கடல் தாண்டும் பறவை!
கடல் - 1
" எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ, அதை அஞ்சாமல் எதிர்கொள்!"
கரும் வானில், பளீரென்று ஒளி வீசிய மின்னல் கீற்றுகளுக்கு இடையே, மேகம் உருகி ஓடுவதைப் போல் மழைத்துளிகள் வழிந்து கொண்டிருந்தது அந்த ஆழ்கடலில்.
ஓங்கி உயர்ந்த கடலலைகள், சீற்றம் கொண்டு ஒற்றைச் சுழியாய் மாறிச் சுழன்றது. சுழலின் நடுவில் வளையல் அணிந்த இரு கரங்கள் மேலே தோன்றி கண நேரத்தில் சுழலின் விசையில் உள்ளே சென்றது. அடுத்த நொடி, அந்தக் கையினைப் பற்றிக் கொள்வதற்காக ஓர் உருவம் அந்தச் சூழலுக்குள் பாய்ந்தது.
"ஹா... ஹா... ம்.... ம்...." தலையணையில் கண்ணீர் வழியும் மூடிய இமைகளைத் தேய்த்துக்கொண்டு முனங்கினாள் மயூரவாகினி.
கண்களைத் திறந்தால், கண் முன்னே காட்சிகள் விரிந்து விடுமோ என்ற பயத்தில் கண்களை மேலும் சுருக்கி மூடிக்கொண்டாள் இறுக்கமாக. இதயம் தாறுமாறாக துடித்து, சுவாசிக்க முடியாமல், உடலில் வியர்வை அதிவிரைவாய் சுரந்தது.
தானே அந்த சூழலுக்குள் மாட்டி இருப்பதைப் போல் உணர்ந்தவளின் உடல், அதிலிருந்து விடுபடும் மார்க்கமாக முன்னும் பின்னும் முறுக்கிக் கொள்ள ஆரம்பித்தது. கை கால்கள் அசைவில்லாமல் இருந்தவளின் சரீரம் சிறிது சிறிதாக விரைக்கத் தொடங்கியது. இமைகள் சட்டென்று திறந்து மேல் நோக்கி நிலை குத்தி நின்றது.
"மயூரி... மயூரி..." என்று மயூரவாகினியின் கன்னத்தை வேகமாக தட்டிக் கொண்டிருந்தார் டாக்டர் சாந்தா.
"ஹான்..." என்ற சத்தத்துடன் மருத்துவமனை படுக்கையில் இருந்து சட்டென்று முன்னெழுந்து மீண்டும் சரிந்து, வாயின் வழியாக வேகமாக சுவாசிக்க ஆரம்பித்தாள் மயூரி.
கவலையுடன் மயூரியின் அருகில் அமர்ந்திருந்த அவளது பாட்டி வேதநாயகியின் கரங்களைப் பற்றி "இனி பயமில்லை..." என்று புன்னகை ததும்பும் முகத்துடன் கூறிவிட்டு வெளியேறினார் டாக்டர் சாந்தா.
சிறிது நேரத்தில் மெல்ல இமைகளைப் பிரித்தாள் மயூரி, தன்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேதநாயகியிடம், "என்ன பாட்டி? ரொம்ப பயந்துட்டீங்களோ?" என்றாள் ஒரு வலிய புன்னகையைச் சிந்தி.
" இதிலிருந்து உனக்கு எப்பொழுது தான் விமோசனம் கிடைக்கும் மயூரி? " என்றார் வேதநாயகி ஏக்கப் பெருமூச்சுடன்.
"என் சாபத்தைப் போக்கும் என் தேவனை நான் பார்க்கும் வரை..." என்றாள் மயூரி கேலிக்குரலில்.
'ஓஹோ... அந்த தேவாதி தேவனை சீக்கிரம் மும்பைக்கு வரச்சொல். இந்தாப்பா மகராசா, 25 வருட காலமாக இந்த மயூரியை நான் பார்த்துக் கொண்டேன். இனி இவள் உன் பொறுப்பு என்று அவன் வசம் உன்னை ஒப்படைத்து விட்டு நானும் நிம்மதியாக இருப்பேன்" என்றார் வேதநாயகி அவளுக்கு சளைக்காத கேலிக் குரலில்.
அந்த நொடி, தன் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அரபிக் கடல் காற்றை அசுர வேகத்தில் தகர்த்துவிட்டு, மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் தன் தடம் பதித்தான் அதிதீரதேவன்.
அந்த மும்பை அவனுக்கு புதிதல்ல. ஐந்து வயதில் இருந்தே தன் தாயின் கையினைப் பிடித்துக் கொண்டு, பிறந்ததிலிருந்து தன்னைப் பார்க்காத, நிறைமாத கர்ப்பிணியாய் தன் அன்னையை தமிழ்நாட்டின் ஓர் குக்கிராமத்தில் விட்டு விட்டுச் சென்ற அடையாளம் இல்லாத தன் தந்தையைத் தேடி மும்பையின் ஒவ்வொரு சந்திலும் தேடித்தேடி அலைந்ததால், இந்த மும்பை அவனுக்கு நெருக்கமானது.
குடலுக்கு இரை போட உடலைக் கேட்கும் அந்த நகரத்தில், அவனுடைய தாய் சத்தியவதி, தனக்குத் தெரிந்த ஊறுகாய் தயாரிப்புகளை மிகவும் குறைந்த முதலீட்டில் உற்பத்தி செய்து, மும்பையின் தெருக்களில் விற்க ஆரம்பித்தார்.
தன் கணவனனை எப்படியாவது கண்டுபிடித்து விட மாட்டோமா என்ற ஏக்கத்திலேயே வாழ்ந்து, தன் உயிரையும் விட்டுவிட்டார்.
உற்றார், உறவினர், யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு இளம் தாயாய், தன் அன்னை அனுபவித்த கொடுமைகளையும் கஷ்டங்களையும் பார்த்து வளர்ந்ததால், அதிதீரதேவனுக்கு வாழ்க்கையின் மீதும், குடும்ப அமைப்பின் மீதும் ஒரு கசப்புத் தன்மை தோன்றி, அது அவனுள் நிலைத்து நின்றது.
பதின்ம வயதில் தன் அன்னையின் இழப்பிற்குப் பின், தன்னுடைய அன்னையின் ஊறுகாய் தொழிலை திறம்படச் செய்தான். இன்று அவனுடைய தயாரிப்புகள் உலகெங்கும் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்கு முன்னேறினான்.
யாருடனும் நெருங்கிப் பழகாமல் தனக்குத்தானே ஓர் வட்டமிட்டுக்கொண்டு அதில் தன்னுடைய தனிமைக்கு தானே அரசனானான். 32 வயதான போதும், குடும்ப வாழ்க்கையை அறவே வெறுத்தான்.
இதுவரை அவன் வாழ்க்கையில் இருந்த ஒரே ஒரு பெண் அவனுடைய அன்னை மட்டுமே.
கோடிகளில் புரளும் கொள்ளை லாபத்தில், விதவிதமான வெளிநாட்டு பயணங்களை தன்னந்தனியாக மேற்கொள்வான். எந்த ஊரோ, எந்த மனிதர்களோ, இதுவரை அவன் தனிமையை அசைத்துப் பார்த்ததில்லை.
அவனுடைய விலை உயர்ந்த கார், மும்பையின் முக்கிய இடமான அந்தேரி பகுதிக்குள் நுழைந்தது. யாரும் வரவேற்காத அந்த வீட்டின் வரவேற்பறையில் உள்ள சோபாவில் அமர்ந்து தன் கையில் உள்ள அலைபேசியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.
காய்கறிகளிலும், பழங்களிலும் பல்வேறு விதமான ஊறுகாய் தயாரிப்புகளை வெற்றிகரமாகச் செய்த தேவ், இந்த முறை அசைவப் பிரியர்களுக்காக சிக்கன் ஊறுகாய் ரெசிபி தயாரித்து அதை சந்தைப்படுத்தி இருந்தான்.
மும்பையின் பல பகுதிகளுக்கு சாம்பிள் கொடுத்து அனுப்பி இருந்தான். அதன் முடிவுகளை எதிர் நோக்கியே அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் அவனது அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வந்ததும் அதனை எடுத்துப் பார்த்தான்.
" சக்சஸ் " என்ற ஒரு வார்த்தையில் அவனது ஒற்றைப் புருவம் மேல் எழுந்து அவனது கர்வத்தைப் பறைசாற்றியது. புதிய கண்டுபிடிப்பை சந்தைப்படுத்துவதற்கான கட்டளைகளை அலைபேசியில் கொடுத்துவிட்டு, தன் அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்குத் அலைபேசியில் இடத்தை தேர்வு செய்யத் தொடங்கினான்.
மும்பையில் இருந்து மாலத்தீவிற்கு குரூஸ் பேக்கேஜ் பற்றிய விளம்பரத்தை கண்டதும் கடல் வழி பயணத்தைத் தேர்வு செய்தான்.
*******
டாக்டர் சாந்தாவின் முன் அமைதியாக அமர்ந்திருந்தாள் மயூரவாகினி.
"வெல்! மயூரி, இது போல் மீண்டும் ஒருமுறை பேனிக் அட்டாக் வராது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. உன்னுடைய பயத்தை கடந்து நீ முழுமையாக வெளி வராத வரை, இதுபோல் மீண்டும் நடக்கலாம்.
சுழற்ச்சியாக இந்த பேனிக் அட்டாக் மீண்டும் மீண்டும் வரும் பட்சத்தில், உன் உடல் நிலையை இது மிகவும் மோசமாகக் கூடும். ஒழுங்கான உடற்பயிற்சி, யோகா உன் உடல் நிலையை சீராக்கலாம். ஆனால்..."
" அந்த பயத்தை கடந்து நான் வெளிவர வேண்டும். சுலபமாக சொல்லி விட்டீர்கள் டாக்டர்" என்றாள் கசந்த புன்னகையுடன்.
" தண்ணீர் தானே உன் பயம்!" என்றார் அந்த மனோதத்துவ டாக்டர் மென்மையாக.
தன் முன்னே இருந்த மூடியிட்ட கண்ணாடி குவளையையில் இருந்த நீரை வெறித்து நோக்கினாள் மயூரி.
" எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டீர்கள் டாக்டர்! அது வெறும் தண்ணீர் இல்லை. கருமை நிறத்தில் நம்மை சூழ்ந்து கொண்ட தண்ணீர். நம்மை மூழ்கடிக்கும் தண்ணீர். நம் கண் முன்னே... " மயூரியின் உதடுகள் துடித்து, உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது.
" ஹேய் கூல்... " சட்டென்று டாக்டர் சாந்தா மயூரியின் முகத்திற்கு நேராகச் சொடுக்கிட்டார்.
" சிறுவயதில் இருந்து நீயும் எத்தனையோ முறை என்னிடம் கவுன்சிலிங் வந்து கொண்டிருக்கிறாய். உன் ஆழ் மனதின் எண்ணங்களை என்னிடம் பகிர்ந்து கொள். உன் சூழ்நிலை உன் பாட்டியின் வாயிலாக எனக்குத் தெரிந்தாலும், உன்னிடம் இருந்து, உன் உள்ளத்திலிருந்து வந்தால் மட்டுமே நான் தகுந்த சிகிச்சை தர முடியும் மயூரி" என்றார் உறுதியான குரலில்.
கடந்த 20 வருடங்களாக மன அழுத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் பாதையில் சற்று இளைப்பாற மயூரியும் நினைத்தாள்.
மயூரியின் சம்மதம் கிடைத்ததும், டாக்டர் சாந்தா அவளை விழிப்புணர்வுடன் கூடிய ஆழ்ந்த உறக்கத்திற்கு ஹிப்னாடிசம் மூலம் அழைத்துச் சென்றார்.
மங்கலான ஒளியில், நிசப்தமான அறையில், மயூரவாகினியின் ஆழ்மனம் தன்னைப் பற்றி கூற ஆரம்பித்தது.
எனது ஐந்து வயதில், மும்பையில் இருந்து ஓமன் செல்லும் கோஸ்ட் குரூஸ் லைன்ஸ் என்ற சொகுசு கப்பலில் நான், எனது அப்பா, அம்மா மூவரும் ஆனந்தமாகக் கிளம்பினோம். 29 இரவுகள் என்ற இலக்கில் ஒவ்வொரு நாளையும் புதுவித உற்சாகத்தோடு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று மகிழ்வுடன் கடத்தினோம்.
என் அப்பாவிற்கு பத்து தலைமுறைக்கு மேல் சொத்துக்கள் இருந்ததால், வருந்தி தொழிலைக் கவனிக்கக் வேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் போனது. அவரின் சாம்ராஜ்யத்திற்கு ஒரே இளவரசி நான் என்பதால், எனக்காகவே, என் ஆசைக்காகவே இந்த கப்பற்பயணம்.
அது எங்கள் கடற் பயணத்தின் 28 வது நாள். என் பெற்றோர்களின் திருமண நாளும் கூட. எங்களோடு கடற் பயணம் செய்த அனைவரும் கப்பலின் உல்லாச அரங்கில் ஒன்று கூடி கேக் வெட்டி, ஆரவாரம் செய்து கோலாகலமாகக் கொண்டாடினோம்.
எனது அம்மா எவ்வளவு தடுத்தும் எனது அப்பா உடன் பயணித்தவர்களுடன் மது விருந்தில் பங்கு கொண்டார். எனது அம்மா அதனால் கோபம் கொண்டு கப்பலில் ஆள் நடமாட்டமற்ற டெக்கின் முனையில் வந்து நின்று கொண்டு இருட்டிய வானத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
" அம்மா மழை சாரல் என் மேல் படுகிறது . இங்கே ரொம்ப குளிருது. வாங்கம்மா நாம் உள்ளே செல்லலாம்" என்றாள் மயூரி.
"மயூ... நீ நம் அறைக்குச் செல். என்னை கொஞ்சம் தனியாக இருக்க விடு" என்றார் மயூரியின் அம்மா.
தன் தந்தையை தேடி வந்த மயூரி அவரின் சட்டையைப் பிடித்து இழுத்து, " அப்பா அம்மா என்னுடன் வரமாட்டேன் என்கிறார்கள். நீங்கள் அவர்களை என்னுடன் வரச் சொல்லுங்கள் " சலுகை கொண்டாடினாள் மயூரி.
" அம்மாவிற்கு அப்பாவின் மீது சின்ன கோபம். நாம் இப்போது அதை சரி செய்து விடலாம். நாம் ஒரு விளையாட்டு இப்பொழுது விளையாடலாம் " என்றார் மயூரியின் தந்தை.
"ஹோ... ஜாலி... என்ன விளையாட்டு அப்பா?" ஆனந்தமாய் கேட்டாள் மயூரி.
மகளைத் தூக்கி தன் நெஞ்சருகே நிறுத்திக் கொண்டு அவளின் காதிற்குள், " அப்பா இந்தக் கடலுக்குள் விழுந்துவிட்டேன் என்று சொல். உனது அம்மா பதறி அடித்துக் கொண்டு ஓடி வருவாள்" என்று ரகசியம் பேசினார்.
" அம்மா பாவம் பா " என்றாள் மயூரி.
" இது ஒரு விளையாட்டு டா கண்ணம்மா!" என்றார் அவர்.
தந்தையின் கைகளில் இருந்து குதித்து ஓடி, தாயின் அருகே சென்று தூரத்தில் இருந்த தன் தந்தையைப் பார்த்தாள்.
"ம்..." என்று தன் தந்தை சைகை செய்ததும், அம்மா அப்பா தண்ணீருக்குள் விழுந்து விட்டார் ஓடி வாருங்கள் என்றாள் மயூரி.
மேகம் இடிக்க, வான் மழை பொழிய, வேகமாக சுழற்றி அடித்த காற்றில் கப்பலும் ஒரு நொடி சாய்ந்து நிமிர்ந்தது.
மயூரியின் தாய் பதத்தட்டுடன் மேலே இருந்த டெக்கின் முனையிலிருந்து எட்டிப் பார்க்க, வெள்ளை நுரை சுழலாய் தெரிய, தன் கணவர் தான் அங்கே வந்து விட்டார் என்று நினைத்த அந்தப் பேதை, சட்டென்று டெக்கின் முனையிலிருந்து 70 அடித்தாண்டி குதிக்க ஆரம்பித்தாள்.
உயரத்திலிருந்து குதிக்கும் போது தண்ணீரின் மேற்பரப்பு கான்க்ரீட்டை விட உறுதியாய் மாறி நம்மைத் தாக்கும். மயூரியின் தாய் விழுந்த அடுத்த நொடி சுயநினைவு இழந்து, கைகளை மேல் நோக்கி நீட்டிய நிலையில் தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தார்.
தன் மனைவி கப்பலில் இருந்து குதித்த அதிர்ச்சியில், மயூரியின் தந்தையும் அவசரத்தில் கப்பலில் இருந்து நீருக்குள் குதிக்க, இடையே இருந்த பல டெக்குகளில் அவரது உடல் அடிபட்டு, கப்பலின் அடியில் இருக்கும் ராட்சச காத்தாடி போன்ற அமைப்பில் இருக்கும் ப்ரொப்பல்லரில் அவர் உடல் இழுக்கப்பட்டு துண்டு துண்டாய் சிதைக்கப்பட்டது.
அம்மா அப்பா என்று கதற முடியாமல் கண் முன்னே நடந்த நிகழ்வில் மயூரியின் உடல் விரைத்து கண்கள் நிலை குத்த ஆரம்பித்தது.
மயூரியின் நினைவுகளில் தன் தந்தை தாயை காவு வாங்கிய கடல் ஆளப் பதிந்து அவளை அனுதினமும் மிரட்டியது.
குடிபோதையில் கப்பலில் இருந்து மயூரியின் தந்தை கீழே விழுந்ததாகவு,ம் அவரைக் காப்பாற்ற அவளின் தாயும் கீழே விழுந்ததாக கதை எழுதி முடிக்கப்பட்டது.
மயூரியின் தந்தை வழிப்பாட்டி வேதநாயகி, அன்று முதல் மயூர வாகினியின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.
தன் மனது பெட்டகத்தில் இருந்து நடந்த நிகழ்வுகளை மயூரியின் ஆழ்மனது கூறி முடித்ததும், அவளின் இமையோரங்களில் நீர் துளிர்த்தது.
டாக்டர் சாந்தாவிற்கு மயூரியின் கண் முன்னே இருவரும் இறந்தது மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால் அவர்களின் கொடூர மரணத்தை மயூரியின் வாயிலாக கேட்டதும் அவரது இதயமும் கனத்தது.
பெருமூச்சுடன் தனது கண் கண்ணாடியை கழட்டி துடைத்துக் கொண்டே தன்னை சமன் செய்து கொண்டார் டாக்டர் சாந்தா.
மெல்ல மயூரவாகினியை அவளின் ஆள் உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பினார்.
"ரைட்... அப்போ எதுவும் மாறப் போறதில்லை அப்படித்தானே டாக்டர். நான் கிளம்பலாமா?" என்று தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்ப எத்தனித்தாள் மயூரா.
"ஹே... மயூரி... உன் பயத்திலிருந்து இந்தப் பானிக் அட்டாக்கிடம் இருந்து முழுமையாக நீ விடுதலை பெற என்னிடம் ஒரே ஒரு யோசனை உள்ளது" என்றார் டாக்டர் சாந்தா.
" நம்பும் படியாக இல்லை டாக்டர். கிட்டத்தட்ட 20 வருடங்களாக போராடிப் பார்த்து விட்டேன். பச்... நோ... யூஸ்" என்றாள் ஒருவித மரத்த குரலில்.
" எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ, அதை அஞ்சாமல் எதிர்கொள்!" என்றார் டாக்டர் சாந்தா.
"வாட்?" மயூர வாகினியின் கண்கள் அகல விரிந்தது.
"எஸ்! நீ நிச்சயமாக அதைச் செய்து தான் ஆக வேண்டும்" என்றார் டாக்டர்.
" என்னால் அது நிச்சயம் முடியாது" பரிதவித்தது மயூரியின் குரல்.
" கண்டிப்பாக நீ மீண்டும் ஒரு கப்பற்பயணத்தை மேற்கொள்ளும் போது இந்த பயம் உன்னை விட்டு முழுவதுமாக நீங்கிவிடும். ஒரு டாக்டராக இதை நான் உனக்கு பரிந்துரைக்கிறேன்" என்றார்.
" அதே கடல்! மீண்டும் அதே கடல்! என்னால் எப்படி முடியும் டாக்டர்? " குரல் சற்றே கமறியது மயூரிக்கு.
"பயம் மிகவும் சக்திவாய்ந்த உணர்ச்சிகளில் ஒன்று. சில சமயங்களில் நாம் பயப்படும் விஷயத்தைப் பற்றி சரிவர புரிந்து கொள்ளாமல் இருப்பதால் நம்முடைய பயம் அதிகரிக்கிறது. உன் அச்சங்களை எதிர்கொள்வதற்கான மிகவும் சரியான திறவுகோல் இது. இந்த வாய்ப்பை நீ பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் காலம் முழுவதும் இந்த பயத்திற்குள் நீ அமிழ்து போவது உறுதி மயூரி" என்றார் டாக்டர்.
" என்னுடைய மகன் சக்திவேல் அடுத்த வாரம் சுற்றுலாப் பயணமாக அவன் நண்பர்களுடன் ஒரு கப்பற் பயணம் மேற்கொள்ளப் போகிறான். உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஒரு பாதுகாப்பிற்காக அவனுடன் நீ தாராளமாகச் செல்லலாம். பயணம் பற்றிய குறிப்புகளை உன் அலைபேசிக்கு அனுப்பி வைக்கிறேன். தெளிவான ஓர் முடிவை விரைந்து எடு" என்று மயூரியை வழி அனுப்பினார் டாக்டர் சாந்தா.
வீட்டிற்கு வந்த நிமிடம் முதல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் வேதநாயகியைப் பார்த்ததும் மயூரியின் மனதில் கவலைப்படர்ந்தது.
" துணிந்து பார்! துணிந்து செல்!" அவளது மூளை கட்டளை இட்டுக் கொண்டே இருந்தது.
அவளது மனமோ, " சென்று விடுவாயா? நடுக்கடல், நடுவானம், திக்கற்ற நீ மறந்து விட்டாயா? " என்று ஓலமிட்டது.
தன்னறையில் தன் தாய் தந்தை படத்திற்குக் கீழ் யோக நிலையில் அமர்ந்து, மன அழுத்தத்தை குறைத்து, ஆழ் மனதில் விடை தேட ஆரம்பித்தாள் மயூரி.
மனம் சமன்பட்டதும் கண்களை மெல்லத் திறந்தாள். தன்னுடைய தாய் தந்தை இருவரும் கைகளை நீட்டி, "வா!" என்று அழைப்பது போல் இருக்க, தன்னை மிரட்டித் துரத்தும் பயத்தை எதிர்கொள்ளும் துணிவுடன் அலைபேசியை எடுத்தாள்.
சாந்தா அனுப்பிய மும்பையில் இருந்து மாலத்தீவிற்கு குரூஸ் பேக்கேஜ் பற்றிய கப்பற்பயணத்தின் விபரத்தை பதிவிறக்கம் செய்தாள் தீர்க்கத்துடன்.
கடல் பொங்கும்....
Last edited: