• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - 19

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 19

கதவு திறக்கும் சத்தத்தில் அவன் இமைகள் மெதுவாக திறக்க அப்போதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் சுஜாதா. அவள் முகம் வெகுவாக சோர்ந்து போயிருந்தது.


"VNA என்ன சேர்லயே உக்காந்து தூங்கிட்டீங்களா" என்று அவள் குரல் இப்போது உற்சாகமாய் வெளிவர அவளை ஆச்சர்யமாக பார்த்தவன் "கோபம்லாம் போயிடுச்சா" என்றான்.

"கோபமா.. யாருக்கு?... யார் மேல?"

"உனக்குத்தான்... என் மேல"

"உங்க மேல எக்கச்சக்க லவ் தான் இருக்கு. கோபம் இல்லையே..."

"அப்பறம் ஏன் வெளிய போன"

"ஒரு எமர்ஜென்சி கேஸ்... கால் பண்ணாங்க. அதை நான் ஹேண்டில் பண்ணிட்டு இருந்தால நானே போக வேண்டியதா போச்சு VNA"
"ஓகே ஓகே..." என்று அவன் சொல்லவும் "ஏன் கோச்சுட்டு இவ எங்கயாவது போய் தொலைஞ்சுடுவா நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சீங்களா... அது மட்டும் நடக்காது..." என்றாள்.


இப்போது பேச்சில் சோர்வு இருந்தாலும் முகம் அதற்கு எதிர்மாறாய் இருந்தது. கூடவே அவள் கண்கள் அவனை அப்படியே விழுங்கிவிடுவதைப் போல் பார்க்க "நீ பார்க்கவே ரொம்ப டயர்டா இருக்க.. போ போய் தூங்கு.. சும்மா என் முகத்தையே முழுங்குறது மாதிரி பார்த்துட்டு நிக்காத" என்றான் அவன்.


"உங்களைப் பார்த்தா என்னோட டயர்ட்னெஸ் எல்லாமே போய்டுது VNA... அப்படியே..." என்று அவள் இழுக்க "ஏடாகூடமாக ஏதாவது கேப்ப... என்னை ஆள விடு... " என்றான் அவன் கவனமாய்.

"ஆனாலும் நீங்க இவ்வளவு கஞ்சமா இருக்கக் கூடாது... இதேது என்கிட்ட நீங்க கேளுங்க.. நான்... " என்றவளைத் தடுத்தவன் "வாயை மூடு சுஜாதா... தயவுசெஞ்சு போய் தூங்கு என்னை விடு" என்று சொல்லிவிட்டு அவசரமாய் அவளை விட்டு விலகிச் சென்றான்.


அவசரமாய் செல்லுமிவன் ஓர்நாள்
அவசரமில்லாது அவனை
எனக்கே தந்து எனை அவனோடு எடுத்துக் கொள்வான்..அந்நாள் தருமந்த இதத்திற்காய் ஆண்டுகாலமாய் காத்திருக்குமிந்த அவஸ்தை அவனுக்கின்று புரியாது... புரியும் வேளையில் அவன் புலன்களனைத்தும் அவன் பேச்சைக் கேட்காது என் பேச்சினை கேட்கும்... என்னையே எதிர்பார்க்கும். மனங் கொண்ட காதலினை மயக்கம் முற்றிலுமாய் ஆட்கொள்ள அவன் வார்த்தைக்காகவும்
அவன் தொடுகைக்காகவும் நான் காத்திருக்கிறேன்... அருகேயிருந்தும்
தொலைவில் நிறுத்திவைக்கும் அவன் செயல்களை... இம்சிக்கும் அவனை... இன்னுமின்னும் அதிகமாய் காதலிக்கத்தான் தோன்றுகிறதே தவிர விட்டு விலகி வெறுக்கத் தோன்றவில்லை. அப்படியெனில் இதில் அவன் என்மீது குற்றம் சொல்ல முடியாது... இவளோடு பெரும் இம்சையென சொல்லி அவன் திட்டினால் நான் ஏற்றுக் கொள்வேன். கூடவே இது காதலல்ல காமமென வரையறுத்தால்
இதுவும் உண்மையேயென சொல்லுவேன்...காரணம் அவன் மேல் கொண்ட காதலுக்கு வடிவமும் பெயர்களும் பலவுண்டு..

அடக்கப்பட்ட சட்டத்துக்குள் அடைத்து வைக்க என் காதலொன்றும் இறந்து போனவொன்றல்ல... அது பரந்துவிரிந்த பிரபஞ்சம் போல் எல்லையில்லாதது... அதன் பெருமை உணர்ந்து அவன் வரும் நேரம் அவனை அணைத்துக் கொள்வேன் உயிரினிலே.... என்றவளின் காதலினை

"ஏய் இன்னுமா நீ போய் தூங்கலை. என்னைப் பத்தி காலையில நினைக்கலாம். போ போய் தூங்கு.." என்று மேலிருந்து அவன் குரல் தடுத்து நிறுத்தியது.

"சத்தமா கூட நான் பேசலை. அப்பறமெப்படி உங்களுக்கு கேட்டுச்சு.." என்று இவள் கீழேயிருந்தே கேட்க "நீ எப்பவும் இதை மட்டும் தான நினைப்ப. சரி தூங்கு. நீ ரொம்ப சோர்வா இருக்க" என்று சொல்ல "அவ்வளவு அக்கறையா VNA என்மேல" என்றாள் இவள் வேகமாய்.



"எனக்கு காய்ச்சல் அடிச்சதும் நீ என்னை பார்த்துக்கிட்ட அதான் நானும் உன்னை கேர் பண்ணுறேன்..." இது அவன்.

"ஓ நான் பண்ணதால பதிலுக்கு பதிலா"

"ஆமா"

"நான் உங்களை லவ் பண்ணுறேன் அப்போ நீங்க????" என்று சிரிப்பையடக்கிய குரலில் கேட்க "குட்நைட்" என்று மட்டும் அவனிடமிருந்து பதில் வந்தது.


அதன்பிறகு பதில்வராது என்று தெரிந்தவள் அவனுடன் உரையாடிய சந்தோசத்தில் படுக்கையில் சென்று விழுந்தாள்.

ஏனோ உறக்கமே வரவில்லை. மனம் ஒரு மாதிரியான வெறுமையின் தனிமையில் சிக்கிக் கொண்டிருந்தது. அவன் கரத்தின் அணைப்பில்லாது என்னவோ போல் இருக்க என்ன செய்ய என்று யோசித்தவள் அங்கே செல்லலாமென முடிவு செய்து கதவின் மேல் கைவைக்க கதவு இறுக மூடியிருந்தது.


அதற்குமேல் அங்கிருக்க பிடிக்காது மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டாள். அவனுக்கோ காய்ச்சல் விட்டிருப்பதைப் போல் இருந்தாலும் தலை மிகவும் பாரமாக இருந்தது . அவனால் அதைத் தாங்கவே முடியவில்லை. காபியாவது குடிக்கலாம் என வந்தவன் கிச்சனுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை பார்வையிட அவன் தேடியது மட்டும் இல்லை.


பால் இல்லையே இப்போ என்ன பண்ணுறது. அவகிட்ட கேக்கலாமா. வேண்டாம் தூங்கியிருப்பா என்று அவன் தனக்குள்ளயே சொல்லிக் கொள்ள "என்ன VNA... என்ன வேண்டும்" என்று அவள் அவன் பின்னாலிருந்து கேட்க "நீ இன்னுமா தூங்கலை... என்றவன் "காஃபி வேண்டும்" என்றான்.

"தள்ளுங்க நான் போட்டுத் தர்றேன்" என்றவள் சொல்லவும் "இல்லை பால் எங்கன்னு சொல்லு சுஜாதா நானே போட்டுக்குவேன்" என்றான் அவன்.

"நான் கொடுத்த டேப்லட் போட்டீங்களா இல்லையா"

"இல்லை"

"அதுதான் தலை வலிக்குது சரி காபி போட்டுத் தர்றேன் நீங்க இங்க உக்காருங்க"

"இல்லை பரவாயில்லை"

"இங்க உக்காந்து என் முகத்தைப் பார்க்குறது உங்களுக்கு கஷ்டமா இருந்தா ரூம்க்கு போங்க. நானே கொண்டு வர்றேன்" என்று அவள் முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு சொல்ல "எனக்கொன்னும் கஷ்டமில்லை. நீதான் கஷ்டப்படுத்திக்கிற உன்னையே" என்றான்.

"அதைப் பத்தி நானே கவலைப்படலை. நீங்க ஏன் கவலைப்படுறீங்க"

"கவலைப்படலை உன்மேல இருக்க அக்கறையில சொல்லுறேன்"

"மண்ணாங்கட்டி... அந்த அக்கறையிங்கிற போர்வையில எத்தனை நாள் இருக்குறதா உத்தேசம். எனக்கு லவ் வந்ததும் நான் அதை உங்ககிட்ட சொல்லிட்டேன். ஆனா நீங்க சொல்ல மாட்டுறீங்க.. இதுதான் ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அழகா"

"காதல் வந்தாத்தான சொல்ல முடியும். எனக்கு வரலை"

"இப்படி பொய் பேசுறதையும் உங்ககிட்ட இருந்து கத்துக்கணும் VNA"

"சுஜாதா. என்னோட மைண்ட் இதை ஏத்துக்க மாட்டேங்குது. இறுக்கமாகவே இருந்து பழகிட்டேன். அதனால என்னை நினைக்கிறதை விட்டுட்டு நீ உன்னோட வாழ்க்கையைப் பார். அதுதான் உனக்கு நல்லது"

"இந்தாங்க காபி" என்று அவள் நீட்ட அவன் வாங்கியபடி அறைக்குள் சென்றான். அவன் பின்னாலே அவளும் சென்றாள்.

ஏனோ அவள் உடனிருப்பதை அவனுக்கேத் தெரியாது அவன் மனம் விரும்பியது. இறுக்கமாக இருப்பதாக தன்னை அவன் காட்டிக் கொள்ள வெகுபிரயத்தனப்பட்டான்.


காபியை குடித்து முடித்தும் கூட அவன் தலைவலி அவனை விட்டு விலகிச் சென்றபாடில்லை.

தடுமாறிய மனது..
காய்ச்சலின் சோர்வு..
சுஜாதாவின் வலி..
இவளின் கலவையான காதல் உணர்வுகள் என எல்லாம் சேர்ந்து மூளையைப் போட்டுத் தாக்க தலைவலி அதிகமாகத்தான் இருந்தது.

தலையைத் தாங்கிப் பிடித்தபடி அவனிருக்க அவளோ அவனிடம் டேப்லெட்டை எடுத்து நீட்டினாள்.

வேண்டாமென மறுக்க அவள் "தலைவலி ரொம்ப இருக்குன்னு பார்த்தாலே தெரியுது. இதைப் போட்டுட்டு படுங்க ப்ளீஸ்" என்றாள்.

"இல்லை டேப்லட் வேண்டாம் சரியாகிடும்" என்று அவன் மறுத்துவிட்டு படுத்துவிட்டான். அவனையேப் பார்த்தபடியே அவனது புத்தகத்தினை பிரித்துப் படிக்கத் தொடங்கினாள் அவள்.


அவனெழுத்தின் சாகரத்தினுள் அவள் மூழ்கிவிட இவனோ அவளை பார்க்கவும் முடியாமல் பார்க்காது இருக்கவும் முடியாமல் தலைவலியோடு இந்த அவஸ்தையினையும் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

ஏனோ அவள் தள்ளியிருப்பது அவன் தனியாக இருப்பது போல் ஒரு மாயத்தோற்றத்தினை தோற்றவித்திருந்தது. மனசுல இருக்குறதை சொல்ல முடியாம இதென்ன என்றே அவன் நினைக்கையிலே அவன் மூளை அவனை கொட்டி கம்முன்னு படு என்று சொல்லிவிட்டது.

ஆனால் அவன் மனம் படும் பாட்டினை அவன் சுஜாதாவினால் உணர முடியாது போய்விடுமா என்ன?...

அவள் புத்தகத்தினை மூடி வைத்துவிட்டு அவன்பக்கத்தில் வந்தமர்ந்தாள். முழங்கையினால் நெற்றியினை அழுத்தியிருந்தவனின் தோற்றம் அவளுக்குள் பெரும் பிரளயத்தினை ஏற்படுத்தியது.

கையை விலக்கியவள் அவன் தலையினை அப்படியே மெதுவாய் தூக்கி தன் தொடையினில் வைத்தாள்.

கொதித்த மனம் குளிர அவள்
தொடுகையொன்றே போதுமானதாக இருந்தது அவனுக்கு.


ஜனனம் தந்து மரணத்தினை
தாயவள் ஏற்றுக்கொள்ள அன்னையின்றி அன்புமின்றி அவனிதனில் அலைந்து திரியுமிவனை
ஆதரிக்க யாருமிலரென
ம்ஹூம்
யாரும் தேவையில்லையென
என்னை நானே இரும்பாக்கினேன்...

எவரும் உட்புகா வண்ணம்
அரணமைத்து விலகியிருந்தேன்...
கற்பனையிலொருத்தி
என்னால் உருவாகி
எனையேயுருகி காதல் செய்ய
கதையிலும் அவளையேயிருத்தி
எழுதுமென்னெழுத்தெலாம்
அவள் பெயர் உரைக்க
இப்போது அவள் பெயர் கொண்டே என்னெதிரே வந்து நிற்கிறாள் இன்னொருத்தி...
கண்களில் காதலைக் காட்டி
கவிதையிலே காதலைக் கொட்டி
கணந்தோறும் காற்றாய் எனையே சுற்றி
காணுமிடமெல்லாம் எனையேயிருத்தி
காற்றிலிட்ட கற்பூரமாய் கரைந்தே
காதலிக்குமளவிற்கு நானென்ன செய்துவிட்டேன்...

யோசித்தால் ஒன்றுமே விளங்கவில்லை...

இதோ இப்போது கூட
மடியினில் கிடத்தி விழிதாழ்த்தி
இவள் பார்க்குமிந்த பார்வையில் இருப்பதெல்லாம்
இவன் தாயில்லாப்
பிள்ளையென்ற தவிப்பும்
தலைவலியை நீக்கிவிட
வேண்டுமென்ற துடிப்பு மட்டுமே...


அரக்கத்தனமாய் காதலிக்குமவளுக்கு
அன்னையாய் மாறி அன்பு செய்யவும் தெரிந்திருக்கிறது...

விந்தைதான் இது...
என நான் நினைக்க ஆணவனுக்கு அவன் துணைவியே அடுத்த தாயென அவள் தளிர் விரல் பட்ட ஸ்பரிசம் எடுத்துச் சொல்லியது.

அந்த வருடல் அவன் உயிரையே ஊடுருவி.... மனம் நிறைந்த உணர்வினையும் தான் தனியொருவனல்ல என்ற நினைவினையும் அவனுக்கு சேர்த்து வழங்கியது.

இதை அவன் மனம் தாங்காது "சுஜா" என அவளை அழைக்க "ஷ்ஷ் தூங்கு வாசு" என்றாள் மென்மையாய்...


'வாசு' என்ற அழைப்பில் அவன் அடிமனம் அவனையுமறியாது அவள்பிடியில் சிக்கிக் கொண்டது.

இரும்பாயிருப்பவனென அவன் மட்டும் சொல்லிக் கொண்டால் போதுமா... அவன் மனமும் உருகுமல்லவா... அது உருகுவதும் மயங்குவதும் தாயின் பாசத்திற்கு மட்டுமே...

இறுக்கமாய் இருந்தவனை மீண்டும் அவள் இளக்கினால் இதயத்தில் நிரம்பிய அன்பினால்...

அந்த அன்பின் அழுத்தம் தாங்காது சட்டென்று திரும்பியவன் அவள் வயிற்றோடு முகம் புதைத்துக் கொள்ள சுஜாதாவின் தேகம் ஒருநொடி இறுகி பின் நெகிழ்ந்தது...

அந்நிலையிலும் அதை அவனின் தேகம் உணர்ந்தது...

இனி இருவரது நிலை என்ன?????