக்கு."

அதுவரை அமைதியாக இருந்த சத்யபிரகாஷ், " ஏன் இந்த பாட்டுக்கு என்ன குறைச்சல்?" என்று வினவ.

" ம் பாட்டுக்கு ஓரு குறைச்சலும் இல்லை. உங்களை கட்டிட்டு நான் படுற அவஸ்தை போதாதா?" என்று முணுமுணுத்தார் சுஜாதா.

"ஓஹோ! உனக்கு பிடிக்காதா? டூ லேட். ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் இல்லாமல் என் பொண்ணுக்கும் சொந்தத்துல தான் கட்டி வைக்கப் போகிறேன்." என்று சுஜாதாவை பார்த்துக் கொண்டே கூறினார்.

" நான் ஒருக்காலும் அதுக்கு ஒத்துக்க மாட்டேன். " என்று கணவனைப் பார்த்து கூறிய சுஜாதா, அங்கு இருவரையும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த மகளிடம் திரும்பி, "இங்க பாருடா சந்தியா, நீ லவ் பண்ணி வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ. அம்மா உனக்கு சப்போர்ட்டா இருப்பேன். ஆனால் நான் பண்ண தப்பை நீ பண்ணிடாத." என்றார்.

அவள் கூறியதைக் கேட்ட சத்யபிரகாஷ், அடிபட்ட பார்வை பார்த்தார்.

" அம்மா… இப்ப எதுக்கு தேவையே இல்லாமல் இதைப் பத்தி பேசுற." என்றாள் சந்தியா.

" சந்தியா எதுக்கும் நீ பயப்படாதே. அப்பா இருக்கேன். உன் விருப்பம் என்ன சொல்லு?" என்ற சத்யபிரகாஷ், அவளைப் பார்க்க.

சந்தியாவோ, " அப்பா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பா." என்று பிரச்சனையை இப்போதைக்கு தள்ளிப் போடப் பார்த்தாள்.

அப்போது தான் கீழே இருந்து, காஃபி குடித்துக் கொண்டே வந்த சுனிதா, " என்ன சத்தம் சந்து. நம்ம அப்பா சொல்றதுக்கு ஓகே சொல்லு. அப்பா எது செஞ்சாலும் நம்ம நல்லதுக்கு தான்." என்று தலையும் புரியாமல், வாலும் புரியாமல் உளற…

அவளைப் பார்த்து முறைத்த சந்தியா, " அப்பா என்ன சொன்னார்னு உனக்குத் தெரியுமா? எழில் அத்தானை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? பண்ணிக்கட்டுமா?" என்று வினவ.
குடித்துக் கொண்டிருந்த காஃபி புரையேற அதிர்ச்சியுடன் அக்காவை பார்த்தாள் சுனிதா.

தங்களுக்குள் முறைத்துக்
கொண்டிருந்த சத்யபிரகாஷும், சுஜாதாவும் இப்போது சின்னவளை ஆராய்ச்சியாகப் பார்த்தனர்.