• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
ஓலை - 5

கொலைவெறியோடு தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பனைப் பார்த்து, " டேய் என்னடா? என்னைய போய் வில்லனைப் பார்க்குற மாதிரியே பார்க்குற. நான் அவ்வளவு மோசமானவன் கிடையாது." என்றார் சத்யபிரகாஷ்.

" நீ நல்லவனாவே இருந்துட்டு போ. ஆனால் நீ இப்போ எடுத்துருக்குற முடிவு சரி கிடையாது. "

" சாரி டா மச்சான். இந்த விஷயத்துல உன் பேச்சை கேட்குறதா இல்லை. நான் முன் வச்ச காலை பின் வைக்க மாட்டேன் உனக்குத் தான் தெரியுமே."

" இருபத்தி ஐந்து வருஷத்துக்கு அப்புறம் உன் வாழ்க்கையை, நீயே வீணாக்க பார்க்குற… அதுக்கப்புறம் உன் இஷ்டம். இப்போ என்ன இந்த லெட்டரை உங்க வீட்ல சேர்க்கணும் அவ்வளவு தானே. எங்க போஸ்ட்மேன் கிட்ட கொடுத்து போட சொல்றேன்."

" டேய் காரியத்தையே கெடுத்துடுவ போல இருக்கே. யாருக்கும் தெரியாமல் கொடுக்கணும் டா. நீ உங்க போஸ்ட்மேன்ட் கிட்ட கொடுத்து, அவரு எப்ப வந்த லெட்டர்? என்ன? ஏதுன்னு ஆராய்ச்சி பண்ணா பிரச்சனை ஆகிடும். சோ நீயே போய் குடு."

"டேய் சத்யா. நான் இப்போ சீனியர் பொசிஷன்ல இருக்கேன். என்ன போய் டெலிவரி பண்ண சொல்றீயே… "

"தம்பி நீ எவ்ளோ பெரிய பொசிஷன்ல இருந்தாலும், நீ தான் இந்த வேலையை செய்யணும். ஏன்னா…" என்று சத்யபிரகாஷ் ஏதோ கூற வர…

"நிறுத்து. இப்போ என்ன சொல்லப் போற… நான் செய்த தப்பு. நான் தான் சரி செய்யணும் அதானே. தெரியாமல் செஞ்சுட்டேன். அதுக்கு என்னை நல்லா வச்சு செய்யுற. நான் போய் அங்கே லெட்டரைக் குடுக்கும் போது உன் பொண்டாட்டி என்னை பார்த்துட்டா பிரச்சனை பண்ணமாட்டாங்களா."

" உன்னையெல்லாம் மறந்துருப்பா." என்று அலட்சியமாக சத்யபிரகாஷ் கூற.

"டேய் உன் ஃப்ரெண்ட்டா மட்டும் நான் இருந்திருந்தா மறந்து இருப்பாங்க. நான் அப்போ போஸ்ட்மேனாவும் இருந்திருக்கேன். அதுவுமில்லாமல் அஃபீஷியலா அடிக்கடி உங்க வீட்டுக்குப் போயிருக்கிறேன்.
நான் அந்த எழுத்தாளரோட லெட்டரை குடுக்கும் போது அத்தனை நன்றி சொல்லியிருக்காங்க சிஸ்டர். பட் உன்னைப் பார்க்க வந்தா மட்டும், அப்படி வச்சு செய்வாங்க."

" ஓ… அப்படி ஒன்னு இருக்கா…" என்று யோசித்த சத்யபிரகாஷ், "இல்லைன்னா ஒன்னு செய். எங்க வீட்டு கேட்ல போஸ்ட் பாக்ஸ் இருக்கும். அந்தப் போஸ்ட் பாக்ஸ்ல லெட்டரை போட்டுட்டு வந்துக்கிட்டே இரு."

" டேய் அதுல போட்டா யார் வேண்டுமானாலும் எடுக்கலாமே." என்று கிரிதரன் தன் சந்தேகத்தை கேட்க.

"பரவாயில்லை டா. நீ அதுல போடு. வேற யாராவது எடுத்தாலும் சுஜாக்கிட்ட தான் கொடுப்பாங்க. அவங்க ஓப்பன் பண்ணி பார்க்க மாட்டாங்க இன்னைக்கு தான் வீட்டில் வேற ஒரு பிரச்சனைக்கு சத்தம் போட்டுட்டு வந்துருக்கேன். சோ… யார் கையில அந்த கடிதம் கிடைச்சாலும் சுஜாக்கிட்ட மட்டும் தான் கொடுப்பாங்க. வேற எந்த பிரச்சனையும் வராது. நான் கேரண்டி." என்றார்.

ஆனால் அவர் அறியவில்லை அவரது செல்ல மகள், அவரது மனைவியைப் போலவே. செய்யாதே என்று சொன்னால் செய்து விட்டு தான் மறுவேலைப் பார்ப்பாள்.
இதையெல்லாம் அறியாமல் சத்யபிரகாஷ், கிரிதரனுக்கு நம்பிக்கை
ஊட்ட.

" அப்போ சரிடா. அந்த லெட்டரை தா. நான் அப்புறமா போடுறேன்." என.

"அந்த வேலையே வேண்டாம். நீ முதல்ல இப்பவே கிளம்பு. உன்னை நம்ப முடியாது." என்றார் சத்யபிரகாஷ்.

அவரை முறைத்த கிரிதரன், " சரி வாடா போகலாம்." என்றார்.

" ஹேய் நீ போடா. இரண்டு பேரும் ஒன்னா போனால் சந்தேகம் வரும். எனக்கு ஒரு வேலை இருக்கு.அதை முடிச்சிட்டு பின்னாடியே நான் வரேன்."என்றார் சத்யபிரகாஷ்.

கிரிதரனோ, அங்கே அவருக்கு பதிலாக வேறு ஒருவரை அவரது வேலையை பார்த்துக்க சொல்லி விட்டு, சத்யபிரகாஷ் சொன்ன வேலையை செய்யவதற்காக சத்யபிரகாஷின் வீட்டை நோக்கி செல்ல…

சத்யபிரகாஷோ மகள்களை சமாதானம் செய்வதற்காக அவர்களுக்கு பிடித்தமான ஸ்வீட் வாங்குவதற்காக சென்றார்.

அவர் வீட்டிற்கு திரும்புவதற்குள் அவரது செல்ல மகள் சுனிதா, கிரிதரனை அந்தப் பாடு படுத்தியிருந்தாள்.

மதிய உணவும் முடிந்திருக்க… தோட்டத்தில் ஷெட்டில் கார்க் விளையாடுவோம் என்று சின்னவர்கள் முடிவெடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அனிதாவும், சுனிதாவும் ஒரு டீமாகவும், ஆஃப்போசிட் டீமாக நித்தியாவும், சந்தியாவும் விளையாடிக் கொண்டிருக்க…

கிரிதரன் சைக்கிளில் வந்து இறங்கினார். அவரது நேரம், சுனிதா பந்தை மிஸ் செய்ய… கேட்டருகே வந்து விழுந்தது.
அதை எடுக்க வந்தவள், அங்கு பதற்றத்துடன் போஸ்ட் பாக்ஸில் லெட்டரை போட முயன்றுக் கொண்டிருந்த கிரிதரனைப் பார்த்து விட்டாள்.

" ஹலோ அங்கிள்… வாட் ஹேப்பன்ட்." என்ற சுனிதாவின் குரலில்,
தூக்கிப்போட நிமிர்ந்து பார்த்தார் கிரிதரன்.

" அங்கிள் என்ன இது?" என்று சுனிதா கேட்க.

" லெட்டர் மா." என்றவர் மறுபடியும் அதில் போட முயல…

" ஹலோ அங்கிள். நான் தான் இங்கேயே இருக்கேனே. பேசாமல் என் கிட்டேயே கொடுங்க."

" இல்லை சுஜா…" என்று ஆரம்பித்து விட்டு, " இல்லை இந்த லெட்டர் சுஜாதா மேடமுக்கு. அவங்களை வரச் சொல்லுங்க… இல்லை… இல்லை… நான் இதுலே போட்டுட்டு போறேன்." என்று கிரிதரன் உளற.

"ஹலோ அங்கிள். அவங்க என்னோட அம்மா தான்…நான் கொடுத்துடறேன்." என்று அதிகாரமாக வினவிய சுனிதா கையை நீட்ட.

திருதிருவென முழித்து விட்டு, சுனிதாவிடம் அந்த லெட்டரை கொடுத்த கிரிதரன் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வேகமாக சென்றார்.

லெட்டரை பார்க்க அதுவோ வெளுத்துப் போயிருந்தது.' என்ன இப்படி இருக்கு!' என்று யோசித்த சுனிதா அதில் சீல் குத்தி இருந்த தேதியை பார்க்க முயல, அங்கோ இருபத்தி ஐந்து வருடத்திற்கு முந்தைய தேதியை காண்பித்தது. குழப்பத்துடன் அந்த லெட்டரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பந்தை எடுக்க சென்றவளை, காணவில்லையே என மற்ற மூவரும் அங்கே வந்து ஆஜராயினர்.

" என்ன சுதா கையில… " என நித்யா வினவ.

" அது வந்து அக்கா… அம்மாவுக்கு ஏதோ ஒரு லெட்டர் வந்திருக்கு. இப்போ
ஒரு போஸ்ட்மேன் வந்து கொடுத்துட்டு போனார். அவர் போனதும் தான் பார்த்தேன், இந்த லெட்டர் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி அனுப்புனதா இருக்கு. இவ்வளவு நாளா இந்த லெட்டர் எங்கே இருந்ததுன்னே தெரியலை.. இப்போ வந்து குடுத்துட்டு போறாங்க. அம்மா கிட்ட தான் குடுப்பேன்னு அந்த அங்கிள் சொன்னார். திடீர்னு அம்மா கிட்ட குடுக்க என்ன காரணம்னு தெரியலையே. சீல் எல்லாம் இருக்கு. ஒன்னும் புரியலையே." என அந்த லெட்டரை கையில் வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள் சுனிதா.

" போஸ்ட்மேன் தானே கொடுத்தது."என்று சந்தியா வினவ.

" ஆமாம். ஆனால் அவரோட முழியே சரியில்லை. இத்தனை வருஷம் இந்த லெட்டர் எங்க இருந்ததுன்னு தெரியலை. கவனிக்காமல் விட்டுருந்தாலும் அதை தூக்கிப் போடாமல் இப்போ குடுக்க என்ன அவசியம்னு தெரியலை."

" ஒருவேளை வெளிநாட்டில முப்பது வருஷம் கழிச்சு, ஒரு லெட்டர் சம்பந்தப்பட்டவங்க கிட்ட கிடைச்சதா நியூஸ் பார்த்தோமே... அதே மாதிரி இங்கேயும் குடுக்கலாம்னு வந்திருப்பாரோ." என்று அனிதா மென்மையான குரலில் கேட்க.

" அனி சொல்றது ரைட். அப்படித்தான் இருக்கணும். தேதியைப் பார்த்துட்டு, இவ்வளவு வருஷமா இந்த லெட்டரை ஏன் போடலைன்னு நாம திட்டுவோம் என்றுக் கூட அந்த போஸ்ட்மேன் பயந்திருக்கலாம். விடு சுதா." என்றாள் நித்யா.

"எனக்கென்னவோ இடிக்குது. இங்கெல்லாம் சாக்கடைல தான் லெட்டரை கொட்டுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் இது ஏதோ ஒரு அதிசயம் தான். அப்படி என்ன தான் இந்த லெட்டர்ல இருக்கோ." என்று அந்த கடிதத்தை பார்த்துக் கொண்டே சுனிதா கூறினாள்.

"ஹேய் சுதா… எதா இருந்தா என்ன? அத்தைக் கிட்ட போய் குடு. என்ன பண்றதுன்னு அவங்க பார்த்துப்பாங்க." என்றாள் அனிதா.

" ஹேய் அனி பாப்பா… இது என்ன லெட்டெர்? அதுல அப்படி என்ன தான் இருக்குன்னு படித்து பார்த்துட்டு அம்மா கிட்ட கொடுக்கலாம்." என்றாள் சுனிதா.

" ஐயோ! ஆள விடு. நாங்க இந்த விளையாட்டுக்கு வரலை." என்று நித்யாவும், அனிதாவும் பயந்துக் கொண்டே கூற.

"ஹேய் இது வரைக்கும் நாம இந்த மாதிரி லெட்டர்ஸெல்லாம் படிச்சது கிடையாது. பள்ளிக்கூடத்துல படிச்சதோட சரி. ஆனால் அதுவும், இதுவும் ஒன்னு கிடையாது. எப்படி லெட்டர் எழுதி இருக்காங்கன்னு படிச்சு பார்க்கலாம்." என்று ஏதேதோ கூறி சுனிதா அவர்களை கன்வீன்ஸ் செய்தாள்.

அவர்களோ, காலையில் சத்யபிரகாஷின் கோபத்தைப் பார்த்தே மறுத்துக் கொண்டிருந்தனர்.

" ப்ச்… சுனிதா… அவங்களை ஏன்டி படுத்துற." என்றாள் சந்தியா.

இவர்கள் இங்கு தங்களுக்குள் வாக்குவாதம் செய்துக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த சுஜாதா, " என்ன பண்ணிட்டு இருக்கீங்க நாலு பேரும்? விளையாடிட்டு இருக்கீங்க என்று நினைச்சா… ஏதோ மாநாடு போட்டுட்டு இருக்கீங்க. வாட்ஸ் த மேட்டர்?" என்று இலகுவாக வினவ.

என்ன சொல்வது என்று தெரியாமல் எல்லோரும் முழிக்க… சுனிதாவோ நொடிப்பொழுதில் யோசித்து விட்டாள்.

“அம்மா… போட்டியில் பெட் கட்டி இருந்தோம். நாங்க தான் ஜெயிச்சோம். அதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்." என்றாள்.

" அடப்பாவி." என்பது போல் மூவரும் அவளை பார்த்தனர்.

ஏனென்றால் எப்பொழுதோ முடிக்க வேண்டிய மேட்ச்சை, அவளது டீம் தோற்பது போல் இருக்கவே, இன்னும் அரைமணி நேரம் விளையாடலாம் என்று எல்லோரையும் பேசிய ஒத்துக்கொள்ள வைத்தாள் சுனிதா.

எளிதில் தோல்வியை ஏற்றுக் கொள்ளாதவள், இப்பொழுதும் பேச்சுக்குக் கூட தோற்று விட்டேன் என்று சொல்லாமல் ஜெயித்து விட்டேன் என்று சொல்லும் அவளை எல்லோரும் பார்த்து மனதிற்குள்ளே திட்டிக் கொள்ள தான் முடிந்தது.

சுஜாதா இதையெல்லாம் கவனிக்காமல், " பெட் கட்டி விளையாடுவதெல்லாம் என்ன பழக்கம். போங்க போய் ரெஸ்ட் எடுங்க." என்றாள்.

" சரிம்மா." என்ற சுனிதா எல்லோரையும் தங்கள் அறைக்கு அழைக்க.

" ஐயோ! ஆளை விடு. ஏற்கனவே கோபமே படாத மாமாவே கோபப்பட்டாங்க. இதை வேற படிச்சா மேனர்ஸ் இல்லையான்னு அத்தையும் திட்டிட போறாங்க. நாங்க போறோம்." என்ற அனிதா, நித்யாவையும் இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

சுனிதாவோ தோளைக் குலுக்கிக் கொண்டு, அவர்கள் அறையை நோக்கிச் சென்றாள். சந்தியாவும் அவள் பின்னேயே சென்றாள்.

சுஜாதாவோ, தன் கணவரின் வருகைக்காக காத்திருந்தார்.
மற்ற எல்லோருமே மதிய உணவை முடித்திருந்தனர். பெரியவர்கள் அவரவர் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

"சுஜாதா… நீயும் வேணா போய் ரெஸ்ட் எடு. அண்ணன் வந்தா நான் சாப்பாடு போடுறேன்." என்றார் மதியரசி.

"வேணாம் மதி. நானே சாப்பாடு போட்டுட்டு போய் படுக்கிறேன்." என்று சொல்ல…

இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
சற்று நேரத்திலே வந்த சத்யபிரகாஷ், "எங்க சுனிதாவும், சந்தியாவும் " என்று வினவ.

" மாடியில் இருக்காங்க." என்றார் சுஜாதா.

" ஓ… " என்ற சத்யபிரகாஷ், " இந்தா மதி எல்லோருக்கும் கொடு." என்று ஒரு கவரை மதியரசியிடம் கொடுத்தவன், " சாப்பாடு எடுத்து வை‌. ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வர்றேன்." என்று சுஜாதாவைப் பார்த்து கூறி விட்டு மாடிக்கு விரைந்தார்.

அவரது கைகளிலோ இன்னொரு கவர் இருந்தது.

அது அவரது மகள்களுக்கு மிகவும் பிடித்த அர்ச்சனா ஸ்வீட்ஸ் கடையின் ஸ்வீட் போளி. திருவண்ணாமலையில் பேமஸாயிற்றே. அதை வாங்கி வந்தவர், தங்கையிடம் கொடுத்து எல்லோருக்கும் கொடுக்க சொல்லி விட்டு, மகள்களுக்கு கொடுக்க அவரே எடுத்துச் சென்றார்.

அதைப் பார்த்த சுஜாதாவும், மதியரசியும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நிதானமாக மாடிப்படி ஏறியவர் மனதிற்குள்ளோ, ' லெட்டர் இன்னும் இவள் கையில் சேரவில்லையோ? இவ்வளவு சந்தோஷமா இருக்கிறாளே!' என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

மாடிக்கு சென்று இருந்த சுனிதாவும், சந்தியாவும் மீண்டும் ஆர்க்யூ பண்ணிக் கொண்டிருந்தனர்.

"ஏய் சொன்னா கேளு சுதா. அப்பா காலையில தானே அப்படி பேசினார். மறுபடியும் நீ ஏதாவது வம்பு இழுத்து விடாதே."

" ப்ளீஸ் டி. எனக்கு ரொம்ப எக்ஸைட்டா இருக்கு. இந்த சான்ஸ் மறுபடியும் நமக்கு கிடைக்காது. இப்ப எவ்வளவோ டெக்னாலஜி வந்திருச்சு. இதை மாதிரி லெட்டர்ஸெல்லாம் பார்க்கவே முடியாது. ஏற்கனவே போஸ்ட் ஆஃபீஸ்லாம் நஷ்டத்தில் ஓடிட்டு இருக்கு. ஏதாவது விஷேஷ பத்திரிக்கைகளும், சில பில்லுங்க தான் வருது.
இப்போ இருக்குற அவசர உலகத்துல எல்லாருமே வாட்ஸ்அப், மெயில்னு அட்வான்ஸா போயிட்டு இருக்காங்க. இது மாதிரி லெட்டர்ஸெல்லாம் பார்க்கவே முடியாது.காலையிலேயே அந்த கிரீட்டிங் கார்ட்ஸ் எவ்வளவு சூப்பரா இருந்துச்சு. நாம எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டோம்.
ஜஸ்ட் ஓபன் பண்ணி படிச்சுட்டு, மறுபடியும் ஒட்டி அம்மா கிட்ட கொடுத்துடலாம். என்ன சொல்றக்கா." என்று அவளை ஒத்துக்க வைக்க போராடினாள் சுனிதா.

" ஹேய் சுதா. ஏதாவது பர்ஸனலா இருந்தா என்னடி பண்றது." என்று குழப்பதுடனே தனது சந்தேகத்தை வினவினாள் சந்தியா.

"ஐயோ! அக்கா. நமக்கு தெரியாமல் என்ன பர்ஸனல் இருக்கப் போகுது. அதுவுமில்லாமல் ஃப்ரெம் அட்ரெஸ் பார்த்தியா? ஏதோ பத்திரிகை அட்ரெஸ் மாதிரி தான் தெரியுது." என்றுக் கூற.

"சரி." என தலையாட்டினாள் சந்தியா.

ஒரு படபடப்புடன் சுனிதா பிரிக்க முயல…

தட தடவென கதவு தட்டும் சத்தத்தில் சந்தியா திடுக்கிட…
சுனிதாவோ வேகமாக அந்த கடிதத்தை மறைத்தாள்.

"சாரி சந்து மா." என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் சத்யபிரகாஷ்.

"அப்பா…" என்று ஓடிப் போய் அணைத்துக் கொண்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

"ஹேய் அழாத குட்டிமா. ரியல்லி சாரி." என்றார்.

"அப்பா… இனி நான் எல்லா வேலையையும் கத்துக்குறேன். நீங்க சொல்றபடி செய்யுறேன்." என்றாள் சந்தியா.

" முதல்ல அழுகையை நிறுத்து. அப்பாக்கு கஷ்டமா இருக்கு." என்று தழுதழுக்கும் குரலில் கூற.

'என்ன ஓவர் சென்டிமென்டா இருக்கு. ரூட்டை மாத்து.' என்று தனக்குள் சொல்லிக் கொண்டே சுனிதா, " அப்பா… நானும் ரொம்ப கோபமா இருக்கேன். என்னையும் தானே திட்டுனீங்க. இப்போ அவளை மட்டும் சமாதானம் படுத்துறீங்க. என்னைய கண்டுக்க மாட்டேங்குறீங்களே." என்று அவரைப் பார்த்து முறைக்க.

" நீ தான் ப்ரேவ் கேர்ளாச்சே. அக்கா தான் அழுதுட்டு இருக்கா. அதான் அவளை முதல்ல சமாதானம் பண்ணேன். சரி ரெண்டு பேருக் கிட்டேயும் சாரி கேட்குறேன். இந்த அப்பாவை மன்னிச்சிட்டு இந்த ஸ்வீட்டை சாப்பிடுவீங்களாம்." என்றவர் அந்த போளியை பிரித்து இருவருக்கும் ஊட்டி விட்டார்.

சுனிதாவோ அவருக்கும் ஊட்டி விட…
கலங்கிய கண்களை சமாளித்தவர், மனதிற்குள் தன்னையே திட்டிக் கொண்டார்.

"அப்பா சாப்பிட்டீங்களா."என்று சந்தியா பொறுப்பாக வினவ.

" இன்னும் இல்லை மா."

"அச்சோ… மணியாச்சு வாங்கப் பா." என்று சந்தியா பதற.

"நீ இரு மா. அம்மாவை எடுத்து வைக்க சொல்லியிருக்கேன்." என்றவர் கீழே இறங்கிச் சென்றார்.

அவரது தந்தை வெளியே செல்வதற்காக காத்திருந்தவர்கள், ஆர்வமாக பிரித்து படித்தவர்கள் அதிர்ச்சியில் அப்படியே கீழே உட்கார்ந்து விட்டனர்.
சுனிதாவோ, ' ஏன் தான் எடுத்துப் படித்தோமோ… சந்தியா சொன்னதைக் கேட்டு இருக்க வேண்டுமோ.' என்று கண்கள் கலங்க மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தாள்.

சந்தியாவிற்கும் வலித்தது. 'ஆனால் தான் இந்த சூழ்நிலையில் தைரியமாக இருந்து, சுனிதாவைப் பார்த்துக் கொள்ள வேண்டும் .' என்று எண்ணியவள். " ப்ச் எதுக்கு கண் கலங்குற. இது நம்ம அம்மாவோட பாஸ்ட். நீ கலங்குற அளவுக்கு, அவங்களே நினைச்சு பார்க்க மாட்டாங்க. லீவ் இட்."

"இல்லை கா. இந்தக் கடிதத்தை பார்றேன். எவ்வளவு அழகா கவிதை நடையில், தன்னோட பதிலை சொல்லியிருக்காங்க. அப்படி இருக்கும் போது, நம்ம அம்மா எழுதிய கடிதம் எவ்வளவு உணர்ச்சிகரமாக இருந்திருக்கும்." என்றாள் சுனிதா.

" ப்ச். இப்போ அதைப் பத்தி பேசுறதே தப்பு. வேண்டாம் விடு டி. " என்று அதட்டினாள்.

இங்கு இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்க… அங்கோ சுஜாதா எழுதிய கடிதத்தை பார்த்தவர், படித்துப் பார்த்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் விழுந்து, விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

"அப்போ இதை அம்மா கிட்ட குடுக்க வேண்டாமா?" என்று சுனிதா கேட்க.

" எதை அம்மா கிட்ட கொடுப்போமா? வேண்டாமா? என்று டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க." என்று அங்கே வந்த சுஜாதா வினவ.

இவர்கள் இருவருக்கோ மயக்கம் வராதது ஒன்று தான் குறை.


 
Top