• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓலை-4

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
ஓலை - 4

சத்யபிரகாஷ் யாருடைய பார்வையையும் கண்டுகொள்ளாமல் தனக்குள் ஏதோ யோசித்துக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

" சாப்பிடுங்க பா." என்ற மகிழனின் மனைவியான நித்யாவை கூட கண்டுக்காமல், " இருக்கட்டும் மா. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து சாப்பிடுறேன்." என்றவர் விறுவிறுவென மாடிக்குச் சென்றார்.

நேராக அவரது அலுவலக அறைக்குச் சென்றார். அவருக்கு இங்கேயும் ஒரு பர்ஸனல் அறை உண்டு. இங்கு வரும் போது வேலைப் பார்ப்பார். அந்த அறையில் உள்ள எந்தப் பொருளையும் யாரும் தொடமாட்டார்கள்.
அந்த நம்பிக்கையில் தானே அந்தக் கடிதத்தை அலட்சியமாக போட்டு வைத்திருந்தார்.

இன்று சுஜாதாவின் பார்வையிலும், அவளது முக வாட்டத்திலும் பயந்து போய் அல்லவா, அந்தக் கடிதத்தைத் தேடி இங்கு வந்திருக்கிறார்.

இந்த இருபத்தி ஐந்து வருடத்தில் முதல் ஒரு வருடத்தை தவிர, சுஜாதாவை இந்தளவுக்கு குழப்பத்துடன் பார்த்ததில்லை.

என்றைக்கு இருபத்தி ஐந்தாவது வருட திருமண நாளை கொண்டாடலாம் என்று கூறினானோ அன்றிலிருந்து அவளது நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது.
எதையோ எதிர் பார்ப்பதும், சிடுசிடுவென பேசுவதுமாக சுஜாதா இருக்க, அதை கண்டுகொள்ளாமல் சத்யபிரகாஷ் இருந்தார்.

அதற்காக இந்த இருபத்தி நான்கு வருடத்தில் இருவருக்கிடையே சண்டைகள் வராமல் இல்லை.
சண்டைகள் வரும், பின்னேயே சமாதானமும் நடக்கும்.
யார் மேல் தவறு இருக்கிறதோ, அவர்கள் முதலில் இறங்கி வருவர்… யார் மேல் தவறு என்று அதற்கே ஒரு பெரிய ஆர்கியூமெண்ட் நடக்கும். தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது.

ஊருக்கு வந்த பிறகாவது சுஜாதாவின் மனநிலை மாறும் என நினைத்திருக்க… அவளோ அதே மாதிரியே இருந்தாள். அதுவுமில்லாமல் கோவிலில் அவள் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்க, அவனுக்கு வலிக்க ஆரம்பித்தது.
' இத்தனை வருடம் இல்லாத குழப்பம் இப்பொழுது என்ன?' என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருந்த சத்யபிரகாஷிற்கு திடீரென்று தான் அந்த கடிதம் ஞாபகத்திற்கு வந்தது.
அதனால் தான் வீட்டிற்கு வந்தவர், நேராக அதைத் தேடி தான் அலுவலக அறையில் நுழைந்தார்.

அவருடைய அலுவலக அறையில் யாரும் வந்து, எதையும் கலைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருக்க.

இன்று ஏனோ மனதிற்குள் ஒரு படபடப்பு… அவர் எண்ணியதைப் போலவே அவர் தேடிய அந்த பெட்டி மட்டும் காணவில்லை.

மாடியில் சுத்தம் செய்தாலும் இவர்களுடைய அறையையும், பிள்ளைகளின் அறையையும் மட்டுமே சுத்தம் செய்வர்.

சுஜாதா கூட இவருடைய அலுவலறைக்குள் வரமாட்டார்.

எதற்கும் அம்மாவிடம் கேட்போம் என்று ரூமிலிருந்து வெளியே வர, சரியாக அந்த நேரம் சுனிதாவும், சந்தியாவும் அவர்கள் அறையில் ஆச்சரியமாக பேசிக்கொண்டிருக்கும் குரல் லேசாக திறந்திருந்த கதவின் வழியாக கேட்டது.

" ஹேய் இங்க பாருடி… இது பொங்கல் வாழ்த்து… சூப்பரா இருக்குல்ல. யார் அனுப்பி இருக்காங்க என்று பாருடி." என்ற சுனிதாவின் ஆர்ப்பாட்டமான குரல், சத்யபிரகாஷின் செவியில் விழுந்தது.

ஒரு நிமிடம் அதிர்ந்த சத்யபிரகாஷ், பிறகு மகள்களின் அறைக் கதவைத் தட்டி விட்டு வேகமாக உள்ளே நுழைந்தார்.

" என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று இயல்புக்கு மாறாக கத்தினார்.

" அது பா… கிரீட்டிங் கார்ட்ஸ் அழகா இருக்கு. அதெல்லாம் பார்த்துட்டு இருக்கோம் பா." என்று மெல்லிய குரலில் சந்தியா கூற.

" ஓ… காட்… இது எப்படி இங்கே வந்தது."

" அது நித்யாக்கா …. ரூம் க்ளின் பண்ணும் போது, இந்த சூட்கேஸ் இருந்ததுனு எடுத்துட்டு வந்து தந்தாங்க." என்றாள் சுனிதா.

"நான்சென்ஸ்… என்னுடைய ஆஃபிஸ் ரூமிற்கு யார் போக சொன்னா?"

"நாங்க போகலை பா. நித்யாக்கா தான் தந்தாங்க." என்று சுனிதா கூற.

" நித்யா தந்தா உங்களுக்கு எங்க போச்சு அறிவு? அப்பாவோட திங்ஸை அவர் பர்மிஷன் இல்லாமல் தொடலாமா? எதுவுமேவா தெரியாது. தேவையில்லாத வேலையெல்லாம் செய்துகிட்டு.ஊருக்கு வந்தோமா, பாட்டிங்க, தாத்தாங்க கிட்ட பேசிட்டு இருக்க வேண்டியது தானே. இல்லை உங்க அத்தைக் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டியது தானே.
அதை விட்டுட்டு வெட்டி வேலை செய்றது? சந்தியா நீயாவது கொஞ்சம் பொறுப்பா இருந்தா என்ன?
கல்யாணம் பண்ற வயசு வந்துருச்சு. இன்னமும் பொறுப்பே இல்லாமல் விளையாட்டுத்தனமா இருந்தா என்ன தான் செய்யுறது. அங்க தான் வேலை எதுவும் செய்யாம இருக்கறீங்க… இங்கே வந்த இடத்திலாவது ஏதாவது வேலை செய்யறது. கீழே போய் அனிதா, நித்யா கூட வேலைப் பாருங்க ." என.

தன் தந்தையின் கோபத்தை பார்த்து பயந்து, சந்தியாவும், சுனிதாவும் அங்கிருந்து சென்றனர்.

"அப்பாடா " என்று பெருமூச்சு விட்ட சத்யபிரகாஷ், அந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு தனது அலுவலக அறைக்கு வேகமாக சென்றவர், முதல் வேலையாக அதை திறக்க முயல…
படபடவென கதவு தட்டப்பட்டது.

" ஷிட்." என்றவர் கதவைத் திறக்க.
கதவுக்கு வெளியே சுஜாதா நின்றுக் கொண்டிருந்தார். " என்ன?" என்று பதற்றத்தை மறைத்துக் கொண்டு சத்யபிரகாஷ் வினவ.

"சாப்பிட வரலையா?" என்று கேட்டார்.

" நீ போய் சாப்பிடு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்."

" ப்ச் அல்ரெடி டைம் ஆயிடுச்சு. அப்புறம் லஞ்ச் எப்ப சாப்பிடுவீங்க?"

தன் கைக்கடிகாரத்தை பார்த்தவர், "ஓகே. நீ போ வரேன்." என்றார்.

தோளைத் குலுக்கிய சுஜாதா கீழே இறங்க, சத்யபிரகாஷ் அந்த சூட்கேஸை பத்திரமாக எடுத்து வைத்து விட்டு வந்தார்.

டைனிங் டேபிளில் எல்லோரும் அமைதியாக இவருக்காக காத்திருந்தனர்.

சந்தியா, சுனிதா இருவரது முகமும் வாடி இருந்தது.

சந்தியாவின் முகம் அழுது சிவந்து வீங்கி இருக்க…

தனது தவறு புரிந்து அமைதியாக, எல்லோரையும் பார்த்தார்…

மாடியில் தான் திட்டிய அனைத்தையும், சந்தியாவும், சுனிதாவும் எல்லோரிடமும் கூறி விட்டனர் என்பது புரிந்தது.

தனது அப்பாவிடமும், அம்மாவிடமும் பேச்சு வாங்க வேண்டி வரும் என்பதும் புரிந்தது.

அதேபோல் சுஜாதா சாப்பாடு பரிமாற… அவரது அருகில் அமர்ந்து இருந்த அவரது அம்மா, " பிரகாஷ்… என்ன இது? புள்ளைங்க கிட்ட கோபத்தை காட்டுறது? பொறுமையா சொன்னாலே புரிஞ்சுக்குவாங்க… பிள்ளைங்க முகத்தைப் பாரு. பாட்டி வீட்டுக்கு வந்த சந்தோஷம் கொஞ்சமாவது இருக்கா?"

" சரி மா. இனி உன் பேத்திகளை எதுவும் சொல்லலை போதுமா? இப்ப சாப்பிட விடு." என்றவர் உணவில் கவனத்தை செலுத்தினார். ' இரண்டு பேருக்கும் பிடித்ததாக ஏதாவது வாங்கி வந்து சமாதானம் செய்யணும்.' என்று எண்ணிக் கொண்டார்.

இப்பொழுது நித்யா அருகே வந்து," சாரி பா. எனக்கு தெரியாது ." என்று கையைப் பிசைந்துக் கொண்டு கலவரமாக அவரைப் பார்த்தாள்.

" பரவால்ல மா… உனக்குத் தெரியாதுல்ல. ஆனா இனிமே அங்கே மட்டும் போகாதம்மா. அங்க என்னோட அஃபீஷியல் டாக்குமெண்ட்ஸ் இருக்கும். மத்தபடி எங்க வேணாலும் போகலாம்.. சுஜா கூட அந்த இடத்துக்கு வர மாட்டா? உனக்கு புரியுதா மா… அங்கே முக்கியமான டாக்குமெண்ட்ஸ் இருக்கும் ஏதாவது மிஸ் ஆயிடுச்சுனா… அவ்வளவு தான். அப்புறம் என்னால ஒன்னும் பண்ண முடியாது. அதுக்காகத்தான் சொல்றேன். வேற ஒன்னும் இல்ல." என பெரியதாக லெக்சர் எடுக்க.

"சரி." என்று தலையாட்டிய நித்யா, கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டாள்.

சுஜாதாவோ கேலியாக அவரைப் பார்த்தார். ' எதற்காக அங்கே யாரையும் உள்ளே விடுவதில்லை என்பது அவருக்கு மட்டும் தானே தெரியும்.' என்று எண்ணியவரின், வதனத்தில் தோன்றிய நமட்டு புன்னகையை தனக்குள் மறைத்துக் கொண்டார்.

ஆனால் அதைக் கண்டு கொண்ட சத்யபிரகாஷ் அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டே ‍, ' எதுக்கு கேலியா பார்க்குறா ஒன்னும் புரியலையே…' என்று குழம்பி போனவர், மீண்டும் சுஜாதாவைப் பார்க்க

சுஜாதாவோ, அவரைப் பார்க்கவில்லையோ, இல்லை பார்த்தும் பார்க்காதது போல் அலட்சியமாக இருந்தாரோ, அது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.
' இவளை…' என மனதிற்குள் திட்டியவர் பிறகு உணவில் கவனத்தை செலுத்தினார்.

வேக, வேகமாக உணவை விழுங்கியவர், மீண்டும் தனது அலுவலக அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

ஒரு வழியாக அவர் எதிர்பார்த்த தனிமை கிடைக்க, அவசர அவசரமாக எதையோ தேடினார். பதற்றத்தில் அவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.
'பிறகு இது வேலைக்காகாது .' என்று எண்ணிய சத்யபிரகாஷ், அவனது ஃபோனில் பாடலை ஒலிக்க விட்டு நிதானமாக தேட தொடங்கினார்.
அவரது நேரம், அவரது ப்ளே லிஸ்டில் இருந்த ஜே ஜே பட பாடல் ஒலித்தது.

" தேடி கிடைப்பதில்லை, இன்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்பதென்று மெய் தேட தொடங்கியதே
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா…"
அதைக் கேட்டவர் பக்கென சிரித்து விட்டார்.

" ஓ… காட்… ஒரு சக்ஸஸ் புல்லான பிசினஸ்மேனான என்னை என்ன வேலையெல்லாம் செய்ய வைக்கிறீங்களே கடவுளே!" என்று புலம்பியவர், ஒரு வழியாக தேடிய பொருளான அந்த கடிதத்தை கைப்பற்றி நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார்‌.
அதை பாக்கெட்டில் போட்டு சில நிமிடம் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பினார்.

கீழே வந்தவரை, " எங்கப்பா போற? கடைக்கா…" என்று மகேந்திரன் வினவ.

" இல்லை பா. என் ஃப்ரெண்ட்ட பார்க்க போறேன்." என்றவர் வெளியே சென்று விட்டார்.

வெளியே செல்லும் தந்தையை பார்த்துக் கொண்டிருந்த சுனிதா, தனது பாட்டியிடம் திரும்பி," பாட்டி… என்ன வளர்த்து வச்சுருக்கீங்க உங்க பிள்ளையை. எங்க அக்கா வாயில்லா பூச்சி . அவளை போய் திட்டிட்டார். அதுவும் காரணமே இல்லாமல்… போயும், போயும் ஒரு கிரீட்டிங் கார்டை பார்த்ததற்கு இவ்வளவு திட்டு.
எப்படி அழுதா தெரியும்ல. இன்னும் ஒரு சாரி கூட கேட்கலை. அவர் பாட்டும், அவருடைய தோஸ்த்தை பார்க்க வெளியே போயிட்டாரு." என்று வழக்கம் போல பொறும.

"பிஸ்னஸ் என்று வெளிவேலையா அலையறவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும்." என்று வக்காலத்து வாங்கிக் கொண்டு மகனுக்காக வந்தார் அந்த அன்னை.

" ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அந்த ஆயிரத்தையும் வீட்டுக்குள்ள கொண்டு வரணுமா? எங்க தாத்தா எப்படி இருக்காரு ? உங்க எல்லோரையும் மேச்சுட்டுருக்காரு. சாரி… சாரி… பார்த்துட்டு இருக்காரு. அதைப் பார்த்து மிஸ்டர் சத்யபிரகாஷ் திருந்த வேண்டாமா?" என்று நீட்டி முழக்கினாள் சுனிதா.

" அடிக்கழுத வாய பாரு… என் முன்னாலேயே என் மகனை பேர் சொல்லி கூப்பிடுற… அந்த வாயிலேயே ஒன்னு போடணும். பேசாமல் என் பேரன் எழிலுக்கு உன்ன கட்டி வச்சு, உன் வாயை அடக்கலைன்னா நான் உன் பாட்டி கிடையாது."

"ஐயோ! சாமி ! ஆள விடுங்க. அதுக்கு பதிலா நான் இங்கு இருக்குற வரைக்கும் மௌன விரதமே இருக்குறேன்." என்றவள் அங்கிருந்து எழுந்து ஓட.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் சிரிக்க…

அந்த இடமே கலகலவென இருந்தது
இங்கு இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மறைந்து, எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டிருக்க.

சத்யபிரகாஷோ அவரது நண்பனை தேடிச் சென்றவர், காரில் சென்றுக் கொண்டே அவருக்கு ஃபோன் செய்தார்.

" டேய் கிரி எங்கடா இருக்க?"

" நான் எங்கடா இருக்கப் போறேன்? வீடு… வீடு விட்டால் போஸ்ட் ஆஃபீஸ்ல தான் டா இருக்கப் போறேன்." என்றார் கிரிதரன்.

" டேய் ஃபூல் அதைத் தான் கேட்குறேன். இப்போ எங்கடா இருக்க?"

" டேய் சத்யா என்ன விஷயம் ? ஊருக்கு வந்து இருக்கீயா?"

"ஆமாம் டா. உன்னை பார்க்கத் தான் வரேன். இப்பவாவது எங்க இருக்குன்னு சொல்றீயாடா?" அலுப்பாக சத்யபிரகாஷ் வினவ.

"அதிசயமா இருக்கு டா. முன்னாடியே சொல்லிருந்தா நான் லீவு போட்டுருப்பேன். இப்போ போஸ்ட் ஆஃபீஸ்ல தான் இருக்கேன்." ஒரு வழியாக கிரிதரன் தான் இருக்குமிடத்தைக் கூற.

" நல்லதா போச்சு." என்று சத்யபிரகாஷ் புன்னகைக்க.

" என்னடா நல்லது ? ஏதாவது புரியுற மாதிரி சொல்றீயா? இன்னமும் சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்க" என்று கிரிதரன் புலம்ப.

" அப்படியே நீ புலம்பிட்ட இருப்பீயாம்
நான் பத்து நிமிஷத்துல உன் முன்னாடி இருப்பேனாம்." என்ற சத்யபிரகாஷோ புன்னகையுடன் காரை ஓட்டினார்.

' நீ ரொம்ப நல்லவன்டா. என்ன விஷயம்னு சொல்லாமல் ஃபோனை வச்சுட்ட. இனி நீ வர்ற வரைக்கும் நான் குழப்பி போய் இருக்கணுமோ.' என்று மனதிற்குள் நினைத்த கிரிதரன், தன் நண்பனுக்காக காத்திருந்தார்.

சொன்னபடியே பத்தே நிமிடத்தில் தன் நண்பனுக்கு முன் அமர்ந்து இருந்தார் சத்யபிரகாஷ்.

" சொல்லுடா சத்யா? என்ன விஷயம்? நீயா என்னைத் தேடி வந்திருக்க… காரணம் இல்லாமல் வர மாட்டியே." என்று கிரிதரன் கிண்டலாகக் கூற.

" ஆமாம் நண்பா… உன்னால எனக்கு காரியம் ஆகணும்னு சொல்றதை விட, நீ செய்த தவறை திருத்திக்க ஒரு சான்ஸ்." என்றவர் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு லெட்டரை எடுத்து நீட்டினார்.

" என்ன லெட்டர் சத்யா?" என்று அந்த பழுப்பு நிற கடிதத்தை, திருப்பிப் பார்த்தார் கிரிதரன்.

சத்யபிரகாஷோ கேஷுவலாக சாய்ந்து அவரைப் பார்த்தவர், " இது நீ செய்த வினை. நீ தான் சரி செய்யணும்." என.

" என்ன? " ஒரு நிமிடம் யோசித்தவனின் விழிகள், ஞாபகம் வந்ததன் விளைவாக விரிந்தது.

" டேய் இந்த லெட்டரை கிழிச்சு போடாமல், இன்னும் வச்சுருக்கீயா?" என்று பயந்து கிரிதரன் வினவ.

" டேய் இது ஞாபகம் சின்னமில்லையா? என் கையால கிழிச்சு போட மனசில்லை. அதான் உன்னோட பாசமலர் கையால கிழிச்சுப் போடலாம்னு ஐடியா பண்ணியிருக்கேன்."

" என்னது பாசமலரா… உன் கல்யாணத்துக்கு முன்னாடி உன் வீட்டுக்கு வந்தாலே, சுஜாதா சிஸ்டர் வெட்டவா, குத்தவா என்பது போல பார்ப்பாங்க. அதுக்கு பயந்துக் கிட்டே நான் அவ்வளவா வர்றதே இல்லை."

"அது தான் டா. பாசமா பார்க்குறது. பாசமலர் பார்வை." என்று சொல்லிய சத்யபிரகாஷ் சிரிக்க.

"சரி டா அதெல்லாம் இருக்கட்டும். இப்ப இது தேவையா? சிஸ்டர் கிட்ட இதைக் காண்பீச்சா, அவங்க வருத்தப்பட மாட்டாங்களா? " என்று படபடவென வினவ.

" டேய் கிரி! நீ ஏன் டா இவ்வளவு டென்ஷன் ஆகுற? இதை இப்போது கொடுத்தால் பிரச்சனை வரும்னு நீ நினைக்கிறீயா? எது வந்தாலும் பார்த்துக்கலாம். இன்னைக்கு ஜஸ்ட் மிஸ். வீட்ல யார் கையிலோ கிடைக்க வேண்டியது‌. அப்படி மட்டும் கிடைச்சிருந்தால் நான் அவ்வளவு தான். சுஜா என்னை வச்சு செஞ்சுருவா." என்றவர் சிரிக்க.

" டேய் சிரிக்காத டா. கடுப்பாகுது. சரி என்னமோ செய்யணும்னு முடிவெடுத்துட்ட, அப்புறம் ஏன் டா என் உயிரை வாங்குற?"

" அது வா… நீ பண்ண தப்பை, நீ தானே சரி பண்ணனும்." என்று சொல்லி சத்யபிரகாஷ் மீண்டும் சிரிக்க…

'அடப்பாவி ‌.' என்று மனதிற்
குள் நினைத்துக் கொண்டே, சத்யபிரகாஷை கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தார் அவரது உயிர் நண்பனான கிரிதரன்.
 
  • Like
Reactions: Lakshmi murugan

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
ஒன்னும் புரியலையே என்ன விஷயமா இருக்கும் 🙄🙄🙄🙄
படிங்க, படிங்க சகி. காதல் கதையில் சஸ்பென்ஸா எழுத செய்த முயற்சி. எப்படி இருக்குன்னு சொல்லுங்க