• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓலை -3

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam

ஓலை - 3


சத்யபிரகாஷும், சுஜாதாவும் தங்களது சின்ன மகளை ஆராய்ச்சியாகப் பார்க்க.


அவளோ இடைவிடாமல் இருமிக் கொண்டிருந்தாள்.


சுனிதாவின் அருகில் நின்றிருந்த சந்தியா அவளது தலையை தட்டி, " தேவையா உனக்கு?" என்று மெதுவாக அவளது காதுக்குள் முணுமுணுத்தாள்.

" ஹேய் அங்க என்ன ரெண்டு பேருக்கும் ரகசிய பேச்சு? " என்று பொதுவாக இருமகளையும் பார்த்து வினவியவர், இருவரும் ஒன்றும் சொல்லாமலிருக்க.


சுனிதாவிடம், " ஆமா… எதுக்கு நீ இவ்வளவு அதிர்ச்சியாகுற? சந்தியாவுக்கும், எழிலுக்கும் கல்யாணம்னா உனக்கு என்ன பிரச்சனை?" என்று விசாரித்தார் சுஜாதா.


" எனக்கு என்னம்மா பிரச்சனை? ஒன்னும் இல்லையே." என்று படபடன்னு மறுமொழி அளித்த சுனிதா,சுஜாதாவைப் பார்த்து முழிக்க…


"உன் முழியே சரியில்லை. நீ சின்ன பொண்ணு. " என்று சுஜாதா கூற.


" ஹலோ சுஜா. நான் ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது. ஓட்டுப் போடுற வயசு எனக்கு வந்தாச்சு."


" அடிக்கழுதை… வாயைப்பாரு. சின்னப்பொண்ணு இல்லையாமே.அப்ப உங்க செல்ல அப்பாவோட ஆசையை நிறைவேத்த, உங்க எழிலத்தானுக்கு கழுத்தை நீட்டப் போறீயா?" என்று சுஜாதா படபடக்க.


சத்யபிரகாஷோ, சின்ன மகளை யோசனையாக பார்த்தார்.


சந்தியாவிற்கோ சிரிப்பு வர, அதை அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்க முயன்றாள்.


சுனிதாவிடமிருந்து வேகமாக மறுப்பு வந்தது." ஐயோ அம்மா‌! நான் சின்ன பொண்ணு தான் ஒத்துக்கிறேன். என்னை ஆளை விடுங்க. நான் நிறைய படிக்கணும். இப்போ கோயிலுக்கு டைமாயிடுச்சு நான் கிளம்புறேன்." என்று அந்த இடத்தில் இருந்து கிளம்ப முயன்றாள்.


" அப்போ உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. உங்க அக்காவுக்கும், எழிலுக்கும் கல்யாணம் பேசலாமா?" என்றார் சத்யபிரகாஷ்.


" அது… அது… நீங்க எதுவாக இருந்தாலும் அக்காட்ட பேசிக்கோங்க. அதுவுமில்லாமல் அந்த எலி…" என்றவள், தொண்டையை செறுமிக்கொண்டு, " எழிலத்தான் முதல்ல வெளிநாட்டிலிருந்து வரட்டுமே… தனியா வர்றாரா? இல்லை துணையோடு வர்றாரானு தெரியாமல் நீங்க மட்டும் எதுவும் முடிவு எடுக்க வேண்டாம்." என்றாள் சுனிதா.



இப்பொழுது சத்யபிரகாஷ் கண்களில் கண்டிப்புடன் தன் மகளை பார்த்தவர், " அதிகப்பிரசங்கித்தனமா எதுவும் பேச வேண்டாம் சுதா. முதல்ல உள்ள போ." என அழுத்தமாக கூற…


தந்தையின் குரலில் பயந்து உள்ளே ஓடி விட்டாள் சுனிதா.


சந்தியாவும் எங்கே இங்கேயே இருந்தால் மீண்டும் திருமணத்தைப் பற்றி பேசுவார்களோ என்று பயந்து உள்ளே ஓடி விட்டாள்.


வெளியே நின்று கொண்டிருந்த இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்து தோளைக் குலுக்கி விட்டு கோவிலுக்கு கிளம்பினர்.


உள்ளே சென்ற சந்தியாவோ, சுனிதாவைப் பார்த்து சிரித்தாள்.


அவளைப் பார்த்து முறைத்த சுனிதா,

" என்ன சந்து? சிரிப்பு ஓவரா இருக்கு." என.


" அப்பாவும், அம்மாவும் உன்ன பார்த்ததை நெனச்சேன். சிரிப்பு வந்துச்சு டி."


" சந்து! என்னை சந்தேகமாக பார்த்தது கூட பிரச்சனை இல்லை. ஆனால் அந்த எலியோடு போய் என்னை ஜோடி சேக்குறாங்க. அது தான் என்னால தாங்க முடியலை. நானே டென்ஷனா இருக்கேன்‌. ஆனால் நீ சிரிச்சிட்டு இருக்க?"


" கடவுள் இருக்காரு சுதா!" என்ற சந்தியா தங்கையை கேலி செய்ய‌.


" சந்து! அந்த எலி மூஞ்சி உனக்கே செட் ஆகாது. மாமாவா என்னால ஒரு நாளும் ஏத்துக்க முடியாதுனு நான் உன் கிட்டயே பலமுறை சொல்லிட்டிருக்கேன். நீ சொல்ற மாதிரி அந்த கடவுள் என்னையும் இப்படி கோர்த்து விடுறாரே! ஓ… காட்." என்று சுனிதா புலம்ப.


" ஹேய் சுதா. டூ இயர்ஸ் அமெரிக்கா வாசம் அவரை மாற்றியிருக்கலாம். ஒரு வேளை இப்போ பார்க்கும் போது ஹான்ஸம் ஃகையா இருக்கப் போறாருடி அத்தான். அவசரப்பட்டு வார்த்தையை விட்டுடாதா."


" உலக அழகனா இருந்தாலும் எனக்கு வேண்டாம் தாயே. ஆளை விடு. ஆனால் அங்கே என்னமோ, பலமான எதிர்பார்ப்போட இருக்குற மாதிரி தெரியுது." என்ற சுனிதா, தனது அக்காவை ஆராய்ச்சியாக பார்க்க.


அவளோ, சிவந்த தன் முகத்தை எப்படி மறைப்பது என புரியாமல், தன் போக்கில் கண்ணாடி முன் அமர்ந்து பவுடர் பூசிக் கொண்டிருந்தாள்.


" ஐயோ! அக்கா… அம்மா உன் மேல மலைப் போல நம்பிக்கை வச்சிருக்காங்க. அவங்க எதிர்பார்ப்பை நிறைவேத்துவேனு… நீ என்னடான்னா இப்படி வெட்கப்பட்டு உட்கார்ந்து இருக்க." என.


" அம்மாவை ஏமாற்ற மாட்டேன். அம்மா விருப்பப்படிதான் நான் நடப்பேன். இப்போதைக்கு நான் வேலைக்கு போகணும். அது தான் என்னோட எய்ம். மத்ததெல்லாம் அப்புறம் பார்ப்போம்." என்றவள் மீண்டும் கண்ணாடி பக்கம் திரும்பி தலைவாரிக் கொண்டிருந்தாள்.


" அப்படியே ஆகட்டும். நன்றாக வேலைப் பார்த்து, அங்கிருந்து திறமைகளை கற்றுக் கொண்டு வந்து, நம் கன்ஸ்ட்ரெக்ஷனில் பயன்படுத்து." என்று ஆசிர்வாதம் அளித்தபடியே சுனிதா சிரிக்க.


" அடிப்பாவி. நான் கஷ்டப்பட்டு இன்ட்ரீயர் டிசைனிங் படிச்சுட்டு, எக்ஸ்பீரியன்ஸ்காக வெளியே வேலைக்கு போகணும்னு நினைச்சா, என்னமோ அங்கேருந்து திறமையை கத்துட்டு வரணும்னு சொல்ற. என் திறமைக்கு அங்கீகாரம் வேணும்னு தான் நான் அங்க போறேன்."


" என்னமோ செய். இப்போ நேரமாயிடுச்சு கீழே போகலாம். இல்லைன்னா நாலு பாட்டியும் ரவுண்டு கட்டிக்கிட்டு திட்டுவாங்க." என்ற சுனிதா கீழே செல்ல.


" அது சரி தான்." என்ற சந்தியாவும் அவளுடன் இணைந்துக் கொண்டாள்.


ஒரு வழியாக மொத்த குடும்பமும் தயாராகி அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்றனர்.


பெரியவர்கள் முன்னே செல்ல…



" மா… நடந்தா? கார்ல போகலாம் மா." என்று வழக்கம் போல வம்பு செய்தாள் சுனிதா.


"ஹேய் சுதா. இங்கே இருக்க கோவிலுக்கு காரா? ஒழுங்கா நடந்து வா. வயசானவங்களே நடக்குறாங்க. உனக்கு என்ன? சீக்கிரமா வா டைமாயிடுச்சு." என்று முடிந்தளவுக்கு பொறுமையாக கூறினார் சுஜாதா…


"சரி மா… ஆனால் எனக்கு பேண்ட், க்ளிப் எல்லாம் வேணும். முன்பக்க வழியா போனா தான் வாங்கலாம். வாங்க அந்த பக்கமா கார்ல போகலாம்."


" அட லூசே. காலையிலே எந்த கடை தொறந்திருக்கும். வரும் போது அந்த வழியாக வந்து வாங்கித் தரேன். இப்போ அபிஷேகத்திற்கு நேரமாயிடுச்சு போகலாம்." என்று தலையில் அடித்துக்கொண்டு சுஜாதா கூற.


" அப்போ சரி மா." என அசடு வழிய சிரித்துக் கொண்டே நடந்தாள் சுனிதா.


இவர்கள் வீடு இருப்பது ஆவாராங்காட்டுத் தெரு. அங்கிருந்து

ஐந்து நிமிட நடையில் அம்மணியம்மன் கோபுரம் வந்துவிட…


அதை வணங்கி‍ விட்டு, கோவிலுக்குள் நுழைந்தனர்.


விநாயகருக்கு முதலில் அபிஷேகம் நடைபெற… அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.


அலங்காரம் செய்யும் நேரத்தில் எழுந்த சுனிதா, " ஹேய் சந்து, அனி எழுந்திருச்சு வாங்க. நாம குளத்துக்கிட்ட போகலாம். " என தனது அக்காவையும், மாமன் மகளான அனிதாவையும் அழைக்க…


" இப்போ எங்கே போறீங்க? தீபாராதனை காட்ட போறாங்க.அமைதியா உட்காருங்க. " என்று பெரிய பாட்டி விஜயா அதட்ட…


" மீன் பார்க்கப் போறேன் பாட்டி… அலங்காரம் பண்றதுக்குள்ள வந்துருவோம்." என்றவள், அவர்களையும் அழைத்துக் கொண்டு ஓடிவிட்டாள்.


" சின்ன வயசுல சுஜாதாவைப் பார்க்குற மாதிரியே இருக்குறா கா…" என்று மங்கையர்க்கரசி கூற.


"அத்தை! உங்க பேத்தியை திட்டணும்னா, அவளை மட்டும் திட்டுங்க. எதுக்கு என்னையும் இழுக்குறீங்க. மீ பாவம்." என்றார் சுஜாதா.


" ஆமாம் மா! அந்த வாண்டை கண்டிக்கிறதை விட்டுட்டு சுஜாதாவை இழுக்கிறீங்க." என்றார் மதியரசி.


" ஆமாம்… உன் அண்ணி சொன்னால் போதும், உனக்கு மூக்கு வேர்த்துடுமே! எங்கிருந்தாலும் வந்துடுவ." என்று தன் மகளை கிண்டல் செய்த மங்கையர்க்கரசி சிரிக்க.


ஜெயலட்சுமியும், அன்னலட்சுமியும் சேர்ந்து சிரித்தனர்.


"அங்கே என்ன பேச்சு? சாமியை கும்பிடுங்க" என்ற ஆண்களின் குரல் ஒலிக்க.அதற்குப் பிறகு அமைதியாக இருந்தனர்.


மீன் பார்க்க சென்றவர்களும் வந்து விட, நிறைவாக சாமி தரிசனம் செய்தனர்.

தங்கத்தேர் இழுக்க பணம் கட்டியிருந்தனர்.

அதையும் செய்து முடித்தவர்களின் மனதிலோ ஒரு இதம் தோன்றியது.


அந்த காலை பொழுது மிக ரம்யமாக இருந்தது. கீச் கீச்சென்ற பறவைகளின் சத்தத்தோடு, அந்த பிரகாரத்தில் அமர்ந்தனர்.


பெரியவர்கள் பழங்கதை பேசிக் கொண்டிருந்தனர்.


மனோகர் தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்தவர், " மகிழா… புளியோதரை வாங்கிட்டு வா." என தனது மகனிடம் நீட்டினார்.


" ஏன் பா. கோவில் பிரசாதமாக பொங்கல் கொடுத்துருக்காங்கள்ல. அதை ஆளுக்கு கொஞ்சமா கொடு. வீட்ல போய் சாப்பிட்டுக்கலாம். இப்போ எதுக்கு புளியோதரை வேற வாங்குற?" என்றார் சத்யபிரகாஷின் தந்தை.


" பரவாயில்லை மாமா. உங்க எல்லாருக்கும் சுகர் இருக்கு. கொஞ்சமா பொங்கல் சாப்பிடுங்க. இங்கே கடையில் விற்கும் புளிசாதம் எவ்வளவு டேஸ்டா இருக்கும் என்று உங்களுக்குத் தான் தெரியுமே." என்றவர், " நீ போய் வாங்கிட்டு வா." என்று மகனை அனுப்பி வைத்தார் மனோகர்.


" அதுக்கு ஏன் டா மனோ, மகிழனை அலைய விடுற. போகும் போது வாங்கிக்கலாம்ல." என்றார் அவனது சித்தப்பா.


" கோவில் பிரசாதத்தை விநியோகிக்க நேரமாகும் சித்தப்பா. அதான்." என்றார் மனோகர்.


"மாமா! எனக்கு ஐந்து ரூபாய் காசு தாங்க." என்றாள் சுனிதா.


" எதுக்குடா?" என்றுக் கேட்டவாறே தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து நீட்ட.


" பணம் வேண்டாம் மாமா. சில்லறை காசு தாங்க. யானைக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்." என்றாள்.


" நீ என்ன இன்னும் சின்ன பொண்ணா? ஏழு கழுதை வயசாயிடுச்சு. இன்னும் விளையாட்டுத்தனமாவே இருக்க." என்று அவளது பாட்டி வம்பிழுக்க.


தன் தாயையும், தந்தையையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, 'அவர்கள் கவனம் இங்கு இல்லை. ' என்பதை உறுதி செய்துக் கொண்டவள்,



" ஹேய் கிழவி! எங்க அப்பா, அம்மாக்கு நான் என்னைக்கும் சின்ன குழந்தை தான். உனக்கு இப்போ என்ன பிரச்சினை?" என்றாள் சுனிதா.

" அடியே வாயாடி! நான் கிழவியா? அந்த வாயைப் பாரு. முதல்ல அதை குறை. உன்னைய விட சின்னவ தானே அனிதா. பாரு எவ்ளோ அமைதியா இருக்கா…"


" இப்போ உங்களுக்கு என்ன பிரச்சினை பாட்டி. அவ அமைதியா இருக்கிறது தானே. அவளையும் நான் என் கூடவே அழைச்சிட்டு போய், என்னை மாதிரியே ஆக்குறேன் போதுமா?" என்றவள்,


"வாடி…" என்று அனிதாவை அழைத்துக் கொண்டு சிட்டாக பறந்து விட்டாள்.


அனிதா இங்கு பெரியவர்களுடனே இருப்பதால், அவளது இயல்பையே தொலைத்து விட்டு அமைதியாகவே இருப்பாள்.


அவள் சிறு வயதில் இவளோடு சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் அதற்கு பெரியவர்கள் ஏதாவது கூறிக்கொண்டே இருந்தனர்… அமைதியாக இருந்தால் எந்த பிரச்சனையும் வராது என்று எண்ணிய அனிதாவோ, அதன் பிறகு அமைதியாகவே இருக்க கற்றுக் கொண்டாள்.


சுனிதா எப்பொழுதெல்லாம் வருகிறாளோ, அப்போதெல்லாம் அனிதாவிற்க்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

இப்போதும், காசை வாங்கிக் கொண்டு இருவரும் யானையிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கியதோடு மட்டுமல்லாமல் ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டு ரணகளம் செய்துக் கொண்டிருந்தாள்.


அனிதாவோ, " போதும் டி..‌. தேடுவாங்க

வா போகலாம்." என்று அழைத்துச் சென்றாள்.


முகமெல்லாம் உற்சாகமாக ஓடி வந்த மகளைப் பார்த்த சத்யபிரகாஷ்,' இன்னும் குழந்தையாகவே இருக்கிறா… இவளைப் போய் நாம் சந்தேகப்பட்டு விட்டோமே …' என்று எண்ணியவன், தனது மனைவியை பார்க்க…



அவளது முகத்திலும் அதே எண்ணம் தெரிய…


இப்போது சத்யபிரகாஷின் முகத்தில் புன்னகை தோன்றியது‌.


ஒருவழியாக மகிழன் வாங்கி வந்த பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு கோவிலை வலம் வந்தனர்.


சுஜாதாவிற்கும், சத்யபிரகாஷிற்கும் மனம் நிறைந்திருந்தது.


நேற்று நடந்த பிரம்மாண்டமான விழாவை விட , இன்று அதிகாலையில் நடந்த அபிஷேகம் அவர்கள் இருவருக்கும் அவ்வளவு மன நிறைவை கொடுத்தது.


பிரகாரத்தை வலம் வந்தனர். சுற்றும்போது பக்கவாட்டில் உள்ள பகுதியை பார்த்து, முகம் வாட நின்றாள் சுஜாதா.


அவளுக்குள் வேண்டாத நினைவுகள் வந்து போனது. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு அவள் எழுதிய கடிதங்கள் கண்ணுக்குள் வந்து போனது.


அவள் கூடவே வந்த சத்யபிரகாஷ், திடீரென சுஜாதா நிற்கவும், அவரும் நின்று அவளது முகத்தை பார்த்தார்‌.

அங்கு வந்து போன உணர்வுகளை அவதானித்தவன் அதிர்ந்து நின்றான்.

'அந்த கடிதத்தில் இருந்தது இந்த இடம் தானா ?' என்று மனதிற்குள் எண்ணியவன், தன் உணர்வுகளை முகத்தில் காட்டாமல் வெளியே சென்றான்.



இருவரையும் கண்டு கொள்ளாமல் மற்றவர்கள் எல்லோரும் இன்று நடைபெற்ற அபிஷேகத்தைப் பற்றியே பேசிக்கொண்டே, வரும்போது வந்த

வழியிலே வெளியேறினர்.


" அம்மா என்னமா சொன்னீங்க? திரும்ப போது போது கடைத்தெருக்கு போலாம்னு சொன்னீங்கள்ல… எனக்கு நிறைய பர்சேஸ் பண்ணனும்." என்று சுனிதா சிணுங்க…


" இன்னொரு நாள் போகலாம்." என்றார் சுஜாதா.


" மா… ப்ளீஸ்." என்று சுனிதா விடாமல் கெஞ்ச.


" கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் வா சுனிதா. எனக்கு தலை வலிக்குது." என்று கோபமாக சுஜாதா கூற.


'இவ்வளவு நேரம் சிரிச்சிட்டு இருந்த அம்மா இப்போது ஏன் இப்படி டென்ஷனா இருக்காங்க.' என்று எண்ணிய சுனிதா வேறு எதுவும் சொல்லாமல் அமைதியாக வந்தாள்.


அவளது அமைதியைப் பார்த்த தாத்தா, " ஏன் பா. பிரகாஷு… நீ கடைக்குத் தானே போகணும்னு சொன்ன. பாப்பாவையும் கூட்டிட்டு போ." என.


" இல்லை பா. எனக்கும் கொஞ்சம் டயர்டா இருக்கு. ரெஸ்ட் எடுக்கப் போறேன்." என்றவரோ தனது மகளை கவனிக்கவே இல்லை.


அவர் கவனித்து இருந்தால், முதலில் சுனிதாவின் ஆசையை தான் நிறைவேற்றி இருப்பார்.


இப்போது அவருடைய நினைவெல்லாம், 'அவரது பழைய பொருள் இருக்கும் பெட்டியில், அவருக்கு வேண்டியது இருக்கா என தேட வேண்டும்.' என்பது மட்டுமே…

அப்படி என்ன தான் அதில் இருக்கிறது என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

' கடவுளே! அது யாரின் கையிலும் கிடைக்காமல் இருக்க வேண்டும்.' என்று எண்ணிய சத்யபிரகாஷின் முகம் என்னவோ போல் இருந்தது.


தன் தந்தையை பார்த்த சந்தியா, " என்ன பா பண்ணுது ? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?" என்று கேட்க.


" நத்திங் டா. " என்றவர் அமைதியாக நடக்க. இப்போது சுஜாதாவும் அவரை யோசனையாக பார்த்தாள்.


இப்படியாக மொத்தக் குடும்பமும், அவரது மாறுப்பட்ட நடவடிக்கையில், அவரையே கவனிக்க.



சத்யபிரகாஷோ, ' எப்படியாவது அந்தக் கடிதத்தை, சுஜாதாவின் கண்களில் படாமல் டிஸ்போஸ் செய்ய வேண்டும்.' என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.