கடல் - 3
" சுமைகளைக் கண்டு துவண்டு விடாதே!
உன்னைச் சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்!"
ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகள் தந்த அதிர்வில், தான் எதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டோம் என்பதை மறந்து நின்றாள் மயூரவாகினி.
'எவனோ ஒருவன் முத்தமிடுகிறான். எவனோ ஒருவனை நான் கட்டியணைக்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது?' என்று யோசித்தவளுக்கு விடை தெரியாமல் திண்டாடிப் போனாள்.
தன்னறைக்குள் வந்து கதவினைப் பூட்டிவிட்டு, நடந்த நிகழ்வுகளை வரிசையாக கோர்வைப்படுத்தி பார்த்தாள். இது அனைத்திற்கும் காரணம் தன் ஆழ்மனதில் அமிழ்ந்து கிடக்கும் ஆழ்கடல் அச்சம் மட்டுமே என்ற முடிவுக்கு வந்தாள்.
மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, சோர்வுடன் படுக்கையில் சரிந்து உறங்க முற்பட்டாள். கப்பலின் தாலாட்டில் உறங்கியும் விட்டாள்.
கண்விழித்துப் பார்த்தவள் வெகு நேரம் உறங்கி விட்டதை உணர்ந்தாள். குழப்பத்தில் உணவு எடுக்காமல் உறங்கியதால் பசிக்கத் தொடங்கியது மயூரிக்கு. இரவு வேளை உணவை உண்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தாள்.
சக்தி இரவில் தன்னை அழைக்குமாறு கூறியது அவளுக்கு நினைவு வந்தது. சக்தியுடன் உணவை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள், இடப்பக்க அறைக்கு பதிலாக வலப்பக்க அறையைத் தட்டுவதற்காக கையை உயர்த்தி அழுத்தியவளுக்கு, அறையின் கதவு திறந்து வழி விட்டது.
எதார்த்தமாக அறையின் அமைப்பை பார்த்துக் கொண்டே விழியைச் சுழற்றியவளின் கண்களில், தனது மேல் சட்டையைக் கழட்டிக் கொண்டிருந்த தேவ் தென்பட்டான்.
விழிகளில் இமைகளைச் சிமிட்டி, தான் பார்த்த காட்சி சரிதானா என்பதைப் போல் மயூரவாகினி தேவ்வைப் பார்த்தாள்.
தேவ் அவளை நோக்கி இரண்டெட்டு வைக்க, தவறான அறைக்கு வந்த தன் நிலைமையின் விபரீதம் புரிந்தவள், "சாரி! சாரி!" என்று கூறிக்கொண்டே அவன் அறையில் இருந்து சட்டென்று வெளியேறி, தனது அறைக்குள் புகுந்தாள்.
இதயம் அதிவேகமாய் துடிக்க, 'பிரச்சனை உன்னைத் தேடி வரவில்லை என்றாலும், நீயே பிரச்சனையைத் தேடிப் போகிறாயே மயூரி!' என்று தனக்குத்தானே மானசீகமாய் கொட்டு வைத்துக் கொண்டாள்.
அவளின் அறைக் கதவு படபடவென தட்டப்பட, கண்களை இறுக்கமாய் மூடி தலையினைக் குலுக்கி கொண்டாள்.
' காலையில் கட்டிப் பிடித்து விட்டு, இரவினில் அவன் அறைக்குள் நுழைந்தால் அவன் என்ன நினைப்பான்? தவறு உன் பக்கம் தான் மயூரி. அதனைச் சரி செய்ய முயற்சி செய்!' என்று அவளின் மனது அவளுக்கு அறிவுரை வழங்க, பெருமூச்சுக்கள் எடுத்துக் கொண்டு தன்னை சமன் செய்து கொண்டாள்.
' கதவிற்கு பின் நிற்பது புலியோ பூனையோ, எதிர்கொள்ளத்தான் வேண்டும். இந்த பயத்தை நான் மீறத்தான் வேண்டும்' என்ற உறுதியுடன் கதவினைத் திறந்தாள்.
அவள் கதவைத் திறந்ததும் சட்டென்று அவளைத் தள்ளிக் கொண்டே உள்ளே நுழைந்தான் அதிதீரதேவன்.
"சாரி சா... ர்..." என்று மயூரி சொல்லி முடிப்பதற்குள், " சீக்கிரம் சீக்கிரம் " என்றான் தேவ்.
" என்ன சீக்கிரம்? " கேள்வியாய் அவனைப் பார்த்தாள் மயூரி.
" நான் டிரஸ் கழட்டும் போது நீ பார்த்தாய் தானே? " என்று அவளையே கூர்விழியால் நோக்கினான்.
