• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை final

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 23

"வா'னு சொல்லனுமா சகிம்மா?" சின்ன சிரிப்போடு அவன் கேட்க, அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் உள் நுழைந்தாள் அவள்.

இதுவரை நின்றதையே யாரும் பார்த்திருப்பார்களோ என்ற பயத்தோடு திரும்பிப் பார்த்தவாறே அவள் உள்ளே செல்ல, சகியின் எண்ணம் தெளிவாய் புரிந்ததில் இன்னும் புன்னகை அதிகம் ஆனது புகழுக்கு.

"ஏய் என்ன என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு புதுசா வெட்கப்படுறியேனு பார்த்தால் அதுக்கும் மேல அடுத்தவங்களுக்காக பயப்படுற மாதிரி எல்லாம் ஃபேஸ் வச்சு என்னை அதிர்ச்சியாக்குற? யாரையும் ப்ரான்க் பன்றியா? இல்லை என்னையே தானா?" புகழ் கேட்க,

"அடடா! ஏதோ தெரியாமல் வந்துடுச்சி போதுமா?" என்றபடியே அவளும் உள்ளே வர,

"அப்படியா? சரி அப்ப அப்படியே யூ டர்ன் பண்ணி அந்த டோரை லாக் பண்ணு பார்க்கலாம்" சாதாரணமாய் அவன் சொல்லிவிட, இவளுக்கு அது சாதாரண காரியமா என்ன?

"என்.. என்ன?" திக்கி தான் போனாள் அவனின் குறும்பான ஒரே கேள்வியில்.

"என்ன என்ன? கதவை மூடுனு தானே சொன்னேன்? சரி விடு உனக்கு தான் நம்ம வீடு புதுசு இல்ல.. நானே பண்றேன்" என்றவன் அவளைத் தாண்டி சென்று கதவை மூடிவிட்டு வர, இன்னும் அவள் பிரீஸ் மோட் தான்.

"ப்ச்! ரிலாக்ஸ் சகிம்மா.. எப்பவும் போலவே இரு.. ஏன் டென்ஷன்?" எளிதாய் அவன் கேட்டு வைக்க, அவளின் டென்ஷனை நிஜமாய் மறைக்கவே முடியவில்லை அவளால்.

"ஹ்ம்ம் அப்புறம்?" - புகழ்.

"அப்பாடாக்கர்! நிஜமா எனக்கு நெர்வசா இருக்கு பா.. ஐ டோன்ட் நோ ஒய்!" பாவமாய் அதையும் அவனிடமே சொல்லி வைத்தாள்.

அதற்கு காரணம் இல்லாமலும் இல்லையே! காதலிக்க ஆரம்பித்த இத்தனை நாட்களில் அவன் விரல்கள் கூட இவள்மேல்பட்டிருக்காது..

நேரில் பார்க்கவே அவ்வளவு யோசித்து பயந்து வருபவன் பற்றி அதற்குமேல் சொல்லவும் வேண்டுமா? ஆனால் இன்று அப்படி இல்லையே!

லைசன்ஸ்ஸையே அவன் கைகளில் கொடுத்த பின் சும்மா இருக்க அவன் என்ன ஞானியா? இப்படி தான் அவள் எண்ணம் முழுக்க.

இதுவரை இருந்த புகழாய் நிச்சயம் இருக்க மாட்டான் என்பது திண்ணம். ஆனால் முரடாய் நடந்து கொள்வனோ என்கின்ற பயத்தோடு இதுவரை இப்படி ஒரு நிகழ்வை பற்றி யோசிக்காத சகிக்கு இந்த தருணம் ஒரு புது உணர்வு தான். அதிலும் பயம் தான் அதிகமே!

"உனக்கு என்னை தெரியாதா சகிம்மா? ஏன் இந்த நெர்வஸாம்?" அவன் கேட்க அவள் யோசனையிலே இருந்தாள்.

"ஹேய் நான் பேசிட்டே இருக்கேன்.. என்ன யோசிச்சுட்டு இருக்க நீ?" புகழ் கேட்க,

"சாரி சாரி! நான் ஏதோ யோசனைல..." திணறினாள் அவள்.

"சகிம்மா!" என்றவன் குரல் எப்போதும் போல அவளை உருக தான் வைத்தது.

"நீ ரொம்ப யோசிக்குற நினைக்குறேன் சகிம்மா.. பீ நார்மல் டா.. என்றவன் அவளை தோளோடு அணைக்க, 'இதோ நான் பயந்த தருணம்' என தான் ஓடியது அவள் எண்ணம்.

ஆனால் அது அவன் கருத்தை எட்டவில்லை.. அவனின் உலகமே இப்போது அழகான தனி பிரதேசமாய் அங்கே அவனும் அவளுமாய் என கனவில் நின்றான்.

"பீல் கம்ப்ளீட் சகி" அவன் சொல்ல, அதுவரை இருந்த உணர்வு மாறி கண்களை சுருக்கி அவனைப் பார்த்தாள் சகி.

"புகழ்.."

"எஸ்! ஐ பீல் கம்ப்ளீட் டா.. என் பக்கத்துல, என் வீட்ல, என் ரூம்ல, என்னோட பெட்ல என்னோட சகிகூட நான்... இதைவிட வேறென்ன வேணும்?" அவன் அனுபவித்தே இந்த வார்த்தைகளை சொல்ல, அதே வார்த்தைகளில் தொலைந்து போனாள் சகி.

அவனின் அணுகுமுறை எப்படி இருக்குமோ என பயந்தவள் அவனின் வார்த்தைகளில் தானே அவனிடம் தஞ்சம் அடைந்தாள். இப்படி வார்த்தைகளால் அவளை ஈர்ப்பான் என எதிர்பார்க்கவில்லை அவளுமே!

தோள்களில் சுற்றி இருந்த கைகளுக்கு நடுவே இருந்தவள் அவனின் இந்த வார்த்தைகளுக்கும் அதில் இருந்த உணர்வுகளுக்கும் கட்டுப்பட்டு தானே அணைத்திருந்தாள் புகழை.

"சகி!.."

"சாரி.. ப்ச் நான் தான் தப்பு" அவள் சொல்ல,

"என்ன தப்பு? நான் எதுவும் பண்ணலையே?" குறுஞ்சிரிப்போடு கிண்டலாய் அவன் சொல்ல, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் அவன் தலையிலும் வலிக்காமல் கொட்டினாள்.

"ஹ்ம்ம்! இது தான் என்னோட சகி.. கொஞ்ச நேரம் காணுமேன்னு தவிச்சுட்டேன்.." அவன் சொல்ல, அவனினுள் அமைதியாய் இருந்தாள்.

"எனக்கு நீ பண்றதெல்லாம் சிரிப்பா இருக்குது டா.. நீ நினைக்கிறது எல்லாம் அப்படியே என் ஹார்ட்டுக்கும் மைண்ட்டுக்கும் ட்ரான்ஸ்பெர் ஆகுது டா.. இங்கேருந்து இங்கே வேவ்லென்த் அடிக்குது" என அவன் நெஞ்சுக்குக்கும் அவள் நெஞ்சுக்குமாய் கைகளை சுட்டிக்காட்ட, சகியிடம் முறைப்பு மட்டுமே!

"ஆனா இதுக்கெல்லாம் இன்னும் நான் பயந்துட்டு யோசிச்சுட்டு இருக்க முடியாதே சகிம்மா? நீ இவ்வளவு நாள் கேட்ட காதல், அன்பு, பாசம் இதையெல்லாம் நீ பார்க்க வேண்டாமா?" அவன் கேட்க, இன்னும் அமைதி அவள்.

"உனக்கு என்னை எவ்வளவு புடிக்கும்னு பல தடவை சொல்லிட்ட.. ஆனா நான் உன்கிட்ட சொன்னதில்லை தானே? இப்ப சொன்னா கேட்பியா?" அவன் கேட்க, ஏதோ பேசத் தான் போகிறான் என நினைத்து தலையாட்டி வைத்தாள்.

சொல்லோடும் செயலோடும் அவன் விளையாட போவது அவள் அறியவில்லை.

"வெரி குட்! இப்படியே அமைதியா சமத்தா இருப்பிங்களாம்" அவனே சொல்ல, இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் புன்னகை அவளிடம். புரிந்தும் விட்டதோ?

அடுத்து அங்கே நடந்த காதல் அரங்கேற்றம் அவர்கள் வாழ்வின் அடுத்த விளக்காய் சுடர்விடத் தொடங்க, தயங்கியவளை கொஞ்சம் கொஞ்சமாய் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான் அவளின் உள்ளம் கவர் கள்வன்.

"நீ என்ன டி பண்ற உன் ரூம்க்கு போகாமல்?" கிட்சனில் பாலை காய்ச்சிக் கொண்டிருந்த திவியிடம் சுகுணா கேட்க,

"அவங்க பால் கேட்டாங்க மா" என்றாள் திவி.

"சரி எடுத்துட்டு போ.. நாளைக்கு மறுவீடு அனுப்பனும்.. அப்படியே நீங்க அவங்களை அழைச்சுட்டு போய் விட்டுட்டு அப்புறமா கிளம்புங்க"

"நான் அவங்ககிட்ட கேட்டு சொல்றேனே"

"அதெல்லாம் சரினு தான் உன் வீட்டுக்காரர் சொல்லுவார் திவி"

"சரி மா.. அப்பா தூங்கியாச்சா?"

"அப்பா அப்பவே தூங்கிட்டாங்க.. கல்யாணத்துக்கு வந்த ஆச்சி தான் சாப்பாடு சரி இல்ல.. ஜீரணம் ஆகலனு அலம்பல் பண்ணிட்டு இருக்கு.. நாளைக்கு அவங்க எல்லாம் ஊருக்கு கிளம்புற வரை நான் தூங்கின மாதிரி தான்.. சரி நீ போய் தூங்கு" என்ற சுகுணா பாட்டி கேட்ட கருப்பட்டி காபியை கலந்தார்.

"பார்றா! கேட்காமலே பால் எல்லாம் வருது.." பாலுடன் வந்தவளை கிண்டல் செய்தான் கார்த்தி.

"பாவமே! கேட்பிங்களேன்னு கொண்டு வந்தேன்.. வேண்டாம்னா போங்க.. நானே குடிச்சுக்குறேன்"

நேற்று இரவு அவனே கேட்டான் தானே? அந்த நினைப்பில் இன்றும் கொண்டு வந்திருந்தாள். அவன் கிண்டல் செய்யவும் இவளும் பிகு செய்ய,

"அப்படியெல்லாம் சொல்லவே மாட்டேன்.." என்றவன் பாலைக் கைகளில் வாங்கிக் கொண்டான்.

"யாரோ டீ, காபி, பால் எல்லாம் கண்ட நேரத்துல சாப்பிட மாட்டாங்களாம்... அவங்க அம்மா எனக்கு நிற்க வச்சு கிளாஸ்லாம் எடுத்தாங்க.. அது யாருன்னு உங்களுக்கு தெரியுமா?" சகி முன் நடந்ததை சொல்லி கிண்டல் செய்ய,

"அது தி.மு.... இது தி.பி" - கார்த்தி.

"புரியுற மாதிரி பேசவே மாட்டிங்களே! ஹப்பா! உங்க அம்மாவை சமாளிக்குறது ஒரு ரகம்னா உங்களை சமாளிக்குறது இன்னொரு ரகம்.. எப்படி தான் மூணு பேரும் மூணு விதமா இருக்கீங்களோ" திவி சொல்ல,

"அம்மாவை ஏதாச்சும் சொல்லிட்டே இருக்கனும் இல்ல உனக்கு.. என்னை விட அவங்களோட நல்லாவே சிங்க் ஆகிட்ட நீ"

"ஹ்ம்ம்! ஆமா எனக்கு அவங்களை தான் ரொம்ப புடிக்கும்.. என்ன செய்விங்களாம்?"

"ம்ம்ம் செய்யும் போது தெரியும்" என்றவன் சிரிப்பில் திவி விழிக்க,

"ஏன் டி அப்படி பண்ணின?" என்றான் சட்டென.

"நான் என்ன பண்ணினேன்?" புரியாமல் அவள் கேட்க,

"திவ்யா!.. " என்றான் சொல்லும் விதமாய்.

"ஆரம்பிச்சுட்டீங்களா?" முறைப்புடன் அவள் கேட்க,

"என்ன?"

"அதான்.. திவ்யாஆஆஆனு.. எனக்கு தெரியாது பாரு என் பேரு திவ்யானு" அவன் மட்டும் முழு பெயரைக் கூப்பிட்டால் எங்கிருந்து தான் இத்தனை கோபம் வருகிறதோ! அதற்கும் அளவாய் அவன் சிரித்து வைத்தால் இன்னும் கோபம் தான் பொங்கும். இப்போதும் அதே நடக்க,

"சொல்லுங்க கார்த்தீஈஈ.. அப்படி என்ன பண்ணினேன் நான்?" கோபமாய் கேட்டு அவனுக்கு எதிர்புறம் திரும்பி அமர, அவனின் அக்மார்க் புன்னகையுடன் அவள் பின் வந்து அமர்ந்து கொண்டவன் கைகளை மாலையாக்கி அவள் தோள்களில் போட்டான்.

ஒரு நொடி தான்! அந்த ஒரு நொடி போதுமே இவளுக்கு.. சும்மாவே வானில் பறப்பவள் இப்போது சொல்ல வேண்டுமா? கோபமா? யாருக்கு யார் மேல் எனும் அளவுக்கு முகம் மாறி இருந்தாள்.

அவனை ஏன் தான் தனது மனதிற்கு இத்தனை பிடித்திருக்கிறதோ என்று அவளே சுய அலசலில் இப்போது அதிகமாய் மனதை அலைய விடுபவளை தன்னை மட்டுமே நினைக்கும் படி மாற்றி இருப்பவனை அப்படி கோபம் கொண்டு இருந்திட முடியுமா என்ன?

அதுவும் திவி என்ற அழைப்புக்கே அனைவரும் கிண்டல் செய்யும் அளவுக்கு முகம் செம்மையுறுபவள் இன்று அவனின் இந்த சமாதான அணைப்பில் மயங்கி தான் போனாள்.

"ஏன் டி! உன்னை முதல்ல டி'னு கூப்பிட்டேன்.. அப்ப ஏன்னு கேட்காமல் உன் பேரை சொன்னதை மட்டும் புடிச்சுட்டு இப்படி முகத்தை திருப்புற.." அவன் கேட்ட பின் தான் அவளுக்கும் அது ஞாபகம் வர, வேகமாய் திரும்பி அமர்ந்தாள்.

அப்போதும் அவன் கைகள் அப்படியே இருக்க, இவளும் அவன் மேல் சாய்ந்து கொள்ள இன்னும் வாகாய் அமர்ந்து கொண்டான் கார்த்தி.

"ஆமால்ல! நீங்க இப்படி எல்லாம் பேசுவிங்களா? நான் கவனிக்கவே இல்ல"

"ஹ்ம்ம் அதெல்லாம் வரும் போது வரும்.. இப்ப சொல்லு, சொந்தக்காரங்க அவ்வளவு பேர் இருக்கும் போது வாசல்ல ஆரத்தி தட்டோட உன் அண்ணாகிட்ட அப்படி ஏன் கேட்ட? அவரு ஏதோ கல்யாணம் ஆன குஷில ஜாலியா என்னை உள்ள கூட்டிட்டு போய்ட்டாரு இல்லைனா எனக்கும் கஷ்டம்.. மத்தவங்க முன்னாடி அவருக்கும் சங்கடம்.. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா டி?" அவள் தலையில் கொட்டி சொல்ல வேண்டிய விஷயத்தை உச்சந்தலையில் முத்தம் கொடுத்து அவன் சொல்ல,

அவளுக்குள் அவன் சொல்லை விட அவனின் ஸ்பரிசமும் செயலும் தான் இறங்கிக் கொண்டிருந்தது.

"ஏய்! தூங்கிட்டியா என்ன?" சிரிப்புடன் அவளின் கண்ணம் தட்ட,

"ப்ச் டிஸ்டப் பண்ணாதீங்க.. நான் பீல் பண்ணிட்டு இருக்கேன்ல"

"அது சரி!" என மீண்டும் சிரித்தவன் "நான் கேட்டதுக்கு பதில் சொல்லு திவ்யாஆஆஆ" என அவள் காதில் வேண்டுமென்றே கத்திட, அவனை முறைத்தவள்

"கொஞ்ச நேரம் பீல் பண்ணி அனுபவிச்சுடக் கூடாதே! உங்க அம்மாவே பெட்டெர்" என்றவள் எழுந்து அமர்ந்தாள்.

"இப்படி இருந்தே பதில் சொல்லு! ஏன் அப்படி பண்ணின?" என மீண்டும் கையணைப்பில் கொண்டு வந்தான்.

"பின்ன எப்படி பண்ணுவாங்களாம்?"

"ப்ச்! ப்ரியசகி உன்னை என்ன நினைச்சிருப்பா?"

"அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க.. ரெண்டு பேரும் தான் பிளான் பண்ணினதே! பிளான் என்னோடது தான். ஆனா அண்ணியார் ஓகே சொன்னதும் தான் ப்ரோசிட் பண்ணினேன்.. கல்யாண மேடையிலே பண்ணனும் நினச்சேன்.. அவன் வேற ஓவரா பிரெஸ்டிஜ் பார்ப்பானா அதான் வீட்டுக்கு வரட்டும்னு விட்டுட்டு வீட்டுக்கு வந்ததும் செஞ்சுட்டேன்.. எப்படி!" பெருமையாய் அவள் சொல்ல,

"உனக்கு வாய் அதிகம் ஆகிடுச்சு டி.. அதான் ஏன்னு கேட்குறேன்.. நாளைபின்ன அவரு எதாவது நினைச்சுட்டா"

"புகழ் பத்தி உங்களுக்கு அவ்வளவு தான் தெரியும்.. அவன் அப்படி எல்லாம் மாறிடுற ஆள் இல்ல.. இனி இங்கே உங்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கும்.. கிடைக்கணும்" அவள் உறுதியாய் சொல்ல, மாலையாக்கியிருந்த கைகளை அப்படியே இறுக்கி முத்தம் வைத்து கொஞ்சினான் அவளை.

"உங்க முகம் இப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா? இவ்வளவு நாளும் இருந்திங்களே உம்'முன்னு.. அதுவும் அந்த பொண்ணு... அவளெல்லாம் ஒரு ஆளுன்னு அவளுக்காக கல்யாணத்தன்னைக்கு உங்க முகத்துல இருந்துச்சு பாருங்க ஒரு எக்ஸ்பிரஸ்ஸன்... ஸ்சோ! இப்படியே தான் காலம் புல்லா இருப்பிங்களோனு நினச்சு பயந்துட்டேன்.. ஆனா அன்னைக்கு நைட்டே பரவாயில்லை கொஞ்சம் நல்ல பையன் தான்னு எனக்கு தோசை போட கூட இருந்து ஹெல்ப் பண்ணி நிரூபிச்சுட்டீங்க" அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக, அவள் மனதில் தான் யார், என்ன என்கின்ற எண்ணம் ஒவ்வொன்றும் வெளி வந்து கொண்டிருந்ததை அறிந்து கொண்டிருந்தான் கார்த்தி.

"சொன்னா நம்புவீங்களா தெரியல.. ஆனாலும் உங்களை எனக்கு முதல் நாளே புடிச்சிருச்சு போல..அம்மா சொன்னாங்கனு கல்யாணம் பண்ணிட்டாலும் ஏதோ ஒன்னு ஓகே சொல்ல வச்சதால தானே உங்க முகத்தையே திரும்பித் திரும்பிப் பார்த்தேன்.. ஆனா நீங்க என்னை எங்க பார்த்திங்க? ஓமகுண்டத்துல தீ எரியுதா எண்ணையை இன்னும் ஊத்தணுமான்னு தானே பார்த்துட்டு இருந்திங்க?"

அவள் சொல்வதை எல்லாம் கவனமாய் கேட்டுக் கொண்டு புன்னகையோடு அமர்ந்திருந்தவன், பேச்சின் முடிவில் சத்தமாய் சிரித்தான். அதையுமே ஏன் எனக் கேட்காமல் ரசித்துப் பார்த்திருந்தாள் மனைவியானவள்..

"என்னப் பேச்சு பேசுற நீ?" என மீண்டும் சிரித்தவன் அவள் பார்வையில் "இப்படி பப்ளிக்கா சைட் அடிக்காத டி" என்று சொல்லி சிறிதாய் வெட்கம் வேறு கொள்ள, அய்யயோ இந்த திவி வானத்தை தாண்டியும் சென்றுவிட்டாள் அதில்.

"நான் ஒன்னும் அந்த பொண்ணுக்காக அப்படி இருக்கல திவி.." அந்த பொண்ணு என்பதில் அழுத்தம் கொடுத்து கூறியவன் "நடந்ததெல்லாம் தெரியும் தானே? அப்ப யாரையுமே நம்ப தோணல அவ்வளவு தான்.. அன்னைக்கு பசிக்குதான்னு கேட்டதும் நீ ஒரு ரியாக்க்ஷன் கொடுத்தியே! அப்ப செம்ம கோபம் வீட்ல இருந்தவங்க மேல.. அப்ப இருந்தே எனக்கும் தெரியாம உன்னை கவனிக்க ஆரம்பிச்சுருக்கேன் போல" என அவனுமே பகிர்ந்து கொண்டான்.

அவன் கைகளில் அவள் இருக்க, அவன் தோளினில் இவள் சாய்ந்திருக்க, இனிதாய் அனைத்தையும் இருவரும் பகிர்ந்து கொள்ள, ஒரு கவிதையாய் சென்று கொண்டிருந்தது அந்த இரவு.

சில நாட்களுக்கு பின்

"மூஞ்சி ஏன் இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு?" திவி கார்த்தியிடம் கேட்க, அந்த மலைபாதையில் இருவரும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.

"பேசாம நட டி.. நானே செம்ம காண்டுல இருக்கேன்" கார்த்தி சொல்ல, இன்னும் வெறுப்பேற்றினாள் திவி.

"இப்படி வாக்கிங் போக தான் ஊட்டி வந்தோமா?" அவள் கேட்க,

"அதே தான் நானும் கேட்குறேன்.. ஊட்டி எதுக்காக வந்தோம்?" என்றான்.

"நீங்க தான் ஹனிமூன்னு சொன்னிங்க.." என்றவள் முழியே திருட்டு முழியாய் இருந்தது.

"ஹனிமூன்னா என்ன?" ரோட்டில் நின்று கைகட்டி கேட்டான் அவன்.

.....

"சொல்லு திவ்யா" திவ்யா என அழைத்ததிலே அவன் கோபமும் தெரிந்தது. அதில் இவளுக்கும் கோபம் வர, இருவரும் முறைத்து நிற்க, இவர்களுக்கு எதிராய் அந்த மலைப்பாதையில் மேலேறிக் கொண்டிருந்தனர் புகழ் சகி.

"என்ன டா என் தங்கச்சியை இப்படி முறைச்சுட்டு நிக்குற?" கைச்சட்டையை மடித்துவிட்டபடி கார்த்தியிடம் கேட்டான் புகழ்.

"வந்துட்டான்..ஏன்டா அவளுக்கு தான் அறிவில்லை உங்க ரெண்டு பேருக்குமா இல்ல.. குடும்பத்தோட வர்றதுக்கு பேரு உன் தங்காஆஆச்சிக்கு ஹனிமூனாம்" இழுத்து கூறினான் கார்த்தி.

அன்று வாசலில் தோளில் கைப்போட்டு சென்றபின் இத்தனை சில நாட்களில் எளிதாய் பழகி வயதில் மூத்தவன் என்றாலும் புகழை பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு பழகி இருந்தனர்.

புதிதாய் திருமணம் ஆன புகழே பேசாமல் இருக்க, திடீரென உதித்த எண்ணமாய் ஹனிமூன் செல்லலாம் என திவியிடம் வந்து நின்றான் கார்த்தி.

வேகமாய் தலையாட்டியவள் முதலில் சென்று கிளம்ப வைத்தது கலா ஜெகதீசனை தான். வேணடாம் மாட்டேன் என்றவர்களை பேசியே அவள் சம்மதிக்க வைத்திருக்க அடுத்து தன் அண்ணனுக்கு அழைத்து இருவருடன் தன் பெற்றோரையும் அழைக்க வைத்திருந்தாள்.

புகழ் நாடு நாடாய் பார்த்து வெளிநாட்டிற்கு செல்லலாம் என சொல்ல, கார்த்தி அப்படியாவது கழண்டு கொள்ளலாம் என நினைத்து நான் ஊட்டி தான் செல்வேன் என்று சொல்ல, அதற்கும் உடனே தலையசைக்கும் படி மாறியிருப்பான் புகழ் என அறியவில்லை கார்த்தி.

இப்படி அனைத்தையும் வேடிக்கை பார்த்த கார்த்தி எதுவும் அப்போது பேசாமல் இதோ வந்து, வந்த இடத்தில் கிளம்பி வெளியே வந்த பின் தனியாய் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். அதிலும் தலையிட்டு நின்றான் புகழ்.

சகிக்கு நன்றாய் புரிந்தது போல கார்த்தியின் கோபம். ஆனாலும் சிரிப்பு வர, "புகழ்! அவங்க பேமிலி விஷயமா பேசிட்டு இருக்காங்க.. இதுல நாம தலையிட முடியாது" என்றவள் ஏதோ பேச வந்த புகழையும் பேச விடாமல் இழுத்துச் சென்றாள்.

"கௌத்துட்டியே அண்ணியாரே!" மனதிற்குள் சொல்லிக்கொண்ட திவி திரும்பி கார்த்தியை பார்க்க இன்னும் அவளை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.

கலா சொன்ன வார்த்தைகள் தான் ஞாபகம் வந்தது.

"என்புள்ள நான் இல்லாமல் எங்கேயும் போக மாட்டான்.. அவன் சொல்லி தான் நீ கூப்பிடுவியா இருக்கும்.. இல்லைனா நீ எல்லாம் அவனை எப்பவோ தனியா இழுத்துட்டு போயிருப்ப" கலா சொல்லியபோது பெரிதாய் தெரியவில்லை.

இப்போது அவர் மகன் நடந்து கொள்ளும் முறைக்கு அப்படி தான் சிரிப்பு வந்தது திவிக்கு.

"என்ன சிரிப்பு உனக்கு?" - கார்த்தி.

"ஹ்ம்ம் உலக மகா உத்தமன் என் புள்ள தான்னு உங்க அம்மா என்னை திட்டினாங்க.. நீங்க அவங்களை ரூம்ல விட்டுட்டு இங்கே தனியா வந்த பின்னாடியும் எதுக்காக அவங்களை கூட்டிட்டு வந்தன்னு கேட்டுட்டு இருக்கீங்களே! அத நினைச்சேன்.. சிரிப்பு வந்துடுச்சி" என்று சொல்ல, இன்னும் அசையாமல் நின்றான் கார்த்தி.

"இப்ப என்ன பாஸ்? நாம மட்டும் தானே இருக்கோம்? பெரியவங்க தனியா என்ஜோய் பண்ணட்டும்.. நாம இங்கே ஜாலியா இருக்கலாம்.. இதுக்கு போயிட்டு பச்சபுள்ள மாதிரி மூஞ்ச வச்சுட்டு.. சீக்கிரம் கீழே போலாம் வாங்க! வாங்க! பலாப்பழமும் பொடியும் வரும்போதே வாங்கணும் நினச்சேன்" என்றவள் ஓட, அவளை நினைத்து தலையில் அடித்துக் கொண்டவன் காதலுடன் அவள் பின்னோடே ஓடவும் மறக்கவில்லை.

இனி காலம் முழுதும் இவர்கள் கண்டுகொண்ட காதலை வாழ வைத்துக் கொண்டு தான் இருப்பார்கள்..

சுபம்..
 
Top