• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - 26

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 26

தன் செவியினோரம் கேட்ட "வாசு" என்ற குரலில் "சுஜாதா" என அவன் இதழ்கள் அசைந்தது.

"என்னாச்சு ஏன் ரொம்ப வேதனைப்படுற"

"ஏன் உனக்குத் தெரியாதா?"

"உனக்குத்தான் சுஜாதாவை ரொம்ப பிடிச்சுருக்கே அப்பறமென்ன" என்று அவள் வினவ "ஆனா அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு. அவளைப் போய் நான் எப்படி?" என்றான் வாசுதேவன்.

"அதுதான் பிரச்சனையா... "

"என்ன நீ இவ்வளவு ஈசியா கேக்குற"

"கழுத்துல தாலியோட உன் நினைவுகளையும் சேர்த்து சுமக்குறான்னா அவளோட காதல் ஆழம் உனக்கு புரியலை. அவ நினைச்சுருந்தா இதை மனசுக்குள்ள போட்டு மறைச்சுட்டு போயிருக்கலாம். ஆனா அவ உன்னையே கடத்திட்டு வந்து உன் மனசு மாறும் வரைக்கும் வெயிட் பண்ணி அவளோட மனசை உன்கிட்ட சொல்லியிருக்கா. அவளோட வெறித்தனத்தினலயும் உன் மேல வச்சுருக்க காதல் தான் தெரியுது. அவளோட எழுத்துக்கள் எல்லாத்தையும் படிச்சா அவளோட எண்ணத்தினையும் புரிஞ்சுக்கலாம். எல்லாருக்கும் இந்த மாதிரியான அன்பு கிடைச்சுடாது வாசு. நீ லக்கி... அதான் உனக்கு அவளோட காதல் கிடைச்சுருக்கு... அவதான் உனக்கு சரியானவ வாசு... நீ அவகூட இருந்தா மட்டும் தான் சந்தோசமா இருப்ப. எனக்கு இதுதான் தோணுது"


"நீ எப்போ இருந்து அவளை மாதிரியே இடியட்டா பேச ஆரம்பிச்ச"


'நாங்க இடியட் தான்... ரைட்டர் சார் தான் புத்திசாலியாச்சே.. நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க புரியும்..."

"எனக்கு புரியலை"

"ஒட்டுமொத்த காதலின் ஒற்றையுருவமாய்
அவளிருக்க அவளளவுக்கு காதல் செய்வார் யாரென்ற வினாவுடன் நான் நிற்கிறேன்...நிஜமாய் சொல்லவேண்டுமென்றால்
நிழலிவளை விட நிஜமாய் உன்னெதிரே இருக்கும் அவள் காதலுக்கே வீரியம் அதிகம்... உன் மனம் மாறவில்லை யென்றால் கூட மாற்றும் வலிமை கொண்டது அது"

"அவள் காதல் புரியுது. ஆனா இது ரொம்ப லேட்... அவளுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு சுஜாதா"


"அந்த வாழ்க்கையில அவளுக்கு என்ன பிரச்சனைன்னு யோசி வாசு. ஒரு வேளை அவ ஹஸ்பெண்ட் ரொம்ப மோசமானவனா இருந்தா... அவன் அவளை ரொம்ப கொடுமைப்படுத்தியிருந்தா...
அவன்கிட்ட இருந்து தப்பிச்சுடணும்னு அவ யோசிச்சுருந்தா... அந்த நேரத்துல உன்னோட எழுத்து அவளுத்கு ஆறுதலா இருந்திருந்தா... நீ சுஜாதா சுஜாதான்னு உருகியெழுதியதெல்லாம் அவளைப் பாதிச்சுருந்தா... அந்த பாதிப்பில் அவ உன்னை தேடத் தொடங்கியிருந்தா. உன்மேல பையித்தியம் பிடிக்குற அளவுக்கு காதல் செய்ய ஆரம்பிச்சுருந்தா... இப்படி எத்தனையோ இருந்தா... இருக்கு வாசு.. அதுக்கெல்லாம் நீதான் பதில் சொல்லணும்"


"ஏய் வெயிட் என்னதிது அவளுக்கு இப்படி சப்போர்ட் பண்ணுற"

"அவளோட காதல் எந்த இடத்துலயும் உன்னை விட்டுக் குடுக்கலை. கற்பனையான என்னையே அவளால தாங்கிக்க முடியலை. உன்கிட்ட யாராவது க்ளோஸ்ஸா இருந்தா அது அவளால ஏத்துக்க முடியலை. ஏன்னா அவளுக்கு நீ மட்டும்தான் தெரியுற. எதையும் அவ மறைக்க நினைக்கல. எல்லாத்தையும் உன்கிட்ட கொட்டிடணும்னு தான் நினைக்குறா... கொட்டவும் செய்யுறா... அவ நினைச்சுருந்தா அந்த தாலியைக் கழட்டிட்டு உன் கூட சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். நீயும் வாழ்ந்திருப்ப... ஆனா அப்படிப் பண்ணலை.... வாசு நான் சொல்லுறேன். கண்டிப்பா அவ உன்னோட காதலால மட்டும் தான் உயிர் வாழ்வா.. இல்லைன்னா அவளோட காதலோட கணம் தாங்காமல் மரித்துத்தான் போவா... "


"சரி நீ சொல்லுற மாதிரியே வச்சுக்குவோம் அவளுக்கு அந்த கல்யாண வாழ்க்கை சரியா அமையலைன்னா அதை அவ என்கிட்ட சொல்லியிருக்கலாமே"

"சொன்னா உடனே பாவம் பார்த்து அவளை ஏத்துக்குவ. அப்படியே வாழ்க்கை குடுக்குற பீலிங்க்ஸ்ல நீ பெரிய கடவுள் மாதிரி உன்னை நினைச்சுக்கிடணும் அப்படியா வாசு... நான் கூட நீ பெண்களோட மனசை புரிஞ்சு எழுதுறன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன் ஆனா நீ???? அப்படி இல்லைன்னு புரிஞ்சுடுச்சு... எப்போ உன் கோபத்தினை அவகிட்ட காமிச்சு அவளை காயப்படுத்தி இரத்தம் வர வச்சயோ அப்பவே தெரிஞ்சு போச்சு. நீ எழுதுறதுக்கும் நீ நடந்துக்கிறதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லைன்னு"


"என்ன சுஜாதா இப்படிலாம் பேசுற. நான் வாழ்றதை எழுதுறவன்" என்று அவன் பாவமாய் சொல்ல "இனி அவகூட வாழ்றதையும் சேர்த்தே எழுது..." என்றாள் அவள்.


"அது மட்டும் என்னால முடியாது. எனக்கு அவ வேண்டாம்" என்று அவன் கண்டிப்புடன் மறுக்க "நிச்சயமா அவளோட மனசை நீ புரிஞ்சுக்கவே இல்லை. எப்பவும் புரிஞ்சுக்கப் போறதில்லை. எப்படியோ போ" என்று சுஜாதா சொன்ன மாத்திரத்தில் உறக்கத்தில் இருந்து "சுஜாதா" என்றபடி பதறி எழுந்தான் அவன்...


"VNA என்னாச்சு" என்றபடி அதைவிட பதற்றமாய் அவன் முன் சுஜாதா வந்து நின்றாள்.

"நத்திங்"

"கனவா.." என்று அவள் கேட்க அவனோ எதுவும் பேசாமல் இருந்தான்...

தன்னருகே இருந்தும் தூரமாய் விலகியிருக்கும் அவனைக் கண்டவள்

"ஏந்திழையிவளின்
ஏக்கம்தனை
எப்போது தீர்ப்பாயென
எந்நேரமும்
உனையே பார்க்க
எட்ட நின்று
எட்டியே நிறுத்துகிறாய் நீ...!

அலையின் ஆர்ப்பரிப்பாய்
அகம் குமுற
அங்கமிதில் வழியும் உணர்வுகளெல்லாம்
கடற்கரையில் துரத்தும்
அலையோடு
ஓடி விளையாடும் மழலையாய்
ஒருநிலையில் இல்லாது
ஓடியாடி விளையாட
தடுக்க வகையறியாது
தடுக்கவும் தோன்றாது
தயக்கத்தோடிருக்கும்
இந்நிலை தீர்க்க
தயவுசெய்து
தயங்காமல் வந்தால் தானென்ன?


உயிர் உருகி உணர்வில்
கலக்காது கலந்து களைந்த
புள்ளியாய் முற்றுப்பெற்ற
அத்தருணம்
கோலமாய் உருமாற நாம் அலங்கோலமாய் கிடந்தே
காதல் செய்ய வேண்டும்... !

அக்காதலின் வண்ணமதனை
காலமும் எடுத்துக் கொண்டு இவ்விரவினைக் கூட பசுமையாய் மாற்றிச் செல்லட்டும்... !

உன் தேகம் தீண்ட முடியாது
உன்னெழுத்தினை ஆடையாய் நான் போர்த்திக்கொண்டு நீலவானை நீயாய் நினைத்து பால்நிலாவின் ஒளியினை உன் அணைப்பாய் ஏற்றுக் கொண்டு உனக்குள்ளே நானும் மூழ்கிப் போகிறேன்...!

மூழ்கிய என்னை
முழுநிலவின் ஒளியிலிருந்து பிரித்தெடுத்து
முழுதாய் உன்னோடு சேர்த்து
பத்திரப்படுத்திக் கொள்...!

வாரணமாயிரம் சூழ யொருத்திக்
கனாக் கண்டு
ஶ்ரீமந் நாராயணனை கைத்தலம் பற்ற
இவளோ
வாசுதேவ நாராயணனை நினைத்தே உருகி
அவன் கைத்தலம் பற்றிட
கனாக் காண்கிறேன்...!!!

கடைசி வரையில்
இது நடக்காதென்று சொல்லாதே..
என் வாழ்க்கை அத்தியாயத்தின்
கடைசி வரியிலாவது
என் கனவு பலிக்குமென்ற
நம்பிக்கை எனக்குண்டு....!!!"


என்றவளின் எழுத்து நடையில் அவன் மனம் மயங்கி அவனை அசைக்க அதையும் மீறி இறுகியவன்
"நான் அந்த நாராயணனும் இல்லை. நீ ஆண்டாளும் இல்லை. இப்படிலாம் உளறிட்டு இருக்காம உன் பேமிலி கூட போய் இரு. அதுதான் உனக்கு நல்லது" என்றான் கடுமையான குரலில்.


"உங்களுக்கு நல்லதுன்னு சொல்லுங்க. எனக்கில்லை. உங்களை விட்டு விலகி நான் நல்லாவே இருக்க மாட்டேன். அப்படிப்பட்ட நல்லது எனக்கு வேண்டாம். அதே மாதிரி உங்களுக்கும் அந்த நல்லது வேண்டாம்... ஏற்கனவே சொன்ன மாதிரி நீங்க என்கூடவே இருங்க..."

"வேண்டாம் சுஜாதா ப்ளீஸ்.. என்னை நீ ரொம்ப குற்ற உணர்ச்சியில குறுக வைக்குற. உனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு அதுக்குள்ள நான் குழப்பம் பண்ணியிருக்கேன்.வேண்டாம். இது என்னை எப்போதும் துரத்திட்டே இருக்கும் மா... நீ உன் லைப்பை பாரு.."

"பார்க்க மாட்டேன்..."

"உன்னை கொண்ணுட்டு நான் இங்க இருந்து ரொம்ப ஈசியா போயிட முடியும்"

"நீங்களா" என்று அவள் ஆச்சர்யமாய் பார்த்து பின் "அதைத்தான் நானும் கேட்கிறேன் VNA... உங்க கையால சாகுற பாக்கியம்... அது எனக்கு மனதில் என் காதல் நிறைவேறிய உணர்வை அளித்து என்னை அமைதிப்படுத்தும். ஆயினுமென் ஆத்மா சாந்தியடையாது. காரணம் அது தாங்கள் இப்பூமியில் இருக்கும் காலம் வரை தங்களுடன் சுற்றிக் கொண்டே இருக்கும்" என்று சொல்ல "எமோசனல் ஸ்டுப்பிட்" என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.


"இங்க எல்லாருமே எமோசனல் ஸ்டுப்பிட் தான் VNA... ஏன் நீங்க கூட அம்மா அப்படிங்கிற அந்த எமோசனல்ல தானே விழுந்தீங்க"

"டோண்ட் சே லைக் திஸ்.. எனக்கு அதை மறக்கணும்" என்று அவன் சொல்ல "உண்மையைத்தான நான் சொல்லுறேன்... ஒத்துக்கோங்க VNA... இது உங்களுக்கு பிடிக்கலைன்னு சொல்லாதீங்க... ஏத்துக்க முடியலைன்னு மட்டும் சொல்லுங்க. ஏன்னா உங்க மனசுல காதல் என் மேல அளவுக்கு அதிகமா இருக்கு. அதை சொல்ல முடியாம இந்த தாலி வேலி மாதிரி நின்னு உங்களைத் தடுக்குது அதான.. இதை என்னால கழட்டி எறிய முடியும். பட் இதோடு நீங்க ஏத்துக்குற வரைக்கும் நான் கழட்ட மாட்டேன் வாசு... இட்ஸ எ ப்ராமிஸ்..." என்றாள் அவள்.


"அப்படி ஒரு விசயம் கடைசி வரைக்கும் நடக்கவே நடக்காது சுஜாதா. ஏமாந்நு தான் போவ.. "

"உங்க மனசுல இடம்பிடிக்கவே முடியாதுன்னு கூடத்தான் சொன்னீங்க. ஆனா நீங்களே இளகி என்னை ஏத்துகிட்டு நெருங்கி வந்தீங்க. அதே மாதிரி மீண்டு(ம்) வருவீங்க.. அந்த வேளையில் என் காதல் உங்களை அன்னையென தாலாட்டும்... அதுவரை விலகியிருந்து உங்க மூளை சொல்லுவதை கேட்டுட்டே உக்காருங்க..‌" என்றவளின் குரலில் உண்மையே இருந்தது.

------------------------------------

நடு இரவில் சு...தாவின் மனதிற்குள் அரவிந்த் சொன்னதே ஓடிக் கொண்டிருந்தது.

அவ மனசை எப்படி மாத்துறது.. அது மாறாதே.. இந்த அளவுக்கு அவ சேஞ்ச் ஆவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கூட இருந்தப்போ எல்லாம் எப்படி இருந்தா. இப்போ... ச்சே நினைச்சு பார்க்கவே முடியல... இவளோட நிலைமையை அரவிந்த் கூட சரியாச் சொல்ல மாட்டுறான்... ம்ம் இப்போ இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும். மொதல்ல இந்த வாசுதேவன் கேஸ்ஸை எப்படி க்ளோஸ் பண்ணனும்னு பார்க்கணும். இல்லைன்னா நமக்குத்தான் அது டேஞ்சர். ஏற்கனவே அந்த விஜய் வேற கொஞ்சம் மோப்பம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான்.

அவன் கிட்ட நெருங்குறதுக்குள்ள நாம இதை விட்டு வெளிய வந்துருக்கணும் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கையிலே வாசுதேவனின் முகம் அவள் சிந்தனையில் மின்னி மின்னி மறைந்தது...

உடனே "வாசு" என்றவள் சற்று மென்மையாய் விளிக்க அந்த விளிப்பு அந்த இரவில் அத்துனை அழகாய் ஏகாந்தமாய் இருந்தது... அவனை நினைத்த மாத்திரத்தில் மந்திரம் போட்டது போல் அவள் இப்படி உளர ஆரம்பித்துவிட்டாள்..

தொடுதிரை மட்டுமல்லாது அகத்தினுள்ளும்
அழியாத சித்திரமாய்
பத்திரமாய் நீயிருக்க
உன்னெழுத்தோ நான் போகுமிடமெல்லாம் நிறைந்தென்னை
வழிநடத்த
வழி மாறி
போய்விட மாட்டென நம்பிக்கை எனக்குள் உண்டு...!


கடமையின் பிடியில்
கட்டுண்டு கிடந்தாலுங் கூட
கையிலிருக்குமென்
கைப்பேசி கதறுகிறது
உள் சேமிப்பகம்
குறைந்து கொண்டே
இருக்கிறதென காரணம்,
உன் புகைப்படமும் உன்னெழுத்தின் வரிகளும் தான் அங்கே நீங்காது நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறது...!

எழுதுவது எனக்கு புதிது...
ஆயினுங் கூட
எப்படி வந்திருக்கிறதென்று எனக்கு கவலையோ கலக்கமோ இல்லை...
எப்படி வந்தாலும்
இது உனக்காக எனும்போது
அழகாய் தானே
மாறியாக வேண்டுமென விதியிருக்கையில்
வீணாய்
நான் வேறு ஏன்
கவலைப்பட வேண்டும்.....!

உன்னெழுத்தினை ஐம்புலன்களால் அளவுக்கதிகமாய் நானுணர அதையுந் தாண்டி உன்னையும் உணரவேண்டுமென்ற ஆவல் என்னிடமிருக்கிறது... !

விழியால் வருடி
செவியால் கேட்டு
நாசிதனில் வாசம் நிறைந்து
செவ்வாய் திறந்து
செம்மொழி பேசி
மெய்யினால் மெய்யாய் உனை உணர்ந்து உருகும் நாளன்று
உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்...!

அதற்கு மறக்காது
நீ பதிலும் சொல்ல வேண்டும்... காத்திருக்கிறேன் வாசுதேவா
அந்நாளுக்காய்...!
நின் பதிலுக்காய்...!!!!

இவளின் கேள்விக்கு வாசுதேவனின் பதில் என்னவாக இருக்கும்???