• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - 5

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் - 5

வண்டியை குவார்ட்டஸின் முன் நிறுத்திவிட்டு அவள் உள்ளே நுழைந்தாள். இப்பவும் அந்த பெண்களின் மீதும் அந்த பையன்களின் மீதும் மிகுந்த வருத்தம் இருந்தது அவளுக்கு.

எதை நோக்கி இவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இதே நிலை நீடித்தால் அவ்வளவுதான்... இதற்கே அடிமையாகி அவர்களது நிலைமை மிகவும் மோசமாகி விடுமே...!! என்ன செய்யலாம்... ஏதாவது செய்தே ஆக வேண்டும்.. காலையில முதல் வேலையா எஸ்பி சார்கிட்ட இதைப் பத்தி கண்டிப்பா பேசியே ஆகணும்... அவர் ஏதாவது நமக்கு guidance குடுப்பாரு என்றவள் தொலைந்து போயிருந்த தூக்கத்தினை வரவைப்பதற்காக அவளது மொபைலை எடுத்தாள்.

வாசுதேவ நாராயண அநிருத்தின் பேஜை ஓபன் பண்ணியவள் அந்த கடைசி அத்தியாயத்தினை மீண்டும் வாசிக்கத் தொடங்கினாள்..

எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு நாளும் புதிய புதிய உணர்வை தரும் அவனெழுத்துக்களை மீண்டும் மீண்டும் ரசிக்கத் தொடங்கினாள்.

சற்றுமுன் நடந்த கடுப்பான விஷயங்கள் எல்லாம் அவளிடமிருந்து விடுபட்டு விலகி ஓடிப் போனது. அவனெழுத்தில் இருந்த இதம் இப்போது அவளோடு ஒட்டிக் கொண்டது. அதை அனுபவித்தவள் அப்படியே மெய்சிலிர்த்துப் போய்விட்டாள்...

-----------------------------

டேய் வாசு என்னவோ தப்பா இருக்கு.. அது என்னன்னு நாம கண்டுபிடிக்கணும். இந்தப் பொண்ணுக்கு எப்படி இதெல்லாம் தெரியுது.. உண்மையிலேயே அது பொண்ணுதானா.. இல்ல ஏதாவது fake id யா இருக்குமா.. என்றெல்லாம் அவன் மனம் யோசிக்க "VNA எதைப்பத்தியும் நினைக்காம போய் தூங்குங்க" என்று சொல்லி மீண்டும் ஒரு செய்தி அவளிடத்தில் இருந்து வந்தது.

அவளுக்கு பதில் அனுப்பி கேட்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்குச் சுத்தமாய் இல்லை. மாறாக வெறுமனே அந்த அறையில் நடந்துக் கொண்டிருந்தான்.

கண்டிப்பா அவ நம்மளை பாலோ பண்ணுறா... இருக்கட்டும்... என்னதான் முயற்சி பண்ணாலும் அவளால என்னை நெருங்கவே முடியாது.. இந்த வாசுவைப் பத்தி அவளுக்கு என்ன தெரியுமாம்...? என் மனசுக்குள்ள போறதுக்கு என்னோட அனுமதி வேண்டும்.. அது அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. இந்த வாசுவுக்குள்ள இருக்குற இதயம் இரும்பால ஆனாது. இந்த சுஜாதாவே என்னோட தேவதை என்னோட கற்பனை அப்படிங்கிறதால தான் இரும்பை இளக்கி உள்ள போயிருருக்கா... இவளைத் தவிர வேற யாருக்கும் உள்ள இடமில்லை. மீறி அந்த இறுக்கத்துக்குள் நுழைய நினைத்தாலே வேதனைதான்.


இவ்வாறு விநோதமானவனாய் வித்தியாசமானவனாய் அவனிருக்க அவனையும் ஒருத்தி நினைத்துக் கொண்டிருக்கிறாளே அவளுக்கு சுத்தமாய் அறிவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஷ்ஷ்... சத்தமாய் சொல்ல வேண்டாம்.. அந்த சுஜாதா அவனை நினைப்பதற்கு அறிவு தடையாய் இருக்கிறதென்றால் அந்த அறிவே வேண்டாமென நம்மோடு சண்டைக்கு வந்தாலும் வந்துவிடுவாள்...


அங்கோ சுஜாதாவோ அவனிடம் இருந்து மெஸேஜ் வரவில்லை என்றாலும் கூட அவன் பார்த்துவிட்டான் என்று புரிந்ததில் சற்று நிம்மதியாகவே உணர்ந்தாள்.


தூரமாய் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் அந்த இரவினை அழகாய் காண்பித்துக் கொண்டிருக்க அந்த குளுமையின் ஸ்பரிசத்தில் அவனைத்தான் அவளின் உடலும் மனமும் தேடிக் கொண்டிருந்தது.

அவனே அவளை அணைத்தது போல் எண்ணிக் கொண்டு அந்த கற்பனையில் அவள் மிதக்க தொடங்கியிருந்தாள். அவள் கற்பனைக்கு எல்லை என்பதே கிடையாது.

அது எந்தளவுக்கு என்பதை சொல்லத் தேவையே இல்லை. ஏனென்றால் சில சமயம் அவள் கற்பனை வரைமுறையற்றது.

அந்தளவுக்கு அவள் அவன் மேல் பையித்தியமாகி சுற்றிக் கொண்டிருந்தாள். அந்தப் பையித்தினால் அவள் சிலசமயம் கற்பனையில் அவனோடு வாழ்வதாய் எண்ணியே மகிழ்ந்திருக்கிறாள்.

அவள் புத்தியும் மனமும் இப்போது காதல் என்பதைத் தாண்டி அடுத்தக் கட்டத்திற்கு வந்து நின்றிருந்தது. அந்த உணர்வின் கணம் தாளாமல் தான் அவ்வப்போது அவள் இப்படி கற்பனையில் சுகத்தினைத் தேடிக் கொண்டிருந்தாள்.

வீசிக் கொண்டிருந்த அந்த குளிர் காற்று அவளது காதோர முடிகளை கன்னம் நோக்கி இழுத்து வந்து விளையாடிக் கொண்டிருக்க அதில் அவள் அவளுக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

அவனுக்கு எழுத்தென்றால் உயிர்...
இவளுக்கு அவன் எழுதுவது எல்லாமே உயிர்...
கூடுதலாய் அவனும் உயிராகிப் போய்விட்டான்.

இந்த அளவுக்கு அவள் மாறுவாள் என சில நாட்களுக்கு முன் சொல்லியிருந்தால் கூட அவள் சத்தியமாய் நம்பியிருக்கவே மாட்டாள். ஆனால் இப்போது மாறிவிட்டாள். முற்றிலும் மாறிவிட்டாள். அவளது வீடு முழுக்க அவனது எழுத்துக்கள் தான் இறைந்து கிடக்கும்.

நடந்துக் கொண்டே இருந்தவள் திடீரென வெறிப்பிடித்தவளாய் கீழே ஓடினாள்..

இறைந்துகிடக்கும் எழுத்துக்களுக்குள் அவளை(னை)யே மீண்டும் மீண்டும் தேடினாள்.. ஒவ்வொரு புத்தகமாய் அவள் எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்ள அவன் அங்கே இருப்பதாய் பிரம்மை. சட்டென்று கண்ணீர் கூட வந்துவிட்டது அவளுக்கு... அந்த கண்ணீர் புத்தகத்தின் புனிதத்தினை அதிகப்படுத்தியது என்றே தான் சொல்ல வேண்டும்...

அவனெழுத்து அவளுக்குத் தெய்வீகமென்றால் அந்த புனிதத்தை உணர்ந்ததும் சிந்துகின்ற கண்ணீர் அதை விட தெய்வீகம் தான். ஆயினும் அதைப் புரிந்துக் கொள்ள வேண்டியவன் வெகு தூரமாய் விலகி இருக்கானே...!!!!


புத்தகத்தினைப் பிரித்தவளின் கண்களில்.....

பால்நிலா பாதியாயிருக்க
மீதி பாதி
பாவையாய் உருமாறியிருக்க,
நிலவினை விடுத்து...
கொள்ளை அழகாயிருப்பவளை
கொள்ளையடிக்க ஆசைகொண்டே
கொஞ்சமாய் பார்த்தேன்..

கொஞ்சமென்ன...
கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சிப் பாரென
காதல் பேசும் விழியில்
காதலைத் தாண்டிய உணர்வே வழிய
கச்சிதமாய் அதைப் படித்தேன்...
அவளையும் படிக்க வேண்டுமே...!
பக்கத்தில் செல்ல
சிவந்த முகமது சொன்னது
தங்கமாய் என் அங்கமது
உன் வெம்மையிலே உருகியோட
அசையாது பார்க்கும் பார்வையைக்
கொஞ்சம் அந்தப்பக்கம் திருப்பென...!!!


அதற்கு மேல் இருப்பதைப் படிக்க சுஜாதா பிரியப் படவில்லை. ஆனால் அந்த இடத்தில் தானிருக்க வேண்டுமென பிரியப்பட்டாள்...

வேகமாய் அந்த புத்தகத்தை தள்ளி வைத்துவிட்டு வேறு ஒன்றை அள்ளிக் கொண்டாள்...

எழுதும் கதையிலெல்லாம்
அவள் பெயரே இருக்க
பொதுவாய் என்னிடம் கேட்கும் கேள்வி
யாரிந்த சுஜாதா???...
ஆம்...யாரவள்???

அவர்களைப் போலவே எனக்குள் கேட்டுப் பார்க்கக் கிடைத்த
பதில் இதுதான்...

அவள் தேவதை...!
வாசுவின் தேவதை..‌.!
வாசுவுக்கே உரித்தான தேவதை...!
வாசுவுக்காய் வாழும் தேவதை...!!


அந்த வரிகள் அவன் அவளுக்காய், அவளை நினைத்து எழுதியிருக்கலாம். ஆனால் சுஜாதா அவளுக்காகவே எழுதியதாய் நினைத்துக் கொண்டாள். அந்த கற்பனை சில சமயம் வலித்தாலும் அது தரும் ஆறுதல் அளவில்லாதது..

அவளையே ஏமாற்றி ஏமாற்றி இந்த மாதிரி மனநிலையில் வாழ்வது அவளது உடல்நிலைக்கு நல்லதல்ல என்று அவளிடம் யார் தான் சொல்லிப் புரிய வைப்பதோ...!!!


அடுத்தப் பக்கம் அதுவாகவே திறந்துக் கொள்ள அதில்,

அவள் நிழல் தான்...
ஆயினும் அவளுடனே நடப்பேன்
அவள் கற்பனை தான்...
புரிந்தாலும் காதலிப்பேன்...
காரணம் அவள் என்னவள்...!!!
என்றிருந்தது.

"ஆமா ஆமா.. காதலிப்பாரு சாரு.. இங்க நிஜத்துலயே நாம உருகிட்டு இருக்கோம். இவர் என்னடான்னா கதையில உருகி உருகி அந்த புள்ளைய காதலிச்சு கடைசியில அழுக வச்சுட்டு திரியுறாரு.. ஆக்சுவலி இந்த வாசுவுக்கு ஏதோ ப்ராப்ளம் போல.. இருக்கட்டும்.. என் கையில மாட்டுவான்ல அப்போ இருக்கு...என்று நினைத்துக் கொண்டே புத்தகத்திற்கு முத்தமிட்டு அதை இன்னும் இறுக்கமாய் கட்டிக் கொண்டாள் சுஜாதா..


ஏனோ அவளுக்கு அவன் சுஜாதா என்று சொன்னாலே பொறாமை வந்துவிடும். தனக்குச் சொந்தமானதாய் நினைத்திருக்கும் ஒரு பொருளின் மீது வேறு யார் பார்வையும் படக் கூடாது என்று தானே நம் மனம் நினைக்கும். அதற்கு சுஜாதாவும் விதிவிலக்கு அல்ல.. VNA மீது தனக்கு மட்டுமே அதீத உரிமை உண்டு என நினைப்பவள் அவள். இந்த பொறைமை தவறு என அவளுக்கு புத்தி எடுத்துச் சொன்னாலும் அவள் மனம் அதைக் கேட்க மறுத்தது.

எப்படிக் கேட்கும். அங்கே எவருக்கும் அடங்க மறுக்கும் வாசுதேவனல்லவா குடி கொண்டிருக்கிறான்.

அவன் இன்னொரு பெண்ணை... அது கற்பனை என்றாலும் கூட காதலிப்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. முதலில் அந்த கற்பனை உருவத்திடம் எரிந்து எரிந்து விழுந்து அவரை விட்டுப் போ என்று கத்துவாள்.


சில சமயம் கோபம் கரையை உடைக்கையில் எதையாவது வைத்து அவள் கையை கீறியும் கொள்வாள்.. இரத்தம் குபுக்கென்று வெளியேறும் போது அந்த வெறி அவளை விட்டுப் போய்விடும் என அவளே நினைத்துக் கொள்வாள்.


தன்னையே நினைத்துக் கொண்டிருப்பவளைப் பற்றிய எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் வெகுநேரம் உறக்கம் வர மறுத்ததால் தன் மேஜையின் மீதிருக்கும் விளக்கினை மட்டும் எரிய விட்டு அங்கே சிதறிக் கிடந்த நோட்டிலிருந்து ஒன்றை எடுத்து எழுத ஆரம்பித்தான் வாசு. எழுத ஆரம்பித்தால் இனி உறங்கவும் மாட்டான் என்பது வேறு விசயம்...


அப்போது அமைதியினை கிழித்துக் கொண்டு "வாசு போய்த் தூங்கு" என்று அவன் சுஜாதாவின் குரல் கேட்க "தூக்கம் வரலை.." என்றான் அவன் பாவமாய்.

"அதெல்லாம் வரும் போய்த்தூங்கு... நாளைக்கு காலையில சீக்கிரமா நீ எபி போஸ்ட் பண்ணனும் தானே.. போ.." என்றாள்.

"நீ...???"

"நான்தான் உன்னோடவே இருக்கேனே" என்றதும் "சுஜாதா" என்று இவன் குரல் நலிந்து ஒலிக்க "வாசு சுஜாதா சொன்னா கேப்பானா இல்லையா?" என்றது அந்த பெண்குரல்.

"சுஜாதா சொன்னா மட்டும்தான் கேட்பான்" அழுத்தமாய் வெளிவந்ததது அவனிடமிருந்து பதில்.

"அப்போ போய் தூங்குவியாம்"

"ம்ம்...உன் மடியில படுத்துக்கவா" என்று அவன் ஏக்கமாய் கேட்க "படுத்துக்கோ" என்றாள் அவள்.


அந்த டேபிளையே அவளின் மடியாய் எண்ணிக் கொண்டு அவன் படுத்துவிட்டான். சுஜாதா அவன் முடியினை வருடுவது போலிருக்க அந்த உணர்வை அனுபவித்தபடி உண்மையிலே உறங்கிப் போயிருந்தான் அவன். (இது மட்டும் உண்மையான சுஜாதாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் VNA......)


அவன் இருந்த அந்த காட்டுப்பகுதி ஊரை விட்டு ஒதுக்குப் புறமாயிருந்தது. எப்போதும் தனியாய் இருப்பவன் இப்போதும் அந்த மாதிரியான இடத்தினைத் தேடியே இந்த காட்டுக்குள் வந்திருந்தான். உறக்கத்தில் அமிழ்ந்து போயிருந்த அவனருகில் இப்போது உண்மையிலே ஓர் உருவம் வந்து நின்றது..


காற்றிலாடும் முடிகள் அவனழகினை வெகுவாய் ஏற்றியிருக்க அந்த காட்சியினையே கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம்...

மெதுவாய் கரத்தினை நீட்டி அவன் கழுத்துப் பகுதியினையே ஆசையாய் வருடிய அந்த உருவம் அவன் அசைவில் சட்டென்று கரத்தினை எடுத்துக் கொண்டது...


இப்போது அந்த உருவத்தின் பார்வை அவனருகே இருந்த அந்த நோட்டின் மீது தாவ அதில்

எண்ணத்தில்
உனையிருத்தி
என்னெழுத்தால்
உனைத்தொட்டெழுத
எழுதும் எழுத்தெல்லாம்- வெறும் 'பென்'னெழுத்தல்ல- வேறு
பெண்ணெழுத்தல்ல- அது
உன்னெழுத்து
என்றாக்கி ஏனடியென்னை
இம்சிக்கிறாய்?...
சுஜாதா ❤️ வாசு..

என்றெழுதியிருந்தது.

அதைக் கண்டதும் அவ்வுருவத்தின் கண்கள் பயங்கரமாக சிவக்கத் தொடங்கியது. சற்றுமுன் கழுத்தை வருடிய கரத்தாலே கழுத்தை அழுத்திப் பிடித்தால் தான் என்ன எனத் தோன்றினாலும் இழுத்துப் பிடித்துப் பொறுமையாய் அந்த உருவம் அதன் வேலையை ஆரம்பித்திருந்தது.

வந்து நின்றது யார்?... வாசுவின் நிலை இனி என்ன??