• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - 4

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 4

அவர்கள் மூவரும் பயந்ததை அவள் கண்கள் நோட்டமிட்டுக் கொண்டு தான் இருந்தது. அது என்னவாக இருக்குமென்று அவளுக்குள்ளே ஒரு சந்தேகமும் இருந்தது. அதை நிவர்த்தி செய்யத்தான் அவள் மொபைலை வாங்கியதே..

"நான் பாஸ்வேர்ட் கேட்டேன்.." என்று அழுத்தமான குரலில் சொல்ல அந்த பெண் மிகவும் தயங்கி பயந்து அதைச் சொன்னாள்.

ஓபன் பண்ணிய சில நிமிடத்தில் அந்த மொபைல் தூரமாய் போய் விழுந்து நொறுங்கியது. "மேம்" என்று அவள் பயந்தபடி பின் வாங்க அவளை இழுத்துப் பிடித்தவள் ஓங்கி ஓர் அறை விட்டிருந்தாள். மற்ற இருவரும் அப்படியே பின்னால் நகர்ந்து விட்டிருந்தனர்.

கன்னம் அப்படியே தீப்பிடித்தார் போல் எரியத் தொடங்கியது. கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அவள் பாவமாய் பார்க்க விஜயோ போச்சு ஏதோ பெருசா பண்ணி வச்சுருப்பாங்க போலயே... இன்னைக்கு செத்துச்சுங்க என்பது போல் பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தான். அவளைப் பொறுத்தவரையில் தப்பு என்றால் அது தப்புதான். அதுல எந்தவித பாரபட்சமும் இல்லை.


"மே...ம்" என்று அவள் திணற "ஏதாவது பேசுன செவுள் கிழிஞ்சுடும். ஆமா உங்களுக்கு எல்லாம் என்னதான் பிரச்சனை.. அறிவு இருக்கா? இல்லை அதெல்லாம் கடன் கொடுத்துட்டு சுத்துறீங்களா... வீட்டுல அப்பா அம்மா இருக்காங்களா இல்லையா?? என்று அவள் சீற்றத்துடன் கேட்க
"ம்ம்" என்று மூன்று பேரின் தலையும் தன்னால் ஆடியது.

"இருந்தும் அப்போ பிரயோசனமில்லை அப்பிடித்தானே.. சரி என்ன செய்யுறீங்க?" என்றாள் அவள்.

"காலேஜ் பைனல் இயர்"

"எந்த மேஜர்"

"கம்ப்யூட்டர் சயின்ஸ்" என்று சொன்னதுதான் தாமதம் "Exception handling concept தெரியுமா?" என்று அவள் கேட்க மூன்று பேரும் மௌனமாக இருந்தனர்.

"சரி அதைவிடு ரொம்ப ஈசியாவே கேக்குறேன். For loop syntax சொல்ல முடியுமா?..." என்றாள்.

அப்போதும் அவர்கள் அவளை நிமிர்ந்து பாராமல் மௌனமாக இருக்க "தெரியாதா.. அப்போ தெரிஞ்ச கான்செப்ட் ஏதாவது எக்ப்பிளையின் பண்ணுறீங்களா?... என்ன முழிக்குறீங்க மூணு பேரும்.. பைனல் இயர் போயாச்சு. படிக்குற புத்தகத்தில இருக்குற எதுவுமே தெரியலை. அப்போ எதுக்கு காலேஜ் போறீங்க.. நாங்களும் படிக்கப்போறோம்னு சீன் போடுறதுக்காக. கையில இருக்குற பாடப்புத்தகத்துல இருக்குற விசயத்துல ஒன்னுமே தெரிஞ்சுக்கல. ஆனா மண்டை மூளை வேற விசயத்துல அபாரமா வேலை செய்யுது இல்லை... ம்ம் உங்க வீடியோ பார்த்தாலே தெரிஞ்சது... மூணு பேரும் எந்தளவுக்கு ஆக்டிங்ல பெர்பெக்டா இருக்கீங்கன்னு. அப்போ தெரியாம வந்து இதுல மாட்டிக்கலை... எல்லாத்துக்குமே தயாரா வந்துதான் மாட்டிருக்கீங்க.. இல்லை.." என்றாள் அவள் சீற்றத்துடன்.

அந்த வீடியோவின் தாக்கமே அவளை இவ்வாறு பேச வைத்துக் கொண்டிருந்தது.

"இல்லை மேம். அதுவந்து.." மீண்டும் பளாரென சத்தம். இம்முறை சத்தம் இன்னும் கொஞ்சம் சப்தமாய் வந்தது.


"என்ன நடந்தது. அடுத்த அறை விழுறதுக்குள்ள உண்மையை சொல்லுங்க‌" என்று சொன்னவள் பார்வையை அடுத்த இருவரிடமும் திருப்பினாள்.

"மேம் அ...து" இரண்டு பேரின் கன்னமும் மாறி மாறி அவள் அறைந்ததில் எரிந்தது. வாயையேத் திறக்க முடியாத அளவிற்கு வலி உயிர் போனது.

"எனக்கு பதில் வேண்டும்... இழுக்குறதெல்லாம் வீட்டுல போய் வச்சுக்கோ... இல்லைன்னா" என்பதற்குள் "மேம் சாரி மேம் அது எங்க சேனலுக்குக்காக வீடியோ போட வந்து..." அவளது முறைப்பில் உஷ்ணம் ஏறிக் கொண்டே போனது.

"சோ... நீங்க பசங்களை டெஸ்ட் பண்ண வந்துருக்கீங்க..அதாவது உங்க பாஷையில என்னமோ சொல்லுவீங்களே... ஆங் ப்ராங் கரெக்டா..." என்றாள்.

"மேம் இந்த மாதிரியான நைட்டு நேரத்துல பொண்ணு வெளிய வந்தா பசங்க எந்த மாதிரியா ரியாக்ட் பண்ணுறாங்கன்னு பார்க்கத்தான் வந்தோம். ஆனா இந்த அளவுக்கு ஆகும்னு நாங்களே எதிர்பார்க்கலை மேம் சாரி..." என்றனர் மூவரும்.

"அதாவது நீங்களே அவங்க முன்னாடி வந்துட்டு, பெர்பாமென்ஸ் பண்ணிட்டு இப்போ அவங்க மிஸ்பிஹேவ் பண்ணிட்டாங்கன்னு ஒப்பாரி வைச்சீங்களே.. அந்தளவுக்கு எக்ஸ்பெக்ட் பண்ணலையா.. குட் ரொம்ப நல்லா இருக்கு... விஜய்" என்று அவனை அழைக்க "எஸ் மேம்" என்றவாறு அவன் வர "அந்த பசங்களை இங்க கூப்பிடுங்க" என்றாள் இவள்.

இருவரும் ஏற்கனவே விஜயிடம் அடிவாங்கியதில் முகம் வீங்கிப் போய் இரத்தம் வழியும் உதட்டோடு வந்து நின்றனர். அவள் முகத்தைக் கூட நிமிர்ந்துப் பார்க்காமல் அவர்கள் கீழே குனிந்து நின்று கொண்டிருக்க "நிமிர்ந்து என்னைப் பாருங்க" என்றாள் இவள்.

"என்ன நடந்ததுன்னு இப்போத்தான் பார்த்தேன். இதுல இரண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. உங்களுக்கு எல்லாம் ஒரு விசயம் சொல்லணும்னு நான் ஆசைப்படுறேன். பொறுமையா கேக்குறீங்களா.. என்னோட அப்பாதான் வீட்டுக்கு மூத்த பையன். அவருக்கு அடுத்து நாலு பேர். அவங்க அப்பாவும் அம்மாவும் ஊதாரித்தனமா இருந்து எதையுமே பார்த்துக்காததால குடும்பமே ரொம்ப கஷ்டப்பட்டுச்சு. ஆனா அப்போ அப்பா ஒரு முடிவு எடுத்தார். அப்பா அம்மா பாத்துக்கலைன்னா என்ன நான் பாத்துக்கிறேன் இந்தக் குடும்பத்தை அப்பா மாதிரி இருந்துன்னு நினைச்சு பாத்துக்கிட்டார். அப்போ அவருக்கு 11வயசு.. அந்த சின்ன வயசுல அவர் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. இப்போக் கேட்டாக்கூட நான் ரொம்ப ஸ்ட்ராங் அப்படின்னு சொல்லிட்டுத் திரியுற என் கண்ணுல இருந்து தண்ணீர் வந்துடும். தன்னோட சுகத்தைப் பத்தி அவர் பெருசா யோசிக்காம தங்கச்சிங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு. அவர் நினைச்சுருந்தா யாரும் எப்படியும் போகட்டும்னு அவர் வாழ்க்கையை சந்தோசமா வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிப் பண்ணலை. ஏன் தெரியுமா??? அவர் ஒரு உண்மையான ஆண்மகனா ஒரு குடும்பத்தைக் காப்பாத்துற மனுசனா வாழணும்னு ஆசைப்பட்டார். அவர்கிட்ட இருந்துதான் சில விசயங்களை கத்துக்கிட்டேன். அந்த ஏஜ்ல அவருக்குன்னு இருக்குற உணர்வுகளை எல்லாம் கட்டுப்படுத்திட்டு மத்தவங்களுக்காக வாழ்ந்தார். இப்பவும் நிறைய மிடில் க்ளாஸ் பசங்க குடும்பத்துக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்க்னனு தினமும் பார்த்துட்டு தான் இருக்கேன். எப்படி வேண்டுமானாலும் வாழலாம்னு நினைக்கிறவங்க மத்தியில இப்படியும் சிலர். அப்பறம் எனக்கு ஒரு மூனு ப்ரண்ட்ஸ் இருக்காங்க. பாரதி, மணிபாலன், மணிகண்டன் அப்படின்னு.. இவங்களை நினைச்சா எனக்கு இன்னைக்கும் ஆச்சர்யமா இருக்கும். ஒரு வேலை விசயமா போனப்போ தான் இவங்க எனக்குப் பழக்கம். இன்னைவரைக்கும் அவங்க லிமிட் க்ராஸ் பண்ணதே இல்லை. பக்கா ஜெனியூன். இதை இப்போ ஏன் சொல்லுறேன்னு புரியலை தானே.. ஏன்னா எல்லா பசங்களும் தப்பானவங்க இல்லைன்னு எனக்கும் தெரியும். எல்லாரும் இப்படி இருந்துட்டா இங்க எங்களுக்கான வேலையே இல்லை அதுதான் உண்மை. ஆனா அது நடைமுறையில் சாத்தியமாக்குறதுக்கு ரொம்ப போராட வேண்டியிருக்கு. இந்த மைண்ட் இருக்கே.. அது இப்படித்தான் எதையாவது புதுசு புதுசா தேடிட்டு ஓடிட்டே இருக்கும். ஏன்னா அதோட டிசைன் அப்படி.. பட் அதோட வேகத்தை நாம விவேகமாகத்தான் பயன்படுத்தனும். அதாவது நமக்கு எது நல்லதோ அதைப் பத்தி மட்டும் யோசிக்கப் பழகணும். அதுக்காக காமம் தப்புன்னு நான் சொல்ல வரலை. காமமும் கோபமும் இந்த உலகம் இருக்கும் வரைக்கும் இருந்தே தீரும். ஆனா அதைப் பத்தின அறிவு மொத வேண்டும்.. இப்போ செக்ஸ் டாய்ஸ் விற்பனை மொத இருந்ததை விட அதிகமாயிருக்கு. ஏன்???.. அடல்ட் கன்டென்ட், பார்ன் வீடியோஸ் பார்க்குறதோட எஃபெக்ட். இது எல்லாம் எங்க போய் முடியும் தெரியுமா? பல சமயம் கற்பனையில்.. சில சமயம் எக்ஸ்டீரிமா மாறி இந்தமாதிரி பண்ண வைக்குறதுல... இப்போலாம் சில படங்களைப் பார்த்தா இவனுங்களே இப்படி பண்ணுங்கன்னு ஐடியா குடுக்குற மாதிரியே இருக்கு. இதையெல்லாம் தடுக்க என்ன பண்ணனும்னா நீங்க மாறணும்.. கண்மூடித் தனமா வாழ்ந்து சாவுறதுக்காக யாரும் இங்க பொறந்து வரலை. இருக்குறது ஒரு வாழ்க்கை அதை அனுபவிச்சு வாழலாம். ஆனா அதுக்காக மத்தவங்களை சாகடிச்சு வாழக் கூடாது. காமத்தை உணர்றதுக்கு ஒரு செர்டைன் பீரியட் இருக்கு. ப்ராப்பர் ரிலேசன்சிப் இருக்கு. அதுக்குள்ள இப்படி நீங்க டைவர்ட் ஆகி... இதெல்லாம் எதுக்கு???.. மனுசன்ல இரண்டே ரகம் தான்.. தப்பைப் புரிஞ்சுக்கிட்டு இனி பண்ண மாட்டேன்னு யோசிக்கிறது ஒரு ரகம். நான் இப்படித்தான் இது தப்புன்னு தெரிஞ்சாலும் பண்ணுவேன்னு நினைக்குறது ஒரு ரகம். இந்த இடத்துல நீங்க முடிவு பண்ணுங்க நான் எப்படிப்பட்டவன்னு. அம்மாவோட பிறப்புறுப்புல இருந்து தான் வெளிய வர்றோம். அம்மாகிட்ட பால் குடிச்சு வளர்றோம். இந்த இரண்டு உறுப்புக்கும் இதுதான் மிகப்பெரிய பொறுப்பு. அதை விட்டு அதை போதை தர்ற ஒரு பொருளா பார்க்க வேண்டாம். என்னடா இவ அடிக்காம அட்வைஸ் பண்ணுறாளேன்னு நினைக்கிறீங்களா. விஜய் அடிச்சதே இன்னும் பலநாட்களுக்குத் தாங்கும்னு எனக்குத் தெரியும். அதான் வேண்டாம்னு என் பாணியில டீல் பண்ணாம பேசிட்டு இருக்கேன்‌. அதுக்குக் காரணம் இந்த இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்ஸ் தான். சோ இதுமாதிரி இனியொரு தடவை நடந்ததுன்னு வச்சுக்கோ ஜஸ்ட் கட் பண்ணிட்டு போய்ட்டே இருப்பேன். புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்..விஜய் பசங்களைப் போகச் சொல்லுங்க என்று சொல்ல இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.


"விஜய் இவங்களை என்ன பண்ணலாம்?" என்று அவள் சந்தேகமாய் கேட்க "மேம்" என்று அவர்கள் மூவரும் அதிர்ச்சியுடன் பேச சொல்லுங்க விஜய் "பப்ளிக் நியூசென்ஸ் கேஸ் பைல் பண்ணி உள்ள தூக்கிப் போட்டுடலாம் மேம்" என்றான் சாதாரணமாக.

"அப்படிங்கிற" என்று அவனைப் பார்த்துக் கேட்க "மேம் சாரி மேம் இனி இது மாதிரி பண்ண மாட்டோம்" என்றார்கள் அந்த மூவரும்.

"கொஞ்சமாவது பொறுப்பா இருங்க. இந்த மாதிரி வீடியோ பண்ணுறதால என்ன கிடைக்குது உங்களுக்கு. பணம் வருதா.. அதை வச்சு என்ன சாதிக்கலாம்னு இருக்கீங்க...சில விநோதமான ஜந்துக்கள் தான் இந்த இழவெடுத்த ரீல்ஸ், டிக்டாக் அப்படின்னு பண்ணிட்டு சுத்திட்டு இருக்குதுங்கன்னா நீங்களும் அதையே பண்ணனுமா.. இதுல ப்ராங் ஷோ வேற... இந்த மாதிரி ப்ராங் ஷோ பண்ணிட்டு நீங்க நிம்மதியா போய்டுறீங்க.. ஆனா எதிர்ல இருக்குறவங்க எவ்வளவு மனசு கஷ்டப்படுவாங்கன்னு மொத அந்த இடத்துல இருந்து யோசிச்சுப் பாருங்க. இதனாலயே சிலர் உதவணும்னு நினைச்சாக்கூட எங்க இருந்தாவது கேமரா வந்துடுமோன்னு நினைச்சு பயந்துட்டுப் போயிடுறாங்க... இதுல கொஞ்சம் வைரலான உடனே இன்டர்வியூ வேற.. அதுவும் இடுப்பை காட்டுனாத்தான்/கெட்ட வார்த்தை பேசினாத்தான் சினிமால சான்ஸ் கிடைக்கும்..அதுக்குத்தான் அப்படி ட்ரெஸ் பண்றேன்.. இல்லனா நீயா சோறு போடுவ? என்று பொருளாதாரத்தை மையப்படுத்தி இன்டர்வியூக்களில் இவங்களாம் தைரியமாய் கேட்கும்போது, என் கல்லூரி காலத்தில் அங்கே ஒரு வயதான தம்பதி (மனைவிக்கு கண் தெரியாது) டெலிபோன் பூத் மற்றும் ஸ்டேஷனரி பெட்டிக்கடை வைத்து சொந்தக்காலில் பிழைப்பு நடத்தியது தான் இப்பவும் எனக்கு ஞாபகம் வருது.. அந்த டெலிபோனை அழித்துவிட்டுத்தான் இந்த செல்போன் வந்தது. Unfortunately, அழிந்தது டெலிபோன் மட்டுமல்ல...ப்ச்.. விஜய் வாங்க போகலாம்..." என்று அவனை அழைக்க அவனோ "மேம் இவங்க" என்று தயங்க "ம்ம் அவங்க போய்க்குவாங்க" என்று முடித்துவிட்டு அவளது வண்டியில் ஏறிவிட்டு "சொன்னது ஞாபகமிருக்கட்டும் சேனல் க்ளோஸ் ஆகியிருக்கனும் இப்போ வீட்டுக்குப் போன உடனே.. இல்லைன்னா.. காலையில உள்ள இருப்பீங்க" என்றுவிட்டு சென்றுவிட்டாள்....
------------------------------------

அங்கோ தன் வீட்டில் அமர்ந்துக்கொண்டு சுஜாதாவை போலீஸ்ஸா பார்க்கும் போது ரொம்ப நல்லா இருக்கு இல்ல. ரொம்ப பொறுப்பா யோசிக்கிறா.. அது அவளுக்கு ரொம்பவே சூட் ஆகுது. கூடவே என்னை வேற பொறுப்பா இருக்கேன்னு சொல்லிட்டா என்று வாசு கதையின் முதல் அத்தியாயத்தினை முடித்துவிட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த இரவின் அமைதியினைக் கிழித்துவிட்டு அவனுக்கு சுஜாதாவிடம் இருந்து செய்தி வந்தது...


"VNA இதைப் பார்ப்பீங்கன்னு தெரியும். பட் திரும்பி மெஸேஜ் அனுப்பலாம் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் எழுத்துக்கள் உங்க கண்வழியே உள்ள போற அந்த சந்தோசமே போதும். நான் இப்படித்தான் லூசு மாதிரி பேசிட்டே இருப்பேன் VNA. ஆனா நீங்க பாவம்‌. தலை வலிக்கும் தானே. ஏற்கனவே நாளைக்கு போஸ்ட் பண்ணப் போற எபிசோட் டைப் பண்ணி டயர்டா இருப்பீங்க. சோ நான் உங்களை தொந்தரவு பண்ண விரும்பலை அப்படின்னு நினைச்சாலும் தொந்தரவாத்தான் இருக்கேன்ல.. இப்படி என்னை பித்து பிடிக்க வச்சுட்டு இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஓரமாய் ஒதுங்கியிருக்கும் உனக்காய் சில வரிகள்....

அவ்வியம்
அதிகமாகிறது
அவளைப் பற்றி நீ எழுதும் நேரமெல்லாம்...!!

யாரவள்
எனக்கு போட்டியாய்...
சுஜாதாவென நீ உருகும்
நேரமெல்லாம்
உயிர் வலிக்கிறது...!!

பெயர் ஒன்றாய்
பிரியம் வேறாயிருக்கும்
இந்நிலை மாறும்
நாள் எந்நாளோ...??

அவளிடத்தை
ஆக்ரமிப்பு செய்ய வேண்டி
ஆசை அதிகரிக்க
இருந்தும் விலகி நிற்கிறேன்
உன் ஒற்றை வார்த்தைக்காய்...

அவள் பொறுப்பாய் பேச
பொறுமையாய் கேட்டு - நீயும் பொறுப்பாய் மாறியதாய் பேசினாய்..!!

நான் காதலாய்
உன்னிடம் பேசுகிறேன் - நீயும்
காதாலதைக்கேட்டு
காதலிப்பதாய்
ஒத்துக்கொண்டால் தான் என்ன???

உனக்காக நானாய்
உனக்காகவே நானாய்
உன்னில் நானாய்
உன்னருகிலே நானாய்
உன்நிழலிலே சேயாய்...
உன்னோடு வாழ்ந்து...
உன்னோடிருக்கவே ஜீவனனைத்தும் ஏங்குகிறது...
இது புரியாமல்
பெரியதாய்
பொறுப்பு பொறுப்பென
அவளிடம் பேசிக் கொண்டு திரிகிறாய்...

அவள் நிஜமல்ல
இவளே நிஜம்..
நிஜமதை உணராது
நிழலிலே நீ வாழ்கிறாய்
உன் நிழலாய் தொடர்கிறேன் நான்...!!



இந்த முறையும் அவனுக்கு அந்த செய்தி அதிர்ச்சியினை அளித்தது. அது இந்த கிறுக்கலை நினைத்து அல்ல.. இந்த கிறுக்கலில் ஒளிந்திருக்கும் அந்த விசயத்தினைப் பற்றி...எப்படி இது பாசிபிள்... நிசமாவே அவ என்னைப் பாலோ பண்ணுறாளோ... இன்னைக்கும் நான் டைப் பண்ணதுல இருக்க விசயம் இவளோட மெஸேஜோட கனெக்ட் ஆகுதே.. என்னும் போதே அவன் கண்கள் சிஸ்டத்தின் திரையினை அணுகியது..


நீ பொறுப்புத்தான்... என்று வாசுவை சுஜாதா சொல்லிய அந்த சீன் அவன் கண்களில் பட்டதும் அவன் செவிக்குள் 'VNA' என்று அவள் அழைப்பது போல் அமானூஷ்யமாய் ஓர் ஒலி கேட்டது.

அது அமானுஷ்யமா இல்லை காக்கிச் சட்டையின் திருவிளையாடலா????