"ஆ... மா.... ஆனால் தெரியாமல்" என்று அவள் ஆரம்பிப்பதற்குள், " நீ தெரிந்து பார்த்தாயோ, தெரியாமல் ஒளிந்து பார்த்தாயோ, அது எனக்குத் தெரியாது. நான் டிரஸ் கழட்டும் போது நீ பார்த்தாய். அதனால் நீ டிரஸ் கழட்டும் போது நான் பார்க்க வேண்டும். சீக்கிரம் சீக்கிரம் உன் டிரஸ்ஸைக் கழட்டு. என்னைப் போலவே மேலே உள்ள சட்டையைக் கழட்டு" என்று குரலில் கோபம் கலந்து உரைத்தான். கண்களில் சற்றே தாபம் கலந்து பார்த்தான்.
"ஹான்... என்ன உளறல் இது?" கோபத்தில் வெடித்தாள் மயூரி.
" நீ என்னை அந்தக் கோலத்தில் பார்க்கும்போது என் மனம் எவ்வளவு அவமானமாய் உணர்ந்திருக்கும். அந்த அவமானத்தை நீ உணர வேண்டும். கண்ணுக்கு கண். பல்லுக்கு பல். என் ஆடைக்கு உன் ஆடை. வெரி சிம்பிள்" என்றான் கூலாக.
"ஹலோ மிஸ்டர்! நீங்கள் வெளியே போகலாம்" என்றாள் வாயில் புறம் கை நீட்டி.
" காலையில் என்னை கட்டிப்பிடித்தாய். இரவில் என்னை களங்கப்படுத்திப் பார்த்தாய். பாதி கற்பினை பறி கொடுத்த என்னைப் பற்றி கவலை கொள்ளாமல் வெளியே போகச் சொன்னால், நான் எப்படி போவேன்? எனக்கு ஒரு பதிலைச் சொல்!" என்றான் விதண்டவாதமாக.
" ரெண்டு நிகழ்வுமே ஏதோ ஓர் பதட்டத்தில் நடந்து விட்டது. அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டேன். உங்கள் பிதற்றலுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது" என்றாள் நிமிர்வாக.
" உன் பதிலைக் கேட்க நான் வரவில்லை. பதிலுக்கு பதில் பார்க்கத்தான் வந்தேன். காட்டுவதை காட்டினால் நான் பார்க்க வேண்டியதை பார்த்துவிட்டு கிளம்பப் போகிறேன். எப்படி என்னை நீ நேருக்கு நேர் பார்த்தாயோ அதே போல் நானும் உன்னை... " என்றவன் முடிப்பதற்குள்,
" சீச்சீ... அருவருப்பாக பேசும் உங்கள் பேச்சை என்னால் கேட்க முடியாது. மரியாதை நிமித்தமாக மன்னிப்பும் கேட்டாகிவிட்டது. மிஸ்டர்... "
"தேவ்... அதிதீரதேவன்!" என்றான் கம்பீரமாக.
"ஊப்... ஓகே. மிஸ்டர் தேவ், நான் வேறு ஒருவரின் அறை என்று தவறுதலாக புரிந்து கொண்டு உங்கள் அறைக்குள் மாறி வந்து விட்டேன். கதவைப் பூட்டாமல் உடை மாற்றியதில் உங்கள் பக்கமும் தவறு உள்ளது. இருவரின் பக்கம் தவறு இருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்" என்றாள் படபடப்பாக.
"ஓ.... அப்படியா?" என்றான் கேலியாக.
"ம்.. அப்படித்தான்" என்றாள் அழுத்தமாக.
" அதுவும் சரிதான்!" என்றான் தேவ்.
'அப்பாடி பிரச்சனை ஒரு வழியாக முடிந்தது' என்று நினைத்தவள், அலட்சியமாக அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள்.
கதவைத் திறந்த சத்தத்தில், அவன் சென்று விட்டான் என்று நினைத்தவள் மெல்லத் திரும்ப, தேவின் வலிய கரங்களின் அணைப்பிற்குள் சிக்கிக் கொண்டாள்.
" உன் வாதத்தின்படி, கதவை திறந்து வைத்ததில் என் தவறும் உள்ளதால், இந்த இரவுப் பிரச்சனை இன்று முடிந்தது. ஆனால் காலை பிரச்சனைக்கு இன்னும் தீர்வு நீ தரவில்லையே. அதனால் நானே பதிலுக்கு பதில் அணைத்து தீர்ப்பை எழுதி விட்டேன். பாய் பேபி!" என்றவன் தன் கைவளைவிற்குள் நெளிந்து கொண்டிருந்தவளை விடுதலை செய்தான்.
அவன் அறையை விட்டு வெளியே சென்றதும், அருகில் இருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள் மயூரி.
"ஆனால் ஒரு விஷயம் " என்று கூறிக் கொண்டே மீண்டும் தேவ் அறைக்குள் நுழைந்ததும், மொழி புரியாத மழலை போல் அவனைப் பார்த்தாள்.
"நீ ரொம்ப மிருதுவாய் இருக்க பேபி!" என்றவன் அவளைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே வெளியேறினான்.
உச்சத்தில் பந்தாடப்படும் தன் பெண்மையில், பயம் பற்றிய மன அழுத்தம் இருந்த இடத்தில், தேவ் பற்றிய மன பாரம் ஏற விக்கித்தாள்.
மீண்டும் அவளின் அறைக் கதவு தட்டப்படும் ஓசையில் கோபம் கொண்டவள், அருகில் இருந்த தண்ணீர் ஜக்கினை கையில் எடுத்துக்கொண்டு விருட்டென்று கதவைத் திறந்து எதிரில் இருந்தவன் முகத்தில் ஊற்றினாள்.
"அம்மே..." என்ற சக்தி தன் முகத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு பாவம் போல் அவளைப் பார்த்தான்.
"ஓ... சக்தி! நான் அவன் என்று நினைத்து உன்னை... சாரி" என்றாள் உள்ளடங்கிய குரலில்.
"உன் பிரச்சனை தான் என்ன மயிலு?"
"அது... ஏதோ குழப்பத்தில்..."
"ரைட்டு... அத்த மக மேல ஊத்த வேண்டிய மஞ்ச தண்ணிய, அத்த மேலேயே ஊத்துன கதையா இருக்கு. உனக்கு பிரச்சனை வராமல் நான் பார்த்துக் கொள்ள நினைத்தால், என் பிரச்சனையே நீதான் மயிலு " என்று சலித்துக் கொண்டான் சக்தி.
தன் செயலுக்கு சரியான விளக்கம் சொல்ல முடியாமல், கைகளைப் பிசைந்து கொண்டு குற்றவாளி போல் நின்றாள் மயூரி.
"ஓகே மயில்! என்னுடைய டிரஸ்ஸில் அதிகம் தண்ணீர் படவில்லை. அறையைப் பூட்டி கொண்டு வா, நாம் டின்னருக்கு செல்லலாம்" என்றான் சக்தி.
சக்தியின் பின்னே அமைதியாகச் சென்றாள் மயூரி. ஆனாலும் அவளது மனமோ தன்னை முத்தமிட்டவனைப் பற்றியும், தேவ்வைப் பற்றியும் யோசித்துக் கொண்டே இருந்தது.
பஃபே முறையில் அமைக்கப்பட்டிருந்த இரவு விருந்தில், சக்தி தனது தட்டில் தேவையானவற்றை நிரப்பிக் கொண்டு முன்னேறிச் சென்றான். மயூரி பொறுமையாக தனக்கு விருப்பமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து, தனியாக இருந்த இருக்கையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்.
ஏதோ நினைவில் தட்டில் இருந்த உணவுகளை கொரித்துக் கொண்டிருந்தவள், உணவில் கலந்திருந்த பச்சை மிளகாயைக் கவனிக்காமல் கடித்து விட, காரம் உச்சியில் ஏற செரும ஆரம்பித்தாள்.
ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியைத் தேடிச் சென்று, குவளையில் நீர் நிரப்ப ஆரம்பித்தாள். தண்ணீர் நிரம்பும் வரையில், காரத்தை பொறுக்க முடியாமல் கண்களைச் சுருக்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட வேளையில், மீசையின் உராய்வில் உதடுகள் உணர்ந்த சிலிர்ப்பில், அவள் அதிர்ந்து கண்களைத் திறக்கும் முன் அருகில் இருந்த அலங்காரத் திரைச்சீலை அவள் முகத்தில் படர்ந்தது.
படபடவென ஜன்னல் திரைச்சீலையை விலக்கிவிட்டு பார்த்தவள், சுற்றிலும் யாரும் இல்லாமல் இருக்க, தன்னை முத்தமிட்டது கனவா? நனவா? என்று குழம்பியவளின் கரங்களில் இருந்த குவளையில் நீர் நிறைந்ததும் நிதர்சனம் உரைத்தது.
தன் உதடுகளில் கரைந்திருந்த காரத்தை எல்லாம் வேறு உதடுகள் வாங்கிக் கொண்டதால், காரம் குறைந்து கையில் இருந்த குளிர் நீர் தேவைப்படாமல் போனது மயூரிக்கு.
ஆத்திரம் கொண்டவள் கையில் இருந்த நீரை பின்னோக்கி வீச, "அம்மே!" என்ற சக்தியின் அதிரடிக் குரலில் திரும்பிப் பார்த்தாள்.
அவன் முகத்தில் நீர் வழிய, அவன் கையில் இருந்த உணவில் எல்லாம் நீர் கலந்து நிற்க, "ஏன்?" என்ற ஒற்றைக் கேள்வியை அவன் கண்கள் சுமந்து நின்றது.
" உனக்கு தண்ணீரில் கண்டம் இருக்கிறது போல சக்தி! கவனமாக இரு. நான் தண்ணீரை ஊற்றும் இடத்தில் எல்லாம் நீ சரியாக வந்து நின்றது உன் தப்புதான்" யார் மீதோ உள்ள கோபத்தை எல்லாம் அவன் மீது காட்டிவிட்டு நகர்ந்தாள்.
இங்கே நடப்பதை எல்லாம் உணவு மேசையில் அமர்ந்து கொண்டு, தன் உதட்டினை வருடியவாறே ரசித்துக்கொண்டிருந்தான் தேவ்.
"மிர்ச்சி கா ஆச்சார், செம காரம் தான் போல. ஆனால் தரமான சுவை" என்று நாவினால் தன் உதட்டினை வருடிக் கொண்டான்.
உணவு அருந்திய டெக்கில் இருந்து, கப்பலின் அடுத்த டெக்குக்கு செல்லும் வழியில் கருமை பூசிய கடலைக் கண்டதும், அவளின் நரம்புகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவள் மேல் கோபம் கொண்ட சக்தியும் அவளுடன் வரவில்லை.
கால்கள் திடமாக நடக்க முடியாமல், ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொள்வதைப் போல் நடக்க ஆரம்பித்தாள்.
அவ்வளவுதான் இனி, தான் கீழே விழப் போகிறோம் என்று நினைத்தவளை, "போட்ட மப்பு... ஜாஸ்தியோ?" என்ற தேவ்வின் இளக்கரமான குரல் தடுத்து நிறுத்தியது.
அவனைப் பார்த்ததும் கடல் மறந்து போனது. தன் பயம் மறந்து போனது. துளிர்த்த கோபம் வெடித்துக் கிளம்பியது.
"ஆமாம். அப்படித்தான் என்றால் என்ன செய்ய போகிறாய்?" என்றாள் மயூரி கடுப்புடன்.
சட்டென்று தேவ்வின் விழிகள் கூர்மையாய் பளிச்சிட்டது. தன் முழு நீளக்கை சட்டையை முட்டிக்கு மேல் இருபுறமும் மடித்துவிட்டுக்கொண்டே அவளை நோக்கி வந்தான்.
" என்ன என்ன?" என்றாள் துச்சமாக.
அவளருகில் வந்த தேவ், அவளை தன்னிரு கைகளிலும் அள்ளிக்கொண்டான் அவள் துள்ளத் துடிக்க.
" போதையில் இருக்கும் உனக்கு பாதை தெரியாததால், உன் அறைக்கு நான் வழி காட்டப் போகிறேன். ஜஸ்ட் சில்" என்றான் அவள் காதில் ரகசியம் போல்.
அவர்களைக் கடந்து பலர் சென்றதால், கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண முடியாமல், தன்னை விட்டு விடும்படி அடிக்குரலில் அவன் காதருகே சீறினாள் மயூரி.
அவர்களைக் கடந்து சென்றவர்கள், இருவரின் இனிய காதல் குறும்புகளைக் கண்டு, இருவரும் சரியான இணை என்று ரசித்துக் கொண்டே சென்றனர்.
அவளின் அறை வந்ததும், அவளை மெல்ல தன் கைகளில் இருந்து இறக்கிவிட்டு, " நான் உன்னை சுமந்து வந்தது உனக்குத் தப்பாகப் பட்டால், பதிலுக்கு நீ என்னை சுமந்து கொள்" என்றவன் தன் பரந்த கைகளை விரித்து தன்னை அள்ளிக் கொள்ளும்படி அவளுக்கு ஆணையிட்டான்.
என்ன பதில் சொல்வது என்றவள் புரியாமல் திகைத்த அந்த ஓர் நொடியைப் பயன்படுத்திக் கொண்டவன், " அப்போ உன்னைப் பொறுத்தவரையில், இது நிச்சயமா தப்பு கிடையாது" என்றவன் மீண்டும் அவளை தன் கையில் அள்ளி தட்டாமாலை சுற்றி விட்டு கீழே இறக்கிவிட்டு தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.
தன் உலகம் தலைகீழாய் சுழல, தலைசுற்றி நின்றாள் மயூரவாகினி.
கடல் பொங்கும்...
Last edited: