கடல் - 4
"நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது. ஆனால் நாளையை உருவாக்க முடியும்!"
அறையினில் இருட்டை பூசிக்கொண்ட தனிமையில், இயலாமை, கோபம் கலந்த உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தாள் மயூரி.
கப்பலில் வைஃபை நெட்வொர்க் எதுவும் வேலை செய்யாததால், தன் அலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த டாக்டர் சாந்தாவின், கவுன்சிலிங் பதிப்பை ஸ்பீக்கரில் போட்டு விட்டு, தரையினில் முழங்காலிட்டு மேஜை மீது தன் முழங்கைகளைக் குற்றிக் கொண்டு கேட்க ஆரம்பித்தாள்.
" ஆற்றில் வரும் வெள்ளத்தை அணைபோட்டு தடுப்பதோடு விடாமல் அதை வேறுவகையில் திருப்பி விட வேண்டும். இல்லையே அணை உடைந்துவிடும்.
இப்படித்தான் வெள்ளமென மனம் இருக்க அதற்கு அணை கட்டி மறிக்காமல் வேறு திசையில் திருப்பிவிட வேண்டும். எதற்காக பயப்படுகிறோமோ அதனைச் செய்ய வேண்டும்.
நீ கட்டுப்படுத்தும் எதையும் நீ மறைமுகமாக நீரூற்றி வளர்க்கிறாய். நீ கட்டுப்படுத்த, கட்டுப்படுத்த அதைப்பற்றிய எண்ணங்களும், பயமும் அதிகமாகுமே அன்றி குறையாது. புரிந்து கொள்ள முயற்சி செய். ஒரு கட்டத்தில் எல்லாம் நீர் ஆவியாவது போல் மாயமாய் விலகிவிடும். பயமும் அப்படித்தான். கட்டுப்படுத்தாதே. ஆழமாகக் கவனி. உனக்குத் தெளிவு பிறக்கும்.
மரியோ புஸோ எழுதிய “காட் ஃபாதர்” என்ற நாவலில் முக்கிய கதாபாத்திரமான காட் ஃபாதர் என்பவன் பயம் என்பதையே அறியாதவனாக இருப்பான். அதற்கு முக்கியமான காரணம் அவன் ”ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும்” என்று விஷயத்தை உறுதியாக நம்பியது தான். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றால் பின் பயந்து நடுங்க என்ன இருக்கிறது?
அப்படியும் பயம் போகவில்லை என்றாலும் பயந்து கொண்டே ஆனாலும் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பி. செய்யும் செயல் புரிய ஆரம்பித்தவுடனேயே பெரும்பாலான பயங்கள் நம்மை விட்டுத் தானாக விலக ஆரம்பிக்கின்றன. சூரியனைக் கண்ட பனித்துளி போல அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்தும் போகின்றன.
மொத்தத்தில் எப்படியாவது பயம் உன்னை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வா. முடிவில் அந்த பயம் அர்த்தமற்றது என்பதை நீ கண்டிப்பாக உணர்வாய்.
நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது. ஆனால் நாளையை உருவாக்க முடியும் மயூரி!" - பதிவு அத்துடன் நிறைவடைந்ததும்,
' என்னிடம் இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. என் வாழ்க்கையின் நிமிடங்களை பயம் மட்டுமே ஆக்கிரமிப்பதா? பயத்தின் திரையில் மறைந்து பலரும் என்னுடன் விளையாடுவதா? பதிலடி கொடுக்கத்தான் வேண்டும். அந்த பயத்திற்கும், பயம் காட்டுபவர்களுக்கும்' மனம் சற்றே அமைதியுற விடியலைத் தேடி இரவினில் உறங்கினாள்.
அதிகாலையிலேயே விழிப்பு வர, வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடும் உற்சாகத்துடன், சூரிய உதயத்தைக் காண்பதற்கு தயாராகிச் சென்றாள்.
நேற்று தன்னை முட்டாளாக்கியவனின் அறைக் கதவையும், அவன் அறைக்குள் நுழையக் காரணமாய் இருந்த சக்தியின் அறைக் கதவையும் மாறி மாறி பார்த்தவள், சிறு புன்னகையுடன் உள்ளே சென்று நீளமான கயிற்றினை எடுத்து வந்து இரு கதவுகளின் கைப்பிடிகளிலும் இறுக்கமாக மாட்டினாள்.
இரு அறையின் கதவுகளையும் சத்தமாகத் தட்டினாள். இருவரும் கதவுகளைத் திறக்க முயற்சி செய்ய, கதவைத் திறக்க முடியாமல் போனதால், உள்ளிருந்து சத்தம் எழுப்ப ஆரம்பித்தனர்.
ஐந்தாம் தளத்தில், நீச்சல் குளத்தினைச் சுற்றி, சன் பாத் எடுக்கும் வகையில் பல படுக்கை வடிவமான நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.
பலரும் ஆர்வமாக சூரிய உதயத்தைப் பார்க்க, சுற்றிலும் நீரால் சூழ்ந்திருந்த கடலில் இருந்து சூரியன் எழும் காட்சி மயூரிக்கு ஆனந்தத்திற்கு பதிலாக பதை பதைப்பையே கொடுத்தது. எவ்வளவோ முயற்சி செய்தும், அவளால் அருகில் சென்று பார்க்க முடியவில்லை.
என்றைக்கு கப்பலின் மேலிருந்து கீழே கடலை எட்டிப் பார்க்கிறேனோ அன்றுதான் என் பயத்தை நான் முழுவதும் கடந்து விட்டேன், வென்று விட்டேன் என்று அர்த்தம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. கடலை நெருங்கி வந்ததே என் முதல் வெற்றி' என்று தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொண்டு, சன் பாத் எடுக்கும் இருக்கையில் தளர்வாய் கால் நீட்டி சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
' நீ கண்களை மூடும் தருணம் எல்லாம், ஒரு ஜோடி உதடுகள் உன் உதட்டினைச் தீண்டிச் செல்கிறது. கவனம் மயூரி!' பெண்மைக்கே இருக்கும் ஆழ்மனது, அவளை எச்சரிக்கை செய்தது.
'இன்று பிரச்சனைகளைக் கண்டு நான் திகைத்து நிற்கப் போவதில்லை. வருவது வரட்டும்!' என்று விழிப்புடன் தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.
அங்கே தேவ் தன் அறையில் இருந்த தகவல் தொடர்பு அலைபேசியில் இருந்து, கப்பலில் இருக்கும் தகவல் மையத்துடன் தொடர்பு கொண்டு அறையின் கதவினைத் திறக்கச் செய்தான்.
சக்தியோ அந்த கப்பல் அதிகாரியிடம், இதற்கு காரணம் யார் என்று கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொண்டான்.
நேற்று நடந்ததற்கு இந்த அளவு கூட எதிர்வினை இல்லை என்றால் எப்படி என்று மனதிற்குள் சிரித்துக் கொண்ட தேவ், " பரவாயில்லை ஆபிசர். யாரோ தெரியாமல் விளையாடி இருக்கிறார்கள். இந்த முறை விட்டு விடலாம். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்" என்று பிரச்சனையின் தீவிரத்தைக் குறைத்தான்.
இந்த அதிகாலையில் அவள் எங்கே சென்றிருக்கக் கூடும் என்ற சிறுகணிப்புடன், கப்பலில் சூரிய உதயம் பார்க்கும் இடத்திற்கு வந்தான் தேவ்.
அவனுடைய செல்ல 'மிர்ச்சி கா ஆச்சார்' இதமான சூரிய கதிர்கள் தழுவ, கண்மூடி, இளம் காலையில் பசும்மஞ்சள் தங்கம் போல் துயில் கொண்டிருந்தது.
மெல்ல அவள் அருகில் வந்தவன், சூரிய நிழற்குடையினை அவள் இருக்கையில் பொருத்தினான். யாரோ தன் அருகில் வந்ததை உணர்ந்தாள் மயூரி. படபடவென இதயம் துடித்து, அவனைச் சிறை செய்யச் சொன்னது. முதல் முறை போல் தவறிழைக்காமல், கையும் களவுமாய் பிடிக்கும் சரியான நொடிக்காய் காத்திருந்தாள்.
தன் நாசி அருகே சூடான மூச்சுக்காற்றை அவள் உணர்ந்ததும், இதுதான் சமயம் என்று, படுத்திருந்த இருக்கையில் இருந்து சட்டென்று அவள் எழ முயலும் போது, அவளது கண்களை வலிய உள்ளங்கை ஒன்றும் முடி, அவளின் மெல்லிய இதழ்களை, வலிய இதழ்கள் அழுத்தமாய் மூடியது.
தன் கைக்குள் அகப்பட்டிருந்தவனின் சட்டையை ஆவேசமாய் கிழித்து, அவனைத் தப்ப விடாமல் செய்ய அவள் முயல, அவளின் எதிர்ப்புகளை எல்லாம் துச்சம் செய்து, தனது மேல் சட்டையைக் கழற்றி அவள் கைகளில் கொடுத்து, எதிர்பாராத நொடியில் அவளை நீச்சல் குளத்திற்குள் தள்ளிவிட்டு, இரண்டு இருக்கை தள்ளி இருந்த இருக்கையில் மேல் சட்டை இல்லாமல் படுத்துக்கொண்டு, சன் பாத் எடுப்பவர்கள் கூட்டத்தோடு கலந்து கொண்டான்.
அவன் தள்ளிவிட்ட பகுதி சிறு குழந்தைகள் நீச்சல் பழகும் ஆழமற்ற பகுதியாய் இருந்ததால், முழங்கால் அளவு கூட தண்ணீர் இல்லாத அந்த நீச்சல் தொட்டியில் தட்டுத் தடுமாறி எழுந்து கையிலிருந்த சட்டையினை ஆத்திரத்தோடு பார்த்தாள்.
ஆவேசத்துடன் சுற்றிலும் பார்க்க, அவளிருந்த இடத்தைச் சுற்றி சந்தேகப்படும் படியாக ஒருவரும் நிற்கவில்லை. மேல் சட்டை இல்லாமல் சூரிய உதயம் பார்க்கும் கூட்டத்தில் யாரேனும் தென்படுகிறார்களா என்று பரபரப்புடன் பார்த்தாள்.
அவர்களின் பார்வை வட்டத்திற்குள் அவன் தென்படாமல் போனதால், கோபம் உச்சியில் ஏறி நிற்க, கையில் இருந்த அவனின் சட்டையால், நீர்ப்பரப்பை சல் சல் என்று அடிக்க, நீர்த்துளிகள் நாற்புறமும் சிதறியது,
அங்கே கூட்டத்தில் ஒருவனாக படுத்திருந்த தேவ்வின் முகத்திலும் நீர்த்துளிகள் தெறிக்க, 'என் செல்ல 'மிர்ச்சி கா ஆச்சாரை' சுவை பார்க்க எத்தனை பெரிய சாகசத்தை வேண்டுமானாலும் செய்யலாம். தெரியாமல் சுவைப்பதிலும் செம கிக்கு தான்!' என்று தான் சுவைத்த உதட்டு ஊறுகாவில் போதை ஏறியவனின் புறங்கைகளுக்குள் மறைந்திருந்த அவன் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது.
" யாருடா அவன்? டேய் நீ தைரியமானவனா இருந்தா, நான் கண்ணை திறந்து முழிச்சிக்கிட்டு இருக்கும்போதே, உன் வீரத்தை காட்டுடா! நீ ஒரு நல்ல தாய்க்கு பிறந்தவனாய் இருந்தா, என் முன்னாடி நேருக்கு நேர் வாடா!" சுற்றி நிற்கும் கூட்டத்தைக் கண்டு கொள்ளாமல் கோபத்தில் கொந்தளித்து விட்டுச் சென்றாள் மயூரி.
தன் தாயை இழுத்ததும் தேவ்வின் கன்னத்து தசைகள் இறுகி, சினத்தில் புருவங்கள் இடுங்கியது.
"கண்டிப்பா உன் முன்னாடி வருவேன். உன் உதட்டையும் ஊறுகாய் போடுவேன். அப்ப நீ என்ன செஞ்சு கிழிக்கிறேன்னு நானும் பார்க்கிறேன்டி, என் மிர்ச்சி ஊறுகா" என்றான் அவளுக்கு சளைக்காத தேவ்.
தனது அறைக்குத் திரும்பும் முன், நேற்று நடந்ததற்கு சக்தியை சமாதானம் செய்யலாம் என்று, அவனின் அறைக் கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்தவன் அங்கே மயூரியைக் கண்டதும், "இன்னைக்கு நீ ஒன்னும் உன் கையால எனக்கு கங்கா ஸ்நானம் செய்ய வேண்டாம். நானே குளிச்சுக்குறேன். நீ கிளம்பு மயிலு" என்றான் கோபத்துடன்.
" நேற்று ஏதோ யார் மீதோ உள்ள கோபத்தில் நான்... " என்று ஆரம்பித்தவள் முடிப்பதற்குள், "ப்ளீஸ் மயில்" என்றான் சக்தி.
சரி என்று திரும்பியவள், மீண்டும் அவனை சமாதானம் செய்வதற்காகத் திரும்பும் முன், அவன் கதவினை அடைத்து விட்டான். மயூரியின் பின்பக்க உடை கதவிடுக்கில் மாட்டிக்கொள்ள, நகர முடியாமல் அவளின் முதுகுப்புறம் கதவோடு ஒட்டிக்கொள்ள, கதவின் மீதே சாய்ந்து நின்றாள்.
' சரியான அவசரக் குடுக்கை. ஒரு சாரி சொல்வதைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் மட்டி மாதிரி நடந்துக்கிறான். டாக்டர் சாந்தாவிடம் சொல்லி இவனுக்கு ஒரு கவுன்சிலிங் கொடுக்கச் சொல்ல வேண்டும்' என்று மனதிற்குள் சக்தியை திட்டியவள், கதவில் சாய்ந்து நின்றவரே தன்னிரு கைகளையும் மேலே உயர்த்தி கதவினைத் தட்டுவதற்கு முயற்சி செய்தாள். கதவு தட்டும் ஓசை கேட்டாலும் சக்தி கதவைத் திறக்கவில்லை.
அவர்கள் அறைகள் அமைந்திருந்த நடைப்பகுதியில், மேல் சட்டை இல்லாமல், வேக நடை போட்டு வந்து கொண்டிருந்தான் தேவ்.
நளினமான சிலை போல் கையை உயர்த்தி கதவைத் தட்டிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவனுக்கு அவளின் நிலை புரிந்தது. சடுதியாக அவள் உரைத்த வார்த்தைகளின் உஷ்ணம் உடலெங்கும் பரவியது.
மேல் சட்டை இல்லாமல் தன்னெதிரே நின்றவனைப் பார்த்ததும், தேவ் தான் தன்னை முத்தமிட்டவன் என்பதை புரிந்து கொண்டாள் மயூரவாகினி.
விழிகள் அகல விரிந்து, ஆத்திரம், அதிர்ச்சி, கோபம் என பல உணர்ச்சிகளைப் பிரதிபலித்தது. உயர்த்தி வைத்திருந்த தன் கைகளால், தன் எதிரே நின்றிருந்த அவனை அடிப்பதற்கு அவள் முயற்சி செய்யும் முன், தன்னிரு கரங்களை உயர்த்தி அவளின் கரங்களைச் சிறைபிடித்தான் தேவ்.
" ஒரு நல்ல தாய்க்கு பிறந்தவனாய் இருந்தால் உன் முன்னாடி வர சொன்ன. வந்துட்டேன்டி. அப்புறம் என்ன சொன்ன ", யோசிப்பது போல் தலையினைச் சற்றே உயர்த்தி, "ஹான்... தைரியம் இருந்தா என் வீரத்தை காட்டச் சொன்ன. காட்டிட்டா போச்சுடி என் மிர்ச்சி ஊறுகாய்" என்றவனுக்கு பதிலடி கொடுப்பதற்காக வாயைத் திறந்தவளின் வார்த்தைகள் அவனின் வாயிற்குள் மூழ்கியது.
தேவ்வின் வெற்றுமேனி மயூரியின் மென்னுடலை அழுத்த, அவன் உதடுகளோ என்றும் இல்லாத ஆவேசத்துடன், அவள் உதட்டினை கடித்து விழுங்கப் பார்த்தது.
தேவ்வின் அத்துமீறலை தடுக்க முடியாமல் போனதால் கண்கள் கலங்க ஆரம்பித்தது மயூரிக்கு. அவனின் ஆவேசமும் மூர்க்கமும் அவளை பயமுறுத்தப் பார்த்தது.
' இது பயப்படும் நேரம் இல்லை மயூரி! போராடாமல் விடிவில்லை. துணிந்து போராடு!' அவளின் மனம் அவளுக்கு ஆணையிட, அவனைத் தாக்குவதற்காக தன் கால்களை உயர்த்திய நேரம், சக்தி கதவினைத் திறந்தான்.
அவன் கதவைத் திறந்ததும் பின்புறமாக சக்தியின் மேல் சரிந்து தரையில் விழுந்தனர் மயூரியும், சக்தியும்.
"அம்மே..." என்று அலறினான் சக்தி.
தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்த மயூரி, "சாரி..." என்று சக்தியிடம் கூறிக் கொண்டிருந்தாலு,ம் உள்ளமோ தேவ் இருந்த இடம் வெறுமையாக இருந்ததை குறித்துக் கொண்டது.
"நீ இப்படி விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்டதால் உன்னை மன்னித்து விட்டேன் மயிலு! இதோட நிறுத்திக்கோமா " என்று அவளைப் பார்த்து இரு கரம் கூப்பி வணங்கினான் சக்தி.
தன்னறைக்குள் வந்த மயூரிக்கு இதுவரை நடந்த குழப்பத்திற்கெல்லாம் காரணம் தேவ் என்பது தெள்ளத் தெளிவாகிப் போனது. தன்னை அத்துமீறி கட்டி அணைத்ததும் அவனே, முகம் மறைத்து முத்தம் கொடுத்ததும் அவனே என்று வெட்ட வெளிச்சம் ஆகியதில், குழப்பங்கள் தீர்ந்து, அவனின் செயலுக்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உத்வேகமும், வைராக்கியமும் பிறந்தது அவளுக்கு.
பெண்களை போகமும், காமமுமாய் பார்க்கும் அவனின் கண்களைத் தோண்டி எடுக்க வேண்டும் என்ற வெறி ஊற்றாய் பெருகியது.
ஆத்திரப்பட்டு அதற்கான வாய்ப்புகளை எல்லாம் நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள் மயூரி. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சரியான நேரத்தில் அமையும் போது அவனின் செயலுக்கு எல்லாம் பாடம் கற்பிக்க வேண்டும். அந்த நேரத்திற்காக அமைதியாய் காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
காலை உணவை முடித்துவிட்டு தேனீர் அருந்திக் கொண்டிருந்தாள் மயூரி. அவள் இருக்கைக்கு எதிரே இருந்த காலி இருக்கையில் வந்து அமர்ந்தான் தேவ்.
"தேநீர் அருந்துவது முக்கியம் அல்ல. தேநீர் யாருடன் அருந்துகிறோம் என்பது தான் முக்கியம்" என்று தெனாவட்டாக உரைத்தபடி அவளின் எதிரே இருந்து, உதட்டினால் தேநீரையும் கண்களினால் அவளையும் பருக ஆரம்பித்தான்.
கடல் பொங்கும்...
Last edited: