• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 1

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
766
561
93
Chennai
அத்தியாயம் 1

இரவு ஏழு மணி!


"அப்பவே சொன்னேனே கேட்டியா? அவங்க முகத்துல எப்படி முழிக்குறது? இப்படி அசிங்கமாகும்னு தான் படிச்சு படிச்சு சொன்னேன் வேண்டாம்னு.. கல்யாணம் நடந்தா தான் ஆச்சுன்னு ஒத்த காலுல நின்ன.. இப்ப பாரு!" அறைக்குள் தனது மனைவி கலாவிடம் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் ஜெகதீசன்.


"ஏங்க நாம நினச்ச எதாவது நடந்துச்சா? அவனும் எல்லாத்தையும் உடனே எப்படி ஏத்துக்குவான். அவனுக்கும் நேரம் வேணும்ல. வருவான். எங்கே போயிட போறான்?" கலா மகனை விட்டுக் கொடுக்காமல் பேச,


இன்னும் மகனை தாங்கும் மனைவியை எண்ணி மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டார் ஜெகதீசன்.


"நீ மகன் பாசத்துல ரொம்ப தப்பு பண்ற கலா. அந்த பொண்ணு பாவம். அவ அம்மா அப்பா எல்லாம் எவ்வளவு நேரமா இப்படியே உட்கார்ந்து இருப்பாங்க? அவனுக்கு போன் பண்ண போறியா இல்லையா?" குரலை உயர்த்தி அவர் கேட்க,


"ஏன் நீங்க பண்ணினா என்னவாம்?" கலாவும் அவர் பேச்சை கேட்பதாய் இல்லை.


"உன் மகன் உன்னை மாதிரி தானடி இருப்பான். நான் போன் பண்ணினா எடுத்துடுவானா என்ன? அம்மாவும் மகனும் ரொம்ப ஓவரா தான் போறிங்க. அது உங்களோட போச்சுன்னா பரவாயில்லை. இப்ப ஒரு பொண்ணையும் உள்ளே இழுத்து விட்ருக்கீங்க" ஜெகதீசனுக்கு உண்மையாய் அவ்வளவு பயம்.


எந்த தைரியத்தில் இப்படி ஒரு முடிவை தன் மனைவி எடுத்தாள் என அவருக்கு புரியவே இல்லை. ஏற்கனவே முடியாது என்று இருந்தவனை இன்னுமே வருத்தி... நினைக்கவே கஷ்டமாய் இருந்தது.


கலாவிற்கும் கவலை இல்லாமல் இல்லை. மகனை நினைத்து உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் தன் கணவனிடம் கூட அதை காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அப்படி மட்டும் காட்டிவிட்டால் பின் இவரை கையில் பிடிக்க முடியாதே!


"இப்ப அந்த பொண்ணு வீட்டுக்கு என்ன பதில் சொல்ல போற?" இவளிடம் பேசி பயனில்லை என தெரிந்து கொண்டார் போலும்.


"ப்ச்! அதை நான் பாத்துக்குறேன் வாங்க" என்ற கலா முன்னே செல்ல, கொஞ்சம் அதிக வருத்தத்துடனே உடன் சென்றார் கணவனானவர்.


"அண்ணி!" என்று அங்கிருந்த சுகுணாவின் கைகளை பற்றினார் கலா. அருகே சுகுணாவின் கணவர் சண்முகமும் அமர்ந்திருந்தார்.


"கலா! எதுவுமே எதிர்பார்க்காதது தான். உன் மேலே இருக்கிற நம்பிக்கை, மரியாதையில தான் இந்த கல்யாணத்துக்கு நாங்க சம்மதம் சொன்னோம். ஆனால் தம்பிக்கு..." என்று நிறுத்தியவர் திரும்பி தன் மகளை பார்த்தார்.


"அண்ணி எனக்கு புரியுது உங்க கவலை. திவிய நாங்க நல்லா பார்த்துப்போம். இதையும் நம்புங்க. அவன் கொஞ்சம் குழப்பத்தில் இருப்பான். எல்லாம் சீக்கிரமே சரி ஆகிடும். நீங்க வாங்க சாப்பிடலாம்" என அழைக்க, சுகுணா எழுந்து கொள்வதாய் இல்லை.


"இல்லை கலா! இருக்கட்டும். நாங்க கிளம்புறோம்" என்றவர் திரும்பி மீண்டும் மகளை பார்த்தார். அப்போதும் அசையாமல் அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.


"திவி!" சண்முகம் மகளை அழைக்க, சாதாரணமாகவே அவர் அருகில் வந்தாள்.


"சொல்லுங்க பா" திவி.


"ஒன்னும் இல்லை டா. நாங்க கிளம்புறோம். நாளன்னைக்கு விருந்துக்கு கூப்பிட வர்றோம். நீ பார்த்து இருந்துக்கோ சரியா?" தந்தை சொல்ல உடனே கேட்டுக் கொண்டாள்.


"சரிப்பா! பத்திரமா போய்ட்டு வாங்க. நான் பார்த்துக்குறேன்" ஒரு தாய்க்கு இது தானே வேண்டும்!.


ஒரு பெண்ணை கட்டிக் கொடுத்தபின் அந்த வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து தன் மகள் செல்ல வேண்டும் என்பது தான் பெற்றோரின் எண்ணமே!


இதோ திவியும் தைரியமான வார்த்தைகளை சொல்லிவிட கொஞ்சம் மனக்கலக்கத்தை விட்டு அவள் தலையை வருடிவிட்டு சென்றார் சுகுணா.


அதுவரையுமே அமைதியாய் தனியாய் நின்றிருந்தான் அவன் புகழ். திவ்யாவின் அண்ணன். இந்த திருமணத்தை நிறுத்த போராடி தோற்று இன்னும் அன்னை மேல் கோபத்தில் தான் நிற்கிறான்.


இன்று காலையில் தான் கலா ஜெகதீசன் புதல்வன் கார்த்திகேயனிற்கும் சுகுணா சண்முகம் புதல்வி திவ்யா என்கின்ற திவிக்கும் திருமணம் முடிந்துள்ளது.


காலையில் நடந்ததாவது...


கார்த்திகேயன் - வெண்ணிலா என்ற பெயர்பலகை தாங்கிய அந்த மண்டபத்தில் காலை 10 மணிக்கு முஹூர்த்தம் குறிக்கப்பட்டிருக்க, 9 மணிக்கு சிறிதாய் ஆரம்பித்த சலசலப்பு ஐந்தே நிமிடத்தில் அதிகமாகிவிட கார்த்திகேயனான மாப்பிள்ளையோடு அவன் பின்னே நின்ற அவனின் பெற்றோர் கலா, ஜெகதீசனும் அந்த அறையை நோக்கி சென்றனர். பெண்ணை பற்றி தான் அந்த சலசலப்பு.


கைகளை பிசைந்து கொண்டு நிற்கின்றார் வெண்ணிலாவின் தந்தை மணமகள் அறையில். அவர் கைகளில் இரண்டு காகிதங்கள்.


ஒவ்வொருவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகளே அனைத்தையும் சொல்லிவிட முகம் கருத்து அவ்வளவு அவமானமாய் உணர்ந்தான் கார்த்திகேயன்.


கலா தான் பதறி போனார். ஏற்கனவே காதல் தோல்வியில் திருமணமே வேண்டாம் என்றிருந்த மகனை ஏறக்குறைய மிரட்டி தான் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தார்.


ஜெகதீசன் பெண்ணின் தந்தையிடம் கேட்க, எதுவுமே சொல்லாமல் ஒரு கடிதத்தை அவரிடம் நீட்டினார்.


"கார்த்திகேயன் அவர்களுக்கு, என் பெற்றோர் என்னை திருமணத்திற்கு மிரட்டி வற்புறுத்தி தான் சம்மதிக்க வைத்தனர். நான் ஒருவரை காதலிக்கிறேன். அவருடன் செல்கிறேன். உங்களை இவ்வளவு தூரம் வந்து நிறுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் மன்னிக்கவும். இப்படிக்கு வெண்ணிலா"


ஒரு புன்னகை தான் வந்தது கார்த்திகேயனுக்கு. 'அவளாவது காதலித்தவனுடன் சந்தோசமாய் இருக்கட்டுமே!' என்று நினைத்தாலும் அங்கிருந்த பார்வைகளை தான் அவனால் இந்த வலியை அவமானத்தை ஏற்று கொள்ள முடியவில்லை.


அவன் முகத்தை பார்க்கும் சக்தி கொஞ்சமும் இல்லை அன்னை கலாவிற்கு. ஆசை ஆசையாய் பெண்ணை பார்த்து தேர்ந்தெடுத்து மகன் மனதை மாற்ற முடியாவிட்டாலும் மருமகள் மாற்றி விடுவாள் என நம்பி திருமணம் வரை அழைத்து வந்து மகனை இப்படி தலைகுனிந்து நிற்க வைத்து விட்டோமே என்ற கவலை.


அப்போதே மண்டபத்தை விட்டு வெளியேற துடித்தவனை கலா கண்ணீரால் மிரட்டி ஜெகதீசனின் தூரத்து சொந்தமான அக்கா சுகுணாவின் மகள் திவ்யாவை மணமகளாய் மாற்றிவிட்டார்.


இந்த மண்டபத்தில் இருந்து மகன் திருமணம் ஆகாமல் வெளியேறினால் அடுத்து அவனை சம்மதிக்க வைக்கவே முடியாது என்பது அவரின் திடமான எண்ணம்.


சுகுணாவிடம் கலா கண்ணீரோடு கேட்க, கார்த்திகேயனை மறுக்க அவருக்கும் பெரிதாய் காரணம் ஒன்றும் இல்லை. மகளிடம் கேட்கவும் அவளும் உங்கள் விருப்பம் என்றுவிட கலாவிற்கு திவ்யாவை அதிகமாய் பிடித்துப் போனது.


'புகழ் மட்டும் தன் தங்கைக்கு இப்படி ஒரு இடமா' என்ற எண்ணத்தில் முடியவே முடியாது என்று நின்றவனை சண்முகம் தான் அடக்கினார்.


ஜெகதீசன் கூட யோசித்து செய்யலாம் என எவ்வளவு கூறியும் ஒருவழியாய் திருமணத்தை நடத்தி முடித்தார் கலா.


பன்னிரண்டு மணிக்கு மண்டபத்தில் இருந்து வீட்டிற்க்கு வந்த உடன் காரை எடுத்து கொண்டு கிளம்பிய மகன் இதோ மணி இரவு ஏழு முப்பது. இன்னும் வந்திருக்கவில்லை.


திருமணம் நடக்க கலா எடுத்த முயற்சி மட்டுமே காரணம் என்றாலும் அம்மாவின் செல்ல பிள்ளை தான் கார்த்திகேயன் என்றாலும் அவனுக்கும் அம்மா தான் எல்லாம்.


இப்போதும் அன்னை மேல் அவன் கோபம் இருக்காது. தந்தை அழைத்தால் எடுக்க மாட்டானே தவிர தாய் அழைத்தால் உடனே எடுப்பான். இதை தெரிந்து தான் ஜெகதீசன் கலாவை மகனுக்கு அழைக்க கூறினார்.


மகன் உள்ளத்தை அறிந்தவர் கலா. அவனே வருவான். அவனே அனைத்தையும் ஏற்று கொள்வான். அவன் யாருக்கும் துன்பம் தர மாட்டான். மகனை பெற்ற தாய் அவனை நன்றாய் புரிந்து வைத்து இப்படி நினைத்துக் கொண்டவர் அவனுக்கு அழைக்கவே இல்லை.


புகழ் தங்கை அருகில் வந்தவன் அவள் தலையை பாசமாய் வருடிவிட்டு கிளம்பப் பார்க்க அவன் அருகில் வந்தார் கலா.


"என் பையன் திவிய நல்லா பார்த்துக்குவான் பா. நீ எதுவும் கவலைப்படாதே" என்று சொல்ல, பெரியவர்களிடம் தன் கோபத்தை காட்ட விரும்பவில்லை அவன்.


சிறிதாய் சிரித்து புன்னகையோடு விடைபெற்று கிளம்பிவிட்டான்.


அதன்பின் சுகுணா சண்முகம் புகழ் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட இரவு ஒன்பது மணி வரையுமே அவன் வந்தபாடில்லை.


"அவன் வந்துடுவான் திவி. நீ உன் ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு" என்று கலா சொல்ல, ஏதோ கேட்க வந்தவள் தயங்கி தயங்கியே நின்றாள்.


அதை கலா கவனிக்கவில்லை. திவிக்கு எப்படி கேட்பது என்று தெரியவில்லை. மகனை இன்னும் காணவில்லை இவள் இப்படி கேட்கிறாளே என அத்தை நினைத்து விடுவாரோ என நினைத்தவள் எதுவும் கேட்காமலே மேலே சென்றாள்.


அவள் சென்ற ஐந்து நிமிடத்தில் தனது காரில் இருந்து வந்து இறங்கினான் கார்த்திகேயன்.


"ஏன்டா இப்படி பண்ற? உங்க அப்பா என்னை வெறுத்தெடுத்துட்டார்" கலா கூற,


"ஆபீஸ்ல தான் இருந்தேன் மா. சார் உடனே வர சொன்னார். அங்கே ஒரு சின்ன அச்சிடேன்ட். அதான் லேட்" சாதாரண பதிலில் வாயை பிளந்தார் ஜெகதீசன்.


மனைவி கேட்ட கேள்வியை இவர் கேட்டிருந்தால் கொஞ்சமும் மதிக்காமல் அறைக்கு சென்றிருப்பான் என நினைத்தவர் திருமணம் பிடிக்காமல் எங்கோ சென்றிருப்பான் என்று நினைத்தால் ஆபீஸ் சென்றேன் என்பவனை இன்னுமே அவருக்கு புரியவில்லை.


"சரிம்மா! நீங்க தூங்குங்க. நான் வெளிலயே சாப்பிட்டுட்டேன்" என்றவன் படியேற, அவனை அழைக்க நினைத்த கலா பின் மனதை மாற்றிக் கொண்டார்.


அழைத்து என்ன சொல்ல? உன் மனைவி மேலே உனக்காக காத்திருக்கின்றாள் என்றா?


சரி தான்! அவனே போய் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார். திருமணம் ஆகி 30 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் தன் மனைவியை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி நின்றார் ஜெகதீசன்.


தன் அறை வாசல்வரை வந்தவன் உள்ளே இருந்தவளை பார்த்து ஒரு நொடி நின்றவன் பின் தானாய் உள்ளே சென்றான்.


அவனை பார்த்தவளும் எழுந்து நிற்க, "இன்னும் தூங்கலையா நீ?" என்று கேட்க, பதில் சொல்ல அவள் வாயை திறக்கவும் பாத்ரூம் உள்ளே நுழைந்து பூட்டிக் கொண்டான்.


இவளும் தலையில் கைவைத்து மீண்டும் பழையபடி அமர்ந்து கொண்டாள்.


வெளியே வந்தவன் மீண்டும் அவளை பார்த்து "என்னாச்சு? எதாவது பேசணுமா? தூங்கி இருக்கலாமே! ஏன் வெயிட் பண்ற?" ஒரே கேள்வியை சுற்றி வளைத்து நான்கு கேள்வியாய் மீண்டும் கேட்டான்.


கேட்டவன் அத்தோடு நில்லாமல் "சரி அந்த பக்கம் படுத்துக்கோ" என்று இந்த பக்கமாய் படுத்து விளக்கை அணைக்க, இதற்குமேல் தாங்காது என்று அவன்முன் வந்துவிட்டாள் திவ்யா.


காதல் வளரும்...
 

கௌசல்யா முத்துவேல்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
11
5
3
Thiruvarur
திடீர் பொண்ணு!!!.. திடீர் கல்யாணம்!!!.. இன்ட்ரஸ்டிங்!!!.. அவளை கேள்வி கேக்குறியே பதிலை சொல்ல விடுடா!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்💖
 

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
766
561
93
Chennai
திடீர் பொண்ணு!!!.. திடீர் கல்யாணம்!!!.. இன்ட்ரஸ்டிங்!!!.. அவளை கேள்வி கேக்குறியே பதிலை சொல்ல விடுடா!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்💖
Thank u sis